ஸ்ரீலஸ்ரீ சொம்பேஸ்வரானந்த தம்பிரான் மஹாமஹோ பெரிய சந்நிதானேந்திர பூர்வாஸ்ரம மௌல்வி அப்துல் ஹமீதாச்சாரிய நேதி மனுஷ்யபுத்திர மஹராஜ் நாகநந்தியார்

October 7, 2013

முதலில், சில பத்திகள் – புத்தகச் சந்தை பற்றி… பின்னர் ‘கவிஞர்’ கதை.

இன்று பகல்நேரத்தில் எனக்குச் சுளையாக நான்கு மணி நேர அவகாசம் கிடைத்ததால், ஆங்க்லோ-ஃப்ரெஞ்ச் நெசவாலைத் திடலில் புதுச்சேரி அரசு நடத்திக் கொண்டிருக்கும்  புத்தகச் சந்தைக்குச் சென்றிருந்தேன்; சிறிய அளவில் சுமார் 80த்திச் சொச்சம் கடைகளே விரிக்கப் பட்டிருந்தாலும் – அதன் மேலாண்மை ஓரளவுக்கு நன்றாகவே இருந்தது. (வழக்கம்போல, குடி நீர், கழிப்பறை வசதிகளெல்லாம், சந்தைக்குச் செல்பவர்களையே விடுங்கள் – சந்தையில் பணிபுரிந்துகொண்டிருந்தவர்களுக்குக் கூட பரிதாபமான கட்டுமானங்கள் தான்; இதைத் திருத்த பலபத்தாண்டுகளாகும் எனத்தான் நினைக்கிறேன்.)

வாங்கும் புத்தகங்களுக்கு 25% கழிவு; நுகர்வோர் ரொக்க ரசீதுகள் அனைத்தும் புதுச்சேரி அரசின் கலை-பண்பாட்டுத்துறை கொடுத்திருக்கும் பில்-புத்தகங்களில் போடப்பட்டன. அரசு இந்தக் கழிவில் 15%த்தை கடைக் காரர்களுக்குத் திரும்பிக் கொடுத்துவிடுமாம். ஆக – புத்தகத்தை வாங்கிக் கொண்டு வெளியே வருவதற்குள் ஏகக் கெடுபிடி. வெளிவாசலில் – பில்களையும் புத்தகங்களையும் மாய்ந்து மாய்ந்து சரிபார்த்து ஒவ்வொன்றிலும் ‘15% DISCOUNT – NOT FOR RESALE’ என ரப்பர்ஸ்டாம்ப் அடித்துக் கொடுத்தார்கள். ஏனென்று கேட்டால் சில கடைக்காரர்கள் அரசு கொடுக்கும் தள்ளுபடியைக் கயமையாகக் ‘கறக்க’ மறுபடியும் மறுபடியும் புத்தகங்களையும், பில்களையும் மறு சுழற்சி செய்தவண்ணம் இருந்ததால் தான் என்றார்கள்.

என்னவாக இருந்தாலும் நாம் வாங்கும் புத்தகங்களிலெல்லாம் இப்படி அச்சடித்துக் கொடுத்தது ‘இந்த டம்ப்ளர் வசந்தாபவனிலிருந்து திருடியது’ என வசந்தாபவன் காரர்களே அவர்கள் டம்ப்ளர்களில் பொறித்துக் கொள்வது போல, கொஞ்சம் அசிங்கமாகவே இருந்தது, என்ன செய்ய…

இந்த system beatersகளால் குறுக்குவழியாளர்களால், மற்றவர்களுக்கு எவ்வளவு பிரச்சினைகள்… ஆனால், இந்தச் சந்தை மேலாண்மைக்காரர்களின் பிரச்சினைகளையும் புரிந்து கொள்ள முடிகிறது. மேலும், இந்தத் திருட்டுக் கணக்குப் பிரச்சினையை, வேறு ஏதாவது சுளுவான வழியில் சமாளிக்கும் முறையைச் செயல்படுத்த முடியுமா என்றும் எனக்குத் தெரியவில்லை… சுபம்.

