மொஹி பஹாஉத்-தீன் டாகர்: ருத்ரவீணையில் த்ருபத்
July 22, 2015
சிலநாட்கள் முன்பு இந்த மெஹ்ஃபில்லுக்குச் சென்றிருந்தேன்; பள்ளியில், மரங்கள் சூழ்ந்த கும்மிருட்டுச் சூழலில், ஒரு பெரிய ஒலைக்குடிலில், சில இசை ஆர்வலர்களுக்கென நடத்தப்பட்ட நிகழ்ச்சி. நிறைய பள்ளிக் குழந்தைகளும் இருந்தார்கள்.
த்ருபத் வகை இசையை ரசிப்பதற்கு ஒரு உல்லாசம், சாவகாசம் வேண்டும். கடிகாரத்தைப் பார்க்காமல் இருக்கவேண்டும். மெல்ல மெல்ல மேலெழும்பும் இசை இது. அவசரகதியில் அள்ளித்தெளிக்கும் படாடோப இசை வல்லமை இதில் இல்லை. ஆனால் நுணுக்கங்கள்? ஆஹா தான்!
நான் இப்படிப்போன – இதற்கு முந்தைய ‘மெஹ்ஃபில்’ கச்சேரி, அம்மணி கலாபினி கொம்கலி அவர்களுடையது. அய்யோ! இரண்டரை வருடங்களுக்குப் பின்னர்தானா இப்படி ஒரு இசைப் பொழிவுக்குச் சென்றிருக்கிறேன்? :-(
-0-0-0-0-0-0-
ஸரஸ்வதி இவருடைய கைவிரல்களில் களி நடனம் ஆடுகிறாள். இவருடைய வீணைவாசிப்பை – அற்புதமான, நெக்குருகவைத்த இசைமழை என்றே சொல்ல வேண்டும்.
…ஒரு ருத்ரவீணை வித்வான் என்பதற்கு மேற்பட்டு சிலபல வித்தியாசமான முயற்சிகளையும் செய்பவர் இவர்: எப்படி உட்கார்ந்துகொண்டு வாசிப்பது (ஹிந்துஸ்தானி முறைகள் போலல்லாமல் நம்மூர் கர்நாடக சங்கீதக் காரர்கள் உட்காருவது), பரவலாகத் தெரியாத ராகங்களை விஸ்தாரமாக வாசிப்பது (இவற்றில் பல நம் தெற்கத்தியப் புழக்கத்தில் உள்ளவை) என, பலப்பல முன்னெடுப்புகள். (ஆனால் நம்மூர் பாடகர் டிஎம் க்ருஷ்ணா போல, தனக்கு ஒரு சுக்கு அறிவும் இல்லாத துறைகளில் மூக்கை நுழைப்பதில்லை. அறிவுரை சொல்கிறேன் பேர்வழி என விஸ்தாரமாக உளறிக்கொட்டுவதில்லை. மேட்டிமைத்தனத்துடன் அசடு வழிவதில்லை. ஸரஸ்வதிக்கு நன்றி!)
-0-0-0-0-0-0-
…இரண்டேகால் மணிநேரம் நடந்த கச்சேரி. பக்கவாத்தியமாக பக்கவாஜ். பின்னால் இரண்டு திறமைமிக்க தம்பூராக் காரர்கள். வாசிக்கப்பட்டது ஒரேஒரு ராகம். மியான் கி மல்ஹார். இப்படியும் ஒரு ராகத்தை, அதன் நுணுக்கங்களை விதம்விதமாக வாசித்து விளக்கமுடியுமோ என இசையிலும் ஒரு ஆரம்ப நிலை மாணவனான எனக்குத் தோன்றியது. ஒன்றேமுக்கால் மணி நேரம் போல, மிக விஸ்தாரமான ஆலாபனை. கீழ் ஸ்தாயியில் ஆரம்பித்து மெதுவாக மேலெழும்பி அலை அலையாகப் பொங்கிய அதிர்வுகள். ஜோடும் ஜாலமும் என அடுத்த 30 நிமிடங்கள்! த்ரூபத் முறையின் அடிநாதங்களான கமகங்களும் மீண்ட்களும் அவ்வளவு அற்புதமாக இருந்தன.
பொதுவாகவே தறிகெட்டு ஓடிக்கொண்டிருக்கும் என் மூளையை ஒரு குவியத்தில், தியானத்தில் ஆழ்த்திய அபாரமான இசை.
இவற்றையெல்லாம் கேட்பதற்குக் கொடுத்து வைத்திருக்கவேண்டும். நான் பாக்கியசாலிதான்.
“Ragas are soliloquies and meditations, passionate melodies that draw circles and triangles in a mental space, a geometry of sounds that can turn a room into a fountain, a spring, a pool.”
– Octavio Paz
மெஹிகொ கவிஞரான மகாமகோ ஒக்தெவியொ பஸ் அவர்களை விட என்னால் ராகங்களை விளக்கமுடியுமா என்ன?
பஹாஉத்-தீன் டாகர் அவர்கள் வாய்ப்பாட்டும் பாடுவதில் விற்பன்னர் என்று பேசிக்கொண்டார்கள்.
நான் மிகவும் ‘லக்கி’ ஆசாமி ஆதலால், எதிர்காலத்தில் அதனையும் கேட்கக் கொடுப்பினை இருக்கும் எனத்தான் நினைக்கிறேன். :-)
குறிப்புகள்:
- இந்த டாகர்வாணி பாரம்பரியம் பற்றிய சிலபல கதையாடல்களோடு கூடிய ஒரு வரலாறு: Dagar Tradidtion – A brief history of the Dagar family by Dr Ritwik Sanyal
- டாகர் சகோதரர்கள்/உஸ்தாத்கள் – நஸீர் மொய்ன்உத்-தீன் கான், நஸீர் அமின்உத்-தீன் கான்; மேதைகளின் வழியில் மியான் கி மல்ஹார்: பழைய, அரிய கச்சேரிக்கோப்பு.
