முடிவிலா உரையாடல்: என் பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ஒரு கடிதம் (2/n)
February 12, 2015
[தொடர்ச்சி…]
நானும், ஒரு பத்து நிமிடம் பார்த்துவிட்டு, என்ன சொல்லியும் குழப்பம் அடங்காததால், கூட்டம் முடிந்து விட்டது என்று சொல்லி, அறையை விட்டு அலுப்புடன் வெளியேறி விட்டேன். ஏறத்தாழ இம்மாதிரி, ஒருமுறையல்ல – இருமுறை நடந்தது, உங்களுக்கு நினைவிருக்கிறதா? முதலில் எனக்கு இவற்றையெல்லாம் பார்த்து-கேட்டு மிகமிகக் கோபம் வந்தாலும் உங்கள் ஒருவரையும் துளிக்கூட அவமரியாதையாகப் பேசவில்லை என்பதையும் நீங்கள் நினைவில் கொள்ளவேண்டும்.
உண்மை இப்படி இருக்கையில், உங்களில் சிலர், இம்மாதிரி கூட்டங்களை நான் ஏன் கூட்டுவதில்லை என முறையீடு செய்வது திகைப்பாகவே இருக்கிறது. வெட்டிக் கேளிக்கைகளுக்குத் தான் திரைப்படங்கள் இருக்கின்றனவே!
பலவருடங்களாக, தேவைமெனக்கெட்டு நம் சமூகத்துடன் ஊடாடி வரும் எனக்கு, நம் தமிழ்ச் சமூகத்தை நினைத்து எப்போதுமே ஆச்சரியம் கலந்த வருத்தம்தான். வெறுப்பு இல்லை – ஏனெனில் எனது குவியம் என்பது பெரும்பாலும் உங்கள் குழந்தைகள் மீதுதான். மேலும் நாமெல்லாரும் காலாகாலத்தில் போய்ச் சேரவேண்டியவர்கள் – ஆனால், நம் குழந்தைகள் அப்படியல்லர்; அவர்களுடைய எதிர்காலம் அவர்களுக்காக ஒளிர்ந்துகொண்டிருக்கிறது.
உண்மையில், நீங்கள் மட்டும் என்றல்ல, பொதுவாகவே பெரும்பாலான பெற்றோர்கள் என்னைச் சலிப்படையவே வைக்கிறார்கள் – இவர்களுடைய சராசரித்தன ஜோதியில், நானும் அடைக்கலம்தேடி ஐக்கியமானவன்தான் என்கிற ரீதியில் எனக்கு இப்படிச் சொல்ல உரிமை உண்டு.
சரி. இந்தச் சூழலில், இனிமேலும் இந்த சடங்கு, சாங்க்கியம் என்று பொத்தாம் பொதுவாக என் நேரத்தை, சக்தியை வீணடிக்கும் பெற்றோர்-ஆசிரியர் கூட்டம் ஒன்றை ஈமக்கிரியைபோல நடத்த எனக்கு விருப்பமில்லை. மேலும், உங்களுக்கும் உங்கள் காலம் என்பது பொன்னானதுதான் என்று நான் கருதுவதால், இந்தக் கூட்டத்தை இயந்திரம்போல நடத்த நிச்சயம் எனக்கு இசைவில்லை. உங்களுக்கு என் நிலை குறித்து விருப்பமில்லையென்றால் நீங்கள் பள்ளித் தாளாளரிடம், அல்லது மற்ற தர்மகர்த்தாக்களிடம் தாராளமாகப் பேசிக் கொள்ளலாம். தமிழக கல்வித்துறை அதிகாரிகளுக்கு மொட்டைக் கடுதாசி கூட எழுதிப் போடலாம். ஒரு பிரச்சினையுமில்லை. நான் முன்னமே சொன்னது போல, நாம் இருவழிச் சாலையில் தான் பயணம் செய்து கொண்டிருக்கிறோம்.
ஆனால், நம்மிடையே உரையாடல் என்பதே துளிக்கூட நடக்காததினால், அவற்றைப் பற்றிய என் எண்ணங்களை மட்டுமே – அதுவும் நானும் குழந்தைகள் பெற்றவன், அவர்கள் எதிர்காலம் குறித்து மிகவும் கவலைப்படும் கரிசனமுள்ள ஒரு தந்தை என்கிற முறையில் மட்டுமே, ஒரு கோரிக்கை ஜாபிதாவாகக் கீழே கொடுத்திருக்கிறேன்.