-0-0-0-0-0-0-

சந்தைக்குள் நுழையும் முன்பு வண்டிகளை நிறுத்துமிடத்தில் – திடீரென்று வணக்கம் சார் என ஒரு அழகிய குரல்; திரும்பினால் சுமார் 20 வருடங்களுக்கு முன் பார்த்து, கொஞ்சம் பரிச்சயம் இருந்த, தமிழார்வல இளம் மாணவி (இப்போது நடுத்தர வயதினள்). எனக்கு அவள் பெயர் நினைவு வரவில்லை ஆனால் அவளுடைய அந்தச் சிரித்தவட்டமுகம் நினைவில் இருந்தது… மன்னிப்புக் கேட்டுக்கொண்டு அவள் பெயரைக் கேட்டு, எப்படிப்பெண்ணே என்னைக் கண்டுபிடித்தாய்? சார், ஒங்க ஹேர்ஸ்டைலும்(!), தோளைச் சுற்றிக் கதர்த்துண்டும் மாறவேயில்லையே என்றாள். என்ன உங்களுக்கு இப்போ கொஞ்சம் முடி நரைத்திருக்கிறது, அவ்ளோதான்! ஆனா சார் அதே வக்கிர மூஞ்சிதான். நீங்க மாறவேயில்ல சார்… கல கல கலவென்று சிரித்தாள்

சரி, எங்கே இருக்கிறாய்? வெளி நாட்டில் என்றாள். என்ன செய்கிறாய்? கணவன் ஒரு ஸ்ரீலங்கா தமிழன் + வேலையை விட்டுவிட்டு மேற்படிப்புப் படித்துக் கொண்டிருக்கிறான். நான் தனிப்பட்ட முறையில் ஐடி கன்ஸல்டிங் என்றாள். சந்தோஷம்மா. குழந்தைகள்? இரண்டு. விட்டுவிட்டு வந்துவிட்டேன். கணவன் தான் பார்த்துக் கொள்கிறான். அவன் உங்கள மாறி இல்ல சார். ரொம்ப நல்லஆள், அப்பாவி. காலேல டிஃபன் தயார் பண்ணிட்டுதான் என்னை எழுப்புவான் சார். பயந்த சுபாவம். தானுண்டு தன்வேலையுண்டுதான்… கல கல கல…

நீங்க என்ன பண்றீங்க?  எனக்கு என்னம்மா – வழக்கம்போல குண்டு சட்டியில கழுதை, அவ்ளோதான். சரி, எவ்வளவு நாள் பாண்டியில்? ஒருமாதம். ஹாய்யா இருக்கப்போறேன். உங்க வீட்டுக்கு என்னிக்குச் சாப்பிட வரலாம், சொல்லுங்க… நான் இப்பவே தயார். பொண்டாட்டியையாவது ஒழுங்கா வெச்சிக்கிட்டிருக்கிறீங்களா? கல கல கல…

நுழைவாயில் வழியாக சந்தைக்குள் நுழைந்தோம்.

வலது பக்கம் இரண்டாம் கடையைப் பார்த்தவுடன் அவள் முகம் கறுத்தது. அந்தக் கடை: ‘உயிர்மை’ :-(

-0-0-0-0-0-0-

உடனே திரும்பி வெளியே போகிறேன் என்றவளுடன் கொஞ்சம் பேசிக் கொண்டிருந்தேன். பாவம், அந்தப் பெண் அழுது விட்டது.

அந்தப் பெண்ணுக்கு ஏதோ, தான் எழுதிய சில தமிழ்ப் புத்தகங்களைப் பதிப்பிக்கவேண்டும் எனப் பித்து. அதுவும் சற்றுப் பிரபலமான பதிப்பகம் மூலமாக, என்றெல்லாம் ஆசை. பரவலாகப் பேசப்படவேண்டும் என ஆவல். பிரபலமாக ஆகவேண்டும் என தீராத ஆசை. பரிசுகள் வெல்லவேண்டும் எனத் துடிப்பு — இவையெல்லாம் இருந்திருக்கின்றன, சில வருடங்கள் முன்புவரை (யாருக்குத் தான் இவ்விதமாக ஆசைகளில்லை?)

நான் சுமார் 20 ஆண்டுகள் முன்பு படித்த அளவில், இவள் நன்றாகவே (குறைந்த பட்சம் எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் இப்போது எழுதும் அளவுக்காவது) எழுதக் கூடியவள். ஆனால் இவள் பெரிதாகப் பத்திரிகைகளில் எழுதிய மாதிரித் தெரியவில்லை. எங்கு எழுதியிருக்கிறாய் என்று கேட்டதற்கு இரண்டுமூன்று சிறு பத்திரிகைகள் பெயரைச் சொன்னாள் – நான் அவைகளைப் பற்றிக் கேள்விப்படவில்லை, மேலும் சிறு பத்திரிகைகளை பல வருடங்களாகப் படிப்பதில்லை என்று சொன்னேன்.

