ஜொலிக்கும் இஸ்ரோ, ஜிஸேட்6 செயற்கைக்கோள், பத்ரி சேஷாத்ரி பதிவு: சில குறிப்புகள்

August 27, 2015

இரண்டுமூன்று தினங்களுக்கு முன் பத்ரி அவர்களின் முக்கியமான, சரியான நேரத்தில் வெளிவந்த பதிவில் (= விண்வெளிப் பயணங்கள்) – அதன் பின்னூட்டங்களுக்கும் சேர்த்து – ஒரு விஸ்தாரமான பின்னூட்டமிட்டிருந்தேன். ஆனால் அது வெளிவரவில்லை/பதிக்கப்படவில்லை; ஏதாவது ஸ்பேம் முடக்கம் போன்ற காரணங்கள் இருக்கும். அல்லது ஐபி பேக்கெட்டுகளை, ஏதாவது வழித்தடப் பிசாசு (=டீமன்) உண்டு ஏப்பமும் விட்டிருக்கலாம்!

ஆனால் – அதற்காக,  என் மேலான கருத்துகளைத் தெரிவிக்காமல் இருக்க முடியுமா, சொல்லுங்கள்? ;-)

ஹ்ம்ம்… …சில மணி நேரங்களுக்கு முன், அழகான ஜீயெஸ்எல்வி-டி6 ராக்கெட், வெற்றிகரமாக விசும்பிற்குச் செலுத்தப்பட்டது! பார்க்க:  டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் இதற்கான பக்கம்.

என்னுடைய சந்தோஷத்துக்கு அளவேயில்லை. :-)))

-0-0-0-0-0-0-0-

சரி, இப்போது அந்த, மேம்படுத்தியெடுக்கப்பட்ட பின்னூட்டம்:

அய்யன்மீர்,

நான்கைந்து வாரங்களுக்கு முன் நான், ஒரு இஸ்ரோ சுற்றுப்பயணம் செய்துவந்தேன். சிறுவயதிலிருந்து என் நண்பனாகத் தொடர்ந்து இருக்கும் ஒரு அபாக்கியவானாலும், என் மரியாதைக்கும் அன்புக்கும் உரிய, ஜொலிக்கும்  இஞ்ஜினீயர்களால் இது சாத்தியமானது.

…ஒரு முழு நாளை இஸ்ரோவின் செயற்கைக்கோள் வடிவமைக்கும் துறையில் செலவு செய்தேன்; பத்ரி எழுதியிருக்கும் ஜிஸேட்6 செயற்கைக்கோளை, அது டெஸ்ட் செய்யப்பட்டுக்கொண்டிருந்த க்ளீன்ரூமில் பார்த்து தரிசனம் செய்து, ஜிஸேட்11 பாகமான பிவி (ஃபோட்டோவோல்டாய்க்) பேனல்களை – என் கைவிரல்களால் வருடிக்கூடபார்த்து இன்பலாகிரியடைந்தேன்! :-)

இஸ்ரோ லேபாரட்டரிகள், வடிவமைப்பு-ஆராய்ச்சி மையங்கள், பரிசோதனை அமைப்புகள் எனப் பலவற்றுக்கும் கூட்டிச் செல்லப்பட்டேன். நான் செய்துள்ள பாக்கியத்துக்கு அளவேயில்லை. பலப்பல அற்புதங்களைப் பார்த்துப்பார்த்து என் கண்ணே விரிந்துவிட்டது!

ஆக – ஓரளவுக்கு நான் இஸ்ரோ செயல்பாடுகளை அறிவேன் எனும் முறையிலும் பலப்பல வருடங்களாக அதனைப் பார்த்துத் தொடர்ந்து ஆச்சரியப் படுகிறேன் என்கிற தகுதியிலும்  – அண்மையில் மகாமகோ பதவிகளில் இருக்கும் ஜொலிக்கும் இஞ்ஜினீயர்களைப் பார்த்து, ஓரளவுக்கு விரிவாகவே பேசினவன் (மயில்சாமி அண்ணாதுரை அவர்களுடன் மட்டும் பேசமுடியவில்லை; ஆனால், அவர் லெவலில் இருக்கும் மூவருடன் பேசினேன்) என்கிற முறையிலும் நான் சொல்வேன்:

1. நாம் இஸ்ரோவைப் பற்றி, அநியாயமாகக் குறை மதிப்பீடு செய்கிறோம்; இதற்குக் காரணம் இஸ்ரோ மக்களுக்கு, விளம்பரத்தில் நம்பிக்கையே இல்லை.

