போங்கடா, நீங்களும் ஒங்களோட ’ஜாதி ஒழிப்பு’ முழக்கமும்…
July 14, 2013
பாகம் ஒன்று: ‘இவன் நானில்லை’
இரண்டாம் ராமசாமி எழுதுகிறார்: ஜாதி என்பது என்ன, சமூகத் தட்டுவாரிக் கட்டமைப்பு என்பது எப்படிப்பட்ட ஒரு சமூகக்கருவி என்றெல்லாம் புரிந்து கொண்டுதான் பேசுகிறோமா? அதில் ஒரு விஷயம் கூட உதவிகரமாக இல்லையா? காலங்காலமாக மனிதக் கூட்டங்கள், தங்கள் ஒருங்கிணைப்புத் தேவைகளுக்காகவும், சுய சார்புக்காகவும், சுயங்களைப் பண்பாட்டுப் பின்னணிகளில் பொருத்தி முன்னெடுத்துச் செல்வதற்குமான கருவிகள் இல்லையா அவை? உயிர்களின் பரிணாம வளர்ச்சியில், முக்கியமாக, மானுடப் பரிணாமத்தில் தட்டுவாரிக் கட்டமைப்புக்கள் அளிக்கும் சமூகவியல் பங்களிப்புகள் எப்படியானவை?
ஜாதி அபிமானம் என்றால் என்ன? ஜாதி வெறி என்றால் என்ன? ‘ஜாதி ஒழிப்பு’ என்பது சாத்தியமா? மேலும் முக்கியமாக, அது தேவையா? ஜாதிக்கு மாற்றாக எதனை முன்வைக்கிறோம்? திராவிட(!) இயக்கக்(!!) கருத்தாங்களையா(!!!)? கொம்மிஸார்களையா? மதகுரு-முல்லாக்களின் கட்டமைப்பையா? அல்லது நம்முடைய செல்லமான புறநானூற்று வஞ்சித்திணைகளுக்குள் புகுந்துகொண்டு ரத்தத்தில் நீந்தப் போகிறோமா? அல்லது வேறொரு கிரகத்திலிருந்து வேறு எதையாவது இறக்குமதி செய்யப் போகிறோமா?

இது எனக்கு மிகவும் பிடித்த மேட் டிஃப்ஃபீ அவர்களின் கேலிச் சித்திரம் – ஃபெப்ரவர் 2, 2004 அன்று ந்யூயார்க்கர் பத்திரிக்கையில் வந்தது
அல்லது மாற்று என்பதையே பார்க்காமல், வன்முறையே அற்ற சுத்த சன்மார்க்க சத்திய சமூக உலகம் (utopia) ஒன்றை நிறுவப் போகிறோமா?
இவ்விரண்டில் ஒன்றைத் தெரிவு செய்வோமானால், எப்படி அதனைச் சாதிக்கப் போகிறோம்? அந்த அதி உன்னத உலகத்தில் சமூகக் கட்டமைப்பு என்பது எப்படி எதை நோக்கியதாக இருக்கும்?
அல்லது, இவ்விரண்டும் இல்லாமல் பரிணாமப் பாதையில் பின்னோக்கி நகர்ந்து கல்லாய் பாம்பாகிப் பறவையாய்ப் பல் விருகமாகி மரமாகிப் புழுவாய் பூடாய்ப் புல்லாகிப் போய்ச்சேரப்போகிறோமா?
சரி, மேற்கண்ட அனைத்துக் கேள்விகளையும் விட முக்கியமானதொன்று: நாம், நம்முடைய தனிப்பட்ட முறையில், ஜாதி வெறி சார் பிரச்சினைகளை எப்படி அணுகப் போகிறோம்?
ஜாதி அடுக்குப் பிரிவினைகளில் மிகவும் வெளிப்படையாகவே தெரியும் பிரச்சினைகள்: மூச்சு முட்ட வைக்கும் இறுக்கம், நீ உயர்த்தி – நான் தாழ்த்தி, நீ தாழ்த்தி – நான் உயர்த்தி, மற்ற மக்கள் குழுக்களைளை மறுதலிப்பதன் மூலம் மட்டுமே, தம் குழுவை/சுயத்தைக் கட்டியெழுப்புவது, சமூகச் செயல்பாடுகளைக் குறுக்கிக் கொள்வது, உடல் உழைப்பை மிகவும் கீழானதாகக் கருதுவது – இன்ன பிற.
மேற்கண்ட பிரச்சினைகளைப் பற்றி ஒன்றுமே சிந்திக்காமல், தன்னளவிற்காவது செயல்பட்டு – இந்தப் பிரச்சினைகளிலிருந்து விடுதலை பெறாமல் – வெட்டியாகக் குமுறுவதிலும், ஆவேசம் கொள்வதிலும் கவைக்குதவாத பெட்டைப் புலம்பலிலும், தேவையற்ற வெறியிலினிலும் ஈடுபடுவதினால் — யாருக்கு என்ன உபயோகம்?
