சித்பவன்காரர், காந்தி, கோட்ஸே, ஜோதிடம் – சில குறிப்புகள் (1/2)

February 23, 2015

அண்மையில், ஒரு பின்னூட்டத்தில் இப்படி எழுதியிருந்தேன்.

சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்னால், ஒரு முறை ஸ்ரீ தரம்பால் அவர்களுடன் அளவளாவிக் கொண்டிருந்தபோது, அவருடன் — கம்பி மாதிரி ஒல்லியாகவும், முகமெல்லாம் கருணையும், பாண்டித்தியமும் ஒழுகும் சித்பவன்காரர் ஒருவரும் (90+) இருந்தார். பார்த்த மாத்திரத்திலேயே மகாமகோ மேதைகள் எனச் சிலசமயம், நம்மால் சிலரை உணர்ந்துகொள்ள முடியுமல்லவா? அவர் அப்படித்தான்.கூட இருந்த ஆஸாதி பசாவ் ஆந்தோலன்காரரான (=’சுதந்திரத்தைக் காப்பாற்று’ இயக்கம்) ராஜீவ் தீக்ஷித்  போன்றவர்கள் ஸ்ரீ தரம்பால் அவர்களை என்னென்னமோ கேட்டுக்கொண்டிருந்தார்கள். சுவாரசியமான விவாதங்கள். காரத்தன்மை மிக்கவையும் இளமைத் துடிப்பால் விசிறப்பட்டவையுமான பல பார்வைகள், கருத்துகள் முன்வைக்கப்பட்டன. சுமார் 11 மணிக்கு ஏறக்குறைய எல்லோரும் கிளம்பிப் போனபோது – நாங்கள் மூவர் மட்டுமே இருந்தோம்.

மறுபடியும் ‘ஹிந்த் ஸ்வராஜ்’ பற்றிப் பேச்சு கிளம்பியது. அதுவரை உன்னிப்பாக உரையாடல்களைக் கவனித்தாலும் ஒன்றுமே பேசாத அந்த பெரியமனிதர் – நடுக்கமற்ற, தெளிவான குரலில் சுமார் 4 மணி நேரம் போல – காலை 3 மணி வரை, தொடர்ந்து பல விஷயங்களைப் பற்றிப் பேசினார். நான் கேட்ட சில அதிகப் பிரசங்கித்தனமான கேள்விகளுக்கும் பதில் அளித்தார். ‘ஆஹா’ தருணங்கள். இந்தியாவைப் பற்றியும் பாரதத்தைப் பற்றியும் இன்னும் பல செறிவான பார்வைகள் கிடைத்தன. நான் கொடுத்து வைத்தவன்.

அப்போது அவர் உபயோகித்த பல நுணுக்கமான பதங்களில் ஒன்று – सुकृति, நான் உபயோகப் படுத்தியுள்ள அர்த்தத்தில்.

நான் இம்மாதிரி அர்த்தத்தில் ஸுக்ரிதியைக் கேள்விப்பட்டதில்லையே என்று சொன்னதற்கு, அவருடைய பதில் – ஸம்ஸ்க்ருதத்தில் ஒரு டிக்ஷனரி மூலமாக மட்டுமே பல விஷயங்களை அணுகமுடியாது அல்லவா? ஸம்ஸ்க்ருதத்தில் – பலவகைகளில், பேச்சுவழக்குகளில், தொன்மங்களில் இந்த குறியீட்டு விரிவாக்கல் (~symbol overloading) இருக்கிறது என்றார். காளிதாஸனிடமிருந்து ஒரு மேற்கோள் கொடுத்தார் என மங்கலாக நினைவு.

ஆகவேதான் – நான் ‘பாரதத்தின் மைய நீரோட்டங்களான அணுகுமுறைகளில் ஒன்று – ஸுக்ரிதி: இதன் பலவிதமான அர்த்தங்களில் சில =’ என எழுதினேன்.

