ஹோமர்: இலியட், ஆடிஸ்ஸி – சில குறிப்புகள்

October 12, 2013

இந்த வருடம் ஜூன் மாதம் 14ஆம் தேதி தொடங்கி செப்டெம்பர் 20 வரை, பெரும்பாலான தினங்களில் (=ஏறக்குறைய 55 நாட்கள்), காலை நேரக் கூட்டுப் பிரார்த்தனைக்குப் பின் 20-22 நிமிடங்கள் (மொத்தமாகச் சுமார் 1100 நிமிடங்கள் – குறைந்த பட்சம் 18 மணி நேரங்கள்) ஹோமர்-ன் இந்த இதிஹாசங்களை – Iliad + Odyssey – ஒரு கதை (பேருரையல்ல. மன்னிக்கவும்) போலச் சொல்லியிருக்கிறேன்.

என்னுடன் வேலை செய்யும் பாவப்பட்ட சகஆசிரியர்களும், பரிதாபத்துக்குரிய 7-10 வகுப்பு மாணவர்களும் தான் கேட்டுக் கொண்டிருந்தவர்கள். பாவம், அவர்கள் அபாக்கியவான்கள். பரலோக ராஜ்ஜியம்  நிச்சயம்  அவர்களுடையதில்லை.

… இலியட், ஆடிஸ்ஸியெல்லாம் சுமார் நாற்பது ஆண்டுகள் முன்பு படித்த காவியங்கள் தான். அவைகளைப் படித்த பிறகு, கடந்த பல வருடங்களில், இவற்றுடன் தொடர்புடைய பல கதைகளைப் படித்திருக்கிறேன். இருந்தாலும், நினைவுகள் கொஞ்சம் மங்கலாகவே இருந்தபடியால் – இந்தக் காலைப் பேச்சுகளுக்காக, வெறி பிடித்தவன் போல – ஆடிஸ்ஸி, இலியட் பற்றி, அவற்றைப் பலவிதமான பின்புலங்களில் அலசும் 14 புத்தகங்களை கடந்த ஐந்து மாதங்களில் படித்திருக்கிறேன். மேலதிகமாக என்னுடைய சில பழைய புத்தகங்களை, தூசிதட்டி மறுவாசிப்பு செய்திருக்கிறேன். ஒரு 192 பக்க நோட்டுப்புத்தகத்தில் நுணுக்கிநுணுக்கிக் குறிப்புகள் எடுத்திருக்கிறேன்.  (கற்றறிந்த அறிஞர்களுடன் உரையாடி இன்னமும் தெளிவு பெற, தற்போதைக்கு நானிருக்கும் பூகோளப் பகுதியில் வாய்ப்பில்லாத காரணத்தால், அதைச் செய்யவில்லை – செய்திருக்கவேண்டும்தான்)

சில சமயம், மாறுவேடமணிந்து வந்து முக்கிய நிகழ்ச்சிகளை நடித்துக் காட்டுவது போன்ற கோமாளித்தனங்கள், கிரேக்க மொழியில் தட்டுத் தடுமாறிப் பேச முயற்சித்துத் தடுக்கி விழுவது, பல மகாமகோ மொக்கைகள்,  முன்னிணைப்பு உபகதைகள், பின்னிணைப்புகள், நம்முடைய கர்ணபரம்பரைக் கதைகளுடன் ஒப்பிடல், நமது புறநானூற்றுப் பாடல்களில் பலவும், சில குறுந்தொகை வரிகளும் எப்படி அந்த காவியங்களுடன் பொருந்தி வருகின்றன, நமது இதிஹாசங்களும் இந்த இலியட்-ஆடிஸ்ஸிகளும் எங்கு குவிகின்றன எங்கு வேறுபடுகின்றன, இவற்றின் யாப்பிலக்கணம், எந்தப் பின்புலத்தில் இவற்றைப் புரிந்து கொள்வது, இப்புனைவுகள் எந்தத் த்வனியில் எப்படிச் சொல்லப் படுகின்றன, தற்காலத்தில் – ஒரு சிறுமி/சிறுவனாக இந்தக் காவியங்களை வாசித்தால் என்ன தெரிந்து/கற்றுக் கொள்ள முடியும், எந்த பாத்திரத்தின் குணசித்திரம் எப்படி, ஏன் – கதைகள், உபகதைகள் என இந்த உபந்யாசம் விரிந்தது. வசீகரம் மிக்க கதைகள் தாம் இவை.

