உணவை வீணடிப்பது பற்றிய சிந்தனைகள்… (நான்கு நிகழ்வுகளினூடே)
October 3, 2013
பல மாதங்களுக்கு முன்னால், குவிந்திருந்த பல வேலைகள் காரணமாக, சென்னையில் இரண்டு நாள் ‘சூறாவளிச் சுற்றுப் பயணம்’ செய்தேன் – அதன் மேம்பாலங்களும், ஒரு வழிச் சாலைகளும், புதிய மகாமகோகடைகளும், அலை மோதிக் கொண்டிருந்த மக்களும், ஹாரன்களும், சாலை நெரிசல்களும், புகையும், ப்ளாஸ்டிக் குப்பைமேடுகளும், அதிகப்பளீர் விளக்குகளும், சதாசர்வ காலமும் செல்போனில் கையை ஆட்டி ஆட்டிப் பேசிக் கொண்டிருக்கும் மக்களும் – எனக்குப் பல இடங்களில் எங்கிருக்கிறேன் என்ன செய்கிறேன் என்பதெல்லாம்கூட ஒன்றுமே புரியவில்லை!
இந்த நகரத்தில் தானா நான் பலபத்தாண்டுகள் குட்டையில் ஊறிய மட்டையாகக் குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டிக்கொண்டிருந்திருக்கிறேன்? பதினேழாண்டுகளில் இவ்வளவு மாற்றங்களா?
… ஒரு வழியாக வேலைகள் முடிந்ததும், ‘புதிய’ நண்பர் ஒருவரைப் பார்ப்பதற்கு பனகல் பார்க் அருகில் சென்றேன். ஒன்றும் புரியவில்லை! அங்கு ஒரு மேம்பாலம் வேறு – குழம்பிப்போய் இரண்டு சுற்றுச் சுற்றினேன். ஆரெம்கேவி என்ற ஒரு பளபளப்பு ஜவுளிக்கடை முன்னால் ஐந்து நிமிடத்தில் இரண்டாம் முறை என்னைப் பார்த்த ஒரு பூக்காரம்மா கன்ஃபூஸ் ஆய்டுச்சுங்களா என்றார். ஆமாம்மா வய்சாட்ச்சில்ல என்றேன்.
நண்பர், ’துளிர்’ அறிவியல் இதழின் 25 ஆண்டு நிறைவுக் கூட்டம் முடிந்து எனக்காகக் காத்துக்காத்து, பாவம், தொடர்ந்து எங்கிருக்கிறேன் என்று கேட்டுக்கேட்டு, எனக்கு வழி சொல்லிச் சொல்லி அலுத்துப் போயிருப்பார், (பொதுவாக நான் நேரம்தவறாமையை வெறிபோல கடைபிடிப்பவன் – ஆனால் அன்று நான் மிகக் கேவலமாகத் தோற்றேன், வெட்கக்கேடு)
இவர் பதிப்பகத் துறையில் (துறையிலும்?) இருக்கும் ஒரு முனைப்பு மிக்க சிந்திக்கும் இளைஞர் – பத்ரி சேஷாத்ரி – முன்னமே மின்னஞ்சல் அறிமுகம் இருந்தாலும், முதன்முறையாக அன்றுதான் நேரில் சந்தித்தோம் – மிக சுவாரசியமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது இவருடன் பேசிக் கொண்டிருந்தது. சில பொதுவான பின்புலங்கள், ஆவல்கள் இருந்தது மேலதிக சுவாரசியம். படிப்புடன், சுயசிந்தனையும் தன்னூக்கமும், நமது தேசத்தின் மீது கரிசனமும் – ஊக்க போனஸாக மிகமிக முக்கியமாக நகைச்சுவையுணர்வும் மிக்கவர்கள், இன்னாட்களில் காணக்கிடைக்க மிகவும் அரிது எனத்தான் தோன்றுகிறது –
ஆக, (அவருக்கு) மூச்சுமுட்டப் பேசினோம். ஒரே கல்லூரியில் ஐந்தாறாண்டுகள் வித்தியாசத்தில் படித்திருக்கிறோம்; ஆக, அதன் கதைகள் வேறு – அவர், மேற்கொண்டு மேற்கத்தி மேற்படிப்பு எல்லாம் படித்திருக்கிறார் என நினைக்கிறேன்; நான் ப்ரம்மச்சாரிப் 8-) பட்டத்துடன் முறைவழிக் கல்வியை நிறுத்திவிட்டேன். மேலே படித்தால் திருமணம் செய்து கொள்ள முடியாதல்லவா?
