தமிழர்களும் நீளமும்
January 24, 2014
(அல்லது) தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (17/n)
இந்தத் தலைப்பை, தமிழ் – ஆண்கள் – பலானதின் நீளம், அதைக்குறித்த அவர்கள் போதாமை என்று நீங்கள் புரிந்துகொண்டால், அது சரியில்லை என்றாலும், உடனடியாக சாளரம் #3க்குச் செல்லலாம்: சாளரம் #3: தமிழர்கள், தங்கள் ஆண்மை குறித்த தாழ்வுணர்ச்சியால் வாடுபவர்கள் (24/11/2013)
ஆக — கவனம், கவனம். இந்தச் சாளரம், வேறு ஒன்றைக் குறித்தது.
சாளரம் #9: பொதுவாக, நம் தமிழர்களுக்கு நீளம் எனும் அளவை சரியாக மேலாண்மை செய்ய முடியாது, தெரியவும் தெரியாது;
இந்தக் கோட்பாட்டினைப் புரிந்துகொள்வதற்கு, இந்த ’நீளம்’ எனும் படிமத்தை (வெறும் குறியீட்டை அல்ல), நாம் பல விதங்களில், பல கோணங்களில், பல துறைகளின் ஊடாகப் பார்க்கவேண்டும். இந்தப் பொதுத்தன்மையானது, பண்பாட்டு ரீதியாக நாம் ஒதுக்கிக்கொண்டிருக்கும் சிரத்தை மனப்பான்மையை, ஆகவே வளர்த்துக்கொண்டிருக்கும் அசட்டை/விட்டேற்றி மனப்பான்மையை ஒட்டி உருவாகிறது.
-0-0-0-0-0-0-0-
எந்த ஒரு விஷயத்தையும் புரிந்துகொள்வதற்கு, செயல்படுத்துவதற்கு – அவற்றைச் செம்மையாகச் செய்யவேண்டும் என்றால், அதற்குத் தேவையான நேரத்தையும் (= நீளம்), குவிந்த உழைப்பையும் ஒதுக்குவதைத் தவிர வேறு வழியே இல்லை. ஆனால், நாம் இதற்குத் தயாரில்லை – மேலும் அவற்றுக்கான பயிற்சியும் நம்மிடையே இல்லை.
எடுத்துக் காட்டாக, படிப்பது: ஏதாவது கட்டுரையோ அல்லது நாவலோ நீளமாக இருந்தால் அவை மிகவும் சுலபமான நடையில் இருந்தாலும்கூட, நம்மால் அவற்றைப் புரிந்துகொள்ளவே முடியாது – புரிந்துகொள்வதை விடுங்கள், நம்மால் அவற்றைப் படிக்கக்கூட முடியாது.. அதற்காக நாம் பிரயத்தனப்படவே மாட்டோம். (ஒரு வேளை அவை இரண்டு பக்கக் கட்டுரைத் தொடராக (+ அதற்காக ‘ஜெ…’ போன்றவர்கள் வரையும் பெண்களின் பாற்சுரப்பிகள் பிதுங்கி வழியும் படங்களுடன்) ஏதாவது வாரப்பத்திரிக்கையில் வந்தால் நாம் படிக்கலாம்.)
நீண்டகால குவிந்த, குறிக்கோள் நோக்கிய உழைப்பு என்பதனை நாம் கற்பனை செய்து பார்க்கக்கூட முடியாது.: மன்னிக்கவும். நமக்கு உடனடி ‘டூ மினிட் நூட்ல்ஸ்’தான் தேவை. ‘இன்னிக்குச் செத்தா நாளக்கிப் பால்’ போன்றவற்றைத்தாம் நம் மூளைகள் புரிந்துகொள்ள முடியும். மேலதிகமாக யோசிக்க முயன்றால் நம் நற்றமிழ் மூளைகள் உருகிவிடக்கூடிய அபாயம் வேறு இருகிறது!
