மது பூர்ணிமா கிஷ்வர் – சில குறிப்புகள்

July 15, 2013

கடந்த சுமார் 32 வருடங்களாக தூரத்தில் இருந்து நான் பார்த்துக் கொண்டிருக்கும், மிகுந்த மரியாதை கொண்டிருக்கும் மனிதர்களின் ஒருவர் இந்த அம்மணி மது கிஷ்வர் அவர்கள். ஆழ்ந்த சிந்தனையும், விரிவான படிப்பறிவும், செயலூக்கமும், பாரதத்தைப் பற்றிய கரிசனமும் கொண்ட இவர் — அமைதியாக, அலட்டலில்லாமல் செயல் படுபவர், கொஞ்சமாகப்  பேசுபவர். தன்னுடைய எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் பாபுஜியை ஊற்றுக் கண்ணாகக் கொண்டிருப்பவர் – ஆனால் அவரைப் பற்றிய சில கறாரான விமர்சனங்களும் வைத்திருப்பவர்.

ஒரு தனித்துவமான –  இந்தியச் சிந்தனை மரபுகளில், பண்பாட்டுப் பாரம்பரியங்களில் ஊறிய மனமும், உலகத் தத்துவங்களில் ஆழ்ந்த மூளையும் படைத்த இவர், எந்த விஷயத்தையும் ஐயந்திரிபற அறிந்து கொள்ளும் மனப்பான்மையுடையவர். இவரிடம் முட்டியடி எதிர்வினைகளே இல்லை.

மது பூர்ணிமா கிஷ்வர்

மது பூர்ணிமா கிஷ்வர்

அவர் வெளிப்படுத்தும் எண்ணங்கள் – அசை போடப்பட்டு, அனுபவத்தால் கட்டமைக்கப்பட்டு, ஆழ்ந்த அறிவால் புடம் போடப்பட்டவை – அவர் எதையும் எனக்குத் தெரிந்து சும்மனாச்சிக்குமோ அல்லது மேம்போக்காகவோ சொன்னதில்லை.

அன்புடனும், மரியாதையுடனும் பேசக் கூடிய அதே சமயத்தில் – ஆணித்தரமானத் தரவுகளையும் சமூகமானுடவியல் கோட்பாடுகளையும் கொண்டு, தனக்குச் சரியென்று பட்டதை சரி என்று சொல்லத் தயங்கியதேயில்லை, இவர். சரியில்லை என்பதையும் அப்படியே. இவர். மேலும், தன்னுடைய கருத்துக்களைத் தொடர்ந்து மறுபரிசீலனை செய்து, செப்பனிட்டுக் கொண்டு, ஏற்கவேண்டியவற்றை ஏற்று, புறம் தள்ள வேண்டியவற்றைப் தள்ளி விடும் மன முதிர்ச்சியும், நேர்மையும், சமனமும் உடையவர். நல்ல நகைச்சுவை உணர்ச்சி கொண்டவரும் கூட!

இவர் ஒரு வறட்டு மொண்ணைப் பெண்ணியவாதி அல்லர். ஆண்கள் என்றாலே அயோக்கியர்கள் என்ற பொத்தாம்பொதுவான பார்வையுடையவரோ, அல்லது தொடர்ந்து யோனித்துவாரத்தையோ முலையையோ மட்டும் பெண்ணியத்தின் குறியீடுகளாக முன்னெடுத்து அயர்வான ஆண்களொழிப்பு வாதம் பேசுபவரோ அல்லர்.

இவருடைய வரதட்சிணை குறிந்த கருத்துக்களும், ஆங்கிலக் கல்வி, அறிவுஜீவிகள், ஊடகங்கள், பெண்ணிய வாதிகள், மனு நீதி, காப் பஞ்சாயத்துகள், கஷ்மீர் பிரச்சினை பற்றிய கருத்துக்களும் மிக ஆழமானவை. பொதுப்புத்தியின்மைக்கு எதிரானவை. நேர்மையும் துல்லியமும் மிக்கவை.

கல்லூரிப் பேராசிரியராகவும், பத்திரிக்கையாசிரியராகவும், ஆராய்ச்சியாளராகவும், களப்பணியாளராகவும், மனிதவுரிமைக்காரராகவும் இன்னும் பலவாகவும் இவருடைய ஆளுமை ஆழமும் வீச்சும் பெற்று விளங்குகிறது என்பது என் கருத்து.

1982 வாக்கில், இரு முறை இவருடன் சில மணி நேரங்கள் அளவளாவக் கிடைத்த சந்தர்ப்பங்களை நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் நினைவு கூர்கிறேன்.

