அந்த்ரெய் தார்கொவ்ஸ்கி – ஸொலாரிஸ் (1972) ஆஹா!
July 14, 2014
இது திரைப்பட விமர்சனம் அல்ல. பயப்படாதீர்கள்.
விமர்சனங்களுக்கும், கட்டுடைப்புகளுக்கும், பின் நவீனத்துவக் குண்டூசிக் குத்தல்களுக்கும், பின்னில்லா அரதப் பழசுமொண்ணைகளுக்கும், மண்வெட்டிதாச அகழ்வாராய்ச்சிகளுக்கும், வெட்டியொட்டும் மாண்புக்கும், போருரைகளுக்கும் நிறைய பேர்கள், இந்தத் தமிழைக் கூறு போடும் நல்லுலகில் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும்.
இது திரைப்பட அறிமுகமும் கிடையாது. ஏனெனில் இந்தப் படம் பொதுவாகவே ஓரளவு பிரபலமான படம்தான்.
பயமே வேண்டாம் – நான் எழுதப் போவது என் எண்ணங்களை மட்டுமே. அதுவும் அதிகமாக எழுதி உங்களுக்கு மூளைக் குடைச்சல் கொடுக்கும் முனைப்பு இல்லை.
-0-0-0-0-0-0-0-
… நான் முதலில் இந்தப் படத்தைப் பார்த்தது 1980ல் என நினைவு. நிஜமாகவே அரண்டு விட்டேன் – அதற்குச் சில வருடங்கள் முன் தான் ஸ்டான்லி க்யுப்ரிக்-ன் ‘2001: ஒரு விசும்புச் சாகசம்’ (2001: A Space Odyssey) பார்த்திருந்தேன் என்றாலும் கூட! பல தளங்களில், அப்படி ஒரு பிரமிக்கத்தக்க படமாக இது இருந்தது.
சென்னையின் ரஷ்யக் கலாச்சார மையத்தில், இதனைப் பார்த்ததாக நினைவு. கூட சுமார் 50 பேர் இருந்திருந்தாலே அதிகம். முழு படத்தினுடை ஒரு இருமல் கூட இல்லை. ஒரே மெஸ்மரைஸேஷன் தான்! வேறென்ன சொல்ல.
நான் மிகவும் மதிக்கும் ஸ்டானிஸ்லாவ் லெம் எனும் போலந்து தேச அறிவியல்-புனைவு எழுத்தாளர் கைவண்ணத்தில் வெளிவந்த நாவலின் திரையுருவாக்கம் இது.
பொதுவாகவே – எனக்கு ஏதாவது ஒரு புனைவு மிகவும் பிடித்திருந்தால், அதன்மேல் ஒரு திரைப்படம் எடுக்கப்பட்டால், முடிந்த வரை, அதனைப் பார்க்காமல் இருந்துவிடுவேன். ஏனெனில் – ஒரு புனைவைப் படித்து அதன்மேல் நான் எழுப்பியிருக்கும் பல கட்டுமானங்களுக்கு, புரிந்துகொள்ளல்களுக்கு – பெரும்பாலும் திரைப்படங்கள் உதவியாக இருப்பதில்லை.
தார்கொவ்ஸ்கி என் அபிமானத் திரை இயக்குனர் – இருந்தாலும்கூட அவரால் லெம்-ன் கதையைக் கட்டுக்குலையாமல் எடுக்கக்கூடுமா என்று எனக்குச் சந்தேகமாகவே இருந்தது. கொஞ்சம் அடிவயிற்றுக் கலவரத்துடன் தான் இதனைப் பார்த்தேன். ஆனால் இயக்குனர் ஏமாற்றவில்லை.
கதை: (திண்ணை தளத்திலிருந்து வெட்டிஒட்டியிருக்கிறேன்)
“ஸ்டானிஸ்லாவ் லெம் என்கிற ருஷ்ய நாவலாசிரியர் எழுதிய நாவலின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம். இயக்குனர் ஆந்திரேய் தார்கோவ்ஸ்கி. விண்வெளி ஆய்வுக்கூடத் தில் தற்கொலை செய்து கொண்ட வீரரின் இறப்பை ஆராய அனுப்பப்படும் உளவியல் மருத்துவர் கிறிஸ் கெல்வின், நியூட்ரான்களால் செயற்கையாக உருவாக்கப்படும், இறந்து போன தன் மனைவி ஹாரியை சந்திக்கிறார். எது அசல், எது பிம்பம் என்று புரியாமல், மனம் பிறழ்ந்து பூமிக்குத் திரும்புகிறார். ஆய்வுக்கூடம் அருகில் இருக்கும் கடலின் உயிரினம் ஒன்று, கூடத்தில் உள்ளவர்களின் மனதில் புகுந்து, அவர்கள் விரும்பும் நபர்களை, நியூட்ரான்கள் மூலம் உருவாக்கி அவர்களை குழப்பமடையச் செய்கிறது.
