குணோத்ஸவ்: மோதி-யின் அழகான கல்வித் திட்டங்களில் ஒன்று – சில குறிப்புகள், தமிழகத்தைக் குறித்த வருத்தங்கள்
April 13, 2014
குணோத்ஸவ் = தரத்தைக் கொண்டாடுதல்!
முன்குறிப்பு:
நான் இக்கட்டுரையை எழுதுவதற்கு 1) குஜராத் போகவில்லை (போய்ச் சில வருடங்கள் அங்கு தங்குவதாக, சுற்றுவதாகச் சில திட்டங்கள் இருந்தாலும், அடுத்த ஏழு வருடங்களுக்கு நிச்சயமாக அவற்றைச் செயல் படுத்த முடியாது), 2) ‘கூக்ள் தேடி’ மூலமாக உட்கார்ந்த இடத்தில் இருந்துகொண்டு இணையத்தையும் ஒற்றியெடுக்கவில்லை (ஏனெனில், எனக்கு திடீரெக்ஸ் காப்பியடித்து ஞானவானாகக் காண்பித்துக்கொள்ளும் முனைப்பும், முக்கியமாக வயதும் இல்லை)
ஆனால், நான் இக்காலங்களில் ஒரு சாதாரண கிராமப்புறப் பள்ளி ஆசிரியன். கல்வியைப் பற்றி, அதன் தமிழக நிலையைப் பற்றி மிகக் கவலைப் படுபவன். நம் இழி நிலையைச் சரிசெய்வதில் இருக்கும் மகாமகோ இடர்களை (ஒரு மண்புழுவினைய பார்வையில்) உணர்ந்து புழுக்கத்தில் இருப்பவன். சில சமயம் – யோசிக்கும் தருணங்களில், வரப்போகும் 10 -20 ஆண்டுகளில் எப்படிப்பட்ட தமிழகத்து இளைஞர்களை எதற்காக வார்த்தெடுக்கப் போகிறோம் என்று யோசித்து, நொந்துபோய்அடிவயிற்றில் கலவர உணர்ச்சியோடு இருப்பவன்… ஆக, இப்புழுக்கங்களுக்கு எதிராக, பல சமயங்களில் வெறியுடனும் சில சமயங்களில் மகாமகோ அயர்வுடனும் பணியாற்ற (mostly like a headless chicken) முயன்று கொண்டிருப்பவன். பலமுறை கேவலமாகத் தோற்றுக் கொண்டும், சிலதருணங்களில் மட்டும் (ஆசுவாசமளிக்கும் வகையில்) சில சிறு சிடுக்கவிழ்த்தல்களுக்காக, அற்பத்தனமாகப் புளகாங்கிதப் பட்டுக்கொண்டும். :-(
என்ன சொல்ல வருகிறேன் என்றால் – கொள்கைகள் / சட்டகங்கள் ரீதியாக எப்படி இக்கந்தறகோளங்களை எதிர்கொள்ளலாம், சரி செய்யலாம் என்ற கருத்துகள் பல எனக்கு இருந்தாலும், அவற்றின் மேல் என்னுடைய குவிந்த சக்தியில்லை, பெரிதான ஈடுபாடில்லை – என்னுடையபார்வையென்பது அடிமட்டப் (அல்லது அதிமட்டப்) பிரச்சினைகளைப் பற்றித்தான்.
இந்த அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப் படாமல், நிதி எங்கிருந்து வருமென்றே தெரியாமல் வெறுமனே மேலும்மேலும் திட்டங்கள் போடுவதும், திறப்புவிழாக்கள் நடத்துவதும் அவற்றுக்காகக் குரல் மட்டும் கொடுப்பதும் ‘படிப்புரிமைத் திட்டத்தின்’(= RTE சட்டம் எனும் கந்தறகோளம்!) பயனைப் பற்றி வீறிடுதலும், உள்ளீடற்ற வெறும் எண்ணிக்கைகளை மட்டும் அணிவகுக்கச் செய்து பவனி வருவதையும் வியர்த்தம் என்று நினைப்பவன் நான். ஆக, கல்வியின் மேன்மைக்கான மாற்றுத் திட்டங்களை, பல பிற நாடுகளிலுள்ளவைகளையும் சேர்த்து, கூர்ந்து கவனித்து வருபவன். இது தொடர்பான வலைகளில், நிபுணர்களோடு தொடர்பில் இருப்பவன்.
