கழித்தல்கள் + கூட்டல்கள் = மேலும் கழித்தல்கள்
July 1, 2014
இந்தச் சமன்பாட்டை இப்பதிவு நிரூபிக்கப் போகிறது. (பாவம் நீங்கள்!)
… வழக்கமாக இந்த ஒத்திசைவானது, புளகாங்கிதத்துடன் சிலந்தியோட்டிக்கொண்டிருக்கும் ஒரு அசுவாரசியமான அக்கப்போர் மூளைக்குடைச்சல் வலைதளம்தான்; ஆனால் எப்போதாவது பத்ரி சேஷாத்ரி, ஜெயமோகன் போன்றவர்கள் தேவைமெனெக்கெட்டு சுட்டியைப் பரிந்துரைத்தால், ஆயிரத்துக்குப் பக்கத்தில் பக்கப் பார்வைகள் கூடி விடும். ஆக – அடுத்த நாள் என்னுடைய சாலைப் பயணங்களில், என் அருகில் வரும் ஆட்டோக்களை கொஞ்சம் சந்தேகத்துடன் பார்க்கவேண்டியிருக்கும்; என் புடம் போடப்பட்ட அனுபவங்கள் ஆட்டோமெடிக்காக இப்படிச் செய்யவைக்கும். :-)
இதிலிருந்து நான் தெரிந்துகொண்டது: சில ஆயிரம் தமிழ் படிக்கத் தெரிந்த (அல்லது தமிழ்ச்சுட்டிகளின் மேல் க்ளிக் செய்யக்கூடியவர்கள்) அனாமதேய நபர்கள், காலையில் பல்தேய்த்த பின் (வாய்கூடக் கொப்பளிக்காமல்) முதலில் ஆஜர் கொடுப்பது இந்தத் தளங்களில்தான் என்பது. இந்த ஆயிரம் பேர்களும் நிச்சயம், வீட்டுவேலைகளில் மனைவிக்கு உதவாத, உதவாக்கரை ஆண்களாகத் தான் இருக்கவேண்டும் என்பதும் என் துணிபு.
சரி – கிண்டல்களைத் தாண்டி, சமன்பாட்டை நோக்கிப் போகலாம்.
-0-0-0-0-0-0-
மனிதக் கழிவு என்னைப் பொறுத்தவரை ஒரு உரம். அதனைக் கையாள்வதைப் பற்றி எனக்குப் பெரிதாக பிரச்சினையொன்றுமில்லை.
என் கழிவிலிருந்து உரம் தயாரித்து (=Humanure) அதனை வைத்துக்கொண்டு(ம்) தோட்டம் போட்டிருக்கிறேன். காய்கறிச் செடிகளை வளர்த்தி ஓரளவுக்கு மஹஸூல் கண்டிருக்கிறேன். இதில் காய்த்த தக்காளிப் பழங்களைக் கொண்டு சூப் செய்து நண்பர்களுக்கும் கொடுத்திருக்கிறேன். அவர்கள் சப்புக்கொட்டிக்கொண்டு என் கைவண்ணத் தக்காளி_சூப் புகழ் பாடும்போது – அதனைப் பற்றிய பின்னணி விவரங்களைக் கொடுத்து, அவர்கள் சங்கடமாக நெளியும்போது அதனைப் பார்த்துக் குரூரமாக மகிழ்ந்திருக்கிறேன். ;-)
எங்களுடைய கழிவு நீர்த் தொட்டியை, சிலமுறை சுத்தம் செய்திருக்கிறேன். பிறருடைய மலங்களையும் ஓரளவு அள்ளியிருக்கிறேன். எங்களுடைய கழிவறைகளையும், வாய்ப்புக் கிடைக்கும்போது பிறருடைய (=பள்ளிகள், நண்பர்கள்) கழிவறைகளையும் சுத்தமாக்கியிருக்கிறேன். இவற்றில் என்னுடைய செய்நேர்த்தியை (வழக்கம்போல) தன்னைத்தானே மெச்சிக்கொண்டு கர்வமுடன், அகங்காரத்துடன் வளையவருபவன்தான் நான்.
