லிராய் ஜோன்ஸ் = இமாமு அமிரி பராகா: சில குறிப்புகள்
January 22, 2014
லிராய் ஜோன்ஸ் (LeRoi Jones) என்னைப் பொறுத்தவரை ஒரு மிக நல்ல கவிஞரும், மிக மிக அழகான அழகியல் சார் இசை விமர்சரும். உலகத்துக்கு அமெரிக்கா கொடுத்த கொடைகளில் ஒருவர் அவர். ‘கறுப்பர் கலைகள்’ (Black(!) Arts(!!)) என்றழைக்கப்படும் 1960களில் இயங்கிய இயக்கத்தை ஆரம்பித்தவர்களில் முதன்மையானவர்.
எனக்கு இவருடைய எழுத்துகளின் அறிமுகம் கிடைத்தது, 1978 வாக்கில் என நினைவு – முதலில் படித்தது இவருடைய டட்ச்மேன் எனும், இன்னமும் என் நினைவில் இருக்கும், படு அற்புதமான, நெஞ்சைப் பிழியும் நாடகத்தை; ஆனால், இதன் நாடகமாக்கத்தைப் பார்க்க இன்றுவரை கொடுப்பினை இல்லை. இப்போது யோசித்துப் பார்த்தால், இந்த நாடகத்தின் தமிழாக்கத்தை, தமிழ்ப் பண்பாட்டுடன் பொருத்திப் பார்த்தலைச் செய்தால், லிராய் ஜோன்ஸ்-ன் அரசியல் நகர்வுகளை நோக்கினால் — நமக்கு தலித் இலக்கியம், தலித் கவிதை, தலித் அழகியல் என்றெல்லாம் தேவையற்றுப் பிரித்துப் பேசி, அயோக்கியத்தனமாக நாம் அனைவரும் உளறிக்கொட்டிக் கொண்டிருப்பது தெரியவந்து, நம் தற்காலத் தமிழ்ப் பண்பாட்டுஅரசியலை வெறுக்கவைக்கும்…
ஹ்ம்ம்… எது எப்படியோ, இப்படிப்பட்ட கல்யாணப்பங்களிப்புகளைக் கொடுத்த லிராய் ஜோன்ஸ், 9.1.2014 அன்று அல்லா திருவடியையோ, யாஹ்வேயின் பொற்பாதங்களையோ, கறுப்புக் கிருஷ்ண முத்துக்கருப்பனின் இதயத்தையோ அல்லது இவை எல்லாவற்றையுமோ அடைந்து, அல்லது இவை எதையுமே அடையாமல் ப்ர்ஹ்மத்தில் கலப்பதற்காகவோ – ஒரு வழியாகப் போய்ச் சேர்ந்தார்.
ஆனால், இன்றுதான் நான் இந்தச் செய்தியை அறிந்து கொண்டேன். ஹ்ம்ம், அதனால் என்ன, எப்படா எவன் எங்கே சாகிறான் என்று உடனே பந்திக்கு முந்திக்கொண்டு முட்டியடி எதிர்வினையாக இரங்கல் அல்லது ஏரல் எழுதும் தொழிலில் நான் இல்லை என்பது எனக்கு ஆசுவாசம் அளிக்கும் விஷயம்தான்…
மேலும், அந்த சுனாமி (2004?) வந்ததற்குப் பின், சாவகாசமாக, பல நாட்கள் பின்னரே அதனைப் பற்றிக் கேள்விப்பட்ட பிரகிருதி நான். ஆகவே, முதலுக்கே மோசமில்லை. :-)
-0-0-0-0-0-0-0-0-0-0-
லிராய் ஜோன்ஸ் அவர்களை நான் முதலில் அறிந்து கொண்டது, அவர் ஜேக் கெருவாக், அலன் கின்ஸ்பர்க் புத்தகங்களைப் பதிப்பித்த பதிப்பாளராக (அவரும் அவர் மனைவியும் ஆரம்பித்த டொடெம் ப்ரெஸ் மூலம் பல சுவாரசியமான, அக்கால பீட்னிக் புத்தகங்களைப் பதிப்பித்தார்கள்) மட்டுமே.
