***BREAKING*** 2022 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் இலக்கிய விருதுவழங்கலில் ஏகப்பட்ட குழப்படிக் குளறுபடி!

September 13, 2022

… ஆனால், அது டாக்டர் முனைவர் கண்ணபிரான் ‘கரச’ ரவிசங்கர் பிஹெச்டிபிஹெச்டி அவர்களுக்கு வழங்கப் படவிருப்பதில் எனக்கு மகிழ்ச்சி!

முன்னதாக

2022 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் இலக்கிய விருது எழுத்தாளர் சாரு நிவேதிதாவுக்கு வழங்கப்படுகிறது என்கிற அறிவிப்பைத் தொடர்ந்து, பின்னதாக, அது ஒரு ஃபேக் நியூஸ் என்றும் ‘ஹேக்கர்கள் எனும் ஹிந்துத்துவக் கொந்தர்கள் ஜெயமோகன்.இன் தளத்தை ஹைஜாக் செய்து அச்செய்தியை அறமின்றிப் பதித்தனர்‘ எனவும் எழுத்தாளர் ஜெயமோகன் தெரிவித்தார்.

மேலும்:

“அம்ரீகாவின் பர்க்லி பல்கலைக்கழகத்தின் இறையாக பர்க்லீசன் எனவும், பர்க்லி கொண்டோன், கொலம்பியா கண்டோன், பாரீசு வாயு பாதித்தோன் எனப் பலவாறாகவும் புகழப்படும் ‘கரச’ கண்ணபிரான் ரவிசங்கர் அவர்களுக்கு, இந்த விருது பொருத்தமானதே!”

அதைத் தொடர்ந்து,

“அது இருக்கும் வரை இதுவும் இருக்கும்”

…எனப் பூடகமாகச் சொன்னார். இது ஒருமாதிரி அத்வைத நிலை போலப் படுகிறது என்றாலும், அதுவுமிது, இதுவுமது எனச் சொல்லிக்கொண்டே…

..ஓத்திசைவு டீவி நிருபருக்கு ஜெயமோகன் இது குறித்து அளித்த பிரத்யேக பேட்டியில் அவர் மேலதிகமாகச் சொன்னதன் சில பகுதிகள் கீழ்வருமாறு…

ஏன் சாருநிவேதிதாவுக்கு அவ்விருது கொடுக்கப் படவே முடியாது?

“விடாமல் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக தமிழ் இலக்கியத்தைப் பீடித்த கெரகங்களில் எனக்கு அடுத்த இடம் இவருடையதுதான். பின்னர் நெடுந்தொலைவில் தன் கண்ணால் தன்னையே தன்னந்தனியாகப் பார்த்துக் கொண்டு படுபீதியில் தனித்துவமாக விழித்துக் கொண்டிருப்பவர்தாம் எஸ். ராமகிருஷ்ணன்.

சாரு நிவேதிதா எனும் கில்லி கொடுக்கும் கிலிக்கு எனவெல்லாம் விருது வழங்கமுடியாது. விருதாக்களிலும் பெரிய விருதாவாக இருந்தால் விருதுக்கு உரியவரா என்பது வேறு விஷயம். இதனை நுண்ணுணர்வுடன் நுணுக்கமாக நுனிவரை உற்றுப் பார்த்தால், கண் வலிக்கும்.

மேலும்.

இந்திய இலக்கியக் களத்திலேயே எல்லா வகையிலும் பிறழ்வெழுத்தை, ஒரு முகாந்திரமுமில்லாமல் ஆங்காரத்துடனும் முகம்சுளிக்கவும் முதன்மையாகவும் முழுமூச்சுடனும் முன்வைத்தவர் என அவரையே சொல்ல முடியும்.

இதற்கு அப்பாற்பட்டு – கண்டகண்ட குப்பை இலக்கியக் கட்டுரைகள், ஆபாசப் பத்தி எழுத்துக்கள் வழியாக பிறழ்வெழுத்தின் வகைமைகளையும் அதன் ஆசிரியர்களையும் தமிழில், ஒருவிதமான தேவையுமில்லாமல் அறிமுகம் செய்தவர் அவர்.