யாரோ சொன்னார்கள் என்று இந்தப் பதிப்பகத்தைத் தொடர்பு கொண்டு முன்பணம் என்றெல்லாம், கேட்ட அளவு கேள்வி கேட்காமல் கொடுத்து, ஒரு வருடத்துக்கு மேலாகியும் எந்த புத்தகமும் வராமல், பல சால்ஜாப்புகள் சொல்லப் பட்டு, வெறுத்துப் போய், பொது அறிமுகங்கள் மூலமாக மத்தியஸ்தத்துக்கு முயன்று, அரசியல் பின்புலமில்லாமையால்,  தோற்று, இன்னமும் வெறுத்து … கணவனுடன் இதனால் சண்டை, ஒரே சம்பளத்தில் குடும்பம் நடத்துவதில் உள்ள கஷ்டங்கள், அவனுடைய மேற்படிப்புக்காக ஆகும் செலவுகள், ஆனாலும் பணம் பெரிதில்லை, பணம் திரும்பிக் கொடுக்கமுடியலை – வியாபாரம் நசிவுன்னு சொன்னா புரிஞ்சிக்கப் போறோம்,  ஆனா நம்பிக்கைத் துரோகம் தான் வதைக்குது, அந்த ஆள் மூஞ்சீல முழிக்கவேபோறதில்லை, தமிழும் வேணாம் இலக்கியமும் வேணாம், பாழாப்போற தமிழ்ல எழுதி மூணு வருஷமாச்சு… … எனக் கதை விரிந்தது; நான் எதுவும் பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தேன். அவள் கண்களில் பொய் இல்லை.

திரும்பவும் உள்ளே சென்றோம். அவள் உயிர்மை ஸ்டால் பக்கமே திரும்பாமல் என்னுடன் மூக்கைச் சிந்தியபடி, கண்ணைத் துடைத்தபடி நடந்துவந்தாள். இரண்டு தப்படி வைத்ததிற்குப் பின் மறுபடியும் – நான் வெளியே உட்கார்ந்து கொள்கிறேன் என்று போய்விட்டாள். எனக்கு உயிர்மை ஸ்டாலில் சில புத்தகங்கள் வாங்கவேண்டிய திட்டம் இருந்தது; ஆனால், கொஞ்சம் யோசனைக்குப் பிறகு வாங்கவில்லை. இனிமேல் இப்பதிப்பகத்துப் புத்தகங்களை வாங்கவே மாட்டேன். (ஏனெனில், இந்தப் பெண்ணைச் சந்தேகிக்க எனக்கு எந்த ஒரு முகாந்திரமும் இல்லை)

பிறகு, நான் கிழக்கு + மணிவாசகர் + வஉசி நூலகம் + NCBH எனச் சீக்கிரமாக சில புத்தகங்களை வாங்கிக் கொண்டேன். புறப்பட்டோம். மஹாத்மா காந்தி சாலை காப்பிக் கடை ஒன்றில் ‘நரசுஸ்’ காப்பி சாப்பிட்டுவிட்டு, ’ஜம்பு புக் ஹவுஸ்’ என்கிற பழைய புத்தகக் கடைக்கு அவளைக் கூட்டிச் சென்றேன். கொஞ்சம் புத்தகங்கள் வாங்கிக் கொண்டாள்; ஒரு வழியாகச் சமன நிலைக்கு வந்தாள், பாவம். கொஞ்ச நேர மௌனத்துக்குப் பின் – சரி, மின்னஞ்சல் மூலமாகத் தொடர்பில் இருக்கலாம் என்று பிரிந்தோம். கல கல கல… :-(

-0-0-0-0-0-0-

ஒரு பைத்தியக்காரத்தனமான மன அமைப்பு, ஒரு பைத்தியக்காரத் தனமான சட்ட அமைப்பு, ஒரு பைத்தியக்காரத்தனமான அரசாங்க அமைப்பு, ஒரு பைத்தியக்காரத்தனமான பண்பாட்டு அமைப்பு, ஒரு பைத்தியக்காரத்தனமான அரசியல் அமைப்பு, ஒரு பைத்தியக்காரத் தனமான நீதி அமைப்பு, ஒரு பைத்தியக் காரத்தனமான ஊடகச் சூழல். வெறும் பைத்தியக்காரத்தனம் மட்டுமல்ல, இதற்குள் இரட்டைவேடமும் குற்ற மனப்பான்மையும் வலிமையற்றவர்களை வலிமையானவர்கள் வேட்டையாடும் முழு சுதந்திரமும் பரிபூரணமாக நிறைந்திருக்கிறது.

