என் நாத்திகம், நடைமுறை இஸ்லாம் – சில குறிப்புகள்
May 13, 2017
திருவிழாக்களும் மக்கள் தன்னிச்சையாகத் திரளும் கொண்டாட்டங்களும் (இதனை நான் – ஒரு தமிழ்க்குடிகாரக் கூவான்தனமாகச் சொல்லவில்லை, மன்னிக்கவும்!) – எனக்குப் பிடித்தமானவை; அமைதியாகப் பராக்கு பார்த்துக்கொண்டு கற்பனையூரில் சிறகடித்துப் பறந்துகொண்டிருப்பேன். என்னென்ன படிமங்கள் அவற்றில் உறைந்துள்ளன என, என் அரைகுறைப் படிப்பறிவுடன் அகழ்வாராய்ச்சி(!) செய்வதில் அப்படியொரு முனைப்பு. மேலும் — பகட்டையும், பணவிரயங்களையும் மீறி, அவற்றில் பாரம்பரிய ஆன்மா என ஒன்று உசுரைப் பிடித்துக்கொண்டு இருப்பதை உறுதி செய்துகொள்வதில், எனக்கு அப்படியொரு ஆர்வம்.
எனக்கு ஜொள்ளொழுகலாம். ஆனால், சர்வ நிச்சயமாக வாயோர மதச்சார்பின்மை அல்லது போக்கத்த மனிதவுரிமை நுரைதள்ளாது. ஆகவே ஸீஸனுக்கேற்றபடியான போராளித்தனமும் வெட்டிவீரமும் சமூகவலைத்தள அரைவேக்காட்டுக் காலட்சேபமும், எல்லாம் தெரிந்த ஏகாம்பரத்தனமும் இருக்காது. மன்னிக்கவும்.
ஏனெனில், நான் முற்றும் தெரிந்த முனிவனுமல்லன். நீங்கள் படிதாண்டா ஞானப்பட்டினிகளும் அல்லர். அண்ணா அப்போதே தமிழர்களுக்குப் போட்ட நாமம் வாழ்க. ஆமென்.
எம்மதமும் சம்மதம் என்றில்லை; அதே சமயம் மதச்சார்பாளர்களைப் பார்த்தாலே கிண்டலும், நக்கலும் என்பதுமில்லை. மாறாக – அந்த அந்தச் சபைகளில் அவற்றுக்கேற்ற மரியாதையைக் கொடுப்பேன், பாரம்பரியங்களை முடிந்தவரை புரிந்துகொண்டு எதிர்வினைகளைச் சமைத்துக்கொள்வேன். முடிந்தவரை விதண்டாவாதத்தில் ஈடுபடுவதில்லை. மிஞ்சிப் போனால், நடைமுறை உண்மைகளை ஒரு நகைச்சுவையாகக் கருதித் தாண்டிச் சென்றுவிட முயற்சிப்பேன் – மூச்சுமுட்டும், ஆனால் வேறு வழியில்லை. என் வாழ்க்கை, என் ஒண்ணரைக்கண் பார்வை என்னுடையது; உங்களுடையது உங்களுக்கு.
அதாவது அவரவர்களுக்குக் கிடைத்த வாய்ப்புகளுக்கும் அனுபவங்களுக்கும் ஒத்துவந்து – மேலும் அவர்கள் உழைப்பிற்கேற்றதாகவும் அவர்கள் பார்வை அமையும் – அது விரியலாம் அல்லது சுணங்கலாம். ஆனால் இது பெரிது அது சிறியது என வெட்டிப்பேச்சு பேசுவதில் ஒரு சுக்குக்கும் பிரயோஜனம் இல்லை. ஏனெனில், in the end, we are all toast. Happily so!
… இவையெல்லாம் இப்படி இருக்கையிலே, சில சமயங்களில் ஆத்திகர்களைப் பார்த்தால் ஒரு பொறாமையுணர்ச்சியும் என்னுள் எழும்புவதைக் கவனித்திருக்கிறேன்; இதனை ஒரு மேட்டிமையுணர்ச்சியுடன் சொல்லவில்லை – உண்மையாகவே துக்கத்துடன் தான் சொல்கிறேன்.