இதைத் தவிர தொழில்முறையிலும் தனிப்பட்டமுறையிலும் தொடர்ந்த உரையாடலில் இருக்கும் சில குஜராத் நயீதலீம் பள்ளி ஆசிரியர்களையும், மற்ற சிலரையும் அறிந்துள்ளவன். மேலும், இதைச் சொல்ல எனக்குக் கொஞ்சம் கூச்சமாகவே இருந்தாலும் – மோதி அவர்களுக்கு எதிராக அடிப்படைகளைற்ற விஷங்கள் மட்டுமே உமிழப் பட்டுக் கொண்டிருக்கும் இந்நாட்களில், இதைச் சொல்லவேண்டும் என்பதனால் — இந்த தனிப்பட்ட முறை நண்பர்களில் ஒருவர் முஸ்ஸல்மான், ஆரிஃப் எனும் பெரியவர் – என்பதையும் சொல்லிவிடுகிறேன். அவ்வளவுதான். முன்னமே இவரைப் பற்றிக் கொஞ்சம் எழுதியிருக்கிறேன். அனுபவமிக்க, நேர்மையாளர்களான சில குஜராத் ‘கேடர்’ ஐஏஎஸ் அதிகாரிகளையும் தெரியும் – இவர்களிடம் என் குழப்பங்களை, புரிதல்குறைவுகளைத் தொடர்ந்து நிவர்த்தி செய்துகொண்டிருக்கிறேன்.
குறித்துக் கொள்ளுங்கள்: மேற்கண்டவை மட்டுமே தான் (கீழுள்ள கட்டுரையை எழுதுவதற்கான) என்னுடைய தகுதிகள். அவ்வளவுதான்.
… ஆனாலும் இது தரவுகள் பெற்று, விதம்விதமாகப் புள்ளியியல் விவரங்கள் கிடைத்ததால் தகவல்களை மூன்று தடவை (வெவ்வேறு நபர்களிடம்) சரிபார்த்துப் பின்னர்தாம் எழுதப் பட்ட கட்டுரை. ‘ஏன் நம்மால் இதைக் கூடச் செய்ய முடியாதா?‘ என்கிற தலைப்பில் நான் ஏன் நரேந்த்ர மோதி அவர்களை ஆதரிக்கிறேன் எனச் சரியாக ஒரு வருடத்துக்கு முன் எழுத ஆரம்பித்தபின், அதன் தொடர்ச்சியில் வெளியிட்டிருக்கும் ஒரு பதிவு.
எப்படி இருந்தாலும், இது பிரச்சாரம் என்று ஒதுக்கப்பட நேர்ந்தாலும், என்னைப் பொறுத்தவரை, இந்த குணோத்ஸவ் திட்டமும் போற்றப்படவேண்டிய திட்டங்களில் ஒன்று. இதனை முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கும் மோதியும் ஆதரிக்கப்பட, நகலெடுக்கப்பட வேண்டியவரே.
நமது இந்தியாவில் தொலை நோக்குடன் (பொது நலனுக்காக, நமது நாட்டின் மேன்மைக்காக, சமூக நல்லிணக்கத்துக்காக) திட்டங்கள் தீட்டி அவற்றைச் செயல் படுத்துவதும் – தடைகளை மீறித் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் பாங்கும், தவறுகளைக் களைந்து கசடுகளைத் தவிர்த்து குறிக்கோள்களை நோக்கிச் செல்வதும் – போன்ற அடிப்படை குணாதிசியங்கள், நம் அரசியல்வாதிகளில் ஒரு சிலருக்கு மட்டுமே இருக்கிறது. அதே சமயம், பொது நலனைச் சுய நலம் என்றும், நாட்டின் மேன்மையைக் குடும்ப மேன்மை என்றும் விரித்துப் படித்தால் – நம்முடைய கருணாநிதி அவர்கள் அதில் முன்னோடி அரசியல்வாதியாகத் திகழ்வார் என்பதில், தமிழர்களாகிய நாம் உண்மையிலேயே பெருமைப் படவேண்டியவர்கள் தாம் என்பதில் எனக்கு ஐயமில்லை. ஆனால் – இது கல்வித்தரத்தின் மேன்மை போன்றவைகளைப் போற்றும் பதிவு. பதர்களைப் பற்றிச் பேசுவதற்கு இடம் இல்லை என்பதை அடிக்கோடிட்டு வைத்துக் கொள்கிறேன். இடரலுக்கு மன்னிக்கவும்.
