அரவிந்தன் கண்ணையன்: அதீநியம் Vs அநீதியம்

September 11, 2015

இவ்வரிசையின் முதற்பகுதி: அரவிந்தன் ‘அதீநியம்’ கண்ணையன்: ஒரு புதிர் (1/n)

அக அவர்களின் தேவையேயற்ற நிந்தனை குறித்த, அவர் பிரதிநிதித்துவப் படுத்தும் கருத்துகளைக் குறித்த உரத்த சிந்தனை தொடர்கிறது, பாவம், இதைப் படிக்கும் நீங்கள்…

சரி; இது இரண்டாம் பகுதி: 2/n.

6. நான் எழுதியது – இஸ்ரோ பற்றிய அதிபுகழ்ச்சிக் கட்டுரையோ, அறிவியல் கட்டுரையோ, ஏன் ஒரு செய்திப் பத்திரிகை பத்தியோ கூட அல்ல; அதன் குவியம், இஸ்ரோ பற்றிய எதிர்மறை பிம்பங்களைச் சிறிது ஆட்டிப் பார்ப்பதுதான்; நான் என் குறிப்புகளைத் தான் தந்திருக்கிறேன்; அது ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையல்ல. மேலும், இஸ்ரோ ஆராய்ச்சிகளுக்கான பொதுப்புலத் தரவுகளைத் தர எனக்கு ஏலாது; பெயர்களையும் குறிப்பிட முடியாது. ஏனெனில் நான் சென்ற பல லெபாரட்டரிகளில் (=laboratories) பல, பொதுமக்களின் பார்வையில் படத் துளிக்கூட வாய்ப்பில்லை. அவை அதிபாதுகாப்புக்கு உட்பட்டவை. சுற்றிலும் மெஷின்கன் தாங்கிய ஸிஐஎஸ்எஃப் (CISF) ​+ ராணுவ ஜவான்களால் 24-7 காலமும் காபந்து செய்யப்படுபவை; ஏனெனில் அவை – ஐஎஸ்ஐ, தீவிர இஸ்லாம்வாதிகளால், பிற நாசகாரர்களால் தொடர்ந்து அச்சுறுத்தப் படுபவை.

இஸ்ரோகாரர்கள் பெரும்பாலும் கருமமே கண்னாயினார்கள்; அவர்களுக்கு வெளியுலகத்தில் இருப்பவர்களின் எண்ணப் போக்குகள், ஊடகப் பேடிகளின் காமாலைக் கருத்துகள் போன்றவையெல்லாம் ஒரு பொருட்டேயல்ல; குறிப்பாக – பிரமிப்புக்கு ஆட்பட்ட அரைகுறைகளின் போற்றுதல்களையும் (=என் கட்டுரை), அதிமுட்டாள்தனம் நிரம்பிய ஞானக் குடுக்கைகளின் எள்ளல்களையும் (=அக கட்டுரை), ஒரு காலனிய நாடு சந்திக்கும் பலப்பல சமூக-பொருளாதார-அரசியல் பிரச்சினைகளையும் – புறம் தள்ளித்தான் தொடர்ந்து அவர்கள் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு விஷயம்: பொதுவாகச் சமன நிலையில் இருக்கும் ‘அறிவியல்புரம்’ ராமதுரை அவர்கள் கூட, விட்டேற்றியாகவும் படபடப்புடனும் ஒரு முகாந்திரமற்ற பின்னூட்டத்தை எழுதியிருக்கிறார். எனக்கு இது ஆச்சரியமாக இருக்கிறது. (= ‘As of now ISRO is a holy cow of India‘); தான், ஒரு கூர்மையான-தரமான அறிவியல் பத்தியாளராக இருக்கும் காரணத்தால்,  இப்படியெல்லாம் எழுதிவிடலாம் என நினைத்துவிட்டார் போலும். அதே சமயம் – சில மாதங்களுக்குமுன் இவர்,  ‘நிசப்தம்’ புகழ் வா. மணிகண்டன் அவர்களின் ஒரு பிதற்றல் கருத்தாக்கத்தினைக் கிண்டல் செய்து ஒரு சிறு பதிவைப் போட்டு, உடனுக்குடன் அதனை அகற்றியதும் நினைவுக்கு வருகிறது!  ஏனிப்படியாகிறது?

அதே சமயம், பத்ரி சேஷாத்ரியின் சமனமான, உரையாடற்புள்ளிகளைக் குவிக்கும் பின்னூட்டம், நிச்சயம் ஆசுவாசத்தை அளிக்கிறது என்பதையும் குறிப்பிடவேண்டும்!

7. அரவிந்தன் கண்ணையன் அவர்கள், ஜனநாயகம் பொங்கிப் புனலோடும் அமெரிக்காவுடைய  நாஸா-வின் பலப்பல லேப்புகளுக்கு அவர் நண்பர்களால் அழைத்துச் செல்லப்படும்போது, அவற்றின் ஆழத்தின் வீச்சையும் அற்புதமான அறிவியல்-தொழில்நுட்பங்களையும் ஓரளவுக்காகவாவது புரிந்துகொண்டு, அவரும் ஜொலிப்போதிஜொலிப்பாக அவற்றைப் பற்றி புளகாங்கிதமைடைந்து தமிழில் எழுதக் கூடும். ஆனால் அவற்றிற்கான பொதுவெளிசார் தரவுகளைக் கேட்டு, அவரைத் தொந்திரவு செய்யமாட்டேன். ஏனெனில் இஸ்ரோவும் சரி, நாஸாவும் சரி – தங்கள் ராக்கெட்டுகளை வெற்றிகரமாக ஏவியிருக்கின்றன. இதற்குமேல் அவைகளுக்கு ஒரு சாட்சியமும் தேவையில்லை. (முட்டாள் ஆசாமிகளுக்கு அவர்கள் எதிர்வினையாற்றவேண்டியதும் இல்லை; ‘அமெரிக்காவின் 1969 அபல்லோ நிலா உலாவல்கள் ஒரு ஜோடனை/பொய்‘,  ‘இந்தியாவின் மங்கள்யான் ஒரு கம்ப்யூட்டர் ஸிமுலேஷன்‘ வகையறா அற்பத்தனங்களெல்லாம் – சதித்திட்ட ஆர்வல அயோக்கிய ஜொள்ளர்களுக்கு உதவலாமே தவிர, இவற்றையெல்லாம் கடந்துதான் விஞ்ஞானச் சாதனைகள் அடையப்பட்டிருக்கின்றன அல்லவா?)