எந்த ஒரு பண்பாட்டுக் கூறையும் — அதனுடைய அடிப்படைக் குறியீடுகளையும், சார்புடைய படிமங்களையும் அது வளர்ச்சி பெற்ற காலகட்டச் சூழலில் வைத்துப் புரிந்து கொண்டு, பின்னர் அதனை நம் சமகாலத்துக்குப் பொருத்திப் பார்த்து, சாதக பாதகங்களை உணர்ந்து – அவற்றில் உருப்படியானவற்றை மேலெடுத்துச் சென்று, அப்படி இல்லாதவற்றை புறந்தள்ளி — நம்மை நாமே முன்னேற்றிக் கொள்வது தானே முறை?
ஊரைத் திருத்தப் போவதற்கு முன்னால், நம்மைத் திருத்திக் கொள்வதுதானே சரியான முறை?
-0-0-0-0-0-0-
தலித் விடுதலை (dalit liberation), விடுதலை இறையியல் (liberation theology), சர்ச்சைப்பாற்பட்ட சமூகவெளிகள் (contested spaces), வல்லாதிக்க சமூகக்கட்டமைப்புகளுக்கு எதிரான மக்கள் குழுமங்கள்/முனைவுகள் சார் கருத்தாக்கங்கள் (subaltern studies) என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்த / கொண்டிருக்கும் ஒருவரை (வங்காளி, காயஸ்த் ஜாதி என நினைக்கிறேன்; நம் தமிழர் பண்பாட்டின்படி ஜாதியை முதற்கண் தெரிவித்துவிடவேண்டும் என்பதை உணர்ந்திருக்கிறேன்) அகஸ்மாத்தாக, நேற்றுச் சந்தித்தேன். இவர் ’பொருளாதார அரசியல் வாராந்தரி’யில் (economic & political weekly) எழுதுபவரும் கூட. தமிழக நடப்புக்களை, பெரும்பான்மைத் தமிழர்களைவிடக் கூர்மையாக கவனித்து வருபவர் அவர்.
நான் இந்த ஈபிடபிள்யு-வின் பலபத்தாண்டு சந்தாதாரனாக இருந்திருந்தாலும், எனக்கு இப்பத்திரிக்கை கொஞ்சம் அலர்ஜிதான். ஏனென்றால் நம்மூர் ‘த ஹிந்து’ போன்ற சமன் இல்லாத இடதுசாரி சார்பு நிலைப் பத்திரிக்கை இது. இருந்தாலும், மானுட-சமூக-பொருளாதார-அரசியல் சார்ந்த கரடுமுரடான கலைச்சொற்கள் உபாசனை அதிகமிருந்தாலும், இப்பத்திரிக்கை, அதனளவில் தரம் வாய்ந்தது தான். தலைவிதியே என்று ‘த ஹிந்து’ சில சமயம் படிப்பது போல, ஈபிடபிள்யு-வையும் வாய்ப்புக் கிடைத்தபோது, எனக்கு நானே தண்டனை கொடுத்துக் கொள்ளும் எண்ணம வரும்போது படிப்பேன் – இந்த வங்காளியின் கட்டுரைகளையும், ஈபிடபிள்யு-வில் படித்திருக்கிறேன்.
இவருடன் அறிமுகம் எப்படியாயிற்று என்பது சட்டென்று நினைவுக்கு வரமாட்டேன் என்கிறது ஆனால் சில வருடங்களுக்கு ஒரு முறை முட்டிக் கொண்டு விடுவோம். நேற்று முட்டிக் கொண்டது புதுச்சேரி பேருந்து நிலையத்தில் இரவு 9 மணிக்கு. வெள்ளிக்கிழமை புதுச்சேரி வந்திருந்த அவர், எப்படியாவது பார்க்க வேண்டுமே என்றார். சரி இரவு 10:30க்கு எனக்கு பெங்களூர் பேருந்து. சீக்கிரமாக வந்து விடுகிறேன், பேசலாம் என்றேன்.
… வங்காளி பாபு, ஏகத்துக்கு குதித்துக் கொண்டிருந்தார். உடனடியாகப் பாமக-வை ஒழிக்கவேண்டும். ராமதாஸைத் தூக்கில் போடவேண்டும். அந்தப் பையன் ’இலவ் ராசன்’ கொலைக்குப் பழி வாங்கவேண்டும். ஜாதிகளை ஒழிக்க வேண்டும். மனு நீதி வருணாசிரமத்தை, அதன் வேர்களைப் பிடுங்கி அமிலம் விடவேண்டும்… ஒரு நாற்பது நிமிடம் பிரசங்க மழை. பேருந்து நிறுத்ததில் ஒரே கொசுத்தொல்லை வேறு. பொறுக்க முடியவில்லை எனக்கு.