…சோலாரிஸில், ஆய்வுக்கூடத்தில், விஞ்ஞானி தற்கொலை ஆரம்பம். உளவியல் மருத்துவர், நீயூட்ரான்களால் உருவாக்கப்பட்ட மனைவியைக் கண்டு புத்தி பேதலிப்பது நடு. பூமிக்கு வந்தும் அவர் நிலை மாறாமல் வாழ்வது, முடிவு.”
இந்தத் திண்ணைப் பேச்சில் சில சிறு தவறுகள்: ருஷ்ய – போலந்திய; வீரரின் இறப்பை ஆராயவல்ல – பல புதிர்களை விடுவிக்க, அவிழ்க்கத்தான்; நியூட்ரான் – ந்யூட்ரினோ; கடலின் உயிரினம் அல்ல – அந்த நுரையும் அலையும் பொங்கும் ‘கடலே’ ஒரு ஜந்துதான்; மனதில் உள்ளே புகுவதில்லை – அது தொலைதூரத்திலிருந்தே மூளையின் பழைய நினைவுகளைக் கிண்டி சில சரடுகளையும் பிம்பங்களையும் எடுத்துக்கொண்டு – பிம்பப் பிரதிகளை உருவாக்குகிறது. (ஆனாலும் பொதுவாக, இந்த ‘சிறகு இரவிச்சந்திரன்’ அவர்கள் எழுதியது சரிதான்)
கதைக்கட்டும், தத்துவ விசாரமும், பெரும்பாலும் மிகச் சரியான அறிவியல் கட்டமைப்புகளும், மஹாமஹோ இசையும் (எடுவார்ட் ஆர்டெம்யெவ் அவர்களின் கைவண்ணம்!) – அதுவும் யோஹான் ஸெபாஸ்டியன் பாக்ஹ் அவர்களின் ’ஏசுவே, உன்னை நான் அழைக்கிறேன்’ (=Ich ruf zu dir, Herr Jesu Christ, 1732) கேன்டடா-வின் அழகாக கீபோர்ட் வடிவம்தான் படத்தின் தீம். மறுபடியும், மறுபடியும்… எப்படித்தான் தேடித்தேடி இந்த அற்புதமான இசையை படத்தின் மெலிதாக இழையோடும் சோகத்துடன், புதிர்களுடன் ஒன்று சேர்த்தார்களோ!
https://www.youtube.com/watch?v=w3uVf8p-sgE
இதன் ஆரம்ப வடிவம் – நிறைய ‘இயற்கை’ சப்தங்களை அடிப்படை கேன்டடா-வுடன் கலக்கியிருக்கிறார் ஆர்டெம்யெவ் – இருந்தாலும் அழகுதான்!
https://www.youtube.com/watch?v=vJdQU_5E_Ao
மர்ரே பெராஹியா அவர்களின் பியானோ இசையில் அதே கேன்டடா – வேறு ஒரு இசைக்கருவிச் சேர்க்கை கிடையாது: https://www.youtube.com/watch?v=JemZ44zUNRs
அதே கேன்டடா ஒரு மிடி கோப்பில் வெறும் 8.3 kB மட்டுமே!
மிடி என் காதலி. :-) ‘லூப்’ல் இதனைக் கேட்டுக்கொண்டேயிருந்ததில் இன்று மதியவுணவைத் தவறவிட்டுவிட்டேன்.
இளையராஜா அவர்கள் ஒருசமயம் சொன்னதைப் போல (அவர் சொல்லியிருக்காவிட்டாலும், சொல்லக்கூடியவர்தான்!) பாக்ஹ் ஒரு நாததேவன் தான்! ( நினைவிலிருந்து எழுதுகிறேன்)
…ஸொலாரிஸ் அமைதியான, ஆரவாரமற்ற, ஆழமான படம். நீங்கள் இதுவரை இப்படத்தைப் பார்க்கவில்லையானால், மிக அவசியமாகப் பார்க்கவேண்டிய ஒன்றுதான்!