… சர்வ நிச்சயமாக — முன்னவர்களுக்கு ஒரு மகத்தான மாதிரி: நரேந்த்ர மோதி அவர்கள் என்பதில் எனக்கு ஐயமில்லை.
-0-0-0-0-0-0-
குணோத்ஸவ் திட்டம் வெறும் எண்ணிக்கைகளை மட்டும் காட்டி மாய்மாலம் செய்யும் பிரச்சாரவாகனம் அல்ல – அது முதலில் முன்வைப்பது அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டை – தரத்தை. நல்ல குணக்கூறுகளை மேன்மைப் படுத்தலை. மீயறிவு வளர்ச்சியை. தரமான நிர்வாக முறைகளை. கூறுகெட்ட புள்ளியல் எண்ணிக்கைகளை மட்டும் அல்ல. எண்ணிக்கைகளை (மேதகு கெஜ்ரீவாலர் அவர்கள் போல மாயமந்திரமாக) மாற்ற முடியும்.
குறைந்த பட்சத் தரத்தை ஸ்தாபனம் செய்து அதனைத் தொடர்ந்து உயர்த்துவதுதான் இந்தத் திட்டத்தின் சாராம்சம்; வெறும் எண்ணிக்கைகளை மட்டும் காட்டி பவனி வருவதல்ல இந்தத் திட்டம்.
மிக முக்கியமாக 2021ஆம் ஆண்டில் குஜராத்தின் கல்விச்சூழல் எப்படி இருக்கவேண்டும் எனும் கனவை நோக்கி, சிறுசிறு அடிகளாக வைத்து – அதனை நனவாக்குவதில், இத்திட்டத்துக்கு முக்கியமான பங்கு இருக்கும்.
ஆனாலும், குஜராத் பற்றிய சில முக்கியமான விவரங்களை/பின்புலங்களை முதலிலேயே கொடுக்கிறேன். இது ஒரு சரியான பார்வையை அளிப்பதற்காக.ஏனெனில் ‘தரம்’ என்பது திடீரென்று ஆகாயத்திலிருந்து குதித்து வந்துவிடமுடியாது.
- குழந்தைகளைப் பள்ளியில் (ஆரம்ப/அடிப்படைக் கல்விக்காக – primary education) சேர்ப்பது கிட்டத்தட்ட 98% (இதனை, இந்த ஆண்டு 99% ஆக்கிவிடுவார்கள் என நினைக்கிறேன்); 7ஆம் வகுப்பு முடிவில் பள்ளியில்/படிப்பில் இருந்து குழந்தைகள் விலகுவது இரண்டு சதவிகிதத்துக்கும் கீழே!
- கடந்த 2012-13 ஆண்டில் மட்டும் – ஆரம்பக் கல்வியில் மட்டுமே கீழ்கண்ட கட்டுமானங்கள் ஏற்படுத்தப்பட்டு (=முடிக்கப்பட்டு) – மிகமுக்கியமாகப் பராமரிக்கப் படுகின்றன:
- சுமார் 16,000 புதிய பள்ளியறைகள், அரசுப் பள்ளிகளில் கட்டப் பட்டுள்ளன – பாடம் நடத்துவதற்காக கரும்பலகை, மேசைகள் நாற்காலிகள், மின்விசிறி சகிதம் (பள்ளி நேரத்தில் பள்ளிகள் இருக்கும் பிரதேசங்களில் மின்சாரவெட்டு கிடையாது)
- சுமார் 7500 அரசுப் பள்ளிகளுக்கு சுற்றுச் சுவர் கட்டப்பட்டு, அவற்றின் விளையாட்டு மைதானங்களுக்கும், தோட்டங்களுக்கும் தேவையான பாதுகாப்பை அளிக்கின்றன. பள்ளிச் சூழலில், குழந்தைகளுக்கு ஒரு தனிப்பட்ட, ஆபத்தற்ற அனுபவத்தை அளிப்பதற்கு இது முக்கியமானது.
- அரசுப் பள்ளிகளில், சுமார் 6500 புதிய கழிப்பறைகள் கட்டப் பட்டுள்ளன; ஆரம்பப் பள்ளிகளில், 900த்துக்கும் மேல் உடல் ஊனமுற்ற குழந்தைகளுக்கு ஏதுவான புதிய கழிப்பறைகள் கட்டப் பட்டன.
- சுமார் 1100 அரசுப் பள்ளிகளில் முக்கிய மராமத்து வேலைகள் நடைபெற்றன.