நமக்கு வரலாற்றுப் பிரக்ஞை என்பது – அர்த்தமற்ற உணர்ச்சிப்பிரவாக அரைகுறைநடைத் தமிழ் மூலமாக வடிகட்டப்பட்டு வருவதைத் தவிர வேறொன்றுமில்லை. அல்லது எழவாவது அறிவு போன்ற திரைப்படங்கள் மூலமாக வந்தால்தான் உண்டு. இவற்றுக்கெல்லாம் மாறாக உண்மையிலேயே வரலாற்றைப் பற்றி, வரலாறுகளைப் பற்றியெல்லாம் தெரிந்து, அறிந்துகொள்வதென்றால் அதற்கு மாமாங்கங்கள் ஆகுமே! நமக்கு அதற்கெல்லாம் நேரமே கிடையாது அல்லவா?
நமக்கு உடனடி அறிவு வேண்டும் – அதுவும் அலுங்காமல் நலுங்காமல், நீளம் ஒரு பிரச்னையாக இல்லாமல், சுருக்கமாக வரவேண்டும். ஆக ராஜராஜசோழன் பற்றித் தெரியவேண்டும் என்றால் இன்குலாப் (“காலனியாதிக்கத் தொழுனோய்த் தேமலைப் புவியில் பரப்பிய புல்லன்”) கண்ணகி பற்றித் தெரியவேண்டும் என்றால் அறிவுமதி (‘ஆடல் கண்ணகி’), திருக்குறள் பற்றித் தெரிய வேண்டும் என்றால் கருணாநிதி (’குறளோவியம்’)… சுபம்.
(போட்றா ஒர் சாதா ரோஸ்ட்! கஷ்டமர் ஒரு நிமிட்டா வெய்ட் பண்ணிக்னுகீறார். நீ இன்னாடா சொறிஞ்சிக்கினுகீர…)
பிரச்னைகளின் பின்புலத்தை, வீரியத்தை, வரலாற்றைப் புரிந்துகொள்ளல், பின் சமரச மார்க்கத்தில் அவற்றின் சிடுக்குகளை அவிழ்த்தல், நெடுநோக்குடன் அவற்றை சரி செய்தல் போன்றவற்றில் முனைந்தால் கொஞ்சம் காலம் எடுக்கலாம்… இந்தக் கால அளவு கொஞ்சம் நீளமாக இருக்குமோ? ஆக, மன்னிக்கவும். நமக்கு உடனடி விளைவுகள் முக்கியம்.
குடிகாரக் கூவான்களினாலான பிரச்சினை: டாஸ்மாக் கடைகளுக்குப் பூட்டுப் போட்டால் குடிப்பிரச்னைகளை ஒழித்துவிடலாம்.
ஜெயலலிதா ஆட்சி அமைத்த மூன்றே மாதங்களில் மின்சாரவெட்டுக் கந்தறகோளங்களைச் சரிசெய்துவிடுவார்: நாமும் நம்புவோம். நமக்குத்தான் மூன்று மாதத்துக்கும் மூன்று வருடத்துக்கும் கூட வித்யாசமே தெரியாதே! தற்கால நிலைமை, அதற்கான காரணிகள், ஏற்படுத்தப்படவேண்டிய கட்டமைப்புகள், புனர் நிர்மாணங்கள், களையெடுப்புகள் பற்றியெல்லாம் — என்ன அவை, எவ்வளவு காலமெடுக்கும், அவற்றின் பின்புலங்களென்ன – என்று ஒரு எழவையும் தெரிந்து கொள்ள மாட்டோம். இருந்தாலும் இது நடக்கும் என நம்புவோம்.