8. அக அவர்கள், ‘அதீநியம்’ (=athenaeum) என்ற சுவாரசியமான பெயரில் பதிவிடுகிறார்.   எனக்கு கிரேக்க, லத்தீன் விஷயங்களில் கொஞ்சம் ஈடுபாடு  இருக்கிறது என்பதால் அதனை இப்படிப் புரிந்துகொள்கிறேன்:  அதீநியம் என்பதை ஒருமாதிரி நூலகம் எனக் கொள்ளலாம் – அல்லது, கறாரான-காத்திரமான மேற்கல்விக்கான, அறிவுஜீவிய சிந்தனைகளுக்கான ஒரு பள்ளி எனவும்.  பெரும்பாலும் புத்தகங்களில் பொதிந்திருக்கும் கருத்துகள்/கோட்பாடுகள் மூலமாக, குருக்களின்/ஆசாரியர்களின் வழிகாட்டுதல்களின் ஊடாக ஞானம் பெறுவது என இந்த அதீநியம் குறிப்பிடுவதாகக் கொள்கிறேன். ஆக, அக அவர்களின் கட்டுரைகளில வழி நெடுகப் பலப்பல புத்தகங்கள் மேற்கோள் காட்டப்படுகின்றன.  அக – நிறைய புத்தகங்களைப் படிப்பவராக இருக்கவேண்டும். இது ஒரு அழகான விஷயம்தாம். இவர் சுட்டிய புத்தகங்களில் பலப்பலவற்றையும் நான் படித்திருக்கிறேன் என்கிறமுறையில் நான் சொல்வேன்: அக அவர்கள், சர்வநிச்சயமாக இவ்விஷயத்தில் போற்றத் தக்கவரே! அதீநியம் என்பது பொருத்தமான பெயர்தான்.

ஆனால் வெறும் புத்தகக் கோட்பாடுகளினால் மட்டுமே, பரந்த படிப்பறிவினால் மட்டுமே, மேற்கோள்களால் மட்டுமே ஒருவன் ஞானம் பெறமுடியாது என நான் கருதுகிறேன். ஏனெனில் நானும்  விதம் விதமான புத்தகங்களைப் (~ மாதத்திற்குக் குறைந்த பட்சம் 45-50 போல) படிப்பவன்தான். இந்த எழவினாலெல்லாம் நான் ஒர் சிந்தனையாளன், விமர்சகன், கான்ட்ரரியன் என்றெல்லாம் கருதிக்கொள்ள முடியுமா என்ன? என்னை – அதிகபட்சம் நிறையப் படிப்பவன் என்று மட்டுமே சொல்லலாம், அதாவது, அப்படிச் சொல்லியேயாகவேண்டுமென்றால்…

செறிவான, ஆழ்ந்த பயிற்சிகளும், பரந்துபட்ட உலக அனுபவங்களும், அசை போடல்களும், தத்துவார்த்தமாகச் சிந்தனைகளைப் பகுத்துச் செரிக்கும் பண்பும், கழிவிரக்கமற்ற சுயபரிசோதனையும், வெறும்பேச்சில்லாமல் ஆக்கபூர்வமாகச் செயல்படும் திறனும் + சுய சிந்தனையும் இருந்தால் மட்டுஂமேதான் ஒருவன் ஞானமார்க்கத்தில் மேற்செல்லமுடியும்.

… இருந்தாலும், ஏட்டுச் சுரைக்காய அறிவை(!) உடைய என்னால் எதையும் மிகுந்த தன்னம்பிக்கையுடன் குண்டுதைரியமாக விமர்சனம்(!) செய்ய முடிகிறது. அக அவர்களும் மிக்க மகிழ்ச்சியுடன் எனக்குத் துணையாக வரத் தயாராக இருக்கிறார்கள். நான் கொடுத்து வைத்தவன், வேறென்ன சொல்ல.

ஆக அடிப்படை நேர்மையும், சமனமுமில்லாமல் – ஆனால், அதீநியம் என்ற பெயரை வைத்துக்கொண்டு – வெறும் புத்தக/சஞ்சிகை அறிவை(!) மட்டும் துணைக்குக் கூப்பிட்டுக்கொண்டு பப்பரப்பாத் தனமாக – உயர்தர மானுட எத்தனங்ளை ஒரு விதமான சாட்சியமுமில்லாமல் பொதுப்படையாக பொறுப்பற்ற முறையில் உதாசீனம் செய்வது, அது மட்டுமல்லாமல் முகாந்திரமற்ற எதிர்மறைக் கருத்துகளை கெக்கலி கொட்டிக்கொண்டு  கோமாளித்தனமாகப் பரிமாறுவது – அநீதியம் தான் என்பதில் எனக்கு சந்தேகமேயில்லை.

ஏனெனில், நானும் பல விஷயங்களில் அநீதியன் தான்; இதனை ஒப்புக்கொள்வதில் எனக்கு வெட்கம் ஒன்றும் இல்லை, வெறும் வருத்தம் மட்டுமே! பாம்பின் கால் பாம்பறியும். ஆமென்.

-0-0-0-0-0-0-

அக அவர்களின் கட்டுரையில் – நான் இஸ்ரோ நிறுவனத்தைப் பற்றி நான் எப்படி எழுதவேண்டும் எனக் கொடுக்கப்படும் மகாமகோ அறிவுரையில் – விஞ்ஞானிகளின் தகுதி பற்றி எழுத,  என் தகுதிகளைக் கேள்வி கேட்பது போலப்படுகிறது. இது ஒரு சரியான அணுகுமுறைதான். ஆனால், அக அவர்களுக்கும் இம்மாதிரி விஷயங்களைப் பற்றிப் பேச/விமர்சனம் செய்ய சரியான அடிப்படைத் தகுதிகள் இருக்கவேண்டும் அல்லவா?

மேலும், அவர் வழக்கம்போலவே நிதானம் தவறி, தேவையேயற்று நான் எப்போதே படித்த(!) கல்லூரியின் பெயரை இழுத்து – இந்தக் கல்லூரியில் படித்ததாலும், களப்பணி ஆர்வலனாக இருப்பதாலும் நான் என்ன உளறலை வேண்டுமானாலும் எழுதிவிடுகிறேன் போல – என்றெல்லாம் ஞானம் சொட்டச்சொட்ட எழுதியிருக்கிறார்!

அவருக்கு நன்றி; இதனால், நான் எழுதவேண்டாம் என்று நினைத்ததையெல்லாம் எழுதவேண்டிவருகிறது.

சரி. இஸ்ரோ போன்ற விஷயங்களைப் பற்றிய சில நடப்புகளை, நடைமுறை நிலவரங்களை எழுத எனக்கிருக்கும் தகுதிகளாக(!) இவற்றைச் சொல்வேன்:

இந்திய விசும்பாராய்ச்சி நிறுவனம் (=இஸ்ரோ) சார்பாக மஹேந்திரபுரி   மையத்தில் இருந்த ராக்கெட் ப்ரபல்ஷன் லெபாரட்டரிக்குச் மிகமிகச் சிறிய (அதிகம் அல்ல!) அளவில் என் பங்களிப்பைச் செய்திருக்கிறேன். அந்த அமைப்பு, இப்போது ‘Liquid Propulsion Systems Centre‘ என அழைக்கப் படுகிறது.