- கடந்த 2013-14 ஆண்டில் மட்டும் (என்னிடம் விவரம், 2014 ஃபெப்ருவரி மாதம் வரை இருக்கிறது) – ஸெகன்டரி கல்வியில் மட்டுமே கீழ்கண்ட கட்டுமானங்கள் ஏற்படுத்தப் பட்டன / பட்டுக் கொண்டிருந்தன:
- 350 புதிய பள்ளிக் கட்டடங்கள் கட்டப் பட்டு – வேலைகள் முடிக்கப் பட்டுள்ளன.
- 70-க்கும் மேற்பட்ட ‘மாதிரி பள்ளிகள்’ – பெண்களுக்கான தங்கும் விடுதிகளுடன் கட்டப் பட்டுள்ளன.
- ஒரு சரிபார்க்கப் பட்ட ஜாபிதாவின் படி, கடந்த 13 ஆண்டுகளில், நரேந்த்ர மோதி தலைமையில் குஜராத் மாநிலத்தில் தொடர்ந்து எழுப்பப்படும் அரசு நடத்தும் கல்விச்சாலைகளுக்கான சரியான பராமரிப்பில் இருக்கும் கட்டுமானங்கள் – எனக்கு மிகவும் வியப்பைத்தருபவை.இவற்றில் — சுமார் 75,000 புதிய வகுப்பறைகள், பராமரிப்பில் உபயோகத்தில் இருக்கும் சுமார் 50,000 கழிப்பறைகள், சுமார் 18,000 கணினி சாலைகள் — போன்றவை அடங்கும்.
ஆம்! அடிப்படை வசதிகள் இல்லையென்றால் தரத்தின் அருகில் கூடச் செல்லமுடியாது.
குஜராத் அரசின் தொலைநோக்குத் திட்டங்கள் சரியாக அமலாக்கப்பட்டு நிர்வகிக்கப் படுவது, அம்மாநிலத்தின் மேன்மைக்கு நிச்சயம் உதவிகரமாகவே இருக்கும். ஆமென்.
-0-0-0-0-0-0-0-0-
இப்போது நான், என்னுடைய தமிழகத்திலுள்ள நிலைமையைப் பற்றி யோசிக்கிறேன்: நானிருக்கும் வானூர் வட்டம் (விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள எட்டு வட்டங்களில் ஒன்று – புதுச்சேரிக்கு அண்மையில் உள்ள பிரதேசம்) என்பதை விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறேன். இந்த வட்டத்தில் சுமார் 70 பஞ்சாயத்துகள் உள்ளன. ஓவ்வொரு பஞ்சாயத்திலும் 3-5 கிராமங்கள் + 1-2 காலனிகள் உள்ளன. இந்த வட்டத்தில் சுமார் 200க்கு மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. அரசின் புள்ளியியல் விவரப் படி, இந்த வட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் தரமான கழிப்பறை வசதியிருக்கிறது – கடந்த சுமார் பத்தாண்டுகளாக இப்படித்தானாமே!
நான், கடந்த 7 மாதங்களில், அருகாமையில் உள்ள ஒன்பது அரசுப் பள்ளிகளுக்குச் சென்றிருக்கிறேன். மூன்று பள்ளிகளில் கழிப்பறையே இல்லை; வெறும் சுவர் தான். ஐந்து பள்ளிகளில் துர்நாற்றம் வீசும், சிதிலத்தில் இருக்கும் கழிப்பறைகள். ஒரு பள்ளியில், தலைமையாசிரியரின் முயற்சியால் கழிப்பறைகள் பராமரிக்கப் படுகின்றன, ஆனால் இப்பள்ளிக்கு, சரியான சுற்றுச்சுவர்/வேலியில்லாத காரணத்தால், கிராமக் குடிகாரர்கள் அடிக்கடி உள்ளே வந்து கழிப்பறையைச் சுற்றி அசிங்கம் செய்துவிடுகிறார்கள், லோல் படவேண்டியிருக்கிறது என்றார்.
இப்பள்ளிகளில் ‘படிக்கும்’ ஆண்குழந்தைகளுக்குப் பரவாயில்லை – சர்வ சுதந்திரத்துடன் தெருவோர அற்ப விஜய் / சூர்யா /உதயநிதி படச் சுவரொட்டிகளின் மீது, நடிகர்களின் வாயைக் குறிவைத்து டிஸைன் டிஸைனாக ஒண்ணுக்கு அடிக்க முடியும். ஆனால்… பெண்குழந்தைகளும், ஆசிரியர்களும் பாவம் திணறித்தான் போவார்கள்.
