தொடரும் ‘அல் அன்ஃபல்’ – சில குறிப்புகள்
January 12, 2016
இப்பதிவு ரொம்பவே நீளம் – சுமார் 1600 வார்த்தைகள். சிலபல சங்கடம் தரும் படங்களும் இருக்கின்றன. நீங்கள் எந்தப் பார்வையிலிருந்து இதனைப் படிக்கப் போகிறீர்கள் என்பதைப் பொறுத்து, இது கொஞ்சம் வருத்தம்தரும் பதிவாக இருக்கலாம்; நிதானமாகப் படிக்கவும்; உங்களுடனேயேகூட உரையாடிக்கொள்ள இதனை, வேண்டுமானால் உபயோகித்துக்கொள்ளலாம். ஆனால், தேவையேயற்ற கோபம் வேண்டாம். சும்மனாச்சிக்கும் பொங்கவேண்டாம். அதிதீவிர உணர்ச்சிவசப் படலும் வேண்டாம். எப்படியும், ஞமலித்தனமான பின்னூட்டங்கள் கடாசப்படும். நன்றி.
எதற்காக இவற்றைப் பற்றியெல்லாம் எழுதுகிறேன் என்ற நியாயமாக கேள்வி உங்களுக்குள் எழுந்தால், இந்தத் தொகுப்பிலுள்ள அனைத்துக் கட்டுரைகளையும் படித்து ஒரு திடத்துக்கு வரவும்: இஸ்லாம், முஸ்லீம் தொகுப்பு (8 ஜனவரி, 2016 வரை)
‘அல் அன்ஃபல்’ – ஒரு சுருக்கமான அறிமுகம்:
சில நாட்கள் முன், இராக்கின் முன்னாள் அதிபதியான ஸத்தாம் ஹுஸ்ஸைய்ன் படுகொலைக் குற்றங்களுக்காகத் தூக்கிலிடப்பட்டதை ஒரு பக்கப்பலகைச் செய்தியாகக் கொடுத்திருந்தேன்; அதன் ஒரு ‘மேம்படுத்தப்பட்ட’ விரிவு கீழே – இதை ஒரு முத்தாய்ப்பாக வைத்து மேலதிகமான விஷயங்களும் இப்பதிவில் இருக்கின்றன; முடிந்தால் படிக்கவும்!
(படம்: Michael J. Kelly – Ghosts of Halabja: Saddam Hussein and the Kurdish Genocide (Praeger Security International))

அல் அன்ஃபல் #17; http://quran.com/8/17
1986 முதல் 1989 வரை வட இராக்கில் கர்ட் மக்களுக்கு எதிராக அரங்கேற்றப்பட்ட ‘அல் அன்ஃபல்’ என்பது கொர்-ஆனின் 8ஆம் அத்தியாயம் சார்ந்தது; இதன் + இது தொடர்பான மதபோதனைகளின், அதன் சமகால அனுபவங்களின் சாராம்சம் — போருக்குப் பின், தோற்றவர்களை அழித்தொழிப்பது, கொள்ளை, தோற்றவர்களின் பெண்களைப் பாகம் பிரித்துக்கொள்ளல், பாலியல் வன்முறை இன்னபிற – நம்மூர் மழபுல/உழபுல வஞ்சி போன்ற கொடூர சமாச்சாரம் – ஆனால் பல்லாயிரமடங்கு கோர வீரியமிக்கது. இவ்வத்தியாயத்தின் பின்புலத்தில், வளர்ந்துகொண்டிருந்த அக்கால இஸ்லாமின் தேவைகள் இருந்தன; அப்புது மார்க்கத்தின் எதிரிகளை, அக்கால அரேபிய குலக்குழுப் போர்முறைகளின் படி பணிய வைத்தல், தீர்த்துக்கட்டல் போன்றவைதான் இவற்றுக்குப் பின்புலம். ஆனால் இதெல்லாம் நடந்தது, குடிமைப் பண்பு என, பண்பாடு என, அரேபியப் பிரதேசத்தில் பெரிதாக வளர்ந்திராத அந்தக் காலம்.
ஆகவே, அக்காலத்துக்குப் பின்னும் அவ்வப்போது, தொடர்ந்து – இம்மாதிரி ‘அல் அன்ஃபல்’ விஷயங்கள் நடந்துகொண்டுதான் இருந்தன, இருக்கின்றன – அதே கொர்-ஆனின் அதே அத்தியாயத்தை மேற்கோள் காட்டியபடி.
