ஸாஹித்ய அகடெமி விருதுகள்: ‘த டுமீல் ஹிந்து’வின் நகைக்கவைக்கும் அரைகுறைத்தனம்!
January 14, 2015
ஓரிருமாதங்களுக்கு முன் நடந்த நிகழ்வு இது: நண்பர் ஒருவருடன் மாமலைகளையும் (ஹரல்ட் கார்ஃபின்கெல், எர்விங் காஃப்மன்) அதலபாதாள மடுக்களையும் (ஆஇரா வேங்கடாசலபதியின் பிரமிக்கவைக்கும் ‘ஆராய்ச்சி!’, ஜேஆர்ஆர் டோல்கீனின் அலுப்பு சராசரிக் களஞ்சியமான ‘லார்ட் ஆஃப் த ரிங்ஸ்‘) பற்றியெல்லாம் சுகமாக அளவளாவிவிட்டு திரும்பி வீட்டுக்குவந்து, மாலைக்கடனெழவுகளை முடித்துவிட்டு, யார்யார் மின்னஞ்சல்களில் திட்டியிருக்கிறார்கள் எனப் பார்க்கலாம் எனக் கொஞ்சம் கணினி முன் உட்கார்ந்தால் ஒரு அதிர்ச்சி!
பார், யாருக்கெல்லாம் இந்த விருது கிடைக்கலாம் என்று புளகாங்கிதமுற்ற நண்பனின் பரவசம். “தமிழ்ஹிந்து-வில் எப்படி மெனெக்கெடுகிறார்கள் பார்!” அந்த சுட்டி எழவு இங்கேயிருக்கிறது: சாகித்ய விருது இந்த ஆண்டு யாருக்கு?
நம்பவே முடியவில்லை! இந்தக் கட்டுரைப்படி – கருத்து தெரிவித்தவர்களில் பெரும்பாலோர், குறிப்பிட்ட ஒரு சில புத்தகங்களைத் தவிர – ஏன், எப்படி, எவற்றுக்கு இந்த விருதுகள் வழங்கப் படுகின்றன என்பதை முழுவதுமாக உள்வாங்கிக்கொள்ளாமலேயே, புரிந்துகொள்ளாமலேயே, தங்கள் மேன்மையான கருத்துகளை வள்ளல்கள் போல – வாரிவாரிவாரிவாரி வழங்கியிருக்கிறார்கள்! கூடவே வள்ளென்று அகடெமி மேலும் பாய்ந்திருக்கிறார்கள்!
அல்லது – ஒருவேளை அவர்களில் ஓரிருவர் பின்புலங்களைச் சரியாகப் புரிந்துகொண்டிருந்தாலும், நம் போன்ற தமிழ்க்கூவான்களுக்கு இந்த அளவு விஷயம் போதும், எவன் இதையெல்லாம் ஊன்றிப் படிக்கப்போகிறான் எனவும் விட்டேற்றியாக நினைத்திருக்கலாம். (நானும் அப்படித்தான் நினைக்கிறேன் – எனக்கும் தமிழர்களின் சோம்பேறித்தனத்தின்மீது அளவுகடந்த மரியாதை உண்டு)
மிகமிக விசனம் தரக்கூடிய விஷயம் இது. :-( நம்மால் மதிக்கப்படவேண்டியவர்களே நம்மை இப்படிக் கவிழ்த்திவிட்டால் நம்மால் என்னதான் செய்யமுடியும் சொல்லுங்கள். :-((
-0-0-0-0-0-0-
- 2014 விருதுக்கு – புத்தகங்கள் 2010, 11, 12 ஆண்டுகளில் பதிப்பிக்கப்பட்டவையாக இருந்திருக்கவேண்டும். 2013 வருடம் பதிக்கப்பட்டவைக்கெல்லாம் 2015ல் தான் வாய்ப்பு!
- தொகை நூல்களுக்கு அகடெமி பரிசு கொடுப்பதேயில்லை.
- அரைகுறையாக இருக்கும் புத்தகங்களுக்கு, தொடர்களுக்கு பரிசு கிடையாது
- மேலும் ஆர்டிஐ விதிகளின் படி – இந்த விருது அளிக்கப்பட்ட செயல்முறையைப் பற்றி எந்த விவரத்தையும் பெற்றுக் கொள்ளலாம்.
- விருதைக் கொடுக்க ஒரு பெரிய, ஒப்புக்கொள்ளக்கூடிய, நீளமான செயல்முறையே இருக்கிறது. அது ஒரு தனி மனிதனால் அவனுடைய விருப்பு வெறுப்புகளினால் மட்டுமே அலைக்கழிக்கப் படுவதல்ல! (ஆஇரா வேங்கடாசலபதி பொத்தாம்பொதுவாக ஏதோ சொல்லியிருக்கிறார். பாவம்!)
இம்மாதிரி பல விஷயங்கள் இருக்கின்றன. மேலதிக விவரங்கள் கீழ்கண்ட சுட்டிகளில் இருக்கின்றன.