சில ஆசிரியர்களிடம் இது பற்றிப்பேசினேன் – ஏன் நீங்களே உங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து கழிப்பறைகளைச் சுத்தமாக வைத்துக் கொள்ளக் கூடாது? இதற்கு, பெரும்பாலானவர்களின் பதில் – அது எங்கள் வேலையல்ல (இது உண்மைதான்கூட!); சிறுபாலானவர்களின் பதில்: நாங்கள் முயற்சி செய்தோம். ஆனால் பெற்றோர்களிடமிருந்து பலத்த எதிர்ப்பு – இதனை அவர்கள் இழிவேலையாக நினைக்கிறார்கள், குழந்தைகளை இதில் ஈடுபடுத்தக்கூடாது என்கிறார்கள். சிலசமயம் தினசரிகளில் எல்லாம் செய்தி போட்டு அசிங்கப் படுத்திவிடுகிறார்கள் வேறு. நாங்களும் எவ்வளவுதான் வேலை செய்யமுடியும்? (இதுவும் உண்மைதான்!)
கல்வி என்பது கக்கூஸ் வாரி சுத்தம் செய்வதும்தான். ஆனால் புள்ளியியல் விவரப் படி, தமிழகக் கல்வியில் திராவிடக் கட்சிகள் காரணமாக மட்டுமே, சுபிட்சம் பீடு நடை போடுகிறது. சுபம். ஆக சுத்தம் என்பது தானாகவே, சுயம்புவாகவே ஏற்படும் ஒன்று அல்லவா? ஆனாலும், ஏன் கழிப்பறைகள் தானாகவே கட்டிக்கொள்ளப்பட்டு சுத்தமாகாமல் இருக்கின்றன?
ஆரிய சதியோ? ராஜபக்ஷ காரணமோ என்ன எழவோ!
… ஹ்ம்ம்… … மற்றபடி, இதைத் தவிர — வகுப்பறைகள், கணினிகள், ஆசிரியர்கள், குடிநீர், போதிப்பதற்கான உபகரணங்கள், மின்சாரம், மின்விசிறி,தோட்டம், விளையாட்டுத் திடல்கள் போன்ற மற்ற அடிப்படை விஷயங்களைப் பற்றிப் பேச ஆரம்பிக்கக் கூடப் போவதில்லை. வானூரில் உள்ள, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கல்வித் துறையினருடனும் பேசியிருக்கிறேன். கடலூர், திண்டிவனம் நகரங்களில் உள்ள அரசுக் கல்வித் துறை நிர்வாகிகளுடனும் பேசியிருக்கிறேன். நான் பார்த்தது – ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதத்தினனையதுதான்.
ஆம், புள்ளியியல் விவரங்களின் படி, தமிழகம் எங்கோ உச்சாணிக் கிளையில்தான் இருக்கிறது. :-(
தமிழகத்தில் கல்வி பற்றி எழுதிய ஆங்கிலக் கட்டுரையைப் படித்து பலருக்குக் கோபம். அவர்கள் கருத்தில் தமிழகம் சூப்பர்; நான் காமாலைக் கண்ணன். சரிதான்.
அய்யாமார்களே! தமிழகத்தில் கல்வியின் நிலை எனும் பெரிய பூதத்தையே விடுங்கள் – அதன் ஆரம்பக் கல்வியின் பிரத்யட்ச, நிதர்சன நிலையைப் புரிந்து கொள்ளவேண்டுமென்றால் – உங்கள் மேலான கடுமை நிரம்பிய நகர வாழ்க்கையில் சில மாதங்களையாவது தியாகம் செய்து இந்த கிராமப்புற அரசுப் பள்ளிகளில் செலவழித்து, அவற்றிலுள்ள நடைமுறைப் பிரச்சினைகளை அறிந்து கொள்ள முயற்சி செய்தால்தான் முடியும்… அதுவரை குளிரூட்டப்பட்ட அறையில் சுழல் நாற்காலியில் அமர்ந்து, இணையத்தில், தமிழகத்தில் கல்வி நிலையைப் பற்றிய பிரச்சாரங்களை அவிழ்த்து விடவேண்டியது முக்கியம்தான்! மாப்பு கேட்பதற்கு பதிலாக இறுமாப்படையவேண்டியதுதான்! போங்கடா வேலையத்தவனுங்களா.