2. இஸ்ரோவில் இன்னமும் மகாமகோ ஜொலிக்கும் ஆட்கள் (மூன்றாம் மனிதருக்குத் தெரியாமல்) இருக்கிறார்கள்; என் அனுமானத்தில் அவர்கள் தரம் – எந்தவொரு பன்னாட்டு நிறுவன அதி உயர் ஆராய்ச்சியாளர்களின் சராசரி தரத்தையும் விட ஆழத்திலும் வீச்சிலும் உயர்ந்தது. (இதனை எப்படிச் சொல்கிறேன் என்றால் – கூக்ள் ஆராய்ச்சியாளர்கள், ஜீஇ, போயிங் இன்னபிற ஆராய்ச்சியாளர்கள் பலரை நான் நேரடியாக அறிவேன்; அவர்கள் தரத்தை, நான் ஓரளவு கணிக்கமுடிந்தவனும்கூட!)

3. இஸ்ரோ கேட்ட பணத்தை எந்த அரசானாலும் (பாஜக, ஏன் காங்கிரஸும் கூட!) கேள்வி கேட்காமல் கொடுத்து வந்திருக்கின்றன; காங்க்ரெஸ் மத்திய அரசில் இருந்த நம் பாண்டிச்சேரியின் நாராயணசாமி உட்பட இஸ்ரோவுக்கு ஆதரவாகத்தான் செயல் பட்டார்கள்! (இந்திய அரசின் தொடர்ந்த ஆதரவை – நான் பேசிய ஒவ்வொருவரும் மிக்க நன்றியுடன் குறிப்பிட்டார்கள்)

4. இஸ்ரோவின் பிரச்சினை பணமல்ல. அதன் பிரச்சினை – இந்திய மக்களின் மௌடீகத்தனமான, ஒரு எழவையும் புரிந்துகொள்ளாத அரைகுறைக் கிண்டல்தான்; இன்னொன்று இளம்/புது இஞ்ஜினீயர்கள்/ஆராய்ச்சியாளர்களின் தரம். இன்னொரு பிரச்சினை – அவர்களுக்கான சம்பள அளவுகள். (ஆனால், இந்த மூன்றாம் பிரச்சினையை, ஒரு பெரிய விஷயமாகவே இஸ்ரோகாரர்கள் கருதுவதில்லை!); பல தரமான ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து, வெளி-தனியார் நிறுவன வேலைகளுக்கு (எட்டு-பத்து மடங்கு அதிக சம்பளத்திற்காகவும்) சென்றாலும், இன்னமும் பலப்பல ஜொலிக்கும் ஆட்கள், கருமமே கண்ணாயினார்கள், இஸ்ரோவில் இருக்கத்தான் செய்கிறார்கள்! [அ]

5. இஸ்ரோவின் தொழில்தர்மம் (=வர்க்-கல்ச்சர்) என்பது அலாதியான அழகுடன் கூடியது. அவர்களுக்கு எந்த விஷயத்தையும் ‘முடியாது’ என்று அணுகுவது முடியாது. எவ்வளவு அற்புதமான விஷயம் இது!

6. இஸ்ரோவானது தனியார் துறையை ஆதரிக்க முயன்றுகொண்டே இருக்கிறது. ஆனால் அதன் எதிர்பார்ப்புக்கேற்ப தரம். தனியார்தயாரிப்புகளில் இல்லையாதலால் – ஏறக்குறைய அனைத்துத் தொழில் நுட்பங்களையும் அவர்களே செய்துகொள்கிறார்கள். கண்டுபிடித்துக்கொள்கிறார்கள்.  (இதனைப் படிக்கும் அதி தொழில் நுட்ப ஆசாமி யாராவது, இஸ்ரோவுக்காக ஆராய்ச்சி/வடிவமைப்பு செய்யவேண்டுமென்றால், நான் என் சிறு அணில்பங்காக என் அறிமுகப்படுத்தலைச் செய்யத் தயாராக இருக்கிறேன்; ஆனால் என்னை முதலில் நீங்கள் திருப்தி செய்யவேண்டும்)

7. இஸ்ரோ – அடுத்த 10-15 ஆண்டுகளில் என்ன செய்யவேண்டும் என்பதற்கான முஸ்தீபுகளை இப்போதே செய்துகொண்டிருக்கிறது; விலாவாரியாகத் திட்டமிடுதல், செயல்படுத்துதல் எல்லாம் நடந்துகொண்டிருக்கின்றன. >5 டன், 12டன் என ராக்கெட்டின் பேலோட் தாங்குதிறனை மேம்படுத்த ஆராய்ச்சிகள் கடந்த சில வருடங்களாக நடந்துகொண்டேயிருக்கின்றன.

