புத்தகங்களைப் பிரிவது எனும் சோகம் (அல்லது மகிழ்ச்சி?)

July 9, 2014

புத்தகாயண சூத்திரம்(*) – பாகம் 1

… சுமார் ஐந்து வயதிலிருந்து பலவகையான புத்தகங்களைத் தொடர்ந்து படித்துக்கொண்டிருந்தாலும், சுமார் 35 வருடங்களாகத்தான் நான் புத்தகங்களை சொந்தப் பைசாவைக் கொடுத்து வாங்கிப் படித்துக்கொண்டிருக்கிறேன்.

மேலும், பல நூலகங்களிலிருந்தும் கடன்வாங்கிப் பல அழகான புத்தகங்களைப் படித்துக்கொண்டிருக்கிறேன் – முக்கியமாக சென்னையில் இன்றும் உள்ள, பழவந்தாங்கல் வட்டார, இந்தியத் தொழில்நுட்பக் கழக, சென்னை மாவட்ட மத்திய (=தேவனேயப் பாவாணர்), கன்னிமரா, சென்னை பல்கலைக்கழக, ஏலூர் (பெங்களூர்+சென்னை) போன்ற நூலகங்களுக்கு நான் மிகவும் கடமைப் பட்டிருக்கிறேன்.

இதைத் தவிர பல ஊர்களின் பல பழைய புத்தகக் கடைகளிலும் – பெங்களூர், லக்னோ, கொல்கொத்தா, தில்லி, நாக்பூர்  என, சில பிற நாடுகளிலும் – மயிலாப்பூர்  தேசத்தின் பிரசித்தி பெற்ற ஆழ்வார் கடை உட்பட — எண்ணற்ற மணி நேரங்களை முதலீடு செய்திருக்கிறேன்.

… பலவிதமான அற்புத அனுபவங்களில், அண்டவெளிகளில் இப்புத்தகப் பக்கங்களினூடே சஞ்சரித்திருக்கிறேன். கனவா நனவா எனத் தெரியாத எண்ணப் பரப்புகளில் நீந்தியிருக்கிறேன். இத்தனைக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் மட்டுமேதான் என்னுடைய பெரும்பாலான படிப்புகள்/புரிதல்கள். மற்றமொழிகளில், நான் ஒரு நிரக்ஷரகுக்ஷிதான். :-(

இத்தனைக்கும், என்னுடைய தற்கால நிலைமையான – ஸம்ஸ்க்ருதத்தை, க்ரேக்கத்தை எழுத்துகூட்டி வாசித்துப் புரிந்துகொள்வதிலிருந்து, புரிந்து கொள்வதிலிருந்து நான் வெகுவாக முன்னேறியிருக்கவேண்டும். ஆனால் செய்யவில்லை – இதற்கான பல காரணங்களில் ஒரு முக்கிய காரணம், மரியாதைக்குரிய ஆசான்கள்/குருக்கள் கிடைப்பது (கிடைத்தாலும்கூட அவர்களைக் கண்டுகொண்டு காலடியில் படிப்பது) எனக்கு அரிதாகிவிட்டிருக்கிறது;  இந்த நிலைமையின் முக்கிய காரணங்களில், என் அகங்காரம் வகிக்கும் பங்கு அதிகம். ஆனாலும், குருவே வேண்டாமென்றாலும்கூட, இன்னொரு முக்கியமான முட்டுச் சந்துக் காரணம்  – என்னுடைய நேர மேலாண்மையின்மை. (பாருங்கள், இப்படியே எழுதிக் கொண்டிருப்பதற்கு பதிலாக, நான் விழையும் மற்றகாரியங்களின் மேல் கவனம் கொள்ளலாம் அல்லவா? வலைப் பதிவெழுதும் ஆர்வத்தையும் மீறி அதனைக் கடைந்தேறி மேலே செல்லவேண்டும் அல்லவா??)

… … இருந்தாலும், நம்பவே முடியாத அளவுக்கு பெரும்பேறுகள் பல பெற்றவன் நான். என் வாழ்க்கை மிக நல்லபடியாகவே இதுவரை  நடந்திருக்கிறது. இனிமேலும் அப்படியேதான் நடக்கும்.

-0-0-0-0-0-0-

சுமார் பத்து வருடங்களுக்கு முன் அப்போதைய பெங்களூரின் ஒரு எல்லையோரக் கிராமத்து ஏரியின் கரையிலுள்ள மாஞ்சோலைக்கிடையே ஒரு ‘சொந்த’ வீடு கட்டியபோது – பேஸ்மென்டில் – மேலழகூட்டப்படாத கச்சா க்ரானைட் சுவர்களினிடையே சுமார் 1400 சதுர அடி விஸ்தீரணத்திற்கு எங்களுடைய நூலகம் உருவானது. அதுவரை, தேடித்தேடிச் சேகரித்த முக்குளித்த – கிட்டத்தட்ட 8800 – 9000 புத்தகங்கள்.