… ஒரு வழியாக இந்த விவகாரம் முடிந்தபின், பொதுவாக புல்லரிப்புகள் பெறக் கொடுத்துவைக்காத எனக்கே மலைப்பாக இருந்தது. பிரசித்தி பெற்ற வேளுக்குடி கிருஷ்ணன் அவர்கள் (இவரை இரண்டுமாதங்களுக்கு முன்புதான் முதல் முறையாக, சுமார் ஒரு மணிநேரம் கேட்டேன் – இவருடைய சொற்பொழிவுகளை நிறைய கேட்கவேண்டும்போல இருந்தாலும், நேரமில்லை – தொலைக்காட்சியுமில்லை) அளவுக்கு இல்லாவிட்டாலும், என்னுடைய — குடிபோதைக்குப் புகழ்பெற்ற விழுப்புரம் மாவட்ட கள்ளுக்குடி  ராமசாமி அளவுக்கு இது அதிகம் தான். கேலிச்சித்திர மதன் அவர்கள் குறிப்பிடுவது போல – ஸாரி, இது கொஞ்சம் ஓவர்  தான்!

-0-0-0-0-0-0-

நான், நம்முடைய இதிஹாசங்களையும் ஓரளவு கற்றிருக்கிறேன் (இப்பவும் ஒரு ஆரம்பநிலை மாணவன் தான், அவ்வளவே), நம் தமிழ் எழுத்துப் பாரம்பரியத்தையும் ஓரளவு கொஞ்சமாக அறிவேன் என்கிற முறையில் (=பிரமையில்) பல விஷயங்களைப் பற்றி யோசித்தேன்.

.. ஹோமரின் காவியங்களுக்கும், நம் இதிஹாசங்களுக்கும் இடையே சில முக்கியமான வேறுபாடுகள் உள்ளன எனத்தான் தோன்றுகிறது. நம் கம்பராமாயணம், சிலப்பதிகாரம் போன்ற மகத்தான ஆக்கங்களுக்குக் கிட்டே கூட அவற்றால் வரமுடியாது என்றுதான் தோன்றுகிறது.

இலியட் ஆடிஸ்ஸி இரண்டையும் சேர்த்தாலும், நீளத்தைப் பொறுத்து அவை நம்முடைய மஹாபாரதத்தின் பத்தில் ஒரு பங்கு அளவுக்கு கிட்டவே கூட வரமுடியாது – என்கிற உண்மையைப் பற்றியே கூடச் சொல்லவில்லை. மஹாபாரதம் நம்மூர் பொக்கிஷங்களில் ஒன்று என்று கூட உரிமை கொண்டாடவில்லை – என்னைப் பொறுத்தவரை, எந்த ஊரில் என்ன உன்னதம் இருந்தாலும், அதுவும் நம் மானுடப் பாரம்பரியம் சார்ந்ததே, நாம் பெருமைப் படத் தக்கதே.

என்ன இருந்தாலும்…

நம் காப்பியங்களைப் போல இலியட்+ஆடிஸ்ஸி இன்னமும் ‘வாழும்’ காப்பியங்கள் அல்ல; ஏனெனில் – க்ரேக்க கலாச்சாரத்தில் – பல்வேறு ஆடிஸ்ஸிகளோ, இலியட்களோ இல்லை. பெரும்பாலும் ஒற்றைப் பிரதிகள் தான்.

