அபு ல்-வலித் மொஹம்மத் பின் அஹ்மத் பின் ரஷித் எனும் அவெர்ரீஸ்
January 28, 2013
ஏதோ ஒன்றிரண்டு கொர்ரான் செய்யுட்களை மட்டும் படித்து விட்டு அதனையும் புரிந்து கொள்ளாமல் இருக்கும் அரைகுறைகள் தான் இஸ்லாமின் பெயரால் அட்டூழியம் செய்வார்கள்.
— இப்ன் ரஷித் (அவெர்ரீஸ் – Averroës) (1126-1198)
என் இளமைக்கால அதிமனிதர்களில் (’ஹீரோ’க்களின் தமிழ்ப்’படுத்தல்’ தான், பயப்படாதீர்கள்) ஒருவர் இந்த இப்ன் ரஷித் – அவருடைய சமகால ஐரோப்பியர்களால் லத்தீன்மயமாக்கப் பட்டு அவெர்ரீஸ் என அழைக்கப் பட்டவர்.
இவர், அக்கால அன்டலுஸ்யாவின் (இது ஸ்பெய்னின் தெற்குப்பகுதி) இஸ்லாமிய அரசாங்கத்திற்கு / மன்னர்களுக்கு முதலமைச்சராகவும், ராஜதந்திரியாகவும் பணியாற்றினார். (எனக்குப் பல தளங்களில் நம் சாணக்கியனை நினைவு படுத்துபவர் இவர்)
அடிப்படை அறங்கள், நடைமுறை அரசியல், நீதி பரிபாலனம், இயற்பியல், வானசாஸ்திரம், கணிதவியல், மனிதக்கூறுவியல், மருத்துவம், தத்துவம், ஆன்மிகம் போல பலவிதமான தளங்களில் ஆழமாகவும் விரிவாகவும் பேசியும் எழுதியும் வந்தார்.
இவர் போல, பலர் அப்போதும் இருந்தனர், இப்போதும் இருக்கின்றனர் – வஹ்ஹாபியர்கள் போன்ற அதிவன்முறைவாதிகளுக்கு இது கசப்பாகத்தான் இருக்கும் என்றாலும்.
-0-0-0-0-0-
வரலாற்றுக் காலரீதியாக (ஒரு சில எடுத்துக்காட்டுகள் மூலம் மட்டுமே) ஒப்பு நோக்கினால், ஏறக்குறைய இப்ன் ரஷித் அவர்கள் வாழ்ந்த சமயம்:
- நம் இந்தியாவில், சோழர்கள் வீரநாராயணபுரம் ஏரி (வீராணம்!) போன்ற பிரும்மாண்டமான கட்டுமானங்களில், சமுதாய, சுபிட்ச, சமரசப் படுத்தலில், கலையாக்க உச்சங்களில் ஈடுபட்டிருந்தனர்.
- சாளுக்கியர்களும், சந்தெலர்களும் (கஜுராஹோ!) பலவிதமான படைப்புக் / கட்டுமான வேலைகளில் ஈடுபட்டிருந்தனர்.
- கஸினியின் மொஹம்மத் திரும்பத் திரும்பப் படையெடித்து வடமேற்கு இந்தியாவைக் கொள்ளையடித்துக் கொண்டிருந்தார்- இந்த மொஹம்மதை நிறுத்த சந்தெலர்களால் (குஜ்ஜர்களில் ஒரு பிரிவினர் இவர்கள்) முடிந்தது.
- கோரின் மொஹம்மத், ப்ரிதிவிராஜ் சௌஹான் இருவருடையே சண்டைகள், துரோகங்கள்.
- அல் பெருனி வந்து அரைகுறை நாட்குறிப்புகளை எழுதிக் கொண்டிருந்தார். (அவசியம் படிக்க வேண்டிய ’நெஞ்சுக்கு நீதி’ போன்ற, வெட்டிக் கற்பனையாக எழுதப் பட்ட நகைச்சுவைக் குறிப்புகள் இவை)
- இந்துத் தத்துவங்கள் – ஆழமும் வீச்சும் பெற்று, பல உரைகளும் பார்வைகளும் பெறப் பெற்றன. அறிவியல்-கணித உலகில், பாஸ்கராசார்யா, நேமிச்சந்த்ர சித்தாந்த சக்ரவதி, ஷ்ரீபதி மிஷ்ரா போன்றோர் அழகான கணிதமுறைகளை உருவாக்கிக் கொண்டிருந்தனர்.
