புத்தகங்களை தானம் கொடுப்பது எப்படி?
July 10, 2014
புத்தகங்களைப் பிரிவது எனும் சோகம் (அல்லது மகிழ்ச்சி?) எனும் முந்தைய பதிவிற்குப் பின் கீழே (அல்லது மேலே) படித்தால் நலம்.
-0-0-0-0-0-0-0-0-

மந்தஹாசப் புன்னகையுடன் குட்டி கொர்-ஆன் படித்துக் கொண்டிருக்கும் பர்மாக்கார சந்தன புத்தர் – அவருடைய இடது காது மடலின் கீழ்ப்பகுதி கீழ் நோக்கி இருக்கவேண்டுமோ? (இங்கிருந்து)
… இந்த மாதிரி, புத்தகங்களை நான் சேமித்து வைத்துக்கொள்ளக் கூடாது, தேடித்தேடி வாங்கி பெரும்பாலும் ரசிக்கப் பட்டவையாக இருந்தாலும், அவற்றைப் போர்த்திப் போர்த்தி என்னிடமே பாதுகாப்பாக வைத்துக்கொள்ளக்கூடாது, அது சரியான தர்மமல்ல – புத்தகங்கள் தங்களைப் படிப்பவர்களுக்காகவே காத்திருக்கின்றன – ஆகவே, முடிந்தவைகளையெல்லாம் தானமாகத் தந்துவிடவேண்டும் என்பதற்கும் பல காரணங்கள்:
புத்தகாயண சூத்திரம்- பாகம் 2
- என்னுடைய (மிக நல்ல) ஆரோக்கியம் இப்படியே தொடர்ந்தாலும் கூட எனக்கு இன்னமும் 40-50 ஆண்டுகள் வாழ்நாள் இருக்கலாம். அதற்குள் என்னிடம் இருக்கும் புத்தகங்கள் அனைத்தையும் மறுபடியும் படிப்பேனா என்பது சந்தேகமே!
- இதுவரை வருடத்துக்குச் சுமார்/ஏறக்குறைய 450-500 புத்தகங்கள் எனக் கடந்த நாற்பது வருடங்களில் படித்திருந்தாலும் – கூட்டிக்கழித்து சுமார் 18000 புத்தகங்களைமட்டுமே நான் இதுவரை படித்திருக்கக்கூடும். இவற்றில் நன்றாக மனதில் பதிந்தவை என அதிகபட்சம் மூவாயிரம் இருந்தால் அதுவே அதிகம்.
- இனியும் புதிய புத்தகங்களைத் தொடர்ந்து படித்துக்கொண்டுதான் இருக்கப் போகிறேன் – மேலதிகமாகச் சுமார் 15000 புத்தகங்கள் படிக்கக் கூடலாம் – ஆகவே பழைய நினைவுகளை, வாசிப்பனுபவங்களை மறுபடியும் தேடியடைவது அவசியமா? அப்படிப்பட்ட அவசியம், என்னிடம் இருக்கும் எல்லா புத்தகங்களுக்கும் இருக்குமா?
- பலவிதமாக புத்தகங்களைப் படித்ததில் – ‘இதனைப் படித்ததால் நான் என்னை செழுமைப் படுத்திக்கொண்டேன்; வெறுமனே பொழுதைப் போக்கவில்லை!’ என நான் கருதும் புத்தகங்களை, அவைபோன்ற ரகங்களைத்தான் நான் இனிமேல் படிக்கப் போகிறேன்; ஆக என் புத்தகங்கள் அனைத்தும் என்னிடம் இருப்பது அவசியமா?
- கடந்தகாலஅனுபவங்களின், புத்தகவாசிப்புக் கற்பனா லாகிரியில் தற்காலத்தில் மிதந்துகொண்டு, (எழுத்துசூழ் உலகத்தின்) எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்காமல் இருப்பது சரியா?
- புத்தகங்களோடு நெருக்கம் அதிகமாக அதிகமாக, சகமனிதர்களிடம் (= நிதர்சன வாழ்க்கை) ஈடுபடுவது குறைந்து கொண்டே வருகிறது; இப்படி, கற்பனையூர்கள் தரும் ஆத்துமசுகத்தைச் சுவைத்துக்கொண்டேயிருப்பது சரியா? பரிணாம ரீதியில், பல்லாயிரம் வருடங்களாக – மனிதன் முதலில் குழு சார்ந்து இயங்குபவன் தான்; ஆனால், இந்தப் பரந்துபட்ட புத்தகங்கள் கடந்த சில நூறு வருடங்களில் பண்பாட்டிற்குள் கொணரப்பட்டவைதானே? ஆக – இவற்றில் எதற்கு அதிக மதிப்பு தரவேண்டும்?