இந்தப் புத்தகங்களுக்கு அப்பால் ++ பழைய தமிழ் சஞ்சிகைகள் (சிற்றிதழ்கள் மட்டும்தான் – தாமரை, அஃ, சரஸ்வதி, மணிக்கொடி, பிரக்ஞை, கண்ணதாசன், கொல்லிப்பாவை, கசடதபற, எழுத்து, சதங்கை, கிராமஊழியன், படிகள் என்பது போல பலவித/தரமானவை – இக்காலங்களில் நிகழ், மீட்சி, காலச்சுவடு வரை நீண்டவை); ++ ஆங்கிலச் சஞ்சிகைகள் (ரீடர்ஸ் டைஜெஸ்ட் வகையறாக்கள் கண்டிப்பாக இல்லை; ஆனால் எல்ஆர்பி, ந்யூயார்க்கர், ஹட்ஸன் ரெவ்யூ, க்ரான்டா, தி மௌன்டெய்ன் வ்யூ, ஒரையன் சஞ்சிகை, ரிஸர்ஜென்ஸ், கான்டெக்ஸ்ட் போன்றவை – நிறைய பிற பலவகையானவை).

இவற்றில் குத்துமதிப்பாகச் சொல்லப்போனால் — தமிழ்ப் புத்தகங்கள் சுமார் 30 சதம்; ஆங்கிலம் சுமார் 65 சதம்; சுமார் இரண்டு சதம் ஸம்ஸ்க்ரிதமும் ஹிந்தியும்; சில தெலெகு புத்தகங்களும் இருந்தன. (என் பெற்றோர்கள் தெலெகு மொழியிலும் பாண்டித்தியம் பெற்றவர்கள்)

பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட, தூசி படியமுடியாத – இருந்தாலும் நிரம்பி வழியும் எஃகு+கண்ணாடி அலமாரிகள், இயற்கையிலேயே குளுமையான இதமான காற்றோட்டமான பிரிவுகள், உட்கார்ந்து படிக்க பாய்கள் திண்டுகள், சாய்வு நாற்காலிகள் என்கிற சூழல் வேறு.

மனைவிக்கும் பலகாலமாகவே புத்தகப் பித்து. எங்கள் குழந்தைகளையும் சிறுவயதிலிருந்து புகட்டி வெற்றிகரமாக புத்தகப் பித்தர்களாகவும் ஆக்கிவிட்டோம். சுமார் ஐந்து வயதிலிருந்து அவர்கள் பொதுவாகவே, தாங்களே தேர்வுசெய்து படிப்பவர்களாகிவிட்டார்கள். (இது பற்றி இன்னொரு சமயம்)

… அடிக்கட்டுமான நூலகத்திற்குள் சென்றாலே ஒரு அற்புதமான உணர்ச்சி – ஒவ்வொரு புத்தகம் சொல்லும் கதையும் சொக்கிப்போகவைக்கும். அவற்றைப் படிக்கக்கூட வேண்டாம்; வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தாலே ஒரு இனம் புரிந்த சுகம். கதாபாத்திரங்கள் கூடவே நடனமாட ஆரம்பித்து விடுவர். (கடைசியாக இப்படி என்னுடன் பேச வந்தது ஹெலென் டீவிட் பெற்றெடுத்த லுடோ)

வாழ்க்கை தெளிந்த நீரோடை மாதிரித்தான் போய்க் கொண்டிருந்தது.

தன் புத்தகாயண சூத்திரத்தைப் (=Pusthakāyana Suttā)படித்துக்கொண்டிருக்கும் புத்தர் (http://www.elephantjournal.com/2012/03/love-should-never-get-lost-in-translation/buddha-reading/)

தன் புத்தகாயண சூத்திரத்தைப் (=Pusthakāyana Suttā) படித்துக்கொண்டிருக்கும் புத்தர்; படம் இங்கிருந்து.

… இருந்தாலும், புத்தகாயண சூத்திரத்தைப்(*) பற்றி யோசிக்க ஆரம்பித்தது என்னைச் சிந்திக்கவைத்தது.