சுருக்கமாகச் சொல்லப்போனால், இவர்கள் தங்களுக்குச் சாதகமாக, மேற்கோள் காட்டுவதன் சாராம்சம்: ‘இஸ்லாமின் எதிரிகளை நீ கொன்றால், அது நீ செய்ததல்ல, அது அல்லாவாகிய நானே செய்தது போல, எனக்காகத்தான் நீ இவற்றைச் செய்கிறாய், இன்னபிற‘; பிரச்சினை என்னவென்றால் ‘எதிரி’ என்பதை எப்படி வேண்டுமானாலும் நடைமுறையில் அர்த்தம் கற்பித்துக்கொள்ளலாம்.
எனக்கு ஏதோ ஒரு காரணத்தினால் பிடிக்காதவனை — அதாவது, வேற்று மதநம்பிக்கையாளன், நாஸ்திகன், இமாம்/முல்லாக்களைக் கேள்வி கேட்பவன், இஸ்லாமை விட்டு வெளிச் செல்பவன், ஓரினச் சேர்க்கையாளன், இஸ்லாமை அவமதிப்பவன், மார்க்கத்தைவிட்டு விலகுவதாக அல்லது அதன்மேல் விமர்சனம் வைப்பதாகக் கருதப்படுபவன், (சில எடுத்துக்காட்டுகளைத்தான் கொடுத்திருக்கிறேன்) எனப் பலவாறானவர்களை — பல விதங்களில் – அவிசுவாசி, இன்ஃபிடெல், காஃபிர், முல்ஹத், முர்தத், கவாரிஜ், மில்லி, ஃபிட்ரி என எப்படிவேண்டுமானாலும் அழைத்து, கேவலப் படுத்தலாம், அழித்தொழிக்கலாம்; அவன் சொத்தை, சுற்றங்களைச் சூறையாடலாம்; அதற்கு அல்லாவைத் துணைக்கும் அழைக்கலாம்! அந்த ‘அவன்’ ஒரு அவளாக இருந்துவிட்டாலோ…
ஒரு தனிப்பட்ட எடுத்துக்காட்டாக, நானுமே பலமுறை காஃபிர், முல்ஹத் எனவெல்லாம் வெறுப்புடன் அழைக்கப்பட்டிருக்கிறேன் – இது ஒரு பெரிய விஷயமேயில்லை என்றாலும்! 8-)
‘அல் அன்ஃபல்’ – ஒரு இராக்கியக் குருதி வரலாறு:
சரி. ‘அல் அன்ஃபல்’ விஷயத்தின் அண்மைக்கால பதிப்பு பக்கம் மறுபடியும் செல்வோம். ஒரு ஓரளவு சமீபகால நடவடிக்கையாக (1986 – 89), ஸத்தாம் ஹுஸ்ஸைய்னின் மருமகன் ஒருவரால் நேரடியாக நடைமுறைப் படுத்தப்பட்ட இந்த ‘அல் அன்ஃபல்’ வழியாக சுமார் 180, 000 கர்ட் மக்கள் (ஒரு லட்சத்து எண்பதினாயிரம் பேர்!) அழித்தொழிக்கப் பட்டனர்.
இதன் உப அத்தியாயமாக, இராக்கின் ஹலப்ஜா நகரில் கொடும்ரசாயன குண்டுகள் போட்டு ஓரிரு நிமிடங்களில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட சாதாரண/அப்பாவி கர்ட் மனிதர்களைக் கொன்றதும் நடந்தது… (இந்த மருமகன் தான் ‘கெமிக்கல் அலி’ – ‘காமிக்கல் அலி’ என்றெல்லாம் கிண்டல் செய்யப் பட்ட இராக்கின் வேலுப்பிள்ளை பிரபாகரன்)

மேற்குறிப்பிட்டுள்ள புத்தகத்திலிருந்து…
இராக்கிய ‘அன்ஃபல்’ கொடூரங்கள் தொடர்பான, ஒரு சிறு வீடியோ.
ஸத்தாம் ஹுஸ்ஸைய்ன் பற்றிய ஒரு நிதர்சன வீடியோ: Uncle Saddam (2000) – தமிழ் நாட்டில் பலர் நினைத்துக்கொண்டிருப்பதுபோல், அவர் ஒரு சாத்வீகியோ தன்னிரகற்ற மக்கள்தலைவனோ அல்லர். சொல்லப்போனால், அவர் நம் செல்ல ‘விடுதலைப்புலி’ பிரபாகரன் போன்றவர்தான்.
