முடிவிலா உரையாடல்: என் பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ஒரு கடிதம் (1/n)
February 10, 2015
“சிலர், மற்ற மனிதர்களுக்கு உதவியென்று ஏதாவதைச் செய்தால் – அதற்கான பிரதிபலனை, பதில் உதவியை எப்படிப் பெறுவது என்று சதா நோக்கியவண்ணம் இருப்பர். மற்றும் சிலர், இந்த பதிலுதவி பெறுவதில் இவ்வளவு மும்முரமாக இருக்க மாட்டார்கள் – ஆனால் அவர்களுக்குத் தாங்கள் மற்றவர்களுக்கு உதவி செய்தது பின்புலத்தில் இருக்கும் – ஆகவே, அந்த உதவியை, ஒரு கடனாகத்தான் பாவிப்பர். ஆனால் இன்னும் சிலர் இப்படியெல்லாம் செய்யமாட்டார்கள். அவர்கள் திராட்சைக்கொடியைப் போன்றவர்கள் – ஒரு பிரதிபலனையும் பார்க்காமல் கனிகளை உற்பத்தி செய்து கொண்டிருப்பார்கள். அளித்த உதவிகளுக்குப் பின்னர் மற்றவேலைகளுக்குத் தொடர்ந்து சென்று கொண்டேயிருப்பார்கள்… நாம் அப்படித்தான் இருக்கவேண்டும்.”
மார்க்கஸ் ஆரீலியஸ், ரோமன் சக்ரவர்த்தி. (தியானங்கள் / எழுதிய வருடங்கள்: 0161 – 0180 ஸிஇ / மொழிபெயர்ப்பு: க்ரிகரி ஹெய்ஸ் / பக்கம் 55 / ரேன்டம்ஹவ்ஸ், நியூயார்க் / என்னிடமிருக்கும் பதிப்பு 2002 / நான் இப்புத்தகத்தை வெகுவாகப் பரிந்துரை செய்வேன்.)
நம் கீதை சொல்வதும், அடிக்கோடிடுவதும் இதனைத்தான். ஆனால் நான் பரிணாம வளர்ச்சியற்றவன். கிடந்து உழன்று கொண்டிருக்கும் சாதாரணன் தான். ஆகவே – நான், சக்ரவர்த்தி அவர்களின் பகுப்பில், இந்த ‘முதல் சிலர்’ வகையறாக்களில் இருப்பவன். இப்படிச் சொல்வதில் எனக்குக் குற்றவுணர்ச்சியோ போதாமையோ இல்லை; வெறும் வருத்தம்தான். ஏனெனில் நான் போகவேண்டிய தூரம் அதிகம்.
-0-0-0-0-0-0-0-0-0-
முன்குறிப்பு: நான் கடந்த பல வருடங்களாக, சிறுபள்ளிகளில் பணி(!) புரிந்துவருகிறவன். தற்போது வேலைசெய்யும் பள்ளியில் கடந்த சுமார் 4.5 வருடங்களாக இருப்பவன். பரிசோதனைகள் பல செய்து அவற்றில் சில சோதனைகளாக, வேதனைகளாக மாறுவதைக் கண்டவன்.
சில சிறு வெற்றிகள்(!) – பல வழுக்கல்கள், தடுமாற்றங்கள். ஆனால் தொடர்ந்து மேலெழும்பி வந்திருக்கிறேன். ஏனெனில் எனக்கு தவறுகள் பலவற்றை ஆனந்தமாகவும் ஈடுபாடுடனும் செய்து அவற்றிலிருந்து எதையாவது கற்றுக்கொள்வதில் பிரச்சினையொன்றும் இல்லை. பலசமயம் மகாமகோ அலுப்பு வரும்போது – என்னுடைய நகைச்சுவை(!) உணர்ச்சியால் அவற்றைத் தடுத்தாட்கொள்வேன் – இல்லையேல், என் செல்ல இணையத்தளங்களுக்குச் சென்று பசியாறிக்கொள்வேன். அவ்வளவுதான்.
