குறுங்குறிப்புகள் – சில குறுங்குறிப்புகள் (1/n)
March 29, 2016
பொதுவாக, எந்தக் கட்டுரையையாவது எழுத ஆரம்பித்தால், எனக்கு ஆயிரம் வார்த்தைகளைத்தாண்டாமல் இருக்கவே முடியாது. ஆங்கிலத்தில் எழுதுவதென்றால், இது இன்னமும் அநியாயத்துக்கு நீளமாகி விடுகிறது. இந்த லட்சணத்தில் நான் எழுத்தாளனே அல்லன், இருந்தாலும் இப்படி ஒரு அரிப்பு என, என் செல்ல #எஸ்ரா போல, எனக்கு நானே நமட்டுச் சிரிப்புச் சிரித்துச் சொல்லிக் கொள்கிறேன். ஊக்கபோனஸாக, தமிழும் ஆங்கிலமும் என்னபாவம் செய்தனவோ என்கிற எண்ணத்தையும் என்னால் தவிர்க்கமுடியவில்லை! ;-)
ஆனால், கோடிட்டுக் காட்டுவதற்கு – என் மகிழ்ச்சிகளை, கிண்டல்களை, சோகங்களைப் பகிர்ந்துகொள்வதற்கு பல விஷயங்கள் இருக்கின்றன. தமிழ், பலதரப்பட்ட புத்தகங்கள், மாமனிதர்கள், மேதைகள், அயோக்கியர்கள், நகைச்சுவை, கணிநியியல், வானசாஸ்திரம், இசை, அடிப்படை அறிவியல், கணிதம், வரலாறு, உளறாறு, அணுக்கருசக்தி, மின்னியல், தோட்டவேலை, மரபணுவியல், மராமத்துகள், கருவிகள், திரைப்படங்கள், சுட்டிகள் எனப் பலவித/தரமானவைகளாக, முன்னறிமுகமாயுள்ள அவையும் நீளநீளமான ஜாபிதாக்களில் இருக்கின்றன.
அதேசமயம் இவற்றைப் பற்றி விலாவாரியாக எழுதும் தெம்பும் நேரமும் எனக்கு இல்லை – ஏனெனில், பலவித வேலைகளில் என்னைத் தொடர்ந்து அலைக்கழித்துக்கொண்டிருக்கிறேன்; என் காலமும் கைவிரலிடுக்குகளினூடே மணல் வழிந்தோடுவது போலக் கழிந்துகொண்டிருப்பதை உணர்கிறேன். ஆகவே சிறு குறிப்புகளாகப் பலவற்றைப் பற்றிக் கோடிகாட்டுவதாக ஒரு எண்ணம் – ஆகவே, இவை நிச்சயம் கறாரான, தரமான விமர்சனங்களாக இருக்கமாட்டா.
நான் ஓரளவுக்கு நிறைய, விதம்விதமாகப் படிக்கும் பழக்கமுடையவன். நான் படித்துப் புளகாங்கிதமடைந்த புத்தகங்களை, பொக்கிஷங்களை – எல்லோரும் படித்தால் அதுவும் அவையெல்லாம் நம் செல்லத் தமிழிலே வெளிவர முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என நினைப்பவன். அல்லாடுபவன். கழிவிரக்கத்தால் அல்லலுறுபவன்.
ஆச்சரியப் படத்தக்க வகையில், இம்மாதிரிப் பொக்கிஷங்கள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன என்பதையும் உணர்ந்து மகிழ்பவன்!