ஏனெனில் – அவர்கள் வாழ்க்கையின் அத்தனை அடிப்படைக் கேள்விகளுக்கும் தன்னளவில் முழுமையான (internally consistent and complete) ஒரு பதில் இருக்கிறது. சிலபல எளிமையான எதிர்பார்ப்புகளில் இருந்து சில சிடுக்கல் எதிர்பார்ப்புகள் வரை – அனைத்தும் சரியாக, நேரடியாக ஆவன செய்யப்பட, எதிர்கொள்ளப்பட வழிமுறைகள் இருக்கின்றன. அவர்களுடைய வாழ்க்கையில் ஒரு கொழுகோல் இருக்கிறது. எதிர்காலத்தைப் பற்றிய (அடுத்த ஜென்மம், சொர்க்கம், யேஸ்ஸூவிடம், அல்லாஹ்விடம் என) ஆத்மார்த்தமாக நம்பும் விஷயங்கள் இருக்கின்றன.
எனக்கு இப்படி ஒன்றுமே இல்லை. கொழுகோலில்லை; பொழுதன்னிக்கும் நெம்பிக்கொண்டே இருக்க வெறும் ஒரு நெம்புகோல் மட்டுமே! ஏனெனில் நான் ஆத்மார்த்தமாக உணர்வது – நாம் தான் நம்செயல்களுக்கான வழியும் சத்தியமும் ஜீவனும் என்று. இம்மை மட்டுமே இருக்கிறது, மறுமை என்பது சுவாரசியமான புனைவு மட்டுமே என்று. கடவுள் ஒருபோதும் காப்பாற்றவரவேமாட்டார் என்று. இறப்பும் மறுசுழற்சியும் மட்டுமே ஸாஸ்வதம், இவை மட்டுமே அடிப்படை மகாமகோ உண்மைகள் என்று. ஆகவே, க்ஷண நேரத் துக்கம். (அண்மையில் ஒரு இளம் ஐஏஎஸ் நண்பருடன் அளவளாவிக் கொண்டிருந்தபோது அவரும் இதனை ஆமோதித்தார் – அய்யா, உங்களுக்கு நினைவிருக்கிறதா? )
…ஆனால் — பாரதிக்களும் தார்கொவ்ஸ்கிகளும் பாக்ஹ்களும் ஹோஃப்ஸ்டேட்டர்களும் – அபரிமிதமாகச் சூழ்ந்திருக்கும் இவ்வுலகில், சூரியனுக்குக் கீழ் உள்ள நம் கிரகத்தில் இருக்கும் அலகிலா எல்லையிலா அழகுகளுக்கு அளவேயில்லை, ஆகவே.
-0-0-0-0-0-0-
இது சிலமாதங்களுக்கு முன்பு சத்தீஸ்கட்டில் நடந்த சிலபல கதைகள். பஸந்த் பஞ்சமி, ரத ஸப்தமி என அழகான சில கொண்டாட்டங்கள் நடந்தன.
…நான் விஜயம் செய்த சிலபல பள்ளிகளில் பஸந்த் பஞ்சமியன்று ஸரஸ்வதி பூஜைகள் நடந்துகொண்டிருந்தன. கொண்டாட்டம். வறுத்த கோதுமை மாவுடன் வெல்லப்பாகைக் கலந்த சூடான பிரசாதம். வாழைப்பழம். ஆஹா.
சிலபல புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதிலும் பல குஞ்சிகள் (நம்மூர் கோனார் உரை எழவு வகையறா). கொஞ்சம் சோகமாக இருந்தது. ஏதோ பூஜையில் வைத்த புத்தகங்களைப் பிள்ளைகள் சரியாகப் படித்தால் சரி.
ஒரு வெள்ளிக்கிழமையன்று சத்தீஸ்கட் பகுதி மசூதி ஒன்றுக்குச் சென்றிருந்தேன் – ஏனெனில் என் பயணங்களின் நடுவே, மதியத்தொழுகைக்கு அழைப்பொன்று கேட்டது. கர்ணகடூரமான தப்பும்தவறுமான அரேபிய அழைப்பு. அழகான குரலில் – துக்கமும், வேண்டுதலும் நிரம்பிய நடுங்கும்குரலில் அழைப்பவர்களெல்லாம் போய்ச் சேர்ந்துவிட்டார்களா? ஆனால் இந்த கோரத்தை மீறி, என்னுடைய ஆர்வக்கோளாறு செயல்பட்டதால், மசூதிக்குச் சென்றோம்.