-0-0-0-0-0-0-
‘அல் அன்ஃபல்’ – தற்கால இஸ்லாமிக்ஸ்டேட் உதிரிகும்பல் சார்ந்த நிகழ்வுகள்:
இஸ்லாமிக் ஸ்டேட் குண்டர்களும், தங்கள் அயோக்கியச் செயல்களுக்கு வியாக்கியானம் கொடுக்க அதே அல்-அன்ஃபல் அத்தியாயத்தைத்தான் மேற்கோள் காட்டுகிறார்கள்.
எடுத்துக்காட்டு ஒன்று:
சென்ற வருடம் மொஸுல் (இராக்கினுடையது, ஆனால் தற்போது இஸ்லாமிக் ஸ்டேட் வசமிருப்பது) நகரத்தில் இருக்கும் பெரும்பாலான கர்ட் மக்களும், க்றிஸ்தவர்களும் கொத்துக்கொத்தாக, குடும்பம் குடும்பமாகப் படுகொலை செய்யப்பட்டார்கள்.
எடுத்துக்காட்டு இரண்டு:
இது சென்ற வாரம், ஜனவரி 7, 2016 அன்று அல்-ரக்வ்வா நகரில் அரங்கேறியது. (இராக்கில் உள்ள இந்த ஊர்தான், இஸ்லாமிக் ஸ்டேட்டின் தலை நகரம்)
20 வயதே ஆன, இளம் அலி ஸாக்கெர் அல்-க்வாஸெம் எனும் இஸ்லாமிக்ஸ்டேட் ஜிஹாதியை – அவனுடைய பொறுக்கி வழிகளிலிருந்து திருத்த அவன் தாய், 45 வயது தபால்துறை அலுவலரான லேனா அல்-க்வாஸெம், முயன்றார். அதாவது, அல் ஸாக்கெரிடம் – ‘ரக்வா நகரில் இருந்து தப்பித்துப் போய்விடலாம், நமக்கு இந்தப் பிழைப்பு வேண்டாம்‘ என்றார். அவ்வளவுதான்.
‘அல் அன்ஃபல்’ வெறியூட்டப்பட்ட இந்த அலி ஸாக்கெர், தன் கும்பலிடம் அதைச் சொல்லி முறையிட, இஸ்லாமிய ஷாரியா நீதி(!)மன்றமானது லேனாவுக்கு மரண தண்டனை விதித்தது. அதையும், அலி ஸாக்கெரே நிறைவேற்றவேண்டும் எனச் சொன்னது.
அந்த மகனும், தன் கும்பல் புடைசூழ – தன் தாயை வேலை செய்துகொண்டிருந்த அலுவகத்துக்கு முன்னால் இட்டுச் சென்று நாற்சந்தியில், அவர் தலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான்.

-0-0-0-0-0-0-
‘அல் அன்ஃபல்’ போன்ற கருத்தாக்கங்களிலிருந்து பிய்த்தெடுத்து, வெறியற்ற பன்முக இஸ்லாமை வளர்த்தெடுப்பது என்பது உலகத்தின்முன் இருக்கும் ஒரு பெரிய சிக்கல்.
…ஆனால் பெரும்பான்மை வழக்கம் போல, அறிவுஜீவிய தப்பித்தல் மனப்பான்மையுடன், தொழில்முறை மனிதவுரிமைக் காரர்கள் போல — அந்தக் கொலைவெறிக்காரர்களை – அவர்கள் முஸ்லீம்களே இல்லை, அவர்கள் இஸ்லாம் மார்க்கத்தையே சரியாகப் புரிந்துகொள்ளாத குண்டர்கள் என ஒரேயடியாக அடித்துச் சொல்லலாம். கயமைச் சப்பைக்கட்டுக் கட்டலாம். ஆனால், அது சரியில்லை, அடிப்படை நேர்மையற்ற செயல்; ஏனெனில், அந்தக் குண்டர்கள் தங்களுடைய இக்காலக் கீழ்மைக்காக, அக்கால நிதர்சன நிலவரங்களை, மதமாச்சரியங்களை மிகச் சரியாகவே மேற்கோள் காட்டுகிறார்கள்.