- என்னிடம் இருக்கும் புத்தகங்களில் பலவற்றிற்கு, அப்போது நான் கொடுத்த மதிப்பை, மரியாதையை நான் இப்போது கொடுப்பதில்லை; ஆக அவற்றை என்னிடம் வைத்துக் கொள்வதில் நேர்மையோ அல்லது தக்கவைத்துக் கொள்ளவேண்டிய அவசியமோ இல்லை.
- அதேசமயம், நான் அக்காலங்களில் பல புத்தகங்களைப் படித்துப் பெற்ற எழுச்சிகளைப் பெறவேண்டிய அவசியம் பல பிறருக்கு இருக்கலாம்.
- ஆகவே, என்னிடம் இருக்கும் புத்தகங்களை நான் மட்டும் படிக்காமலோ/படித்தோ வைத்துகொள்வதும் சரியில்லை. மற்றவர்களும் படிக்கவேண்டும்.
- புத்தகங்கள் வெறுமனே அலமாரிகளில் பதவிசாக அமர்ந்துகொண்டிருப்பதற்காக இல்லை. அவை பலரிடம் சேர்ந்து படிக்கப் படவேண்டும். அவை, தங்களை மதிப்பவர்களை, விழைபவர்களைப் போய்ச் சேரவேண்டும்.
- காகிதப் புத்தகங்களின் ஊற்றுக்கண் மரக்கூழ்தான் எனும் நிதர்சன உண்மையின் பின்புலத்தில் – உபயோகிக்காமல் ஒரு புத்தகத்தை ஒருவர் வைத்துக்கொண்டு, அதனை விழையும் மற்றொருவர் இன்னொரு புதுப் புத்தகத்தைத் தான் வாங்கவேண்டும் என்பது சரியான போக்கா?
- தொழில் நுட்பங்களை – அவை நம் வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கத்துகளை உணர்ந்து அரவணைத்துச் செல்லவேண்டும். மரக்கூழ் புத்தகங்களுக்குப் பதிலாக மின்னணுப் புத்தகங்களை அரவணைக்கலாமே? எதிர்காலத் தலைமுறைகள் இவை போன்ற கருவிகளை/முறைகளை உபயோகப் படுத்தி, சேமிக்கப்பட்ட எந்த புத்தகப் பொக்கிஷத்தையும் அணுகலாமே!
- அடுத்த தலைமுறைகளில் – நம் கலாச்சாரத்தை, பாரம்பரியப் பொக்கிஷங்களைக் அவர்களுக்கு கொண்டு சேர்க்கப் படும் புதிய சட்டகங்கள், சமூகக் கூறுகள், தொழில் நுட்பச் சாத்தியக் கூறுகள் மாறலாம் (=இப்போது வழமையில் இருக்கும் இணையம் போன்றவை) மாறலாம்; ஆக, புத்தகங்களைப் பராமரிக்க, அவற்றை தூசியிலிருந்தும் வெள்ளைக் கரையான்களிடம்கிருந்தும் காப்பாற்றவேண்டிய பிரயத்தனம் செய்யவேண்டியதேயிருக்காதோ? (ஆனால், வேறு பிரச்சினைகள் வந்து சேரலாம்!)
- சிலவருடங்கள் முன்பு – பழையன கழிந்தால்தான் புதியன வாங்கப் படவேண்டும் என ஒரு முடிவெடுத்து அதனைக் கடைப்பிடித்தாலும் – தற்காலங்களில் ஒரு நடைமுறைப் பிரச்சினை. இப்போதைய வீட்டில் இடமே இல்லாமல் போகிறது.
- கொடுக்கவேண்டும் எனத் தோன்றுபவைகளை உடனே கொடுத்துவிடவேண்டும்; யோசித்துக் கொண்டேயிருந்தால் (to be or not to be, to see or not to see, … … to pee or not to pee… to a1 or not to a1… …) கவைக்குதவாது; உடைமைகள் அதிகமாகிக்கொண்டேதான் போகும்.