… எதற்குச் சொல்லவருகிறேன் என்றால், என்னைப் பொறுத்தவரை மனிதமலம் என்பது அதனளவில் மரியாதைக்குரியதுதான். சுத்தம், சுகாதாரம் நம்_நாடு_குப்பை (இது சரிதான்!) என்றெல்லாம் ‘பாலிஸி லெவெலில்’ என்னாலும் பேசமுடியும் என்றாலும் – இந்த மலப் பிரச்சினை என்பது அடிமட்டத்திலிருந்து, நம்முடைய எதிர்வினைகள் எனும் அளவிலிருந்து – சிடுக்கவிழ்க்கப் படவேண்டியது என்பதில் ஐயமில்லை.
இதனை வரும் காலங்களில், நம் மக்களுக்குக் குடிமையுணர்ச்சியின் அடிப்படைகள் தெரியவந்தபிறகு – சிடுக்கவிழ்க்கக் கூடிய விஷயம்தான் என்பதிலும், எனக்கு ஐயமில்லை.
இருந்தாலும், கடந்த சில வருடங்களில் என்னுடைய சுவாரசியமான அனுபவங்களில் இரண்டைப் பகிரலாம் என்றுதான் இந்தப் பதிவு.
-0-0-0-0-0-
என் பள்ளியின் அறக்கட்டளையானது சுமார் நான்கு வருடங்களுக்கு முன், பள்ளியின் வெளிவாசலில் இருந்து 70 மீட்டர் தொலைவில், வட்டார கிராம மக்களின் பயன்பாட்டிற்கென ஒரு நல்ல கழிப்பிட வளாகம் கட்டிக் கொடுத்திருக்கிறது. நான்கு கழிப்பறைகள் + நான்கு குளியலறைகள்; கிராமத்து உயர்மட்ட நீர்த்தொட்டியுடன் இணைக்கப்பட்டு, மிக அழகாக – அழகுணர்ச்சியுடனும், பயன்பாட்டாளர்களின் வசதிக்கு/விருப்பத்துக்கு ஏற்றபடியும் கட்டப்பட்ட கட்டிடம் இது. மின்சார வசதியைப் பள்ளியிலிருந்து கொடுத்தோம். பராமரிப்பை கிராம ஜனங்களே முறை வைத்துக்கொண்டு செய்து கொள்வதாக, முன்னமே சத்தியம் செய்திருந்தார்கள். ஊருக்கு நடுவில் இந்த வளாகம் இருப்பதால் பாதுகாப்புக்கும் ஒரு பிரச்சினையும் இல்லை எனவும் ஊர்த் தலைவர் சொன்னார். ஒரு உபயோகத்துக்கு 25 பைசா என வசூலித்தால் பராமரிப்பைச் சரிவரச் செய்யலாமே, சரியான மேலாண்மையிருக்குமே என்று சொன்னதற்கு. ‘நம்ப ஜனங்க கிட்டே நாமே இதுக்கெல்லாம் எப்டீசார் பணம் வாங்கறது’ எனச் சொல்லி – தொட்டதெற்கெல்லாம் லஞ்சம் கேட்கும் தன்னுடைய அலாதியான பாங்கையே மறந்தார் அவர்! ‘மேனேஜ் பண்றத எங்கிட்ட வுட்ருங்க!’
… … ஆனால் ஆச்சரியம், ஆச்சரியம்! ஒரே வாரத்தில் அத்தனை கதவுகளும், மின்குழல் இணைப்புகளும், குழாய்களும் மாயம்!
காரணம் = சாராயம். :-)
தாகசாந்திக்கு பண்டமாற்று முறைகளை உபயோகப் படுத்தும் பண்டமிழர்களின் பராக்கிரமத்தைப் பற்றி வேறென்ன சொல்ல. கேட்டால் – மாரியம்மன் சத்தியமா, பக்கத்து கிராமத்து ஆளுங்கதான்சார் இதப் பண்ணியிருப்பாங்க.