8. இஸ்ரோ தொழில் நுட்பங்கள் பலப்பல, இந்திய முன்னேற்றத்துக்குப் பலவகைகளில் நேரடியாகவே (மறைமுக உதவிகளையே விடுங்கள்!) உதவி செய்துகொண்டுதான் இருக்கின்றன. (வேண்டுமானால் நான் எடுத்த ஒரு சிறு ஜாபிதாவைக் கொடுக்கிறேன்)

9. இஸ்ரோவுக்கு – மற்றவர்களுக்காக அந்தரீக்ஷ் நிறுவனம்  மூலம் அனுப்பும் செயற்கைக்கோள்களைச் செய்வதில், அவற்றை மேலனப்புவதில், வர்த்தகரீதியாக அல்லாடுவதில், அவ்வளவு ஆர்வமில்லை. ஏனெனில் அதற்கான வசதிகள் குறைவு; மேலும் மிகமுக்கியமாக, இது இஸ்ரோவின் குவியத்தைத் தளர்த்திவிடும்.

 
10. இஸ்ரோ அனுப்பும் பேலோட்கள் (=payloads) – அவை எவ்வாறு எப்படி உபயோகிக்கப் படும், அந்த விவரசேகரங்கள் எப்படி முழுவதுமாக உபயோகிக்கப்படவேண்டும் என்பதற்கெல்லாம் பல பரிந்துரைகள் இருக்கின்றன. மேலேயிருந்து சேகரம் செய்யப்பட்ட ஒவ்வொரு துணுக்கு விஷயமும், உபயோகப்படுத்தப்பட்டுள்ளன, படும். ஏனெனில் இஸ்ரோவின் தரம், ஆடிட் போன்றவை அப்படி. விரயம் என்பது, பொதுவாகவே மிகமிகக் குறைவுதான்.  (என் ஒரு அரைகுறை அறிமுகம் சொன்னதுபோல, இஸ்ரோ, தீபாவளி ராக்கெட் விடும் அமைப்பல்ல!) [ஆ]

11. இஸ்ரோவில் உள்பிரச்சினைகளும் இல்லாமலில்லை. ஒரு எடுத்துக்காட்டாக: ஆராய்ச்சிகளை ஆவணப் படுத்தல் என்பது மிகவும் குறைவு. அரைகுறைகள் இருக்கிறார்கள் என்றாலும் – அவர்கள் சதவீதம் மிகவும் குறைவு. சில சமயம் ‘தொழிலாளர் சங்கம்’ தொடர்பான அற்பத்தனங்களும் இருக்கின்றன. சமயம் கிடைத்தபோதெல்லாம் தெஹெல்கா, ஔட்லுக், ‘த ஹிந்து’ போன்ற அற்ப பப்பரப்பா பத்திரிகைகள், தினசரிகள் – வதந்திகளை வக்கிரமாக உலாவவிட்டு அதன்மூலமாக ஏற்படும் பிரச்சினைகளும் இருக்கின்றன. இருந்தாலும்…

பின்னொரு சமயம் விரிவாக, ஜொலிக்கும் இஸ்ரோ பற்றி எழுதவேண்டும்.

-0-0-0-0-0-0-

…ஒவ்வொரு வருடமும் ஃபெப்ருவரி மாதக் கடைசி நாளன்று இஸ்ரோ,  ‘ஓபன் ஹவுஸ்’ (சிலபல ஆராய்ச்சிக்கூறுகளை, யந்திரங்களை, நுணுக்கங்களைப் பார்க்க அனுமதிப்பது) எனும் கொண்டாட்டத்தை நடத்துகிறது; அப்போது பொதுமக்கள், முக்கியமாக நம் குழந்தைகள் இஸ்ரோ அமைப்புகளுக்குச் சென்று பலப்பல விஷயங்களைக் கண்டு களிக்கலாம் (எல்லாவற்றையும் அல்ல!); இளம்/முதுபெரும் விஞ்ஞானிகளுடன் அளவளாவலாம்.