ஆனாலும் ஒன்று சொல்லவேண்டும்: இத்தனை நடைமுறைக் கஷ்டங்களையும் மீறி, ஒருசில தமிழக அரசுப் பள்ளிகள் ஜொலிக்கின்றன. தரம் என்றால் அப்படியொரு தரம். ஆனால் இவைகளின் விழுக்காடு என்பது மிகவும் சிறியது. இவைகளுக்குப் பொறுப்பான மனிதர்கள் அதிமனிதர்கள்! அவர்களை வணங்குகிறேன். இவர்களின் ஒருவர் கூட திராவிடச் சராசரித்தனத்தால் பீடிக்கப் படவில்லை என்பதில் எனக்கு மகிழ்ச்சியே!
-0-0-0-0-0-0-0-
… ஆனாலும் — ஜோடனைகள், மினுக்கல்கள், பொய்கள், அண்டப் புளுகுகள்… புள்ளியியல் விவரங்கள்…இந்த விவரங்களுக்குள் மூழ்கி, மறுபடியும் மறுபடியும் விஷயங்கள் தெரிந்தவர்களுடன் நமக்குத் தென்படுபவைகளைச் சரிபார்த்து, மறுபடியும் நுணுக்கமாக நோக்கி முத்தெடுப்பதற்குள், பொதுவாகவே தாவு தீர்ந்துதான் விடுகிறது…
சரி. குணோத்ஸவ் பக்கம் செல்வோம். (அடுத்து வரும் பதிவுகளில் ஒன்றில்)
April 14, 2014 at 10:48
தலைமை ஆசிரியரை முழு நிதி அதிகாரம் மற்றும் செயல் அதிகாரம் மற்றும் ஒழுங்குறுத்தும் அதிகாரம் ஆகியவற்றைத் தந்து அவருக்கு ஒரு சட்டரீதியான ஆலோசனைக்குழுவையும் அமைத்து ஒரு பல்கலைக்கழக துணைவேந்தர் போன்று செயல்படவிட்டால் நிலமை திருந்துமோ!
April 14, 2014 at 11:26
அய்யா, திருந்தலாம். ஆனால், முழுநிதி அதிகாரம் தவிர பிற அதிகாரங்கள் இருக்கின்றன. இதில் நடைமுறைப் பிரச்சினைகள்தான்!
மேற்படி – இந்தத் தலைமைக்காரர்களுக்கும் வகுப்புகள் இருக்கின்றன, வேண்டாவெறுப்பாக வேலை செய்யும் ஆசிரியர்களைச் சரிகட்ட வேண்டும்; பெற்றோர்களை, திரியாவரங்களை மேலாண்மை செய்யவேண்டும். மாதம் மூன்று முறையாவது மேலதிகாரிகள் அழைத்தல், ஒருங்கிணைப்புகள் என்றெல்லாம் இருக்கும். பலவித புள்ளிவிவரங்களைக் கேட்டுக்கொண்டேயிருப்பார்கள். மதியவுணவு பூதம் வேறு. இவற்றைத் தவிர தினதினப் பிரச்சினைகள்… இந்த வேலைகளை ஒழுங்காகச் செய்யவேண்டுமானால், வாரத்திற்கு ஏழு நாட்கள் போதாது.
நமது பள்ளிகள் சிறியதாக்கப் படவேண்டும். அதிகபட்சம் 40 குழந்தைகள் + நான்கு ஆசிரியர்கள் (மான்டிஸோரி முறை). ஒரு பேருந்து + ஓட்டுனர் இருக்கவேண்டும். கலைகள், விளையாட்டுகள், பரிசோதனைசாலைகள், திரையரங்கம் உணவுசாலை போன்றவற்றிற்கு பத்து பள்ளிகளுக்கு ஒன்றாக ஒரு பெரிய கட்டமைப்பு இருக்கவேண்டும். பள்ளிகளைச் சுற்றியுள்ள கைவேலை நிபுணர்களின் ஞானத்தைக் கறக்க முடியவேண்டும். பாரம்பரியத் தொழில்களை படிப்பித்தலுக்கு உபயோகப் படுத்தவேண்டும்.
இந்தப் பத்து பள்ளிகளுக்கு ஒரு தலைமை அதிகாரி இருக்கவேண்டும். இவர் மட்டுமே ஆசிரியரல்லாத வேலைகளைச் செய்யவேண்டும்…
இப்படி ஏதாவது சுமார் 15 வருடங்களுக்குச் செய்தால், உருப்படலாம் எனத் தோன்றுகிறது.