சரி. சாஹித்ய அகடெமியும் ஒரு நிறுவனம்/அமைப்புதான் – ஆனால் முடிந்தவரை அதன் சிடுக்குகளையும் மீறி மேலெழும்பிவர அது தொடர்ந்து முயன்றுகொண்டிருக்கிறது. அதில் பல நேரடித்தன்மையும் நாணயமும் மிக்க மனிதர்களும் இருக்கிறார்கள் என்பது – பொதுவாக ‘அரசு நிறுவனங்களெல்லாம் சப்பை,’ ‘அரசியல் என்றாலே அயோக்கியத்தனம்,’ ‘முதலாளியென்றாலே சுரண்டல்’ ‘ நிறுவனம் என்று ஒன்று இருந்தால், அது தரும் சகல வசதிகளையும் பெற்றுக்கொண்டு, அதேசமயம் அதற்கெதிராகப் பொங்கியெழவேண்டும்’ எனும் ரீதியாக – அட்ச்சுவுட்டுக்கினு கருத்துதிர்த்துச் செல்லும் கந்தசாமிகளுக்கு கொஞ்சம் சங்கடத்தைக் கொடுக்கலாம்; ஆனால் கவலையே வேண்டாம் – அவர்கள் அதையும் வெகு சுளுவாகத் தாண்டிச் செல்வார்கள்! :-)
எப்படி டமால் டுமால் என்று அட்ச்சுவுட்றார் பாருங்கள்! புல்லரிப்புதான்! :-))
தன்னுடய அபத்தச் செய்திக்கு, டுமீல் ஹிந்து செய்யவேண்டிய பிராயச் சித்தம்:
1. தப்பும் தவறுமாகச் செய்தியைக் கொடுத்து அது அவமதித்த வாசகர்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்.
2. பிரபலஸ்தர்களுக்கு முழு பின்புலத்தையும் கொடுக்காமல், அவர்களுக்கு எல்லாம் தெரிந்திருக்கும் என நினைத்துக்கொண்டு அவர்களுடைய ஸாஹித்ய அகடெமி பற்றிய கருத்துகளைக் கேட்டதற்கு அந்த எழுத்தாளர்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்.
3. இந்தக் கட்டுரையை எழுதுகிறேன் என்று பேர்பண்ணி வல்லுனர்களிடம் விட்டேற்றியாக ‘என்னெ நெனக்றீங்க் ஸார்‘ எனக் கேட்டு, ஒரு மண் ஹோம்வர்க்கும் செய்யாமல் ஒரு அற்பக் குப்பையை எழுதிய அரைகுறையை — உடனே வீட்டிற்கு அனுப்பவேண்டும். (அதற்கு முன், அந்த ஜந்துவின் காதைத் திருகி மண்டையில் இரண்டு தடவை ஓங்கிக் குட்டவேண்டும். இலவச இணைப்பாக கன்னத்திலும் அறையலாம், முதுகிலும் மொத்தலாம் – அது அடிப்பவரின் இஷ்டம்)
தவறான கருத்து/பரிந்துரை வழங்கிய பிரபலஸ்தர்கள் செய்யவேண்டிய பிராயச்சித்தம்:
பத்து தடவை ஸாகித்ய அகடெமி சட்டங்களை, சட்டகங்களை மதிப்பிடும் முறையைப் பற்றிப் படித்து, அது ஒருவழியாகப் புரிந்துகொள்ளப் பட்டபின் அவற்றின் மீதான மூன்று மணி நேர பரீட்சை ஒன்றை எழுதவேண்டும்; அதன்பின்
1. தங்கள் கருத்துகளை வாபஸ் வாங்கிக்கொள்ளவேண்டும்.
2. தங்கள் கருத்துகளுக்கு வருத்தம் தெரிவிக்கவேண்டும்.
இதெல்லாம் நடக்காது என்று தெரியும், இருந்தாலும்… :-(
பார்க்கலாம் – அடுத்த வருடத்திலாவது இந்தக் கணக்குகள்/ஹேஷ்யங்கள்/பரிந்துரைகள்/ஆசைகள் சரியாகத் தெரிவிக்கப் படுகின்றனவா என்று!
ஆனால், எனக்கு தொடர்ந்து மிகவும் பிடித்தமான தமிழ் எழுத்தாளர்களில் ஒருவரான ‘வெக்கை’ பூமணி அவர்களின் அஞ்ஞாடி (இதை வாங்கி ஒன்றரை வருடங்களாகியும் அது இன்னமும் ‘படிக்க வேண்டிய’ புத்தகங்களின் அடுக்குகளிலேயே இருக்கிறது என்பது சோகம் தருவது!) சாஹித்ய அகடெமி விருதைப் பெற்றிருப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
அஞ்ஞாடியை – இந்தவருடம் நிச்சயம் படித்துவிடுவதாக இருக்கிறேன்!