ஆகவே, இந்த விஷயம் 1) இஸ்லாமில் உள்ள மிதவாதிகளுக்கும் 2) அதன் திரண்டுவரும் பகுத்தாயும் அறிவுள்ள (பகுத்தறிவு என்று எழுதுவது, எனக்கு அசிங்கமான திராவிடத்தனமாக இருக்கிறது, மன்னிக்கவும்) சான்றோர்களுக்கும் இளைஞர்களுக்கும், 3) அதன் மேன்மைகளுக்காக கலாச்சார வளத்திற்காக, அதன்மீது மகத்தான மரியாதை வைத்திருப்பவர்களுக்கும் (என்னைப் போன்றோர்), கொஞ்சம் அல்ல, நிறையவே சங்கடம் தருகிறது.
‘அல் அன்ஃபல்’ பகுதிகள் போல, வழி நெடுக, இக்காலங்களில் கேள்விகேட்டு விவாதிக்கவேண்டிய விஷயங்கள் பல இருக்கின்றன, அவற்றில். பலப்பல, ஆனால் மக்கள் திரட்டப்படவேண்டியதற்கான அன்றாட மதச் சடங்குகளும், நடைமுறை விழுமியங்களும் இருக்கின்றன – சில அடிப்படை மானுட விழுமியங்களும் இருக்கின்றன. ‘இதை இப்படிச் செய்!’ ‘அதை அப்படிச் செய்யாதே!’ எனக் குறிப்பிட்ட செயல்பாடுகளைக் குறித்த கட்டளைகளும் இருக்கின்றன. ஆனால் தத்துவவிசாரம் எனும் வகையில், அவற்றில் ஒன்றுமில்லை. பிரபஞ்சத்துக்கும் மானுடனுக்கும் உள்ள உறவுகளைப் பற்றிய பதிவுகள் இல்லை, இருப்பின் அடிப்படைக் கேள்விகள் பற்றிய விவாதங்கள் இல்லை. (ஆனால் பிற்காலங்களில், இஸ்லாமியத் தத்துவாசிரியர்கள் பலர் இவற்றைப் பற்றியும் அறிவியல்/கணிதம்/வான ஸாஸ்திரம் பற்றியும் நிறையவே யோசித்திருக்கின்றனர்; அவர்களில் சிலர் அவிசுவாசி எனக் கொலை செய்யப்பட்டும் இருக்கின்றனர்)
ஆனால், தம் மார்க்கத்தை விரித்துக்கொண்டாகவேண்டும், தம் மார்க்கத்தைச் சார்ந்தவர்களின் வெற்றிக்காகப் பாடுபடவேண்டும் எனும் காலகட்டத்தில் வரைமுறை செய்யப்பட்ட கருத்தாக்கங்கள், அக்கால கட்டத்தின் நடைமுறை விவரங்களை, சூழல்களை உள்வாங்கிக் கொண்டுதான் செயல் பட்டிருக்க முடியும். அவை, இக்காலத்திலும் அப்படியே ஈயடிச்சான் காப்பியடித்து உபயோகிக்கப் பட்டால், ஒருவர் அம்மார்க்கத்தின் செழுமைக்குச் செய்யும் தீங்கே தவிர வேறொன்றுமில்லை.
…ஆனால், இம்மாதிரி மறுமலர்ச்சிக்காகத் தொடர்ந்து செயல்படுபவர்களுக்கு அவர்கள் அமைப்புகள் திரண்டுவர, இக்காலத்திய இஸ்லாமிய நாடுகளில், அதற்குத் தேவையான சூழல் இல்லை. ஆகவே தன்முனைப்புடன் சிறு குழுக்களாக இயங்குபவர்களுக்கு கைமேல் பலன் – உடனடியாக வீரமரணம், அல்லது வீரச்சிறை. அல்லது அவர்கள் ஆயுதம் தாங்கிகளாகவேண்டும் – கர்ட் மக்கள் திரளைப் போல. (அல்லது அவர்கள் ஃப்ரான்ஸ், யுஎஸ்ஏ, கனடா, இங்கிலாந்து, ஜெர்மனி (ஏன், இந்தியா கூட) போன்ற நாடுகளில் அகதிகளாகச் சரணடையவேண்டும்; இதுதான் நிதர்சன நிலவரம்…)
-0-0-0-0-0-0-0-
‘அல் அன்ஃபல்’ – தற்கால ‘இஸ்லாமியக் குடியரசுகள்’ சார்ந்த தாக்கத்துகள்: .