-0-0-0-0-0-0-0-0-

…எனக்கு, என் சொத்துக்கள் எனக் கருதுவதை விட்டுக் கொடுப்பதென்பது கடினமான விஷயம். ஒரு ப்லாஸ்டிக் விஷயத்தைக் கூடத்  தூக்கிப் போடமாட்டேன். காயலாங்கடைக்கு எதையும் அனுப்புவது ஒவ்வாத விஷயம். எந்த ஒரு பொருளும் எதற்காகவாவது பயன்படும், ஆகவே மறுசுழற்சி செய்யப் படவேண்டும் எனப் பேயாக அலைவேன். சேமிப்பேன். கருவிகளை, உபகரணங்களை பழுதுபார்ப்பது, சிறு பொம்மைகள்,  அறிவியல் பரிசோதனைகளைச் செய்வதில் கொஞ்சம் பித்து. ஆக வீடெல்லாம் தட்டுமுட்டுச் சாமான்கள் – கம்பிகள், தகடுகள், மின்னியல் வஸ்துக்கள், மரவேலைச் சாமான்கள், வேதியியல் உபகரணங்கள், மெக்கானிகல் கருவிகள், திறக்கப்பட்ட (=உட்பாகங்கள் உருவப்பட்ட) கருவிகள் இன்னபிற இன்னபிற…

இவை கொஞ்சம் உதவிகரமாகச் சிலவேளைகளில் (ஆனால், எல்லா சமயங்களிலும் சுவாரசியமாக) இருந்தாலும், இவைகள் அடுக்கி, பிரித்துவைக்கப்படாமல் ஆங்காங்கே கிடந்தமையால் – இவற்றால் குடும்பவாழ்க்கையில் ஏற்படும் அழுத்தமென்பது அதிகம்; இந்த நிலைமையில், இவற்றுடன் செலவுசெய்யும் நேரங்களில் – முக்கியமான லௌகீக காரியங்கள் பல தடைபட்டுப்போகும் தொடர்படலங்களும், திட்டு வாங்கல்களும், குற்றவுணர்ச்சி அலைகளும்…

இவற்றினூடே நல்ல திரைப்படங்களை, இசைவடிவங்களை சேர்க்கும், கேட்கும், பார்க்கும்  தொடரும்  பித்துக்குளித்தனங்கள்.

இவற்றைத் தவிர ஒடியோடி நாட்டு விதைகளைச் சேமிக்கும் பித்து. தோட்டவேலை, உபகரணங்கள், பரிசோதனைகள்.

மேற்கண்ட பாண்டியாட்டங்களைத் தவிர, என்னுடைய புத்தகங்களில்தான் என் உயிரே இருப்பதுபோல ஒரு எண்ணம். நான் (சில நேரங்களில்) கடன்வாங்கிய புத்தகங்களைக் குறிப்பெடுத்துக்கொண்டு திருப்பிக் கொடுத்துவிடும் அதேசமயத்தில் முடிந்தவரை என்னுடைய புத்தகங்களைக் கடன்கொடுக்க இசைய மாட்டேன்; அப்படியே வேறு வழியேயில்லாமல் புத்தகங்களைக் கடன் கொடுத்தாலும் ஒரு  குறிப்பிட்ட  கால அளவுக்குப் பின் நச்சரித்து, புத்தகங்களை வாங்கிவிடுவேன்.

இப்படியிருந்தும் நெய்வேலி ‘வேர்கள்’ ராமலிங்கம் முதல் ராஜமார்த்தாண்டன் ஊடாக, தருமு ‘பிரமிள்’ சிவராமு வரை பலர்,  என்னிடம் கடன் வாங்கிய சில மிகமுக்கியமான புத்தகங்களைத் திருப்பிக் கொடுக்கவில்லை என்பது சுவாரசியமான விஷயம்! இன்னொரு அதிசுவாரசியமான விஷயம் – சில புத்தக ஆர்வல இளைஞர்களின் வருகைக்குப் பின், சில புத்தகங்கள் புரிந்துகொள்ளமுடியாமல் ‘காணாமல்’ போவது! எங்கேயோ அவை சௌக்கியமாகவும் உபயோகப்பட்டுக்கொண்டும் இருந்தால் சரி! 8-)

உடைமைகளின், போர்த்திப்போர்த்தி வைப்பவைகளின் சர்வாதிகாரம் என்பது மிகவும் கொடூரமான விஷயம்தான்!

… And, oh well, more often than not, the possessions begin possessing you,  you know what I mean? :-(

புத்தகங்களும் அப்படித்தான் – வெறும் உடைமைகள்தான், அவையும் என்னை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பவைதான் –  என இனம் கண்டுகொள்வதற்கு, எனக்குப் பல பத்தாண்டுகள் ஆகிவிட்டன.

