சித்பவன்காரர், காந்தி, கோட்ஸே, ஜோதிடம் – சில குறிப்புகள் (2/2)

February 23, 2015

இதன் முதல் பாகம். சித்பவன்காரர் புராணம் தொடர்கிறது…

… சிறு வயதிலிருந்து கடுமையான உடல் உழைப்பு (தங்கள் 140 அடி ஆழக் கிணற்றை இவரும், இவர் தந்தையாரும் மட்டுமே தோண்டியிருக்கின்றனர்) – வயல்களில் போராட்டம். தங்களுக்குத் தேவையான உணவு, சோப்பு, துணி என அத்தனை பொருட்களையும் அவர்களே தயாரித்துக் கொண்டிருந்தனர், வீட்டில்/பண்ணையில் உதவிக்கு வேறு ஆட்களை வைத்துக்கொள்ளவில்லை. அவர்கள் இரு விஷயங்களுக்குத்தான் வெளியே சென்று கடையில் நிற்க வேண்டியிருந்தது – 1) வெள்ளைச் சர்க்கரை – இதையும் ஏதாவது விசேஷங்களில்தான் உபயோகித்திருக்கிறார்கள்; 2) தேயிலை –  இதன் தேவையும் சொற்பமே! மற்றெல்லாவற்றையும் அவர்களுடைய சிறு பண்ணையிலேயே தயாரித்துக் கொண்டனர்.

இரண்டுமூன்று தலைமுறைகள் முன் – சராசரி குமாஸ்தாவாகாத பாரதவாசிகள் பலரும் இப்படித்தான்  – சுயசார்புடையவர்களாகவே, மிகுந்த சுயமரியாதையுடன் இருந்திருக்கிறார்கள் என்பது என் அனுமானம்.

இச்சமயம்  என் தாய் வழிப் பாட்டியும் இப்படித்தான் என்று சொல்லவேண்டும் – அவர் ஒரு பிரமிப்புக்குரிய அம்மணி. 39வயதில் காசநோயில் போய்ச் சேருவதற்கு முன் – அவர் இம்மாதிரி பல விஷயங்களைச் செய்திருக்கிறார். காந்தி மீது அளவுகடந்த பக்தியால் தன்னிடம் இருந்த சொற்ப தங்க நகைகளையும் சிறுமூட்டையாகக் கட்டி ‘ஹரிஜன் முன்னேற்ற நிதி’க்கு, காந்தி ரயில்பயணம் வந்தபோது கொடுத்திருக்கிறார். வீட்டில் சிட்டம்சிட்டமாக நூல் நூற்று, அதில் மொடமொட கதர்ப் புடவை நெய்து கொண்டு, தீபாவளிப் பட்டாசுகளை வீட்டிலேயே தயாரித்துக்கொண்டு (இதற்கான அடிப்படை ரசாயனங்களை அண்மையில் இருந்த ஒங்கோல் டவுனில் வாங்கிக் கொண்டு), காகிதம் செய்துகொண்டு, மாடுகளை வளர்த்திக் கொண்டு, காய்கறித் தோட்டம் போட்டு, நீச்சல் வீராங்கனையாக, தொடர்ந்து பல புத்தககங்களைப் படித்து, தமிழ் தெலெகு ஸம்ஸ்க்ருதம் (+கொஞ்சம் ஆங்கிலம்) போன்றவற்றில் விற்பன்னராக இருந்து… … எனப் பலப்பல விஷயங்கள்!

ஹ்ம்ம்ம்… எப்படியிருந்த நாம், எப்படி மெக்காலேய அற்ப குமாஸ்தாக்களாகிப் பின்னர் முதுகெலும்பு என ஒன்று இருப்பதையே மறந்து, சோம்பேறி குளுவான்களாகியும் விட்டோம்! நினைத்தாலே வலிக்கிறது.(மெக்காலேயும் நானும்  07/11/2012)

சரி.