ப்ரூவர்’ஸ் டிக்ஷனரி போல ஒன்று ஸம்ஸ்க்ருதத்திற்கு இருந்தால், எவ்வளவு நன்றாக இருக்கும்?

ஏன், நம் தமிழுக்குக் இப்படிப்பட்ட ஒரு புத்தகம் இருந்தால் நன்றாக இருக்கும்தானே?கூட

குறிப்பு: இந்த சித்பவன்காரரைப் பற்றிப் பின்னொரு சமயம் எழுதுகிறேன். (3 ஃபெப்ருவரி, 2015)

-0-0-0-0-0-

சரி. பலவிதமான சிந்தனைகளில் அலைக்கழிக்கப் பட்டு, இன்னமும் முழித்துக் கொண்டிருக்கிறேன்; பொதுவாக இரவு ஒன்பது மணிக்கெல்லாம் தூங்கியே போய்விடுவேன். இன்று, இந்த அலறும் நினைவுகளுக்கு நேரமிருக்கிறது. ஆகவே, இவரைப் பற்றிய சில குறிப்புகளை தூசி தட்டி எழுதுகிறேன்.

… சித்பவன் ஜாதியினருக்கு, மற்றெந்த ஜாதியினர் போலவே, வெகு சுவாரசியமான ‘உருவாக்கல் தொன்மங்கள்’ உண்டு. இஸ்ரேலில், க்ரீஸில், வங்காளத்தில் இருந்து இவர்கள் புலம் பெயர்ந்து வந்தார்கள் என்றெல்லாம் வாய்மொழி வரலாறுகள். இவர்களில் ஒருசிலர் நீல நிறக் கண்ணர்களாக இருந்ததை வைத்து இவர்கள் காகஸஸ் பகுதியிருந்து வந்தார்கள் என்றெல்லாம் கூடக் கதைகள்; நம் தமிழ்ச் சூழலில் மாற்று மாற்றாத உருவாக்கப் புராணங்கள், இவற்றிடம் பிச்சை வாங்கவேண்டும்! அவ்வளவு சிக்கலானவை அவை!

இவர்களைப் படுகேவலமாகச் சித்திரிக்கும் பல புரளிகளும் இருக்கின்றன; இவற்றில் சில, எனக்கு, யூதர்களைக் கேவலப்படுத்த, ஃப்ரான்ஸிலும் ஜெர்மனியிலும் உருவாக்கப்பட்ட கயமைக் கட்டுக்கதைகளை நினைவூட்டுபவை.

எது எப்படியோ, மராத்திப் பிராம்மணர்களின் பலப்பல  ஜாதிப் பகுப்புகளுக்குள் மிகப்பின்பாக ‘வந்து சேர்ந்தவர்கள்’ எனப் பொதுவாகக் கருதப் படும் இந்த கொங்கணப் பிரதேசக் குலக்குழு, அதற்காக வரிசையடுக்கில் கீழே வைக்கப்பட்ட மக்கள்திரள்; தொடர்ந்த உழைப்பால், கொஞ்சம்கொஞ்சமாக மேலெழும்பி – ஆசிரியர், அமைச்சர், ஜோதிடர் தொழில்களில் மிகவாக, குறைந்தபட்சம் 700 வருடங்களாகவாவது மதிக்கப் பட்டதொன்று.

இந்த குலக்குழுவிலிருந்து பல முக்கியமான பாரதவாசிகள் உருவாகியிருக்கின்றனர். பாபுஜியின் குருவான மகாமகோ கோபாலக்ருஷ்ண கோகலே அவர்களும் இதில் அடக்கம். வினோபா பாவே, மஹாதேவ் கோவிந்த் ரானடே, விநாயக்தாமோதர் ஸாவர்க்கர், லோகமான்ய திலக். மஹரிஷி கார்வே போன்றவர்களும் இக்குழுவினரே.  யோசித்தால் இன்னும் பலப்பல பெயர்கள் – நினைவுக்கு வரலாம்.