-0-0-0-0-0-

என் பெருமதிப்புக்குரிய மார்க்ஸிஸ்ட் கட்சி உறுப்பினர் ஒருவர் (இம்மாதிரிப் பெரியவர்கள் இன்னமும் இந்தக் கட்சியில் இருக்கிறார்கள் என்பது எனக்கு மாளா ஆச்சரியம் அளிக்கும் விஷயம்!) எனக்கு இந்த மனுஷியை – 1979 வாக்கில் (என நினைக்கிறேன்) அறிமுகம் செய்தார்.

அப்போதிலிருந்து தொடங்கி, சமீபகாலம் வரை மது கிஷ்வர் அவர்கள் நடத்தி வந்த ‘மனுஷி’ இருமாதப் பத்திரிக்கையின் ஒன்றிரண்டு இதழ்களைத் தவிர மற்றவையைப் படித்திருக்கிறேன்.

கடந்த இருபது வருடங்களில், மனுஷியில் வந்துள்ள சில மிக முக்கியமான கட்டுரைகளை என்னுடைய மாணவச் சிறுவர்களுடனும் மாணவ இளைஞர்களுடனும், பல முறை விவாதிக்க உபயோகித்திருக்கிறேன்.

… ஆக, இவரைத் தொடர்ந்து (சுமார் 2010 வரை) படித்து வந்திருக்கும் மாணவனான எனக்கு, நேற்று அறிந்து கொண்ட இரண்டு விஷயங்கள், மிக ஆச்சரியகரமானதாக இருந்தன.

1. மது கிஷ்வர் அவர்களும் ஒரு ட்விட்டர் உறுப்பினர் – @madhukishwar; அவருடைய சில கீச்சல்களையும் படித்தேன். (ஆக ட்விட்டர் விவாதங்கள் அனைத்தையும் நான் குப்பை என, இனிமேல் ஒதுக்க மாட்டேன்; ஆனாலும், உலகளாவிய ஒரு கீச்சல்சாம்ராஜ்யத்துக்கு ஒரு கீச்சல் பதமென்பது சரியா?)

2. ராஷ்ட்ரீய ஸ்வயம்ஸேவக் சங்கத்தை – அதன் பரிவாரத்தை மிகக் காட்டத்துடன் பல முறை விமர்சித்திருக்கும் இவர், தற்போது நரேந்திர மோதி அவர்களின் மேல் செலுத்தப் படும் அபாண்டங்களை, அண்டப்புளுகுகளை, அசூயைத்தனங்களை எதிர்த்து, தொடர்ந்து  குரலெழுப்பிக் கொண்டிருக்கிறார் என்பதையும் தெரிந்து கொண்டேன்/

இரண்டும் மிக சந்தோஷமான விஷயங்கள். நமது நாட்டுக்கு நன்மையை விளைவிக்கக் கூடிய, நம் பரந்துபட்ட மக்களின் மீதான கரிசனத்தால் உந்தப் பட்ட விஷயங்கள்.

-0-0-0-0-0-

பலப்பல மாதங்களுக்குப் பிறகு, தொடர்ந்து ஏழெட்டு மணிநேரங்கள் செலவழித்து இணையத்தில் பல விஷயங்களைப் படிக்க / பார்க்க முடிந்தது இன்று. அதில் கீழ்க்கண்ட இரு யூட்யூப் வீடியோக்களும் அடக்கம். இவற்றில் மது கிஷ்வர் அவர்களை, அபினந்தன் செக்ரி எனும் இளைஞர் பேட்டி காண்கிறார்.

எனக்கு மங்கலாக, இந்த இளைஞரை அண்ணாசாஹேப் ஹஸாரே அவர்கள் குழுவில் பார்த்தது போல் நினைவு. அப்போதும் இவரிடம் ஒரு அரைகுறைத்தனம் இருந்தது, ஆனால் அது அனுபவமின்மையால் விளைந்தது என நினைத்தேன். ஆனால் வருந்தத்தக்க விதத்தில், இப்போதும் இருக்கிறது இந்த குணாதிசியக் கலவை: தன் கருத்துக்களைத் திணிக்கும் மனப்பான்மையும், புத்திசாலித்தனக் கேள்விகளாகக் கேட்டு பதில் பெறுவதில் அசட்டையும், நடுவில் உரையாடல்களைக் கத்தரித்தல்களும், தன் கருத்தைத் திருப்பித் திருப்பிச் சொல்லும் குறைபாடும், புரிதல்கள் இல்லாமையும், புகழ்பெற்ற பெயர்களை உதிர்ப்பதுவும், அரைகுறை அசட்டு நகைச்சுவையும் கலந்தடித்து – இதனுடன் ஒரு அகந்தைசார் உடல்மொழி வேறு — இந்த உரையாடல் எனக்கு, பல மாதங்கள் முன் ’நீயா நானா’ என ஒரு நிகழ்ச்சியைப் பார்த்த நினைவை எழுப்பியது; ஆனால் இந்த ஆளை, பொறுமையுடன் அவதானித்து, தன் தரப்பைத் தெளிவு படுத்தும் மது கிஷ்வர் அவர்கள், நம் மதிப்பின் இன்னும் உயர்கிறார்.