- …
- புத்தகங்களுடன் ஊர் ஊராகச் சுற்றுவது என்பது முடியாத காரியம், அல்லவா? One should travel light, yeah?
இவையெல்லாவற்றுக்கும் மேல், இன்றைய கணக்கில் என்னிடம் சுமார் 150 புதுக்கருக்குக் குலையாத புத்தகங்கள் படிப்பதற்குக் காத்துக் கொண்டிருக்கின்றன வேறு. நேற்று முன்தினம், என் பெருமதிப்பிற்குரிய மது கிஷ்வர் அவர்களின் ‘மோதி, முஸ்லீம்கள், குஜராத்’ புத்தகம் வேறு வந்து சேர்ந்திருக்கிறது! ஐந்து நூலகப் புத்தகங்களை ஆறு நாட்களில் திருப்பிக் கொடுக்கவேண்டும்… புத்தகங்களுக்கு அப்பால், முக்கியமான மஹாமஹோ லௌகீக வாழ்க்கை என்பது இருக்கவே இருக்கிறது. படித்துக்கொண்டேயிருந்தால் இசைக்கு ஏது இடம்? ஷிசினின் நொ ஸாமுராய்களுக்கு எங்கே நேரம்?? குடும்பம்? தொழில்?? :-)
… பலப்பல சிந்தனைகள்.
-0-0-0-0-0-
… ஐந்து வருடங்கள் முன் – குழந்தைகளுக்காகவென என வாங்கும் புத்தகங்களை அதிகப்படுத்தி நாங்கள் வாங்குவதைக் குறைத்தோம்.
இருந்தாலும் சேர்க்கை அதிகமாகிக் கொண்டுதான் இருந்தது. இத்தனைக்கும் எங்கள் குழந்தைகள் படித்து முடித்த சில மாதங்களில் அவர்கள் படித்தவற்றை பிற குழந்தைகளுக்கு மறுசுற்றுக்குக் கொடுத்துவிடுவோம். அல்லது பள்ளி நூலகங்களுக்கு. இருந்தாலும், இப்படி…
கடைசியில் – சுமார் நான்கு வருடங்கள் முன் என்னுடைய (=எங்களுடைய) பிரத்தியேக நூலகத்தை – அளவு குறைக்கலாம் எனும் முடிவுக்கு பெருமூச்சுடனும், இனம்புரியாத வருத்ததுடனும் வந்தேன்.
முதலில் பொதுவுடமை (=கம்யூனிஸ்ம் – தமிழிலும் ஆங்கிலத்திலும் என – ஹெகெல் கார்ல் மார்க்ஸிலிருந்து ட்ராட்ஸ்கி, எம்என் ராய், கோவிந்தன், நம்பூதிரிபாட், ஷிப்தாஸ் கோஷ் வரை) பற்றிய சுமார் எழுநூற்றிச் சொச்சம் புத்தகங்களை கொடுப்பதாக முடிவுசெய்தேன் – அதிலும் எனக்குப் பிடித்த 12 புத்தகங்களைத் தக்கவைத்துக்கொண்டுதான்! ஆனால் யாருக்கு இவற்றைக் கொடுப்பது எனப் பிரச்சினை. இவற்றை அட்டைப் பெட்டியில் போட்டு – சில இடதுசாரி சார்பு இளைஞர்களிடம் இவைவேண்டுமா என்று கேட்டால் அசுவாரசியமாக பதிலளித்தார்கள். எனக்கு உலகம் பற்றிய சில குறிப்பிடத்தக்க புரிதல்களை அளித்த இப்புத்தகங்களை, தேவையேயில்லாமல் காகிதக்கூழ் செய்ய அனுமதிக்கவும் மனம் இல்லை. உபயோகப்படுத்துவதாகச் சொல்பவர்களுக்கு இவற்றை இலவசமாகக் கொடுப்பதாகவும் சொல்லியிருந்தேன். இருந்தாலும் கொள்வாரில்லை.
