காந்தி எனும் சக்கிலியர்
February 8, 2013
… அல்லது காந்தி எனும் செருப்புத் தைப்பவர்…
“பஹுருபி காந்தி” (காந்தியின் பன்முகங்கள் அல்லது பல வடிவங்கள்) என்கிற அனு பண்டோபாத்யாய் அவர்களால் எழுதப் பட்டு, 1964ல் வெளியிடப் பட்ட புத்தகத்தின் ஆறாம் அத்தியாயம்: காப்ளர் (cobbler).
-0-0-0-0-0-
காந்திக்கு அப்போது வயது 63. வல்லபாய் படேல் அவர்களுடன் யெரவாடா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
வல்லபாய்க்கு புதிய செருப்புகள் தேவைப்பட்டன. ஆனால், சிறையில் அந்த வருடம், நல்ல செருப்புத் தைப்பவர்கள் இல்லை.
காந்தி சொன்னார்:
“எனக்கு கொஞ்சம் நல்ல தோல் கிடைத்தால், நான் உங்களுக்குச் செருப்புத் தைத்துக் கொடுக்க முடியும். எனக்கு, நான் நெடு நாட்கள் முன்பு கற்ற செருப்புத் தைக்கும் தொழில் நினைவில் இருக்கிறதா என்று பார்க்கிறேன். நான் ஒரு திறமைவாய்ந்த சக்கிலியனாக ஒரு காலத்தில் இருந்திருக்கிறேன். ஸோடேபூரிலுள்ள காதி ப்ரதிஸ்தான் அருங்காட்சியகத்தில் என் கைவேலையைப் பார்க்கலாம் – அந்தச் செருப்புகளை நான் ஒருவருக்குச் செய்து அனுப்பியிருந்தேன். ஆனால் அவர், தான் அவற்றைக் காலில் போட்டுக்கொள்ள முடியாதென்றும், தன் தலைக்கு ஆபரணமாகத் தான் வைத்துக் கொள்ள முடியுமென்று சொன்னார். நான் தல்ஸ்தோய் பண்ணையில், அம்மாதிரிச் செருப்புகளை நிறையச் தைத்திருந்தேன்.”
1911-ல், காந்தி தன் மருமகனுக்கு எழுதினார்:
தற்சமயம் நான் செருப்புத் தைப்பதில் ஆவலுள்ளவனாக இருக்கிறேன். எனக்கு இந்த வேலை மிகவும் பிடித்திருக்கிறது. சுமார் பதினைந்து காலணிகளைச் செய்திருக்கிறேன் இதுவரை. உனக்கு எப்போது புதிய செருப்புகள் தேவைப் படுகிறதோ, அப்போது தயவுசெய்து உன் பாதத்தின் அளவை எனக்கு அனுப்பு.
காந்தி, தென் ஆஃப்ரிகாவில் இருந்தபோது, அவருடைய ஆப்த நண்பரான கால்லென்பாக்ஹ்-இடமிருந்து இந்தத் தொழிலைக் கற்றுக் கொண்டார். பின் இந்தக் கைத்தொழிலினைக் கற்றுத் தேர்ந்து, காலணி செய்ய மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுத்தார் – அவர்களும், காலணி தயாரித்தலில் தங்கள் ஆசிரியரை விடச் சிறந்து விளங்கினர்.
அவர்கள் மூலம், பண்ணையில் தயாரான ஷூக்கள் / காலணிகள் வெளியே விற்கப்பட்டன.
மேலும், அக்காலத்தில், காந்தி – கால்சராயுடன் செருப்புப் போடும் ஒரு நவ நாகரீக புதுப்பாணி முறையையே (fashion) உருவாக்கினார். வெப்ப மண்டல நாடுகளில், அவர் தைத்தது போன்ற காலணிகள், காலை முழுவதும் மூடிய ஷூக்களை விட வசதியாக இருந்தன – அதே சமயம் அவற்றை குளிர்காலத்தில் காலுறைகளுடனும் அணியவும் முடிந்தது.
ஒரு சமயம் சர்தார் படேல், ஜவஹர்லால், ஒரு குழுவுடன் காந்தியுடைய ஆலோசனையைப் பெறுவதற்காக சேவாக்ராம் சென்றிருந்தனர்.
ஆனால் காந்தியோ அவருடைய செருப்புத்தைக்கும் வகுப்பு மாணவர்களுக்குப் பாடம் எடுப்பதில் மும்முரமாக இருந்தார். “அந்தப் பட்டைகள் இங்கு இருக்க வேண்டும். இந்தத் தையல்கள், காலணியில் மிகுந்த அழுத்தம் ஏற்படும் இந்த இடத்தில் இருக்க வேண்டும்” என மாணவர்களின் தவறுகளைத் திருத்திக் கொண்டிருந்தார்.