ஆக… கொஞ்சம் நேரம் செலவழித்து, உங்களால் இவற்றைப் பார்க்க முடியுமா?

பாகம் 1: http://www.youtube.com/watch?feature=player_embedded&v=YdvyqxRM8GI

பாகம் 2: http://www.youtube.com/watch?feature=player_embedded&v=phimDKSX8Ss

பின்குறிப்பு: நான் பத்து வருடங்களுக்கு மேலாக, குஜராத்தையும் மோதி அவர்களையும் கவனித்து வருபவன். ஆக, நரேந்திர மோதி அவர்கள் இந்தியாவின் பிரதமர் ஆகக் கூடுமானால், அது பலவிதங்களின் நமக்கு நன்மையாக இருக்கும் என்பது என் கருத்து. மது கிஷ்வர்  அவர்களும் இப்படிப்பட்ட எண்ணம் கொண்டுள்ளவர் என்பதில் நான் மிகுந்த சந்தோஷமும், என் கருத்து தவறுதலாக இருக்க வாய்ப்பு  மிகவும் குறைவு என்பதில் மேலதிக சந்தோஷமும் அடைகிறேன்.

இன்னொரு குறிப்பு: விடியல் பதிப்பகம், மது கிஷ்வர் அவர்களின் ‘தேசியமும் மதவாதமும்’ எனும் மொழிபெயர்க்கப்பட்ட கட்டுரையை, பல ஆண்டுகள் முன்பாக வெளியிட்டதாக நினைவு. தேடி, தூசி தட்டி – மீண்டும் படிக்கவேண்டும்.

தொடர்புடைய பதிவு:

ஏன், நம்மால் இதைக் கூடச் செய்ய முடியாதா?

6 Responses to “மது பூர்ணிமா கிஷ்வர் – சில குறிப்புகள்”


  1. இரண்டையும் பார்த்தேன். அருமையானவை. மிக்க நன்றி. மீடியாக்கள் தற்போதைய மோடி கமண்ட்டை எவ்வாறு டீல் செய்தது என்று பார்த்தாலே மது கிஷ்வர் அவர்களுடைய பார்வையின் ஆழத்தையும் அதில் உள்ள நியாமான ஆதங்கத்தையும் புரிந்து கொள்ள முடியும். காரில் செல்லும்போது ஒரு நாய்குட்டியின் மீது கார் ஏறி அது இறந்துவிட்டால் கூட நமக்கு வருத்தம் ஏற்படும் அப்படி இருக்கையில் பல மனித உயிர்கள் விசயத்தில் மிக வருத்தம் அடைவது இயல்பே (சொன்னது சொன்ன படி எழுத எனக்கு அவர் சொன்னதை அறியும் வாய்ப்பு இல்லை) என அவர் கூற அவர் முஸ்லீம்களை நாய்க்குட்டியுடன் ஒப்பிடுகிறார் என்று திசை திருப்பி விட்டது மீடியா. இறந்தவர்களில் கணிசமானபேர் இந்துக்கள் என்பதை மறந்து விட்டனர். மது கிஷ்வருடைய கருத்து அற்புதம். மிக்க நன்றி. ஆனால் நான் மோடி நிலையில் இருந்திருந்தால் குஜராத்தில் நடந்த உயிரழப்பு என்னை மிகவும் வருந்தச்செய்கிறது. என்னால் ஆனதனைத்தையும் செய்த பிறகும் இவ்வாறு நடந்துள்ளது என்னை மிகவும் வருத்துகிறது. ஆனால் நான் உள்நோக்கத்துடன் செயல்பட்டேன் என்பதில் சிறிதும் உண்மையில்லை என்று தெளிவாக ஏன் பேசமாட்டேன் என்கிறார் எனத்தெரியவில்லை. ஒருவேளை அவர் அவ்வாறு பேசினாலும் இருட்டடிப்பு செய்யப்படுகிறாரோ?

  2. ramasami Says:

    வணக்கம், வெங்கடாசலம் அவர்களே, உங்கள் கருத்துக்கு நன்றி.

    மோதி அவர்கள் ஹிந்தியில் சொன்ன இந்த நாய்க்குட்டி விஷயம் இங்கே இருக்கிறது. (1:44க்குப் பிறகு வருகிறது – இது ஒரு சின்ன 2.5 நிமிட வீடியோதான்).