என்னுடைய சித்பவன் காரருடைய தாத்தாவும் அவருடைய அப்பாவும் – போர்த்துக்கீசிய காலனிய அதிகாரிகளாலும், வெள்ளைக்கார மிஷனரிகளாலும் சூழ்ச்சி செய்யப்பட்டு சிரச்சேதம் செய்யப் பட்டனர் – காரணம்: அவர்கள் மதம்மாற முடியாதென்பதற்கு அப்பாற்பட்டு, காலனியவாதிகளை எதிர்த்துப் பேசியதுதான், மக்கட்திரளைத் திரட்டியதுதான்! (இம்மாதிரிப் பல அட்டூழியங்கள் சுமார் 140 வருடங்களுக்கு முன்பு கூட கோவா, கொங்கண் பகுதிகளில் போர்த்துகீசியர்களால் அரங்கேற்றப் பட்டுக்கொண்டிருந்தன; க்லாத் ஆல்வாரெஸ், இவை பற்றியெல்லாம் நிறைய எழுதியிருக்கிறார்)

அவர்கள் காலத்தில், இச்சமூகத்தினருக்கு ஆயுதப் பயிற்சியும் இருந்திருக்கிறது. இன்னும் பல விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், சித்பவன் காரரிடம் திரும்பப் போகிறேன்.

…இவருடைய ஜோதிட ஆருடங்கள் திகைப்பில் ஆழ்த்தும்படித்தான் இருந்திருக்கின்றன. சில பெரிய அரசியல், தொழிலதிபர்கள் போன்றவர்கள் அவரைப் பார்த்துப் போவர். ஆனால் மாதத்திற்கு, அதிக பட்சம் பத்துபேரைத்தான் பார்ப்பார். அதுவும் ஒரு வளைக்க முடியாத வரிசை முறையில். கண்டிப்பும் கறாரும்தாம். ஆனால் – இதனால் நேரடியாகவோ மறைமுகமாகவோ, அவர் குடும்பத்திற்கு தம்பிடி கூடப் பிரயோஜனம் இல்லை.

எனக்கு ஜோதிடம் போன்றவற்றில் பெரும் ஈடுபாடு என்றெல்லாம் கிடையாது. மேலும் தகவல் தொழில் நுட்பக் குளுவான்கள் அளவுக்கு இல்லாவிட்டாலும், இதிலும் போலிகளும்,  ஃபேக் ஆசாமிகளும் அதிகம்தான். ஆகவே நான், இந்தப் பெரியவரைப் பற்றி – அவர் ஜோதிடம் பற்றியெல்லாம் தெரிந்துகொள்ள விரும்பவில்லை.

இப்போது தோன்றுகிறது – அவர் உபயோகித்த புத்தகங்களையும் அட்டவணைகளையும் பற்றியாவது நான் ஆர்வத்துடன் அறிந்துகொண்டிருக்கவேண்டும்; அவர் ஒரு இருமொழி (ஸம்ஸ்க்ருதம், ஆங்கிலம்) கணித புத்தகத்தைவேறு எழுதிக் கொண்டிருந்தார் – அதுவும் 90+ வயதில்! அதன் ஒரு வடிவத்தை நான் புரட்டிப் பார்த்திருக்கிறேன், வேதிக் மேத்தமேடிக்ஸ் என்றெல்லாம் பஜனை அதில் இல்லை, அதன் பேக்கேஜிங் என்பது தெளிவு. கேரளா கணித ஆசான்களின் வழியைத் தொடர்ந்து சென்றவர் அவர், இதுவும் என்ன ஆயிற்று என்பது தெரியவில்லை.

அவரை நான் ஒரு முறைகூட ஜோசியம் சொல்லுங்கள் எனக்கேட்கவில்லை. அவரும் செய்யவில்லை. இது எனக்குச் சங்கடம் தரும் என அவர் உணர்ந்து இருந்தார் என நெகிழ்வோடு நினைத்துக்கொள்கிறேன்.

