தமிழ் ஆவண மாநாடு (2013)

January 31, 2013

பத்மனாப ஐயர், சசீவன் கணேசநாதன், கோபினாத்  தில்லைநாதன், சேரன் சிவானந்தமூர்த்தி ஆகியோரால் தொடங்கப் பெற்று, அவர்களை அறங்காவலர்களாகக் கொண்டு, ஒரு சுயஅர்ப்பணிப்பு மிகுந்த குழுவினருடன், கடந்த எட்டு ஆண்டுகளாக, இலங்கையின் கொழும்புவிலிருந்து, பல தளங்களில், பல தடைகளையும் இன்னல்களையும் மீறி, மகத்தான பணியாற்றி வருகிறது நூலகம் அறக்கட்டளை (நூலகம் ஃபௌன்டேஷன்).

நம்மைப் போன்ற தமிழகம்சார்  நபும்சகத் தமிழர்கள், நம் தமிழக அரசு நிறுவனங்கள், தமிழர்(!) இயக்கங்கள்(!!), இலங்கைத் தமிழரைப் பற்றிக் கவலைப் படுவதாகக் காட்டிக் கொண்டு பசப்பும் நம் அரசியல்/பண்பாட்டு/திராவிட அயோக்கியர்கள் – இவர்கள் எல்லாம் செய்யாததை, செய்யக் கூட நினையாததை, நூலகம் தொடர்ந்து செய்வது – நமக்கு மகிழ்ச்சியையும் துக்கத்தையும் ஒருசேர அளிக்கும் விஷயம்.

இலங்கைசார் தமிழ் மக்களின் பண்பாட்டை, அதன் கூறுகளை ஆவணப் படுத்தி, அவற்றைத் தொகுத்துப் பகுத்து (இணையம் மூலமும்) அடுத்த தலைமுறைகளுக்கும் ஆர்வலர்களுக்கும் சேர்ப்பதை முழு மூச்சாகச் சோர்வில்லாமல் செய்து வருகிறது நூலகம்.  இதன் மின்னூலகத்தில் பலவிதமான பகுப்புகளில் எண்ணிறந்த நூல்களும், சஞ்சிகைகளும், மற்ற பிரசூரங்களும் உள்ளன. சிறப்புச் சேகரங்களாக – மலையக, இஸ்லாமிய, தலித், பெண்கள் தொகுப்புகளும் உள்ளன.

நூலகம், தன்னுடைய எட்டாவது ஆண்டு நிறைவினை ’தமிழ் ஆவண மாநாடு’ என்பதாகக் கொண்டாட இருக்கிறது – ஏப்ரல் 27, 28 தேதிகளில். இதன் மேலதிக விவரங்கள்.

480px-TDC2013Logo_for_valaivaasal
கீற்று தளத்தில் வந்துள்ள அறிவிப்பு: தமிழ் ஆவண மாநாடு 2013 – ஆய்வுக் கட்டுரைகளுக்கான அழைப்பு

முடிந்தவர்கள் அவசியம் பங்கு பெற வேண்டும் – கருத்துகளால், கரங்களால், கார்டுகளால் அவசியம் போஷகம் செய்யப் பட வேண்டியது இந்த நூலகம் . (அதன் மாநாடும் கூடத்தான்)

இம்மாநாடு குறிக்கோள்களை அடைந்து, நூலகம் மேன்மேலும் பொலிந்து சிறக்க வாழ்த்துக்கள்!

5 Responses to “தமிழ் ஆவண மாநாடு (2013)”


 1. வணக்கம். நல்ல பதிவுதான். ஆனால் கீழ்க்காணும்படியான எறிவுகளால் பயன் இல்லை, தேவையில்லாத பகைமை உணர்வுகள் வளர்ப்பதைத் தவிர!

  //நம்மைப் போன்ற தமிழகம்சார் நபும்சகத் தமிழர்கள், நம் தமிழக அரசு நிறுவனங்கள், தமிழர்(!) இயக்கங்கள்(!!), இலங்கைத் தமிழரைப் பற்றிக் கவலைப் படுவதாகக் காட்டிக் கொண்டு பசப்பும் நம் அரசியல்/பண்பாட்டு/திராவிட அயோக்கியர்கள் – இவர்கள் எல்லாம் செய்யாததை, செய்யக் கூட நினையாததை, நூலகம் தொடர்ந்து செய்வது – நமக்கு மகிழ்ச்சியையும் துக்கத்தையும் ஒருசேர அளிக்கும் விஷயம்.//

  “அரசுகள் செய்திருக்க வேண்டும், ஆனால் தமிழ் இலக்கியங்களைக் காக்க அவர்கள் செய்ய முன்வராத, செய்யாதவற்றை இந்த ஆர்வலர்கள் செய்தார்கள், செய்து வருகின்றார்கள்” என்பது போன்று கூறினாலே போதுமே. தமிழ்நாட்டிலோ, இந்தியாவின் பிற இடங்களிலோ, மலேசியாவில், சிங்கப்பூரில் படைத்த, படைக்கப்படுகின்ற தமிழ் இலக்கியங்களையோதான் தமிழக அரசோ, ஏன் இலங்கை அரசோ இப்படித் தொகுக்கின்றனவா? இல்லையே. ஆகவே செய்யாததைச் சொன்னாலே போதுமே, ஏன் தேவையில்லாத பகைமை வளர்க்கும், பாலங்கள் ஏற்படக்கூடமுடியாத உடைப்புகளி முன் தாங்கி வர வேண்டும். சினம் வேண்டும் தான், ஆனால் நம்மையே கொல்லாமல் உரங்கொண்டு எழ உதவினால் நல்லதே. இவை என் தனிமாந்தக் கருத்துகள்தாம்.