இந்த சித்பவன் காரர் – ஒரு கோக்டே என்று மட்டும் சொல்லி நிறுத்திவிடுகிறேன். அவர் முழுப் பெயரைச் சொல்லவில்லை. ஏனெனில்…

நாதுராம் கோட்ஸே, 1948ல் பாபுஜியைச் சுட்டுக்கொன்ற பின்னர், சகோதர சித்பவன்காரர்களுக்கு மகாமகோ வெட்கம், குற்றவுணர்ச்சி, ரௌத்திரம். இப்படி ஒரு அவப்பெயர் உண்டாகி விட்டதே, ஒரு மஹானைக் கொன்ற பழி நம்மைச் சும்மா விடுமா – என்றெல்லாம் வருத்தங்கள்.

முதல் விளைவாக – கோட்ஸே எனும் உபஜாதிப்பெயருடைய அனைவரையும் – மற்ற சித்பவன்காரர்கள் கோபத்துடன் பார்த்தனர், பழி சுமத்தினர். இதைத் தவிர மற்ற மராத்தி சமூகமே அவர்களை வெறுப்புடன் பார்த்தது. பல வருடங்களுக்கு நேரடியான/கமுக்கமான பகிஷ்கரிப்பு நீண்டது, பல அவமானங்களும் நடந்தேறின.

இந்த ‘காந்தியில் கொலைக்காக பழிபோடும்’ மனப்பான்மையானது,  பலகாலம் பொதுவான பிராம்மண எதிர்ப்பாகவும் மாறி, மராத்திய சமூகத்தை அலைக்கழித்துக் கொண்டிருந்தது.

இந்த வெறுப்பில் இருந்து தப்பிக்க,  ‘குலக் குழு’ சார்ந்த  குற்றவுணர்ச்சியினாலும், சுயவெறுப்பினாலும் வாடியிருந்த பல கூட்டுக் குடும்பங்கள், தங்கள் உபஜாதிப் பெயரான கடைசிப்பெயரை – கோட்ஸே என்பதிலிருந்து கோக்டே எனவும் இன்னமும் பலவாறாகவும் மாற்றிக் கொண்டன. இருந்தாலும், மற்ற மராத்தியர்களுக்குத் தெரியாவிட்டாலும், சக சித்பவன்காரர்களிடமிருந்து இப்படி மாற்றுப்பெயராளிகளுக்கு விடுதலை கிடைக்கவில்லை… ஆகவே, அவப்பெயர் மட்டும் மறைய பலபத்து வருடங்களாகி விட்டன.

என்னுடைய சித்பவன்காரரின் தகப்பனார் ஒரு மதிக்கத் தக்க, அமைதியான, திறம்வாய்ந்த ஜோதிடர். ஸ்வதேஷி அபிமானி. அப்பழுக்கற்றவர். படு படிப்பாளி. முன்னோடி விவசாயி. காந்தி பக்தர். ‘சுதந்திர தேவி, நின்னை அனுதினல் தொழுதிடல் மறக்கிலேனே‘ ஆள். அவருக்கு 1948ல் வயது 98. அவ்வயதிலும், திடகாத்திரமாகவே இருந்திருக்கிறார்.

… ஆனால், பாபுஜி இறந்த நாளிலிருந்து –  ‘காந்தியே போய்விட்டார், அதுவும் நம்மாள் ஒருவனே கொன்றுவிட்டான்’ எனச் சுயதண்டனை கொடுத்துக்கொண்டு  உபவாசம் இருந்து, அமைதியாக – எட்டாம் நாள் போய்ச் சேர்ந்தார். தான் செய்த தவற்றுக்கு(!), தனக்கு விமோசனமே கிடைக்கக்கூடாது என்று – அவருக்கு ஒரு ஈமக்கிரியையும் செய்ய விடவில்லை. வெறும் நதியோர எரிப்பும், சாம்பலைப் பக்கத்து வயல்களில் (அவர்களுடையது) கடாசலும் நடந்திருக்கிறது.

என் தகப்பனார் சொல்லிவந்தது போல – கேல் கதம்.