இம்மாதிரி, இந்தியச் சமூகத்தைப் பற்றி ஒரு இழவும் புரிந்து கொள்ளாத நுரைதள்ளல்களைப் பொதுவாகச் சிரித்துக்கொண்டே அணுகுவேன். முடிந்தவரை ஒன்றும் பேசமாட்டேன். ஆனால் தடிமன் தோல் படைத்த எனக்கே அவர் பேசுவதைக் கேட்கக் கேட்க, ‘விட்டேனா பார்’ என அவரை துவம்சம் செய்ய வேண்டும் எனும் வன்முறையெண்ணம் மிகுந்தது. பேச ஆரம்பித்தேன்.
சரி. செய்யலாம். அது கொலையா இல்லையா என்று நாமே இங்கேயே உட்கார்ந்து கொண்டு போஸ்ட்-மார்ட்டெம் பகுத்தாய்வு பண்ணிவிடலாம். எல்லாம் வாய்ப்பேச்சு தானே! பின்னர் ஜாதிப் பிரச்சினைகள் ஒழிந்து விடுமா? அதையே விடுங்கள். இன்று உங்களுக்கு, நீங்கள் நம்பும் கார்ல் மார்க்ஸ் அருளால், ஒரு புது சக்தி கிடைக்கிறது என வைத்துக் கொள்வோம். உங்களால் எந்த முடிவையும் எடுத்துச் செயல்படுத்த முடியும்படியான சக்தி அது. நீங்கள் அவரைத் தூக்கில் போடுவீர்களா? மாட்டீர்களல்லவா? ஆக, உணர்ச்சிக் குவியல்கள் வேண்டாம். முட்டியடி எதிர்வினைகள் வேண்டாம்.

பாவம், ராமதாஸ் போன்றவர்கள். ஆனால், அவர் மட்டுமேயா இப்படி? (ந்யூயார்க்கர் பத்திரிக்கையில் பல ஆண்டுகளுக்கு முன் வந்தது, இந்த கேலிச் சித்திரம்)
உங்களுடைய ஊரிலும் சரி, எங்களுடைய ஊரிலும் சரி – எவ்வளவோ இம்மாதிரி ‘ஜாதி ஒழிப்புக்காரர்கள்,’ உச்சாடனவாதிகள் – மினுக்கிக் கொண்டு அலையும் பதர்கள், தங்களுடைய வாழ்க்கையில் படு மோசமான ஜாதி வெறியர்களாக இருக்கிறார்கள். ஆனால், ராமதாஸின் ’நுணலும் தன் வாயால் கெடும்’ தன்மையுடன் கூடிய, நேரிடையான புலம்பல்களின் காரணமாக அவரை நாம் ஒரு லகுவாகப் பிடிபடும் எதிரியாக விரிக்க முடிகிறது.
நான் ராமதாஸிய நடவடிக்கைகளை நியாயப் படுத்தவில்லை. நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் – இப்போது ராமதாஸை எதிர்த்து அறிக்கை விடும் பெரும்பாலான தொழில்முறை அரசியல்வாதிகளும், மனிதவுரிமை/ஜாதியுரிமை ஜந்துக்களும் நம்மால் இடங்கையால் புறம் தள்ளப் பட வேண்டியவர்கள்.
எங்கள் கருணாநிதியையே எடுத்துக் கொள்ளுங்கள். அவருடைய தவப் புதல்வர்களின் ஒருவரான அழகிரி, ஒரு தலித் பெண்ணை (காந்தி – இவர் ஒரு முன்னணி மதுரைக்கார தலித் திமுக பிரமுகருடைய உறவினர் என நினைவு) மணக்க விரும்பிய போது, சமூக நீதிக் காவலரான கலைங்கர் அவர்கள் என்னென்னவோ காரணம் சொல்லி அதனை எதிர்த்தார். பின்னர் அழகிரியின் முனைப்பும், விருப்பமும், விடா முயற்சியும் காரணமாக, வேண்டாவெறுப்பாக ஒப்புக் கொண்டார. அப்பனுக்கு, ‘குடும்ப மானம்’ போன்றவற்றுக்கு தலை வணங்குவதாகச் சொல்லிச் சுயநலத்துடன், தான் காதலித்தவரை அழகிரி கைவிடவில்லை. இந்த ஒரு விஷயத்துக்கு அழகிரியை நாம் மெச்சத்தான் வேண்டும்.

கருணாநிதி நீதி: காற்றுள்ள போதே தூற்றிக் கொள் (அல்லது) தூற்று. இன்னொரு சுற்று வரும்போது மாற்றிக் கொள்ளலாம். மேலதிகமாகச் சுற்று வரும்போதும் மறுபடியும் மறுபடியும் மாற்றிக் கொண்டேயிருக்கலாம். யாருக்கும் ஒரு இழவும் ஞாபகமிருக்காது, கவலை வேண்டாம். (இது இன்னொரு ந்யூயார்க்கர் கேலிச்சித்திரம்)
சரி, இந்தத் தொழில்முறை அரசியல்வாதிகளை விடுங்கள். நம்மைப் பற்றிப் பேசலாம்.
