சில தென்னிந்தியப் புல் வகைகள்: ஒரு கையேடு (1921)
December 10, 2012
எப்பொழுதெல்லாம், நம் பாரம்பரியப் புல் வகைகளைப் பற்றி அவை அரிசி போன்ற பெருதானியங்களாக இருந்தாலும் சரி, சிறுதானியங்களானாலும் சரி, மற்றபடி தீவனப் புல், மூங்கில் வகைகளானாலும் சரி – எந்த ஒரு சந்தேகம் வந்தாலும் (அவை, நிறையவே வருபவைதான்!) அதை நிவர்த்தி செய்து கொள்ள, தற்காலத்தில் நான் அணுகுவது இந்த புத்தகத்தைத்தான்.
1921 வருடம், காலனிய மதறாஸ் அரசினால் வெளியிடப்பட்ட இந்தப் புத்தகம், கி ரங்காச்சாரியார், சி. தாடுலிங்க முதலியார் அவர்களால் எழுதப் பட்டது. முன்னவர் எம்ஏஎல்டி (குத்து மதிப்பாக, தற்போதைய எம்எஸ்ஸி பிஎட்) பின்னவர் பிஏஎல்டி (தற்போதைய பிஎஸ்ஸி பிஎட்) – இருவரும் திறமை வாய்ந்த தாவரவியல் நிபுணர்கள், ஆசிரியர்கள். கோவை அரசு வேளாண்மைக் கழகத்தில் (தற்போதைய தமிழ் நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம்) பணி புரிந்தவர்கள்.
இப்புத்தகம் ஆர்கைவ்ஸ்.ஆர்க் ஆவணக் காப்பகத்தில் இருக்கிறது. இம்மின் நகல் தொகுக்கப்பட்டு, இணையத்திற்க்அளிக்கப் பட்டது, ந்யூயார்க் தாவரவியல் கழகத்தினரால். மேட்டுக்காட்டு நெல்வகைகளைப் பற்றி, அவற்றின் பாரம்பரியம் பற்றி அறிந்து கொள்ள முயற்சி செய்யும்போது, 2010ன் ஆரம்பத்தில்தான் இப்புத்தகத்தைபெட்டகத்தை, அகஸ்மாத்தாகத்தான் பார்க்க நேர்ந்தது, எனக்கு. நான் நினைத்தேன் – இம்மாதிரி, நம்மூர் புற்களைப் பற்றி நம்மூர் ஆட்கள் எழுதிய தரம்வாய்ந்த புத்தகம் நம்மூர் கல்லூரிகளின் பாடபுத்தகமாக இருக்கும் என்று.
ஆனால்…
இப்புத்தகத்தைப் பற்றி நான், சுமார் ஒரு வருடம் முன், அரிசி வகைகளில் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த சில நம்மூர் வேளாண்மைப் பட்டதாரிகளுடன் பேசிக் கொண்டிருக்கும் போது தெரிந்தது – அவர்கள் இந்தப் புத்தகத்தைப் பற்றிக் கேள்வி கூட படவில்லை என்கிற சோகம். என்னைப் பொறுத்தவரை, இந்த சோக நிலைமைக்குக் காரணங்கள் – குறைந்த பட்சம், ஐந்து:
- இம்மாதிரி புத்தகங்களை அரவணைக்க வேண்டிய ஆசிரியர்களோ – மேலை நாட்டு எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்களை மட்டும் படித்து வளர்ந்திருக்கிறார்கள்; அவர்கள், இந்தக் கையேடு மாதிரி புத்தகங்களை, அதுவும் நம்மவர்கள் எழுதியதை, மிகப் பழைய, கவைக்குதவாத குப்பைகள் எனக் கருதுகின்றனர். அவர்கள் உபயோகிக்கும் புத்தகங்களோ ஆங்கில எழுத்தாளர்களால் பொதுவாக எழுதப் பட்டவை – அவை, நம் பாரம்பரிய வேளாண்சார்,ஐந்திணைசார் புல் வகைகளை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. (நாமும் தான்)
- இம்மாதிரிப் புத்தகங்கள் மறுபதிப்பாகவோ, சீரமைக்கப்பட்ட, புதுப்பிரதியாகவோ, புதிய தகுதிவாய்ந்த ஆசிரியர்களால் நேர்த்தி செய்யப்பட்ட, செறிவேற்றப் பட்ட பாடப் புத்தகங்களாகவோ வருவதற்கான வாய்ப்பே இல்லை. யார் எடுத்துச் செய்வது இக்காரியங்களை? நம் கண்ணிற்கு அகப்பட்டால்தானே இப்புத்தகங்களை நாம் உபயோகிக்க முடியும்?
- மாணவர்களுக்கு, பொதுவாக கோனார் உரை இல்லாத எதுவும், ஒரு பொருட்டே அல்ல. கோனார் உரை இருந்தால், அது மட்டுமே கூடப் போதும். ஆக, இவர்கள் இம்மாதிரிப் புத்தகங்களால், அவை பாடத்திட்டத்தில் இல்லாமலிருந்தாலும் கூட, ஈர்க்கப் படுவார்கள் என்று பகல்கனவு கூடக் காண முடியாது.