…ஆனால், இது சர்வ நிச்சயமாக, ஸவுதி அரேபிய அல்லது மலேஷியவழி வஹ்ஹாபியப் பிச்சையில் அண்மைய காலங்களில் இந்தியா நெடுக புற்றீசல்கள் போலக் கிளம்பிக்கொண்டிருக்கும் பல டாம்பீகப் பளப்பளாக்களில் ஒன்று. ஏனெனில் அதனைச் சுற்றி பத்திருபது கிமீ ஆரத்தில் அதிகபட்சம் இரண்டுமூன்று குக்கிராமங்கள் மட்டுமே. அவற்றில் வசிக்கும் முஸ்லீம்களிலிருந்து உபரி சேகரம் செய்யப்பட்டு மசூதி கட்டப் பட்டிருந்தால், அதிக பட்சம், ஒரு சுண்ணாம்புச் சுவர் ஒன்றை மட்டுமேதான் எழுப்பியிருக்க முடியும்.
அழகுணர்ச்சியோ அல்லது எளிமையோ – எந்த எழவுமேயில்லை அந்த மசூதியில்; இந்த விஷயத்தில் அது தமிழகத்தின் ஆன்மா அற்ற புது பளப்பளா கோட்டைபோன்ற சுற்றுச் சுவர் கொண்ட ஸவுதிக் கெடுபிடி பச்சைப்பசேல் மசூதிகளை ஒத்திருந்தது.
…. வழக்கம்போலவே அதனுடன் – இலவச இணைப்பாகப் பஞ்சடைத்த நோஞ்சான் குழந்தைகள் நிரம்பிய மதறாஸா ஒன்று – துவாவுக்குப் பின் அதற்கும் சென்றோம். அவர்களுடைய கைகளில் அரேபிய மொழிக் கொர்-ஆன் – நெட்டுரு போடுவதற்காக. எனக்குத் தெரிந்தே உச்சரிப்பு தப்பும் தவறுமாகவேறு – அவர்களுடைய ஆசிரியர்களும் சராசரிகள்தாம். வேதனை. சில சமயம் தோன்றுகிறது – இந்தக் குழந்தைகளை மீட்டு, நவோதயா வித்யாலயா போன்ற பள்ளிகளில் சேர்த்தால், அது அக்குழந்தைகளுக்கு, ஏன் அந்த இஸ்லாமுக்கே நல்ல விஷயமாக இருக்கும் என்று. ஆனால்… இம்மாதிரிப் பிரத்தியட்சமாக, பரிதாபமான விஷயங்களைப் பார்க்கும்போது எனக்குள் சுரக்கும் வெறுப்பு அமிலத்துக்கு அளவேயில்லை, என்ன செய்வது சொல்லுங்கள்! அழகாக மணிகள் போல வளரவேண்டிய குழந்தைகள், ஆக்ரோஷத்துடன் சுணங்கவைக்கப்படுவதைப் பார்க்க நேர்வது ஒரு நாராசமான விஷயம். :-(
…சடங்குகள் முடிந்து – ஒருவழியாக க்ஹாடிப் வந்து குத்பாவை ஆரம்பித்தார். அல்ஹம்து இல்லல்லாஹ். ஸலாவத் முடிந்து துவாவும் முடிந்தபின் கிளம்பலாம் எனப் பார்த்தால், அவர் தேவையேயற்ற (அதிகப்) பிரசங்கம் ஒன்றை ஆரம்பித்தார். பொதுவாகவே துவா முடிந்தபின் தொழுகைக்கென வந்தவர்கள் கிளம்பி விடலாம். ஆனால் அய்யா க்ஹாடிப் அவர்களுக்கு ஏதோ bee in the bonnet. பலான இடத்தில் அரிப்பு.