நீங்களும் நானும் இந்த ஜாதிப் பிரச்சினைகளின் மீது என்ன நிலைப்பாடு எடுத்து என்ன செய்திருக்கிறோம்? ஒரு தலித் குழந்தைக்காவது நேரடியாக ஏதாவது உதவி செய்திருக்கிறோமா? நம் சுற்று வட்டாரங்களில் ஜாதி சமரசத்துக்காக ஏதாவது செய்திருக்கிறோமா? யோசியுங்கள். அறிவுரை கொடுப்பது மிகச் சுலபம். நம்முடைய தொழிலே அதுதானே!
சரி சரி மேதாவியே, இப்போது என்னதான் செய்ய வேண்டும் என்கிறாய்?
இது சுலபமான விஷயம். ஜாதி வெறியை நம்மிடமிருந்தும் நம்முடைய சுற்றுப்புறத்திலிருந்தும் களையெடுக்க — முதலில் நீங்கள் உங்கள் வீட்டுக் கக்கூஸ்களை, உங்கள் வீட்டு மலப்பீங்கான்களை, உங்கள் வீட்டுப் பணிமகளை உபயோகிக்காமல், நீங்களே கழுவ ஆரம்பியுங்கள். சில வருடங்களுக்கு ஒரு முறை, உங்கள் கழிவு நீர்த் தொட்டி நிரம்புமில்லையா – அதனை நீங்களே சுத்தம் செய்யுங்கள். பின்னர் உங்கள் பக்கத்து வீட்டுப் பீங்கான்களை அலம்புங்கள். பின்னர் ஒரு தலித் வீட்டிற்குச் சென்று அவர் வீட்டு கழிப்பறைகளைப் பரிசுத்தம் செய்யுங்கள்.பின்னர் தலித் வீடுகளில் கழுவும் மகாமகோ தலித்களுடைய வீட்டிற்கும் செல்லுங்கள். அவ்வேலையைச் செய்யுங்கள்.
என்னைப் பொறுத்தவரை – ஜெயலலிதாக்களும், கருணாநிதிகளும், திருமாவளவன்களும், ராமதாஸ்களும், ஏன், மிக மிக முக்கியமாக, நீங்களும் நானும் இந்தக் கக்கூஸ் கழுவலைச் செய்ய ஆரம்பித்தாலே இந்த ஜாதி சார்ந்த படுமோசமான பிரச்சினைகள் களையெடுக்கப் பட ஆரம்பிக்கும். என்ன சொல்கிறீர்கள்?
என்ன, அவர்கள் செய்ய மாட்டார்களா? சரி – நாம் மட்டுமாவது செய்ய ஆரம்பிக்கலாமே! அதுவும் நம் வீட்டுக் கழிப்பறைகளையும், கழிவு நீர்த் தொட்டியையும் சுத்தம் செய்வதிலிருந்து ஆரம்பிக்கலாமே! இதிலிருந்து தொடங்கி, நாம் கற்றுக் கொள்ள முடியாத, பெற முடியாத சமத்துவச் சமூகக் கட்டமைப்பா?
இதெல்லாம் முடியாத பட்சத்தில், சுத்தமான மனதுடன், தூய்மையான எண்ணங்களுடன், புல்லரிப்புடன் ‘ஜாதியை ஒழிக்கவேண்டும்’ என அறைகூவுங்கள். கூச்சலிடுங்கள்.
வாழ்க ஜாதி ஒழிப்பு. வளர்க ஜாதி ஒழிப்பர்கள்!
முக்கியமாக, அவர்கள் தொப்பைகள் மேலதிகமாகச் செழித்து வளர வாழ்த்துக்கள்!!
கூட, என்னருமை நண்பரே, உங்கள் தொப்பை விரிவாக்கத்துக்கு எனது விசேஷ பிரார்த்தனைகளும்!!!
தொலைந்து போ என்றார் அவர்.
பேருந்து நடத்துனர், பேருந்து கிளம்ப நேரமாகி விட்டதென்றதால், நான் பாபு சொன்னதை செயல்படுத்த ஆரம்பித்தேன்.
ஆனால் இரண்டு விஷயங்கள் சொல்லவேண்டும் உனக்கென்றேன்:
ஒன்று: : முதலில் உங்களூர் புரட்சித்தலைவி மமதா அவர்களிடமிருந்து, குட்டிச் சுவராய்க் கொண்டிருக்கும் உங்கள் வங்காளத்தை மீட்டெடுங்கள்; பின்னர் சாவகாசமாக எங்கள் ஊர் ஜாதி ஒழிப்பைப் பார்த்துக் கொள்ளலாம்.
இரண்டு: நீங்கள் சமைக்கப் போகும் வன்முறையால் கட்டியெழுப்பப் போகும் புரட்சிகர, சமூக அடுக்குகளற்ற, சமுதாயத்தில் குறைந்தபட்சம் உங்கள் மலச் சட்டிகளை நீங்களே சுத்தம் செய்து கொள்வீர்களல்லவா?