-0-0-0-0-0-0-0-

… 50ஆம் வயதிலிருந்து, அவர் மனைவி இறந்தபின்னர்,  அவர் குழந்தைகளெல்லாம் வளர்ந்து அவரவர் வாழ்க்கையில் ‘ஸெட்டில்’ ஆனபின் — இந்தியாவை – பகுதி பகுதியாக சைக்கிளில் சுற்றிவரத் தொடங்கினார். ஒவ்வொரு வருடமும் குறைந்த பட்சம் 3000 கிமீ இப்படிப் பயணம் செய்திருக்கிறார். ஒவ்வொரு நாளுக்கும் கறுப்பு மசியால் எழுதப்பட்ட, நுணுக்கமான அழகான குறிப்புகள், கணிதம் குறித்த சிந்தனைகள் – அனைத்தும் அவரே தயாரித்த காகிதத்தில், மசியில், அவர் தயாரித்த ஒரு மூங்கில் பேனாவை வைத்துக்கொண்டு. ஒவ்வொரு வருடமும் ஆறுமாதம் இப்படி. மிச்ச நேரத்தில், அவர் நிலத்தில் ’கேதிபாரி’ – விவசாயம். நிமிர்ந்த நடை. தொப்பை துளிக்கூட இல்லாத உடல். ஆரோக்கியம். நல்ல நகைச்சுவையுணர்ச்சி. கூர்மையான, எதையும் தப்பவிடாத மூளை.

88 வயது வரை இப்படி ஊர்சுற்றிப் புராணம். அந்த வயதில் லாரியால், நம் திண்டுக்கல் பக்கத்து நெடுஞ்சாலையில் மோதப்பட்டு கால் ஒன்றில் எலும்புமுறிவு. இதனையும் தானே ஒரு குளத்தங்கரை மரத்தடியில் தங்கிச் சரி செய்துகொண்டிருக்கிறார். அவர் குழந்தைகள் இதனைக் கேட்டதும் அவரை அடுத்த வருடத்திலிருந்து ‘பாரத யாத்ரா’ போக விடவில்லை. சுபம்.

பின்னர் மூன்றாம் வகுப்பு ரயில் பயணங்களைத் தொடர்ந்திருக்கிறார். இப்படி ஒரு பயணத்தின்போது அவருடைய நெடு நாள் நண்பரைப் பார்க்க வார்தா வந்திருந்தபோதுதான் எனக்கு, அவரை முதலில் சந்திக்கும் வாய்ப்பு வாய்த்தது.

பின்னர் பலமுறை கடித உரையாடல்கள் நடைபெற்றன + இரண்டு சந்திப்புகளும்… நான் மிகவும் கொடுத்து வைத்தவன் தான். எவ்வளவு திறப்புகள்!

நானும் அவரும் மிகவும் மதிக்கும் கணிநியல்காரரான ரே கர்ஸ்வெய்ல் எழுதிய புத்தகத்தைப் படித்துவிட்டு அவர் எழுதிய ஒரு நீளமான கடிதம் தான் எனக்குக் கடைசியில் வந்தது…
ageofspiritualmachines-cover
இதில் அவர் பார்வையில், அவர் எழுதியது – நாம் கூடிய விரைவில் ஆன்மீக யந்திரங்களின் யுகத்தை அடைவோம் எனத்தான் நினைக்கிறேன். நம்மால் உயிரியல் தொடர்பான தளைகளை மீறிப் பரிணாம வளர்ச்சியடைய முடியும். புதிய பரிமாணங்களை எட்ட முடியும்.

நான் அவருக்குப் பதிலாக எழுதியதில் யுஜி க்ருஷ்ணமூர்த்தி பற்றி, அரவிந்த ஆஸ்ரம ‘அன்னை’ மிர்ரா அல்ஃபாஸ்ஸா  பற்றி அவர்களுடைய, இது தொடர்பான கருத்தாக்கங்களைப் பற்றி எழுதினேன்.