நான், உலோகவியலில் அடிப்படைப் பயிற்சி பெற்றவன். 1984-88 வாக்கில் (86-87 ஆண்டுகள் தவிர) என நினைவு – என்னுடைய அப்போதைய ஆர்வங்களில் ஒன்று வெப்பக் கடத்தல்  பற்றிய அடிப்படை ஆய்வுகள்.  என்னுடைய தொடரும் ஆர்வங்களில் ஒன்று, மின்னணுச் சாதனங்களை வடிவமைத்தல். ஆக, எங்கள் ஆய்வுகளுக்கு உதவும் முகமாக/பாகமாக 8 சேனல் டேட்டா லாக்கர் ஒன்றை நானும் என் பேராசிரியரும் வடிவமைத்திருந்தோம். இதன் மூலமாகப் பெறக்கூடும்  (அனலாக் முறையிலிருந்து டிஜிட்டல் ஸிக்னல்களாக மாற்றப்பட்ட) டேடா துணுக்குகளை சாதாரண ஆடியோ கேஸட்டுகளில் பதிந்து பிற்பாடு அவற்றை ஒரு டப்பா ஃபிலிப்ஸ் பாட்டு மெஷின் வழியாக (அதனை ஒரு கேஸட் பாட்டுமெஷினில் பாடவைத்தால் கீ கா கூ என்றெல்லாம் வினோத சப்தங்கள் வரும்!) அந்தத் துணுக்குகளை ஒரு  ஏடி286 (PC-AT) மெஷினில் ஓடிக்கொண்டிருக்கும் கணினி நிரல்களின்மூலம் ஆராய்ந்து, வெப்பக் கடத்தலைப் பற்றிய படங்கள் வரைந்து பாகங்கள் குறிப்பது. ஆராய்ச்சிகளை வடிவமைப்பது. புரிதல்களை அடைந்து தெளிவது. இது தான் அடிப்படை.

இதனைப் பற்றிக் கொஞ்சம் விரிவாகவே, பேராசிரியர் ஜேக் ஃபிலிப் ஹோல்மன் பற்றிய என்னுடைய குறிப்புகளில் எழுதியிருக்கிறேன்: ஜேக் ஃபிலிப் ஹோல்மன் (1934-2013) 11/06/2013 , பேராசிரியர் ஹோல்மன் (மறுபடியும்!) 15/06/2013

 (என் நண்பன் ஒருவன், அதே சமயத்தில் வெற்றிகரமாக, இதேமாதிரி ஜுகாட் வேலைகளின் மூலம், ஆடியோ கேஸட்டுகளில் விடியோ சங்கேதங்களைப் பதிப்பதில் வெற்றியடைந்திருந்தான்! இவன் பின்னர் ஜெர்மனியில் மேற்படிப்பு படித்து, இப்போது ஜப்பானில் பிளந்துகட்டிக்கொண்டிருக்கிறான்!)

சரி. இந்த லாக்கிங் முறையைச்  சிறிது மாற்றம்+விரிவு செய்து 16 (பின் 32, பின்னர் 64!) சேனல்களைக் கொண்டதாக மாற்றி, வெறும் தெர்மோகப்ள்களுக்குப் பதிலாகக் கொஞ்சம் ஸ்ட்ரெய்ன் கேஜ்ஜுகளையும் சேர்த்து, கொஞ்ச நாள் மஹேந்திரபுரியில் ஓட்டிக் கொண்டிருந்தோம். இது படுபயங்கர அதி நவீனம் என்றெல்லாம் இல்லை – வெறும், இருக்கும் தொழில் நுட்பங்களையும் உழைப்பையும் (+கற்பனையையும்) மட்டுமே வைத்து, ஆகவே சில சொற்ப ஆயிரம் ரூபாய்களில்  செய்யப்பட்ட ஜுகாட் (jugaad) வேலைகள்தாம் இவை; அச்சமயத்திலேயே நான் பல இளம் இஸ்ரோ விஞ்ஞானிகளிடம் பழகியிருக்கிறேன்; அவர்களில் பலர், வெகு இயல்பாகவே ஜொலித்துக்கொண்டிருந்தவர்கள்தாம் என்பதை அறிவேன்.

…நான் படித்த கல்லூரியில் என் வகுப்பில் 17 பேர் இருந்தார்கள்; இவர்களில் ஒருவரைத் தவிர (=நான் என்னை ஓரளவு அறிந்துள்ளவன் என்கிற முறையில்) அவர்களுடைய அடிப்படைத்  திறமைகள் குறித்தோ, பயிற்சி பெற்ற மூளைகளைக் குறித்தோ எனக்கு ஐயமேயில்லை. பட்டைதீட்டப்பட்ட ஜொலிக்கும் பன்முக வைரங்கள். இருந்த 17 பேரில், 15 பேர் அமெரிக்காவில் ‘ஸெட்டில்’ ஆகி விட்டார்கள். 16வது ஆள், இப்போது அந்தக் கடுகு சிங்கப்பூரில். நான் இந்தியாவில் இருக்கிறேன்.

இந்த 15 பேர்களில் ஒருவர் விடாமல் மூளையாலும், உழைப்பாலும் மேலெழும்பி வந்திருக்கிறார்கள்; சிங்கப்பூர்காரனை அப்படி சொல்லமாட்டேன். அந்த 14 பேரில் ஒருவர் போயிங். இன்னொருவர் அப்ளைட் மெட்டீரியல்ஸ்.  ஒருவர் ஸேண்டியா லேப்ஸ். ஒருவர் லாஸ் அலமோஸ் லேப். ஒருவர் லாரன்ஸ் லிவர்மோர். ஒருவர் ஜீஇ.  இரண்டுபேர்கள் நாஸா. மூன்று பேர்கள் பெரிய, மதிப்புக்குரிய பல்கலைக் கழகங்களில் பேராசிரியர்கள்.  இருவர் ஐபிஎம். இன்னொருவர் டெக்ஸஸ்-ஆஸ்டின் பேராசிரியர் – பலவருடங்கள்முன் இறந்து விட்டார். ஒருவர் வால்ஸ்ட்ரீட் ஆசாமி. இந்தக் கடைசி மனிதரும் நானும்தான் ஆராய்ச்சி என்று ஒன்றை இக்காலங்களில் செய்வதில்லை.  என் மனைவியும் மைத்துனனும் (இவர்கள் இருவரும் என்னுடைய ஜூனியர்கள்)  என்னைப் போல வெறும் ‘ப்ரம்மச்சாரி’ பட்டம் வாங்கிக்கொண்டு முடித்துவிடாமல் மேற்படித்திருக்கிறார்கள் – எல்லாம் அதே எழவெடுத்த அமெரிக்காவில்தான். மைத்துனன் ஸேன்டியா லேப் ஆசாமி.   ஒரு ஜொலிக்கும் ஆராய்ச்சியாளன். ஆனால், என்னபடித்து என்ன பயன் – என் மனைவி, பாவம் என்னுடன் மல்லாடிக்கொண்டிருக்கிறார்!

