(இன்று) கொலையொன்றுமில்லை, கோவிந்தா!

January 19, 2015

மூன்று வாரங்கட்கு முன்னால் பள்ளியிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் ஒரு ஆள், வீச்சறிவாள் கும்பலால் துரத்தித் துரத்திக் கொலைசெய்யப்பட்டார். இது ஏதோ பழைய கணக்கு தீர்த்தலுக்காக என +1.

ஐந்தாறு நாட்களுக்கு முன்னால் எங்கள் பள்ளி வாயிலில் இருந்து 120 மீட்டர் தொலைவில் ஒரு பட்டப்பகல் வழி மறிப்புக் கொலை. இப்போது இந்தப் பக்கமும் +1. படு கோரம். ரத்தக் களறி. பதிலுக்குப் பதில் திராவிடப் புறநானூற்று வீரம்! கொலை செய்யப்பட்டவர் ஓடியிருக்கலாம், தப்பிக்கூடப் பிழைத்திருக்கலாம். ஆனால் நான்கைந்து வருடங்கள் முன் அவர் ஒரு சுயதொழில்முனைவோனாக இருந்து நாட்டு வெடிகுண்டு தயாரித்துக்கொண்டிருந்தபோது தற்செயலாக அவர் காலிலேயே ஒரு குண்டு விழுந்து, பாவம், ஒருகால் போய்விட்டிருந்தது. ஆகவே.

அடுத்து… … …

… கிடந்து அலையாதீர்கள், எழவெடுத்தவர்களே! ரொம்ப  ஆசைப் படவேண்டாம். நான் இப்போதைக்குக்   கொலை செய்யப்படுவதாக இல்லை. மன்னிக்கவும்.

-0-0-0-0-0-0-0-

ஆக, கடந்த சில நாட்களாக, எங்கள் பகுதியில் பொங்கல் களியாட்டங்களில் சுரத்தேயில்லை – ஒரு மாதிரி பதட்ட நிலைமைதான்! காவல்துறையினர் தம் பங்கிற்கு, அயர்வேயில்லாமல் வேலைகளைச் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள் பாவம். ஆனால், நமக்குக் குடிமையுணர்ச்சி இல்லவேயில்லை என்றால் எப்படித்தான் விஷயங்கள் சரியாகும் சொல்லுங்கள். :-(

வேறு வழியில்லை.  இனிமேல் – (1) கொலைக்கு  ஸுபாரி (=ஒப்பந்தம்) போடுபவர்களுடனும்,(2)  தொழில்முறைக் கொலையாளர்களுடனும், (3) இன்றில்லாவிட்டால் நாளை, அமர்க்களமாகக் கொலை  செய்யப் பட இருப்பவர்களுடனும் – என் பள்ளி சார்பாக ஒரு நாற்புர  ‘புரிந்துணர்வு’ ஒப்பந்தம் போடவேண்டிய காலம் வந்துவிட்டது எனத்தான் நினைக்கிறேன். :-))

http://www.hire-a-killer.com/index.html

http://www.hire-a-killer.com/index.html இது அமெரிக்காவில் உள்ள எங்கள் கிளை. எங்களுடைய தொழில்சுத்தத்தைப் பார்த்தால் இவர்கள் கற்றுக்குட்டிகள்தான். ஆனால், கூடிய சீக்கிரம் நாங்கள் பங்கு மார்க்கெட்டில் எங்கள் கணக்கைத் துவக்கும்போது, இம்மாதிரி விஷயங்கள் ப்ரேன்டிங் தொடர்பாக கொஞ்சம் அனுகூலமாக இருக்குமல்லவா?

இந்த ஒப்பந்த வரைவில் ஒரேஒரு முக்கியமான ஷரத்து மட்டுமே: “எம் பள்ளிக்குக் குழந்தைகள்+ஆசிரியர்கள் வரும் காலை நேரங்களிலும், மாலை வீட்டுக்குப் போகும் சமயத்திலும் – அவர்கள் பார்வையில் படும்படி – கண்டிப்பாக எந்தவொரு கொலையும் செய்யப்படக் கூடாது!”