தயவுசெய்து – நான் ஒரு சகலகலாவல்லவ மேட்டிமைத்தனத்துடன் வளையவருகிறேன் என்றோ, அறிவுரை சொல்கிறேன் என்றோ எண்ணி என்மீது கோபப்படாதீர்கள். நம் குழந்தைகளின் எதிர்காலம் அவர்களுக்கு மட்டுமல்ல, பெற்றோர்களாகிய நமக்குமேகூட ஒரு முக்கியமான விஷயம் என்பதை மட்டும் பின்புலத்தில் வைத்துக்கொள்ளுங்கள். மறுபடியும் மறுபடியும் சொல்கிறேன் – இவை என்னுடைய ஆத்மார்த்தமான கோரிக்கைகள் மட்டுமே.
இவற்றை, நீங்கள், உங்கள் பின்புலத்தில் சிந்தித்து ஏற்பவைகளை முடிந்தவரை ஏற்கலாம் – வேண்டாதவற்றை ஒதுக்கிக் கடாசலாம். உங்கள் செயல்பாடு, உங்கள் உரிமை. உங்கள் குழந்தைகளை எப்படி வளர்ப்பது என்பது சர்வநிச்சயமாக உங்கள் உரிமை.
அதே சமயம், உங்கள் குழந்தைகளின் வளமான எதிர்காலத்திற்காக (மட்டுமே) உங்கள் குழந்தைகளை ஓரளவு புரிந்துகொண்டிருப்பவன் என்கிற முறையில், நான் கீழ்கண்டவற்றைக் கொடுப்பது, சுட்டிக்காட்டுவது என் கடமை.
என்னுடைய பிள்ளைகளுக்காக, என்னால் இதனைக்கூடச் செய்யமுடியாதா என்ன?

மேலே காணக் கிடைப்பது, குழந்தைகளின் பெற்றோர்களுக்கு நான் காண்பிப்பதாக இருந்த பவர்பாய்ன்ட் படங்களின் முதல் ஸ்லைட். இதன் பிறபக்கங்களை, பவர்பாய்ன்ட் கோப்புகளை என்னால் மீட்டெடுக்க முடியவில்லை; அவையெல்லாம் பழைய ஹார்ட் டிஸ்க்களில் மீட்பனுக்காகக் காத்துக்கொண்டிருக்கின்றன. ஹார்ட் டிஸ்க்களைத் திறந்து, வளைந்திருக்கும்-சிதைந்திருக்கும் ப்லேட்டர் தகடுகளைப் பார்த்து விக்கித்து, அதனுள் புதைந்திருக்கும் ஹெட்களை லாகவமாக, கையுறைகள் போட்டுக்கொண்டு வெளியே எடுத்து, பின்னர் அவற்றை இன்னொரு திறந்த நிலை ஹார்ட் டிஸ்க் ட்ரைவுக்கு மாற்றி, ப்லேட்டர்களில் பொதிந்திருக்கும் பைனரித் துணுக்குகளை ஸெக்டர் ஸெக்டராக மீட்டு, மீளுருவாக்கம் செய்யவேண்டும்; இதற்கு எனக்குச் சில நாட்களாவது ஆகும். இம்மாதிரி செய்து பலவருடங்களாகி விட்டன.
இதன் பிடிஎஃப் கோப்பு இங்கே: presentation_parents_teaser
சரி. ஆலாபனை போதும். விஷயத்திற்கு வருகிறேன்.
0. குழந்தைகள் பள்ளியிலிருந்து கற்றுக் கொள்வதைவிட – தங்கள் பெற்றோர்களிடமிருந்துதான் பெரும்பாலான விஷயங்களை, மதிப்பீடுகளை, நேர்மையான வாழ்க்கைக்கான அடிப்படை விழுமியங்களைக் கற்றுக் கொள்கிறார்கள். அவர்கள் நேரடியாகக் கல்வி கற்றுக் கொள்வதற்கு அப்பாற்பட்டு, மிகப்பல முக்கியமான விஷயங்களை, வாழ்க்கை குறித்த தம் அணுகுமுறைகளை, அடிப்படை விழுமியங்களை, அறங்களைக் கற்றுக் கொள்வது – பெற்றோர்களிடமிருந்தே. பள்ளியும் என்னைப் போன்றவர்களும் என்னதான் செய்தாலும், உங்கள் குழந்தையின் எதிர்காலம், உங்கள் கையில் தான் இருக்கிறது. பல ஆண்டுகளாகப் பல பள்ளிகளில் செயல்பட்டுதான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறேன் – இதனால் தான் நான் உங்களுக்குக் கடிதம் எழுதுகிறேன் கூட.