கண்டமேனிக்கும் இணையத்தை மேய்ந்தும் அதற்கு முன் மேனாட்டு பத்திரிகைகளை மேலோட்டமாகப் புரட்டியும் – சினிமாவிலும்  இசையிலும் பிறழ்வெழுத்துக்கு இணையான சமன்குலைக்கும் வகைமாதிரிகளை கூறுகெட்ட தமிழச் சமுதாயத்துக்கு அறிமுகம் செய்தவர். அதாவது பிறழ் இசை, பிறழ் நாடகம், பிறழ் சினிமா, பிறழ் ஃபேஸ்புக் பதிவுகள் என்பவற்றுக்கும் அப்பாற்பட்டு, பிறழ்பிறழ் என அதிபிறழ் ஆகிருதி பெற்று அப்படியொரு பிறழ்வுச் சுழற்சி எனும் சம்சார சாகரத்தில் நீந்தி பிறத்தியாரைப் பற்றிக் கவலைப்படாமல் பேங்க்பேலன்ஸில் நாய்க்குப் பொரை வாங்க காசுபோடச் சொல்லிப் பிலாக்கணம் வைத்து – அப்படியே ஒரு மெகா, தமிழக வரலாற்றிலேயே முதன்முறையாக முழுச்சுற்று வந்து நித்தியானந்தாவின் வேற்றுமைஉறுப்பைப் பிடித்துக்கொண்டு இலக்கண சுத்தமாகத் தொங்கியவர்.

புனிதப்படுத்தலைக் கொச்சைப்படுத்தியதற்கும், அதிகாரக் குவியலைக் கலைத்துப்போட்டு அகலாச்சாரத்தை முன்னெடுத்து அதிகாரத்தால் வரும் பாசிசத்தின் பாயாசத் தன்மைக்கும் எதிராக சுயவரலாறும் அதிபுனைவும் கலந்த வெளிப்படையான சொறிசிரங்குத் தன்மை கொண்ட எழுத்து அவருடையது. சமூகத்தால் போலி பாசாங்குகள் மூலம் அழுத்தி வைக்கப்பட்ட பாலியல் குற்றங்களை தன்னை முன்னிருத்தி சுயஎடுத்துக்காட்டுச் சீரழிவுகளை முன் வைத்துப் பேசுவதால் வாசகனின் புனிதப்படுத்தல் சிதைவுருகிறது என்பதை அறிந்தே செய்தவர் அவர், வாழ்க நீ எம்மான்.

என் கருத்துகளைப் பகுத்துத் தொகுத்துக்கொண்டு சொல்வேனானால், தன் சுயபுராண வரலாற்றுப் பீலாக்களையும் இன்னபிற புனைவும் கலந்துகட்டிய கட்டற்ற கலகக்கார மட்டரக எழுத்து அவருடையது. தன் வரலாற்றையும் தன்னையும் புனைந்து புனைந்து அழித்துக்கொள்ளும் இவ்வகை எழுத்து தமிழுக்கு அனைத்துவகையிலும் புதியது. இப்படியே போனால், தமிழும் தமிழகமுமே அழிந்துவிடும் என்பது ஆறுதல் தருவது.

மேற்கண்ட கல்யாணகுணக் காரணங்கள் அபரிமிதமாக இருந்தாலும், வருந்தத் தக்க வகையில் சாரு நிவேதிதாவுக்கு விஷ்ணுபுரம் விருது 2022 டிசம்பர் மாதம் இறுதியில் வழங்கப் படாது, ஏனெனில் அவர் தன் தகுதியை இன்னமும் கொஞ்சம் அதிகரித்துக் கொள்ளவேண்டும். . ஆகவே, வழக்கம்போல விஷ்ணுபுரம் விழா நடைபெறும்.”

‘கரச’வின் சமூக நீதி கர்ஜனைக்குத்தான் இவ்வருடம்  விஷ்ணுபுரம் விருதுக்குத் தகுதியான முதலிடம்!