    இதனைக் கேட்டு நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்.

    பின்னர் முடிந்தால் இந்த விடுதலை ஆட்கள் இதனைப் பற்றி எழுதியுள்ளதைப் படிக்கலாம்: (ஆனால் பாவம் இவர்கள் இந்தியில் எது வந்தாலும் அதனைப் புரிந்து கொள்ளாமல் எதிர்ப்பார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்)
    ” நரேந்திரமோடி ஒரு திருந்தாத ஜன்மம்! நாயோடு சிறுபான்மையினரை ஒப்பிட்டுக் கூறும் திமிர்!
    சனி, 13 ஜூலை 2013 16:59

    நரேந்திரமோடி ஒரு திருந்தாத ஜன்மம்! நான் ஒரு இந்துத் தேசியவாதிதான்! குஜராத்தில் நான் மேற்கொண்ட நடவடிக்கைகளும் சரியானதே! நாயோடு சிறுபான்மையினரை ஒப்பிட்டுக் கூறும் திமிர்! நரேந்திரமோடியின் மதவெறி கக்கும் நச்சுப் பேட்டி”
    http://viduthalai.in/headline/63921-narendra-modi.html

    மோதி, கோத்ரா ரயில் கொலைகள் இன்னபிற பற்றி நிறையவே பேசியிருக்கிறார், அறிக்கைகள் கொடுத்திருக்கிறார். ஆனால் ஊடகங்களுக்குக் தேவை உண்மையல்ல – அவருடைய ரத்தம் மட்டுமே தேவை.

    சொற்ப ஊடக ஆட்களே உண்மையைத் தேடிச் சொல்பவர்கள், மிகவும் வருத்தம் அளிக்கும் விஷயம் இது.

  3. A.SESHAGIRI Says:

    இவரை பற்றி சமீபத்தில்தான் தெரிந்து கொண்டேன் குறிப்பாக ‘உத்தரகாண்ட்’ மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குஜராத்தி மக்களை மோடி காப்பாற்ற மோதி எடுத்த முயற்சிகளை கொச்சையாக காங்கிரஸ் கட்சியும் ,ஊடகங்களும் சகட்டுமேனிக்கு விமர்சித்த போது “Neither a Rambo Act Nor a Publicity Gimmick” என்ற இவரின் கட்டுரையை படித்தேன்.(அதன் சுட்டியை கீழே கொடுத்துள்ளேன்)அதில் நடந்த உண்மைகளை தெளிவாக எழுதிருந்ததை படித்து மோதியின் மீது இருந்த மதிப்பு மேலும் கூடியது.இருந்தபோதிலும் இவரும் அவரால் நியமிக்கப்பட்ட ஆள்தானோ என்ற சந்தேகம் கொஞ்சம் இருந்தது.ஆனால் தங்களின் இந்த கட்டுரையை படித்த பின் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி

    (http://www.manushi.in/articles.php?articleId=1711)

  4. சான்றோன் Says:

    விடுதலை வகையறாக்கள் ஒரு மனிதர்கள் என்று அவர்கள் உளறலுக்கு லின்க் வேறு கொடுத்திருக்கிறீர்களே?…காமராஜரை ஈ.வெ.ரா ” பச்சைத்தமிழர் ” என்று குறிப்பிட்டதை மட்டும் திரும்ப திரும்ப ஜல்லியடிப்பவர்கள், அவர் காமராஜரை மிக மோசமாக விமர்சித்ததை திட்டமிட்டு மறைப்பாரகள்……

    மோடிக்கு எதிரான துவேஷம்தான் இணையம் முழுக்க கொட்டிக்கிடக்கிறதே? இதில் தங்கள் பங்களிப்பு வேறா?


  5. மிக்க நன்றி. ஆனால் எனக்கு இந்தி தெரியாது. ஆகையால் வரிக்கு வரி இந்தி மொழிபெயர்ப்பைத் தந்து உதவ இயலுமா?

    பல வருடங்களாக ஏங்கிக்கொண்டிருக்கிறேன். மத்தியிலும் மாநிலத்திலும் நல்ல ஆட்சிகள் மலராதாவென. தற்போதைய அவதாரத்தில் ஜெஜெ நன்றாகவே ஆட்சிசெய்கிறார். நரேந்திரமோதியும் மத்தியில் வந்துவிட்டால் இத்தனை வருடங்கள் விட்டவற்றையெல்லாம் பிடித்துவிடலாம்.


  6. Recently Madhu visited Bangalore & gave an important ppt, which i would like to share here for others.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s