அவருக்கு மிகவும் கோபம் வந்து விட்டது. முகம் சிவந்து – எங்கள் ஆட்சி மலர்ந்ததும் உன்னைப் போன்ற ஜாதிவெறியர்களைத் தான் முதலில் ஒழிப்போம், நீ ஒரு அசிங்கமான ஹிந்து வெறியன், ஒரு போலி அறிவுஜீவி என்றார்.
எல்லாம் சரி, ஆனால் நான் ஒரு அறிவுஜீவியோ அல்லது அறிவுப் போலியோ அல்ல வெறும் ஜீவிதான் என்று அவருக்கு நன்றி சொல்லிவிட்டு — கைகுலுக்காமல், தழுவிக் கொள்ளாமல் (ஒரு முன்னெச்சரிக்கைதான்; அவரோ ஒரு மகாமகோ கடுகெண்ணை வாசனையுடைத்த ஆஜானுபாகு – ஆரத்தழுவுகிறேன் என்று கோபத்தில் என் நுரையீரல்களை மார்புக் கூடோடு நசுக்கி விட்டால்?) – பேருந்தில் ஏறினேன்.
பேருந்து, திருவண்ணாமலை தாண்டுவதற்குள் அவரிடமிருந்து குறுஞ்செய்தி:
sorry pal, i lost it. apologies. i am still thinking. will discuss on your return.
என்னுடய பதில்:
it is okay, but would you clean your hotel toilet tomo or would you ‘allow’ the servant maid to clean your dirt? lesson#1 on jaathi annihilation.
-0-0-0-0-0-0-
பாகம் இரண்டு: ‘நான் அவனில்லை’
இரண்டாம் ராமசாமி அவர்களின் நிந்தனைகளுக்கு, வெகு வக்கணையான கேள்விகளுக்கு, முதலாம் ராமசாயாகிய நான் சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன்.
அய்யா, இந்தப் பிரபஞ்சத்தில் நிகழ்காலம்தாம் நம் கையில் – இறந்தகாலமோ, எதிர்காலமோ நம் பிடிப்பில் இல்லை. ஆக, நடக்கிற காரியத்தைப் பற்றிப் பேசுங்கள். நமக்கு வாழ்க்கையே ஒரு கேளிக்கை நிகழ்வுதான். துய்ப்புதான்.
ஜனனம் மரணம் என்பதான ‘கமர்ஷியல் ப்ரேக்’ களின் நடுவே நிகழும் இழவெடுத்த தமிழ்த் தொலைக்காட்சி மெகாசீரியல் தாம் — நம் இருத்தலின் தாத்பர்யமே!!
ஆக, நமக்கெல்லாம் — முக்கியமான விஷயங்களைப் பற்றிக் கல்வி பெறுவதற்கும், யோசிப்பதற்கும் பின்னர் அவற்றின்படி செயல்படுவதற்கும் எங்கு நேரம், சொல்லுங்கள்?
இப்படிப்பட்ட கடும் இடர்பாடுகளுக்கிடையில் நாம் பணி புரிய நேர்ந்தாலும், நம்மால் செய்யப்பட்ட விஷயங்கள் கணக்கிலடங்கா என்பதைத் தங்களுக்குத் தெரிவிக்கக் கடமைப் பட்டிருக்கிறேன். நாம் சிடுக்கவிழ்த்த பலப்பல பிரச்சினைகளிலிருந்து, மகாமகோ இடியாப்பச் சிக்கல்களிலிருந்து குறைந்தபட்சம், கீழ்க்கண்ட சில விஷயங்களையாவது தெரிவிக்க விரும்புகிறேன்.
சில வருடம் முன் ஸ்விஸ் வங்கிகளில் இருக்கும் பண மூட்டைகளை, மின்னஞ்சல்கள் மூலமாகப் போராடி, மின்னஞ்சல் இணைப்புகளாகவே அவை அனைத்தையும் கொணர்ந்திங்குச் சேர்த்தோம்.
பின்னர் காமென்வெல்த் வளாக ஊழல், நிலக்கரி ஊழல், ஹெலிகாப்டர் பேர ஊழல், வீட்டுவசதிவாரிய ஊழல் போன்ற அனைத்து ஊழல்களையும் ஃபேஸ்புக் மூலமும், பின்னூட்டங்கள் மூலமும் ஒழித்தோம்.
நடுவில், 2ஜி ஊழல். ஊழல் நடந்தது அல்லது நடக்கவில்லை இதில் கலைங்கர் டீவியின் பங்கு எவ்வளவு என நாம் சூடாக இணையத்தில் விவாதிப்பதற்குள்ளேயே, மேதகு கனிமொழி அவர்கள் ஜாமீனில் நடந்து வெளியே வந்தே விட்டார்கள். ராசா அவர்களோ, எங்கே போனார் என்றே தெரியவில்லை.
மேலதிகமாக, தூக்குத் தண்டனை தேவையா என ஒரு சுற்றுச் சுற்றி வந்து அந்த ஆளை (யாரது?) தூக்கில் போட்டவுடன் அந்தப் பிரச்சினை முடிந்து விட்டது எனக் கருதி வேறு முக்கிய விஷயங்களுக்கு – அதாவது ஏதோ பட வெளியீடு (என்ன படம் அது?) தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதில் முனைந்து விட்டோம்.