April 14, 2014 at 13:24
My dad is a retired teacher who didn’t take up the HM role . He still had to play the role due to his seniority. I have heard through him his experiences and the practical difficulties in being an HM. Agree with what you say , Ram. May be to start with, we need really interested graduates who are willing to be teachers. Not sure at what point I the last 50 years, being a teacher lost its charm.
April 14, 2014 at 13:47
\ சில குஜராத் நயீதலீம் பள்ளி ஆசிரியர்களையும், மற்ற சிலரையும் அறிந்துள்ளவன். \\
ஐயன்மீர், மேற்கண்ட சொல் *நயீ தாலீம்* என்று இருக்க வேண்டுமல்லவா? (கேள்வியறிவால் சம்சயம் வந்து பிறகு கூகுள் சர்ச் செய்ய முனைந்தேன்)
Nai Talim is a spiritual principle which states that knowledge and work are not separate. However, the concept has several layers of meaning.
மேற்கொண்டு விபரம் பார்க்க முடியவில்லை.
தாலீம் பற்றி எந்த உரலைப் பார்க்க விழைந்தாலும் ஒரே விஷ்ணு சக்ரமாக சுத்திக்கொண்டே இருக்கிறது.
ஏதோ பயங்கர ஹிந்துத்வ அல்லது ஆரிய சதி போலும்.
\\ ஒருசில தமிழக அரசுப் பள்ளிகள் ஜொலிக்கின்றன. தரம் என்றால் அப்படியொரு தரம். ஆனால் இவைகளின் விழுக்காடு என்பது மிகவும் சிறியது. இவைகளுக்குப் பொறுப்பான மனிதர்கள் அதிமனிதர்கள்! அவர்களை வணங்குகிறேன். \\
சில என்பதற்குப் பதில் பல என்று சொல்லியிருந்தால் சரியாக இருக்குமோ எனத் தோன்றுகிறது.
தமிழகத்தில் பல அரசாங்க மருத்துவமனைகளும் கூட முறையாக இயங்குகின்றன என்பதையும் சேர்த்துக்கொள்ளலாமே.
இதெல்லாம் த்ராவிட குடும்ப நலன்களை மீறி பொதுநலனையும் ஒரு பொருட்டாக மதிக்கும் சில மானுடர்களின் *அதிமானுஷ* செயல்பாடு தான் என்று நம்புகிறேன்.
April 14, 2014 at 16:50
/// 7ஆம் வகுப்பு முடிவில் பள்ளியில்/படிப்பில் இருந்து குழந்தைகள் விலகுவது இரண்டு சதவிகிதத்துக்கும் கீழே! ///
Statistics of School Education, 2010-11, MHRD தரும் விவரப்படி, 1 முதல் 8ம் வகுப்பு வரை இடை நிற்றல் குஜராத்தில் 46.7% ஆகும். 1 முதல் 10ம் வகுப்பு வரையில் என்றால் 57.9% ஆகும்! இவை பூதாகரமான எண்கள் ஐயா! என்ன கணக்கில் 7ம் வகுப்பு வரை 2% கீழே என்கிறீர்கள்? நான் சொல்வது 3 வருடம் பழைய கணக்கு என்று வைத்துக்கொண்டாலும் அதற்குள் இவ்வளவு முன்னேற்றம் நிகழ வாய்ப்பில்லை.
காண்க http://mhrd.gov.in/sites/upload_files/mhrd/files/SES-School_201011_0.pdf
(பக்கம் 66)
மேலும் டைம்ஸ் ஆஃஃ இந்தியா சொல்கிறது-
Narendra Modi’s Turf Flops of Education, Health
இந்தக் கட்டுரை நிறைய ஜொலிப்புகளைப் போட்டு உடைக்கிறது. உதாரணமாக சிசு மரண விகிதம் கேரளாவில் 12%, தமிழ்நாட்டில் 21% என்றால் குஜராத்தில் 38%. பரிதாபப்பட்ட ஜனங்கள்! அங்கு திராவிட இயக்கம் போன்ற popular mass movement ஒன்று உருவாகாததே காரணம் எனலாம். ஒன்றுமே செய்யாமல் அடுத்த முறை ஓட்டுக் கேட்க வர முடியாது என்ற நிலையை திராவிட இயக்கம் உருவாக்கியது. இது தமிழ்நாட்டின் சோஷியல் இன்டிகேட்டர்களில் நேரடியாகப் பிரதிபலிக்கிறது.
