முடிவிலா உரையாடல்: என் பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ஒரு கடிதம் (3/n)
February 13, 2015
[இதன் முந்தைய இரு பாகங்கள்…] [1] முடிவிலா உரையாடல்: என் பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ஒரு கடிதம் (1/n) 10/02/2015 [2] முடிவிலா உரையாடல்: என் பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ஒரு கடிதம் (2/n) 12/02/2015
…மேலும், கல்வி என்பது ஒரு ஒற்றைப்படைப் பார்வையில் “நல்லா படிச்சி, வேல கெடச்சி, கண்ணாலம் கட்டி, கொளந்த பெத்து” எனச் சுருக்கப்பட்டுப் புரிந்துகொள்ளப் படக்கூடாது என நினைக்கிறவன் நான். இவற்றைப் பற்றிப் பின்னர் பார்க்கலாம். [தொடர்ச்சி…]
1. பணம்: முதலில், நம் வாழ்வின் அடிப்படைத் தேவைகளின் ஒன்றான ‘பணம்’ என்பதைப் பற்றி, சிறிது தர்க்கரீதியாக, ஆழமாகப் பார்க்கலாம். ஏனெனில், இவ்விஷயத்தில் சமனநிலைக்கு வருவது நம் எல்லோருக்கும் முக்கியம்தான்.
உங்களுக்கு – தினந்தோறும் குடும்பத்தைப் பேணுவதும், தினசரி வாழ்க்கையை எதிர்கொள்வதுமே பிரச்சினைகளாக இருக்கலாம் என்பது எனக்கு ஓரளவுக்குப் புரிகிறது. ஆம் – நான் இக்கடிதத்தில், கீழே குறிப்பிட்டிருக்கும் பல விஷயங்களுக்கு, ஓரளவுக்குப் பணம் தேவைதான். ஆனால் அபரிமிதமான அளவுக்குத் தேவையல்ல – ஏனெனில், பெரும்பாலும் உங்கள் குழந்தைகள் பொறுத்த உங்கள் கரிசனத்தை, அன்பை, அரவணைப்பைக் காட்ட – உங்களுடைய நேரத்தை அவர்களுக்காகவும் ஒதுக்குவதே போதுமானது.
இருந்தாலும் இதை நான் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியிருக்கிறது. கீழ்கண்டவற்றை – உங்கள் வாழ்க்கையை நோக்கிய என் புரிதலின் மீது கட்டமைத்திருக்கிறேன் என்பதையும் – தவறுகள் இருப்பின், அவற்றைத் திருத்திக்கொள்ளத் தயாராகவே இருக்கிறேன் என்பதையும் உங்களுக்குக் தெரிவிக்கிறேன்.
மாதாந்திர வரவு:
தகப்பன் – நாளொன்றுக்கு ரூ 600 – 650 போல, இருபத்தைந்து நாட்களுக்கு வரக்கூடியது, ஆனால் வருவதென்பதல்ல – என் கணக்குப் படி: ரூ 15000/-
தாய் – நாளொன்றுக்கு ரூ 150 – 300 போல, இருபத்தைந்து நாட்களுக்கு – ஆக, என் கணக்குப் படி: ரூ 5000/- (இது நிச்சயம் வருகிறதுதான்!)
மாதாந்திர செலவு:
பெட்ரோல், வண்டி மேலாண்மை – ரூ 1500/-
விசேஷம், மொய் இத்யாதி செலவுகள் – ரூ 1000/-
மின்சாரம், கேபிள் டீவி, குடி நீர் – ரூ 650/-
செல்ஃபோன் – ரூ 500/-
மருத்துவச் செலவு – ரூ 500/-
குழந்தைகள் படிப்பு – ரூ 150/- x 2
மொத்த மாதாந்திர செலவுகள்: ரூ 17, 950/-
இப்படி நிலைமை இருந்தாலும் ஒப்புக் கொள்கிறேன் – மாதாமாதம், உங்கள் வீட்டு பட்ஜெட்டில் ‘துண்டு‘ விழுகிறது. ஆனால், ஏனிப்படியாகிறது என்பதை நீங்கள் தயவுசெய்து யோசிக்கவேண்டும்.