அண்ணா ஹஸாரே அவர்களின் ஊழல் ஒழிப்புப் போராட்டத்தையும், ஃபேஸ்புக் ‘லைக்’குகள் போட்டே, நம் இணைய ஆதரவுகள் பல கொடுத்தே ஒழித்தோம். நடுவில் – அவர் பெயர் மறந்தேவிட்டது, யாரவர் – அண்ணாவுடன் பிணக்கு ஏற்பட்டு வெளியேறிய தம்பியைத்தான் சொல்கிறேன் – இவருக்கும் லைக் டிஸ்லைக் போட்டே தொலைத்தொழித்தோம். அவரும் காந்தி குல்லாய் போட்டுக்கொண்டு இன்னமும் தம் முயற்சியில் மனம் தளராமல் வளைய வந்து கொண்டிருக்கிறாரோ என்னவோ!
இதற்கு நடுவில் நமக்கு — குப்புறவோ மல்லாக்கவோ நம் வசதிக்கேற்பப் படுத்துக் கொண்டு ஸ்ரீலங்கா திசையை நோக்கி, குசு பல விட்டு, அஹிம்ஸை முறையிலேயே ராஜபக்ஷவை கதிகலங்க அடித்து, மூச்சடைக்க வைத்து, தமிழ் ஈழத்தை வென்று, அதனை, நரகத்தில் இருந்து தரதரவென்று இழுத்துவரப்பட்ட பிரபாகரன் கையில் கொடுக்க வேண்டிய நிர்பந்தங்கள் வேறு…
இலவச இணைப்பான நம்முடையஸ்ரீலங்காவின் கச்சத்தீவை வேறு, கூட்டங்கள் கூச்சல்கள் பல நடத்தி மீட்க வேண்டியிருக்கும் காலத்தின் கோலம்.
நடுநடுவே கூடங்குளம் பற்றி அது வேண்டுமா வேண்டாமா என அதீத தொழில்நுட்ப சங்கதிகளையெல்லாம் ட்விட்டரில் விவாதித்து – சுழற்றியடித்த டெராபைட் ஜல்லியடித்தல்களில், குழப்படிகளில் இன்டெர்னெட்டையே ஸ்தம்பிக்க வைத்த பெருமைமிகு சாதனைகளை வேறு செய்தோம்.
இப்போது நாம் ட்விட்டர், கூக்ல்+ இன்ன பிற மூலமாக ஜாதி பிரச்சினைகளை வேறு தீர்க்க முயன்று கொண்டிருக்கிறோம். அதைத் தவிர பிணத்தின் படங்களைப் பார்த்துவிட்டு அது கொலையா தற்கொலையா என்கிற நம்முடைய வல்லுன / நிபுணக் கருத்துக்களை வேறு தெரிவிக்கவேண்டிய கட்டாயத்திலும் இருக்கிறோம்.
இதற்கப்பால் ஜாதிக் கட்சிக்களை ஒழிக்க வேண்டுமா அல்லது ஜாதிகளையே ஒழிக்க வேண்டுமா எனும் சில்லறைப் பிரச்சினைகளிலும் — நாம் குறுஞ்செய்திகள் மூலம், தொலைக்காட்சி உரையாடல்களை யூட்யூப்-ல் தரவிரக்கம் செய்து பார்த்தும் — தலையிட வேண்டிய காலத்தின் கட்டாயம்.
இந்த அழகில், நாம் கண்டமேனிக்கும் கண்றாவிப் பிரச்சினைகளைக் கண் துஞ்சாமல், மெய் வருத்தம் பாராமல் தட்டச்சு செய்தே ஒழிக்க முயன்று கொண்டிருக்கும் போது – இந்த இழவெடுத்தக் கோடம்பாக்கக் கோட்டான்கள் படம் படமாக வெளியிட்ட வண்ணம் உள்ளனர். இவை அனைத்தையும் உடனுக்குடன் பார்த்து விமர்சனம் என்கிற பெயரில் திரைப்படக் கதாநாயகிகளின் மார்பக அண்மைப் படங்களை வெளியிட்டு கிளுகிளுப்படைய வேண்டும்..
இப்பிரச்சினைகளுக்கிடையில் வெள்ளைக்கார / ஆங்கில / ஹிந்தி பத்திரிக்கைகளிலிருந்தும் அல்-ஜஸீரா தளங்களிலிருந்தும் அட்டைக் காப்பியடித்து, சுட்டு, வெந்தும் வேகாமலும் புதிய பதிவுகள் பல ‘தேத்த’ வேண்டும். ‘புதிய தலைவலி’ பத்திரிக்கைகளுக்கும் எழுதியாகவே வேண்டிய கட்டாயங்கள் வேறு!