பின்னர் அவருடைய கவிதைகளைப் படித்து, அவரைப் பற்றியும் அவரை உருவாக்கிய சிந்தனை மரபுகளையும். க்ரியா ஊக்கிகளையும், கலாச்சாரக் காரணிகளையும் (ராபெர்ட் வில்லியம்ஸ், ஃபிடெல் கேஸ்ட்ரோ, பேட்ரிஸ் லுமும்பா, மால்கம் எக்ஸ் இன்னபிறர்) அறிந்து கொள்ள முயற்சி செய்தேன்.
பின்னர் கலாச்சார தேசியம் என்றால் என்ன, எப்படி இது ஒரு தேசத்துக்குள் தேசமாக வரையறைப் படுத்தப்படக் கூடும், இனம் என்பதை தற்காலங்களில் எப்படிப் புரிந்து கொள்வது பற்றி என்றெல்லாம் ஒர் சுற்று சுற்றினேன். இப்போது ஆரஅமர யோசித்தால், இந்த கறுப்பர் அரசியலில் இருந்து நம் இந்திய தலித்கள் என்ன கற்றுக்கொண்டு, தேசிய மைய நீரோட்டத்தில் கலக்கவேண்டும் என்று நிச்சயம் யோசிக்க வைத்திருக்கிறார், லிராய் ஜோன்ஸ்.
… ஆனால் ஒரு விஷயம் சொல்லவேண்டும்: ஒரளவுக்கு இவருடைய அரசியல்-சமூக-கலாச்சாரப் பின்புலங்களைப் புரிந்து கொண்டதாக நினைத்தாலும், லிராய் ஜோன்ஸ்-ன் – கோரமான யூத வெறுப்பை என்னால் இதுவரை புரிந்து கொள்ள முடியவில்லை.

தேசத்திற்குள் தேசம்: லிராய் ஜோன்ஸ்-ம், ‘கறுப்பினத்தின் சக்தி’ அரசியலும் / கொமொஸி வுடர்ட் // http://www.amazon.com/Nation-within-Komozi-Woodard/dp/0807847615
இது லிராய் ஜோன்ஸ்-ன் அரசியலை, கவிஞராக இருந்ததிலிருந்து அரசியலை நோக்கிய அவர் பயணத்தை, ஊக்க போனஸாக, கறுப்பரின் பிரச்சினைகளின் பல கலாச்சாரப் பரிமாணங்களை அறிந்து கொள்ள ஒரு முக்கியமான புத்தகம்; வடக்கு கரோலினா பல்கலைக்கழகப் பதிப்பகம் பதிப்பித்தது. (இந்தக் கட்டுரையில் – பின்னே வந்திருக்கும் கவிதையை நான் இந்தப் புத்தகத்திலிருந்து எடுத்திருக்கிறேன்)
-0-0-0-0-0-0-0-0-0-
லிராய் ஜோன்ஸ் அவர்களின் பல கவிதைகள் இணையத்தில் காணக் கிடைக்கின்றன.
ஆனால் இவர், மால்கம் எக்ஸ்-ன் மரணத்துக்குப் பின் எழுதிய கோபமும், தாபமும், குற்றவுணர்ச்சியும், ரௌத்திரமும் ஊடாடும் ‘கறுப்பு/கறுப்பர் இதயங்களுக்காக ஒரு கவிதை’ எனக்கு கூகுளான்டவரின் பாதம் பணிந்து தேடியும் கிடைக்கவில்லை. என்னைப் பொறுத்தவரை, இக்கவிதை, ஒஸ்ஸி டேவிஸ் இதே சமயம் பேசிய ‘நம்முடைய தகதகக்கும் கறுப்பு இளவரசன்’ எனும் பதைபதைக்க, வெட்கம் கொள்ளவைக்கும் பேச்சினை விஞ்சும் அளவுக்கு இருப்பது.