இதைக் கேட்கும்போது/நினைக்கும்போது, இப்படியும் நம் நாட்டில் ஆட்கள் இருந்திருக்கிறார்கள் என்பதை உணரும்போது என்னவோ செய்கிறது.
0-0-0-0-0-0-0-0-

அப்போது என் சித்பவன்காரருக்கு வயது 45போல. பின்னர், அவர் குடும்பமும் ஒரு கோக்டே குடும்பமானது.

என் சித்பவன்காரர் ஒரு மகாமகோ இயற்பியல் ஆராய்ச்சியாளராக வந்திருக்கவேண்டியவர். அறிவியலின் அடிப்படைகளைப் பற்றிய அவ்வளவு புரிதல்களும் அடாவடித்தனம் இல்லாத ஞானமும் அவரிடம் ஒருங்கே இருந்தன. ரிச்சர்ட் ஃபெய்ன்மன் போன்ற சூட்டிகைத்தனமும், மூளையும் மிக்கவர். இத்தனைக்கும் இவரை நான் முதலில் பார்த்தபோது வயது 90+! இருந்தாலும் தொடர்ந்த படிப்பும் ஜொலிப்பும் – தெளிவான சிந்தனையும் இவரிடம் அபரிமிதமாக இருந்தன. இவர், ஒரு அப்பழுக்கற்ற காந்தியரும் கூட!

… ஆனால், ‘வடக்கிருந்து கொண்டிருந்த’ தன் தகப்பனாருக்கு அவர் செய்துகொடுத்த சத்தியத்தின் படி – அவரும் ஒரு ஜோதிடர் ஆனார் – அடிப்படையில் இயற்பியலிலும், ஸம்ஸ்க்ருதத்திலும் பிஹெச்டி செய்திருந்தவராக இருந்தாலும்! (பரவலான ஆழ்ந்த படிப்பும், தெள்ளிய நீற்றொழுக்கு போன்ற பேச்சும், பணிவும், அன்பும் – நான் எப்போதுதான் இவருடைய ஆகிருதியில் 10%ஆவது ஆவேன் என ஏங்கவைத்தவை, வைப்பவை)

தன் தகப்பனார் காலடியில் உட்கார்ந்து, குடும்பத் தொழில்களில் ஒன்றான ஜோதிஷத்தைக் கற்றுக்கொண்டருந்த அவருக்கு, இதற்குத் தேவையான பின்புலமும் இருந்திருக்கிறது… இருந்தாலும் அவர் ஒரு தொழில்முறையாக பிரபலம் ஆகாதவனாகத்  தன்னைப் பார்த்துக்கொண்டார். மிகவும் நெருங்கியவர்களுக்கு மட்டும் தான், அல்லது யாராவது பரிந்துரைத்து வந்தால்தான் அவர் ஜோதிடம் பார்ப்பார். அதற்கென்று ஒரு பைசா வாங்கிக் கொண்டதில்லை. ஏனெனில் அவர் பார்வையில் – அவர் செய்தது ‘ஆசார்யத் தொழில்’, அவர் பாரம்பரியத்தின் கொடை – அதற்கு, பர்த்திக்குப் பணம் பெறுவது பாவம்.

ஆனால் அவர் குடும்பத் தொழில் – விவசாயம்தான், நான்கு ஏக்கரா நிலம் – நன்செய், ஆற்று நீர்ப்பாசனம்,.. மண் உழப்படும்போது ஏர்க்கலப்பையை ஒரு பக்கம் எருமை இழுக்கும் – இன்னொரு பக்கம் அவர். ஏழ்மைதான். எப்படியோ – அவர் குழந்தைகளும் அதற்கடுத்த தலைமுறையினரும் வளர்ந்து இப்போது சந்தோஷமாக இருக்கிறார்கள்.