…ஆனால் – மொஹெம்மத் நபி சொன்னது என்னவென்றால் – குத்பாவைக் (பிரசங்க மேடைப்பேச்சு) குறை, ஸலாத்தினை (பிரார்த்தனையை) அதிகரி! மதவெறி அரைகுறைகளுக்கு இதெல்லாம் தெரியுமா என்ன? அலுப்பாக இருந்தது.
என்னுடன் வந்திருந்த பையனுக்கு தர்மசங்கடம் (அவனுக்கு என் விருப்புவெறுப்புகளில் சில அறிமுகமாகியிருந்தன). அவன் என்ன செய்வான், பாவம். ஏதேதோ தேவையில்லாமல் பேசினான். என் பிள்ளைகளிடம் நான் எந்த விஷயத்துக்கும் தடங்கல் போடமாட்டேன். அவர்கள் என்ன கருத்தானாலும் சொல்லலாம். வாக்குவாதம் செய்யலாம். நானும் உரிய மரியாதையுடன், முடிந்தவரை பட்டவர்த்தனமாகப் பேசுவேன். பூசிமெழுகல் இருக்காது. மென்று முழுங்குதலுக்கும் தடை. இருவழி உரையாடல்கள் – அதுவும் சமனமும் படிப்பறிவும் செயலூக்கமும் மிக்க இளைஞர்களுடன் லபிப்பது என்பது, எவருக்குமே உவப்பாகத்தானே இருக்கும், சொல்லுங்கள்?
எங்கள் வேலையுண்டு தானுண்டு சம்பளமுண்டு என இருக்கலாம். ஆனால், என் சுற்றுச் சூழலில் சமனம் இருக்கவேண்டும், ஆழ்ந்து சிந்தித்துப் பின் செயல்படல் என்பது முக்கியமாக இருக்கவேண்டும். இது என்னுடைய பெருவியாதிதான்.
அவனிடம் சொன்னேன் – இது இப்படித்தான் இருக்கும் எனத் தெரியும், பரவாயில்லை என்றேன். ஆனால் வாரத்துக்கு ஒருமுறையாவது இப்படிப்பட்ட வெறுப்பியப் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தால் – கேட்பவர்களை அது கண்டிப்பாகப் பாதிக்கும் அல்லவா, அதுதான் சோகம். வெட்டு கொலை ரத்தம் என மட்டுமே வெறியூட்டப் பேச்சு, ஒரு மதரீதியான பின்புலத்தில் நடந்தால் அது நீண்டகால நோக்கில் விபரீதம் அல்லவா என்றேன். எது எப்படியோ, இதனை இப்படியே விட்டுவிடலாம், இவற்றைப் பற்றிப் பேச ஆரம்பித்தால் மாளாது என்றேன்.
…அப்படியே விட்டிருக்கலாம். ஆனால் பாவம் அவன், தேவையேயற்ற சப்பைக் கட்டல் செய்ய ஆரம்பித்தான். :-(
வழக்கமாக இப்படி இருக்காது – இன்றுதான் இப்படியாகிவிட்டது என்றான் பாவம்.
எனக்குத் தெரிந்து பாரதம்முழுவதும் பெரும்பாலான மசூதிகளில் இப்படித்தான் இருக்கிறது, தேவையேயற்ற வெறுப்பியம் மட்டும்தான் பரப்பப்படுகிறது – 1) ஸவுதி அரேபியக் காட்டுமிராண்டித்தனத்திலிருந்து இஸ்லாமையும், 2) மலட்டுத்தனமான வெறியூட்டும் அரேபியமயமாக்கலிலிருந்து உன்னைப்போன்ற சாதாரண, குடிமைப்பண்புமிக்க முஸ்லீமையும் மீட்டால்தான் – இஸ்லாமையே விடு, இந்தியாவுக்குமேகூடக் கதிமோட்சம் என்றேன்.