… ஆனால், ஒரேயடியாக  எங்கள் வட்டாரத்தின் அடிப்படை உரிமைகளை ஒடுக்கவும் கூடாது – அது அறமல்ல என்பதையும்  நான் நன்றாகவே புரிந்துகொண்டுள்ளேன். ஆக, எங்கள் செல்லக் குடிமகன்கள் – ரத்தம் வர அடித்துக்கொள்ளலாம், குடித்துவிட்டு குஞ்சாமணி அதிர சாலை நடுவில் குச்சுப்புடி நடனமாடலாம். வழக்கம்போலவே நாங்கள் சிரித்துக்கொண்டே நகர்ந்து விடுவோம், கவலையே வேண்டாம்!

இருந்தாலும், ஆனாலும் – கொலை எனும் மகோன்னத நிகழ்வவென்பது – முக்கியமாக நேரம், காலம், நாள்கிழமை பார்த்துச் செய்யப் படும், தீர்க்கமாக தீவிரமாகத் திட்டமிடப்பட்டுச் செயல்படுத்தப்படும்  விஷயமாதலால் –  அப்படிச் செய்தேயாக வேண்டுமென்றால், பக்கத்து முந்திரிக்காடுகளில் தாராளமாகச் செய்து கொள்ளலாம். பாவப்பட்ட முந்திரிமரங்களுக்கும் உரம் தேவையல்லவா?

-0-0-0-0-0-0-

நான்கைந்து வருடம் முன் நான் என்னுடைய பள்ளியில் சேர்ந்த புதிதில், எட்டாம் வகுப்பு மாணவர்களுடன் நான் நடத்திய ஒரு உரையாடல் நினைவுக்கு வருகிறது. :-) இல்லை – :-(

இந்தப் பகுதியில் ஊர்ப் பெயர்கள் பாக்கம், பட்டினம், பேத், பட்டு, சாவடி என முடியும். எங்களுடைய குறிப்பிட்ட வட்டாரத்தில் எல்லாமே சாவடிகள் தாம். பிள்ளைச்சாவடி, தட்டான்சாவடி, கவுண்டசாவடி, இடையன்சாவடி, கருமாஞ்சாவடி, மீனாஞ்சாவடி, பெரியமுதலியார்சாவடி, சின்னமுதலியார்சாவடி எனப் பலப்பல சாவடிகள். இவற்றின் வரலாறு மிகவும் சுவாரசியமானது.

சரி. பிள்ளைகளிடம் எங்கோ இருந்த பாபரையும் அக்பரையும் பற்றிப்பொத்தாம்பொதுவாக ‘குளம்தொட்டு வளம்பெருக்கினார்’ என உளறாமல் – கொஞ்சம் இந்த வட்டாரத்திய வரலாற்றைப் பற்றிப் பேசலாமென ஜாதிகள், தொழில்கள், பகுப்புகள், க்ஷேத்திராடங்கள் என ஆரம்பித்தேன். முதலில் ஒரு முத்தாய்ப்பான கேள்வி – “பசங்களா, சாவடிசாவடி என்கிறோமே, அது என்ன?”

ஒரு சூட்டிகையான பையன் உடனே சொன்னான் –  “ராம், அது முதலியாரை சாவடி, இடையனை சாவடி அப்டீன்னுதான் அர்த்தம். யாராவது பிள்ளைவந்தா போட்டுத் தள்ளு! அப்டிதான் வந்திருக்கும். இங்கயல்லாம் கொலை நெறயா விழும்! காரணப் பெயர்!!”

“!!!”