அதற்கு அவருடைய பதில்:  நீ எப்போது வருகிறாய். உனக்குப் பிடித்த ஸாபுதானா கிச்சடியை உனக்காக தினம் செய்கிறேன். கவலை வேண்டாம்.

(இந்த ஸாபுதானா கிச்சடியில் கறிவேப்பிலை, கடுகு, கொத்தமல்லி எதுவுமே சேர்க்கவேண்டிய அவசியமில்லை)
-0-0-0-0-0-0-0-

1998-2002 வாக்கில், அவருடைய மகள்வழிக் கொள்ளுப்பேரன் ஒருவன், பெங்களூரில், இந்திய விசும்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO)  வேலை செய்துகொண்டிருந்தான். அவனுடன் சிறிது பரிச்சயமாகி,  சித்பவன் பெரியவரைப் பற்றிச் சில அதிகப்படி விஷயங்களைத் தெரிந்துகொண்டேன்,

அவனும் ஒரு திறமைசாலியான மின்னியல் ஹார்ட்வேர் ஆசாமி,  மூளையும், தேசபக்தியும் மிக்கவன், பொதுவாகப் பேசமாட்டான் – ஆனால், தேவையற்று யாராவது அறிவிலிகள் ‘இஸ்ரோ ஆட்கள் தீபாவளி ராக்கெட் விடுவதில் நிபுணர்கள்’ என்கிறது போன்ற இளக்காரப் பொய்மைகளைத் தொடர்ந்து பரப்பினால், அமைதியாக, ஆழமாக – அவர்களின் முதுகுத் தோலையும், அவர்களது முகமூடிகளையும் இரக்கமேயில்லாமல் சிரித்துக்கொண்டே உரித்துவிடுவான்.  நான் இம்மாதிரி உரியடி உற்சவங்களை நேரில் பார்த்திருக்கிறேன். அரைகுறையாக ஏதோ இஞ்சினீயரிங் படித்துவிட்டு, பெரிய பன்னாட்டு நிறுவனத்தில் சேர்ந்து குப்பைகொட்டி மாதச் சம்பளம் பெரிய அளவில் வாங்கினாலேயே,  ஏனோதானோவென்று சகலத்தைப் பற்றியும் எதிர்மறை கருத்துகள் சொல்லமுடிவது – ஒரு சுவாரசியமான விஷயம்தான்.

2001 டிஸெம்பர் இரண்டாம் வாரத்தில் என நினைவு. இந்தப் பையனிடமிருந்து ‘அவசர’ மின்னஞ்சல். விஷயம்: புணேயில் இருக்கும் கொள்ளுத்தாத்தா கூப்பிடுகிறார் உன்னையும், க்றிஸ்மஸ் விடுமுறையின்போது அவசியம் வரவேண்டும், இது முக்கியம். அவர் அவருடைய சில நண்பர்களையும், சொந்தக்காரர்களையும் பிரத்யேகமாக அழைத்திருக்கிறார். எதற்கு என்று தெரியவில்லை.

என்ன, அவருக்கு உடம்பு சரியில்லையா எனக் கேட்டதற்கு அவன் பதில்: Old man is going strong. It must be something else.

நான் செல்லவில்லை. காரணம்: கூச்சம். அவருடைய வாழையடிவாழையாக வளர்ந்திருந்த சொந்தக்காரர்களின் நடுவில், பல நாள் நண்பர்களுக்கிடையில் எனக்கென்னவேலை. பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என நினைத்தேன்.

… பெரியவரைப் பார்க்க, அவரது அழைப்பை ஏற்று  சுமார் 50 உறவினர்களும் நண்பர்களும் வந்திருக்கின்றனர். 26 டிஸெம்பர் காலையில் அவர் எல்லோரையும் பார்த்துப் பேசி, சிரித்துக்கொண்டே,  ‘உங்கள் அனைவரையும் ஒருசேரப் பார்த்தது நிறைவாக இருக்கிறது’ என்று சொல்லிவிட்டு அனைவரையும் அவசியம் காலைச் சிற்றுண்டி சாப்பிடச் சொல்லி, பின்னர் அவருடைய அறைக்கு வருமாறு பணித்திருக்கிறார்.