எதற்கு இந்த எழவுகளைச் சொல்லவருகிறேன் என்றால்: ஆக, கடந்த 35 வருடங்களாக இவர்கள் மூலமாகப் பலப்பல அழகான அறிமுகங்களைப்  பெற்றுள்ளேன், தொடர்ந்து இவர்களுடன் உரையாடலில் உள்ளேன். ஆக, நான் பேசுவதை/எழுதுவதை பக்காவாக எழுதக் கூடிய ஆசாமி எனத் திடமாக நம்புகிறேன். நான் பாக்கியசாலி. ஏனெனில் என் அறிவின்(!) எல்லைகளையும் பற்றி நான் நன்றாகவே அறிவேன்; நான் மேலோட்டமான கருத்துகளும் + ஆழமான அவதானிப்புகளும் கலந்த ஒரு பேக்கேஜ் என்பதை உணர்ந்தவன்.

…மேற்கண்ட 15 பேர்களுடைய குழந்தைகளுக்கும்கூட நான் நெருக்கமானவன். அவர்களில் பெரும்பாலோர் என்னிடம்தான் அவர்களுடைய அறிவியல் ப்ராஜெக்ட் வகை உதவிகளுக்கு வருகிறார்கள்.  ‘அன்கிள், கிவ் மீ அன் ஆஸ்ஸம் ப்ரொஜெக்ட் ஐடியா!’

மேற்கண்டவற்றைத் தவிர, நான் பலவிதமான தொழில்கள் முனைவோனாக இருந்திருக்கிறேன். பெரிய/சிறிய குழுக்களுக்குத் தலைமைதாங்கியது மட்டுமல்லாமல், கீழ்மட்டத்தில் உழைத்தும் இருக்கிறேன். இன்னமும் சிலபல சிறு நிறுவனங்களுக்கு அவர்களது சிறு தொழி நுட்பப் பிரச்சினைகளை சிடுக்கவிழ்க்கும் பாவனையிலும் இருக்கிறேன். சிலபல இஸ்ரோகாரர்களை தனிப்பட்ட முறையில் அறிவேன்;  கடந்த 8 வருடங்களாக  ஒரு பள்ளிஆசிரியன். அவ்வளவுதான். ஆனால், எங்கள் வீட்டிலேயே பின்புலத்தில் எலக்ட்ரானிக்ஸும், யூநிக்ஸும், தச்சுவேலையும், பொறிவடிவமைப்புகளும் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

இவற்றால் – என் பின்புலத்தால், என் அனுபவங்களால் – நான் மகாமகோ விஷயங்களைச் செய்கிறேனோ இல்லையோ –  ஒரு அற்புதமான விஷயத்தைப் பார்த்தால், குறைந்தபட்சம், அதன் தன்மை+தகுதி பற்றி அனுமானிக்கக் கூடிய திடத்தில் இருக்கிறேன் என நம்புகிறேன்.

என்னுடைய இஸ்ரோ ஆராய்ச்சியாள – பன்னாட்டு நிறுவனக்காரர்களை பொருத்திப் பார்த்தல்களை ஒருவர் விமர்சனம்/கேலி செய்யவேண்டுமென்றால்,  அவற்றை, இந்தப் பின்புலத்தில் பார்க்கவேண்டும்.

நான் வெறுமனே அலட்டிக்கொள்ளவில்லை. என் சட்டியில், அதிகமில்லை, ஆனால் வேண்டுமளவு சோறு இருக்கிறது. அது அகப்பையிலும் கொஞ்சம் வரும். மன்னிக்கவும்.

நான் இந்தியாவைப் பற்றி வெறுமனே பீற்றிக்கொள்ளவில்லை. ஆனால், வெகுதிடமாக இந்திய இஸ்ரோ ராக்கெட்டுகள், வெறும் தீபாவளி ராக்கெட்டுகள் அல்ல என்பதை நம்புபவன்.

-0-0-0-0-0-0-

அக அவர்களின் பின்புலம் பற்றி, நான் அதிகம் அறியேன். அவர் தஞ்சை ஸாஸ்த்ரா பல்கலைக் கழகத்தில் படித்தவர், தற்போது மெர்ரில் லிஞ்ச் நிறுவனத்தில் வேலை செய்கிறார், ஒரு அமெரிக்கக் குடிமகன், (+ என்னைப் போலவே, சக தமிழர்களை வெறுக்கிறார்)  என்பவற்றுக்கு அப்பாற்பட்டு – அவருடைய ஸாஸ்த்ரா ஆராய்ச்சிப்பின்புலம் குறித்தோ, பின்னர் அமெரிக்காவில் செய்திருக்கக்கூடும் ஆராய்ச்சிகள் குறித்தோ,  அவருக்கு இருக்கக்கூடும் இஸ்ரோ, நாஸா போன்ற நிறுவனத் தொடர்புகள் குறித்தோ, அவருடைய அறிவியல்/தொழில்நுட்ப அறிவின் ஆழம்+வீச்சு குறித்தோ, ஒன்றும் அறியேன்!

…ஆக அவருக்கு, அறிவியல்-தொழில் நுட்ப விஷயங்களை அனுமானிக்க, மேம்போக்காக அல்லாமல் நுண்மான் நுழைபுலங்களுடன் புரிந்துகொள்ளத்தெரியுமா என்பதறியேன். அவர் நாஸா போன்ற நிறுவனங்களுக்குச் சென்றிருக்கிறாரா என்பதையும்… ஏன், அவர் மெர்ரில் லிஞ்ச் நிறுவனத்தில்,  ஒரு ஐடி தட்டச்சு குமாஸ்தாவாக (=CONsultant!) இருக்கிறாரா, பணம் பண்ணும் / எண்ணும் / பரிமாறும் தொழிலில் இருக்கிறாரா அல்லது ஏதாவது உச்சாணிக்கொம்பில் ஊசலாடிக்கொண்டிருக்கிறாரா என்பதைக் கூட அறியேன்!