ஆக, இதனை உரிமம் கிரிமம் என்றெல்லாம் பார்க்காமல் கீழே கொடுக்கிறேன்: (மன்னிக்கவும்)
A poem for the black hearts (Amiri Baraka)
For Malcolm’s eyes, when they broke
the face of some dumb white man, For
Malcolm’s hands raised to bless us
all black and strong in his image
of ourselves, For Malcolm’s words
fire darts, the victor’s tireless
thrusts, words hung above the world
change as it may, he said it, and
for this he was killed, for saying
and feeling, and being/change, all
collected hot in his heart, For Malcolm’s
heart, raising us above our filthy cities,
for his stride, and his beat, and his address
to the grey monsters of the world, For Malcolm’s
pleas for your dignity, black men, for your life,
black man, for the filling of your minds
with righteousness, For all of him dead
and gone and vanished from us, and all of him which
clings to our speech black god of our time.
For all of him, and all of yourself, look up,
black man, quit stuttering and shuffling, look up,
black man, quit whining and stooping, for all of him,
For Great Malcolm a prince of the earth, let nothing in us rest
until we avenge ourselves for his death, stupid animals
that killed him, let us never breathe a pure breath if
we fail, and white men call us faggots till the end of
the earth.
-0-0-0-0-0-0-0-0-0-
இனி என் மனதை நோகடித்த ஆனாலும் நான் பெரிதும் விரும்பிய லிராய் ஜோன்ஸ் நாடகத்தைப் பற்றி.
எனக்குப் பொதுவாக, விக்கிபீடியா சுட்டிகளைக் கொடுப்பதில் ஒரு மகாமகோ தயக்கம்; ஏனெனில் அதன் நம்பகத் தன்மையானது, என் கருத்தில் மிகப் பரிதாபமான ஒன்று. இருந்தாலும், ஓன்றுக்கு இரண்டுமுறை சரிபார்த்து இந்த விக்கிபீடியாவின் டட்ச்மேன் பக்கத்தைப் பரிந்துரை செய்கிறேன். :-(
இந்த டட்ச்மேன், கறுப்பர்-வெள்ளையர் பிரிவினையைப் பற்றி, தொடர்புகளைப் பற்றி, ஊடாடும் நிற அரசியலைப் பற்றி, அதிகாரம் பற்றியெல்லாம் மிகக் கூர்மையாகப் பதிவு செய்வது. இதனை நான் முதலில் படித்தபோது, எனக்குச் சிறு வயது. கறுப்பனான க்லேயைத் தந்திரமாக, நக்கலாக – வெள்ளைக்காரியான லுலா தூண்டிவிட்டு, க்லேயை ஒரு பொம்மலாட்டக்கார பொம்மைபோல வதைப்பதைப் படித்து எனக்குக் கண்ணில் நீர் முட்டியிருக்கிறது. ஆனால் இப்போது யோசித்தால், சூத்ரதாரியான லுலா பேரிலும் பரிதாபம்தான்.
இந்த மனம் உடையவைக்கும் நாடகத்தின் சினிமாவாக்கமும், அந்தனி ஹார்வி அவர்களின் இயக்கத்தில் வெளிவந்தது: டட்ச்மேன் (1967)
யூட்யூப் தயவில் இது நமக்குக் காணக் கிடைக்கிறது – ஆறு பகுதிகளாக வெட்டப்பட்டு: இது முதல் பகுதி; வலதுபக்கச் சட்டகத்தில் அடுத்த ஐந்து பகுதிகளுக்கான சுட்டிகள் இருக்கின்றன.
என்னைப் பொறுத்தவரை, இந்த நாடகத்தை, மிக அழகாகவே திரைப்படமாக்கியிருக்கிறார்கள். முக்கிய நடிகர்களான ஷர்லி நைட், அல் ஃப்ரீமன் போன்றவர்களும் மிக நன்றாகவே நடித்திருக்கிறார்கள். ஆனால், சந்தோஷமாகப் பார்க்கவேண்டிய படமல்ல இது. யோசித்து, மனம் பதைத்துக் கொண்டு, நம்மைப் பல கேள்விகள் கேட்டுக்கொண்டே பார்க்கவேண்டியதுதான் இது.