வந்திருந்த குழுவில் இருந்த தலைவர்களில் ஒருவர், “நம்முடன் காந்தி செலவழிக்க வேண்டிய, முக்கியமான இந்த நேரத்தில், இந்த மாணவர்கள் இப்படியா செய்வார்கள்?” எனக் குறைப் பட்டார்.
காந்தி சொன்னார், “அவர்கள் பாடம் கற்றுக் கொள்வதைப் பற்றி, நீங்கள் குறைப்பட்டு, புகார் செய்ய வேண்டாம்; அதற்குப் பதிலாக, வேண்டுமென்றால் நீங்களும், காலணியை எப்படி நன்றாகத் தைக்கிறார்கள் எனப் புரிந்து / கற்றுக் கொள்ளலாமே.”
-0-0-0-0-
இன்னொரு சமயம், காந்தியும், அவருடைய சக தொழிலாளர்களும், பக்கத்திலிருந்த ஒரு கிராமத்தில், ஒரு கத்தியை மட்டுமே உபயோகப்படுத்தி, ஒரு இறந்த எருதின் தோலை. வெகு சுத்தமாக அதனைச் சேதப்படுத்திவிடாமல் உரிப்பதன் திறமை மிக்க செயல்முறையை முழுவதும் பார்த்தார்கள்.
படித்த அறுவை சிகிச்சை நிபுணர்களை கூட, கிராமத்து தோல் பதனிடுபவரை (tanner) விட அழகாக இந்தத் தோலுரிப்பைச் செய்ய முடியாது என அந்தக் கிராமத்தினர் அவரிடம் சொன்னார்கள்.
காந்திக்கு, அந்தத் துப்புரவானச் செயல்முறை மிகவும் பிடித்தது.
காந்தி சொன்னார்: ”அறுவை மருத்துவம் கற்றுக் கொள்ளும் மாணவர்கள் மதிக்கப் படுகிறார்கள் ஆனால், தோட்டி, சக்கிலியர்களின் தொழில்கள் வெறுத்து ஒதுக்கப் படுகின்றன. அவர்கள் ஹிந்துக்களுக்குத் தீண்டத் தகாதவர்கள்!”
-0-0-0-0-
காந்தி செருப்புத் தைப்பதை மட்டும் கற்றுக்கொண்டு திருப்தியடையவில்லை – அவர், தான் ஒரு சிறந்த தோல் பதனிடுபவராகவும் ஆகவேண்டுமென்றும் விரும்பினார்.
செயலூக்கமும் ஆர்வமும் நிரம்பிய அவரால் வேறு என்னதான் செய்திருக்க முடியும்?
இவ்வுலகத்தில் பலர் தோல் காலணிகளை அணிகின்றனர் – அவற்றிற்கான தோல், ஆரோக்கியமான பசுக்கள், எருதுகள், ஆடுகள் போன்றவற்றைக் கொன்றுதான் பெறப் படுகிறது. ஆனால் காந்தியோ ஒரு அஹிம்ஸாவாதி. அவர் எப்படியென்றால், சாகும் தருவாயில் இருந்த மனைவிக்கும், உடல் நலமில்லாமல் இருந்த மகனுக்கும் கூட மாட்டிறைச்சிச் சூப்பையோ, முட்டைகளையோ கொடுக்கப் பிரியப்படாதவர். அவரா மக்கள் பளபளவென்று ஷூ அணிவதற்காக, மிருகங்களைக் கொல்ல ஒப்புக் கொள்வார்?
ஆனாலும், அவருக்கு தோல் தேவைப்பட்டது.
ஆக, அவர் இயற்கையாக இறந்த விலங்குகளின் தோற்களை மட்டுமே பயன்படுத்த முடிவு செய்தார். இம்மாதிரி தோற்களில் இருந்து தயாரிக்கப்படும் செருப்புக்களும், காலணிகளும் ’அஹிம்ஸக்’ காலணிகள் என அறியப்பட்டன.
காந்தி [அப்போதைய கணக்கில்] ஒன்பது கோடி ரூபாய் மதிப்புள்ள கச்சாத் தோல் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகிறது எனக் கணக்கிட்டார். இதே தோல், இங்கிலாந்துத் தொழிற்சாலைகளில் பதன்படுத்தப்பட்டு, பின்னர் பல்வேறு தோற்பொருட்களாகப் பட்டு, திரும்பப் பலகோடிக் கணக்கில் விற்பனைக்காக இந்தியாவுக்கு இறக்குமதியாக வருகிறது என்பதையும் புரிந்து கொண்டார்.
இது பொருளாதார ரீதியான ஒரு மகாநஷ்டம், பண இழப்பு என்பது மட்டுமல்லாமல், நம்மால் நமது மூளையையும் திறனையும் உபயோகப்படுத்தி – கச்சாத்தோலை, தேர்ந்த கைவினப் பொருட்களாக மாற்றும் / உருவாக்கும் வாய்ப்பற்றுப் போகும் நிலையும் ஏற்படுகிறது என்பதையும் அறிந்து கொண்டார்.