ஒரு குழந்தைகூட இதனைக் கேட்டுச் சிரிக்கவில்லை. வகுப்பறையில் ஒரு இறுக்கமும் இல்லை. குழந்தைகள் இதனைச் சர்வசாதாரணமாக எடுத்துக்கொண்டுவிட்டன. எனக்குத்தான் ஆறவேயில்லை.

பாவம், குழந்தைகள்தாம் எப்படி விஷயங்களை தம் அனுபவங்களுடன் பொருத்திப் புரிந்து கொள்கின்றன? யோசித்துப் பார்த்தால்… :-(

… இந்தச் சாவடி புராணத்தை சில நாட்கள் கழித்து மீண்டும் தொட்டு ஒருவாறாக முடித்தேன். :-(

-0-0-0-0-0-0-

…எங்கள் ஊர்ப்புரம் – தமிழ் நாட்டின் சட்டஒழுங்கு நிலைமைக்கு, ஒரு கணக்கில்,  20 உச்சமட்ட தலைவலி கொடுக்கும் பகுதிகளில் தலையாயதான ஒன்று. காவல்துறை, ரெவின்யூ துறை, மருத்துவத் துறை போன்றவற்றிலெல்லாம் இம்மாதிரி பகுதிகளில் அரசுவேலை செய்யவேண்டுமென்றால் –  கொஞ்சம் ரொம்பவே பாவம்தான். இந்தப் பகுதிக்கு மாற்றலாகி வருபவர்கள் – எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இங்கிருந்து ஓடிப்போய்விடவே முயல்வார்கள். அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை, பாவம்.

ஒரு எடுத்துக்காட்டாக – குடிவெறி போதை தொடர்புள்ள குற்றங்கள் இங்கு மிக அதிகம். இரண்டு பிரதானமான ரவுடி கும்பல்கள். ஜெயலலிதா வந்தவுடன் (2011?) இந்த கும்பல் தலைவர்கள் மெய்யாலுமே ஓடிப்போய்விட்டனர்; காரணம் = என்கௌன்டர் பயம். கடந்த சுமார் இரண்டு-மூன்று வருடங்களாக அவர்கள் இந்தப் பக்கமே வரவில்லை – கேரளாவிலும் ஆந்திராவிலும் சுற்றிக்கொண்டிருக்கின்றனர். சமீபகாலங்களில் வெறும் ஒன்றிரண்டு கொலைகள் மட்டும்தான் நடந்தன! வெகுவாக ரசிக்கப்பட்ட முன்னேற்றம்தாம் இது! ஆனால் இந்தப் பெரிய குண்டர்கள் இருந்த இடத்தில் இப்போது சிறுசிறு குறுங்குழுக்கள். போட்டி அதிகமாகிவிட்டதால், தரம் அதிகமாகிவிட்டது.

மேலும் (=ஆகவே), இந்த பெரிய குண்டர் தலைவர்கள் இப்போதும் வட்டாரத்தில் இல்லாமல் இருந்தாலும் – கடந்த சில மாதங்களில் அவர்கள் ஆட்களின் அராஜகங்கள் அதிகமாகியிருக்கின்றன. அண்மையில் ஒருவழியாக நடந்துமுடிந்த – மிகமிகமிக ஜனநாயகபூர்வமாக வழிநடத்தப்படும் இயக்கமான மகாமகோ திமுகழகத்தின் உட்கட்சித் தேர்தல்களின்போது அவர்கள் செய்த பல முக்கியமான களப்பணிகள் அவர்களை தினவெடுக்கவைத்திருக்கவேண்டும்தான்! (எங்கள் பகுதியில் இருந்து 30-35 சுமோ, இன்னவா, டவெரா வகையறா வண்டிகளில் வட்டார இளம்குண்டர்கள் எடுத்துக்கொண்டு செல்லப்பட்டு திமுக ‘ஜனநாயக’ தேர்தல் களப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு  அபரிமிதமான பணம்+குடி பார்த்திருக்கின்றனர்! இவர்களெல்லாம் திரும்பி வந்துவிட்டது ஒரு பெரிய பிரச்சினைதான்!)