…உனக்கு நினைவிலிருக்கிறதா? சென்றமாதம் உன்னிடமிருந்து நான் விடை பெற்றுக்கொள்ளும்போது, மரியாதையாக குதாஹ் ஹஃபிஸ் என்றேன், நான் ஒரு முர்டாட், காஃபிர் அவிசுவாசி என்றாலுமே நீ எனக்கும் புதிய அறிமுகம் என்பதாலும் – முக்கியமாக, நீ நாளுக்கு இரண்டுவேளையாவது கர்மசிரத்தையாக நம் விடுதிஅறையில் தொழுகை செய்ததைப் பார்த்ததாலும்; ஆனால் நீ என்னிடம் பதிலுக்கு அல்லாஹ் ஹஃபிஸ் என்றாய் – இதுதான் பிரச்சினையின் முதல்படி. உனக்கு இது நினைவிலிருக்கிறதா? இதுதான் பன்முகத்தை ஒழிக்கும், ஒற்றைப்படை வாதத்தை உயர்த்திப் பிடிக்கும்போக்கு. இதன் முடிவு வஹ்ஹாப்பியம். ஸலாஃபியம், கழுத்தறுப்புவகை இஸ்லாம்.
அல்லாமுதல்வாதத்திலிருந்து ஆரம்பித்து அதிலேயே முடிந்தால், காத்திரமான உரையாடல்கள் எப்படித்தான் நடக்கும், சொல்லேன். :-( அவன் முகத்தில் கோபமும் வருத்தமும்.
தொடர்ந்தேன் – கொர்-ஆனில் பெண்களை வெறுத்தொதுக்கும் பலப்பலச் சொற்றொடர்களும் இருக்கின்றன, போற்றும் சில சொற்றொடர்களும் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக மொஹெம்மத் அவர்களின் வீட்டுப் பெண்மணிகளுக்காகவென மட்டுமேதான் உடல்-மறைப்பு பற்றி கொர்-ஆனில் பேச்சு வருகிறது; சமூகத்திலுள்ள பிற பெண்களுக்காக அல்ல. ஏன் இது எல்லாப் பெண்களின்மீதும் கவிழ்க்கப்படவேண்டும்? மேலும் ‘பெண்’ என்பவளின் சரீரம் ஆண்களுக்குத் தூண்டுதலை ஏற்படுத்துகிறது என்றால், ஏன் 12 வயதானவுடன் ஆண்பிள்ளைகளின் கண்கள் சடங்கு ரீதியாகக் குருடாக்கப்படக் கூடாது? ஏன் பெண்பிள்ளைகளுக்கு மட்டும் புர்க்கா போடுகிறார்கள்? ஆண்கள் மட்டும் ஏன் நீலஜீன்ஸ் போட்டுக்கொண்டு மினுக்கிக்கொண்டு அலைகிறார்கள்?
மேலும், அந்தப் பிரச்சாரகர் சொன்னதுபோல் ஆயிஷாவுடன் இல்வாழ்க்கையை (=உடலுறவு) மொஹெம்மத் ஆரம்பித்தபோது அந்தக் குழந்தையின் வயது 9 – இது சரி, ஆனால் திருமணம் நடந்தபோது ஆயிஷாவுக்கு வயது 6; அச்சமயம், மொஹெம்மத் அவர்களின் வயது 55, ஆயிஷாவுடன் இல்வாழ்க்கை ஆரம்பித்தபோது 58 – இதை அந்தப் பிரச்சாரகர் சொல்லவில்லை – சும்மா உளறிக்கொட்டினார்! மொஹெம்மத் அவர்களுடைய வாழ்க்கையை அப்படியே ஒற்றியெடுத்தால்தான் ஒரு நல்ல முஸ்லீமாக இருக்கமுடியும் என்றால் உன்னுடைய தங்கைக்கு 10 வயதாகிவிட்டது – ஆகவே அவளுக்கு 60 வயதில் மாப்பிள்ளை பார்க்கவேண்டும் என ஆரம்பித்தால் அது இக்காலத்துக்குச் சரியாக இருக்குமா?
ஆயிஷா, பணக்கார அபுபக்ரின் குழந்தை; தன்னுடைய மார்க்கத்தை கட்டியெழுப்பிக்கொண்டிருந்த மொஹெம்மத் அவர்களுக்கு அரசியல் ரீதியாக அபுபக்ர் அவர்களுடன் உறவை ஸ்திரப் படுத்தவேண்டியிருந்தது; மேலும் அந்தக்கால அரேபியாவில் சிறுகுழந்தைப்பெண்களை வயதானவர்கள் மணம் புரிந்துகொள்வதெல்லாம் பெரிய விஷயமில்லை. ஆனால் இக்காலங்களில், தொடர்பேயில்லாத அக்கால நடைமுறைகளை ஏன் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கவேண்டும்?