இரண்டுதடவை திருடுபோனவைகளை மாற்றினோம். ஆக, மூன்று தடவை ‘பக்கத்து கிராமத்து ஆளுங்க’ திருடியிருக்கிறார்கள். பின்னர் விட்டுவிட்டோம்.
பிறகு – ஒரு வாரத்துக்கு ஒருமுறை கழிப்பறை வளாகத்தை, தன்னார்வக்காரர்களின் உதவியுடன் சுத்தம் செய்தோம். சுமார் எட்டு மாதம் இப்படிச் செய்தோம் என நினைக்கிறேன். ஒத்துவரவில்லை. சுத்தம் செய்ய ஒரு தடவையாவது அதன் பயன்பாட்டாளரிகள் வருவார்களென்றால், அந்தப் பக்கம் ஞாபகமறதியாக வருபவர்களும் ஏதோ வேலையாக, அவசரமாக வேறுபக்கம் திரும்பிப் போய்விடுவார்கள்! :-) ஏமாந்தால், வளாகத்தைச் சுற்றியும் அலங்காரம் செய்ய ஆரம்பித்தார்கள். இதையும் விட்டுவிட்டோம்.
ஒரு கிராம ஆசாமி / உள்ளூர்க்காரரே இதனை மேற்பார்வை பார்க்கமுடிந்தால் விஷயம் சரியாகலாம் என்றால் – வேறெந்த வட்டார மனிதரும் இதற்கு வரவிருப்பப்படவில்லை – சம்பளம் கொடுப்பதாகச் சொன்னாலும் கூட இப்படி! பள்ளியில் சுமார் 10 வருடங்களுக்குமுன் படித்த ஒரு பையன், ஒரு ஈடுஇணையற்ற தட்டச்சுவீர ஐடி குமாஸ்தாவும் சென்னைவாழ் ஃபேஸ்புக் போராளியுமாக உருமாறியிருக்கிறான்; நாட்டைச் சுத்தமாக்கவெல்லாம் பாடுபடுகிறான், லைக் போடுகிறான் – ஆனால், உங்கள் கிராமத்துக்கு வந்து ஓரிரு நாள் சுத்தம் சுகாதாரம் பற்றி உங்கள் உறவினர்களிடம் ஒரு வார்த்தை பேசக்கூடாதாவென்றால்… … ‘அதெல்லாம் பாலிஸி லெவெல்ல கெவர்மென் ட் செய்யவேண்டியது சார்!’
இதற்கும் பிறகு, ஒரு நேபாலி பையனைப் பிடித்து உட்காரச் சொல்லி- கழிவறைகளை உபயோகப் படுத்த வருபவர்களை, வரிசைக் கிரமமாகவும் ஒழுங்காகவும் வரும்படிக்கு, பணிவுடன் பார்த்துக்கொள்ள நியமித்தோம். பத்து நாட்களில் ஒரு குடிகாரக் கும்பல், வெட்டி வம்பு வலித்து அவன் கைவிரல்களை உடைத்த பின்னர் இதனையும் விட்டோம். (இந்த பரிதாபமான நேபாலி ஜீவனை, தர்மஅடி கொடுக்கும் சிகாமணிகளிடமிருந்து மீட்டு ஜிப்மர் மருத்துவமனைக்குக் கூட்டிக் கொண்டுபோய் அவன் கையைச் சரிசெய்வதற்குள் போதும்போதுமென்றாகிவிட்டது – ஆனால் இந்தக் கதை இங்கேயில்லை; கவலைவேண்டாம்!)
… பொதுச் சொத்துகள் நிர்வகிக்கப்படுதலின் நிலை பற்றி – முன்னமே Tragedy of the Commons என எழுதியிருந்தேன். இதற்கு ஒரு உதாரணம் தான் இந்தக் கதை. இந்த அழகில் — எல்லா விஷயங்களிலும் இலவசம் + அரசே நடத்தும் சாராயக் கடைகள் + விஜய்/அஜித்/சூர்யா/…… குஞ்சாமணித் தொங்கலாளர்கள் + கலைஞர் டீவி கழிசடை டீவி என அற்பத்தனங்கள். நாம் உருப்படவே மாட்டோம் என்பதற்கு இந்த நால்வர் அணியே சாட்சி.