நாமென்ன கண்டோம்? முந்தைய ஆட்சியில் — கருணாநிதியின் – தன் குழந்தைகளுக்கான அதிகாரப் பங்கீட்டைச் செய்வதை, அடுத்து வரும் அவர் வழித்தோன்றல் தலைமுறைகளுக்காக திரவியம் தேடிக்கொண்டு ஆட்சியை நடத்தும் முறையைப் பற்றிச் சிலாகித்துக் கொண்டிருந்தோம். அவர் அந்த நேரத்தில் என்ன முடிக்கு தமிழகமேம்பாட்டிற்காக உழைக்காமலிருந்தால் என எண்ணினோமா? ஏன் தொலை நோக்குடன் பணி செய்யவில்லை எனக் கேட்டோமா? ஏனெனில், அவருக்கும் தொலை நோக்கு (அவர் வாரிசுகளைப் பற்றியதல்ல) இல்லை, நமக்கும் அது இல்லவேயில்லை.
சரி, மின்சாரத் தட்டுப்பாடு சரியாகவில்லையா? ஓ, அவ்ளோ நாளாவுமா எனப் புலம்புவோம்.
ஸ்ரீலங்கா பிரச்னை: ஆஹா, அதனை தமிழ்ப் பகுதி, சிங்களப் பகுதி என்று நாளைக்கே பிரித்துவிட்டால் பிரச்னையாவது, மண்ணாவது.
அல்லது, சீமார் அவர்கள் சொன்னதுபோல, அவருக்கு ஐநா சபையில் பத்து நிமிடம் பேச வாய்ப்புக் கொடுத்தால், ஸ்ரீலங்கா பிரச்னையைத் தீர்த்துவிடுவாரில்ல, தீர்த்து… (இதை நான் கேலி செய்வதற்காகச் சொல்லவில்லை – அவருடைய பேச்சை, நல்ல தமிழ்த் தடிமன் தோல் உள்ள எனக்கே ஒரு நிமிடத்துக்குமேல் தாள முடியவில்லை; ஆக, தர்க்கரீதியில் யோசித்தால், இவர் பேச்சைப் பத்து நிமிடம் போலக் கேட்டால் உலகமே கதறிக்கொண்டு அவர் காலடியில் வீழ்ந்து, அய்யா உங்கள் ஈழத்தை எங்கு வேண்டுமானாலும் ஸ்தாபனம் செய்துகொள்ளுங்கள், தயவு செய்து உணர்ச்சிக்குவியல் பேச்சை நிறுத்துங்கள் என ஏகோபித்து விண்ணப்பிக்காதா என்ன?)
லஞ்சம், ஊழல்: இதையெல்லாம் யாராவது அடியோடு ஒழிப்பதாகச் சொன்னால், அதுவும் ஆட்சியை அமைத்த க்ஷணத்திலிருந்து அதனை வேரறுப்பதாகச் சொன்னால், ஒரு எழவும் புரியாத நாம், எந்த விஷயத்திற்கு எவ்வளவு நேரம் எடுக்கும் என்று புரியாத நாம், காதில் ஆளுயர மாலைகளைப் போட்டுக்கொண்டு புளகாங்கிதமடைவோம்.
வரலாறு: இது ஒரு பழமையான லெமூரியா வகையறா ஆறு, என்றுதான் நம்மில் பலருக்கு எண்ணம். கேட்டால் 1000000 வருடப் பழமையுள்ளது தமிழ்த் திராவிட நாகரீகம் என்போம். ஒன்றுக்குப் பின் பூஜ்யங்களாக இருந்தாலும் அவற்றுக்கு மதிப்பில்லை என்பது நமக்குத் தெரியாதா என்ன. ஹ…
ஆக, வரலாறு என்பது, நம்மைப் பொறுத்தவரை — குமரிக் கண்டம், குமரன் குன்றம், கபாடபுரம் கபோதிபுரம், கண்ணில்லாத கபோதி கடல் பட்டாங்கு, என்றெல்லாம் பேசி, தமிழ் நாகரீகமானது பல்லாயிரக்கணக்கான பழமையுடையது, ஆக ஆஃப்கனிஸ்தானில் தமிழ்ப் பெயர்கள் என்ற திடுக்கிடும் செய்திகளை பரப்ப வேண்டும் என்றெல்லாம் விரிவது தான். நமக்கு ஒன்றுக்கும் ரெண்டுக்கும் வித்தியாசம் தெரியாது. எது எந்த ஓட்டை வழியாக வரும் என்றும் தெரியாது. ஒன்றுமே தெரியாமல் ஒரு கவைக்குதவாத பழம்பெருமை பேசி அலைவதுதான் நம்மில் பெரும்பாலோருக்குச் சாஸ்வதம்.