சரியென்று எல்லோரும் சாப்பிட்டுவிட்டு அவரது அறைக்குச் சென்றால், தரையில் அவர் நிர்மலமாகப் படுத்துக் கிடக்கிறார். பக்கத்தில், நேர்த்தியாக உடைக்கப் பட்ட கங்கைச் சொம்பு, அவரது முகம் சிரித்தபடிக்கு இருந்திருக்கிறது. அவர் கட்டில் மேல், யாருக்கு என்னென்ன புத்தகங்கள் கொடுக்கப் படவேண்டும் என்கிற ஜாபிதாவும், சுத்தமாக மடித்து வைக்கப்பட்ட அவருடைய துணிகளை/உடைகளை எப்படி உபயோகிக்கலாம் என்றும் சிந்தனைகள். மேஜையில், அவர் எழுதி வைத்திருந்த விவரமான கோரிக்கைகள். அதில் ஒன்று: அவர் உடலை தகனம் செய்து ஒரு நீத்தார் கடனையும் செய்யாமல், சாம்பலை, அவர் வயல்காடுகளில் தெளிக்கச் சொல்லி. From Ashes to ashes – dust to dust  என்பதுதான் நினைவுக்கு வருகிறது.

யாரையும் ஜோதிடராக நிர்ப்பந்திக்கவில்லை அவர். அவருடைய குடும்பப் பிதுரார்ஜித சொத்தான வயல்காட்டை – அவருக்கு மிகவும் செல்லமாக இருந்த ஒரு ஹரிஜன் குடும்பத்துக்குத் தானமாகக் கொடுக்கப் படவேண்டும் எனவும் இன்னொரு ஷரத்து. அவர் வம்சாவளியினர், அவர் முடிவை ஏற்று அப்படியே செய்தனர். ஒருவர் கூடத் தகராறு செய்யவில்லை. அப்போதைய மதிப்பில் அந்த நிலப் பரப்பு சுமார் ரூ3 கோடி இருந்திருக்கவேண்டும்.

அவருடைய எழுத்துகள் எல்லாம் அவர் பேரர்களிடம் ட்ரங்க் பெட்டிகளில் இருக்கின்றன எனப் பேசிக்கொண்டிருந்தார்கள். அவை அச்சடிக்கப்படுமா என்று தெரியவில்லை. 20000த்திச் சொச்சம் முழுத்தாள்களில் இரு பக்கங்களிலும் அவர் எழுதியிருக்கிறார் எனச் சொன்னார்கள்.  இவை இன்னமும் இருக்கின்றனவா, அல்லது கரையான்கள் அரித்துவிட்டிருக்குமா எனவும் தெரியவில்லை.

அந்த இஸ்ரோ பொறியியலாளப் பையன், ஒடிஷா காட்டுப்புர ஸாத்கோஸியா பள்ளத்தாக்குப் பக்கத்தில் ஒரு சிறு பள்ளியில் ஆசிரியனாகப் போய்விட்டான் எனக் கேள்விப்பட்டேன்.

-0-0-0-0-0-0-0-

… ஹ்ம்ம்… எனக்குச் சடங்குகளில், பெரியவர்களை மரியாதை நிமித்தம் போய்ப் பார்ப்பதில் அவ்வளவு நம்பிக்கை கிடையாது. எனக்குப் பிடித்தவர்கள் என்ற காரணத்தாலேயே தொடர்ந்து தொந்திரவு செய்து கழுத்தறுக்க முடியாது. ஆனாலும், நான் போயிருக்கவேண்டும். அவர் தாராளமாக 120 வயது வரை இருப்பார் என எண்ணிக் கொண்டிருந்துவிட்டேன். முட்டாள். திரும்பிப் பார்ப்பதற்குள் அவர் போய்ச் சேர்ந்து 14 வருடங்கள் ஆகிவிட்டன!