- நம் பொதுப் புத்தியில் இம்மாதிரிப் புத்தகங்கள் இல்லவேயில்லை – கம்பனும், பாரதியும், புதுமைப்பித்தனுமே கூட 99% மக்கள் அறியப் படாதபோது, எப்படி நாம் அறிவியல், பாரம்பரியம் சார்ந்த புத்தகங்களை நம் மக்கள் படிப்பார்கள், அறிய முனைவார்கள் என எண்ணக் கூடும்?
- நமக்குப் பொதுவாக – இரவுவானைப் பார்த்து விண்மீன்களை, கோளங்களைப் பார்த்து, ஆகாசகங்கையை அவதானித்து ஆச்சரியப் பட முடிவதில்லை. வீட்டின் பின்னால் ’தானாகவே’ வளரும் கீரை வகைகளைப் பற்றிய அக்கறை இல்லை. நம் உடல் எப்படி ஒரு மகத்தான யந்திரமாக இருக்கிறது என்கிற மரியாதை இல்லை, மோட்டார் வண்டிகள் எப்படி ஓடுகின்றன என கொஞ்சமாவது அறியமுனையும் ஆர்வமில்லை – நமக்குப் பொதுவாக அறிவார்வமோ ஆய்வுணர்ச்சியோ இல்லை. இப்படி இருக்கும் போது பொட்லங்கா புல் பற்றி ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்? அதனால் என்ன ’பயன்?’
பெரும்பாலும், எந்த விதத்திலும் நம் பண்பாடு, வரலாறுகளைப் பற்றி அறிய முற்படாத நம் சமூகத்தில், நம் பாரம்பரியத்தை அறியாமலேயே உதாசீனம் செய்யும் நம் சூழலில், இந்தப் புத்தகங்கள், அவை கரையான்களால் அரிக்கப் படாமல் இருந்தாலும், அழுக்கு அலமாரிகளில் மட்டும் அடுக்கப் பட்டிருப்பதுதான் சாஸ்வதம்.
எட்டுத் திக்கும் செல்லவேண்டிய அவசியம் இல்லை, மற்றையக் கலைச்செல்வங்களைக் கொணர்ந்திங்குச் சேர்க்கவேண்டியது கூட இல்லை. மற்றவர்கள் நம் கலைச்செல்வங்களின் மதிப்பறிந்து இணையம் வழியாக நமக்குச் சேர்க்கிறார்கள், நமக்கு ஒரு பிரச்சினையும் கொடுக்காமல், பிரதிபலன் எதிர்பார்க்காமல் – நாம் குறைந்த பட்சம், அவற்றை உபயோகிக்கவாவது செய்யலாமில்லையா?
1921ல் தொகுக்கப்பட்ட இப்புத்தகம் இக்காலத்துக்கு ஏற்றதா என்பது ஒரு சரியான கேள்வியாகத் தோன்றலாம் – ஆனால் அடிப்படைகள் மாறுபவையா? குறிப்பாக, இம்மாதிரி அறிவியல் அடிப்படை சார்ந்த பகுப்புத் தொகுப்புப் புத்தகங்கள், பாடாவதி ஆகும் சாத்தியக் கூறுகள் என்ன? யோசித்துப் பார்த்தால், இவை இப்போதும் மிக முக்கியமானவை. தற்காலத்தில், பகுப்புகளில் மேலும் சில பிரிவுகள் வந்திருக்கலாம் – ஆனால், முந்தையவை காலாவதியாக முடியாது என்பதே என் எண்ணம்.
=-=-=-=
இம்மாதிரி, பல பிரிவுகளில், பல அழகான, பழைய புத்தகங்கள் இருக்கின்றன – அவற்றின் காப்புரிமைகளும் காலாவதி ஆகியிருக்கின்றன. எப்படியாவது இவை, சீரமைக்கப் பட்ட பிரதிகளாக, பயன்படுத்தப் படும் பாடத்திட்ட / பொதுப் புத்தகங்களாக உலா வரவேண்டும் என்பது நம் ஆசையாக இருக்கவேண்டும், என்பது என் ஆசை..
அப்படிச் செய்ய முடியாவிட்டாலும், குறைந்தபட்சம், இந்தப் புத்தகத்தை நாம் தரவிரக்கம் செய்தாவது படிக்கலாமல்லவா?
December 10, 2012 at 21:49
பல அரிதான நூல்களை இணையத்தில் சேமிப்பதால் எளிதில் நமக்கு வேண்டிய தகவல்களை பெறமுடிகிறது. இதற்கு வேண்டிய கல்வியை FAO INFORMATION MANAGEMENT KIT(imark) மூலமாக தருகிறது. நம்பகமில்லா இணயமிருந்தால் CD இலவசமாக அனுப்பிவைக்கிறார்கள்.
நாம் வரலாற்றுச்சின்னங்களை ஆவணங்களை அழிக்கிறோம் சுயநலத்திற்காக பல பேதங்களுக்கு ஆட்பட்டு.
நம் பழந்தமிழ் நூல்கள் அழியாவண்ணம் PROJECT MADURAI, TAMIL VIRTUAL UNIVERSITY போன்ற இணையதளங்கள் சேவையாற்றுகின்றன. திராவிட ஆர்ய மாயைகள் விடவில்லை…….