- வட அமெரிக்காவில் அப்போது மிஸ்ஸிஸிபி ஆற்றின் கரையில் (இப்போதைய செய்ன்ட் லூயிஸ் பக்கத்தில்) சஹோகியா போன்ற பெரும் நகர்சார் பண்பாடுகள் வளர்ந்திருந்தன – ஐரோப்பிய பாழடைப்பாளர்கள், அகிறித்துவ மிஷனரிகள் வருவதற்கு மிகப்பல நூற்றாண்டுகள் முன்பிலிருந்தே!
- தென் அமெரிக்காவில் சிமூர்கள் மகத்தான கட்டுமானங்களில், அரசமைப்புகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
- சீனாவில், இந்தியாவில் கப்பல் கட்டும் தொழிலிலும், வணிகங்களிலும், தொழிற்சாலைகளிலும் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். சமூக சமரசங்களால், வருமான உபரிகள் சேகரம் செய்யப்பட்டு முதலீடுகளாகி, கட்டுமானங்களும், கலைகளும் வளர்வதற்கான சூழல் இருந்தது.
- ஆஃப்ரிக கானாவில் சோனின்கேகள் நகர்சார், தொழிற்சாலை சார் நாகரீகத்தின் உச்சியில் ( நம் சோழர்களைப் போல) இருந்தனர். மூலதனம் குவிக்கப் பட்டுக் கொண்டே இருந்தது. எத்தியோப்பியாவிலும், எகிப்திலும், ஸோமாலியாவிலும், மொராக்கோவிலும் நிலையான அரசுகள் இருந்தன.
- கிறிஸ்தவவுலக போப் கட்டுமானங்கள், ரோம் – ஊழலிலும், பங்காளிச் சண்டைகளிலும், குடுமிப்பிடிகளிலும், வெட்டி அரசியலிலும் கொலைகளிலும் ஈடு பட்டுக் கொண்டிருந்தனர். ஐரோப்பா கொஞ்சம் கொஞ்சமாக, பண்பாடுகள் பேணப்படாமல், மதவெறியர்களாலும், வெற்றுகுண்டர்களாலும் இருட்டுக்குள் நகர்ந்து கொண்டிருந்தது. (ஆனால் ஐரோப்பியர்களாலும், மீண்டு வரமுடிந்தது, சில நூற்றாண்டுகளுக்கு அப்பால் – உபயம்: தென்அமெரிக்க, நடுஅமெரிக்க, ஆஃப்ரிக, இந்திய, சீன பிரதேசங்களிலிருந்து கால ரீதியாக, இவர்கள் அடித்த. தொடர்ந்த கொள்ளைகள்)
(மேலே கூறப்பட்ட அனைத்திற்கும் சிறு சிறு விதி விலக்குகள் இருந்தன – ஆனால், நான் சொல்ல வருவது ஒரு பொதுமையான போக்கையே)
-0-0-0-0-0-
இப்ன் ரஷித் அவர்களை நான் இப்போது நினைவு கூர்வது ஏனென்றால் – அவர் அக்காலத்தில் அரைகுறை இஸ்லாமிய அவதானிப்புகளின், மேல்மாடி காலியான உணர்ச்சிக்குவியல்காரர்களின், ஜிஹாத் என்றால் என்ன எனப் புரிந்து கொள்ளாமல் வாயோர நுரை பொங்கிக் கொண்டிருந்த வன்முறையாளர்களின் போக்கை எதிர் கொண்டார்.
மேலும் இதைவிட முக்கியமாக, அவரும் அவரைச் சார்ந்திருந்தவர்களும் – அரைகுறைகளின் வன்மத்தை, சர்வாதிகாரத்தை, பல முனைகளில், முறைகளில் எதிர்கொண்டனர், முறியடித்தனர்.
மூர்கள், வெறும் கட்டிடக் கலை வல்லுனர்கள் மட்டுமல்ல!
-0-0-0-0-0-
இதனைப் பற்றிப் படிக்கப் படிக்க, இப்ன் ரஷித் போன்றவர்களைப் பற்றி (விஷயம் தெரிந்தவர்களுடன்) பேசப் பேச – எனக்கு, எதிர்காலத்தைப் பற்றி நம்பிக்கைதான் ஏற்படுகிறது. உலக வரலாற்றில், இஸ்லாமியத் தீவிரவாதிகள் அ-இஸ்லாமிய வன்முறைவாதிகள் பல கட்டங்களில் பின்னடைவு படுத்தப் பட்டிருக்கின்றனர் – எல்லா மதங்களிலும் அப்படித்தான்.
இனிமேலும் அப்படித்தான் என்பதென் யூகம். முரணியக்கம் நம்மை மனிதச் சிந்தனையின், செயலூக்கங்களின் அடுத்த படிகளுக்கு இட்டுச் செல்லும், விடுதலை செய்யும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
-0-0-0-0-0-
நேரம் கிடைக்கும் போது, இன்னமும் இரண்டுமூன்று பதிவுகளில் நம் இப்ன் ரஷித் அவர்களைப் பற்றி எழுத வேண்டும்.