 2. Anonymous Says:

  போரினால் ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு நூலக எரிப்பு. மீண்டும் நிகழாமல் காக்க வேண்டும். “தலித்” என்றும் தலித் இலக்கியம் என்றும் வகைப்படுத்துவது புரியவில்லை. ” நல்லோர்கள் எங்கு பிறந்தாலுமென்” புது வகையான காம்ளெக்ஸ் போலுள்ளது.

 3. T.Kumaresan Says:

  \\ பத்மனாப ஐயர், சசீவன் கணேசநாதன், கோபினாத் தில்லைநாதன், சேரன் சிவானந்தமூர்த்தி ஆகியோரால் தொடங்கப் பெற்று \\

  வரலாற்றைத் தெரிந்துகொண்டு எழுதுங்கள், நூலகம் திட்டம் கோபிநாத், மயூரன் என்னும் இருவரால் தொடங்கப்பட்டது, ஆரம்ப நிலையில் ஈழநாதனின் உதவிகள்தான் இத்திட்டத்தை உத்வேகம் பெறச் செய்தன. அவருடைய தொடர்பினால் பத்மநாப ஐயர் நூலகத்திற்கு உதவத் தொடங்கினார். தொடக்க நிலையில் சசீவன் கணேசநாதன், சேரன் சிவானந்தமூர்த்தி இவர்கள் இதில் இருக்கவில்லை. புத்தகம் பேசுது இதழில் வெளியான சசீவன் கணேசநாதன் பேட்டியை வைத்துக்கொண்டு இதனை நீங்கள் எழுதியுள்ளீர்கள் என்று நினைக்கிறேன். உண்மையில் அந்தப்பேட்டியில் சசீவன் கணேசநாதன் தனக்கு விளம்பரம் தேடிக்கொண்டார் – புத்தகம் பேசுது இதழும் நூலகம் திட்டம் பற்றி சரியான புரிதல்களைக் கொண்டிருக்கவில்லை.

  2006 தை மாதத்தில் – நூலகம் திட்டம் நிறுவனமயமாக்கப்படாத திட்டமாக இருந்த காலத்தில் எனது கொழும்புப் பயணத்தில் கோபிநாத், மயூரன் ஆகிய இருவரும்தான் செயற்பட்டுக்கொண்டிருந்தார்கள் – அவர்களையே நான் சந்தித்தேன்.

  • ramasami Says:

   அன்புள்ள குமரேசன்,

   உங்கள் கருத்துக்களுக்கு, தகவல்களுக்கு நன்றி.

   1. நான், நீங்கள் குறிப்பிட்ட எவரையும் பார்த்ததில்லை, அவர்களுடன் அறிமுகமும் இல்லை.

   2. ‘புத்தகம் பேசுது’ எனும் இதழை நான் இதுவரை கேள்விப்பட்டதில்லை. ஆனால் ‘புதிய புத்தகம் பேசுது’ எனும் இதழை (எனக்குத் தெரிந்து இது சென்னையில் இருந்து வெளிவந்தது – இப்போது வருகிறதா என்று தெர்யவில்லை) சிலதடவை வாசித்திருக்கிறேன். நான் என் விவரங்களை இந்த இதழ்களில் இருந்து பெறவில்லை. திமுக அதிமுக போல ‘புத்தகம் பேசுது’ ‘புதிய புத்தகம் பேசுது’ இதழ்கள் வந்தனவோ என்னவோ!

   3. 2007 வாக்கில் ஒரு இலங்கை நண்பர் இந்தத் திட்டத்தைப் பற்றிச் சொன்னார். எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. அவர் சொன்ன விவரங்களைத்தான் கொடுத்திருக்கிறேன். ஈழநாதன், பத்மனாப ஐயர் போன்றோரைப் பற்றிச் சொன்னார் என நினைவில் இருக்கிறது. அதற்கு முந்தைய, பின்னைய திட்டமிடுதல் / அரசியல்/செயல்முறை விவகாரங்கள் பற்றி எனக்குத் தெரியாது. நான் எழுதியது என் முன் அறிமுகத்தையும், நூலகம் தளத்தையும் – முக்கியமாக, அதன் செயல்பாட்டிற்கான நன்கொடைகள் பற்றிய விவரத்தையும் கவனித்து – இத்தளத்தின் சேவையைப் பற்றி எழுதப்பட்டதே.

   4.நான் சொல்ல வந்தது – சில தன்னார்வத்தினால், பொறுப்புணர்வினால் உந்தப்பட்ட தனி நபர்கள், எவ்வளவு ஆழத்துடனும் வீச்சுடனும் செயல்பட முடியும் என்பது பற்றி.பின்புலம் எப்படியிருந்தாலும், நமக்கு ஒவ்வாதிருந்தாலும், இது ஒரு நல்ல விஷயம்தானே.

   5. நீங்கள் சொல்வது சரியாகக் கூட இருக்கலாம், எனக்குத் தெரியாது – தெரிந்து கொள்ளும் ஆவலும் இல்லை. ஆனால், உங்களுக்கு இதனைப் பற்றி தேவைப் பட்டவர்கள் அறிய வேண்டுமென்ற கருத்து இருந்தால், நீங்கள் உங்கள் தளத்தில் எழுதலாமே?

   நன்றி.

 4. T.Kumaresan Says:

  வணக்கம்,

  “புத்தகம் பேசுது” என்று பொதுவாகச் சொல்லப்படும்போது சுட்டப்படுவது “புதிய புத்தகம் பேசுது” என்பதைத்தான். http://www.noolahamfoundation.org/blog/?p=110 இதில் அக்குறித்த நேர்காணல் உள்ளது.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s