முக்கியமாக, இந்த குடும்பத் தலைவன் என்பவன், ஒவ்வொரு நாளும் வேலைக்குப் போகிறானா – அல்லது சனிக்கிழமை வாரச் சம்பளம் வாங்கியவுடன் பாண்டிச்சேரி சென்று அபரிமிதமாகக் குடித்து அடுத்த மூன்று நாட்களுக்கு வேலைக்கே செல்லாமல் இருக்கிறானா என்பதைப் பார்க்கவேண்டும். இதனை நீங்கள், உங்கள் குழந்தைகளுக்காக அவசியம் செய்யவேண்டும். விரயமாகும் வீண்செலவுகளைக் கணிசமாகக் குறைத்துக்கொண்டு – உங்கள் குடும்பத்தின், குழந்தைகளின் மேன்மைக்காகவாவது கொஞ்சமாவது செலவழிக்க முடியுமா, சேமிக்க முடியுமா என்பதைப் பார்க்கவேண்டும்.
என் அனுமானங்களில், எண்ணிக்கைகள் மேலேகீழே இருக்கலாம். நான் சொல்லவருவது என்னவென்றால் – தங்கள் வரவுசெலவுக் கணக்குகளை ஊன்றிக் கவனித்தால், எந்த செலவினங்கள் உங்கள் குடும்பத்தின் சந்தோஷத்தை குலைக்கின்றன, எவை தேவையற்றவை, எவை அத்தியாவசியமானவை போலப் பிரித்துப் புரிந்து கொள்ளலாம் என்பதைத்தான்.
அதே சமயம், உங்களுக்கு – தனியார் பள்ளிகளில் (நம்முடையது போல) கொடுக்கும் ஆசிரியர் சம்பளம் பற்றிய விவரம் தெரியாமல் பேசும், ஏசும் பழக்கமும் இருக்கிறது. இப்போது ஒரு விஷயம்: கட்டுமானத் தொழில் உட்பட உங்கள் வேலை நேரம் என்பது – காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை – இதற்குள் மதியவுணவுக்காக நீங்கள் 1 மணி நேரம் எடுத்துக்கொள்ளலாம், அல்லவா? ஆக மொத்தம், ஒவ்வொரு நாளும் சுமார் 7 மணி நேரமே வேலை செய்கிறீர்கள். வீட்டிற்குப் போனால் – வேலையைப் பற்றிய எண்ணம் வரவேண்டிய அவசியமே இல்லை.
ஆனால் வாரம் ஆறு நாட்கள் (நம் பள்ளியில் விடுமுறைகள் மிகமிகக் குறைவு – ஏனெனில் குழந்தைகளுக்கு விடுமுறை என்றாலே பிடிப்பதில்லை – இதில் கோடைவிடுமுறையும் அடக்கம், அரசாங்கமே விடுமுறை அறிவித்தாலும்கூட அவர்கள் பள்ளிக்கு வருவதையே விரும்புகின்றனர் – மேலும் பள்ளியில்தான் அவர்கள் சத்தான உணவுகளைச் சாப்பிடமுடிகிறது) போல காலை 8:15லிருந்து மாலை 5: 15 வரை, உங்கள் குழந்தைகளுக்காக குறைந்த பட்சம் 9 மணி நேரம் பள்ளியில் வேலை செய்து, மேலதிகமாக வீட்டிற்கும் வேலைஎடுத்துச் சென்று செய்யும் நம்முடையதைப் போன்ற, தம்பிடிகூட அரசு உதவிபெறாத (ஆனால் அரசு உபத்திரவம் மட்டுமே பெற்றுக்கொள்ளும்!) பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு ரூ 5000/- முதல் மிகஅதிகபட்சமாக ரூ 9000/- வரை மட்டுமே மாதாந்திர சம்பளம் கிடைக்கிறது என்பதையும் நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். உங்களுக்கே தெரியும், இம்மாதிரி ஆசிரியர் தொழிலில் உள்ள தொல்லைகள் – குறிப்பாக நம் கிராமத்தில் ஆசிரியராக இருந்தால் ஏற்படும் தொல்லைகள். இதனையும், உங்கள் குடும்ப நிதி நிலவரத்தையும் பொருத்திக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.
எல்லா ஆசிரியர்களும் (வெறும் தன்னார்வக்காரனான நான் உட்பட) அதிஅற்புதம் என்று சொல்லவரவில்லை – ஆனால் தேவையற்று நாக்கில் நரம்பில்லாமல் பேசுவது சரியான விஷயமில்லை.
[பிற்சேர்க்கைக் குறிப்பு: எங்கள் வட்டாரத்தில் தற்போதைய தினக்கூலி என்பது, ஆண்களுக்குச் சராசரியாக ரூ 350/- (சித்தாள்) முதல் ரூ 850/- (மேஸ்திரி) ஊடாக ரூ 950/- (தச்சர்/எலெக்ட்ரீஷியன்) வரை, அவர்களின் தரத்திற்கும்வேலைக்கும் இணையாகக் கிடைக்கும். காலைமாலை டீ, மதியவுணவு இதற்குமேற்பட்டு இலவசம். பெரும்பாலான இடங்களில் ஈபிஎஃப் போன்ற காப்பீட்டுத் திட்டங்களும் உண்டு. சித்தாள் வேலைகளையெல்லாம் உள்ளூர் கான்ட்ராக்ட்காரர்களிடம் பணிபுரியும் பாவப்பட்ட நேபாளி இளைஞர்கள், நாளொன்றுக்கு ரூ 125/- முதல் ரூ 175/-க்குள் செய்கிறார்கள்; இந்தச் சூழலில் விவசாயக் கூலிகள் கிடைப்பதென்பது கொஞ்சம் கஷ்டமே! ஏனெனில் விவசாயவேலைகளில் ஆணானாலும் சரி, பெண்ணானாலும் சரி, அதிக பட்சம் நாளொன்றுக்கு – ரூ 250/- மட்டுமே கிடைக்கும்; தற்போது இவற்றுக்கும் நேபாளிகள், ஜார்கண்ட், சத்தீஸ்கட் காரர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். ]
-0-0-0-0-0-0-0-0-
ஆனால் குடித்தபின் உங்கள் குடும்பச் சூழலில் ஒரே சண்டையும் அழுகையும்தான்; உங்கள் குழந்தைகள், தகப்பனின் அன்பும் அரவணைப்பும் இல்லாமல் பட்டுப்போய்விடுகின்றன என்பதற்கு அப்பாற்பட்டு, அதற்கு மாறாக அடிவுதைகளும், மனவருத்தங்களும்தான் கிடைக்கின்றன என்பதுதான் இதன் மிகமோசமான விளைவு. இன்னொரு படுமோசமான விளைவு – உங்களுக்கு ஆரோக்கியக்கேடு ஏற்பட்டு, மருத்துவச் செலவுகள் அதிகரித்து, சில குடும்பங்களில் மேலதிகமாக ரூ 3000/- மாதாந்திர தண்டச் செலவாகி விடுகிறது என்பதையும் கவனிக்கவும்.
நிலைமை இப்படி இருக்கும்போது, குடி சூழ்ந்திருக்கும் நம் குடும்பங்களில் வளரும் நம் குழந்தைகள் எப்படி உருப்படும், சொல்லுங்கள்?
ஆல்கஹாலிஸ்ம் எனும் மிதமிஞ்சிய குடிப்பழக்கம் என்பது நம்முடைய கிராமத்தின் முதன்மைச் சாபக்கேடு என்பதில் எனக்கு ஐயமேயில்லை. என் பள்ளிப்பிள்ளைகளை விட்டு நம் கிராமத்தில் எடுத்த ஒரு புள்ளி விவரத்தின் படி 100க்கு 98 பேர் (ஆண்கள்; 18 வயதிற்கு மேற்பட்டவர்கள்) தினசரி குடிக்கிறார்கள்; மேலும், 100க்கு 80 பேர் அளவுக்கதிகமாகக் குடிக்கிறார்கள். (அளவு என்பது இரண்டு பியர் பாட்டில்கள் அல்லது இரண்டு ‘ஹாஃப்’கள்). 15-18 வயதானவர்களில் 100க்கு 40 பேர், வாரத்திற்கு ஒருமுறையாவது அவர்கள் நண்பர்களோடு ‘ஜாலியாகக்’ குடிக்கிறார்கள். பெண்களில் 100க்கு 3 பேர் மட்டுமே குடிப்பழக்கத்தில் இருக்கிறார்கள் – கடவுளுக்கு நன்றி.
நம் விழுப்புரம் மாவட்டம்தான் தமிழகத்தின் முதன்மைக் குடிகார மாவட்டம் எனும் பெருமையினைப் பெற்றது என்பது உண்மையென்றாலும், விழுப்புர சராசரியை உயர்த்தியே தீரவேண்டும் என்கிற அவசியம் நம் கிராமத்துக்குக் கிடையாதே! (தமிழகக் குடி மஹாத்மியம் 20/09/2012)
உங்களுடைய குழந்தைகளில் பல, தனிப்பட்டமுறை உரையாடல்களின்போது, இந்தக் குடிச்சூழலை நினைத்துநினைத்து மிகச் சோகத்தில், அளவிடமுடியாத உளைச்சலில் இருக்கின்றன என்பதெல்லாம் எனக்குத் தெரியவருகிறது. பல குழந்தைகள் ‘எங்க அப்பாரு செத்து ஒளிஞ்ச்சாருன்னாத்தான், எங்களுக்கு நிம்மதி‘ எனச் சொல்லி விக்கிவிக்கி அழும்போது எனக்கு இரத்த அழுத்தம் அதிகமாகி விடுகிறது.
இதில் சில குழந்தைகள், ‘எனக்கு என் வூட்டை வுட்டு ஓட்ர்ணும் போல இருக்கு‘ என்று சொல்லும்போது நான் ஆதூரமாக பதிலுக்குத் தலையைத் தடவி இரண்டுவார்த்தை சொன்னால் – இரு குழந்தைகள் என்னிடம் கேட்டிருக்கின்றன ‘ராம், நீங்க என்னை தத்து எடுத்துப்பீங்களா, ப்ளீஸ்?‘ குழந்தைகளுடன் அளவளாவினால் பல சங்கடங்கள், கையலாகாத்தனங்கள். இம்மாதிரி தருணங்களில், எனக்கு, பள்ளியை விட்டொழித்து அன்றே கிளம்பிப்போய் நகரங்களின் அனாமதேயத்தனத்தில் கரைந்து விடலாமா எனப் பலமுறை தோன்றியிருக்கிறது.
சிலசமயம் எனக்கு நம்முடைய சமூகத்தை நினைத்தால் — ஒரு பெரிய பூகம்பம் ஏற்பட்டு, போக்கற்ற குடிகாரர்களாகிய நாம் அனைவரும் செத்து ஒழிந்தால்தான், பின்னர் எழும்பக் கூடிய தலைமுறைகளுக்கு விமோசனம் கிடைக்கும் எனத் தோன்றுகிறது. அதே சமயம், இப்படிக் கோரமாகக் கோபப்படுவதற்கு என்மேலும் வருத்தம்தான். என்னை மன்னியுங்கள்.

படம் இங்கிருந்து
சரி. உங்களில் யாருக்காவது இந்த மீளாக்குடிப் பிரச்சினை இருந்து, அதனிடமிருந்து தப்ப முயற்சி செய்யவேண்டுமானால், அதற்கேற்ற விஷயங்களை நான் செய்துதரத் தயாராக உள்ளேன். ஆனால், இது உங்கள் நலனுக்காக அல்ல, உங்கள் குழந்தைகளின் நலனுக்காகத்தான் என்பதையும் இங்கு தெளிவுபடுத்திவிடுகிறேன்.
அடுத்த பாகத்திலும் இக்கடிதம் தொடரும்…
தொடர்புள்ள பதிவுகள்:
- கழித்தல்கள் + கூட்டல்கள் = மேலும் கழித்தல்கள் 01/07/2014
- பள்ளி, பத்ரி சேஷாத்ரியின் கோபங்கள், ஆதங்கங்கள்: என் கருத்துகள் 07/06/2014
- பள்ளி: சென்ற கல்விவருடமுடிவுச் சிந்தனைகள், குறிப்புகள் 04/06/2014
- டீடலஸ், இகரஸ் – நான்கு குறிப்புகள் (=கொஞ்சம் தொன்மம் + கொஞ்சம் ஸானெட்+ கொஞ்சம் தவிப்பு) 15/10/2013
- ஹோமர்: இலியட், ஆடிஸ்ஸி – சில குறிப்புகள்12/10/2013
- ஹோமர்-ன் காவியங்கள்: இவற்றை, நான் (கொஞ்சமாவது) புரிந்து கொள்வதற்கு உதவிய புத்தகங்கள்13/10/2013
- குழந்தைகள் (மழை, (இலைகள் + பூக்கள் + விதை நெற்றுகள் + மண்நிலம்), கற்பனை) = டிஎன்ஏ இரட்டைச் சுருள் வடம்! 19/09/2013
- … அல்லா டீச்சருங்ளயும் நிக்கவச்சி சுட்ணும் சார்! 20/04/2013
February 14, 2015 at 10:13
A reference to this blog-post has been given as a comment in the Vinavu and Mathimaran blogs, as a model of a “positive apporach” post.
February 14, 2015 at 11:03
அய்யா விஞ்ஞானி,
உங்கள் செயலுக்கு நன்றி, அது விழலுக்கு இறைத்தாக இருந்தாலும்.
ஆனால் நண்பரே, நான் பாஸிட்டிவ் நெகட்டிவ் என்று வேலைமெனெக்கெட்டு எழுதுவதில்லை. எனக்குத் தோன்றியதை எழுதுகிறேன்; பல, நேரடி அனுபவங்களிலிருந்தும். பலசமயம் இவை ரசக்குறைவான நகைச்சுவை(!)களாகவும் ஆகிவிடுகின்றன.
நான் ஒரு பிரச்சாரகன் அல்லன் – சிலபல கோரிக்கைகளை வைப்பவன். அவ்வளவுதான்.
என்னையோ, என் காட்டுரைகளையோ, தயவுசெய்து ஒரு மாடலாக அவதானிக்கவேண்டாம். வேண்டுமானால் அவற்றை, ‘ஒரு *மாதிரி*’ எனக் கருதினால் அது சரியாக இருக்கும்.
நன்றி.
February 14, 2015 at 10:15
ராம், உங்களுடைய மற்ற வ்யாசங்களை வாசித்து பதிலெழுதுவதற்கும் இந்த வ்யாசத்திற்கு பதிலெழுதுவதற்கும் நிறைய வித்யாசம்.
ஒரே மூச்சில் மூன்று பாகங்களையும் வாசித்தேன்
இந்த வ்யாசத்தில் நீங்கள் உங்களது பள்ளிச்சூழலில் இருக்கும் பொறுப்பற்ற பல பெற்றோர்கள் பற்றி எழுதியிருக்கிறீர்கள். முக்யமாக குடி. அதனால் குடும்பமும் குழந்தைகளும் கெடுதல். நன்றாக பள்ளிப்பருவத்தை அனுபவித்து கற்பதைக் குறியாகக் கொண்டு வளரவேண்டிய குழந்தைகளின் கள்ளமறியாப்பருவம் எப்படி நிலை குலைகிறது என்பதை நினைக்கையில் மிகவும் வருத்தமாக இருக்கிறது.
ஆனால் …………….
குடி போன்ற பழக்கங்கள் இல்லை என்றாலும்………பெற்றோர்கள் பள்ளிக்கூட வாத்யார்களை விடுத்து………… தாங்கள் தங்கள் குழந்தைகளுடன் எந்த அளவுக்கு நேரத்தைச் செலவிடுகிறார்கள் என்று பார்க்கையில் நிச்சயமாக மனதை உறுத்துகிறது. என் மகனுடன் அவனுடைய கல்விக்காக அவனுடைய முன்னேற்றத்துக்காக நான் செலவிட்ட நேரத்தை ஒரு மீள்பார்வை செய்கையில் ………….. என் பங்களிப்பு குறைவு என புரிகிறது.
பல பள்ளிகளிலும் பிடிஎம் என்பது ஒரு சடங்காக மட்டிலுமே நிகழ்கிறது என்றே நினைக்கிறேன்.
உங்களது சூழலில் குடி என்ற ஒவ்வாப்பழக்கத்தால் குழந்தைகளை கவனிக்காத………… இன்னும் ஒரு படி மேலே போய் அக்குழந்தைகளை துன்புறுத்தும்…… அவர்களது வாழ்க்கையை நாசம் செய்யும் குடிமகன் களைப் பற்றிப் பேசியுள்ளீர்கள்………… ஆனால் அப்படி ஒவ்வாப்பழக்கத்துக்கு ஆளாகாமல் ………… குழந்தைகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கைக்கு பரிச்ரமப்படும் ………..அன்புடையை……………… ஆனால் குழந்தைகளின் கல்வி மற்றும் அவர்களை ஆளாக்கும் பொறுப்பு பள்ளிக்கூட வாத்திமார்களது என்று செயல்படும் பெற்றோர்களும் கூட கொஞ்சம் சிந்திக்க வேண்டும்.
ஏதோ நமக்குச் சம்பந்தமில்லாத க்ராமாந்தரத்தில் யாரோ குழந்தைகள் படும்பாடு என்று மட்டிலும் இந்த வ்யாசத்தொடரை வாசிக்காது…………. நம் குழந்தைகளின் கல்வியில் பெற்றோராகிய நம் பங்களிப்பு எந்த அளவு உள்ளது என்பதனையும் மனதில் இருத்தி……………. இன்றைய இளைய தலைமுறையினர் இந்த வ்யாசத்தொடரை வாசிக்க வேண்டும் என்பது என் விக்ஞாபனம்.
ஒவ்வாப்பழக்கங்கள் இல்லாத மற்ற பெற்றோர்கள் எந்த அளவுக்கு தங்கள் குழந்தைகள் கல்வியில் பங்களிப்பு அளித்துள்ளார்கள் அதில் என்னென்ன குறைபாடுகள் கண்டீர்கள் என்பதனை தனியாகப் பகிர்ந்து கொண்டால் ………….. பலருக்கும் உபகாரமாக (அதாவது சுயபரிசோதனை செய்ய விழைபவர்களுக்கு) இருக்கும்.
February 14, 2015 at 10:53
அய்யா க்ருஷ்ணகுமார்,
நான் அவர்களுக்கு எழுதியது ஒரு 19 பக்கக் கடிதம் – அதில் பல விஷயங்களும் இருக்கின்றன; நான் இந்த (3/n) பதிவு வரை அதில் இரண்டைத்தான் சொல்லியிருக்கிறேன். :-(
ஆகவே, விடாது கறுப்பு. :-)
நன்றி.