christianizing-homer-coverscanஅதுவும் பெருங்கலாச்சார ஜோதியில் கலந்து, க்றிஸ்தவ மதம் ஸ்தாபனம் செய்யப் பட்டபின் – புல்டோஸர் ஒட்டி சமன் செய்யப்பட்டு – அவை, ‘அதிவீர சாகசக் கதைகளாக’ மட்டுமே பார்க்கப் பட்டிருக்கின்றன. அவற்றின் மெருகு கூட்டப் படவில்லை. ஆனால் அவற்றின் கதைசொல்லல்கள், கதை சொல்லும் பாணிகள் எடுக்கப் பட்டு அன்ட்ரூவின் (இவரும் ஒரு அப்போஸ்தலர்தான்) அற்புத லீலைகளாக மாற்றப்பட்டன; இது தொடர்பான புத்தகம் – சுமார் 1800 ஆண்டுகளுக்கு முன் புனையப் பட்டது போல் கதைகள், வாடிகனிலிருந்த போப்களால்  உருவாக்கப் பட்டன.  இவை அனைத்தும் மக்களின் தன்னிச்சையான விழைவுகளின் காரணமாக, மக்கள் திரள்கள் கோர்க்கப்பட்டு பண்பாட்டுக் கூறுகள் ஒருங்கிணைக்கப் படுவதற்காகவெல்லாம் செய்யப் பட்டதாகத் தெரியவில்லை; அப்படி இருந்திருந்தால், ஒரு வேளை நம் இந்திய இதிஹாசங்கள், காப்பியங்கள் இன்னமும் பலவடிவுகளில், தொன்மையான புனைவுகளில், நாட்டுப்புறக் கதைசொல்லல்களில், இன்னமும்  வாழ்ந்துகொண்டிருப்பது போல இந்த ஹோமரின் காப்பியங்களும் இருந்திருக்கலாமோ?

ஆக, ஹோமரின் காப்பியங்கள் – மேலெடுக்கப் பட்டு, வெட்டியும் ஒட்டியும் பலவிதமான பிரதிகள் உருவாவதற்கான சமூகச் சூழல், க்ரீஸிலோ அல்லது வேறெங்கோ சாத்தியமாக இருந்திருக்கவில்லை எனப் படுகிறது.

நம்மூரில் இருக்கும் நூற்றுக்கணக்கான காப்பியப் பிரதிகள், தெருக்கூத்து / நாடோடிப் பாடல்கள் / செவ்வியல் நாடகபாணிகள் உள்ளிட்ட பல அடுக்குகளைக் கொண்ட வாழும் தொன்மக் கட்டமைப்புகள் க்ரீஸில் இல்லை. பல நூற்றாண்டுகளாக, சமகாலக் கதைகளையும் தொன்மங்களையும் தொடர்ந்து  கோர்க்கும் மரபு இல்லை. விதம் விதமாகப் பார்க்கும், முன்னுக்குப் பின் முரணாகப் பார்க்கும் மரபுமில்லை; பண்பாட்டுத் தொடர்ச்சியுமில்லை.

narratological-comm-odyssey-coverscanபிற்காலத்திய, ஏன் அக்காலத்திய தத்துவத் தேடல்கள், விசாரங்கள் கூட அவற்றில் சேர்க்கப் படவில்லை. அவை – தொன்மக் கதைகள் பலவற்றிலிருந்து தொகுக்கப் பட்டு, புவியியல் சார்ந்த விவரங்கள் கோர்க்கப்பட்டு, நாட்டுப் புறப் பாட்டு வடிவத்தில் பாடப் பட்டு பின்னர் சுமார் 2700 ஆண்டுகளுக்கு முன் (செவிவழி) வரிவடிவம் கொடுக்கப் பட்டிருக்கின்றன; பின்னர் எழுதப் பட்டிருக்கின்றன.