…ஆனால் எனக்கு, அவைகளைப் பற்றியெல்லாம் (பெரும்பாலும் எனக்குப் பிடித்த, ஆனால் சில சமயம் எனக்கு ஒத்துவராதவை பற்றிக்கூட) விலாவாரியாக விமர்சனங்களையெல்லாம் எழுதும் அளவுக்குச் சிரத்தையில்லை, திறமையுமில்லை. உதாரணமாக ஒரு புத்தகத்தைப் பற்றி ஒரு சிறு குறிப்பு எழுதவேண்டுமென்றால், நான் அதிகபட்சம், துக்ளக் வாராந்தரியின் புகழ்பெற்ற மகாமகோ பரக்கத் அலி அவர்கள் போல மட்டுமே எழுதுவேன்: (ஒருமாதிரி மாதிரியைக் கீழே கொடுத்திருக்கிறேன்)
தமிழ்-அரபு டிக் ஷனரி: டிக்ஷனரி என்றால் அகராதி. அகராதி என்பது அரபுவார்த்தை. அகர்+ஆதி என்று இதைப் பதம் பிரித்தால் — அப்படியானால் (ஹிந்தி) + பண்டையகாலம் (தமிழ்க்ருதம்) என்று பொருள்கொள்ளலாம்; அதாவது ஆதிகாலத்திலிருந்து பகவன் அருளிய கருத்துகளை உள்ளடக்கியது இது.இந்த டிக்ஷனரியில் மொத்தம் 3009876 வார்த்தைகளுக்கு பொருள் கொடுக்கப்பட்டுள்ளது. நல்ல தரமான காலிகோ பைண்டிங். எல்லாம் 0.0001 பாயிண்ட் எழுத்துகளை வைத்துச் சிக்கனமாக அச்சடித்துள்ளதால், கூடவே ஒரு பூதக்கண்ணாடியும் இலவசம், வாசகர்கள் கவனிக்கவும்.
ஒரு வசதிக்காகத் தமிழும் அரபுமொழி போலவே இடமிருந்து வலதாகவும், மேலதிகமாகக் கீழிருந்து மேலாகவும் அச்சடிக்கப்பட்டுள்ளது இதன் விசேஷம். மேலும் அட்டை உள்ளே, மற்ற பக்கங்கள் வெளியே என்கிற நூதன வடிவமைப்பும் மெச்சத் தகுந்தது. புத்தகத்தில் மொத்தம் 5000 பக்கங்கள் -அட்டையைச் சேர்க்காமல், ஏனெனில் அது ரத்தத்தை உறிஞ்சிவிடுமாம்! விலை ரூ2000/- – ஆக, ஒரு பக்கத்துக்கு நாற்பது பைசா விலை. அதாவது வார்த்தைக்கு 0.007 பைசா. தமிழ் வார்த்தைகளுக்கு அரபு அர்த்தம் தேவைப்படுபவர்களுக்கு இது ஒரு நல்ல வழிகாட்டி. வாங்கிப் பயனடையலாம். ( 100 006 – னைன்செ ,ம்கபப்திப குற்மே :ம்டமிகுக்டைகி ம்கதத்பு)
–0-0-0-0-0–
ஏதாவது திரைப்படம் பற்றி எழுதவேண்டுமென்றால், என்னால், என்னருமை #எஸ்ரா போல – அறவுணர்ச்சியுடன் திருட்டுத்தனமாகப் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு – விமர்சனம் என்கிற பெயரில் அதன் முழுக்கதையும் தப்புத்தப்பாக எழுதமுடியாது. மாறாக, வெறுமனே அதன் பெயரை எழுதி ஒன்றிரண்டு வாக்கியங்களை மேலதிகமாக எழுதமுடிந்தால் அதுவே அதிகம்.
ஆக, அரவிந்தன் கண்ணையன் அவர்கள் அளவுக்கு என்னால் வளரவேமுடியாத கையறு (+காலறு ++மூளையறு) நிலையில் இருக்கும் என்னை நினைத்தால் எனக்கே வருத்தமாக இருக்கிறது என்று என்னைப் பார்த்து நானே #எஸ்ரா போல அழுதுகொள்கிறேன்.
எனக்கு இணையத்தில் உலா வரவும் அதிக நேரம் ஒதுக்கமுடியாது; ஆகவே நான் மிகவும் பிரத்யனப்பட்டுப் பொறுக்கியெடுத்த, அல்லது ஆப்த நண்பர்களால் (+என் மனைவி+மகள்+மகன் உட்பட) பரிந்துரை செய்யப்பட்ட சுட்டிகளுக்கு மட்டும் போய், அந்தக் பக்கங்கள் என் ப்ரௌஸருக்கு வந்து சேர்ந்ததும், பொதுவாகவே இணையத் தொடர்பைத் துண்டித்து விடுவேன். (எனக்கும் – சும்மனாச்சிக்கும் குரங்குபோல சுட்டியிலிருந்து சுட்டிக்குத் தாவிக்கொண்டிருந்த நாட்களும் இருந்தன – ஆனால் அவையெல்லாம் பலபத்துவருடங்கள் முன்னே! கைவிரலிடுக்குகள் வழியாக கால மணல்துளிகள் உதிர்ந்துசெல்வதைப் பார்த்துக்கொண்டிருக்கும் எனக்கு, இணையத்தின் பயன்பாடு என்பது ஒரு ஜாலியான விட்டேற்றிப் பொழுதுபோக்கல்ல)
ஆகவே.