…நம் குழந்தைகளுக்கு, விண்வெளியின், விசும்பின், ப்ரபஞ்சத்தின் அதிஅற்புதமான சாத்தியக்கூறுகளை, ஒருகோடிட்டுக் காட்டலாம். இம்மாதிரி விஷயங்களால், ஒரேயொரு குழந்தையின் ஆவலை, தணியா தாகத்தைக் கிளப்பி விடமுடிந்தால்கூட, அதைவிடப் பெரிய விஷயம் என்ன இருக்கக் கூடும்?

ஆக- 2016ல் நான் வேலை செய்துவந்த பள்ளிகளில் இருந்து என் குழந்தைகளை, இதற்கு இட்டுச்செல்ல எண்ணம். அதற்காகத் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறேன்.

நீங்கள்? :-)

நன்றி.

[அ]ஐடி தொழில், குளுவானியம், முதலாளியம், ஜெயமோகன், நமது ஜொலிக்கும் இஸ்ரோ ஆட்கள், வாய்ப்புகள், நம் பிரச்சினைகள், – சில குறிப்புகள் 08/01/2015

[ஆ] மங்களமண்டலத்தியல் கண்டு தெளிவோம்!  07/11/2013

 

18 Responses to “ஜொலிக்கும் இஸ்ரோ, ஜிஸேட்6 செயற்கைக்கோள், பத்ரி சேஷாத்ரி பதிவு: சில குறிப்புகள்”

 1. A.Seshagiri Says:

  “ஹ்ம்ம்… …சில மணி நேரங்களுக்கு முன், அழகான ஜீயெஸ்எல்வி-டி6 ராக்கெட், வெற்றிகரமாக விசும்பிற்குச் செலுத்தப்பட்டது! பார்க்க: டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் இதற்கான பக்கம்.”
  அட அநியாயமே! தங்கள் தளத்தை இப்போது படித்த (இரவு :10:30 மணிக்கு)பிறகுதான் இந்த விசயமே தெரிந்தது.எல்லா ஊடகங்களிலும் (நீங்கள் டி.வி.பார்க்கமாட்டீர்கள்)அது NDTV யோ,அல்லது TIMES NOW வோ,அல்லது INDIA TODAY யோ ஒரே ‘Sheena Bora ‘ கொலை சம்பவம் தான் இன்று பூராவும் ஓடிக்கொண்டு இருக்கிறது. “ஜொலிக்கும் இஸ்ரோ” பற்றி நாம் போல் உள்ள ‘கூமுட்டைகள்’ தான் பீத்தி கொள்ளவேண்டும்.
  வாழ்க இந்தியா!!


 2. அதென்ன நான் வேலை செய்து வந்த பள்ளி என்று எழுதி உள்ளீர்கள்.அப்படியானால் தற்போது வேறு எங்கு பணி புரிகிறீர்கள்? இந்த கேள்வி சிறுபிள்ளைத்தனமானதுதான். இருப்பினும் இயற்கையாக எழுந்ததை மறைக்க இயலவில்லை. பொருத்துக்கொள்ளவும்.
  அர.வெங்கடாசலம்

 3. ravi Says:

  மகிழ்ச்சி … ///ஒவ்வொரு வருடமும் ஃபெப்ருவரி மாதக் கடைசி நாளன்று இஸ்ரோ, ‘ஓபன் ஹவுஸ்’//// முன் அனுமதி எதுவும் தேவையா.. அப்ளிகேஷன் ஏதாவது உண்டா ??

  ஆனால் ஒரே ஒரு குறை உண்டு … ஒரு நல்ல அருங்காட்சியகம் இஸ்ரோ மூலம் அமைந்தால் நல்லது .. செயற்கைக்கோள் பற்றிய புகைப்படங்கள் , செய்திகள் . நாசாவுடையது மிகவும் அருமையாக இருக்கும் .. திருவனந்தபுரத்தில் ஒரு காட்சியகம் உள்ளது ..பராமரிப்பு சுமார் தான் ..

 4. Baskar Says:

  Pls share

 5. vijayaraghavan Says:

  அய்யா,
  விஷய ஞானமே இல்லாத அரசியல்வாதிகளுக்கும் ஊழல் பெருச்சாளிகளுக்கும் இடையில் இருந்து கொண்டு தொடர்ந்து சாதனை படைத்து வரும் நமது இந்திய விஞ்ஞானிகளை எவ்வளவு பாராட்டினாலும் தரும்.
  இந்நிலையில் எனது மனதில் தோன்றும் ஒரு விஷயத்தையும் சொல்ல விரும்புகிறேன். 1960 களில் நிலவில் இறங்கி சோதனைகளை அமெரிக்கா செய்து விட்ட நிலையில் சுமார்ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து செயற்கை கோளிலிருந்து வெறும் புகைப்படம் மட்டும் எடுத்து அனுப்பும”சந்திராயன்” விஷயத்தை ஒரு சாதனை என்று நாம் சொல்லிக் கொள்வது சரியா?
  பலரிடம் கேட்டும் சரியான பதில் கிடைக்கவில்லை. இந்தக் கருங்காலிக்கு கொஞ்சம் கருணை காட்டுங்கள்.