-0-0-0-0-0-0-0-
… இப்படியாகத்தானே நாங்கள் அருகில் இருந்த முருகன் இட்லி கடைக்குள் (என நினைக்கிறேன்) சென்றோம். இட்லியும் காப்பியும் முடிந்து கொண்டிருந்தன, என்னவோ பேச்சுக்கள் – அனேகமாக எங்கள் முந்தைய அவதாரங்கள் பற்றி, சரியாக நினைவில்லை – ஆனால், என் நினைவில் இருப்பதெல்லாம் என் கவனம் சிதறி, சற்றுத் தள்ளியிருந்த மேஜையில் பேசிச் சிரித்துக் கொண்டிருந்த ஒரு இளைஞர் குழாம் பக்கம் சென்றதுதான்,
பொதுவாக எனக்கு, என்னை நானே கூறுபோட்டுக்கொண்டு யோசிப்பதையடுத்து – நம் இளைஞர்களைக் கூர்ந்து கவனிப்பது என்பது இயல்பான ஒன்று – இது, கடந்த பலப்பல வருடங்களாக இவர்களுடனும், குழந்தைகளுடனும் பணிபுரிய எனக்குக் கிடைத்த வாய்ப்புக்களினால் இருக்கலாம். எந்தச் சூழ்நிலைகளில் இவர்கள், எப்படிச் செயல்படுகிறார்கள், அவர்களுடைய பின்புலக் கருத்தாக்கங்கள் என்னவாக இருக்கக் கூடும், பொதுவாக இவ்விளைஞர்களின் ‘zeitgeist’ ( ~~ சமகால உலகப் பார்வை?) என்னவாக இருக்கலாம் – போன்ற பல விஷயங்களால் / எண்ணப்போக்குகளால், அலைக்கழிக்கப் பட்டுக் கொண்டு இருப்பேன்.
அன்றும் அப்படித்தான்.
-0-0-0-0-0-0-0-
… அவர்கள், தங்களில் ஒருவரை – சாப்பிடு, இன்னும் சாப்பிடு, இன்னும் கொஞ்சம் சாப்டு மாமேன் எனக் கிண்டல் செய்து கொண்டிருந்தார்கள். ஆனால் அவர் நெளிந்து கொண்டிருந்தார். போதுண்டா, வேணாண்டா என்றார்.
… சாருக்கு இன்னும் ரெண்டு இட்லி போடுப்பா. அய்யோ – என்னால் முடியாது. பரவால்ல தலைவா, சும்மா சாப்டு.
இட்லி வந்தது. ஆனால் அவர் தட்டில் முன்னமே இருந்த பண்டம் இன்னும் சாப்பிடப் படவில்லை.
ஆனால் குழாம் விடவில்லை. பக்கத்தில் சாம்பார் வாளியுடன் வந்த அஸ்ஸாமிய பரிமாறும் பையனை விரல்சொடுக்கி அழைத்து, இன்னும் இங்க சாம்பார் விடு – நான் சாப்டாச்சுடா – கொஞ்சம் விடுப்பா, சாருக்கு சாம்பார்னா உசுரு – அவன் ஒரு கரண்டி விட்டான் – டேய் வேணாண்டா – பரவால்ல, இன்னும் கொஞ்சம் போடு – பையன் தயங்கினான் – இல்ல அவ்ரு சும்மா சொல்றாரு, நீ சும்மா ஊத்து, துட்டு வாங்கறீங்க இல்ல…
அந்தப் பையன் பரிதாபமாக தன் மேனேஜரைப் பார்த்தான் – அவர் வெறுப்புடன் ‘விட்டுத் தொலை’ என்பது போலச் சமிக்ஞை செய்து முகத்தை வாசலை நோக்கித் திரும்பிக் கொண்டார்.
அந்தப் பையன் பேதலித்து இன்னமும் இரண்டு கரண்டி ஊற்றினான்.
இன்னும் ஒரு கரண்டிக்கு இடம் இருக்குல்ல, ஊத்துடா என்றார்கள். ஊத்தினான். தட்டில் முழுவதும் சாம்பாரால் மூழ்கடிக்கப் பட்ட வட்டவடிவ வாழை இலை – அதில் முழித்துக் கொண்டிருந்த இரு இட்லிகள். கிழிந்த தோசைத் துண்டுகள்.
மேஜையைச் சுத்தம் செய்ய வந்தவர் (பஞ்சடைத்த கண், இவரும் வடகிழக்குப் பிராந்தியக்காரர்) – இந்த இட்லிசாம்பார்த் தட்டையும், அந்த அற்பர்கள் மிச்சம் வைத்திருந்த, பாதி-காலென்று சாப்பிட்டு வைத்திருந்த பலவகையான உணவுகளையும் எடுத்துச் சென்றார். இவர் என்னைப் பார்த்த பார்வையில் வெறுப்பா, சோகமா – எது அதிகம் என்பதை என்னால் அனுமானம் செய்ய முடியவில்லை. ஆனால், எனக்கு, நம் தமிழிளைஞர்கள் இப்படிச் செய்கிறார்களே என்று மிக அவமானமாக இருந்தது.