இக்காலங்களில் நான், சர்வ நிச்சயமாக எந்தவொரு விசும்பு ஆராய்ச்சியையும் என் குழந்தைகளுடன் (சொந்த+பிற) உட்கார்ந்துகொண்டு செய்வதில்லை. வெறுமனே ஒரு தொலை நோக்கியை வைத்துக்கொண்டு பாவலா காட்டுவதை  மட்டுமேதான் செய்துகொண்டிருக்கிறேன். மற்றபடி, வெறும் ஏட்டுச் சுரைக்காயப் படிப்பும் பகற்கனவுகளும்தான்!

DSC01631

…ஆனால், கொஞ்சம் மண்ணாங்கட்டி வேலைகளையும் செய்வதுண்டு; மேலே இருப்பதில் இடது வினாயகர் என்னுடையது; அதற்குச் செல்ல மூஞ்சூறு – ஒரு யூஎஸ்பி வால் இணைப்பானுடன் கூடிய ஒரு மௌஸ். வலது, என் மகன் செய்தது, கொஞ்சம் பின்நவீனத்துவம், மன்னிக்கவும்; அதற்கு முன், ஒரு மேடையில் மஃபின்கள் ப்ரீதி/பிரசாதமாக இருக்கின்றன. இவற்றை, இரண்டு நாட்களுக்கு முன்பு, பக்கத்து ஏரியிலிருந்து களிமண் எடுத்துக்கொணர்ந்து செய்தோம்!

சரி. மெர்ரில் லிஞ்ச் நிறுவனம் எனக்குத் தெரிந்து விசும்பு ஆராய்ச்சி செய்வதில்லை – ஆனால் எந்த பணவர்த்தக நிறுவனத்தில் எந்த ஆராய்ச்சி விசும்பிக் கொண்டிருக்கலாமோ என்பதை நானறியேன்! ஆனால் அக அவர்கள், வீட்டிலேயே பலப்பல ஆராய்ச்சிகளைச் செய்துகொண்டிருக்கலாம், நாஸா போன்ற நிறுவனங்களுக்கு உதவிக்கொண்டிருக்கலாம் – எனும் சாத்தியக்கூறை உணர்ந்திருக்கிறேன். ஆகவேதான் அவர் இந்திய விசும்பு ஆராய்ச்சிகளைத் துச்சமாக மதிக்கிறார், நாஸா ஆராய்ச்சிகளை/செயல்பாடுகளைப் போற்றுகிறார் –  எனக் கருதிக்கொள்ளவும் இடமிருக்கிறது.

எது எப்படியோ — அக அவர்கள், தான் சொல்வதைத் தீர்க்கமாகப் புரிந்துகொண்டுதான், சமனத்துடன் சொல்கிறார் – கைவசம் கீபோர்டும், இணைய இணைப்பும் இருக்கும் தகுதியினாலேயே உளறிக்கொட்டுவதில்லை – என்று எண்ணத்தான் ஆசை.

ஆம், இதற்கும் என்னிடம் தரவுகள் இல்லை.

…அடுத்த பகுதியில், அக கட்டுரை மீதான வரிவரியான எதிர்வினை தொடரும்… :-(

20 Responses to “அரவிந்தன் கண்ணையன்: அதீநியம் Vs அநீதியம்”

 1. Anonymous Says:

  ராமசாமி சார்,
  விநாயாகர் செல்லாது. இவர் ஆப்பிரிக்க வந்தேரி.;) எங்களுக்கு சுத்தமான உள்ளூர் பிள்ளையார்தான் வேண்டும். :)


  • முதலில் அது ஆஃப்ரிகக் காதுடைய பிள்ளையாராக ஆரம்பித்து பெருச்சாளியாக முடிந்தது. தலையின் சுருட்டைமுடிகளை மிகவும் பிரயத்தனப் பட்டுச் செய்ய முயன்றேன். ஆனால் களிமண் தரம் மெல்லிய இழைகளுக்கு ஒத்துவரவில்லை. காய்ந்தவுடன் முடிகள் உடைந்துவிட்டன. வர்மிக்யுலைட்டும் காலினைட்டும் குறைந்த விகிதம், என்ன செய்வது.​ பின் டேக்#2வில் அது இப்போதைய வடிவம்(!) பெற்றது. ஏனெனில் என்னிடம் இருக்கும் மண்வினைக் கருவிகள் ஒரு ஸ்க்ரூ ட்ரைவர் + கத்தி மட்டுமே!

   …ஆனால், நீங்கள் ஒப்புக்கொள்ளமுடியாவிட்டால் பரவாயில்லை. என் வினாயகருக்குப் பொறுமை அதிகம் – அவர் ஒப்புக்கொண்டுள்ளார்; அவர் தன் நிலையைப் பார்த்துத் தானே தலையில் அடித்துக்கொள்வதாக இருந்தது; பின்னர் மூன்று கைகள் – அசமம் ஆகிவிடும். ஆக, அந்தக் கையை எடுத்துவிட்டு இருகையோனாக்கிவிட்டேன். மேலும், என் மகனின் பின்நவீனத்துவ விழைவுகளுக்கே அவர் முணுமுணுக்காமல் இருக்கும்போது…

   :-)

 2. selvaraj Says:

  ஏனெனில், நானும் பல விஷயங்களில் அநீதியன் தான்; இதனை ஒப்புக்கொள்வதில் எனக்கு வெட்கம் ஒன்றும் இல்லை, வெறும் வருத்தம் மட்டுமே! பாம்பின் கால் பாம்பறியும். ஆமென்…..
  இதை படித்த உடன் இதுவரை மிக மகிழ்ச்சியுடன் வாசித்த உணர்வு வடிந்துவிட்டது….
  தன் நெஞ்சறிவது பொய்யற்க……  • அ​ய்யா, என்னை அறிந்துகொள்ள ஓரளவுக்காவது முயன்றுகொண்டிருப்பவன் என்கிற முறையில், எனக்குச் சுயவிமர்சனமும் ஒத்துவரும். ஆக, என்னைப் பற்றிய அனாவசிய பிம்பங்களைத் தேவையற்று வளர்த்துக்கொள்ளவேண்டாம். நான் ஒரு சாதாரணன் தான், சரியா?​ To complicate matters, I am also a professional masochist; this is the reason why I blog in the first place, honestly! God knows, or as Nasadiya Sukta puts it, even he does not know – I should do something else, than write! :-)

   ரிக்வேதக் கவிதையைப் படிக்கவும்: ஒருங்கிணைந்து ஒத்திசைந்து நாம் அனைவரும் முன்னேறுவோமாக! (= ஸங்கசத்வம் கீதம்!)

 3. k.muthuramakrishnan Says:

  கொஞ்சம் சுயபுராணம்தான் என்றாலும் இந்தப் பின்னணியைச் சொல்லத்தான் வேண்டும் என்று படித்து முடித்தவுடன் தோன்றியது.