… பலத்த யோசனைக்குப் பிறகு ஜீப்பில் (இரண்டு ‘லோட்’ அடித்தேன்!) புத்தகங்களைப் போட்டுக்கொண்டு பெங்களூரில் உள்ள, நான் வெகுவாக மதிக்கும் ஸெலெக்ட் பழைய புத்தகக் கடை (ப்ரிகேட் ரோட் சமீபத்தில் உள்ளது) சென்றால் அவர்கள் நவமார்க்ஸீயர்களான அல்துஸர், க்ராம்ஸ்ஷி போன்றவர்களின் புத்தகங்களை மட்டும் எடுத்துக்கொண்டு மற்றவைகள் அங்கு ‘செல்ல மாட்டா’ என்றனர். பிறகு எம்ஜி ரோட் பின்புறம் உள்ள சாலையில் (சர்ச் ஸ்ட்ரீட்?) உள்ள ப்லாஸ்ஸம்ஸ் புத்தகக் கடைக்குச் சென்றால் அங்கும் நூறுபோல புத்தகங்களை எடுத்துக்கொண்டு இவைபோதும் ஆனால் எவ்வளவு பணம் கொடுக்கவேண்டும் எனக் கேட்டனர். ஆனால், ஒன்றுமே வேண்டாம் என்று நான் சொன்னவுடன் அனைத்துப் புத்தகங்களையும் எடுத்துக்கொள்கிறோம் என்றனர்! ஸ்ஸ்ஸ் அப்பாடா. கொஞ்சம் துக்கமாக இருந்தது – ஆனால் சந்தோஷமாகவும் இருந்தது.
இப்படியாகத்தானே எங்கள் நூலகத்தின் சுமார் பத்து சதவீதத்தைக் குறைக்க முடிந்தது.
தானமாகக் கொடுத்தவைகளை மறுபடியும் படிக்கத் தவிக்கிறேனா, தடவிப் பார்க்க ஆசைப்படுகிறேனா எனப் பார்த்தேன்; இல்லையெனத் திட்டவட்டமாகத் தெரிந்தது – இரண்டொரு புத்தகங்களை மட்டும் நான் ‘மிஸ்’ செய்தேன், அவ்வளவுதான்.
ஆக, சுமார் ஒரு மாதத்துக்குப் பின் மறுபடியும் நூலகத்தைக் குறைக்கவேண்டும் – புத்தகங்கள் படிக்கப்படவேண்டும் என்று ஆரம்பித்தேன்.
-0-0-0-0-0-0-0-0-
பின்னர் திராவிட இமுயக்கம், தமிழக வரலாறு, தமிழ் இலக்கியம்/அலக்கியம் பக்கம் வந்தேன்.
சாமி சிதம்பரனார் எழுதிய பெரியார் புத்தகத்தைத் தவிர – அனைத்து திராவிட இயக்க வரலாறு(!) + தமிழக வரலாறு சார்ந்த புத்தகங்கள் – கருணாநிதி, அண்ணா, சின்னக் குத்தூசி, ஈவெரா போன்ற பலரின் எழுத்துகள் தாங்கிய சுமார் 600 புத்தகங்கள் இன்னபிற இன்னபிற; ++ குடி-அரசு தொகுப்புகளும், பல சுயமரியாதைப் பிரசூர நிறுவன வெளியீடுகளும் — இப்படி வெளியே சென்றன. இவற்றின் மேல் நான் 2-3 வருடங்களையாவது செலவழித்திருப்பேன் என்பதை நினைத்தால், கூசுகிறது; ஆனால், இவற்றை நான் முதலிலேயே கூட மரியாதையுடன் படிக்கவில்லை – ஏனெனில், இவை முதல்தடவையேகூட படிக்கப்படிக்க அபத்தக் குவியல்களாக இருந்தன – என்பது இன்னொரு விஷயம்; ஆனாலும், படிக்காமல்-உள்வாங்கிக்கொள்ளாமல் ஒன்றின்மேலும் கருத்து என்பதை வளர்த்தெடுக்கமுடியாது என்பதை உணர்ந்தவன் நான். தமிழகத்தின் தற்கால நிலையைச் சரியாகப் புரிந்து கொள்வதற்கு, திராவிட உச்சாடனங்களை – அவற்றின் வரலாற்றுப் பின்னணியில் அறிந்துகொள்ளாவிட்டால் ஏலாது என்பதையும் புரிந்து கொண்டவன்.