  • அய்யா விஜயராகவன், உங்கள் கேள்வியின் சாரமும், கரிசனமும் புரிகிறது.

   தங்கள் கேள்விக்கு விலாவாரியாக அறிவியல்/விசும்பு/அணுக்கரு ஆராய்ச்சிகளால் சாத்தியப்பட்டிருக்கும் விஷயங்களைப் பற்றி எழுதலாம். ஏன் நாம் இவற்றைச் செய்தாகவேண்டும், இல்லாவிட்டால் கதிமோட்சமேயில்லை என்றும் எழுதலாம். தொழில் நுட்பங்களை ஏன் நாமேதான் விருத்தி செய்துகொள்ளவேண்டும் என்றெல்லாம்கூட… ஒரு நாள் எழுதுவேன்.

   ஆனால், இப்போதைக்கு:

   ஒரு உயிர் என்று இயற்கையில் ஏற்பட்டால், அது இறந்தே தீரவேண்டும். பிறந்த ஒவ்வொரு மனிதனும் இறந்தேயாகவேண்டும். இது ஒரு அழகான, பிரத்தியட்ச உண்மை. நமக்கு முன்னால் பலப்பல பெரியோர்கள், சான்றோர்கள், மகாமகோன்னத உச்சங்களை எட்டியவர்கள் எல்லாம் இறந்தே போயிருக்கின்றனர், நம் பாபுஜி உட்பட! அவர்கள் செய்திருக்கும் விஷயங்களில், சாதனைகளில் ஒரு தூசளவுக்கும்கூட நம்மால் ஒன்றும் பிடுங்க முடியப் போவதில்லை. இதுவும் ஒரு பிரத்யட்ச உண்மை.

   ஆக, நாம் ஏன் நம் அற்பச் சராசரி மானுட வாழ்க்கையைத் தொடர்ந்து வாழவேண்டும், சொல்லுங்கள்? ஆக, உடனடியாக வடக்கிருக்கலாமே!

   நம் உலகம், எப்படியும் சில பில்லியன் வருடங்களில் கண்டிப்பாகவே, நம் சூரியனால் தடுத்தாட்கொள்ளப்படும். பூலோஹம், பஸ்மம். ஆக நாம் வாழ்ந்து, கற்றுக்கொண்டு என்றெல்லாம் விலாவாரியாக 80-90 வயது வரை கஷ்டப் படவேண்டும்? புத்தர் சொன்ன ‘துக்க’ பற்றியெல்லாம் ஏன் கவலைப் படவேண்டும்? உடனடியாகப் போய்ச் சேரலாமே?

   நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

   • Ramanan Says:

    May be the only driving factor is ‘The pleasure of finding things out’ . When you think about it, what else does one need ?

 6. bseshadri Says:

  ஸ்பாமிலும் இல்லை. எங்கோ காணாமல் போய்விட்டது. இந்தச் சுட்டியை என் பதிவில் இணைத்துவிடுகிறேன்.

 7. selvaraj Says:

  Thanks for letting us know about ISRO. It is like an island in India.

 8. vijayaraghavan Says:

  அய்யா,
  தங்களின் மேலான பதிலுக்கு நன்றி. மனிதன் இயக்கமின்றி இருக்கக் கூடாது மற்றவருக்கு பலன் தரும் ஏதாவது முயற்சியில் எப்போதும் இருக்க வேண்டும் கருத்தில் எனக்கு ஏதும் மாறுபாடில்லை
  நிலவில் ஏதுமில்லை, மனிதன் வாழத் தகுதியிலாத ஸ்தலம் என்று முடிவான பின்பு, அதில் செய்யும் முயற்சியெல்லாம் வியர்த்தம் என்பதே என் கருத்து.

  • ரா.ராமசாமி Says:

   நிலவில் இறங்கியவன் ஏன் அங்கிருந்து தண்ணீர் கொண்டுவரவில்லை?

 9. Amirtharaj Says:

  I hereby know you by MrBava I have an opportunity to contact you via this blog sir.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s