  • ​அய்யா, ஒரு திருத்தம்: அது கொஞ்சம் அல்ல, வெகு நிறைய.

   மேலும், என்னுடைய சுயசரிதையை நானே எழுதிக்கொண்டிருக்கிறேன். 2016 சென்னை புத்தகச் சந்தையில், கிழக்கு பதிப்பக வெளியீடாக அது ​வெளி​வர இருக்கிறது. அதற்குள் என்னென்ன விவகாரங்களைக் கற்பனை செய்து அதில் சேர்க்கலாம் என்ற பிரச்சினைகள் வேறு!

   நேற்று நான் லெமூரியா போய் வந்ததை, பூவண்ணன் வீட்டிற்கு சென்றவாரம் சென்று அவருடைய செல்ல மாட்டுக்கறி சாப்பிட்டதை, அரவிந்தன் கண்ணையன் வீட்டிற்குச் சென்றமாதம் சென்று அவரை ஆரத் தழுவிக்கொண்டதையெல்லாம் அதில் சேர்த்துக்கொள்ளலாம் என நினைக்கிறேன்; உங்களிடம் கைவசம் ஏதாவது பரிந்துரை இருக்கிறதா?

   உங்களை இரண்டு நாட்கள் முன் சந்தித்ததையும் சேர்த்துக்கொள்ளலாமா?

 4. girievs Says:

  ஒரு சுவையான செய்தி: NASA வில் பணியாற்றிய ஒருவர் சொன்னது. NASAவிலேயே 10% பணியாளர்கள் நிலாவில் மனிதன் உண்மையாகவே கால் பதித்தான் என்பது வெறும் set up என்று நம்பினார்களாம்(அதில் இந்த செய்தியை சொன்னவரும் அடக்கம்!

 5. poovannan73 Says:

  சபாஷ் சரியான போட்டி

  (அல்லது) ஒரு சுக்குத் தேவையுமில்லாமல், ஒரு சலிக்கவைக்கும் என்ஆர்ஐ(NRI)தனமான அரைகுறைப் பார்வையுடன் இந்தியாவைத் தொடர்ந்து மட்டம் தட்டுவது எப்படி…

  ஒத்திசைவார்

  ஆஹா இதில் இந்தியாவுக்கு பதிலாக தமிழ்நாடு,மற்றும் திராவிட இயக்கத்தை /NRI க்கு பதிலாக பி…….. அரைகுறை பார்வையுடன் போட்டால் அப்படியே அச்சாக உங்களுக்கு பொருந்துமே

  அரவிந்தனோடு உங்களுக்கு ஒத்து போகும் இன்னொரு விஷயம் திராவிட இயக்க எதிர்ப்பு .அதை விட்டு விட்டீர்களே.அவராவது அமெரிக்காவோடு ,நாசாவோடு ஒப்பிட்டு இதற்குள் குதிக்கலாமா,சரியா என்று கேட்கிறார்.நாசா,boeing எப்படி சிறந்தவை என்று அதற்கான சான்றுகளை அவரால் எளிதாக தர முடியும்.

  ஆனால் நீங்களோ குஜராத்தோடு,மற்ற வடமாநிலங்களோடு,காங்கிரெஸ்,பா ஜ க ஆளும் மாநிலங்களோடு தமிழ்நாட்டை ஒப்பிட்டு எவ்வளவு வருடங்களாக சான்றுகளே இல்லாமல் வெறுப்பை வன்மத்தை கக்கி கொண்டு இருக்கிறீர்கள்.

  திரு கல்யாணராமன் மற்றும் உங்கள் இஸ்ரோ வாழ்த்துப்பா அதற்கான நியாயங்கள் அப்படியே தமிழ்நாடு மின்சார வாரியம் முதல் அரசு மருத்துவமனைகள்,அரசு கல்லூரிகள் அனைத்துக்கும் பொருந்துமே.

  சூழ்நிலைகளை,பணிபுரிபவர்களுக்கு இருக்கும் தடைகளை எண்ணி அவற்றை அளவிட்டால் அவர்களின் சாதனையும் இஸ்ரோ வுக்கு எந்த விதத்திலும் குறைந்தது கிடையாதே

  எல்லாரும் insider பட்டதை அணிந்து கொள்வதால் நானும் அதை போட்டு கொண்டு சிலவற்றை சொல்லுகிறேன்.வெளிப்படையாக உண்மைகளை சொல்லும் ச்நோடேன் கள் உருவாகும் போது பல புனித பசுக்களின் பிம்பம் உடையும்.பல விஞ்ஞான ஆராய்ச்சி கூடங்களில் வெளிநாட்டினரின் பங்களிப்பு மிக அதிகம்.கட்டமைப்புகளை உருவாக்க இன்றுவரை அவர்கள் வரவழைக்கப்பட்டு பல மாதங்கள் தங்கி அவற்றை உருவாக்கி தருவது அன்றும் இன்றும் தொடரும் ஒன்று.

  வெளிநாட்டு தடைகள் இருக்கும் போது அவர்களை வரவழைக்க பணம் சற்று கூடுதலாக செலவாகும்.அரசுகள் அனுமதி இல்லை,தடைகள் இருக்கும் நிலையில் ,தடைகளை தவிர்த்து எப்படி என்ன வழியில் பாகங்களை தருவிக்கலாம்,நிபுணர்களை வரவழைக்கலாம் என்று வழிகாட்ட எல்லா நாட்டிலும் ஆட்களும்,ஏஜென்ட்களும் உண்டு.

  சிறுநீரக மாற்றோ,கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையோ ,நவீன மருத்துவ முறைகளோ அவை நடைபெறும் மற்ற நாடுகளை விட 10இல் ஒரு பங்கு செலவில் இந்தியாவில் நடைபெறுவதை போல தானே இஸ்ரோ வின் செயலும்.(இஸ்ரோவுக்கு .இந்தியாவில் இருக்கும் விஞ்ஞான ஆய்வு கூடங்களுக்கு ஆகும் உண்மையான செலவை கணக்கிட்டால் இந்த கூற்று எளிதில் அடிபட்டு விடும்).ஆனால் ஒன்றை திட்டி கொண்டு மற்றதை வானளாவ புகழ்வதின் பின்னே உள்நோக்கம் உள்ளது என்று எண்ணுவது தவறா.