-0-0-0-0-0-0-
இது நடந்தது சுமார் இரண்டுவருடமுன்பு. இந்த ஒத்திசைவை வேலைவெட்டியற்றுப் படிக்கும் இரண்டு (இதுவரை) நண்பர்களுடன் இந்த நிகழ்வின் சுருக்கத்தைப் பற்றிப் பேசியிருக்கிறேன் கூட என நினைவு. (=ஸ்ரீதர் திருச்செந்துறை, அஜ்மல் கான்??)
… பெரும்பாலும் காலையில் சரியாக 6:30 மணிக்கு ஆரம்பித்துவிடும் கிராமத்து ஒலிபெருக்கிகளின் தொல்லை (சுமார் 11 மணிக்கு வேண்டாவெறுப்பாக அணைப்பார்கள் – மின்சாரம் இல்லையென்றாலும் யுபிஎஸ் வைத்து போங்காட்டம் ஆடுவார்கள்! பின்னர், உணவு இடைவேளைக்குப் பின் தொடரும்…) தாங்கமுடியாமல் – சில மாதங்கள்போல என்னுடைய பத்தாம், பனிரெண்டாம் வகுப்புக் குழந்தைகளை விடிகாலை 4:15 மணிக்கு (வாரத்தில் ஏழு நாட்களும்), வரச் சொல்லியிருந்தேன். அதிகாலைகளில், நிசப்தமும் அழகும் குளுமையும் – எங்களை அதிகக் குவியம் செலுத்துபவையாக்கும். குழந்தைகள் இயல்பாகவே காலை நேரங்களில் மூளையும் மனமும் உடலும் ஒருசேர சுறுசுறுப்பாக வேலை செய்யக் கூடியவர்கள்; எனக்கும் அதிகாலை வேளைகள் மிகவும் பிடிக்கும். காலை சுமார் 7 மணிக்குக் குழந்தைகளை வீட்டிற்கு அனுப்பிவிடுவேன். சுமார் இரண்டரை மணி நேரம் கொஞ்சம் உருப்படியாகக் கழியும்.
இதன்மூலம் இரண்டு விதமான விஷயங்கள் சாத்தியமாயின:
1. காலை, வெகு சீக்கிரம் எழவேண்டிய அவசியத்தால் குழந்தைகள் இரவில் சீக்கிரம் தூங்கிப் போய்விடுவார்கள்; ஆக, அவர்கள் தொலைக்காட்சியின் முன் ஐக்கியம் ஆகிப் பலாத்காரம் செய்யப்பட்டுச் சீரழிவது குறைவாகியது. இந்த முட்டாள்போதைத்தனத்திலிருந்து கொஞ்சமேனும் விலக அவர்களுக்கு முடிந்தது. மேலும் அயோக்கியத் தகப்பன்கள் குடித்துவிட்டு அர்த்தராத்திரியில் வந்து கூத்தாடுவதையெல்லாம் அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கவேண்டிய அவசியம் குறைவானது.
2. இந்த விசேஷ வகுப்புகளுக்கு வந்தேயாகவேண்டிய அவசியம் ஒரு குழந்தைக்கும் கிடையாது. இருந்தாலும், வீட்டில் ஓரளவு திட்டு வாங்கிக் கொண்டாவது, அனைத்துக் குழந்தைகளும் வந்துகொண்டிருந்தார்கள் – ஏனெனில் அவர்களில் பெரும்பாலோர், பள்ளிப் படிப்பை, சகதியிலிருந்து தங்களை மீட்டெடுக்கும் ஒரு கருவியாகப் பார்த்தார்கள். பெண் குழந்தைகளைப் போர்த்திப் போர்த்தி வீட்டிலேயே வைக்காமல், காலை வேளைகளில் தைரியமாக (சிறு குழுக்களில்) அனுப்பவும், தாயார்களால் முடிந்தது.
இவை எனக்குத் திருப்தி தந்தன. ஆனால்… ஒரு பிரச்சினை.
அதிகாலை வேளையில் என் பள்ளியின் வாசலில் – குழந்தைகள் நடக்கும் பாதையின் நட்ட நடுவில் – தினமும் மலம் கழித்துவிட்டுப் போவதையே வேலையாக வைத்திருந்தனர் சில கிராம ஜனங்கள். அதிகாலையில், வழி நெடுக பத்துப் பதினைந்து புத்தம்புதிதான மலக் குவியல்கள். (பாம்புகளுக்கு பயந்த அவர்கள், எங்கள் பள்ளி வாயிலில் கொஞ்சம் வெளிச்சம் இருக்கிற காரணத்தால் இப்படி எங்கள் வழியையே அலங்கரித்தனர் என்பது ஒரு சரியான புரிதல்தான்; பக்கத்தில் ஏக்கரா கணக்கில் இருக்கும் முந்திரித்தோப்புகளில் ஒரே கும்மிருட்டு – அவர்களும் பாவம்தான்!)
ஆனால், பாதியிருட்டில் இவற்றை மிதித்துவிட்டு குழந்தைகள் அசிங்கப் படும். இதனைக் கழுவிக்கொள்வது, வாசலைச் சுத்தம் செய்வது என நேரமும் (=அரைமணி நேரமாவது) விரயமாகும். அதிகாலையை இப்படி ஆரம்பிப்பது சோகமானது.
இரண்டு நாட்கள் இந்த உற்சவம் நடத்தியபின் வெறுத்துப் போய், விடிகாலை மூன்றரை மணிக்கு மண்வெட்டி + டார்ச் லைட் சமேதனாக பள்ளியின் வாயிலுக்குச் சென்று, புது இடுகைகளின் மீது மண்போட்டு, கழித்தல்களைக் கூட்டி அவற்றைப் பாதுகாப்பாக அப்புறப் படுத்தும் வேலையும் என்னிடம் சேர்ந்து கொண்டது.
…அதற்குப் பிறகு, தூய்மைக்காகவென ஒரு சிறு குளியல் குளித்த பின்னர்தான் குழந்தைகளிடம் போகமுடியும் – என்ன இருந்தாலும் நான் அந்த கந்தறகோள தினசொறி ‘ஹிந்து’ கயமைத்தனத்துடன் தொடர்ந்து எழுதுவது போல – ஒரு ஜாதி ஹிந்து (=’caste hindu’) தானே! 8-)
மூன்று நாட்கள் இப்படிச் செய்தேன். ஒரு சுக்கு மாற்றமும் ஏற்படவில்லை.
ஆகவே: கழித்தல்கள் + கூட்டல்கள் = மேலும் கழித்தல்கள். QED.
… நான்காம் நாள் – இடுகை இட்ட ஒரு அம்மணியுடன் (=பள்ளியில் படிக்கும் ஒரு குழந்தையின் பாட்டி) அவர் வேலை முடிந்து எழுந்துபோகும்போது பேசினேன். அவருக்கு நான் சொன்னது புரியவில்லை. ஒங்க எடத்திலயா போறோம் என்றார்.
ஒரு சிறிய உரையாடலுக்குப் பின் அவரிடம் கோபப்படாமல் சொன்னேன் – உங்களுக்காகவென கட்டிக்கொடுத்த கழிப்பறையை உபயோகிக்கலாமே – இரண்டு நாட்களுக்கு முன்தானே சுத்தம் செய்திருக்கிறோம்? அவர் பதில் – இப்டீ மம்டீயோட வேலை செய்றத்துக்கு பதிலா அந்த கக்கூஸ, தெனிக்கும் க்ளீன் பண்ணுவயா… அது யூஸ் பண்றமாரியா இருக்குது? பெர்சா சொல்ல வன்டான்… நீயும் ஒன் மொகறக்கட்டயும், உஸ்கோளு வேணும்னிட்டு எவொ அளுதா?
எனக்குக் கோபம் வந்தது. ஆனால் ஒன்றும் சொல்லாமல் அன்றும் மலக் குவியல்களைச் சுத்தம் செய்துவிட்டு வாயிற்கதவை மூடிக்கொண்டு உள்ளே சென்றேன். பின்னர்… … குழந்தைகளிடம் டார்ச் லைட்டோட வந்தாதான் என்னால் உங்களுக்குப் பாடம் நடத்தமுடியும் எனச் சொன்னேன். அவ்வளவுதான்.
எங்கள் பள்ளியின் பிரதான வாயிலையும் இன்னொரு பக்கத்திற்கு ஒரே வாரத்தில் மாற்றிவிட்டோம்! எங்களுக்கும் வேறு வழியேயில்லை. :-) காலை வகுப்புகளையும் சில மாதங்களுக்குப் பின் நிறுத்தி விட்டேன் – குழந்தைகளுக்கு வர ஆசையாக இருந்தாலும். எனக்கும் வேறு வழியேயில்லை.
… இப்படியாகத்தான் – இரண்டு வருடங்களுக்கு முன்தான் நான் காந்தியின் பல மகத்தான பல்வேறு ஆக்கபணிகளில் ஒன்றான – கர்மயோகித்தனமாக கக்கூஸ் கழுவும் காரியத்தின் கால்தூசுக்குக் கூட அருகதையற்றவன் என அவமானத்துடன் உணர்ந்தேன். ஏனெனில் – இந்த பிறர் மலத்தைப் பொறுமையாக அள்ளுவதை நான்கே நாட்களில் விட்டுவிட்டேன். என் அகங்காரம் அப்படிப்பட்டது. (காந்தியெனும் கக்கூஸ்காரர்)
ஆனாலும் எம் கிராம ஜனங்களைப் பார்த்தாலும், அவர்கள் ஆற்றாமைகள் போதாமைகளைக் குறித்து யோசித்தாலும் பரிதாபமாகத்தான் இருக்கிறது. அவர்கள் வீடுகளில் கழிப்பறைகள் இல்லை. அவர்களும் என்னதான் செய்வார்கள்?
ஆனால், அதே சமயத்தில் என்னிடம் இப்பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரமோ, பொறுமையோ, கரிசனமோ இல்லை என்பதையும் உணர்கிறேன். :-(
ஹ்ம்ம்… இருந்தாலும் எனக்குத் தோன்றுகிறது – ஒரு ‘சமூகசேவைக்கார’ மனிதன், தன் வாழ்நாளில் ஒரு வருடத்தை – இந்த கழிவறை நிர்வாகப் பிரச்சினைகளைச் சமன் செய்வதிலேயே, சாத்வீகமாகச் செலவழிக்க முடிந்தால் – ஒரு வேளை, இக்கிராமத்து மக்களின் பொதுக் குடிமைப் பண்பை நிமிர்த்தலாம் என்று. ஆனால் நான் அவனில்லை. சர்வ நிச்சயமாக. போங்கடா.
அந்த மகாமகோ பிந்தேஷ்வர் பாதக் அவர்களுக்கு கோவில் கட்டி, கோடி நமஸ்காரம் செய்யவேண்டும்தான்!
-0-0-0-0-0-0-0-
ஆனாலும் – ஒருசில சந்தோஷகரமான விஷயங்களும் இருக்கத்தான் செய்கின்றன:
(1) பலமுறை ஊர்ப் ‘பெரியவர்கள்’(!) சிலரை மறுபடியும் மறுபடியும் பார்த்து விண்ணப்பம் விண்ணப்பமாகக் கொடுத்தபின் – சென்றவருடம் முதல், இந்த கிராமத்தில் ஒலிபெருக்கிகளின் வீரியத்தைக் கொஞ்சமாகவேனும் குறைத்திருக்கிறார்கள். (என்னுடைய தோலின் தடிமன் என்பது அற்புதமாக கிலோமீட்டர் கணக்கில் தடித்திருப்பதை நினைத்தால், என்னுடைய உற்சாகக் கொப்பளிப்பு தாங்கவே முடியவில்லை போங்கள்!)
(2) கொம்பு ஒலிபெருக்கிகளை பள்ளியின் பக்கம், அதுவும் பள்ளிவேலை நேரங்களில் இப்படி (உசுப்பேற்றுவதற்காக மட்டுமே) என திசைதிருப்பி வைப்பது குறைந்திருக்கிறது – பூஜ்யமாகிவிடவில்லையென்றாலும்.
(3) வட்டாரத்தில், வருடத்துக்கு சுமார் 30 மஞ்சள் நீராட்டுவிழாக்கள் மட்டுமே நடக்கின்றன. மேலும் சுமார் 20 சாவுகள், சுமார் 15 மணங்கள் மட்டுமே! ஊர்த் திருவிழா என 8 நாட்கள் செவிப்பறைகள் கிழிபடும். ஐயப்பன் ஸீஸனில் காலையிலும் மாலையிலும் சுமார் 40 நாட்கள் பக்திப் பரவசம். அண்மையில் முளைத்திருக்கும் திடீரெக்ஸ் மசூதி ஒன்றிலிருந்து அண்மைக்காலங்களில், ம்யூஸ்ஸென் அனுதினமும் ஐந்துவேளை தொழுகைக்குக் கூப்பிட்டாகவேண்டும். இந்த கூப்பிட்டாளியின் குரலும் உச்சரிப்பும் படுகோரம் (=“அல்லாவு அக்பரள்ளா! ஐயகோ!!), மேதகு ஆண்டவன்அல்லா அவர்கள், இதிலாவது எங்களுடன் ஒத்துழைத்திருக்கலாம்! இத்தனைக்கும் மூன்றே முஸ்லீம் குடும்பங்கள்தான் இங்கு! பெந்தகோஸ்தே டிஸ்கோதே டமாரக் காரர்கள் ஞாயிறுக்கு ஞாயிறு பரிசுத்த ஆவியை மறக்காமல் எழுப்பி ஒரே கடமுடா, க்றீச்சிடல்கள், சாத்தானோட்டல்கள்… ஆனால், நான்கைந்து குடும்பங்கள் தான் க்றிஸ்தவக் குடும்பங்கள்! கடந்த கிட்டத்தட்ட நான்கு வருடங்களில், இந்த சத்தக் கதைகள் தொடர்வதைகள்… ஆம்! மீதமிருக்கும்(!) நாட்களில் எங்களுக்கு அமைதி தேவதை நிச்சயம் கடைக்கண் பார்வையை அளித்து உய்விக்கிறாள் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ!
(4) மனிதர்களெல்லாம் சரிசமம், ரத்தம் ஒரே நிறம் என்றெல்லாம் சொல்லுவதை விடவும் – இந்த வட்டாரத்தைப் பொறுத்தவரை என் சன்மார்க்க, சோஷலிஸ புரிதல் என்பது: மானுடச் சாதியென்பது ஒன்றே! வன்னியர்களின் மலமானாலும் சரி, தலித்களின் மலமானாலும் சரி, மற்றெந்த ஜாதிக்காரனின் கழிவாக இருந்தாலும் சரி – இவைகளில் வித்தியாசம் என்பதே இல்லை. அள்ளியவன் சொல்கிறேன். 8-)
… … ஆம். பழையன கழிதலும் புதியன கழிதலும் வலுவல கால வகையினானே.
ஆமென்.
July 2, 2014 at 18:43
அபாரமான பொறுமைக்கு ……வாழ்த்துக்கள்
July 3, 2014 at 13:43
எப்பொழுதோ புலம்பியது // பெரியவரிடம் இருந்து நான் கற்றுக்கொள்ள வேண்டியவை – வாழ்க்கையைப் பற்றி, குடும்பத்தைப் பற்றி, பிடித்த விஷயங்களை மனத் திருப்தியுடன் செய்வதைப் பற்றி, பணக் கவலையே இல்லாமலிருப்பது பற்றி, மனோதைரியத்தைப் பற்றி, தமிழகத்தின் சாபக்கேடுகளாக நீக்கமற நிறைந்திருக்கும் சர்வவியாபிகளான திராவிடச் சராசரி உதிரிகளை எதிர்கொள்வதைப் பற்றி, என… நிறைய இருக்கின்றன.//
ஏதோ பாஸ் பண்ணுமளவுக்கு கற்றுக்கொண்டுவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்.
July 5, 2014 at 14:55
அய்யா, இல்லவேயில்லை.
July 5, 2014 at 09:38
அந்த மூதாட்டிக்கு இப்படி பள்ளிக்குமுன் அசிங்கம் பண்ணுகிறோமே என்று தோன்றவே இல்லையே?
உங்கள் பள்ளிக்குழந்தைகளை அவர்கள் வீட்டில் இது பற்றிக் கூறும்படி சொல்ல்லாமே?
July 5, 2014 at 14:58
பலதடவைகள் சொல்லியாகிவிட்டது. கூட்டங்கள் கூட்டியாகிவிட்டது. ஒரு நண்பர் சிலகாலம் முன் பரிந்துரைத்ததைப் போல (கிண்டலாகத்தான்) வெறிநாய்களை ஏவிவிடுவதுதான் பாக்கி. :-)
July 5, 2014 at 11:19
முன்னர் நாட்டு நலப்பணி ஒருங்கினைப்பாளராக இருந்த போது காந்தி கிராமத்துடன் இணைந்து சில வீடுகளில் கழிப்பிடம் கட்டித்தந்தது நினைவு வருகிறது. இரண்டு சிறிய குழிகள் பக்கம் பக்கம். ஒரு குழி நிரைந்த பிறகு பைப்பை அடுத்த குழிக்குத் திருப்பிவிட்டால் சில மாதங்களில் முதல் குழி நன்கு உலர்ந்து மலம் சாம்பலாக ஆகிவிடும். அதனை கைகளாலே அள்ளலாம். துளியும் வாசம் வராது. உரமாகவும் பயன்படுத்தலாம். இப்போது அதில் மேலும் முன்னேற்றம் செய்திருப்பார்கள் காந்தி கிராமத்துக்காரர்கள் என நினைக்கிறேன்.
July 5, 2014 at 14:55
அய்யா – இது தொழில் நுட்பப் பிரச்சினைகளில் ஒன்றல்ல – அவைகள் வெகு அழகாகத் தீர்க்கப்பட்டுவிட்டன. இது நமது சமூகக் கண்னோட்டத்தின் பிரச்சினை. பொதுச் சொத்துக்கள் (எப்படியோ உயிரும் மனமும் செயலூக்கமும் பெற்று) தங்களைத் தாங்களே பராமரித்துக்கொள்ளவேண்டும், அல்லது நம்முடைய சிறு பராமரிப்புப் பிரச்சினைகளையும் மாயமாக அரசு, இலவசமாகத் தீர்க்கவேண்டும் எனும் பார்வை.
July 6, 2014 at 14:50
ஐயா,
இது எவ்வாறு ”அழகாத் தீர்க்கப்பட்டு விட்டன” என்று சற்று விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
July 10, 2014 at 19:13
விளக்குமாறாலேயே தீர்க்கப்படக் கூடியவைதானே இந்தக் கழிவுப் பிரச்சினைகள். :-)
October 11, 2014 at 06:05
i was reminded of your post when i read this paragraph
“The sheer enormity of the Clean India project Modi has undertaken is daunting for it necessitates a mindset. A newly elected Lok Sabha MP from Jharkhand narrated to me the magnitude of the challenge. Having identified nearly all the schools in his sprawling constituency that needed toilets, he was confronted with a problem that extended beyond running-water supply and routine upkeep. To maintain a clean, odour-free environment, he was told by local teachers, the authorities would also have to construct boundary walls — an expensive proposition. Without this separation of space, the children would be inclined to use adjoining fields as toilets. “This is what they do at home,” the teachers informed him.”
in Swapan Gupta’s blog http://www.swapan55.com/2014/10/modi-and-muck-by-far-most-ambitious-of.html
How will we bring about the mindset change and take care of the cynicism that can make even the best of efforts go futile ?