கவனிக்கவும்: நான் க்ரேக்க மொழியில் இலியட் ஆடிஸ்ஸிகளைப் படிக்கவில்லை – அவற்றின் வரிக்கு வரி ஆங்கில மொழிபெயர்ப்புகளை மட்டும்தான் படித்திருக்கிறேன்; இருந்தாலும் நம் காவியங்களில், காப்பியங்களில் இருக்கும் நவரசங்களும், அற்புதமான சிலேடைகளும், தத்துவ விசாரங்களும், கலாச்சாரக் கூறுகளைப் பதித்தலும் அவற்றில் இல்லையெனத் தான் படுகிறது; என்னுடைய பார்வையில், மிக முக்கியமாக – இவற்றில் தர்ம மயக்கங்களே ஒரு துளிக் கூட இல்லை; ஏறத்தாழ முழுவதும் ‘பலவான், புத்திமான் வெல்வான்,’ ‘வெற்றி பெற்றவன் செய்வது சரி’ வகைக் கதையாடல்களே. இவற்றின்படி, போற்றப்பட்ட விழுமியங்கள் அனைத்தும் வெற்றிபெற்றவர்களால் மட்டுமே பெரும்பாலும் நிர்ணயிக்கப் பட்டவை.

… யுலிஸீஸ் தன் சாகசப் பயணங்களின் பகுதியாக – ஹேட்ஸ் சென்று (இதை ‘நரகம்’ எனச் சொல்லலாமா? அல்லது ‘கீழுலகம்’ எனலாமா??)   தன் இறந்து போன மூதாதையர்களையும் நண்பர்களையும் பார்க்கிறான். சில உரையாடல்களும் நடக்கின்றன. இந்தப் பகுதியில் வாழ்க்கை, ‘யாக்கை நிலையாமை’ போன்ற தத்துவங்கள் பற்றியெல்லாம், மஹாபாரத் யக்ஷப் ப்ரச்னம் போல அழகாக வரலாம், பிற்காலத்தில் கோர்க்கப் பட்டிருக்கலாம். ஆனால் இல்லை. ஆக – இவ்வுரையாடல்கள் வெறும் ‘குறி கேட்பது’ போலவே, ஏடிஎம் யந்திரத்தில் இருந்து பணம் எடுப்பது போல இருக்கின்றன.

ஏனெனில், இந்த இலியட்+ஆடிஸ்ஸி முதலில் கதைப் பாடல்களாக, (நம்முடைய பாணர்கள் போன்றவர்கள் பாடியிருப்பது போல) இருந்திருக்கின்றன. பல காரணங்களால் – கதைப் பாடல்களாகவே தொடர்ந்திருக்கின்றன.

எனக்கு இந்தப் புரிதல் (நான் தவறாகவே இருக்கலாம்) வருவதற்கு, எனக்குப் பல ஆண்டுகள் பிடித்தன. கொஞ்சம் திகைப்பாகவே இருந்தது – முதலில் எனக்கு இந்தக் கருத்து தோன்றியபோது.

ஆனால், இவ்வளவு ஆண்டுகளுக்குப் பின் திரும்பிப் படிக்கும்போதும் (அதுவும் தரவுகளுடன் படித்தனால்) எனக்கு அதே கருத்துதான்.

-0-0-0-0-0-0-0-

என்னுடைய சிடுக்கல் எண்ணங்கள் எப்படி இருந்தாலும், நாமெல்லாம் வாழ்வில் ஒரு முறையாவது படிக்க வேண்டிய புத்தகங்கள் தாம் – இலியட்+ஆடிஸ்ஸி; நிச்சயம் சுவாரஸ்யமானவைதான்.

அவற்றை, குறிப்புகளை எழுதிக் கொண்டு படித்தால் – தற்கால ஐரோப்பியம் – பண்பாடு – மனநிலை என்பவற்றைப் பற்றிய மேலதிகப் புரிதல்களும் ஏற்படலாம் என்றும் தோன்றுகிறது.  (எனக்கு அப்படித்தான்)