  உங்களுக்கும் அவருக்கும் இருக்கும் இன்னொரு ஒற்றுமை கோத்ராவை பற்றிய என் பதிவுக்கான பதிலை இதோ தருகிறேன் என்று நீங்கள் சொன்னதை போல,தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீட்டால் பிராமண மாணவர்கள் படும் துயரம் பற்றிய அவர் கட்டுரையில் என் சில சான்றுகள் சார்ந்த கேள்விகளுக்கு (உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் ஆண்டுதோறும் இட ஒதுக்கீடு 50 சதவீதம் என்று கணக்கில் கொண்டு 69 சதவீத இட ஒதுக்கீடால் மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைக்காத OC வகுப்பை சார்ந்த மாணவர்களுக்கு இடங்களை உருவாக்க வேண்டும் போன்ற ) பதில் தருகிறேன் என்று சொல்லி உங்களை போலவே அவரும் நைசாக விட்டு விட்டார்.


  • அய்யா, தங்களது n+1 வருகைக்கும், பின்னர் திடீரெக்ஸ் காணாமல் போகப்போவதற்கும் நன்றி பல.

   நான் உங்கள் கோத்ரா பற்றிய அற்பத் தகவல்களைப் பற்றி (நீங்கள் tamilpaper.netல் எழுதியது) எழுதுவதாகத்தான் இருக்கிறேன்; ஆனால், அதற்கு முன்னால் உங்களுக்கு ஒரு விஷயத்தை நினைவு படுத்தவேண்டும்: நான் உங்களிடம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் கேட்ட கேள்விகள் அப்படியே அனாதையாக இருக்கின்றன. (போராட்டங்கள் – சில கேள்விகள், உரையாடல்கள் 29/03/2013 ) – முதலில் அவற்றுக்கு விலாவாரியாக, அல்லது உங்கள் வழமைப்படிவிலா நோகச் சிரிக்கவைக்க, ஒரு பதிலை தேவரீர் எழுத முடியுமா?

   அரவிந்தன் கண்ணையன் அவர்களின் எழுத்துகளின் தரம் வேறு அவருடைய தளமும் வேறு, உங்களுடையது வேறு; மேலும், நான் செய்வதைப்போல, அவர் அற்பர்களுடன் பொருத ஆசைப்படுபவரும் இல்லை என்பதும் புரிகிறது. இதனை நீங்கள் முதலில் புரிந்துகொள்ளவேண்டும் – ஆனால் புரிந்து கொள்ளும் நிலையில் நீங்கள் இல்லை – நீங்கள் டன்னிங்-க்ரூகர் விளைவின் குழந்தை; ஆக, குறைந்த பட்சம், குதூகலத்துடன் ‘தர்ம அடி’ கொடுக்கும் போக்கினையாவது கைவிடலாமே!

   நன்றி.

 6. poovannan73 Says:

  http://contrarianworld.blogspot.in/2014/12/badri-seshadris-brahminical-angst-meets.html

  Athenaeum said…
  Poovannan: I know you love to rant and post multiple lengthy comments. Put simply none of what you said undercuts the main arguments I make. I’ll respond later in detail just for these few points. I cannot keep up with your barrage though.

  தமிழ்நாடு மருத்துவ கல்லூரிகளில் தமிழக அரசு கீழ் இருக்கும் இடங்களில் பிராமண வகுப்பை சார்ந்த மாணவர்களின் எண்ணிக்கை வெகு குறைவாக இருக்க காரணங்கள் என்ன என்று அவர் எழுதிய பதிவில் எனது கருத்துக்கு அவர் தந்த பின்னூட்டம் ஐயா

  இட ஒதுக்கீடு எதிர்ப்போ,பெண் கரு கொலையோ,பெண் கல்வியோ,ஹிந்துக்கள் ஹிந்து மதத்தால் ,மத நம்பிக்கையினால் நடத்திய ,நடத்தும் லடசக்கணக்கான படுகொலைகளோ, பல்வேறு சாதிக்குழுக்களில் தமிழ்நாட்டிலும்,மற்ற மாநிலங்களிலும் கடந்த 50 ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றங்களோ,கோத்ரா நிகழ்வோ எதுவாக இருந்தாலும் எதிர் தரப்பிடம் சான்றுகள் இல்லாத போது நைசாக விட்டு விடுவதை தவிர வேறு என்ன செய்ய முடியும்.

  நீங்கள் ஆயிரம் வசை பாடினாலும் உண்மை சுடுகிறது என்பதால் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தான்


  • யோவ் பூ!

   மொதல்ல என் கேள்விகளுக்கு வொம் பதிலக் கொடுப்பா! அப்பால வெட்டியொட்டிக்கினு கூவலாம்!

   அக உங்களைப் பற்றிய சரியான, மிகச் சரியான மதிப்பையே வைத்திருக்கிறார்.

   மேலும் உங்களுடன் பொருத, அவர் அந்த அளவுக்கு வேறுவேலையே இல்லாமல் இருக்கிறாரா என்ன?

   ஆள, அகவ வுடுபா!

  • ravi Says:

   எதிர் தரப்பிடம் சான்றுகள் இல்லாத போது நைசாக விட்டு விடுவதை தவிர வேறு என்ன செய்ய முடியும்.///
   இது ஆரியர்களுக்கு மட்டுமா பூவண்ணன் !!! .. நம் திராவிடர் இதில் மிகவும் கெட்டி ஆயிற்றே …
   இஸ்லாம் , கிறிஸ்து , கம்முநிஸ்ட் .. நழுவுவதில் யாருக்கும் யாரும் சளைத்தவர் அல்ல ….

 7. Anonymous Says:

  ராமசாமி சார்,
  எனக்கு என்னவோ நீங்கள் இவருக்கு அதிகமாக மதிப்பு கொடுக்கிறீர்களோ என்று தோன்றுகிறது. நானும் இவர் முக புத்தக சுவர் பார்த்தேன். மன்னிக்கவும். இவர் ஒரு ஆங்கிலத்தில் எழுதும் யுவ கிருஷ்னாவாகவே தோன்றுகிறார். யுவராவது தெரியாத விஷயத்தை தனக்கு தோன்றியவாரு புரிந்துகொள்கிறார். அ-க அனைவருக்கும் தெரியும் விஷயத்தையே புரிந்து கொள்வதில்லை. அல்லது அப்படி நடிக்கிறார். இரண்டே இரண்டு சாம்பிள் இதோ:
  //I only said Othisaivu did not provide details in his blog on why Indians need to be proud of ISRO//
  இது பள்ளிகூட மாணவனுக்குக்கூட தெரியுமே?? எதற்கு ஒத்திசைவு சொல்ல வேண்டும்???
  நீள்வட்ட பாதை உபயோகமும், அதனால் உண்டான சிக்கனமும் போதுமே நாங்கள் பெருமைப்பட..இதுவே ஒரு innovation தானே???
  //Why Ilayaraja remains a mediocre musician….I hear the complaint “are you formally schooled in music? do you know ragas?”. Of course the answer to both is “No”//
  இசை தெரியாது. ஆனால் இவர் ஒரு தீர்ப்பை மட்டும் எழுதிவிடுவார்.!!!
  இவருக்கு ஏன் நான் பெரிதும் மதிக்கும் நீங்கள், பத்ரி, ராமதுரை சார், முக்கியமாக ஆசான் ஆகியோர் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் என்று புரியவில்லை.
  ஒருவேளை என் அறிவுக்கு எட்டாத ஏதோ ஒன்று இருக்கிறதோ???