பின்குறிப்பு 1: அரைகுறைகளின் கையில் இருந்து, நம்மிருக்கும் ஒரே ஒரு உலகத்தின் சொத்துக்களில் ஒன்றான இஸ்லாமை மீட்பது எப்படி? (ஆட்கள், உழைப்பூக்கம் மிகுந்த இளைஞர்கள் இன்னமும் இருக்கத்தான் இருக்கிறார்கள்; நம் பங்கிற்கு, நாம் அவர்களைக் கண்டுகொண்டு போஷகம் செய்யவேண்டும்)
பின்குறிப்பு 2: அடுத்த சில வருடங்களில் அரபு மொழி கற்றுக் கொள்ள வேண்டும்.(செய்வேனா?)
January 29, 2013 at 05:56
இரண்டு தினங்கள் கோவைக்குச் சென்று வந்தேன். அங்கே சூல்தான்பேட்டை என்ற ஊரில் ஒரு முன்னாள் பள்ளி ஆசிரியர் திருக்குறள் ஆர்வலர் திரு முத்துக்குமரன் அவர்கள் என்னுடைய திருக்குறள் புதிர்களும் தீர்வுகளும் – ஓர் உளவியல் பார்வை என்ற புத்தகத்திற்கு ஒரு திறனாய்வு அரங்கத்திற்கு ஏற்பாடு செய்து இருந்தார்.நாள்முழுக்க ஆய்வு நடந்தது.பத்துக்கும் மேற்பட்ட திருக்குறள்
ஆர்வலர்களும் அறிஞர்களும் பங்குபெற்றனர்.
கண்ணோட்டம் என்ற சொல் எம்பதி என்ற சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ற என்னுடைய ‘கண்டுபிடிப்பை’ அரங்கம் ஏற்கவில்லை. எழுத்துப்பழைகளும் பிற பிழைகளும் சுட்டிக் காட்டப் பட்டன.முக்கியமாக வள்ளுவரின் அரண் அதிகாரத்தில் அர்த்தசாஸ்த்திரத்தின் பாதிப்பு இருக்குமோ என நான் எழுப்பி இருந்த கேள்வி கேள்விக்குள்ளாக்கப்பட்டது. சாணக்கியர் காலம் திருவள்ளுவர் காலத்திற்குப் பிந்தியது என்று ஐகேஎஸ் என்று இந்தப்பகுதியில் அறியப்பட்டுள்ள ஆன்மிக எழுத்தாளர் நூலாசிரியர் முனைவர் கி.சுபிரமணியன் கூறினார். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த முத்துக்குமரன் அவர்கள் நாற்பதாண்டுகளாக திருக்குறள் மன்றம் நடத்தி வருகிறார். பள்ளிகளில் மாணவர்களுக்குத் திருக்குறள் வகுப்பு நடத்துவது மன்றத்தின் முக்கியமான பணி. அவர் திருக்குறளை மாணவர்களிடையே பரப்புவதற்கு ஆவன செய்வதில் தீவிரமாக ஈடுபடும் வகையில் எதிர்காலத் திட்டங்களைத்தீட்டிவருகிறார். நிற்க.
தங்களது பரந்து பட்ட அறிவு வியக்க வைக்கிறது. மூன்னர் ஒரு சமயம் மானவர்களுக்கு சரித்திரம் கற்பித்தலில் நாடுகள் வழி இல்லாமல் சமகாலத்தில் உலகசரித்திரமாக கற்பிக்கவேண்டும் என்று நான் சிறிது காலம் பேசிவந்தேன். நீங்கள் சொல்கின்ற பாணியில் கால வரிசையில் செய்திகளைக்காட்டும் குறும்படங்கள் தயாரித்து மாணவர்களுக்கு கற்பித்தால் மிக்க பலன் உண்டாகும். சரித்திரம் எதிர்காலத்தில் எப்படி வாழவேண்டும் என்று கூறும் இயலாகக் காண வேண்டும்.அப்போதுதான் எதிர்காலத்தை நிகழ்காலத்திலேயே வாழத் துடிக்கும் இன்றைய சமுதாயத்திற்கு விடிவுகாலம் கிட்டும்.
December 26, 2018 at 09:54
[…] […]
February 7, 2019 at 20:59
[…] அவிஸென்னாக்களையும் இப்ன்-அல் ரஷித்களையுமே விடுங்கள்… ஒருசில […]
August 13, 2021 at 16:15
[…] […]