“உலக நாகரிகங்களில் அனைத்துக்கும் முதன்மையானது, தொன்மையானது “தமிழர் நாகரிகம்”தான் என்பதனைச் சிந்துவெளியில் – மொகஞ்சோதாரோ – அரப்பா நாகரிகமாயிற்று” என்று அசைக்க முடியாத ஆதாரங்களுடன் ஆய்வு நூல் தந்தவர் ஈராசுப் பாதிரியார். “பழந்தமிழர் நாகரிகம்தான் திராவிட நாகரிகமாக உருவெடுத்து, சிந்துவெளி நாகரிகமாகப் பரந்து, பின்னர் அதன் தாக்கமும் பிரதிபலிப்பும்தான் மெசபடோமியாவின் சுமேரிய நாகரிகமாக, நைல் நதிக்கரையின் எகிப்திய நாகரிகமாக இடம்பெற்றது என விவரித்தார். திராவிட நாகரிகத்தின் வழியில்தான் கிரேக்க நாகரிகமும், உதுமானிய நாகரிகமும் பின்னர் ஐரோப்பிய நாகரிகமும் அமைந்தன எனக் கூறிய அப்பெருமகனார், அதன் காரணமாகவே தன்னைத் திராவிடன், ஸ்பெயின் நாட்டிலிருந்து வந்த ஒரு திராவிடன் (I am a Dravidian from Spain) என்று பெருமையுடன் கூறினார்.
உலகில் முதலில் தோன்றிய முதன் மொழியாகவும் திராவிட மொழிகளின் மூலமொழியாக இருந்து கன்னடமும், தெலுங்கும், மலையாளமும், துளுவும் கருக் கொள்ளக் காரணமான மொழியாக விளங்குவது தமிழ்மொழியே.”
— வை கோபால்சாமி :-( (வெல்க தமிழர் விடுதலை என ஜனவரி 14, 2014 அன்று வெளியிட்ட அறிக்கை)
நாமோ, நமக்கென்று ஒரு நெடிய செவ்வியல் வரலாறு இருக்கிறது என்று நம்பி, புளகாங்கிதம் அடைவதற்கு ஏங்குபவர்கள். ஆனால் எப்படித்தான் இதற்காக முனைந்து இதனை அறிந்த் கொள்வது, ஸ்தாபிப்பது? கடும் முயற்சி செய்யவேண்டுமே! அப்படியே செய்ய முடிந்தாலும்,அதுவும் வெகு நீண்டகாலம் எடுக்குமே!
இங்கேதான் வருகிறார்கள், பாதிரியார்கள். இந்தாடா பிட்ச்சிக்கோ என்று ஒரு கந்தறகோள திராவிட வரலாறை, வேண்டுமளவு மசாலா சேர்த்துச் சமைத்து, ஒரு நசுங்கிய அலுமினிய லோட்டாவில் தருகிறார்கள். நாமும் அதனை நக்கிக் குடித்துக் கொண்டே கைவல்ய நிலையை அடைவோம்.
அரைகுறை வெள்ளைக்காரப் பாதிரிமார்கள் இல்லையேல், அவர்களுடைய மண்வெட்டி ஆராய்ச்சி இல்லையேல், தமிழகம் இல்லை. நம் கந்தறகோள வரலாறு இல்லை. ஆரியம் இல்லை. திராவிடம் இல்லவேயில்லை. தமிழக அரசியல் எவ்வளவோ வித்தியாசமானதாக இருந்திருக்கும்.
ஆனால்… சும்மாவா சொன்னார் புதுமைப்பித்தன் – உலகின் முதல் குரங்கு, திராவிடக் குரங்கு என்று?