ஆகவே நம் குழந்தைகளுக்காக, பள்ளிகள்+ஆசிரியர்கள்+அரசு எதுவுமே செய்யவில்லை/செய்வதில்லை ‘ஒண்ணுமே செய்யல’ என்ற விவாதமெல்லாம் சரியேயில்லை. அவற்றால்தான் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டதென்பதெல்லாம் பொய். குழந்தைகளை இவ்வுலகத்திற்குக் கொணர்ந்த, நம்போன்ற பெற்றோர்களிடம் தாம், குழந்தைகளை அழகாக வளர்த்தெடுக்கச் சகல சக்திகளும் இருக்கின்றன. நமக்குத் தான், நம்மிடம் தாம் எல்லா பொறுப்புகளும். நம்முடைய பெற்றோர் சார்ந்த கடமைகளை ஒழுங்காக நிறைவேற்றினால், குறைந்த பட்சம் 50%ஆவது அதனைச் செய்ய முடியுமானால், பின்னர் நம் உரிமைகளைப் பெற மற்றவர்களை, அமைப்புகளை உலுக்கலாம்.
இந்தப் பார்வைகளெல்லாம், வாதங்களெல்லாம் – நம் பள்ளி போன்ற கிராமப் புறப் பள்ளிகள்/பெற்றோர்கள் மட்டுமில்லாமல், நகரச் சூழல்களுக்கும் – நகர்சார்ந்த ‘பெரியபடிப்பு’ படித்தும், ‘கை நெறய சம்பளமும்’ வாங்கும் பெற்றோர்களுக்கும் பொருந்தும்.
மறுபடியும் சொல்கிறேன். பள்ளிகள், ஆசிரியர்கள் சர்வவல்லமை வாய்ந்தவர்கள் அல்லர். அவர்களுக்குள்ள, அமைப்புகளுக்குள்ள நிறைகுறைகளோடு, அவர்களை வந்தடையும் குழந்தைகளின் மனஆரோக்கியமும், விழுமியங்களின் தரமும், பின்புலமும் முக்கியம். ஆசிரியர்கள் மந்திரவாதிகள் அல்லர். களிமண்ணின் அடிப்படைத் தரம்தான், சட்டி எப்படி உருவாகிறது என்பதைத் தீர்மானிக்கும் – குயவன் எவ்வளவுதான் செய்நேர்த்தியோடு சட்டியைச் செய்தாலும்கூட. தரமற்ற களிமண்ணினால் செய்யப்பட்ட பச்சைச் சட்டி, சூளையில் வேகும்போது இளித்து விடும், விரிந்துவிடும்.
இன்னொரு விதமாக இதனைப் பார்த்தால், நம் குழந்தைகள் அனைவரும் வீரியமும் பராக்கிரமும் மிக்க விதைகள். அவைகள் தங்களுடைய வெகுமுக்கியமான அடிப்படைகளை வளர்த்திக்கொள்ள, தங்களைப் புஷ்டி செய்துகொள்ள நல்ல அடிமண் தேவை – அதாவது, அவைகளுக்கு நல்ல வீட்டுச் சூழ்நிலையும் கனிவான, அதேசமயம் கண்டிப்பான பெற்றோர்களும் தேவை.
பின்னர் அவை விதையிலை விட்டு வளர்ந்து காற்றையும் நீரையும் சூரியவெளிச்சத்தையும் உரங்களையும் தொடர்ந்து உண்ண, சுற்றுச் சூழலும் சமூகமும் பள்ளிகளும் ஆசிரியர்களும் உதவக்கூடுமானாலும் – அவ்விளம் செடிகளுக்கு, நல்ல செழிப்பான அடிமண் என்பது தொடர்ந்து அவசியமல்லவா? அடிமண் வறண்டுபோனால், எப்படித்தான் செடிகள் வளரும்? அவை வாடிவிடுமல்லவா? அடிமண் விஷமானால் செடிகள் கருகித்தானே போகும்?