என்னதான் நடந்து கொண்டிருக்கிறது இங்கே / மனுஷ்யபுத்திரன் / உயிர்மை / செப்டெம்பர் 2013 /

அடடா, அடடா!! அறத் தீ என்னை சுட்டுப் பொசுக்குகிறதே! நேர்மைப் பிழம்பு என் கண்களைக் கூச வைக்கிறதே! ஐயகோ!

ஹ்ம்ம்… என்னுடைய பார்வையில் இந்த “ஒரு பைத்தியக் காரத்தனமான ஊடகச் சூழல்” என்பதை மட்டும் கொஞ்சம் மாற்றி “ஒரு அயோக்கியத்தனமான ஊடகச் சூழல்” என்றாக்கி, மறுபடியும் இந்த ‘என்னதான் நடந்து கொண்டிருக்கிறது இங்கே’ கட்டுரையையும், இந்த ஊடக உயிர்மையையும் மறுபடியும் படித்தால் உய்வதற்கு முடியலாமோ?

போராளியாக இருந்தால், நிச்சயமாகக் கண்ணாடிவீடுகளிலிருந்து கொண்டு கல்லெறியலாம் தான். கண்ணாடி உடைந்தால், எதிராளிகள் சதியென்றும் பேசலாம்தான். யாராவது வேலையற்ற தெருவோர ராமசாமிகள் ஏதாவது ஏடாகூடமாகக் கேட்டால் – எல்லாம், ‘சவுக்கு’ தளத்தில் சமீபத்தில் வெளிவந்துள்ள கட்டுரைகளின்படி, சொம்படிச் சித்தருக்கே வெளிச்சம் என்றும் சொல்லலாம் தான். (’சவுக்கு’ கட்டுரைகள்: 1)  ஒரு கவிஞர் சித்தரான கதை. 2)  சொம்பாலானது… )

… அல்லது கொஞ்சம் ஆரியப் படுத்தி, ஆதீனப் படுத்தி, மடப் படுத்தி, உர்துப்படுத்தி, ஜைன தீக்ஷை கொடுத்து ஸ்ரீலஸ்ரீ சொம்பேஸ்வரானந்த தம்பிரான் மஹாமஹோ பெரிய சந்நிதானேந்திர பூர்வாஸ்ரம மௌல்வி அப்துல் ஹமீதாச்சாரிய நேதி மனுஷ்யபுத்திர மஹராஜ் நாகநந்தியார் அவர்களுக்கே வெளிச்சம் எனவும் சொல்லலாமோ?

சரி, இந்த ‘சவுக்கு’ பதிவுகளின் சாராம்சம் அல்லது மனுஷ்யபுத்திரன் அவர்களின் மீதான குற்றச்சாட்டுகள் பக்கம் வரலாம்; இவைகளைப் பொதுவாக ஐந்து வகையாகப் பிரிக்கிறேன்:

#1. பூர்வாசிரமம், அவர் பிறந்து வளர்ந்த முறை, தன்னை வளர்த்திக் கொண்ட முறை பற்றியவை. (இவற்றுடன் எனக்கு பிணக்கு இல்லை; ஆனால், நம்முடைய செல்ல அறிவுஜீவிகளைப் பற்றிச் சிறிது அறிந்துள்ள எனக்கு, இது புதிதாகப் படவில்லை)

#2. மனுஷ்யபுத்திரன் அவர்களுடைய அரசியல் – தொழில்முறை முழுநேர உதிரி அரசியல்வாதிகளுடன் வர்த்தகங்களில், சுயலாபத்திற்காக அல்லாடுவது; பஜனை மடம் நடத்துவது (இதைப் பற்றி, எனக்கு நேரடியாக ஒரு செய்தியும் தெரியாது; ஆனால் இவருடைய சில பேச்சுக்களை கேட்டிருக்கிறேன்; அவ்வளவுதான். பஜனை மடம் நடத்த ஒரு இலக்கியப் பிலுக்கல்வாதிக்கு இல்லாத உரிமையா?)