-0-0-0-0-0-
… சிரித்தபடி கையலம்பிக் கொண்டு, செல்ஃபோன் பேசிக்கொண்டு பில் பைசா கொடுத்துவிட்டு நகர்ந்தது அந்த இளைஞப் பொறுக்கிக் கும்பல்.
எனக்கு இருப்பே கொள்ளவில்லை. காட் ஃபாதர் திரைப்படத்தில் மைக்கேல் கொர்லியோனி (’அல் பசீனோ’) கொலை செய்வதற்கு முன் காண்பிக்கும் உணர்ச்சிக் குவியல் போல (என்ன அற்புதமான நடிகர் இவர்!), எனக்கு அந்த இளைஞர்களை உடனே மாறுகால், மாறுகை, மாறுகொட்டை வாங்கி விடவேண்டுமென்று ஆத்திரம்.

அல்பர்ட் பசீனோவாக நடித்துக் கொண்டிருக்கும் ராமசாமி – மெக்ளஸ்கி + ஸொல்லொட்ஸோவை சுட்டுத்தள்ளப் போகிறார்; பீட்டர் க்லெமென்ஸா-வாக நடித்துக் கொண்டிருந்த பத்ரி வெளியே காரில் என்னைத் தப்புவிப்பதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்…
எனக்கு முப்பது வயது குறைவாகவும், உலக அனுபவங்கள் அதிகமில்லாமலும் இருந்திருந்தால், அவர்கள் மண்ணாங்கட்டி மண்டைகளை சிதறுதேங்காய் போல உடைத்திருப்பேன்… ஹ்ம்ம்.
மேலும், அன்று காலையில் தான், சென்னை கிளம்புவதற்கு முன், என் மனைவியிடம் முட்டாள்தனமாக, முட்டியடியாக எதுவும் செய்யமாட்டேன் என வாக்குக் கொடுத்திருந்தேன்.
… ஒருவாறு வெளியே வந்தபின் தான், அதுவும் ஜிஎன் செட்டி சாலையின் புகைக்காற்றைச் சுவாசித்தபின்னர் தான், எனக்குக் கொஞ்சமாவது கொதிப்பு அடங்கியது. அதற்குப் பின்னும் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.
-0-0-0-0-0-0-0-
நான் இக்காலங்களில் வசிக்கும் பகுதியில் அறிவார்ந்த தளத்தில், உலக விஷயங்களைப் பற்றிப் பேசுவதற்கு அல்லது கேட்டுக்கொண்டிருப்பதற்கு, அளவளாவுவதற்கு, பிரபஞ்சத்தைப் பற்றி ஆச்சரியமுறுவதற்கு — மக்கள் இல்லை. இது பலவகைகளில் (அவர்களுடைய / என்னுடைய) உடல் / மன நலத்திற்கு சரிதான் என்றாலும் – சில சமயங்களில் அலுப்புத் தரக்கூடியது.
ஆகவே, இந்த இளைஞர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருப்பது மிகவும் ஆசுவாசமாகவே இருந்தது.
-0-0-0-0-0-
உணவை தேவைமெனக்கெட்டு வீணாக்குவது மனித/தேசத்துரோகமாக மட்டும் கருதப் படாமல், அந்த வீணர்களுக்கு மரண தண்டனையும் கொடுக்கப் படவேண்டும் என்பதில் எனக்கு ஐயமேயில்லை.
சந்தேகமேயில்லாமல் நான் மரணதண்டனையை ஆமோதிப்பவன்தான்.
-0-0-0-0-0-
மற்ற நான்கு நிகழ்வுகள், இன்னொரு சமயம் / பின்னர்…
தொடர்புள்ள பதிவுகள்:
October 3, 2013 at 12:33
“ஊக்க போனஸாக மிகமிக முக்கியமாக நகைச்சுவையுணர்வும் மிக்கவர்கள், இன்னாட்களில் காணக்கிடைக்க மிகவும் அரிது எனத்தான் தோன்றுகிறது ” I am 200% with you on this. People have so much pride in taking themselves so seriously(they take every thing else very light)
October 4, 2013 at 07:46
உணவை வீணாக்குவது என்பது எல்லா இடங்களிலும் இருக்கிறது. எங்கள் வீட்டில் ரொட்டித்துண்டங்களின் ஓரங்களை எல்லாம் எடுத்துவிட்டுச் சாப்பிடுவார்கள். ஆனல் நான் ஏதாவது சொல்லப்போனால் வந்துட்டாரைய்யா திருவள்ளுவர் என்று என்னுடைய திருவள்ளுவர் பைத்தியத்தையும் என்னையும் ஒருசேரத்திட்டுவார்கள். என்ன செய்ய!
October 6, 2013 at 21:08
this type people learning from nowdays tamil cinema
November 27, 2020 at 08:36
[…] நான் முதலில் சந்தித்தது குறித்த விவரங்கள் […]