-0-0-0-0-0-0-0-
ஆக, கடந்த கோடை விடுமுறையின்(!) போது, உயிர் தரித்தலுக்காக, நான் ஒருசில மரியாதைக்குரிய படங்களையாவது அவசியம் பார்க்கவேண்டும் என்று ஒரு ஜாபிதா தயாரித்தபோது – இந்த ஸொலாரிஸ் – அந்தச் சில படங்களில் ஒன்றாக இருந்தது. ஆனால், ஒரு படத்தையும் பார்க்க முடியவில்லை; ஏதேதோ வேலைகள். :-(
ஜாபிதாவிலிருந்த மற்றவை: (இவை அனைத்தையும் இன்னும் மூன்று வாரங்களில் மறுபடியும் பார்த்தே தீரப் போகிறேன்!) :-)
- வெர்னர் ஹெர்ஸாக் – அகுய்ற்றெ: கடவுளின் சீற்றம் (அகுய்ற்றே: த ரேத் ஆஃப் காட்)
- குரஸாவா அகிரா – ஏழு ஸாமுராய்கள் (ஷிசினின் நொ ஸாமுராய்), மெய்க்காவல்காரன் (யொஜிம்போ)
- ஸ்பைக் ஜோன்ஸ் – ஜான் மால்கோவிச்-ஆக இருப்பது (பீயிங் ஜான் மால்கோவிச்)
- ஸ்டான்லி க்யுப்ரிக் – முழு எஃகு கவசம் (ஃபுல் மெடல் ஜேக்கெட்)
- தார்ஸெம் சிங் – வீழ்ச்சி (த ஃபால்), கண்ணாடியே, கண்ணாடியே (மிரர், மிரர்)
- ழான் பியஹ் மெல்வில் – ஸாமுராய் (ல ஸாமுராய்)
… பார்க்கலாம். :-)
பின்குறிப்பு: ஏகத்துக்கும் சுட்டிகள், இந்தப் பதிவில்; மன்னிக்கவும்.
July 15, 2014 at 03:24
அன்புள்ள ராமசாமி,
நான் உங்கள் இடுகைகளை அவ்வப்போது வாசிப்பவன். ( தங்களது அரசியல் சார்ந்த இடுகைகள் என்னைக் கவர்வது இல்லை).
நான் உங்களைத் தொடர்பு கொள்ள விழைகிறேன். தங்களது மின்னஞ்சல் முகவரியைத் தேடினேன். இருக்கும், ஆனால் என்னால் அடையாளம் காண முடியவில்லை.
தயவுசெய்து என் முகவரிக்கு ஒரு அஞ்சல் அனுப்ப இயலுமா? என் முகவரி – raghy_rmn@yahoo.com
குழந்தைகளின் கல்வியில் உங்கள் ஈடுபாடு என்னைச் சிலிர்க்க வைக்கிறது. அதன் பொருட்டே உங்களிடம் தொடர்பு கொள்ள விழைகிறேன். நன்றி.
அன்புடன் – ராகவன் ராமன்.
—–>>>> அய்யா ராகவன் ராமன் அவர்களே –
எனக்கும் என் அரசியல் சார்ந்த, அலக்கியம் சார்ந்த காட்டுரைகள் பிடிக்காது. எவ்வளவு தடவை நான் சொன்னாலும் நான் கேட்கவேமாட்டேனென்கிறேன். என்னை வைத்துக்கொண்டு என்னசெய்வதென்றே எனக்குத் தெரியவில்லை. :-(
என் மின்னஞ்சல் முகவரி இப்பக்கத்தில்: https://othisaivu.wordpress.com/page-1/
பல பெரியவர்கள், மகத்தானவர்கள் (என்னைப் போலல்லாமல்) – வெளியே தெரியாமல், மெய்வருத்தம் பாராமல் பணிசெய்து கொண்டு இருக்கிறார்கள் – இவர்களை எது இயக்குகிறது என்றே எனக்குத் தெரியவில்லை; ஆக (என்னைப் போன்ற) போலிகளைக் கண்டு ஏமாறாதீர்! (போலித் தன்னடக்கத்துடன் இதனைச் சொல்லவில்லை)
பொதுவாக, எனக்கு உடனடியாக பதில் போடும் பழக்கம் இல்லை. ஆனால், நீங்கள் தாராளமாக மின்கடிதம், திட்டியும் கூட, அனுப்பலாம்; பதிலை நிச்சயம், அடுத்த சில வாரங்களில் அனுப்புவேன்.
அன்புடன்:
__ரா.