… ஏறக்குறைய தற்காலக் கவிதைக்காரர்களில் – பாரதி, ஆத்மாநாம், ஞானக்கூத்தன், தருமு ‘பிரமிள்’ சிவராமு, சுந்தர ‘பசுவய்யா’ ராமசாமி போன்ற எனக்குப் பிடித்தவர்கள் சிலர் தவிர்த்து, 250 போல கவிதைப் புத்தகங்கள்/தொகுப்புகள் வெளியனுப்பப் பட்டன; உண்மையைச் சொல்லப்போனால் – வரவர புதுக்கழுதைகளையும் டுபுக் கவிதைகளையும் பார்க்கவேகூட ஆயாசமாக இருக்கிறது. (இன்னமும் உமா மஹேஸ்வரி உட்பட சில தற்கால கவிதாயினி, கவிதைக்காரர்களின் புத்தகங்களைக் கொடுப்பதாக இல்லை)
இவற்றுடன், சுமார் 800 தமிழ்ப் புதினங்கள் / சிறுகதைத் தொகுப்புகள் இப்படி வெளிச் சென்றன. (ஆனால் இன்னமும் பல தற்கால/அக்கால இலக்கிய/அலக்கிய ஜாம்பவான்களின், ஜாம்பவதிகளின் பலப்பல புத்தகங்கள் மிச்சம் இருக்கின்றன)
ஆனால் இவற்றை ப்லாஸ்ஸம்ஸ் கடை வாங்கிக் கொள்ளவில்லை; ஆக – பெங்களூர் எம்ஜி ரோட் பார்டன் ஸென்டர் (இப்போது இது இருக்கிறதா என்று தெரியவில்லை) வாசலில் ஜீப்பை நிறுத்தி, பக்கத்தில் கும்மாச்சியாக இவற்றைப் போட்டு, தமிழ் படிக்கத் தெரிந்தவர்கள் இலவசமாக எடுத்துக்கொள்ளலாம் (+கண்டிப்பாக இவை படிப்பதற்குத்தான், பழையபேப்பர் கடைக்கு அல்ல) என்றதும் ஒரு சனிக்கிழமை மாலையின் ஐந்தாறு மணி நேரங்களில் முக்கால்வாசிப் புத்தகங்கள் பறந்து விட்டன. கொஞ்சம் அவர்களிடம் பேசி – அவர்கள் ‘மௌனி / புதுமைப்பித்தன் என்றால் யார்’ என்று தெரிந்தால்தான் மௌனி/புதுமைப்பித்தன் புத்தகத்தை எடுத்துக் கொள்ளலாம் என்ற தெரிவுமுறை வேறு.
சிலர் மறுபடியும் மறுபடியும் வந்து எடுத்துக்கொண்டு போனார்கள் – மேலோட்டமாகப் பார்க்கும்போது எனக்கு இது ‘இலவசத்துக்கு அலையும்’ (= ‘ஃப்ரீயா கொடுத்தா, தமிழன்றவன் ஃபினாயிலையும் குடிப்பான்’) மனப்பான்மையாகத் தோன்றினாலும் – அவர்களில் சிலர் உண்மையிலேயே இலக்கிய/புத்தக விரும்பிகள் எனப் பட்டது. சிலர் தங்கள் நண்பர்களுக்குப் ஃபோன் செய்து, அவர்களுக்கு இன்ன புத்தகங்கள் தேவை என்று சொல்லி எடுத்துக்கொண்டு போனார்கள்கூட! எப்படியோ – யாரிடமோ இந்தப் புத்தகங்கள் பாதுகாப்பாக இருந்தால் சரியென்று விட்டுவிட்டேன்.
ஒரு சுவாரசியமான குறிப்பு: கதை நடந்த பல வருடங்களுக்குப் பின் – சமீபத்தில் என் நண்பர் ஒருவருடன் இதைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போது அவர்கேட்டார் – அந்தப் புத்தகங்களை எடுத்துக்கொண்ட யாராவது உன்னிடம், மரியாதைக்காவது (அல்லது வம்புக்காவது), ஏனிப்படிச் செய்கிறேன் என்று கேட்பதையோ, கொஞ்சம் பணம் கொடுப்பதாகச் சொல்வதையோ செய்தார்களா என்று. ஆனால், இப்போது யோசித்துப் பார்த்தால், ஒருவர் கூட அவற்றைச் செய்யவேயில்லை. நம் மனிதர்களின் குணாதிசியங்களே அலாதிதான் எனத் தோன்றியது! 8-) ஆனால், நானும் இதனை எதிர்பார்த்துக் காரியங்களைச் செய்யவில்லை என்பதும் சரிதான். ஆக, இப்போது – ஏன் அவர்கள் அப்படிச் செய்யவில்லை என நினைப்பதும் அசிங்கம்தான்.