பொதுவாகவே பாவப்பட்ட நிலையில் இருக்கும் ‘இஸ்லாமிய’ நாடுகளில், நான் அறிந்தவரை இரண்டு நாடுகளே ஓரளவுக்காவது சமன நிலையுடன், தொடர்ந்து, ஓரளவு ஜனநாயகத்துடன் இருந்து வந்திருக்கின்றன; அவற்றின் எக்கால நிலைமையும் ஒஹோவென்று இல்லையென்றாலும் – அவை 1) துருக்கி 2) பாகிஸ்தான். இவற்றின் நெடிய வரலாற்றை அறிந்துகொண்டுதான், இரண்டாம் நாட்டில் சிலபல அழகான அறிமுகங்களை வைத்துக்கொண்டுதான் இப்படிச் சொல்கிறேன்.
மற்ற இஸ்லாமிய ‘நாடு’களில் இருப்பதை விட பாகிஸ்தானில் இருக்கும் (இன்னமும் அழியாத) ஜனநாயக மரபுகள் அதிகம். பிரச்சினை என்னவென்றால், நமக்குப் பெரும்பாலும் தெரிய வருவது, அதன் மறுபக்கம் மட்டுமே. ஆனால் அதுவும், அதன் சக்தியும் வீரியமும் பராக்கிரமும் மிக்க ராணுவத்தின் கிடுக்கிப்பிடியின் கீழ், கொஞ்சம் கொஞ்சமாக ஒரு நடைமுறை, தற்கால இஸ்லாமிய நாடாக மாறி வருகிறது. அதன் பலூச்சிகள் மொஹாஜ்ஜிர்களுக்கெதிரான கொடும் வன்முறைகள், அநியாயக் கொன்றொழித்தல்கள் எல்லாம் தொடர்ந்துகொண்டு இருக்கின்றன.
ஷியாக்களும் அஹ்மெதியாக்களும் அவ்வப்போது படுகொலை செய்யப்படுகிறார்கள்; பாவப்பட்ட பாகிஸ்தானி ஹிந்துக்களின் நிலைமை பற்றியோ, கேட்கவே வேண்டாம்.
…இருந்தாலும், எனக்குத்தெரிந்தவரை பெரும்பாலும் – அதன் போர்வீரர்களும், காவல் துறையினரும், இன்னபிற பாதுகாப்புக் காரர்களும், ஒரு போதும் ‘அல்லாஹூ அக்பர்’ என்று சொல்லி தங்கள் கடமைகளை/கழுத்தறுப்புகளை நிறைவேற்றுவதில்லை. ‘அல் அன்ஃபல்’ மேற்கோள்களில் ஈடுபடுவதில்லை. இன்னமும், ‘அல்லாஹ் ஹஃபிஸ்’ என்று சொல்லாமல், ‘குதாஹ் ஹஃபிஸ்’ என விடைபெறுபவர்களே அங்கு அதிகம்.
(இதை நான் எழுதிக்கொண்டிருக்கும் வேளையில் பாகிஸ்தானிய ராணுவத்திலும், இஸ்லாமியத் தாக்கத்துகள் (‘அல் அன்ஃபல்’ வகையறா உச்சாடனங்கள்) அதிகமாகிக் கொண்டு வருவதாகப் பல செய்திகள் வருகின்றன; அங்குள்ள ஸிவில் சமூக களப்பணியாளர்களும் இதைச் சுட்டிக்காட்டிய வண்ணம்தான் இருக்கிறார்கள் – ஆனால் இப்பணியாளர்கள் சிறுபான்மையினர்; மேலும் ஸவூதி அரேபியாவின் பிச்சைக்காசு மூலம் அடிப்படைவாதம் அதிகரித்துக்கொண்டுமிருக்கிறது என்பது ஒரு சோகம்.)
துருக்கியின் கதை என்பது வேறு.
அதாவது, மேற்கண்டவாறுதான் நான் இதுவரை நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால்…
இதன் பின்புலம்: அண்மையில் நடந்த பொதுத் தேர்தலில், கர்ட் பகுதிகளில் பெரும்பான்மை பிரதி நிதித்துவம் அம்மக்களிடமே போய்ச் சேர்ந்து விட்டது. இது துருக்கியின் அதிபரான எர்டொகனுக்குப் பொறுக்கவில்லை. (கர்ட்களின் மக்கள் திரளில், மிகப் பெரும்பான்மையானோர் ஸுன்னி முஸ்லீம்கள், யேஸீதிகள் அடுத்த பெரிய பிரிவு; ஷியாக்கள், க்றிஸ்தவர்கள், யூதர்கள் எனப் பிற மக்கள்; அழகானவர்கள், பாரம்பரியம் மிக்கவர்கள், மேன்மையை விழையும் ஜனநாயகவாதிகள்)
எப்படியும், கடந்த ஒரு வருடமாக, துருக்கி அரசின் கர்ட் மக்கள்திரளுக்கெதிரான (வேறுவழியேயில்லாமல், ஆயுத பாணிகளுக்கெதிராக எனும் போர்வையில்) அராஜகங்கள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.