“கரச எனும் ஆளுமையை நீண்ட நெடுங்காலமாக அவதானிக்க என் குரு நித்யாவுக்குக் கட்டளை இட்டிருந்தேன். ஆனால் எனக்கே ஆச்சரியம் தரும் வகையில் சாட்சாத் நாராயணகுருவே, நடராஜகுருவுக்குச் சொல்லாமல் அய்யாவைகுண்டர் வழியில் கையெறிகுண்டுகளை வீசிப்போட்டு ஆன்மிகத் தேடலில் ஈடுபட்டபோது, அதாவது பக்தி இலக்கியத்தில் திளைக்க முற்பட எத்தனித்தபோது – கரச-வால் தான் எனக்கு உள்ளொளி கிடைத்துக் கிளைத்தது என்றார்.

முனைவர்முனைவர் கரச-வின் ஆகிருதி அப்படி!

அதே சமயம், வாழ்க்கைச் சதிராட்டத்தில் எந்த எதிர்நிலையும் எனக்கு ஏற்புக்குரியதல்ல – ஆகவே கரச-வை எதிர்ப்பவர்களை எதிர்க்கிறேன், ஆதரிப்பவர்களை ஆதரிக்கிறேன். ஆனால் அது ஒரு தனிநபர் காழ்ப்பு அல்ல, பொதுவான காழ்ப்பு மட்டுமே. அந்த மேட்டிமைத் தரப்பு நேற்று இருந்தது, இன்று இல்லை என நானே பத்தாண்டுகளுக்கு முன்பு கூட நினைத்திருந்தேன். அது அப்படியே, அதே காழ்ப்புடனும் நையாண்டியுடனும் நீடிக்கிறது என்பதை நண்பர்கள் என எண்ணிய சிலர் வழியாக அனுபவ பூர்வமாக உணர்ந்தேன்.

உதாரணத்துக்கு, என்னையும் அதன்மூலமாகத் தமிழ்ப் படைப்புலகத்தையும் தொடர்ந்து நக்கல்கிண்டல் செய்துகொண்டிருக்கும் சாதிவெறியரும் உங்கள் ஒத்திசைவுடீவியின் அதிபருமாகிய வெ. ராமசாமியின் வெறுப்புமிழதல்களைப் பாருங்கள்.

அதில் இருக்கும் எதிர்மறை மனநிலையும், மானுடவெறுப்பும், மேட்டிமைத்தனத்தின் விளைவான உக்கிரமான காழ்ப்பும் எவரும் இணையவெளியிலேயே வாசிக்கத்தக்கவையாக கிடைக்கின்றன.

அது இருக்கும் வரை இதுவும் இருக்கும். அதாவது கரச அவர்கள் மிகையோ பொய்யோ தொடர்ந்து சொல்கிறார் என்று ஆனால் கூட, அவருடைய தரப்பை ஒட்டுமொத்தமாக மறுக்க அதை ஆதாரமாக நான் கொள்ள மாட்டேன். அவருடைய பணி பெரிது.

அவர் பலதளங்களில் உலாவி உசாவியவர். மானுடம் மீது பெருமிதிப்புகொண்ட அதிமட்டரகமான மரியாதை கொண்டவர். பெண்ணுரிமைக்காகப் பாடுபட்டவர். தமிழகத்தைப் பீடித்திருக்கும் பார்ப்பனிய சாதிவெறியைத் தைரியமாக எதிர்கொண்டவர்.

அவருடைய இம்மாதிரி டிவீட்டுகள் அவருக்கும் அவர் முன்னோடி என நினைப்பவர்களுக்கும் இழிவைச் சேர்ப்பவை என நான் கருதலாம் என நீங்கள் கருதலாம் – ஆனால், ஜெயமோகன் தலைமையில் இருக்கும் அறிவியக்கம் அம்மாதிரி எதிர்நிலைகளுக்கு எப்போதுமே எதிரானது. அதை நீங்கள் புரிந்துகொண்டீர்கள் என நான் புரிந்துகொள்கிறேன். அந்த எதிர்நிலையை முன்வைத்தவர்கள் ஒவ்வொருவருக்கும் எங்கள் அறிவியக்கத்தின் தமிழ்விக்கி விக்கிவிக்கி அளித்துள்ள முக்கியமான இடமே எங்கள் நிலைபாட்டை காட்டுவது.