- டிஎம் க்ருஷ்ணா குறித்த சுட்டிகளைக் கொடுத்தவர்: mysticmundane. அவருக்கு நன்றி.
- pink floyd: atom heart mother (suite) – sweet! 30/07/2013
- bhaanushingo: chitto jetha bhayashunyo 15/08/2014
- ஸலீல் சௌத்ரி: ஜாகோ மோஹன் ப்யாரே + இலவச இணைப்பு: சில அறிவுரைகள் 06/11/2014
- அந்த்ரெய் தார்கொவ்ஸ்கி – ஸொலாரிஸ் (1972) ஆஹா! 14/07/2014
- லிராய் ஜோன்ஸ் = இமாமு அமிரி பராகா: சில குறிப்புகள் 22/01/2014
- தமிழ்ப் பட இழவுகளுக்கு, இழவுத் தமிழ்ப் பாடல்களை எழுதுவது எப்படி: சில குறிப்புகள் 18/01/2014
- கலாபினி கொம்கலி எனும் பாடகி… 23/12/2012
July 23, 2015 at 07:58
Shri Ramasamy
I listen/see many times in DD Bharathi muslim artist giving top class performance. Unfortunately in south I do not find much muslim classical artist. Not only in music field, lot of artisans painters etc are Muslims in North India. I always think there is no chance of ISIS/extreme ideology entering India when we have people like these around us.
July 23, 2015 at 08:20
அய்யா,
எனக்கு டீவி பார்க்க, பொதுவாக ஒத்துவராது. அங்கு நல்ல கச்சேரிகள், நிகழ்ச்சிகள் என வந்தால் மகிழ்ச்சியே. வடக்கில் நிறைய ஊர்சுற்றியிருக்கும் நான் – தாங்கள் சொல்வதுடன் ஓரளவுக்கு உடன்படுகிறேண் என்றாலும் – தாங்கள் ஷைக் சின்ன மௌலானா அவர்களின் நாகஸ்வர வாசிப்பைக் கேட்டதுண்டா?
ஆனால் – நீங்கள் எதை வைத்துக்கொண்டு – இந்த இஸ்லாமிக்ஸ்டேட் வகையறா கும்பல்கள் நம்மூருக்கு வரவேவரமாட்டா என்று நம்பிக்கையுடன் சொல்கிறீர்கள் எனத் தெரியவில்லை. என்னுடைய அனுபவங்கள் அவ்வாறு சொல்லவைக்கவில்லை. :-(
படிப்பறிவுக்கு வழியில்லை. வெறும் வெறிதான் புகட்டப் படுகிறது. உரையாடல்கள் இல்லை – மிகமுக்கியமாக நல்ல தலைவர்கள் இல்லை. சமூகச் சான்றோர்களை/படிப்பாளிகளை இழிவு படுத்துதல்தான் நடக்கிறது. இருக்கும் தலைவர்களாகக்கூடிய சொற்ப மனிதர்களையும் வாயைடைக்கச் செய்கிறார்கள் – அல்லது அவர்கள், ‘விட்டால் போதும்’ என வெளியூர் போய் ஸெட்டில் ஆகி விடுகிறார்கள்.
இங்குள்ள முஸ்லீம் இளைஞர்களுக்கு (ஒரு சில விதிவிலக்குகள் இருக்கின்றனர் என்றாலும்) வேறேது போக்கிடம்? தங்கள் இயலாமைகளை, படிப்பிக்கப்பட்ட வெறுப்புகளின் மூலமாகத் தானே குவியவைக்க நேரிடும்?
உரம்போட்டு வளர்க்கும் வெறுப்பியத்துக்கு (=ஸலாஃபி-வஹ்ஹாபியம்) வடிகால் தேவைதானே?
நீங்கள், கொஞ்சம் முடிந்தால், இளைஞர்களுடன் பேசிப்பாருங்கள். கொஞ்சம் தெளிவு வரலாம்.
எல்லாம் நல்லபடியாக நடந்தால் எனக்கும் மகிழ்ச்சியே.
What I feel is, we are NOT doing enough for these hapless folks.
As one of my mantras expand to — 7Ps = Proper Prior Planning and Preparation will Prevent Poor Performance.
And, this is ALWAYS true!
July 23, 2015 at 16:09
திராவிடக் கச்சாடாச் சங்கதிகளைப் படித்துப்படித்து தலைதெறிக்கும் நிலையிலிருக்கையில், கோடை மழையென வித்வான் மொஹி பஹாஉத்-தீன் டாகர் அவர்களின் ருத்ரவீணை மெஹ்ஃபில் பற்றி படிக்க நேர்ந்தது மனதுக்கு ஹிதமாக இருக்கிறது. எதற்கெடுத்தாலும் கடிகாரம் பார்க்கும் அல்லது செல்ஃபோனைப்பார்த்து முழிக்கும் இந்தப் பொல்லாத காலத்திலும், இந்த மாதிரி வாத்யங்களில் ஆழ்ந்து ஈடுபட்டு வாசிக்கும் வேற்றுலகவாசிகள் -அவர்கள் மிக அரிதாகவே தென்பட்டாலும்- இருப்பது ஆச்சர்யம். நாம் செய்த அரும்பாக்யம்.