கர்ட் மக்கள் வாழும் பகுதிகளில் தீயிடல், கொள்ளை, வான்வழித் தாக்குதல், டேங்க்/பீரங்கிகளை வைத்துக் குண்டுவீசல், சின்னஞ்சிறு குழந்தைகளைக் கூடச் சுடுதல், வரிசையாக நிற்க வைத்துக் கொலை செய்தல், கற்பழிப்புகள், நகரங்களை முற்றுகையிடல் – நீர், மின்சாரம், மருத்துவவசதி என எதையும் கொடுக்காமை என விரிகின்றன இவை. சுட்டுக் கொலை செய்யப்பட்டவர்களின் ஈமக் கிரியைகள் செய்யமுடியாத படிக்கு – அவர்களின் உடல்கள் தெருவோரங்களிலேயே அழுகிக் கொண்டிருக்கும் நிலை!
அந்த 23 வினாடி வீடியோத் துண்டில் ஒரு துருக்கி ஸ்பெஷல் ஃபோர்ஸஸ் (Turkey’s SpecialOps group) குழு ஒன்று வெறித்தனமாகச் சிரித்துக்கொண்டே ‘அல் அன்ஃபல் #17’ மேற்கோளைச் சொல்லிக்கொண்டு, தெருவோரக் கர்ட் குழந்தை ஒன்றை, மண்டையில் சுடும் காட்சி.
நான் விக்கித்துப் போய்விட்டேன்.
ஒரு எடுத்துக்காட்டாக, ஆங்கிலச் செய்தி: [ஸெப்டெம்பர் 4, 2015 தினத்தைய செய்தி; இந்த அராஜகம் இன்றுவரை தொடர்கிறது!] Thousands of Turkish Police, Soldiers and Special Operation Teams Are Daily Attacking Kurdish Cities With Heavy Weapons
அருவருப்பாக இருந்தது. எல்லாவற்றையும் இழுத்துமூடிவிட்டு, ரஜினிகாந்த் போல இமயமலைச் சாரலுக்குச் சென்றுவிடலாமா என்று ஒரு திடீரெக்ஸ் உந்துதல். ஆனால்…
சிலமணி நேரக் குமட்டல்களுக்குப் பின் இரண்டு இரவுகளாக, இப்பதிவை எழுத ஆரம்பித்தேன், எழுதிக் கொண்டிருக்கிறேன்... :-(
என்னுடைய கோரிக்கை நினைவில் இருக்கிறதா? நன்றி.
ஆமென்.
-0-0-0-0-0-
January 12, 2016 at 17:17
ஹிந்துஸ்தானம் உள்பட உலகளாவிய இஸ்லாத்தின் கலாசார வளம் என்பது மதிப்பிற்குரிய விஷயம். ஆனால் வஹாபிய / ஸலாஃபிய குழுங்கங்களின் முதல் லக்ஷ்யம் இந்த கலாசார வளம் என்ற சமாசாரத்தை அடிச்சுவடின்றி அழித்தொழிப்பது. இலக்கியம், கலை, சிற்பம், பாட்டு, நடனம் …………….. இன்னபிற எல்லாவற்றையும் ஷிர்க் என்று வகைப்படுத்தி அவற்றை இழிவு செய்தல்……………. இவற்றுடன் தொடர்பு உடையவர்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்தல்……………இது ஒரு தொடரும் விஷயமே. 1947ல் எல்லை தாண்டி பாகிஸ்தான் போன ஸாஹிர் லூதியான்வி, உஸ்தாத் படே குலாம் அலி கான் சாஹேப் போன்ற சான்றோர்கள் ……………. இது போன்ற அங்கு பெருகி வந்த அத்யாசாரங்கள் பொறுக்காமல் தான் ஹிந்துஸ்தான்ம் திரும்பினர். காஜி நஸ்ரூல் இஸ்லாம் அவர்கள் பாங்க்ளாதேசத்தில் தங்கி விட்டாலும் அவரது பரந்த கலாசார ஒற்றுமை காணும் பார்வை கடைசீ வரை மாறவில்லை.