இவரை நான் வார்தாவில் முதலில் பார்த்தேன். அவர் காந்தியைப் பற்றி, ‘ஹிந்த் ஸ்வராஜ்’ பற்றி, பாரதீயம் பற்றி, ஹிந்து மதங்களின் ஆதாரசுருதியான சகிப்புத் தன்மை பற்றி, ஜாதியடுக்கு முறைகள் பற்றி, அவற்றில் உள்ள கசடுகளை அகற்றிப் புத்துருவாக்கம் செய்வதைப் பற்றி, தேசத்தைக் கட்டியெழுப்புதலில் உடலுழைப்பின் பங்கைப் பற்றி, காந்தியின் அறிவியல்/பொறியியல்  முனைவுகள் பற்றி (எடுத்துக் காட்டாக, காந்தி சொல்லி, டீஸன் எஞ்சின் வடிவமைப்பைக் கொஞ்சம் மாற்றியமைத்த கொல்கொத்தா பொறியியலாளர்கள்) பல, ஆவணப் படுத்தப் படாத விஷயங்கள் பலவற்றைப் பற்றி வெகு விஸ்தாரமாகப் பேசிக்கொண்டிருந்தார்.

…இப்படித்தான் ஆரம்பித்தது அவருடைய அறிமுகம்; பின்னர் அது நட்பாக மாறி… அவருடன் ஓரளவு நெருங்கிப் பழக வாய்ப்பு கிடைத்தது. இவருடைய கொள்ளுப்பேரன் ஒருவன் மூலமாகவும் அவருடன் கொஞ்சம் தொடர்பில் இருந்தேன்.

… கூடப்பழக நேர்ந்த ஐந்தாறு வருடங்களில் பல அனுபவங்கள். அவற்றில் சிலவற்றை, சில தகவல்களைக் கொடுக்கலாமென எண்ணம்.

-0-0-0-0-0-0-0-

அடுத்த பதிவிலும், இக்கதை தொடரும்…

4 Responses to “சித்பவன்காரர், காந்தி, கோட்ஸே, ஜோதிடம் – சில குறிப்புகள் (1/2)”

  1. Venkatachalam Says:

    ஆவலோடு காத்திருக்கிறேன். அடுத்த வாரம் எப்போது வருமென்று.


  2. அருமையான அனுபவப் பகிர்வாக உள்ளது. அவர் பெயரைச் சொன்னால் புரிந்து கொள்ள முடியும் என்று தோன்றவில்லை.

  3. க்ருஷ்ணகுமார் Says:

    இந்த வ்யாசத்தில் **கேல் கதம்** பற்றியும் நினைவுறுத்தியுள்ளீர்கள்.

    ம்………… மனது கனக்கிறது. அந்த நாயர் சார் பத்தியும் நீங்கள் எழுதுவதாகச் சொல்லியிருந்தீர்கள். சமயம் கிடைக்கும் போது எழுதவும்.

    என்னதான் உடலுழைப்பு செய்தாலும் வயசான காலத்துல தூக்கத்தைக் கெடுத்துக்கொண்டு எழுதுவது……….thats bad.

    அச்சா!! கொங்கணி ப்ராம்மணர்களா சித்பவன் ப்ராம்மணர்கள்.

    இவரைப்பற்றி ஒரு ஆதர்சமான சித்திரம் நீங்கள் கொடுப்பது. ஆதர்சம் என்றவுடனேயே அமரர் ஸ்ரீ ராஜீவ் தீக்ஷித் அவர்களைப் பற்றியும் உடனே உங்களுக்கு நினைவுக்கு வந்துள்ளது. பாபா ராம்தேவ் அவர்களது ஷிபிர்களில் இவர் ஆற்றியுள்ள ப்ரசங்கங்கள் மிகவும் ப்ரஸித்தி பெற்றவை.

    சித்பவன் காரர் பற்றிய தங்கள் ச்வாரஸ்யமான பகிர்வைத் தொடர்கிறேன்.


  4. […] ஸானந்த்ஜி (1, 2, 3), சித்பவன்காரர் (1, 2), ரவீந்த்ரஷர்மா ‘குருஜி‘ போல […]


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: