நரேந்த்ர மோதி-யின் மேல் புழுதியை வாரியிறைப்பது ரொம்ப லேசு!

April 12, 2014

தேர்தல் ஜனநாயகம் ஒட்டு உணர்ச்சிகரப் புல்லரிப்பு என்றால், பொதுவாகவே குடிமையுணர்ச்சியும் பொறுப்புணர்ச்சியும் படிப்பறிவும் அதிகம் இல்லாத நம் நாட்டில் –  பல நடைமுறை ரோதனைகள்  இருப்பது சகஜமான விஷயமே! மேடைப்பேச்சுகள், வெறும் ஏச்சுகளாக மட்டுமே இருப்பதும்,  கருத்துவேற்றுமைகள் அடிஉதை சண்டைகளாக மாறுவதும் நடந்துகொண்டிருப்பவைதான்…

ஆனால் இந்த மோதி எதிர்ப்பு விவகாரத்தில்தான்- எனக்குத் தெரிந்து, உரையாடல்கள் மிக மிகக்  கீழ்த்தரமாகப் போய்க் கொண்டிருக்கின்றன…  கண்டமேனிக்கும் கோமாளித்தனமான குற்றச் சாட்டுகளை அள்ளி வீசிக்கொண்டேயிருக்கிறார்கள் இந்த கருத்துலகக் கபோதிகள்.

மோடி என்றால் மோடிமஸ்தான், பில்லிசூனியம் வைப்பாரென்பார்கள்; மோதி என்றால் மோதி விடுவார், ஜாக்கிரதை என்று அலறுவார்கள்.  மோதி இந்தப் பக்கம் வந்தால், ஏன் அந்தப் பக்கம் போகவில்லையென்பார்கள். அந்தப் பக்கம் போனால் – இந்தப் பக்கத்துக்கு ஏன் ஒன்றுமே செய்யவில்லை என்று பிலாக்கணம் வைப்பார்கள்!

மோதிக்கு தாடி நரைத்துவிட்டது. அவர் தினசரி சிரைத்துக் கொள்ளாததினால், அவர் சலூன்கடைக் காரர்களுக்கு எதிரி. அவர் ஆட்சிக்கு வந்தால் பார்பர்களை பங்களாதேஷுக்குத் துரத்திவிடுவார். பார்பனர்களை பாரை விட்டே அகற்றிவிடுவார் என்பது போல – சும்மனாச்சிக்கும் உளறிக் கொட்டிக் கொண்டேயிருக்கிறார்கள்.

தம் பெண்டாட்டி(கள்), மற்ற குடும்ப அங்கத்தினர் பெயர்களில் பல்லாயிரம் கோடி ஊழல் சொத்து சேர்த்தவர்களெல்லாம், பெண்களை அற்பத்தனமாக மட்டுமே, அவர்களை போகப் பொருளாக மட்டுமே பார்ப்பவர்களெல்லாம் – திடீரென்று மோதி, அவருடைய பதின்ம வயதில் நடந்த மணம், அவருடைய மனைவி பாவம், மோதி அவரை கவனித்துக் கொள்வதேயில்லை — என்றெல்லாம் நீட்டி முழக்குகிறார்கள், இந்த அடிப்படை நேர்மை என்கிற ஊரிலேயே பிறக்காதவர்கள்!

ஆக,  தலைமுடியற்ற பாட்டனார், நீர்நிலைக்குள் அமிழ்ந்தார் என்கிற ரீதியில் – எதெதையோ பேசி புளகாங்கிதம் அடைகிறார்கள்.

இக்காலங்களில் வெயில் வேறு சுள்ளென்று அடிக்கிறது அல்லவா… ஸ்ஸ்ஸ்… தாங்கமுடியவில்லை இந்த புழுக்களின் புழுக்கத்தை… என் செய்வது!

-0-0-0-0-0-0-

மோதி அலை என்று ஒன்று இருக்கிறதோ இல்லையோ — இந்த எழவெடுத்த அரைகுறை எதிர்ப்பாள அற்பர்களுக்கு, அப்படி ஒரு அலை பிரத்தியட்சமாகப் தெரிகிறது போலும்! இதில் மேதகு இளவல் ‘குடிசைதோரும் ரொட்டி கொண்டான்’  ராஹுல்காந்திச் சோழனும்,  ’slap-schtick காமெடி’   புகழ் அர்விந்த் கெஜ்ரீவாலறிவனாரும் அடக்கம் என்பது ஒரு கொசு(று)ச் செய்தி.

ஆக — அய்யய்யோ, மோதி சந்தேகத்துக் கிடமில்லாமல் பிரதமராகி விடுவாரோ என்று  இந்த ‘வெட்டி வேல்’ போராளிகள் உண்மையாலுமே மிகவும் பயந்து போயிருக்கிறார்கள் என்பது நிதர்சனம். பதற்றத்தில், அவர்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.  கொடூர பயபீதியில்அவர்கள் மூளைகள் (கொஞ்சம் சிரமப்பட்டால், ஒரு நுண்நோக்கியை வைத்து இந்தக் கடுகுகளைக் கண்டு பிடித்துவிடலாம்!) உருகிக் கொண்டிருக்கின்றன. எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்று அலைந்து கொண்டிருக்கிறார்கள். எப்படியாவது ஏதாவது செய்து அவர் வரவை முடக்க முடியுமா என்று அரக்கப்பரக்கப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களும் வேறு என்னதான் செய்வார்கள் பாவம். மேதகு ரஜினிகாந்தனைய மிஸ்டர் மிரண்டாக்களுக்கு, அதாவது லெஃப்டில் வருபவர்களுக்கு, அவர் ரைட்ல வந்து விடுவாரோ என மிரண்டுகொண்டிருக்கவே நேரம் போதவில்லை.

இந்த ஜந்துக்களுடைய பரிதாபத்துக்குரிய கேவலமான நிலையை நினைத்தால் – பொதுவாகவே கல்நெஞ்சக்காரனான எனக்கே பாவமாக இருக்கிறது. என்ன செய்வது சொல்லுங்கள். :-(

ஆனாலும் மோதி, ஏதாவது காரணத்தினால் (=சில பாஜக தலைவர்களின் அழிச்சாட்டியம்) அப்படி வரமுடியாமல் போனால், இந்த அற்பர்கள் மிகவும் ஏமாற்றமடைந்துவிடுவார்களே என்பதை நினைத்தால், எனக்குப் பதற்றமாகவே இருக்கிறது.

ஆக, அவர்கள் ஏமாற்றமடையாமல் இருக்க, கடவுள் நம்பிக்கையை வரவழைத்துக்கொண்டு, பிரார்த்திப்போமாக.

-0-0-0-0-0-

போதாக்குறைக்கு – இந்த எதிர்ப்புக் குளுவான் கும்பலுக்கு அறிவுஜீவித்தனமான சட்டகங்களை அண்டப்புளுகுகளைக் கொண்டு கட்டமைத்து அளிக்க, (என்னால் நம்பவே முடியாதபடிக்கு) பல படித்த  முற்போக்கு(!) முட்டாட்கள் வேறு இருக்கிறார்கள்.

poi-aNdappuluguஇவர்கள் கொஞ்சம் அதிகமாகவே, உட்கார்ந்த இடத்திலிருந்து அலுங்காமல் நலுங்காமல் எதைப் பற்றியும் அதியுன்னதக் கருத்துதிர்ப்பவர்கள். மேலும் – தேங்காய்முதல் வாதிகள். இவர்களைத் திருத்தவேமுடியாது. நானும் என்னால் முடிந்தவரை முயற்சி செய்து அயர்ச்சியடைந்திருப்பதனால்தான் சொல்கிறேன்.

“A man with a conviction is a hard man to change. Tell him you disagree and he turns away. Show him facts or figures and he questions your sources. Appeal to logic and he fails to see your point.”

—Leon Festinger, et al., When Prophecy Fails (1956)

-0-0-0-0-0-0-0-

இந்த  இடதுசாரி வலதுதாவணிஅறிவுஜவ்வுகளின் கீர்த்தனைகளை அரைகுறையாகக் கேட்டுக் கொண்டு தொலைக்காட்சி, கணினித் திரைகளைக் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டு கொட்டாவி விட்டுக் கொண்டிருக்கும் மத்தியவர்க்கப் போராளிகள், சீக்காளி வர்க்கச் சர்வாதிகாரிகள் போன்றவர்களெல்லாம் –  உரக்கஉரக்க,  நெற்றி நரம்பு புடைக்க, திருப்பித்திருப்பி எதைச் சொல்கிறார்களோ, அதுதான் உண்மை – அப்படிக் கத்துபவர்தான் உண்மையான நேர்மையாளர் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஏனெனில் யோசனை செய்து, தீர விசாரித்து ஒரு கருத்துக்கு வருவதெல்லாம் சுளுவான விஷயமல்லவே!

shortcutsஆக, மோதி ஒரு சர்வாதிகாரி, ஹிட்லர், ஸ்டாலின் [இசுடாலிர் அல்ல], மதவெறியர், மரணவியாபாரி, பதவிமோகி இன்னபிற இன்னபிற – என்பவைதான் இந்த சொந்த சிந்தனையற்ற அரைகுறைகளின் கடன்வாங்கிய கருத்துகள்…

கேட்டால், சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லி கழுத்தை அறுப்பார்கள். இதற்கு எதிராக, அவர்களுக்குப் படித்துப் படித்து உண்மை நிலவரங்களை மறுபடியும், மறுபடியும் விளக்கிக் கொண்டேயிருக்கவேண்டும் என்பது – நம் நடைமுறை ஜன நாயகத்தின் மாளா அயர்வளிக்கும் விஷயங்களின் ஒன்று…

-0-0-0-0-0-0-0-0-0-

பொதுவாக ஜேஎன்யு குளுவான்கள், டெல்லி பொருளாதாரப் பள்ளி முனைவர்கள் கண்டமேனிக்கும் கருத்துதிர்த்தால்,  நம்மூர் பொஜக ஞாநிகள் கரகரப்புக் குரலில் கத்திக் கத்தி, பாவப்பட்ட பத்ரி சேஷாத்ரியுடன் பேசினால் – சரி,  இவர்கள் இப்படித்தான் இருப்பார்கள், நமக்கு இது கூடத் தெரியாதா என்று விட்டுவிடலாம். ஆனால் ஷிவ் விஸ்வநாதன், ஆஷிஸ் நந்தி  போன்ற மதிக்கத்தக்க சமூகவியலாளர்களுக்கும் – ஸெக்யூலர் காரர்களாக காண்பித்துக் கொள்ளவேண்டிய அவசியம் ஏற்பட்டு, இந்த மகாமகோ வியாதியான மோதிஃபோபியா வந்து விட்டது. வாயோர நுரை தள்ளல்களை சகிக்கவே முடியவில்லை.

OurSocialScientistsஅவர்களுடைய சமூக அறிவியல் நோக்கும் தேய்ந்து இப்படி அபத்தமாக ஆகி விட்டது.  அம்மணி பர்கா தத், மாதரசி தீஸ்தா செதல்வாத் போன்றவர்களை விடப் படுகேவலமாக செய்திகளைத் திரிக்கிறார்கள்.

அப்படியே — அண்டப் புளுகுகளை மறுபடியும், மறுபடியும் சொல்லியே எப்படி உண்மைகளாக நிறுவி விடுகிறார்கள்!

… நடைமுறை சமூகவிஞ்ஞானி ஜோஸஃப் கீபல்ஸ் (Josesph Goebbels) சொல்வதெல்லாம் / சொன்னதெல்லாம் எவ்வளவு உண்மை…

 “சதி/சூழ்ச்சித் திறனுடன் கையாளப்படும், திசைதிருப்பப்படும் மக்கள், எப்போது தாங்கள் சுதந்திரமாகவே எந்த விஷயத்தையும் செய்கிறோம் என நம்புகிறார்களோ – அப்போது தான்  பரப்புரையானது (=ப்ரொபகன்டா) வெற்றி பெறுகிறது…

 “பொய்யை அண்டப் புளுகாக்கு, அதை புரிந்து கொள்வதற்கு எளிமையானதாக்கு, அதனைத் திருப்பித் திருப்பிச் சொல்லு – கடைசியில் அவர்கள் அதனை நம்பிவிடுவார்கள்…

 “ஊடகங்களை ஒரு பெரிய கீபோர்ட் போல நினைத்தால், அதில் அரசு என்னவேண்டுமானாலும் வாசிக்கலாம்.

ஏப்பேர்ப்பட்ட தீர்க்கதரிசி இந்த கீபெல்ஸ்!

ஆக,  ‘மோதி ஒரு மதவெறியன்’ என்று சொல்வது, நிறுவுவது சுலபம் – இந்தப் பதம் எளிமையானது, திருப்பித் திருப்பிச் சொல்லப் படுவது, மக்களுக்கு தாங்கள் சரியாக, சுதந்திரமாக, தரவுகளின் மேற்பட்டு சுயமாகச் சிந்திப்பதாக எப்போதுமே ஒரு எண்ணம் இருக்கிறது… யாரும் எந்த  திடமான தரவுகளையும் கேட்கப் போவதில்லை. கேட்டாலும் எவருக்கும் படிக்கும் பொறுமையில்லை. படித்தாலும் புரிந்து கொள்ளும் திராணியில்லை. ஆகவே யாராவது நிபுணர் / விற்பன்னர் / நிபுணர் தன்னைத் தானே நினைத்துக் கொள்ளும் ஒருவர் இதைப் பற்றிச் சொன்னால் அதுவே வேதவாக்கு.

ஆகவே – ‘மோதி ஒரு மதவெறியன்’ நிரூபணம் செய்யப் பட்டுவிட்டது. QED.

ஆனால் பாருங்கள் – அவர் அப்படியல்லர் என நிறுவவேண்டுமென்றால்… … … டட்டடா டட்டடா டட்டடா  :-)

ஒரு முழு  சுற்று சுற்றி வந்தவுடன், மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிப்பார்கள், பாவிகள்.

அலுப்பாக இருக்கிறது – கொடிது கொடிது அரைகுறைகளுடன் உரையாட நேர்வது. :-(

-0-0-0-0-0-0-0-0-

2014 ஜனவரி 31 அன்று ‘தி ஹிந்து’ நாளிதழில் வந்திருந்த ஒரு கேலிச் சித்திரம் அழகாக இதனைச் சொல்கிறது – ஆனால் இந்தக் கேலிச்சித்திரம் சொல்வது முழுவதும் சரியல்ல – ஊடகத் துய்ப்பாளர்களுக்கு இந்தப் பரப்புரைகள் வெல்லம்தான். வெறும் வாயை மெல்பவர்களுக்கு, இந்த வெல்லத்தையும் கொடுத்தால்?

31jan2013-hindu-surendraஇதில் ஒரு முரண்நகை என்னவென்றால் – இந்த ‘தி ஹிந்து’ நாளிதழுக்கும்கூட, இந்த கேலிச்சித்திரம் பொருந்தும். :-)

… … அயர்வாக இருந்தாலும், நம் நாடு ஒரு போற்றுதற்குரிய  ஜனநாயக நாடு, கருத்துரிமை என்பது மூளையிருப்பவர்களுக்கு மட்டும் இருக்கும் உரிமையில்லை என்பதும் புரிகிறது  – ஆக, எறும்பூரிக் கல்தேய்வது போல உரையாடல்கள் ஒரு நாள் சாத்தியப் படலாம் என்கிற நம்பிக்கையும் இருக்கிறது.