குதா ஹாஃபீஸ் மறைந்து அல்லா ஹாஃபீஸ் பாகிஸ்தானத்தில் பெருகி வருகிறது.
மறுமலர்ச்சி இஸ்லாம் ……………. அல்லது……….. இஸ்லாமிய உலகில் பெருகி வரும் அத்யாசாரங்களை கேழ்வி கேட்பது என்பது ஸ்தாபனம் சார்ந்த குழுமங்களாலும் எதிர்கொள்ளப்படுகிறது. ஒரு உதாஹரணம் ராவல் டிவி யின் ப்ரசித்தி வாய்ந்த பிலாதகல்லுஃப் நிகழ்ச்சிகள். இதன் வாயிலாகத் தான் ஸ்ரீ தாரிக் ஃபதஹ் சாஹப் அவர்கள் கட்டுப்பட்டி இஸ்லாத்தின் …………….. அது கதாநாயகர்களாகக் கொண்டாடும் அரக்கர்களை சாடும் உரையாடல்கள் பொது தளத்தில் நிகழ்கின்றன.
இசை, இலக்கியம், கலை, சிற்பம், ஓவியம் என அனைத்து துறைகளிலும் காலகாலமாக கொடிகட்டிப்பறக்கும் இஸ்லாமிய சான்றோர்களுடைய மதம் என்பது எப்படி இருக்கும் என்றும்……….. இன்றைய தினம் டிவி அக்கப்போர்களில் கத்தோ கத்து என்று கத்தும் முல்லா மௌலவிகளுடைய இஸ்லாத்தையும் பார்க்கையில் ஆயாசம் விஞ்சுகிறது.
ஆனால் இன்றைய ஹிந்துஸ்தானத்திலும், பாகிஸ்தானத்திலும் பாங்க்ளாதேஷிலும் இன்னமும் இவர்கள் தொடர்ந்து தங்கள் கலாசாரத்தை பேணுகிறார்கள் அதை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்கிறார்கள் என்பது ஆறுதல் அளிக்கும் விஷயம் பிந்தைய இரண்டு பகுதிகளிலும் பெருகி வரும் முரட்டு வஹாபியத்தால் கிட்டத்தட்ட எதிர்நீச்சல் போட வேண்டிய நிலமை கலாசார போஷகர்களுக்கு.
நீங்கள் கேட்ட விஷயம் சம்பந்தமாக தொடர்பு கொள்கிறேன். என்னாலான உதவியையும் செய்கிறேன்.
குதா ஹாஃபீஸ்
January 12, 2016 at 21:27
இந்த பெங்”காலி” அறிவுஜீவீயின் கருத்துதில்களையும் பாருங்கள் http://scroll.in/article/801715/was-malda-really-an-incident-of-communal-violence
January 13, 2016 at 06:51
அய்யா சந்திரமௌலி:
அக்கட்டுரையைப் படித்தேன். இறும்பூதடைந்தேன். எனக்கு இவ்விஷயத்தில் பெரிதாக ஒன்றும் தெரியாது. வெறும் அரைகுறை தினசரி ஒன்றிரண்டைப் படித்தேன், அவ்வளவுதான்.
ஆனால் – அடிப்படையோ பயிற்சியோ அற்ற சிரத்தையே துளிக்கூட அற்ற சோம்பேறிக்குளுவான்கள், போராளித்தனமான பத்திரிகை நிருபர்களாகவும், ‘நிகழ்வுகளின் இன்னொரு பக்கத்தைக் காட்டும்’ எழுத்தாளர்களாகவும் மினுக்கிக்கொண்டு பவனி வரும் காலம் இது.