இந்தச் சூழலில், நூல் நூற்பவர்கள், துணி நெய்பவர்களைப் போலவே – தோல் பதனிடுபவர்களும், சக்கிலியர்களும் நைந்து தொய்ந்து போகும் நிலை ஏற்படுவதையும் கண்டார்.
அவர், தார்மீகக் கோபத்தில், எப்போதிலிருந்து இந்தத் தோல்பதனிடும் தொழில், நம் நாட்டில் ஒரு வெறுக்கத்தக்க தொழிலானது எனக் கேட்டார்.
நிச்சயம் பண்டைய காலங்களில் அவ்வாறு இருந்திருக்க முடியாது அல்லவா? இப்போது [அப்போதைய கணக்கில்] பத்து லட்சம் பேர் இந்தத் தோல்பதனிடும் தொழிலில் ஈடுபட்டிருக்கின்றனர் – ஆனால், இவர்கள் தலைமுறை தலைமுறையாக தீண்டத்தகாதவர்களாகவே கருதப் படுகின்றனர். உயர் ஜாதியினர் இவர்களை வெறுக்கின்றனர், தூற்றுகின்றனர் இவர்கள் கலைகளும், கல்வியும், சுகாதாரமும், கண்ணியமும் மறுக்கப்பட்டு வாழ்க்கையை நடத்த வேண்டியிருக்கிறது. தோல் பதனிடுபவர்களும், துப்புரவுப் பணியாளர்களும், காலணி தயாரிப்பவர்களும் நம் சமூகத்துக்கு அரும்பணி ஆற்றி வந்தாலும், ஜாதி முறை இவர்களது வாழ்க்கையை இழிவானதாக ஆக்கியிருக்கிறது. மற்ற நாடுகளில், ஒரு மனிதன், இந்தத் தொழில்களில் ஈடுபட்டால் அவன் ஒரு ஏழ்மைமிக்க, படிப்பறிவில்லாத தீண்டத்தகாதவன் ஆவதில்லை.
…
இ்த்த அத்தியாயத்தின் இரண்டாம் பகுதி… (பதிப்பிக்க வேண்டும்)
February 8, 2013 at 23:58
“அன்பர்க்கு எளியன் காண்”, ” நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்” என வாழ்ந்து காட்டிய மகான். வாழ்வை படிப்பது வாழ்க்கையில் நம்பிகைத் தருகிறது.
February 9, 2013 at 02:20
அன்பு நண்பரே இதை நான் எழுதும்போது இரவு 3.01 பிப் 8.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்புஒவ்வா
செய்தொழில் வேற்றுமை யான் 972
சிறப்பு என்பது எந்தத் தொழில் கணக்கிலெடுத்துக் கொள்ளப்படுகிறதோ அந்தத்தொழிலில் சிறப்பாக அதாவது பெரும்பாலோனோரை விட சிறப்பாகச் செயல்படுகிறாரா அல்லது சிறப்பான பொருள்கள் செய்கிறாரா என்பதைத்தான் குறிக்கும். செய்யும் தொழில் வினைஞரையும் குறிக்காது செய்யும் தொழிலையும் குறிக்காது.
பெரும்பாலானோரை விடச் சிறப்பாகப் பணிபுரிதல் என்ற அளவு கோலினைக் குறள் தருவதால் ஒரு இருதய அறுவைச் சிகிச்சையாளரையும் ஒரு செருப்பு வினைஞரையும் ஒப்பிட்டால் இருதய அறுவைச் சிகிச்சையாளர் தம்முடையை தொழிலில் 60% னைரை விடச் சிறப்பாகத் தொழில் புரிகிறார் ஆனால் செருப்பு வினைஞர் 90% னைரை விடச் சிறப்பாகப் பணி புரிகிறாரென்றால் அவரே மருத்துவரைவிட சிறப்பாகப் பணி புரிகிறாரென்று பொருள் கிட்டுகிறது.
ஆனால் இன்று சமூகத்தில் செருப்புத் தைப்பது கேவலமான தொழில் ஆகிவிட்டதால் ஒரு மூன்றாம் தர நாலாம் தர மருத்துவர் ஒரு முதல் தர செருப்பு வினைஞரை விட உயர்வானவராகிவிட்டார்!
கலைஞர் உலகத்தமிழ் மாநாட்டில் திருவள்ளுவர் ஜாதிகள் இல்லை என்று பறைசாற்றினார் என ஒரு எளிமையான ஆனால் ஜாதிப் பிரச்சனையை திருவள்ளுவரே பேசி இருக்கிறார். அதில் முற்போக்குச் சிந்தனையைக்காட்டி இருக்கிறார் என்று குறளை திருவள்ளுவர் கருதாத களத்திற்கு எடுத்துச் சென்று விட்டார்.
என்னே பரிதாபம்!