… ஆகவே, மீண்டும், மீள்வதற்காக புத்தகாயண சூத்திரத்தைச் சரணடைந்தேன்.

-0-0-0-0-0-0-0-

வீட்டில் உட்கார்ந்து யோசித்ததில், நான் மதிப்பவர்களுடன் (=மனைவி) உரையாடியதில் இந்தச் சேமிப்புகளுக்கு பல காரணங்கள்:

 1. அத்தனை இன்பங்களையும் அள்ளிப் பருகிட நினைக்கும் பேராசை
 2. பலதடவை படித்தாலும், திருப்தியில்லாமல், வரும்காலங்களில் மறுபடியும் ஒருகால் படிப்போமோ என இருப்பதை அப்படியே வைத்துக்கொள்ள ஆசை
 3. கிடைப்பதை எல்லாம் உடைமையாக்கிக் கொள்ளும் மனப்பான்மை
 4. வீட்டில் (கொலு வைப்பது போல) உடைமைகளை வைத்தலங்கரித்து – வருபவர்களுக்கு பீதியூட்டும் போக்கு
 5. ‘நான் எவ்வளவு படித்திருக்கிறேன் பார்!’ எனக் கொக்கரிக்கும் அகங்காரம் (இதற்கும் ஃபேஸ்புக், ட்விட்டர்சார் அரைகுறைப் பின்னோடிகளைப் பார்த்து,வலைத்தளத்தின் பக்கப்பார்வைகளைப் பார்த்துப் புளகாங்கிதப் பட்டுக் கொள்ளும் மனப்பான்மைக்கும் அதிகவித்தியாசம் இல்லை)
 6. நான் படித்து ரசித்த, எனக்கு எழுச்சி கொடுத்த புத்தங்கங்கள், என் குழந்தைகளுக்கும் – என்னுடைய குறுவட்ட நண்பர்களுக்கும், புத்தறிமுக இளைஞர்களுக்கும் நிச்சயம் எழுச்சி கொடுக்கும்தானே – ஆகவே அவர்கள் அவற்றுக்கு தயாராக இருக்கும்போது புத்தகங்களும் அவர்களுக்குத் தயாராக இருக்கவேண்டும் எனும் எதிர்பார்ப்பு – இப்புத்தகங்களை அவர்கள்  (என்னைப்போல பிரயத்தனப்படாமல்) அடைவதற்கு அவர்களுக்கு ராஜபாட்டை போட்டுத் தரவேண்டும் என்கிற உந்துதல்
 7. தேடுதல், அல்லாடுதல் இல்லாமல் சுளுவாகக் கிடைக்கும் எந்த வஸ்துவின் அருமைபெருமைகளையும் மனிதன் சுலபத்தில் அறிய மாட்டான் என்கிற உலக நியதியைப் புரிந்துகொள்ள மறுத்தல்
 8. எனக்குப் புத்தகங்களின் வாசனைகள் மிகவும் பிடிக்கும். அவை பலதரப்பட்ட வசீகரங்களைக் கொண்டிருப்பதாக பிரமைகளும்;  படிப்பனுபவத்திற்கு அப்பாற்பட்டு அவை, நாசியனுபவத்தையும் அளிக்கின்றன எனக்கு! ஆகவே மேலதிகமான பிடிப்புகள், இவ்வாசனைகளை எப்படி விட்டுக்கொடுக்க முடியும்! (1981 வாக்கில் ‘க்ரியா’ கொணர்ந்த ஜேஜே: சில குறிப்புகளின் வாசனையே அலாதிதான்! பின்னர் ‘காலச்சுவடு’ அச்சிட்ட பிரதிகளில் இவ்வாசனையில்லை.)
 9. மேலும் கையில் திண்மையான புத்தகம் ஒன்றை வைத்துக்கொண்டு கிறங்கிப்போவது என்பது எனக்குப் பழக்கமாகி விட்டது. ஆகவே தொழில் நுட்ப ரீதியான மின் -புத்தகங்களை உபயோகிக்க கொஞ்சம் அதிகமாகவே தயக்கம்; ஆக – பாட்டரி சார்ஜ் போய்விடுமோ என்ற கவலையில்லாமல் எனக்கு ஒரு சமயத்தில் 3-4 நிஜ புத்தகங்களைப் படித்தால் போதும்; கின்டில் போன்றவைகளில் நூற்றுக் கணக்காக புத்தகங்களைப் பதுக்கிக் கொண்டு கண்குறுகப் படிக்கவேண்டிய, செல்லும் இடமெலாம் படித்துகொண்டேயிருக்கவேண்டிய அவசியம் எனக்கில்லை எனும் மனப்பான்மை
 10. புத்தகங்களை உதாசீனப் படுத்தும் போக்கு – பக்கங்களை மடிப்பது, கிறுக்குவது, அடிக்கோடிடுவது, காப்பி-டீ கறைபடிவது, பைன்டிங் சிதற – பக்கங்கள் தையலை விட்டுப் பிரிய விரித்துப் படிப்பது போன்றவை எனக்கு ஒத்துவராத காரணத்தால் – புதுக்கருக்கு குலையாத புத்தகங்களின் மீது நாட்டம், அவற்றைப் போர்த்தி வைக்கும் குணம்
 11. இந்தியச் சூழல்களில் தரமான பொது (அல்லது தனியார்) நூலகங்கள் இல்லை; அப்படியே ஒன்றிரண்டு இருந்தாலும் அவை அணுகத் தக்கவையாக இல்லை – ஆகவே ‘தன் கையே தனக்குதவி’ தான்  வழி; நமக்குப் பிடித்த புத்தகங்களை நாம்தான் வாங்கிக் கொள்ளவேண்டும் எனும் பிரத்தியட்ச உண்மை
 12. ஒரு குழுவாக இருந்து பலவிதமான புத்தகங்களை வாங்கி வாராவாரம் அவற்றை புத்தகமாற்று செய்யக்கூடிய, அவற்றைப் பற்றி அளவளாவக் கூடிய பாங்கு நம்மிடையே அதிகம் இல்லை
 13. நாம் புத்தகம் வாங்காமல், ஓசியிலேயே படித்துக்கொண்டு  – தமிழ் இலக்கியம் வளரவேயில்லை என மட்டும் பேசுவது தவறு மட்டுமல்ல – அது கயமை, எனும் எண்ணம்
 14. … மேல்கண்டவற்றுக்கு அப்பால் –  பொதுவாகவே, என்னுடைய ஆன்மிக வளர்ச்சியின்மை / முதிர்ச்சியின்மை, அவ்வளவுதான்.