கண் தொடர்பான பணியாளர்களில் பலவகையினர் உண்டு; அவற்றில் மூன்று முக்கியமானவை. Ophthalmologist (கண் தொடர்பான ரண/அறுவைசிகித்சை, நோய்கள் தொடர்பாக விசேஷ பயிற்சி பெற்ற மருத்துவர் – ‘டாக்டர்’), Optometrist (கண் ஆரோக்கியம் தொடர்பான பயிற்சி பெற்ற மருத்துவர்கள், அறுவை சிகித்சை செய்யமாட்டார்கள்), Optician (இது தையற்தொழிலாளர் போன்ற ஒரு வேலை, கண்பார்வைக் கோளாறுகளுக்கான கண்ணாடிகளை, வடிவமைப்பு செய்யும் வேலை; பல சமயங்களில் இது தெருவோரத்தில் குளிர்கண்ணாடிகளை விற்பது போன்ற அளவிலேயே இருக்கும்; கட்டுரையின் இந்தப் படத்தைப் பார்த்தால், அந்த மனிதர் மொஹெம்மத் ரஹ்மான் இம்மாதிரி ஒரு கடையை நடத்திக்கொண்டிருக்கிறார் என்று தெரிகிறது; மேலும் அதில் உள்ள மொபைல் எண்ணுக்கும், என்னுடைய பெங்காலி நண்பர் ஒருவர் மூலமாகத் தொடர்பு கொண்டு, என்னுடைய ஊகம் சரியா என்று பார்த்துக்கொண்டேன், அவர் அதிகபட்சம் ஒரு ஆப்டீஷியன் தான், ஒரு ஆஃப்தல்மாலஜிஸ்ட் அல்லர்!)
நான் எந்த வேலையையும் கேவலமாகப் பார்ப்பவன் அல்லன். ஊரார் மலத்தையும் அள்ளியிருப்பவன்; இது ஒரு பெரிய விஷயமேயில்லை என்றாலும்…
விதம் விதமான வேலைகளுக்கிடையே உள்ள அடிப்படை வித்தியாசங்களைக் கூடத் தெரியாமல் – “said Mohammad Rahman, an ophthalmologist who also runs an optical store in the Kaliachak market.” என கனகம்பீரத்துடன் எழுதுகிறார் இந்த அரைகுறை எழுத்தாளர். சாதாரண விஷயங்களையே சரியாக எழுதமுடியாத இவர், பெரிய விஷயங்களில் கருத்துக் கந்தறகோளங்களை அள்ளி வீசுவது நகைப்புக்குரியது. இன்னொரு விஷயம் என்னவென்றால், இப்பேடிகளுக்கு ‘ஒரு கடைக்காரர் இப்படிச் சொன்னார்’ என்பதை விட ‘ஒரு பயிற்சிபெற்ற மருத்துவர் இப்படிச் சொன்னார்’ என்று எழுதுவது அவர்களுடைய நம்பகத்தன்மையை அதிகமாக்குகிறது என்றொரு எண்ணம் என நினைக்கிறேன். :-(
இவர்களை மன்னித்து விடுங்கள். அதே சமயம், நம்மூர் ஆம்பூர் பக்கத்தில் நடந்த கோரங்களை, இதே ஊடகப் பேடிகள் எப்படி அணுகினார்கள் என்பதையும் நீங்கள் அறிந்துகொண்டிருப்பீர்கள் என நினைக்கிறேன்.
ஆம்பூர் அட்டூழியங்கள், தமிழகத்தில் இஸ்லாமிக்ஸ்டேட் பொறுக்கிகளுக்கு ஆதரவு, என் தம்பி – நடைமுறை தமிழக இஸ்லாம் (2/3)15/07/2015
https://othisaivu.wordpress.com/2015/07/15/post-520/
இந்திய முஸ்லீம் சமூகம், அதன் ஏகோபித்த சுயலாப-பழமைவாத அரசியல்/சமூக/மதத் தலைமை, அது எதிர்கொள்ளவேண்டிய பிரச்சினைகள்: சில குறிப்புகள் (1/3)13/07/2015
https://othisaivu.wordpress.com/2015/07/13/post-519/
நாயும் பிழைக்கும் இந்த ஊடகப் பேடிகளுடைய பிழைப்பு. இவர்கள்தாம் பாவப்பட்ட/சாதாரண முஸ்லீம்களின் எதிரிகள். வேறென்ன சொல்ல.
January 14, 2016 at 21:35
எனக்கு சுமாரான தமிழுடன் கொஞ்சம் ஆங்கிலமும் தெரியும். உங்களுக்கு உதவ முடிந்தால் மகிழ்ச்சி – இது பின்னூட்டம் அல்ல. நீங்கள் வைத்திருக்கும் கோரிக்கைக்கான பதில்.
January 15, 2016 at 16:32
ஒருக்கால் நீங்கள் முன்னமேயே வாசித்திருக்கலாம். பாகிஸ்தானத்தில் இஸ்மாய்லி ஷியாக்களின் நிலை பற்றிய வ்யாசம் டான் தளத்திலிருந்து. மிக மிக நீளமான வ்யாசம். http://herald.dawn.com/news/1153276
January 20, 2016 at 14:03
can be of help: m.sekhar 9940079589
January 22, 2016 at 23:57