இந்த பரிசோதனைகளில் ஒன்றாக – ஒரு கந்தறகோளப் பின்புலத்தில், நீளமான கடிதம் ஒன்றை – நான் தொடர்பில் இருந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு அனுப்பினேன். இத்தளத்தில் பதியப்படும் இக்கடிதம், நான் சுமார் மூன்று வருடங்கள் முன்பு அனுப்பிய கடிதத்தின் கொஞ்சமாகத் திருத்தப்பட்ட, சில பெயர்கள்-நிகழ்ச்சிகள் தவிர்க்கப்பட்ட, மேலதிகமாகச் சுட்டிகள் சேர்க்கப் பட்ட வடிவம். (எச்சரிக்கை: இந்தப் பதிவு வரிசையில் இந்தக் கடிதம் 3 அல்லது 4 பாகங்கள் வரலாம்!)
இதன் மூலத்தை நான், ஒரு ‘தனிப்பட்ட முறையில்’ தான், என்னுடைய சில பள்ளிக்குழந்தைகள் மூலமாக அவர்கள் பெற்றோர்களுக்கு அனுப்பினேன். சுமார் முப்பத்திஐந்து குழந்தைகளின் பெற்றோர்களில் (~~65), ஆறு பெற்றோர்கள் மட்டுமே, ’தனிப்பட்ட முறையில்’ – இந்தக் கடிதம் கிடைத்தபின் என் வீட்டிற்கு வந்தனர் – ஒவ்வொரு சிறு நிகழ்வும் இரு மணிநேரம் போல நீண்டது – அனாவசிய தடைகள்/பிறழ்வுகள் இல்லாமல் உரையாடினோம். இவை, அவர்களுடைய குழந்தைகளைப் பொறுத்தவரை உதவிகரமா, விடிவெள்ளியா, இல்லை நேரவிரயமா என்பதைக் காலம் சொல்லும்.
… இந்தக் கடிதத்தை (மிகுந்த யோசனைக்குப் பின்) நான் இத்தளத்தில் பதித்தது – என் போல, பொதுவாக நம் கிராமப் பள்ளிகளில் (குடியும், தொலைக்காட்சிக் கூத்தும், திரைப்படக் கழிவெச்சங்களும் இன்னபிறச் சாக்கடைகளும் சூழ்ந்த நம் வீடுகளில்) முதல் தலைமுறையில் கல்வி பெறும் குழந்தைகளுடன் – ஏதோ ‘சொந்தக் காரணங்களுக்காக’ கல்வித்தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு உதவியாக இருக்கும் என்பதினால் தான்.
மேலும், ஊக்க போனஸாக – முக்கியமாக, தம் குழந்தைகள் ஸ்வீகரிக்கப்போகும் எதிர்காலத்தைப் பற்றி மிகவும் கவலைப்படும் என் போன்ற பெற்றோர்களுக்கு இது சில சிறுதிறப்புகளை அளிக்கலாம். தொடர்ந்து ஒத்திசைந்தோ தலையில் அடித்துக்கொண்டோ என் எழுத்துகளைப்(!) படிக்கும் என்னுடைய பாவப்பட்ட நேரடி நண்பர்களுக்கு – என் ‘கிறுக்குத்தனங்கள்’ பற்றி மேலதிகத் தீனி வம்புகள் கிடைக்கலாம்.