இனிமேலிருந்து- யாம் தொடர்ந்து பெற்றுக்கொண்டிருக்கும் பேறு, முடிந்தவரை பெறுக இவ்வையகம் – முக்கியமாக, தமிழைக் கூறுபோடும் நல்லுலகம்…
alea jacta est.
- புத்தகங்களை தானம் கொடுப்பது எப்படி? 10/07/2014
- புத்தகங்களைப் பிரிவது எனும் சோகம் (அல்லது மகிழ்ச்சி?)
March 29, 2016 at 22:07
“வார்ப்பு தயாராகி விட்டது” ஆஸ்டிரிக்ஸின் கிழ பைரெட் ஞாபகம் வருகிறார்
March 30, 2016 at 22:27
©எஸ். ராமகிருஷ்ணன்?
March 30, 2016 at 20:57
அவரவருக்கு தோன்றுவதை எழுதித் தொலைக்கும் உரிமை எல்லோருக்கும் உண்டு. உங்களுக்கு மட்டும் உள்ள உரிமை அல்ல. அதை வாசிப்பதும் கொண்டாடுவதும் வாசகனின் உரிமை. ஆகவே உங்களுக்குத் தோன்றுவதை எழுதித் தோலைக்கும் உரிமையை மட்டும் பயன் படுத்தல் நலம்! அரவிந்தனையோ, எஸ்ரா வையோ மற்ற யாரையுமோ கரிச்சுக் கொட்டும் உரிமை யாருக்கும் இல்லை. யாருடைய எந்த கருத்து பிடிக்க வில்லையோ அந்த பக்கத்திற்கு போய் அதற்கு மாற்றமான உண்மைகளை அங்கேயே உடைப்பது தான் அழகு! அதை விட்டு விட்டு தன்னையே பெரிய மேதாவியாக எண்ணிக் கொண்டு மற்ற எல்லோரையும் வசை பாடுவது எந்த வகை எழுத்து நாகரீகம் என்று (உங்களுக்குத்) தெரியவில்லை.
March 30, 2016 at 22:25
And then, I saw light!
பேராசானே! அறிவுரைக்கு நன்றி!
குருவருள் கிடைத்தது! மன இருள் அகன்றது!
நான் திருந்திவிட்டேன். நாகரீகமுள்ளவனாக மாறி விட்டேன்!
நன்றி! நன்றி!! நன்றி!!!
உங்களை வாழ்த்தி, வணங்கி, உங்கள் பாதாரவிந்தங்களில் விழுந்துபுரண்டு மகிழ்கிறேன்.
April 1, 2016 at 21:13
நாம் யாருக்கும் ஆசான் இல்லை. தங்களுக்கு அறிவுரை சொல்லும் தகுதியும் நமக்கு இருப்பதாக நினைக்கவும் இல்லை. குருவும் இல்லை. என் தவறுகளில் இருந்து திருந்தவும், யார் மனமும் வருந்தும் நிலையில் வாழக்கூடாது என்று போராடி வாழ்ந்து வரும் சாதாரண மனிதன். நம் காலில் யாரும் விழுவதை எதிர்க்கிறேன். நன்றிக்கு நன்றி.
என் மனதுக்கு தோண்றியதை எழுதினேன். மற்றபடி எஸ்ரா வையும் அரவிந்தனையும் எனக்குத் தெரியாது. அடுத்த முறை லிங்க் கொடுத்து எழுதுங்கள்.
March 31, 2016 at 00:08
அன்புள்ள ராம்,
Eagerly waiting :)
Sometimes I disagree with you. But, learnt a lot from you,Thanks!
Switched off TV for the past few months :)
Completed few books including JJ sila kurippugal
Now, trying to get out of FB.
You can expect some எதிர்வினை from me :) for your posts
March 31, 2016 at 06:08
Dear Kavi,
Thanks for joining the party, feel free to disagree with that opinionated goddam fool.
To tell you the truth, I also sometimes violently disagree with him, he is one such cynical wastrel, he is oh so unbearable!
Please go ahead, siree!
March 31, 2016 at 09:08
Pls go ahead, In this world of chamchas, there are very few , who can call a spade a spade..