-0-0-0-0-0-0-
… பின்னர், என்னுடைய வரலாறு, அரசியல், அறிவியல், கணிநியியல் தொடர்பான புத்தகங்களுக்கு வந்தேன். பைபிள்கள் என நான் கருதும் சுமார் 150 புத்தகங்களைத் தவிர என்னிடம் சுமார் 700 புத்தகங்கள் கொடுப்பதற்காக ( நோம் சோம்ஸ்கிகளும், அமர்த்தியா ஷென்களும், ரோஜர் பென்ரோஸ்களும், கார்ல் ஸேகன்களும், ஜாரெட் டையமன்ட்களும்…) இருந்தன. நண்பர்களிடம், என் அக்காலக் கணிநிக்குழுப் பையன்களிடம் முன்னறிவிப்பு செய்து பின்னவற்றை ஒரு ஞாயிறு மாலை வந்து இலவசமாக எடுத்துக்கொள்ளலாம் என்றதும் ஓடோடி வந்து அத்தனை புத்தகங்களையும் அள்ளிச் சென்றார்கள். தாமதமாக வந்தவர்களுக்கு ஏமாற்றம் ஏற்படாமல் இருக்க ரூ 500/- க்கு பரிசுக் கூப்பன்கள் (ப்லாஸ்ஸம்ஸ்) கொடுத்தேன். (மாரடைக்கும் வகையில் – இவர்களின் சிலர், ‘எனக்குப் பிடிக்கக்கூடிய’ புதுப்புத்தகங்கள் வாங்கிக் கொணர்ந்திருந்தார்கள், அய்யய்யோ!)
இன்னொரு நாள் – ஆங்கிலப் புனைவுகளுக்கு, மொழியாக்கங்களுக்கு இப்படிச் செய்தேன். பழைய/புதிய க்லாஸ்ஸிக்குகளைத் தவிர மற்ற புத்தகங்களைக் கொடுத்தேன்; சுமார் 600 புத்தகங்கள் இப்படிச் சென்றிருக்கலாம். (இப்படி வெளிச்சென்ற புத்தகங்களில் – சிலவற்றை பிரிந்தபின் துடிதுடித்துப்போய் மறுபடியும் தேவைமெனெக்கெட்டு வாங்கினேன்! அரிஸ்டோஃபேனீஸ்-ன் நாடகத் தொகுப்பு, மஹாமஹோ இலக்கியப் பிதாமகர் – பிரமிக்கவைக்கும் அடோல்ஃபோ பியொய் கஸாரெஸ்-ன் மொரெல்லின் கண்டுபிடிப்பு போன்றவைகள் இந்த வகையறா.
பின்னர் மதம் தத்துவம் என ஆரம்பித்து க்றிஸ்தவம் (பழைய ஏற்பாடு, அந்தனி டி’மெல்லோ, பாலைவன ஞானிகள் புத்தகங்கள் தவிர), இஸ்லாம் (மொஹெம்மத் ஸஃப்ருல்லா கானுடைய கொர்-ஆன் ஆங்கிலப் பதிப்பு, மௌலானா வஹீதுத்தீன் கான், அவெர்ரீஸ் எனும் இப்ன்-ரஷீத் புத்தகங்கள் தவிர), சமணம், பௌத்தம், யூதம், ஷின்தோ என பல வகைப் புத்தகங்களை – பலதரப் பட்டவைகளைக் கழித்தேன். இவை சுமார் 200 இருந்திருக்கலாம். (தவறுதலாக வெளிச்சென்ற, குப்புஸ்வாமி ஸாஸ்திரி அவர்களின் அழகான இந்திய தர்க்க ஸாஸ்திரப் புத்தகத்தை மறுபடியும் வாங்கினேன்)
-0-0-0-0-0-
எப்படியும் சுமார் 4000 புத்தகங்கள் இப்படிஅப்படியென்று சென்ற நான்கு வருடங்களில் வெளிச்சென்று விட்டன. :-) அதாவது பாதி நூலகம் காலி. :-))
இருந்தாலும், மேற்கண்ட களையெடுக்கப்பட்டகுறைக்கப்பட்ட புத்தகப் பகுப்புகளில் மீதமிருப்பவையிலும் இன்னொரு முறை (அல்லது பலமுறை) சமன் செய்யவேண்டும். ஆகவே இனிமேலும் புத்தகக் குறைப்பு செய்வதாகத்தான் இருக்கிறேன். :-))
… பழைய தமிழ்ச் சஞ்சிகைகளும் இருக்கின்றன. நண்பர்களைக் கேட்டால் ரோஜா முத்தையா நூலகத்தை அணுகச் சொன்னார்கள்; ஆனால், நான்கு ஆண்டுகள் முன்னர் அதனைஅணுகியபோது சுரத்தில்லாத பதில் வந்தது. ஆகவே, அவற்றை அஹ்மெதாபாத் தமிழ் நண்பர் ஒருவருக்குக் கொடுப்பதாக இருக்கிறேன். பார்க்கலாம்.