ஐயா, உங்களுக்கெல்லாம், படித்துப் படித்துச் சொன்னால்கூட, இந்தச் சின்ன விஷயம் புரியவே மாட்டேன் என்கிறது. நிலைமை இப்படி இருக்கும்போது நமக்கு, நம் கழிவு நீர்த் தொட்டிகளைக் கழுவ ஏதப்பா நேரம்?
உங்களுக்குத் தெரியாததா? அதையெல்லாம் தலிதகளை விட மிகமிகக் கீழ் நிலையில் இருக்கும் தெலுங்கு ஜாதிகள் செய்வார்கள். நாம் பணத்தை விட்டெறிந்தால் அவர்கள் நாய் போல வேலை செய்வார்கள். கவலை வேண்டாம். நமக்கும் பணம் சும்மாவா வந்தது? எப்படி தட்டச்சுக் கணினிகளில் நாமும் நாய் போல உழைக்கிறோம் என நமக்குத் தானே தெரியும்?
சரி, சரி, வெட்டிப் பேச்சு வேண்டாம். எனக்குத் ‘தீண்டாமை ஒழிப்பு,’ ’உடலுழைப்பின் மேன்மை.’ ‘subaltern studies in caste conflicts and contested spaces,’ ‘dravidian ideology is synonymous with social justice’ போன்ற தலைப்புக்களில் 10000 வார்த்தைக் கட்டுரை ஒன்றை நாளைக்கே பதிவு செய்ய வேண்டும். எப்படியாவது சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வாங்கிக் கொள்ளவேண்டும். ஆகவே இந்த மேலான பதிவை இத்தோடு முடிக்கிறேன்.
கடைசியாக ஒன்று:
இரண்டாம் ராமசாமியே! உன் வாயை மூடிக் கொள்! இல்லையேல்… ^%$#@*
சுபம்.
July 14, 2013 at 10:03
குறிப்பிட்ட விசயங்களை பேசிக் கொண்டு வரும் போது சம்மந்தம் இல்லாமல் தாவிக் கொண்டே செல்வது உங்கள் பாணியாக இருந்தாலும் அது தலைப்புக்கேற்ற புரிதலை படிப்பவர்களுக்கு தராது என்பது என் எண்ணம்.
ஏற்கனவே சில இடங்களில் முல்லைவேந்தன் கையெடுத்து காட்டிக் கொண்டு சென்ற விபரங்களை கொடுத்தது போல உங்கள் அனுபவங்களை பகிர்வுகளாக இது போன்ற தலைப்புகளுக்கு கொடுக்கலாம்.
காரணம் தமிழ்நாட்டில் ஒவ்வொரு இடத்திலும் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் தங்கள் அனுபவங்களை எழுதினால் போதுமானது. பத்து பதிவுகளை ஒன்று சேர படிக்கும் போது அந்த குறிப்பிட்ட விபரங்களை படிக்க விரும்புவர்கள் படித்து முடிக்கும் போது ஒரு தெளிவான மனோநிலைக்கு வர முடியும்.
இன்று காலை ஜெயமோகன் எழுதிய தர்மபுரி என்ற கட்டுரையை படிக்கும் போது அப்படி எனக்கு தோன்றியது.
நேரம் இருக்கும் போது இதை படித்துப் பாருங்க.
http://deviyar-illam.blogspot.in/2013/06/blog-post_9.html
http://deviyar-illam.blogspot.in/2013/05/blog-post_12.html
July 14, 2013 at 12:52
நல்லது சார் :) கொஞ்ச நான் முன் கிட்டத்தட்ட இதையொட்டி நான் போட்ட கமெண்ட் https://www.facebook.com/athisha1/posts/10201364359773890?comment_id=6440402&offset=0&total_comments=53
July 15, 2013 at 08:11
எனக்கு வயது 66. ஏறக்குறைய பழைய புண்ணாக்கு. இப்ப கொஞ்சநாளாக திருக்குறளைப் படிக்கிறேன் என ஆரம்பித்து திருக்குறளின் அடிநாதமாக நான் கண்டுபிடித்துள்ள?! ”ஆன்மாவின் மேம்பாட்டுக்காண பயிற்சியே இவ்வுலகவாழ்க்கை. முற்றிலும் மேம்பாடு அடைந்த ஆன்மா புத்தேள் உலக வாழியாக அதாவது கடவுளை ஒத்த ஒன்றாக ஆகும்” என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு இரண்டு புத்தகங்கள் வெளியிட்டு அவை பொரும்பாலும் கேட்பாரற்று ஒரு விமர்சனம் கூட இதழ்களில் வராத நிலையில் மேலும் மேலும் சிக்கல்களில் மாட்டிக்கொள்ளும் விதமாக பிரையன் வெய்ஸ் என்ற யூங்கியன் உளவியல் மருத்துவர் எழுதி உள்ள ஐந்து நூல்களை வாங்கி இரவு பகலாகப் படித்து வருகிறேன். எனக்கு ஒரே மகிழ்ச்சி ஆன்மாவைப்பற்றி திருவள்ளுவர் அன்று கூறியுள்ள கருத்துக்களை பல்லாயிரம் நோயாளிகளை முன் பிறவிகளுக்கு கீழிறக்கம் செய்து அவர்களின் முன் பிறவி வாழ்க்கைகளில் நடந்த சில நிகழ்வுகளுக்கும் இன்று அவர்கள் படும் அவஸ்த்தைகளுக்கும் உள்ள தொடர்பை வெளிபடுத்தி குணப்படுத்தி வருவதன் மூலம் உறுதிப்படுத்தி உள்ளார்.