இந்தப் புத்தகங்களை நான் சேமித்து வைத்துக்கொள்ளக் கூடாது, போர்த்திப் போர்த்தி வைத்துக்கொள்ளக்கூடாது – ஆகவே தானமாகத் தந்துவிடவேண்டும் என்பதற்கும் பல காரணங்கள்:  (இவையும் இன்னபிறவும் – … அடுத்த பாகத்தில் – புத்தகங்களை தானம் செய்வது எப்படி? (அதாவது, புத்தகாயண சூத்திரம் – இரண்டாம் பாகம்))

-0-0-0-0-0-

குறிப்புகள்:

(*) புத்தகாயன சூத்திரம் எனும் பாலி மொழி  ‘Pusthakāyana Suttā’  — முன்னொரு காலத்தில், ஸம்ஸ்க்ரிதத்தில்  Pusthaka Prajñāpāramitā Sūtra – புத்தக முழுமைஞான சூத்திரம் என்று அழைக்கப்பட்டது. இது,  கோதமா என்றழைக்கப்பட்டு பின்னர்  ‘புத்தா’ எனப் புகழ் பெற்ற புத்தரால் விளம்பப் பெற்ற சூத்திரம்; பிற்காலத்தில் சிலர் இதனை புத்தக-ஆயன எனவும் பலர் இதனை (தமிழ்நாட்டில்) புத்த-காயன எனவும்  பிரித்துப் புரிந்துகொண்டனர். தமிழில் உச்சரிப்புக்கும் வரிவடிவங்களுக்கும் உள்ள போதம் காரணமாக, புத்தரால் இயற்றப் பட்டதால், புத்தகாயண சூத்திரம் என இது அழைக்கப் படவேண்டும் எனத் தவறாக நினைத்துக்கொள்கின்றனர்.

ஆனால், என் பார்வையில் இது புத்தகங்களைப் பற்றியதாக, அவைகள் மீதுள்ள பற்றை, பேராசையை மீறி, எப்படி மானுடம் கடைந்தேறவேண்டும் என, பல எடுத்துக்காட்டுகள் + கதைகள் மூலமாக விளக்குவதால், நான் ஒரு தமிழனாக இருந்தாலும் – முதல் மொழிமாற்றத்திற்கே எனது வாக்கு, சாதுர்யம் எல்லாம்.

அலக்கியம், காப்பிக்கடை, இன்னபிற இழவுகள்…

2 Responses to “புத்தகங்களைப் பிரிவது எனும் சோகம் (அல்லது மகிழ்ச்சி?)”


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s