ஹ்ம்ம்… சரி, சரி. அப்படியே திராவிடக் குரங்குகளாக இருந்தாலும், நமக்கு, நம் வால் எவ்வளவு நீளம் என்று தெரியாது. அதனை எப்போது சுருட்டிக் கொள்ள வேண்டுமென்றும் தெரியாது.
-0-0-0-0-0-0-0-
உபசாளரம்: ஏதாவது கோட்பாட்டின் புரிதல், புத்தகம், இன்னபிற நீளம் அதிகமாக இருந்தால் அது ‘நம்மால் பொருட்படுத்தத் தக்கதல்ல’ எனும் அடிப்படையிலேயே அணுகப்படும்.
அப்படியும் கருத்துச் சொல்லவேண்டிய அபாயம் இருந்தால், அது வெகு நீளமாக இருக்கிறது, ஆசிரியர் வளவளாவென்று எழுதுகிறார், ஆகவே அது குப்பை என நாம் கருத்துரை வழங்குவோம்.
மேலும் நாம், இரண்டு வினாடிகளில் படிக்கமுடியாத எதுவும் படிக்கத் தகுந்ததே அல்ல எனவொரு இணையத் தந்திரோபாயம் வேறு வைத்திருக்கிறோம். வாழ்க நாம்.
முக்கியமான குறிப்பு: இந்தப் பதிவு மிக மிக நீளமாக, வளவளாவென்றெல்லாம் இல்லாமல் (!) இருப்பதற்கு முக்கிய காரணம்: அது அப்படியிருந்தால், இந்தப் பதிவு, உங்களால் பாதிதான் படிக்கப்படும்.
ஏனெனில், ( நீங்கள் பச்சைத் தமிழராக இருந்தால்) உங்களால் தான் நீளமானவற்றைப் படிக்கவே முடியாதே!
சுபம். வேறென்ன சொல்ல!
(அடுத்து) தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (18/n)
January 24, 2014 at 14:52
இந்தக் கட்டுரையை ஆதாரமாகக் கொண்டு நான் செய்த ஆராய்ச்சியின் முடிவு!
உலகின் முதல் எஸ்.எம்.எஸ்ஸைக் கண்டுபிடித்தவர் எங்கள் ஊர் எஸ். எம். மெஸ்ஸில் உண்டி உண்டு உயிர்வளர்த்த பச்சைத்தமிளரே.
ட்விட்டரைக் கண்டுபிடித்த அப்பாடக்கனாரும் தமிளரே. உலகின் முதல் துவிட்டர் கீரைத் துவட்டல் செய்வதில் தேர்ந்த மறட்டமிள்த்தாய்க்குப் பிறந்த செம்மொளித் துவிட்டரே. நினைக்குந்தோறும் நெஞ்சு பூரிக்குதடா தம்பி.
January 25, 2014 at 09:00
படித்துப் படித்து சிரித்து சிரித்து வயறு புண்ணாகிவிட்டது! ஆகா நீங்கள் மட்டும் பெங்களூரில் வசித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். தினமும் உங்களுடன் பேசினால் மன நலம் மிகும். முன்னர் என்னுடைய சக பணியாளர் பேராசிரியர் குல்கர்ணி என்று ஒருவர் இருந்தார் அவரோடு பேசிக்கொண்டு இருந்தால் இலவசமாக பல செய்திகள் தெரிந்து கொள்வதுடன் உள்ளமும் குதுகலம் அடையும். ஆனால் அவர் தற்போது டெல்லியில் இருக்கிறார். நிற்க.
திருக்குறள் விசயத்தில் நீங்கள் கூறுகிறபடிதான் நடக்கிறது. ஒரு சாரார் அது சனாதன தர்ம நூல் என்று கூற ஒரு சாரார் அது கருணாநிதியியம் என்று கூற நான் அதனை ஒரு ஆன்மிக உளவியல் ஆற்றுப்படுத்தும் நூல் என்று கூறி முட்டி மோதிக்கொண்டிருக்கிறேன். இதுவரை உருப்படியாக எதுவும் நிகழவில்லை.