… … பெரியவர்கள் எல்லோரும் ஒருவர்பின் ஒருவராகப் போய்ச் சேர்ந்துகொண்டிருக்கிறார்கள். பெரிய மனிதர்களின் யுகம்  முடிந்து கொண்டிருக்கிறதோ? ஆகக் கசண்டுகள்தாம் மிஞ்சுவோமோ? பார்க்கலாம்.

பெரியவர் பலமுறை சொன்னதுபோல – நமக்கு (முக்கியமாக எனக்கு) எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கை வேண்டும். நாம் முற்றிலுமாக அன்பும் கருணையுமாகவேண்டும். வாழ்க்கையில் மிச்சம் எல்லாம் மேலதிக விவரணைகள் / அடுக்குகள் மட்டுமே!

Life, some times I berate thee! But, mostly I would love to celebrate thee! Really.

-0-0-0-0-0-

6 Responses to “சித்பவன்காரர், காந்தி, கோட்ஸே, ஜோதிடம் – சில குறிப்புகள் (2/2)”

  1. க்ருஷ்ணகுமார் Says:

    அன்பின் ராம்

    \\ எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கை வேண்டும். \\

    ம்………I could not resist but remembering the famous 80s song ……….. யார் எழுதியது நினைவிலில்லை.

    मन मे है विश्वास पूरा है विश्वास
    हम होंगे काम्याब एक दिन

    Understand that you are in a nostalgic and reflective mood.

    சிட்டத்தில் நூல் நூற்பது என்று கேட்டவுடன் எங்கள் க்ராமத்தில் பெரியவர்கள் *தக்கிளி*யில் நூல் நூற்றதைப் பார்த்தது நினைவுக்கு வருகிறது. சிறு வயதில் சோடா புட்டியின் மூடியில் தக்கிளி செய்து நூல் நூற்றது நினைவுக்கு வருகிறது.

    ஆனால் பேனா முதல் மசி வரை பேப்பர் வரை ஒரு மனுஷர் தன் கையாலேயே செய்திருக்க முடியும் என்று நினைக்கக் கூட ஆச்சர்யமாக இருக்கிறது.

    அவருடைய அந்திம காலம். யத்ருச்சையாகத் தோன்றினாலும் பீஷ்மாசார்யார் போன்று ஸ்வச்சந்த ம்ருத்யுவோ என்று எண்ண வைக்கிறது.

    ம்………..நாயர் சார் பற்றியும் சமயம் கிடைக்கும் போது எழுதவும்.

  2. சரவணன் Says:

    ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்? ஒழுங்காய்ப்பாடுபடு வயல்காட்டில் என்று எம்.ஜி.ஆர். பாடியபடி வாழ்ந்தவரை சரி. அதற்காக, பென்சில் பேனாவையெல்லாம் தானே செய்துகொள்வது முற்றிலும் நேர விரயம் மட்டுமே. அதைப் பின்பற்றத்தக்க நடைமுறையாகக் கொள்ள முடியாது. அதேபோல நாட்டுக்குத் தேவைப்படுபவர்கள் ஜோதிடர்கள் அல்ல, விஞ்ஞானிகளும், ஆசிரியர்களுமே. மக்கள் வரிப் பணத்தில் ஆராய்ச்சிப்படிப்பு வரை படித்துவிட்டு, ஜோதிடம்தான் பார்க்கப் போகிறேன் என்று சொல்வதைப் பாராட்ட முடியாது. முதலிலேயே ஜோதிடக் கல்வி கற்கப் போயிருக்கலாமே. இயற்பியல், சமஸ்கிருதக் கல்லூரிகளில் உண்மையாலேயே அந்தத் துறைகளில் தொடர்ச்சியாக ஈடுபடும் நோக்கம் உள்ள யாருக்காவது அந்த இடங்கள் பயன்பட்டிருக்கும். ஊர் ஊராகச் சென்று இந்தியாவைத் தெரிந்துகொண்டது நல்ல விஷயம்தான்; ஆனால் அவர் என்ன தெரிந்துகொண்டார் என்று ஏதாவது புத்தகம் வெளியிடப்படாதவரை நாட்டுக்கோ, சமுதாயத்துக்கோ எதுவும் பயன் இல்லையே. கூட்டிக் கழ்த்துப் பார்த்தால் நாட்டில் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகளில் இவரும் ஒருவர், ஹாபியாக ஜோதிடத்தை வைத்திருந்தவர் என்ற சித்திரத்தையே கொடுத்திருக்கிறீர்கள். இதற்குப் பதில் அந்த 4 மணி நேரம் அவர் என்னதான் பேசினார் என்று எழுதியிருக்கலாம்.