குறிப்பாக, என் நண்பர்களுக்கும் – நயிதலீம் சார்பினர்களும் கட்டிடவியல் வல்லுநர்களுமான அனு, க்ருஷ்ணா போல – சோர்வில்லாமல், மெய்வருத்தம் பாராமல் ‘தண்ணியில்லாக் காடுகளில்,’ மிகப் பலச் சிக்கல்களை மீறி, இயல்பாகவும், சிரித்த முகத்துடனும், சுய அர்ப்பணிப்புடன், ஆரவாரமில்லாமல் (என் போலல்லாமல்) பணி புரிபவர்களுக்கும்… இது சமர்ப்பணம்; நான் இவர்கள் போன்றவர்களின் கால்தூசு அளவுக்குக்கூட இல்லை என்பதில் புளகாங்கிதம் அடைபவன் என்பதைச் சொல்லவேண்டும். டாக்டர் ரெஜி ஜார்ஜ், டாக்டர் லலிதா ரெஜி அவர்களையும் இதில் சேர்க்கவேண்டும். (இவர்கள் அனைவரும், அந்த மதுரை சமீப மகத்தான காந்திக்ராம் கிராமியப் பலகலைக்கழகத்தால் புடம்போட்ட வார்ப்புகள்)
இந்தப் பதிவினால், கொசுறு ‘உதவி’ பெறக்கூடிய இன்னொரு வர்க்கம்: நம் நாட்டின் எந்தச் சிடுக்கல் பிரச்சினைக்கும் – ‘பாலிஸி லெவெல்ல‘ உட்கார்ந்த இடத்திலிருந்தே, அலுங்காமல் நலுங்காமல் வாயோயாமல் களப்பணி செய்து கொண்டிருக்கும், நொள்ளை சொல்லிக்கொண்டிருக்கும், அறிவுரை தந்துகொண்டிருக்கும், இன்னும் பலவாரியாகவும் பதனிடப்பட்ட குசுக்களை வணிகச்சந்தைப் படுத்திக் கொண்டிருக்கும் மாமனிதர்கள் கூட்டம். :-(
சரி, வெட்டி விரசத்தையும் வெறுப்புமிழ்தலையும் இனிமேல் இந்தப் பதிவில் தவிர்க்கிறேன். இது ஒரு மிகமிக நீளமான பதிவு – முன்னமே எச்சரிக்கை செய்துவிடுகிறேன், சரியா? மேலும் நான், முன்னமே சொன்னதுபோல – பிரதிபலன்களை எதிர்பார்க்கும் ஒரு ஜந்து என்பதையும் கருத்தில் கொள்ளவும்.
-0-0-0-0-0-0-0-0-0-
அன்புடையீர்,
என் பெயர் ராமசாமி – உங்கள் குழந்தை ———— யின் ஆசிரியன். பொதுவாக அழுக்குடீஷர்ட் + அரைநிஜார் + கழுத்தைச்சுற்றித்துண்டுடன் இருப்பவன்; அடிப்படையில் நீளத்தாடிக்காரன்; இக்காலங்களில், கையில் மண்வெட்டியுடன் பள்ளிவளாகத்திற்குள் அலைந்துகொண்டிருப்பவன். சில பள்ளி நிகழ்வுகளில் என்னை நீங்கள் பார்த்திருக்கக் கூடும், இரண்டு கூட்டங்களில் பேசியிருக்கிறோம். நினைவுக்கு வருகிறேனா? உங்கள் குழந்தையுடன் நீங்கள் தொடர்ந்த உரையாடலில் இருப்பீர்களானால், அவன்/அவள் என்னைப் பற்றி உங்களிடம் சொல்லியிருக்கலாம். ஆனால் – சொல்லியிருக்கா விட்டாலும் பாதகமில்லை.
சரி. இந்தக் கடிதத்தை நான் ஒரு தனிமனிதனாகத் தான், உங்கள் குழந்தையில் வளமான எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மட்டுமே உங்களுக்கு அனுப்புகிறேன் – எம் பள்ளியும் இம்மையக்கருத்தைக்கொண்டுதான் செயல்படுகிறது என்றாலும், இக்கடிதம், தன்னிச்சையாகத்தான் என்னால் அனுப்பப் படுகிறது, எம் பள்ளி சார்பாக இல்லை – என்பதை நான் முதலில் தெளிவு படுத்தி விடுகிறேன். இதற்கு முழுப்பொறுப்பு என்பது என்னுடையது மட்டுமே. உங்கள் பள்ளிக்கும் இதற்கும் நேரடித் தொடர்பென்பது இல்லை.