ஆக – அண்மைக் காலங்களில் பலவிதமான பிரச்சினைகள். எப்படியுமே ஊக்கபோனஸாக – பல பத்து வருடங்களாக இந்த வட்டாரத்தில் – குறைந்த பட்சம் வருடத்துக்கு ஐந்து கொலைகள். மொத்தம் சுமார் 5800 மக்கட்தொகை உள்ள ஒரு பகுதியில், இது கொஞ்சம் அதிகம் எனத்தான் எனக்கு எண்ணம்.

சரி. இந்தக் கொலைகளும் வெறும் சிறு தொந்திரவுகளே என்று இவற்றை இடக்கையால் புறமொதுக்கித்தான் செல்லவேண்டும். வேறு வழியில்லை. நாளை மற்றொரு நேற்றே!

எது எப்படியோ — — நன்றி, வாழ்க்கை இயல்பாகத்தான் ஓடிக்கொண்டிருக்கிறது.

 -0-0-0-0-0-0-0-

எங்கள் பகுதியைப் பற்றி மேலதிகமாகத் தெரிந்துகொள்ள இந்த இரண்டுவருடம் முந்தைய பதிவைப் படித்துப் புளகாங்கிதம் அடையவும்:

 “நாங்கள் மிகவும் பாக்கியசாலிகள்.

ஒரு விஷயம் – நாங்கள் என்று யாரைச் சொல்கிறோம் என்றால் – எங்கள் மாவட்டமான விழுப்புரம் வாழ் மக்களைச் சொல்கிறோம். இருப்பினும் நாங்கள் சொல்ல வருவது, தமிழ் மொடாக்குடியினர் அனைவருக்கும் பொருந்தும் என்பதை நீங்கள் அறிவீர்கள்!

ஆம். நாங்கள் பாக்கியசாலிகள் மட்டுமல்ல – நாங்கள் பெருங்குடிகள் கூட.

(மேலும் ஆயாசப்பட: தமிழகக் குடி மஹாத்மியம் 20/09/2012)

சில மாதங்கள்முன், ஒரு பேச்சுவாக்கில் பத்ரி சேஷாத்ரி அவர்கள் சொன்னார் – இந்தக் குடிப்பிரச்சினைக்கு தீர்வுகாண, நீ ஏன் டாக்டர் ராமதாஸ் அவர்களிடம் போய் நேரடியாகப் பேசக்கூடாது?

எனக்கும் – ராமதாஸ் அவர்களின் குடிக்கெதிரான தொடர்ந்த போராட்டத்தின்மேல் மிகவும் நம்பிக்கையிருக்கிறது. அவர் இந்த நிலைப்பாட்டிலிருந்து எனக்குத் தெரிந்தவரை பிறழவேயில்லை. மேலும் இவ்வட்டாரங்களில் அவர் சமூக மக்கள் மிகமிக அதிகம். ஆகவே, இரண்டுமுறை போனேன்.  இன்னொரு காரணம் – அவருடைய தைலாபுரம் பண்ணையானது,  என் வீட்டிலிருந்து 17 கிலோமீட்டர்தான்! (ஆனால் அவரைப் பார்க்க முடியவில்லை; அவருக்கு வேலையழுத்தங்கள், எனக்கும்தான்! ஆனால் – நானும் விடுவதாக இல்லை!)

பொதுவாக நான் பிரச்சினைகளை விட்டுவிட்டு ஓடிவிடுபவன் அல்லன். மிக அலுப்பாக இருந்தாலும் – அவை தம்மைத்தாமே தீர்த்துக்கொள்ளும், மற்றவர்கள் யாராவது சரி செய்வார்களென்றெல்லாம் சால்ஜாப்பு சொல்லும் பழக்கம் இன்னமும் வரவில்லை. ஆகவே, பார்க்கலாம். :-)

தொடர்புள்ள பதிவுகள்:

மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s