சென்ற இரு வாரங்களில் இன்னமும் சுமார் 200 புத்தகங்களை என் பள்ளி நூலகத்திற்கும், சில பிற நூலகங்களுக்கும் கொடுத்திருக்கிறேன்.
ஆனாலும் ஒவ்வொரு முறை நான் புத்தகக் குறைப்பு செய்யும்போதும், ஏதோ பாரதப் போரில் ஈடுபட்டாற்போல அலுப்புதான்! சமன நிலை போய்விடும். சில சமயங்களில் ஜுரமே வந்துவிடும்; ஆனாலும், சிறிது நாட்கள் கழித்து நிம்மதியாகத்தான் இருக்கும்.
எதையும் கட்டிக்கொண்டு நாம் போய்ச்சேரப் போவதில்லை என்பதும் ‘in the long run, we are all toast!‘ என்பதும் தெரியவருவது, மேலதிக நிம்மதியைக் கொடுக்கக் கூடியதுதான்!
-0-0-0-0-0-0-
இருந்தாலும் சரி. எவற்றை நான் நிச்சயம் தானமாகக் கொடுக்கவே மாட்டேன் (என இதுவரை நினைத்துக் கொண்டிருக்கிறேன்)?
- (நான் அறிந்துகொண்ட தமிழ் + ஆங்கிலம் + மொழிபெயர்ப்பு) இலக்கியத்தின் மஹாமஹோ க்லாஸ்ஸிக்குகள்
- பாபுஜியின் தொகுக்கப்பட்ட எழுத்துகள்
- பாபுஜி பற்றிய புத்தகங்கள்
- தரம்பாலின் தொகுக்கப்பட்ட எழுத்துகள்
- சில முக்கியமான தத்துவவிசார க்லாஸ்ஸிக்குகள்
- ரிக்வேதம் (பல வடிவங்கள்; மண்டையில் அடித்துக்கொண்டு, மேக்ஸ்ம்யூல்லர் கைவண்ணத்திலும்)
- மஹாபாரதம் (பல வடிவங்கள்)
- குறுந்தொகை
- ராமாயணம் (வால்மீகி + கம்பன்)
- கீதை – பல உரைகளில், எனக்குப் பிடித்தமான லோகமான்ய திலகரின் கீதா ரஹஸ்யம் (தன்னுடைய தாத்தாவுடையதான இதை, சாய்நாத் அன்பளிப்பாக, முப்பது வருடங்கள்முன் எனக்குக் கொடுத்தான்)+ ஸ்ரீ க்ருஷ்ண ப்ரேம் அவர்களின் உரை
- தோட்டம், தாவரவியல், விவசாயம், தற்சார்பு பற்றிய புத்தகங்கள், க்லாஸ்ஸிக்குகள்
- மின்னியல் உட்பட பலவிதமான கைவேலைகள் பற்றிய DIY வகையறா புத்தகங்கள்
- இசை, கல்வி, திரைப்படம் பற்றிய/குறித்த மூலப் புத்தகங்கள்
சிலபல புதிர்கள், அறிவியல், கணிதம், வானசாஸ்திரம் சார்ந்த புத்தகங்கள்- …
- …
- கேல்வின் & ஹாப்ஸ் கேலிச்சித்திரப் புத்தகங்கள் அனைத்தும்! 8-)
… ஹ்ம்ம்… இவை, சுமார் 1500 கணக்கில் இருக்கலாம். பார்க்கலாம்.
உண்மையில் புத்தகங்களும், அவை குறித்த நினைவுகளுமில்லாமல் எனக்கு (ஏன், எவருக்குமே!) வாழவே ஏலாதுதான்! :-)
சுபம்.
July 10, 2014 at 11:24
ஐயா.
All that matters in the end is love and let go of it என்பார்கள். உங்கள் செய்கை பெருமைப்படத்தக்கது. நீங்கள் இப்போது *ல் இல்லை போல. * பற்றி எழுதியிருக்கிறீர்களா ?