இக்கடிதம் பற்றி, இதன் பின்புலம் பற்றி, இதில் சொல்லப்பட்டுள்ள பல விஷயங்களைப் பற்றி, உங்கள் குழந்தையுடனும் மற்ற குழந்தைகளுடனும் ஏற்கனவே பலமுறை மிக விரிவாகப் பேசியிருக்கிறேன். ஒருகால் உங்களால் இதனைப் படிக்கமுடியவில்லை என்றால், உங்கள் குழந்தையை விட்டு உங்களுக்கு இதனைப் படித்துக் காட்டச் சொல்லலாம்; நான் எழுதியவை குறித்து உங்களுக்கு மேலதிக விவரம் வேண்டுமென்றால் நீங்கள் அவனை / அவளை அணுகலாம். தாராளமாக என்னுடனும் அளவளாவலாம், சரியா?
=-==-=
உங்களில் சிலர் “மற்ற பள்ளிகளில், ஏன் இந்தப் பள்ளியிலேயே சில பிற வகுப்புகளில் கூப்பிடுவது போல, ஏன் இந்த வகுப்புக் குழந்தைகளின் பெற்றோர்களை ஒரு கூட்டத்திற்கும், ஆலோசனைக்கும் கூப்பிடுவதேயில்லை, இது சரியில்லை” எனக் குறைப் பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் குறை நியாயமானதே.
முதலில் நான் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால் – நானும் (நம் பள்ளியும்) நீங்களும் – உங்கள் குழந்தையின் வளம் நிரம்பிய செழுமையான எதிர்காலத்துக்காக, முன்னேற்றத்துக்காக – ஒரே பக்கத்தில் தான் இருக்கிறோம் – நாம் எதிரிகள் போலவோ, எலியும் பூனையும் போலவோ சண்டை பிடித்துக்கொண்டு இருக்க வேண்டிய அவசியமே இல்லை. நம் இருசாராரின் குறிக்கோளும் ஒன்றே தான்.
இன்னொன்று – நானும் நீங்களும் – சுயேச்சையாகத்தான் முடிவுகளை எடுத்திருக்கிறோம் – என்னை பள்ளி ஆசிரியனாகவேண்டுமென்று எவரும் கட்டாயப் படுத்தவில்லை; உங்களையும், உங்கள் குழந்தையை இந்தப் பள்ளியில் தான் சேர்க்கவேண்டுமென்றும் யாரும் கட்டாயப் படுத்தவில்லை. நாம் இருவழிச் சாலையில் தான் பயணம் செய்து கொண்டிருக்கிறோம்.
நமக்குக் கிடைத்துள்ள பல வாய்ப்புக்களில், சாத்தியக் கூறுகளில், நாம், இருவேறு திசைகளிலிருந்து இந்தப் பள்ளியைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம் – ஆக, நாம் இணைந்து பணியாற்ற – நமது குறிக்கோள்கள் சுத்தமாகவும், எதிர்மறைத் தன்மையில்லாமலும், நேர்மையாகவும் இருப்பது மிக முக்கியம்.
நிற்க, நான் சென்ற வருடம் – ஒருமுறையல்ல, இருமுறை இம்மாதிரிக் கூட்டத்துக்கு அழைத்திருந்த போது – இருகூட்டங்களிலும், ரசாபாசமான விஷயங்கள் நடந்தன என்பது உங்களில் பலருக்கு நினைவிருக்கலாம். உங்களில் சிலர் குடித்துவிட்டு வாடையுடனும், நிதானமில்லாமலும் இருந்தீர்கள். வளர்ந்து பூப்பெய்தியிருந்த உங்கள் பெண்மக்கள் முன்னாலேயே கூட, சிலர் எல்லை மீறி ஆபாசமாகவும் கல்விக்கும் பள்ளிக்கும் தொடர்பில்லாமலும் பேசினீர்கள், அலங்கோலமாக நடந்தீர்கள். என்னுடைய குடும்பத்தைப் பற்றியும் கேவலமாக ஏசினீர்கள். ஒருவர் நான் என்ன ஜாதிக்காரர் என்று கண்டுபிடித்து வசைபாடினார். இன்னொரு குடிகாரத் தகப்பனார் கூட்டம் நடந்த பள்ளியறையிலேயே ஒக்காளப் பச்சை வாந்தி எடுத்தார். (இதனைக் கூட்டத்திற்குப் பின்னர், இரவில் நான்தான் சுத்தம் செய்தேன் – ஏனெனில், மறு நாள் காலையில் உங்கள் குழந்தை அங்கு உட்காரவேண்டுமல்லவா?)