April 14, 2014 at 18:15
கல்வி இயலில் (B.Ed / M.Ed) மேலாண்மை அல்லது மேலாண்மை (M.B.A) படிப்பில் கல்வி நிறுவன மேலாண்மை ஒரு தனி துறையாக நடத்தப்பட வேண்டும். கல்வி நிறுவன பராமரிப்பு சாதாரண விஷயம் இல்லை. நம் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மேலாண்மை என்றால் என்ன கேட்கும் நிலையில் தான் தலைமைகளும் ஆசிரியர்களும் இருக்கிறார்கள்.
நல்ல கல்வியாளராக இருந்தால் மட்டும் போதாது. நிதி ஒதுக்கீடு, நிதி, மனித வள மேலாண்மை, உளவியல் என்று பல துறைகளில் நிபுணத்துவம் இல்லாவிட்டாலும், ஓரளவு தெளிவு இருந்தால்தான் சிறு பள்ளியின் பொறுப்பை ஒப்பேற்ற முடியும். இவை எல்லாவற்றிற்கும் மேலே, ஒழுக்கம், கட்டுப்பாடு போன்ற குணங்களும் தேவை. மலைப்பாக இருக்கிறது. நம்பிக்கை இழந்து விடக்கூடாது என்று நமக்கு நாமே சொல்லிக்கொள்ள வேண்டும்.
April 15, 2014 at 14:19
O Sridhar, your views depress me. Reality considered harmful, what else!
But the Sun cannot always be eclipsed by the moon, we shall overcome, we live on impossible hopes and all that.
April 15, 2014 at 14:03
நான் இரண்டு மாதம் முன்பு குஜராத் சென்றிருந்தேன். அஹமதாபாத், பரோடா போன்ற பெரிய நகரங்களுக்கும், பிற சிறிய கிராமங்களுக்கும் சென்று வந்தேன். நாங்கள் சென்ற பல கிராமப் புறங்களில் ஓரிரு பள்ளிகளைப் பார்ப்பதே அரிதாக இருந்தது. அப்படியே பார்த்தாலும் மாணவர்கள் (ஆண்) மட்டுமே கண்ணுக்குத் தெரிந்தனர். மாணவிகளைப் பல இடங்களில் பார்க்கவே முடியவில்லை.
கல்வித் திட்டங்கள் வெற்றி பெற பல ஆண்டுகள் ஆகுமென்றே நம்புவோம். ஆனாலும் நீங்கள் சொல்வது போல குநோத்சவ் திட்டம் அசுர வளர்ச்சி கொண்டிருந்தால், எங்கும் பள்ளிக்கூடங்கள், எங்கு நோக்கினும் மாணவ மாணவிகள் என்றல்லவா நாங்கள் பார்த்திருக்க வேண்டும் ?
சாலைகளிலும் ஊர்ப்புறங்களிலும் மட்டுமே பார்த்து ஒரு இடத்தின் வளர்ச்சியை நிர்ணயிக்க முடியாது என்பது உண்மை தான். ஆனாலும் உங்கள் பதிவில் உள்ள புள்ளி விவரங்கள் கொஞ்சம் மிகையாக இருப்பது போலவே எனக்குத் தோன்றுகின்றன.
April 15, 2014 at 14:13
அய்யா – நான் இதுவரை குணோத்ஸவ் பற்றி எழுதவேயில்லை. பிற திட்டங்களின் வெளிப்பாடுகளைப் பற்றிமட்டுமே எழுதியிருக்கிறேன்.
கூடிய விரைவில் எழுதுகிறேன்; சமயங்களில் தவறுதலாகச் சிலதளங்களுக்குப் போய் விக்கிபீடித்துப் போக நேர்வதால் – ஆக்கபூர்வமான விஷயங்களைப் பற்றி எழுதமுடிவதில்லை… ;-)
ஆனால், தாங்கள் சொல்வது புரிகிறது. எனக்கும் – எப்படி ஒரு விஷயத்தைப் பார்ப்பது, சரியாகப் பரிசீலிப்பது எப்படி, அலசுவது என்றெல்லாம் பயிற்சி தேவை. உண்மைதான்.
April 16, 2014 at 17:48
sir I am a great fan of modiji. you are article super sir…