—->>> அய்யா ஷிவாத்மா, உங்கள் பின்னூட்டத்தைச் சிறிது எடிட் செய்திருக்கிறேன். கேள்விகளுக்குப் பதில்கள் 1) இருக்கிறேன். 2) இல்லை. :-)
நீங்கள் என்னை எங்கோ வைக்கிறீர்கள் – நான் ஒரு சாதாரணன் தான். ஆனால், ‘ஆசை இருக்கு தாஹ்ஸில் பண்ண!’ :-))
July 11, 2014 at 08:15
நன்றி. நாம் முன்பே சந்தித்திருப்பதால் உங்களை எங்கும் வைக்க அவசியம் ஏற்படவில்லை. :).
*-க்கு வரும் நான் இருமுறை உங்களை சந்திக்க விழைந்து அழைத்த, குறுஞ்செய்தி அனுப்பிய, எண்-ஐ முன்பே மாற்றிவிட்டீர்கள் போல.
புதுவை வந்தால் தெரிவியுங்கள்.
July 11, 2014 at 10:23
அய்யன்மீர்!
நான் *லிருந்து கொஞ்ச # நாட்களில் ^ கிளம்பிவிடப் போகிறேன். பின் ~,|,’, என பல இடங்கள் >ம் <ம் சுற்றலாம் என @எண்ணம். போகவேண்டிய இடங்களில் ஒரு நல்ல %ம் & (=, . ? / \[]) போக முடிந்தால், தேவலை! $ அதிகம் ஆகுமோ?
என் எண்ணை மாற்றிவிட்டேன். இப்போதெல்லாம் கடலெண்ணெய்தான். மேலும், வாரத்திற்கு மூன்று நாட்கள்தான் ஆன். மற்ற நாட்களெல்லாம் பென். நான் பென்னுரிமைவாதி.
புதுவை. ஆ! நிச்சயம். 8-)
July 10, 2014 at 12:44
Sir – I have got a suggestion (actually a wish) to make!
Whenever you are ready with the next lot of books to gift away, could you share with the readers of this blog the list of those books. Of course, when I say this, I have myself in mind.
I can select the books I like and arrange to receive it from you in a way it suits you. Do you think this would work? Likewise, for anyone else you are interested in the books.
What might happen if more than one end up liking a book: you could choose to give it away on the basis of ‘FCFS’ or your whim.
Warm Regards,
Mahesh
—->>> அன்புள்ள மஹேஷ், குறித்துக் கொள்கிறேன், பார்க்கலாம். ஆனால், என் புத்தகங்களில் பல இரண்டு இடங்களில் இருக்கின்றன. அடுத்த குறைப்புக்கு ஒருவருடம் ஆகலாம்.
மேலும், இரண்டுமுறை இம்மாதிரி ஈமெய்ல் அறிவிப்பு செய்திருக்கிறேன். ஆனால் இது உதவவில்லை.
உங்கள் ஆர்வத்துக்கு நன்றி.
__ரா.
July 10, 2014 at 14:28
மின்னியல் உட்பட பலவிதமான கைவேலைகள் பற்றிய DIY வகையறா புத்தகங்கள்//
இந்தப் புத்தகங்களையெல்லாம் இனாமாகக் கேட்கவில்லை.. குறைந்தபட்சம் அதை ஒரு லிஸ்ட்டாவது எடுத்து எங்களைப் போன்றோருக்கு நீங்கள் அளிக்கலாமே..? :)
—->>>> அய்யா பாலசுந்தர், கூடிய விரைவில், என் மனதை கொள்ளை கொண்ட அந்த மின்னியல் ஜாபிதாவை அளிக்கிறேன். (ஆனால் எவ்வளவு பேருக்கு இது உதவும் என்று தெரியவில்லை)
__ரா.
July 11, 2014 at 11:37
Actually – Balasundar’s comment reminds me of something a few people have requested you in the past and I too have thought of. Again, it is a wish: If you do have a ready list of your books you deem significant, could you share it?
Also, shall look forward to your next round of library ‘rationalization’, whenever it occurs.
July 1, 2018 at 17:36
[…] புத்தகங்களை தானம் கொடுப்பது எப்படி? […]
May 1, 2020 at 13:54
[…] புத்தகங்களை தானம் கொடுப்பது எப்படி? […]