அன்னாரின் அப்பட்டமான புளுகுச் செயல்பாடுகள் மிகமிக மலினமான ரசனையும் நாகரீகமறியாத மூர்க்கமும் கொண்டவை, ஆகவே நான் வருந்துகிறேன் – என நீங்கள் கருதலாம், அதற்கு முகாந்திரமும் இருக்கிறது; ஆனால் இதுவே அவருக்கு மேலதிகத் தகுதியையும் அளிக்கிறது என என் அறிவியக்கம் நம்புகிறது. அவர் நம் நெடிய தமிழத் திராவிடப் பாரம்பரியத்தின் பண்பாட்டு நீழ்ச்சிதான்.

இதனால்தான், என் வழமையே போலப் பகுத்துத் தொகுத்துச் சொல்கிறேன்…

கிட்டத்தட்ட திட்டத்திட்ட இருபது நெடுவருட நுண்ணுணர்வு ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக இலக்கிய பக்திச் செயல்பாடுகளில் மட்டுமல்லாது, உலகளாவிய பிஹெச்டி விவகாரங்களிலும் – சமூக நீதியுடன் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் காழ்ப்புணர்ச்சியில்லாமல் ஒருசேர ஈடுபட்டுக் கொண்டேயிருக்கும் அவருக்கு நம்மாலான, எம் குழுமம் குழுடாட்டிகள் முனைந்தளிக்கப் போகும் மட்டற்ற மரியாதை இது!

மிகுந்த வேலைப்பளு இருந்தாலும் இந்த விருதை வாங்கிக்கொள்ளத் தான் தயாராக இருப்பதாகவும் – ஆனால் ரஷ்ய மாஸ்கோ, ஜப்பானின் ஓஸாகா பல்கலைக் கழகங்களில் (அதில் பலதுறைகள் இதற்குப் போட்டி போட்டுக்கொண்டிருக்கின்றன ஆகவே குலுக்கல் முறையில் அவை நிர்ணயிக்கப்படும் எனவொரு தகவல்)  அவருக்குக் கொடுப்பதற்காகவே என சிலபல பிஹெச்டி பட்டங்கள் மாஞ்சா நூலுடன் டீல் விடத் தயார் நிலையில் இருப்பதால், அவற்றை வாங்கிக் கொண்டு வரும் வழியில் நட்பு நிமித்தம், விஷ்ணுபுரம் விருதையும் வாங்கி அக்குளில் வைத்துக்கொண்டு ஆற்றுப்படுத்தப் படப்போவதாகச் சொல்வதால், எனக்கு மட்டற்ற இறும்பூது.

நாமெல்லாம் புனைவுகளை எழுதுகிறோம், குதூகலிக்கிறோம். ஆனால், முனைவர்முனைவர் பேராசிரியர்அட்ஜங்க்டர் கண்ணபிரான் ரவிசங்கர் பிஹெச்டிபிஹெச்டி ‘கரச’ அவர்கள், தனக்குத்தானே சுத்தசுயம்புவாக ஒரு பெரும்புனைவாக பிரம்மாண்டவடிவை எடுத்தவர் என்பதை நான் சொல்லவும் வேண்டுமோ?

அவர் தொடர்ந்து புனைவிலேயே  புனைவாக வாழ்கிறார் என்பதற்கு மேலதிக ஆதாரங்கள் தேவையோ?

அவரொரு ஆகச்சிறந்த தனித்துவமிக்க அன்றிப்பிறிதொன்றில்லாத ஆக்கபூர்வ மாளாப்பெரும் தற்புனைவன்!

என் அளப்பரிய மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்வதில் எனக்கு உள்ளொளி மிகுந்து இன்னமும் மிளிர்ந்து உடல் நடுங்குகிறது, மயிர்க்கூச்செறிந்து என் சிரத்தின் பின்னே சிரத்தையாக ஒரு ஒளிவட்டம் சுழல்கிறது என்றால் அது மிகையாகாது.

வாழ்க ஜெயமோகம், வளர்க ஜெயமோகனிஸம்.

இன்றுமுதல் நாளை விருது!”