#3. புத்தகப் பதிப்பு, வர்த்தகம் சார்ந்த கந்தறகோளங்கள், பிறழ்வுகள் (இவை பற்றி அரசல்புரசலாக (=வதந்திகள்) சில விஷயங்களைக் கேள்விப் பட்டிருந்தேன்; ஆனால் இவற்றில் நிச்சயம் உண்மை இருக்கக் கூடும் என்று இன்றுதான் படுகிறது – ஏனெனில் இன்று எனக்குத் தெரியவந்த விஷயம் மஹா கேவலமானது)

#4. கட்டற்ற/முறையற்ற பாலியலுறவு தொடர்பான செய்திகள் (எனக்கு இவற்றைப் பற்றி ஒன்றும் பெரிதாகச் சொல்லமுடியாது; உண்மையாக நடந்திருக்குமா என்பது தெரியாது. ஆனால், என் கொள்கை – ஒருவருக்கொருவர் ஒப்புமை இருந்தால், வயதிருந்தால், வலுக்கட்டாயப் படுத்துவதில்லாமலிருந்தால், பிறருக்கு, அவர்கள் குடும்பங்களுக்குத் தெரியாமலிருக்காமல் / துரோகம் செய்யாமல், நேர்மையாக இருக்கக் கூடும் என்றால் யாருக்கும் ஒரு பிரச்சினையும் இல்லை)

சரி, மேற்கண்ட நான்கு குற்றச்சாட்டுகளையாவது என்னால் பொறுத்துக் கொள்ள முடியும், இதென்ன பெரிய விஷயம், பல பதிப்பகங்களில், சில மனிதர்களின் வாழ்வில் நடப்பதுதானே என்று இடங்கையால் புறந்தள்ளிவிட முடியும்.

ஆனால், ஆனால் – இந்த ஐந்தாவது  குற்றச்சாட்டு இருக்கிறதே — ஒரு முகாந்திரமும் இல்லாமல், ஒரு ருசுவோ தடயமோ இல்லாமல்,  நேர்மையோ நாணயமோ இல்லாமல், மகாமகோ அபாண்டமாக  ‘சவுக்கு’ வீசியிருக்கும், மறுபடியும் மறுபடியும்  விட்டெறிந்திருக்கும் ஒரு அசிங்கமான குற்றச்சாட்டு என்னவென்றால்:

#5. இவர் ஒரு கவிஞர்!

அய்யய்யோ! OhMyGod!! இந்த அநியாயத்தைக் கேட்பாரில்லையா! என்ன படுமோசமான ஈவிரக்கமற்ற  குற்றச்சாட்டு இது!! ‘சவுக்கு’வே,  இந்த மனிதர் ஒரு  கவிதையாவது எழுதியிருக்கிறார் என்பதை உங்களால் இடஞ்சுட்டிப் பொருள் விளக்க முடியுமா? ‘சவுக்கு’ அவர்களே!  உங்களுக்கு, உங்கள் குற்றச் சாட்டை, தரவுகளின் அடிப்படையில் நிரூபணம் செய்ய வக்கிருக்கிறதா??

‘சவுக்கு’ – உங்களை நான் அடிமனதாழத்திலிருந்து வெறுக்கிறேன்… இதெல்லாம் என்ன ஒரு பிழைப்பு. கோபம் கோபமாக வருகிறது!

-0-0-0-0-0-0-

எது எப்படியோ…

ஓரளவு திடமான இதயம்படைத்த எனக்கு இன்னமும் சரியாகப் புரிந்து கொள்ள முடியாத விஷயம் – இந்த நடிப்புச் சுதேசிகளின், அறிவுஜீவிகளின் (=அறிவுஜீவிகளாகத் தாங்கள் கருதப்படவேண்டும் என நினைப்பவர்களின்), படிப்பாளிகளின் (=படிப்பாளிகளாகத் தாங்கள் கருதப்படவேண்டும் என நினைப்பவர்களின்) அடிப்படைக் கயமையும், நம் சமூகத்திற்கு, தேவைமெனக்கெட்டு அவர்கள் செய்யும் துரோகமும் தான்.