ஹம் ஹோங்கே காம்யாப்? :-)

குறிப்புகள்:

 1. அர்விந்த் கெஜ்ரீவாலறிவனார் எனும் பதம் நண்பர் ஸ்ரீதர் திருச்செந்துறை அவர்களால் உருவாக்கப் பட்டு இப்போது அர்விந்த் அவர்களுடைய ட்ரேட்மார்க் ஆகி விட்டது.  ஸ்ரீதருக்கு என்னுடைய செல்லமான முதுகுதட்டல்கள். நீங்கள் எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறீர்கள், ஸ்ரீதர்!
 2. கடைசிப் படம் தவிர மற்ற அனைத்துப் படங்களும் unSpun: Finding Facts in a World of Disinformation எனும் புத்தகத்திலிருந்து ஸ்கேன் செய்து எடுக்கப் பட்டுள்ளன; இந்தப் புத்தகத்தைப் பற்றி இன்னொரு நாள் விலாவாரியாக எழுதவேண்டும். ஆங்கிலம் தெரிந்தவர்கள் அனைவரும் ஒரு தடவையாவது இப்புத்தகத்தைப் படிக்க வேண்டியது அவசியம்.

நரேந்த்ர மோதி!

7 Responses to “நரேந்த்ர மோதி-யின் மேல் புழுதியை வாரியிறைப்பது ரொம்ப லேசு!”

 1. Anonymous Says:

  கருணாநிதியின் மீதும் புழுதி வாரியிறைப்பது ரொம்ப லேசு…


  • அய்யா அனாமதேயரே, உண்மைதான் – ஆனால் முழுதும் உண்மையல்ல; ஆகவே ஒரு சிறு திருத்தம்.

   நீங்கள் சொல்லியிருக்க வேண்டியது – ‘புழுதியின் மீதும் கருணாநிதியை வாரியிறைப்பது ரொம்ப லேசு…’

   சரிதானே?

 2. சரவணன் Says:

  புழுதியை விடுங்கள். மிகவும் பொறுமையாக, நிதானமாகக் கேட்கப்பட்டுள்ள குறிப்பான இந்தக் கேள்விகளுக்கு இன்று வரை மோதி பதில் சொல்லவில்லையே, ஏன்?


  • மன்னிக்கவும் சரவணன். உங்கள் கரிசனம் எனக்குப் புரிகிறது.

   நேற்று முன்தினம் கூட, நான் அவரிடம் பேசிக் கொண்டிருக்கும்போது – இதனைப் பற்றியும், அபலை யஷோதா பென் அவர்களை அவர் தடுத்தாட்கொண்டு காப்பாற்றவேண்டும் என்றும் மன்றாடினேன்.

   ஆனால், மோதி தேர்தலில் மிகவும் மும்முரமாக இருப்பதாகவும் – ஆகவே கேள்விஞாநிகளுக்கெல்லாம் பதில் சொல்ல நேரமில்லையென்றும் நேற்று எனக்குச் சொன்னார். இன்று கூட, அவரிடம் இது பற்றிப் பேசுவதாக இருக்கிறேன்.

   நான் முயற்சி செய்துகொண்டுதான் இருக்கிறேன், நண்பரே! :-(

   ஆனால் அய்யா, உண்மையில் – மோதிஅடிப்பொடியான நான்கூட இதனைப் படிக்கவில்லை. திராணியில்லை, ஒப்புக் கொள்கிறேன்.

   வழிப்பாதை நாய்கள் குரைக்கும்; ஆனால் ஒட்டகச் சரக்கு நெடும்பயணங்கள் தொடரும். சரிதானே?


 3. அய்யா சரவணன் – அந்த ஆப்புக் கடிதத்தைப் படித்தேன்.

  உங்களுக்கு ஆனாலும் மகத்தான நகைச்சுவையுணர்ச்சி போங்கள்!