  அன்புடன்,
  முரளி.
  பின் நவீனத்துவ பிள்ளையாரை ஒத்துகொள்கிறோம். ஆனால் கொழுகட்டை வேண்டும். :)


 8. சார்,
  சரியான போட்டி. அ.க. அவர்களோ அல்லது பூவ அவர்களோ தகுந்த பதில் அளிக்காது ஓடி ஒளிவதில் மன்னர்களாக இருக்கிறார்கள்.
  ஆனாலும், சுய புராணம் தேவை தான். எங்களுக்கு அல்ல, அ.க.வுக்கு.
  மற்றொன்று சார், “ஆஸ்ஸம் பிராஜக்ட் ஐடியா” எங்கள் வீட்டு குழந்தைகளுக்கும் உண்டா?


  • அய்யா,கண்டிப்பாக. தாங்கள் மின்னஞ்சலில் தொடர்புகொள்ளலாம். பதிலளிக்க எனக்குக் கொஞ்சம் அளவுக்கு அதிகமாகவே தாமதமானாலும்…​


 9. Dear Ramasamy,

  I’ll just briefly respond to a few points.

  1. About the name ‘athenaeum’: Athenaeum was just the name of a literary forum in my college Shanmugha College of Engineering. It was started the year I joined college. Ever since it’s inception in 1990 until 1994, when I left college, I was it’s most recognizable face and most popular speaker. During those years I was chosen thrice by Bharathidasan University to be part of its debate team. When I started blogging I naturally chose that moniker. No other big significance. I’ve no inflated notion of my readings. You are certainly better read than me. I did buy a book or two based on your quotes from them.

  2. I am just a regular IT coolie in USA. I’ve no illusions about that either. I came to US on H1B and managed to eke out a living. You don’t have to go hunting about my professional career.

  3.I’d have very much loved to write in Tamil but my Tamil grammar is horrible. சந்திப் பிழைகள் கர்மம் என்னைப் படுத்தும். Other than that I can actually write pretty well in Tamil. Also my ease in typing in English is another reason. Since I write in English I’ve always been flying a little under the radar so to speak. It keeps away many from reading or commenting and that’s perfectly fine by me.

  4. About why I wrote that blog: Very, very simple reason. It was cited by Jemo as a blog that presents ISRO in a different light and that it was written very well. I read it only because of that. To be honest, on the few occasions I tried reading your blog I’ve found your sentence constructions to be very loopy and impossible to make sense of. There are many who say my blogs are unreadable. Both of us are just blogging, each to his own style. But it looks like I am in good company with few others in our inability to comprehend your blogs. I just shared my usual frustration about Indian writing and most things Indian. My blog had nothing to do with running down ISRO. That was not my intention at all. I simply wished you had given better details. A simple and straight forward criticism.

  5. It is completely your liberty to continue the barrage. I am just embarrassed by the attention. That said, of all the blogs you wrote I enjoyed most your tirade against S. Ramakrishnan. Incidentally I had written almost blogs about him. Ironically we might have more in common than you might think.

  Regards,
  Aravindan Kannaiyan


  • அய்யா அரவிந்தன் கண்ணையன், தாங்கள் என்ன சொல்லவருகிறீர்கள் என்பதைப் புரிந்துகொண்டேன். நன்றி.

   என் எழுத்தின்(!) கஷ்டமான லூப்பினெஸ் பற்றி நானும் அறிவேன். ஆனால், என் சிந்தனைகளும்(!) அப்படித்தான். முடிந்தால் படிக்கலாம், இல்லாவிட்டால் கடாசலாம். என்னை ஹிந்துத்துவாகாரன் என்று ஒதுக்கினாலும், என்னையும் கல்யாணராமனையும், குப்பை அள்ளுபவர்கள் என்று எள்ளி நகைத்தாலும் எனக்கு ஒரு பிரச்சினையுமில்லை. Each unto his own; and, though everyone may have a right to be heard (+right to opinions), I know that, nobody has the right to be taken seriously, that’s all! (and of course, these statements are applicable to me too!)

   மேலும், என்னுடைய இலக்கணம் அலக்கணம் பற்றியெல்லாம், நான், ஓரளவுக்குமேல் மிகவும் கவலைப் படுவதில்லை. ஏனெனில் நான் ஒரு தொழில்முறை எழுத்தாளனல்லன். நீங்களும் அப்படித்தான் என நினைக்கிறேன். என் பார்வை என்னவென்றால், அலை ஓய்ந்தபின் தான் கரை ஏறுவேன் என்றால்… ஒன்றையுமே செய்ய முடியாது. உங்களுடைய பல கட்டுரைகளில், இஸ்ரேல்/யூதர்கள் பற்றிய பார்வைகள், என்னைப் பொறுத்தவரை முக்கியமானவை; அவை தமிழிலும் வரவேண்டும்.

   நீங்கள் சொல்வதுபோல நமக்குப் பொதுவான விஷயங்கள் பல, சர்வநிச்சயமாக இருக்கலாம்; மேதகு எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் எழுத்துகளைப் பற்றிய மகாமகோ பிரமிப்பு அதில் ஒன்று என்பதை, உங்களுடைய சில கட்டுரைகளைப் படித்தபோது உணர்ந்தேன், மகிழ்ந்தேன்!

   என் தொடர்ந்த_பேர்ரேஜ் பற்றி – உங்கள் பின்னூட்டத்திற்குப் பின்னும் எனக்கு இந்தச் சச்சரவில் தொடர்ந்து ஈடுபடுவது, வியர்த்தம் என்று தோன்றுகிறது. என் மரியாதைக்குரிய நண்பர் ஒருவரும் அப்படித்தான் நினைக்கிறார். ஆகவே, பொதுவாக ஒரு கட்டுரையை, என் இயல்புக்கு மாறாக கிண்டலில்லாத தொனியுடன், இவ்வரிசையை முடிக்கும் விதமாக பின்னொரு சமயம் எழுதுகிறேன்.

   தொடர்ந்து எழுதுங்கள் – முடிந்தால் தமிழிலேயே. உங்கள் பார்வையுடன் உடன்படாவிட்டாலும் நானும் முடிந்தபோதெல்லாம் படிக்கிறேன். தமிழில் விவாதங்கள் அருகி வரும் இக்கால கட்டங்களில், தொடர்ந்த உரையாடல்கள் மிக முக்கியம் என நினைக்கிறேன்.

   நன்றி.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s