அதேசமயம், நான் அவர்கள் மினுக்கிக் கொண்டு, பிலுக்கிக் கொண்டு, சமூக முன்னேற்றக் கூடாரங்களில், பண்பாட்டுப் பந்தல்களில் நடைபழகுதலைத் தவறு என்று சொல்லவில்லை – ஏனெனில் இவைகள், இவைகள் மட்டுமே தான் அவர்களின் அதிகபட்ச சமூகப் பங்களிப்பு என்பதை நான் மிகச் சரியாகவே புரிந்து கொண்டிருக்கிறேன். இப்படியாவது இவர்களைப் ‘பணி’ புரிய அனுமதிக்காவிட்டால், இவர்கள் நாட்டையே நாற  அடித்து விடுவார்கள் என்பதனையும் அனுபவபூர்வமாக அறிந்து கொண்டிருக்கிறேன்.

-0-0-0-0-0-0-0-

இருந்தாலும் ஸ்ரீமான் மனுஷ்யபுத்திரன் அவர்களே பகர்வது போல, நம் தமிழுலக அறிவார்ந்த சூழலில், தளங்களில் —

இரட்டைவேடமும் குற்ற மனப்பான்மையும் [=criminal mentality– Ed]வலிமையற்றவர்களை வலிமையானவர்கள் வேட்டையாடும் முழு சுதந்திரமும் பரிபூரணமாக நிறைந்திருக்கிறது

… என்பது விசனத்துக்குரியதுதான்.

தொடர்புள்ள பதிவுகள்:

8 Responses to “ஸ்ரீலஸ்ரீ சொம்பேஸ்வரானந்த தம்பிரான் மஹாமஹோ பெரிய சந்நிதானேந்திர பூர்வாஸ்ரம மௌல்வி அப்துல் ஹமீதாச்சாரிய நேதி மனுஷ்யபுத்திர மஹராஜ் நாகநந்தியார்”

 1. Prabhu Says:

  My friends and I have started calling you bracket ramasamy, due to the number of additional comments you write inside the brackets. In fact my business mails have started carrying too many comments in the brackets apart from the main content.(I know this is not an apt comment for this article; pardon me)

 2. ramasami Says:

  ஆ… ‘ப்ரபு’ அவர்களே, இந்த அடைப்புக் குறிகள் சாதாரணமான அடைப்புகள் அல்ல; இவை நம் நல்(null அல்ல)லுலகத்தின் லம்ப்டா நுண்கணிதக் கடவுள் (Lambda Calculus) பெற்றெடுத்த அற்புதக் கணினிப் புனிதமொழியாம் லிஸ்ப்-லிருந்து (Lisp) கடன் வாங்கப் பட்டவை. :-)

  இதோ – பிடித்துக் கொள்ளுங்கள் – என்னுடைய அடைப்புக் குறிப் பூச்செண்டை. :-)

  ((((((((((()))))))))))

  ps: Please do not bracket me into ‘some this’ or ‘some other that.’ I am unbracketable. ;-) okay?

 3. பொன்.முத்துக்குமார். Says:

  கசப்புணர்வும் கரிப்புணர்வும்தான் ஏற்படுகிறது.

  “என்மீது சொல்லப்பட்ட ஒரு கதையையேனும் ஆதாரத்துடன் நிரூபித்தால் நான் என் செயல்பாடுகள் அனைத்திலிருந்தும் வெளியேறிவிடுகிறேன். நிரூபிக்கத் தவறினால் இந்த வெறி நாய்களும் அவற்றோடு சேர்ந்து குறைக்கும் சொறி நாய்களும் முச்சந்தியில் தூக்கில் தொங்க தயாரா?”

  இப்படி கவிஞர் சவால் விட்டிருப்பதாக ஒருவர் அதே சவுக்கு கட்டுரையில் பின்னூட்டம் இட்டிருக்கிறார். இப்படி ஒரு மொழியை ம.பு கையாள்வார் என்பது திடுக்கிடச்செயகிறது. (அவரது கவிதைகளையும் கட்டுரைகளையும் சொற்பமான அளவில் படித்ததை வைத்து முடிவு செய்ய இயலாது எனினும்)

  உங்களுக்கு பரிச்சயமான பெண் எழுத்தாளரை சந்தேகிக்க முகாந்திரமில்லை என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. மேற்படி கட்டுரையிலேயே நளாயினி என்பவர் இட்ட பின்னூட்டத்தில் “ஒரு முறை மனுஸ்ய புத்திரனின் முகநாலிலும் புத்தக பணமேசடிபற்றி யாரோ பேசி எழுதியபோது நான் எனக்கு நடந்ததை எழுதியிருந்தேன் . அவர் உடனடியாக என்னை தனது முகநூல் நட்பிலிருந்து நீக்கியதோடு அவருடைய முகநூலை நான் பாக்காத படிக்கும் செய்துவிட்டார்.” என்று எழுதப்பட்டிருப்பது அதிர்ச்சியை தருகிறது.