-0-0-0-0-0-0-

பின் குறிப்பு 1:என் குழந்தைகளில் பலருக்கு இந்த ஆடிஸ்ஸி பித்து பிடித்துவிட்டது. பள்ளி நூலகத்தில் இருந்த 11 விதம் விதமான இலியட்+ஆடிஸ்ஸி கதைப்புத்தகங்கள் போட்டி போட்டுக்கொண்டு படிக்கப் பட்டன – பட்டுக் கொண்டிருக்கின்றன. (தமிழில் ‘சோதி’  (இவர் ஒரு புதுச்சேரிக்காரர் என நினைக்கிறேன்) என்பவரின் குழந்தைகளுக்காக எழுதப்பட்ட ஆடிஸ்ஸி புத்தகங்கள், நல்ல முயற்சிதானென்றாலும் செல்லுபடியாகவில்லை – காரணம்: வடிவமைப்பும் உள்ளடக்கமும் பாவமாக இருக்கின்றன; இவற்றில் மேஜிக்  இல்லை.)

பின் குறிப்பு 2:  தாந்தெ அலீகியரி, ஜேம்ஸ் ஜாய்ஸ், எஸ்ரா பௌன்ட், யூரிப்பிடீஸ் போன்றவர்கள் ஆடிஸ்ஸி கதைகளைப் பலவிதமாகக் கையாண்டிருக்கிறார்கள் தான் – ஆனால் நான் இவர்களைப் பற்றிப் பேசவில்லை. (இக்கதைகள் – நிச்சயமாக, நம்முடைய ஸந்தேஷிவர லிங்கண்ணையா பைரப்பா அவர்களின் ‘பர்வா’ அளவுக்கு அற்புதமானவை தான்; ஒப்புக் கொள்கிறேன்)

பின்குறிப்பு 3: என்னுடைய மிகக்குறைவான இலியட்+ஆடிஸ்ஸி குறித்த அண்மைய வாசிப்புகளில் – ஆடிஸ்ஸி-யின் புத்துருவாக்கமான சாக்கரி மேஸன் அவர்களின் ‘ஆடிஸ்ஸியின் தொலைந்து போன புத்தகங்கள்’-ஐச் சொல்வேன். நல்ல, அற்புதமான நகைச்சுவை உணர்ச்சியுடனும் எழுதப் பட்டுள்ளது இது. (இம்மாதிரிப் புத்தகங்கள்  நம் தமிழில் வருமா?)
zachmason-book-cover

The Lost Books of Odyssey  / Zachary Mason / 2011 / — இந்தச் சுட்டியில் உள்ளது ரேன்டம்ஹௌஸ் பதிப்பித்திருக்கும் ஒரு மின்புத்தகம். ஆனால் என்னுடைய பிரதி ந்யூயார்க்கில் உள்ள, நான் மிகவும் மதிக்கும் ஃபர்ரார், ஸ்ட்ராஸ், கிரோ பதிப்பகத்தினரால் 2010ல் வெளியிடப் பட்டது. (காகிதப் புத்தகங்களைப் படிப்பதில் இருக்கும் சுகமே அலாதி தான்!)

இந்தப் புத்தகத்தை அவசியம் படிக்கவும். It is  a veritable delight!

தொடர்புள்ள பதிவு: ebrahim alkazi, studying mahabharatha – some notes 28/09/2013

6 Responses to “ஹோமர்: இலியட், ஆடிஸ்ஸி – சில குறிப்புகள்”

 1. jag673 Says:

  மிக நல்ல பதிவு. இத்துடன் நீங்கள் படித்த அந்த நூல்களின் பெயரயும் குடுத்தால் மிகவும் உபயோகமாக இருக்கும். நன்றி.

 2. bseshadri Says:

  நாங்கள் கிழக்கு பதிப்பகம் வாயிலாக இலியடை மொழிபெயர்த்து வெளியிட்டோம். நாகூர் ரூமியின் நல்ல மொழிபெயர்ப்புதான் அது. அதனைச் செய்வதற்கே அவருக்கு ஓராண்டுக்கும் மேலாக ஆகியது. ஒடிஸி மொழிபெயர்ப்பதற்கு அதைவிட அதிக நேரம் ஆகும் என்று சொல்லி, மாட்டேன் என்று சொல்லிவிட்டார். இதனைப் படிக்கும் யாராவது ஒடிஸியை மொழிபெயர்க்க விரும்பினால் என்னைத் தொடர்புகொள்ளுங்கள். (இலியட் சுமாராகத்தான் விற்கிறது; விலையும் அதிகம்.)