  பல விஷயங்கள் அந்தக் கடிதத்தில் நகைப்புக் கிடமாக இருக்கின்றன. எதிலும்முழுமையில்லை.

  சும்மனாச்சிக்கும் இரண்டு எண்களைத் திருப்பித் திருப்பிக் கொடுத்தால் அது சரியாகிவிடுமா? எந்த வங்கி என்று கூடச் சொல்லவில்லை. இது தொடர்பான ஒரு சிரிப்போதி சிரிப்புப் பதிவு: Full Details of Mukesh Ambani Swiss Bank Account Number as revealed by Kejriwal – http://consumer.admanya.com/blog_full_details_of_mukesh_ambani_swiss_bank_account_number_as_revealed_by_kejriwal-4013.html

  வெட்கக் கேடு.

  இன்னொன்று – எனக்கு நினைவிருக்கிறது – ஒருமுறை இதே அர்விந்தனார் ஒரு வணிகக்குழுமத்தின் வாடகை விமானத்தில் தனியாளாக ஓசியில் சென்று அதனைப் பற்றிப் பீற்றிக்கொண்டார் கூட. இரும்பை மஞ்சள்காமாலைக் கண்ணோடு பார்த்து ஈயமாகக் கருதும் பித்தளைகள், பல்லிளிக்கத்தான் செய்யும்.

  இந்த எரிவாயு குழப்பங்களை இன்னமும் நான் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. ஆகவே அதனைப் பற்றி ஒன்றும் கருத்து இல்லை. ஆனால், எனக்குத் தெரிந்து ஏப்ரல் முதல்தேதியிலிருந்து ஸிஎன்ஜி விலையும் உயரவில்லை. நாட்டில் பதட்டமும் நிலவவில்லை! கலவரமும் ஏற்படவில்லை. யோசித்தால் இந்த ஆள் ஒரு ஏப்ரல் ஃபூல் விளையாட்டை விளையாடியிருக்கிறார்.

  என்ன தரத்து கஞ்சா புகைக்கிறார் இந்த அர்விந்தனார் கேசரிவாலறிவனார் என்று தாங்கள் விசாரித்துச் சொல்ல முடியுமா… எனக்கும் அதனைப் புகைத்து மனம் பேதலித்துப் போக ஆசையாகவே இருக்கிறது.

  தொழில்முறையாக வாய்ச்சவடால் விடுவது திராவிடர்கள் மட்டுமேதான் எனும் என் துணிபை நான் இன்றுடன் மாற்றிக் கொள்கிறேன். அரைகுறைவாலர்கலும் அப்படித்தான் வால்கிரார்கல் என்பதை அரியும்போது என்னுடைய மார் விம்மிப் புடைக்கிறது!

  இந்தப் படிப்பினைக்கு உங்களுக்கு நன்றி.

  … ஆனாலும் — இந்தக் கடிதத்துக்குப் போய் ஒரு வேண்டாத மதிப்பு அளிக்கிறீர்களே, மரியாதைக்குரிய சரவணன்! :-(

 4. சரவணன் Says:

  கவலையே படாதீர்கள். ஒருவேளை மோதி பிரதமராகிவிட்டால் நிதி அமைச்சர் பதிவி கிடைக்காத சுப்பிரமணியன் சுவாமி இதே கேள்விகளைத் தன்னுடைய பாணியில் கேட்பார். என்ன, மனுஷன் கேட்டதோடு விடாமல் 1998ல் வாஜ்பாய் ஆட்சியைக (அம்மாவின் புண்ணியத்தில் ஒற்றை ஓட்டில்) கவிழ்த்ததுபோல மோதி அரசையும் கவிழ்ப்பார்… ஆப்பு என்றால் ஆம் ஆத்மி பார்ட்டி என்பதன் சுருக்கம் மட்டும் அல்ல என்று அப்போது மோதிக்குப் புரியும்!!


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s