நான் உங்கள் குழந்தைகளுக்கு அடிக்கடி சொல்லி போரடிப்பதைப் போல – ஒரு மாணவன்/மாணவி என்பவன்/ள் (ஹ்ம்ம்ம், இவர்கள் மட்டுமல்ல, நாம் எல்லோரும்தான்!) சில முக்கியமான பண்புகளின், குணங்களின் கலவையாக இருக்கவேண்டும்: அதாவது ராஜாளி, எறும்பு, ஒட்டகம், மயில் போன்றவைகளின் முக்கியமான கூறுகளின் கலவையாக இருக்கவேண்டும். ராஜாளி போல, ஒரு மாணவி விழிப்புடன் இருந்து, உன்னிப்புடன் கவனித்து, கற்கவேண்டிய முக்கியமான கருத்துகளைக் கொத்திச் செல்லவேண்டும்; அவள், சுறுசுறுப்பாக, சோம்பேறித்தனம் என்கிற ஊரிலேயே பிறக்காமல், எறும்பு போல உழைக்கவேண்டும்; பாலைவனத்து ஒட்டகத்தின் ஞாபகசக்தியையும், அதன் பலவிஷயங்களை ஒருங்கிணைத்து, சரியான பின்புலங்களில் நிகழ்வுகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப காரியங்களைச் செய்யும் தன்மையையும் அவள் பெறவேண்டும்; பின் அவள் வளர்ந்து, ஒரு சாதனையாளியாவதற்கு அப்பாற்பட்டு – சிறகுகளைப் படபடத்து, தோகை விரித்தாடும் அழகுமயிலைப் போல வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் கொண்டாடவும் தெரிந்து கொள்ளவேண்டும்.
இவையனைத்தையும் நம் குழந்தைகள் செய்ய முடியுமானால், இதற்கேற்ற ஆரோக்கியமான பின்புலத்தை நம்மால் தொடர்ந்து அளிக்க முடியுமானால், நான் சத்தான அடிமண்ணாக மாற முடியுமானால் – நம் பிள்ளைகளால் தொட முடியாத உயரங்களும் இருக்குமோ, சொல்லுங்கள்? நம் குழந்தைகள் வளர்ந்து ஆரோக்கியமாகவும், சந்தோஷமாகவும் வாழ்வதைப் பார்த்து மகிழ்வதை விட, பெற்றோர்களாகிய நமக்கு மேலதிக திருப்தி தரக்கூடியது எது, சொல்லுங்கள்? [பிற்சேர்க்கை: இந்த உவமானங்கள் என்னுடையவை அல்ல – மகாமகோ பேராசிரியரும், இந்திய வரைகலைகளின் முன்னோடி வரலாற்றாளருமான ஜொலிக்கும் ப்ரிஜிந்தர் நாத் கோஸ்வாமி அவர்கள், மறுமறுபடியும் சொல்லி வந்ததுதான்; நான் மிகமிக மதிக்கும் மனிதர்களில் ஒருவரான இவரைப் பற்றிப் பின்னொரு சமயம் எழுதவேண்டும். அண்மையில் ‘த ஹிந்து’ பத்திரிகையில் வெளிவந்த அவருடனான ஒரு உரையாடல் – இதிலும் இவர் இந்த மேற்கோளைச் சுட்டியிருக்கிறார்! இதனை அவசியம் படிக்கவும்.]
மேலும், கல்வி என்பது ஒரு ஒற்றைப்படைப் பார்வையில் “நல்லா படிச்சி, வேல கெடச்சி, கண்ணாலம் கட்டி, கொளந்த பெத்து” எனச் சுருக்கப்பட்டுப் புரிந்துகொள்ளப் படக்கூடாது என நினைக்கிறவன் நான். இவற்றைப் பற்றிப் பின்னர் பார்க்கலாம்.
அடுத்த பாகத்திலும் இக்கடிதம் தொடரும்…
தொடர்புள்ள பதிவுகள்:
- கழித்தல்கள் + கூட்டல்கள் = மேலும் கழித்தல்கள் 01/07/2014
- பள்ளி, பத்ரி சேஷாத்ரியின் கோபங்கள், ஆதங்கங்கள்: என் கருத்துகள் 07/06/2014
- பள்ளி: சென்ற கல்விவருடமுடிவுச் சிந்தனைகள், குறிப்புகள் 04/06/2014
- டீடலஸ், இகரஸ் – நான்கு குறிப்புகள் (=கொஞ்சம் தொன்மம் + கொஞ்சம் ஸானெட்+ கொஞ்சம் தவிப்பு) 15/10/2013
- ஹோமர்: இலியட், ஆடிஸ்ஸி – சில குறிப்புகள்12/10/2013
- ஹோமர்-ன் காவியங்கள்: இவற்றை, நான் (கொஞ்சமாவது) புரிந்து கொள்வதற்கு உதவிய புத்தகங்கள்13/10/2013
- குழந்தைகள் (மழை, (இலைகள் + பூக்கள் + விதை நெற்றுகள் + மண்நிலம்), கற்பனை) = டிஎன்ஏ இரட்டைச் சுருள் வடம்! 19/09/2013
- … அல்லா டீச்சருங்ளயும் நிக்கவச்சி சுட்ணும் சார்! 20/04/2013