  தனது தரப்பை கவிஞர் எங்கேனும் பொதுவெளியில் சொல்லி இருக்கிறாரா ?

  • ramasami Says:

   பொன். முத்துக்குமார் அவர்களே,

   எனக்கு ‘மனுஷ்யபுத்திரன்’ அப்படி எழுதினாரா என்று தெரியாது. அப்படியே எழுதியிருந்தாலும் நான், சொறிநாய் அல்லது வெறிநாய் – இன்னும் குறிப்பாக, ஒரு சொறிபிடித்த வெறிநாயாகவே கூட இருக்கலாமோ? :-)

   ஏனென்றால், அடிப்படையில் வதந்திகளையும் ஹேஷ்யங்களையும் பரப்ப விரும்பாதவனாக நான் இருந்தாலும், நான் இந்தப் பெண்ணின் பெயரையோ, முகவரியையோ வெளியிடுவதாக இல்லை – நிரூபிக்க விருப்பமும் இல்லை; காரணம், எனக்கு இம்மாதிரிப் போராளிகளின்மேல் தீவிரமான அவநம்பிக்கை; முன்னெங்கோ எழுதியது போல, இவர்கள் GRoIP (அதாவது Gangrape over IP) செய்யக் கூடியவர்கள்தான்; நேரடியாக இருந்தால் – இன்னமும் மோசமாகவும் செயல்படக் கூடியவர்கள் – போன்ற என் கருத்துகளால்.

   ’நளாயினி’ விஷயம்: இவர் மனுஷ்யபுத்திரன் பற்றி மோசமாக எழுதியபின்னும், இவரை தன்னுடைய பின்னோடிகளில் ஒருவராக மனுஷ்யபுத்திரன் வைத்திருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியென்றும் தெரியவில்லை. (முகநூல் நட்பு என்கிற பதம் முகநூல் பரிச்சயம் என்று இருக்கவேண்டுமோ?)

   எனக்கு உங்கள் மேலேயே கோபம்கோபமாக வருகிறது. நீங்கள் எப்படி மனுஷ்யபுத்திரன் அவர்களை, கவிஞர் என்று அழைக்கலாம்? ;-)

   ‘கவிஞர்’ என்று எழுதியிருக்கலாமே! தெரிந்தவராயிற்றே என்று உங்களை மன்னிக்கிறேன். :-))

 4. சான்றோன் Says:

  ”சொம்படி சித்தர் ” என்று நாட்டோரால் அன்போடு [?] அழைக்கப்படும் இந்த அறிவுக்கொழுந்துக்கு சரியான பதிலடியை பாஜகவைச்சேர்ந்த திருமதி . வானதி சீனிவாசன் அவர்கள் புதிய [தறு] தலைமுறை பேட்டியில் கொடுத்தார்……

  நரேந்திர மோதி அவர்களைப்பற்றி காழ்ப்போடும் , வெறுப்போடும் மனம் போன போக்கில் உளறிக்கொண்டே இருந்தார்….பொறுத்துப்பொறுத்த திருமதி.வானதி சீனிவாசன் , இந்த ஆளையெல்லாம் ஏங்க பேட்டிக்கு கூப்பிடறீங்க….. நீங்க கேட்ட கேள்விக்கும் , இந்த ஆள் உளறுவதற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா? என்று கேட்டுவிட்டார்…..சொம்பு மட்டுமல்ல….. ஜென்ராம் கூட ஆடிப்போனார்….. அதன்பிறகு சொம்பு வாலை சுருட்டிக்கொண்டார்…..


 5. இந்தாளு குற்றச்சாட்டை நிரூபிச்சா தூக்கிலே தொங்குறேன்னு சொல்றது தானே நியாயம். இவரு மட்டும் விட்டுட்டு போயிடுவாராம்.. இல்லைன்னா சொன்னவன் தூக்கிலே தொங்கணுமாம். என்னாங்கடா நியாயம் இது?


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s