 3. சென்ற வருடம் logicomix (http://mysticmundane.blogspot.in/2012/10/logicomix-interesting-read.html) என்ற புத்தகம் படித்தேன். ஒரு கடினமான விஷயத்தை எளிதாகப் புரிந்துக்கொள்ள மற்றும் படிக்க உதவும் ஒரு புத்தகம். இம்மாதிரியான புத்தகங்கள் மற்றும் இந்த காமிக்ஸ் நடையுடன் புத்தகங்கள்தமிழில் இருந்தால் மிகவும் உபயோகமாக இருக்கும் என்று நினைக்கிறேன். such books can be bridge books that cover the gap for interested in exploring serious reading.

 4. ramasami Says:

  ஓ ரமணா! நீங்கள், எனக்குத் தெரிந்தவரை, இந்தப் புத்தகத்தைப் படித்துள்ள மூன்றாவது தமிழகத் தமிழர். :-)

  நீங்கள் சொல்வது, முடிந்தால் அமர்க்களமாக இருக்கும் தான் – ஆனால், அது அவ்வளவு எளிதல்ல என்று நினைக்கிறேன். இம்மாதிரி காமிக்ஸ் புத்தகம் எழுதுவதற்கு, சம்பந்தப்பட்ட துறையில் ஆழ்ந்த புலமை வேண்டும். ஆர்ட்வர்க் அபாரமாக இருக்கவேண்டும். புலமைக் காரனுக்கு எழுத்தும் நன்றாக அமைய வேண்டும். ஒரு நல்ல (துறை சார்ந்த) எடிட்டர் அமையவேண்டும். நல்ல புத்தக/பக்க டிஸைனர்/அமைப்பாளர் வேண்டும். அந்தப் புத்தகப் பதிப்பாளனுக்கு க்ராஃபிக் நாவல் மார்க்கெட்டிலும், பொது அறிவியல் மார்க்கெட்டிலும் உரிய இடம் இருக்கவேண்டும்.

  இவை இல்லையேல் புத்தகம் படுத்து விடும். இதனால்தான் இம்மாதிரி புத்தகங்கள் நிறைய (மேலை நாட்டிலும்) வரவில்லை.

  தமிழில் இம்மாதிரி வரவேண்டும் என்கிறீர்கள். இது மாபேராசை தவிர வேறென்ன? :-(

  ஆனாலும் நீங்கள் ஐகன் புக்ஸ் (இங்கிலாந்த்) புத்தகங்களைப் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். இவர்கள் 200 பக்க அளவில் விட்கென்ஷ்டெய்ன், ஜாய்ஸ், கான்ட் என பல தத்துவவாதிகளைப் பற்றியும் பொது அறிவியல் துறைகளிலும் க்ராஃபிக் புத்தகங்கள் போட்டிருக்கிறார்கள். முடிந்தால் பார்க்கவும்.

  நீங்கள் வேறு ஏதாவது இந்தக் கணிதமேதைகள் – அபோஸ்தலோஸ் டோஸ்டியாடிஸ், க்றிஸ்தோஸ் பபடிமீட்ரூ எழுதிய புத்தகங்களைப் படித்திருக்கிறீர்களா? இவர்கள் கணிதப் பெருந்தகைகள் பற்றி நாவல்களெல்லாம் எழுதியிருக்கிறார்கள்.


 5. My friend first raved about this book on phone, said ‘you will love it’. and loaned it to me . :-)

  I know it is very difficult to create such a book. but looking at the impact that book has had on me and my belief that #1 i learn(t) more about physics and maths from non text books ( thanks to some brilliant russian publications) and #2 Science is too important to be left to scientists :-) I want more such books. And i am greedy when it comes to books :D

  Regarding the rest, i haven’t read other books by Christos H. Papadimitriou or Apostolos Doxiadis, reason being that this was their only book i got to read.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s