    • சரவணன் – அவசரப்படாதீர்கள்.

      1. அவர் – பல ஸம்ஸ்க்ருத/இயற்பியல் ஆராய்ச்சி மாணவர்களை சுமார் 85 வயது வரை ‘கைட்’ செய்துகொண்டு இருந்தார். ( சுமார் 15 வருடங்கள்முன் நான் நியூட்ரினோ குறித்து எழுதிய ஒரு ‘பொழுதுபோக்கு அறிவியல்’ ஹேஷ்யக் கட்டுரையைக் கூட, மிகக் கவனமாகப் படித்து, திருத்தங்கள் பல செய்தார்)

      2. அவர் 45 வயதில் வேலையிலிருந்து ராஜினாமா செய்தார். அவரால் வளர்க்கப்பட்ட அவருடைய உதவியாளப் பேராசிரியர் அந்த வேலையை அடைந்தார்.

      3. அவர் தன் தந்தையிடம் கற்றுக்கொண்டது தன் 18 வயது வரைதான். பின்னர் மறுபடியும் தந்தைசொல் கேட்டுச் செய்ய ஆரம்பித்தது சுமார் 45 வயதிலிருந்து. அவர் எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஜோதிஷக் கட்டுக்குப் பின்னால் செல்லவில்லை.

      நான் சரியாக எழுதவில்லை என நினைக்கிறேன். You cannot condemn him citing random and usual reasons, sorry.

      பல விஷயங்கள் நமக்குத் தெரியாமலேயே அமிழ்ந்து போகின்றன. நம் முன் முடிவுகள் அதற்குத் துணையும் போகின்றன. வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை.


  3. ஆச்சரியமான சாவு. அற்புதமான மனிதர். இவரை அறிய நீங்கள் கொடுத்து வைத்திருக்கிறீர்கள்.உங்களால் எங்களுக்கும் கிடைத்தது.

    என் அம்மா கைராட்டையில் நூல் நூற்றுச் சிட்டம் போட்டுக் காதிக் கடையில் கொடுத்து அதில் வரும் வேஷ்டிகளையே அப்பா கட்டிக் கொண்டிருந்தார். நானும் சிறு வயதில் கதர்ப்பாவாடை கட்டிக் கொண்டிருக்கிறேன். ஆனால் அறுபதுகளின் பின்னர் எல்லாம் மாறிவிட்டன. :)கைராட்டையை விலைக்குக் கொடுத்தபோது அம்மா அழுதது இன்னமும் நினைவில் இருக்கிறது. :(

  4. சரவணன் Says:

    Let me guess… இந்தப் பெரியவர் நாதுராம் கோட்ஸேயின் நெருங்கிய உறவினர்.. அவரது சித்தப்பா? பெரியப்பா? மாமா?


  5. […] ஸானந்த்ஜி (1, 2, 3), சித்பவன்காரர் (1, 2), ரவீந்த்ரஷர்மா ‘குருஜி‘ போல […]


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s