லிராய் ஜோன்ஸ்-ன் இந்த நாடகம், அப்படியேவோ அல்லது தமிழ்ச் சூழலுக்கு மாற்றப் பட்டோ மொழிபெயர்க்கப்பட்டு பதிப்பிக்கப்பட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது…
இவருடைய இசை விமர்சனங்களைப் பற்றியும் எழுதவேண்டும். ஆனால்… ஆயாசமாக இருக்கிறது. எனக்கு இன்றிரவு ப்பிங்க் ஃப்லாய்ட் இசைக் குழுவின் ‘நிலவின் இருண்டபக்கம்’ கேட்கவேண்டும்போலத் தோன்றுகிறது. டட்ச்மேன் கனவில் வரப்போகிறான் – லுலா என்னைப் பார்த்துச் சிரிக்கப் போகிறாள் வேறு, சாகசக் காரி… :-(
All that is now
All that is gone
All that’s to come
And everything under the sun is in tune
But the sun is eclipsed by the moonEclipse / Dark Side of the Moon / Pink Floyd
January 23, 2014 at 09:03
>>>>>நமக்கு தலித் இலக்கியம், தலித் கவிதை, தலித் அழகியல் என்றெல்லாம் தேவையற்றுப் பிரித்துப் பேசி, அயோக்கியத்தனமாக நாம் அனைவரும் உளறிக்கொட்டிக் கொண்டிருப்பது தெரியவந்து, நம் தற்காலத் தமிழ்ப் பண்பாட்டுஅரசியலை வெறுக்கவைக்கும்…<<<<
தலித் இலக்கியம் இந்தியாவின் பல மொழிகளிலும் இருக்கிறதே? சொல்லப்போனால் தலித் என்ற வார்த்தையே மராத்தியில் தோன்றியது. பிறகு கன்னடம், அதன் பிறகு கொஞ்சம் லேட்டாகவே தமிழில் தலித் இலக்கியங்கள் ஏற்பட்டன. அப்படி இருக்கையில் தமிழ்ப் பண்பாட்டு அரசியலை வெறுக்க வைக்கும் என்று ஏன் சொல்கிறீர்கள் என்று புரியவில்லை.
January 23, 2014 at 15:35
அய்யா சரவணன், நீங்கள் சொல்வதை ஒப்புக் கொள்கிறேன். நான் சொல்லவந்தது என்னவென்றால்: நம் தமிழகப் பண்பாட்டு அரசியலில்தான் தேவைக்கதிகமாகப் பிரிவினைகளை உபயோகித்து, மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் அழகியல்களில் ஒரு வரிசைக்கிரமத்தை அமைத்து அல்லது எதிர்புதிர்களாக வகுத்தெடுத்து, ஒரு புதிய சமூகப்பகுப்பு அடுக்குமானத்தைக் கட்டமைக்கிறார்கள். இந்த விஷயத்தில் ‘தலித்,’ ‘அ-தலித்’ என இருசாராரும் ஒரேமாதிரிச் செயல்படுகிறார்கள் என்பது என் எண்ணம்.
பொதுவாக, மராத்தி இலக்கியத்தில் தான் அதிகமாக இந்த அழகியல் ‘வேறுபாடுகள்’ (எனது பார்வை சுமார் 5 வருடம் பழையது) சுட்டப் பட்டுக் கொண்டிருந்தன. நம் தமிழகத்தில் இப்போதும் இது அதிகமாகவே இருக்கிறது. ஏதாவது பிரித்துப் பிரித்துப் பகுத்துப் பார்த்து, ஒத்திசைவேயில்லாத சமூகத்தை உருவாக்க முனைவதில் நமக்கு நிகர் நாம்தான். (இதைப் பற்றி வெகு விவரமாக எழுதவேண்டும்; எப்போது?)