…என அவர் தெரிவித்தார்.

-0-0-0-0-0-

இதெல்லாம் ஒருபுறமிருக்க – என்னை என் வெகுநீண்டகால நண்பரும், தமிழ் எழுத்தாளரும், ஜெயமோகன் அவர்களாலேயே பாடப்பெற்ற சான்றோரும், பிரபல திராவிடக் கல்வித்தந்தையுமான எஸ்கேபி கருணா எனும் கருணாநிதி அவர்கள்  இதே விஷ்ணுபுரம் விருது குறித்து 2019ல் கேட்டார்.

“உனக்குத் தான், உன் வாழ் நாள் சாதனைகளுக்காக விஷ்ணுபுரம் விருது கொடுக்கப் படுவதாக இருக்கிறது. ஆனால் ஜெயமோகன் ஒரு ஹிந்துத்துவா டைப். சங்கி. ஆகவே வாங்கவே வாங்கிக்கொள்ளாதே.

ஆனால், கரச-வுக்குத் தான் அந்தத் தகுதி இருக்கிறது. அவரிடம் கேட்டேன், ‘முருகா, உனக்கு இருக்கும் மூளைக்கும், சூட்கேஸ்சூட்கேஸாக இருக்கும் பிஹெச்டி பட்டங்களுக்கும், உனக்கு  ஞானப்பழம் தான் வேண்டும். ஆகவே விஷ்ணுபுரம் விருதை வாங்கிக்கொள்!’

ஆகவே கரச-வுக்கே அந்தக் கறை ஏற்படட்டும்…”

…என என்னை ஆற்றுப் படுத்தினார்.

அது மட்டமல்ல, எனக்குத்தான் “ஹார்வர்ட் இருக்கை ஒன்று, டேபிளுடன் கொடுக்கப்பட இருக்கிறது” என்றார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!

-0-0-0-0-

நான் மட்டும் கேப்-விடாமல் தொடர்ந்து எழுதியிருந்தால், தமிழில் மரபான அனைத்தையும், மரபேயில்லாத சமன் குலைக்கும் பிறழ்வெழுத்தின் முன்னோடிகளான படைப்பாளி உடைப்பாளிகளையும் ஒருசேர சமூக நீதியுடன் பெண்டு நிமிர்த்தியிருப்பேன் என்பதைத் தாழ்மையுடன் முன்வைக்கும் அதே நேரத்தில் – நான் எழுதாமலிருந்ததின் அருமையை இந்தியக் கலாச்சாரக் களத்திலேயே எல்லா வகையிலும் பிறழ்வை முன்வைத்தவர் என்கிற முறையில் சாரு நிவேதிதாவே மெச்சியிருக்கிறார் என்பதையும்… …ப்ளடி

….

யென்னமோடாப்பா

:-(

4 Responses to “***BREAKING*** 2022 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் இலக்கிய விருதுவழங்கலில் ஏகப்பட்ட குழப்படிக் குளறுபடி!”

  1. Muthukumar Says:

    :-(:-(:-(:-(:-(:-(:-(:-(:-(:-(:-(:-(:-(:-(…

  2. Kannan Says:

    நாங்க விழுப்புரம் விருது கொடுக்கிறோம், வாங்கிக்க சார், பிளீஸ்.


    • மன்னிக்கவும், கொஞ்சம் படுபிஸியாக இருக்கிறேன்.

      ஜெர்மனி ரஷ்யா உக்ரைன் சீனா சிங்கப்பூர் போன்ற நாடுகளில் மக்களின் பேராதரவு பெற்று அங்குள்ள பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் ரெண்டுரெண்டு பிஹெச்டி கொடுப்பதாகச் சொல்லித் தொல்லை செய்கிறார்கள்.என்ன செய்வது சொல்லுங்கள்?

      தைவானிலிருந்து அம்ரீகா செல்லும்வழியில் விழுப்புரம் வரமுடியுமா எனப் பார்க்கிறேன்.

      உங்கள் ஆர்வத்துக்கும் தன்னலமற்ற சேவைக்கும் நன்றி.


Leave a reply to வெ. ராமசாமி Cancel reply