ஆகவே நண்பர்களே திருவள்ளுவர் ஜாதியைப்பற்றி எதாவது கூறி உள்ளாரா என்று பார்ப்போமா? கலைஞர் சௌகர்யமாக தமிழ்மாநாட்டில் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று அன்றே வள்ளுவர் கூறி உள்ளார் என தம்பட்டம் அடித்து வள்ளுவர் அவ்வாறு கூறாத நிலையில் அவருக்குத் தேவையில்லாத புகழை வாங்கித்தர முயற்சித்த தவறினையும் மீறி திருவள்ளுவர் இந்த ஜாதி பிரச்சனையைப்பற்றியும் அதனை எவ்வாறு அனுக வேண்டும் என்பதையும் குறித்து ஒரு அதிகாரமே தந்துள்ளார். இதுவும் என்னுடைய கண்டுபிடிப்பு!!! மேலே பிறகு எழுதுகிறேன்.இப்போது என்னுடைய பேரனை பள்ளிக்கு அழைத்துச்செல்லவேண்டும்.
July 15, 2013 at 15:07
இகல் என்னும் அதிகாரத்தைத்தான் குறிப்பிடுகிறேன். இகல் என்றால் பிறருக்கு கெடுதல் செய்யும் அவா என புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது. ஆங்கிலத்தில் malice என்று கூறலாம். இகல் என்றால் ஏற்பு இன்மை என்று பொருள் என நான் கருதுகிறேன். இதற்கு இணையாக அனைவரும் அறிந்து உள்ள சகிப்புத்தன்மை இன்மை என்ற காந்தியின் சொல்லை வைத்துக்கொள்ளலாம். ஆனால். சகிப்புத்தன்மை இன்மை என்பது சகிக்கப்படவேண்டியவர் சகிப்பவர் ஆகிய இருவரிடையே ஒரு அந்தஸ்த்து பேதத்தை தோற்றுவிப்பது போலத்தோன்றுவதால் நம்முடைய கருத்தினைப்போலவே மாற்றுக்கருத்தும் அல்லது மாற்று நிலையும் அல்லது மாற்று அமைப்பும் இருக்கிற நிலையை ஏற்றுக்கொள்ள இயலாமை என்ற பொருள் வரும்படி ஏற்பு இன்மை என வைத்துக்கொள்வதே உத்தமம் என்பது என் கருத்து. ஜாதிகளிடையே ஒரு ஜாதியினர் மற்றொரு ஜாதியினரை ஏற்றுக்கொள்ள இயலாமையே பிரச்சனைகளுக்குக் காரணம். ஒரு ஜாதியை இன்னொரு ஜாதி ஏற்றுக்கொள்வது என்றால் அச்ஜாதியை violate செய்யாமல் இருப்பது என்று பொருள்.. சமுதாய அந்தஸ்த்தில் சமமாக இருக்கும் ஜாதிகளே ஒன்றை ஒன்றை ஏற்றுக்கொள்ள இயலாதபோது அந்தஸ்த்தில் சமம் அல்லாத ஜாதியை எவ்வாறு ஒரு ஜாதி ஏற்றுக்கொள்ளும். ஜாதிகள் இல்லாத நிலை தான் மிக உயர்ந்த மன ஆரோக்கியமான நிலை என்பதில் ஐயமில்லை. ஆனால் அவ்வாறான நிலை வர சமூகம் இன்னமும் பல நூற்றாண்டுகள் காத்திருக்கவேண்டும். வள்ளுவர் இராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இகலாமையை வேண்டி எழுதியிருந்தாலும் இன்றளவும் இகல் மக்களிடையே இருக்கத்தானே செய்கிறது. ஆகவே சம்பந்தப்பட்டவர்கள் மிக விழிப்புடன் இருக்கவேண்டிய விசயத்தில் எடுத்தேன் கவிழ்த்தேன் என செயல்பட்டமையே இப்பேரிழப்புக்குக்குக் காரணம். ஜாதிகள் மெல்ல மெல்ல ஒழியும். ஆனால் அதற்குப்பல நூற்றாண்டுகள் பிடிக்கும். அதுவரை பொருமை காக்கவேண்டும். ஒவ்வொரு ஜாதியும் அடுத்த ஜாதியின் இருப்பை துச்சப்படுத்தாமல் ஒப்புக்கொண்டு அதற்குத்தக தம்முடையை நடவடிக்கையை வைத்துக்கொள்ளவேண்டும்.
March 6, 2021 at 09:57
[…] […]