இரண்டாம் நிகழ்வில் – ஒருவிதமான காரணமுமில்லாமல், என்னை அடிக்க வெகுவேகமாக வந்த உங்களில் ஒருவர், குடிபோதையின் காரணமாகத் தடுக்கிதள்ளாடி நடுவழியில் விழுந்துவிட்டார். அவர் ஒருவேளை என்னை அடித்திருந்தால், நானும் எனக்கிருந்த ரத்தக்கொதிப்பில் சமனநிலையற்றுத் திருப்பி அடித்திருப்பேன் எனத்தான் நினைக்கிறேன். நல்லவேளை அப்படி ஒன்றும் நடக்கவில்லை. இல்லையேல் ரசாபாசமாகி விட்டிருக்கும்.
எனக்கு, என் முன், இம்மாதிரி என் மாணவர்களை / குழந்தைகளை அவமானம் செய்ய உங்களில் சிலரை விடுவது அசிங்கம் எனப் படுகிறது. அந்த சமயத்தில் – மற்ற, அப்போது குடிக்காத பெற்றோர்களும் – இந்த அராஜகத்தை எதிர்த்து ஒரு வார்த்தை சொல்லவில்லை என்பதையும் நீங்கள் நினைவுகூற வேண்டும்; ஆபாசமாக நடந்துகொள்ளாத மற்றவர்களெல்லாம், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தீர்கள்; மற்றும் சிலர் வேடிக்கை பார்த்துக் கொண்டு சிரித்துக் கொண்டிருந்தீர்கள் அல்லது அராஜகவாதிகளுடன் சேர்ந்து கொண்டீர்கள்.
உங்களில் ஒரு சிலர், இம்மாதிரி அவமான நிகழ்வுகளைக்குறித்து வெட்கப் பட்டிருக்கலாம், அப்படியிருந்தால் விஷயங்கள் அவலமாவதைக் கொஞ்சம் லாகவமாகக் கட்டுப் படுத்தியிருக்கலாம். ஆனால், அப்படி ஒன்றும் நடக்கவில்லை.
இந்நிகழ்வுகளுக்குப் பின்னர்கூட ஒருவரும் அவற்றைப் பற்றி ஒரு வருத்தமும் தெரிவிக்கவில்லை – ஆனால் உங்களில் பலரை அடுத்த நாட்களில் பார்த்துக்கொண்டுதான் இருந்தேன். நீங்கள் வந்துபோய்க்கொண்டுதான் இருந்தீர்கள்.
சரி.
அடுத்த பாகத்தில் இக்கடிதம் தொடரும்…
தொடர்புள்ள பதிவுகள்:
- கழித்தல்கள் + கூட்டல்கள் = மேலும் கழித்தல்கள் 01/07/2014
- பள்ளி, பத்ரி சேஷாத்ரியின் கோபங்கள், ஆதங்கங்கள்: என் கருத்துகள் 07/06/2014
- பள்ளி: சென்ற கல்விவருடமுடிவுச் சிந்தனைகள், குறிப்புகள் 04/06/2014
- டீடலஸ், இகரஸ் – நான்கு குறிப்புகள் (=கொஞ்சம் தொன்மம் + கொஞ்சம் ஸானெட்+ கொஞ்சம் தவிப்பு) 15/10/2013
- ஹோமர்: இலியட், ஆடிஸ்ஸி – சில குறிப்புகள்12/10/2013
- ஹோமர்-ன் காவியங்கள்: இவற்றை, நான் (கொஞ்சமாவது) புரிந்து கொள்வதற்கு உதவிய புத்தகங்கள்13/10/2013
- குழந்தைகள் (மழை, (இலைகள் + பூக்கள் + விதை நெற்றுகள் + மண்நிலம்), கற்பனை) = டிஎன்ஏ இரட்டைச் சுருள் வடம்! 19/09/2013
- … அல்லா டீச்சருங்ளயும் நிக்கவச்சி சுட்ணும் சார்! 20/04/2013