அவன் ஒப்புக்கொண்டான். ஆனால் கொர்-ஆனில் இருக்கும் தத்துவங்களை எடுத்துக்கொள்ளலாமே!
நான் சொன்னேன்: கொர்-ஆன் அடிப்படையில் அந்தக் காலத்தில் மதத்தைப் பரப்புவதற்கான ஒரு கையேடு, நான் பலமுறை அதனைப் படித்திருக்கிறேன். எனக்குத் தெரிந்து அதில் தத்துவம் கித்துவம் ஒன்றும் இல்லை (ஆனால் இப்ன் அல்-ரஷீத் போன்றவர்களின் எழுத்துகளில் இது இருக்கிறது – தஹஃப்பத் அல் தஹஃப்பத் – ‘குழப்பத்தின் குழப்பம்’); நேரிடையாகப் பல விஷயங்களைச் சேர்த்து மொஹெம்மத் அவர்களின் அனுபவங்களையும் அவர் சொற்களையும் பல காலகட்டங்களில் நடந்த எதிர்கொள்ளல்களையும் கோர்த்து – அவர் இறந்த பல்லாண்டுகளுக்குப் பின் எழுதப்பட்ட புத்தகம்தானே அது?
அதில் முஸ்லீமின் அடிப்படைக் கடமைகளில் இருந்து போர் செய்வது எப்படி, போர் முடிந்தவுடன் கொள்ளை எப்படிச் செய்வது (அல் அன்ஃபல்) எல்லாம் வகை வகையாக இருக்கின்றன. ஆக, அப்புத்தகத்தின் காலகட்டப் பின்னணியில் அதனைப் புரிந்துகொண்டு அதற்கேற்ற – அதற்குரிய மரியாதையைக் கொடுத்து – இக்காலத்தில் நம்மைச் செழுமைப் படுத்திக் கொண்டு வளரத்தானே வேண்டும்? நீ என்ன சொல்கிறாய்? எது நியாயம்? மானுடத்துக்கு எது தேவையானது? எது உதிர்க்கப்பட வேண்டியது? நாம் இதையெல்லாம் பற்றி யோசிக்கவேண்டும் அல்லவா?

எனக்கு சட்டென்று மூச்சு நின்றுவிட்டது. ஆனால் மிருதுவாகச் சொன்னேன். நம் திருப்திக்காக மட்டுமே அல் இஸ்ரா, மிராஜ் வகையறாக்களில் வரும் சொர்க்கத்துக்குச் சென்ற பறக்கும் குதிரை என்பது ஒரு ராக்கெட்டின் உருவகம், மலைகளுக்கு வேர் உண்டு என்பது உண்மை எனவெல்லாம் சொல்லலாம். ஆனால், தம்பீ – அதில் அறிவியல் இருப்பதாக எனக்குப் படவில்லை. உனக்குத் தெரிந்தால் சொல் நான் திருத்திக்கொள்கிறேன் என்றேன்.
-0-0-0-0-0-0-
பையன் படு புத்திசாலி. என்னால் தனிப்பட்ட முறையில், அவனுடைய புத்திசாலித்தனத்தின் காரணமாக மட்டுமே தேர்வு செய்யப்பட்டவன். சிந்திப்பவன். கொர்-ஆன் முழுவதும் நெட்டுரு போட்டிருக்கிறேனே தவிர அது என்ன சொல்கிறது என்பதை அக்காலகட்டத்திற்கேற்பப் புரிந்துகொள்ளவில்லை என்றான். ஆகவே, தன்னால் அதனைக் இக்காலகட்டத்திற்கேற்பப் பொருத்திப் புரிந்துகொள்ளமுடியவில்லை என்றான். நேர்மையானவன். நீங்கள் சொல்வது போல் கேள்விகளைக் கேட்க ஆரம்பிக்கவேண்டும் என்றான்.
பின்குறிப்பு: இவ்விஷயங்கள் நடந்து, என் நாளேட்டுக் குறிப்புகளை பதிவாக்க ஆரம்பித்து சுமார் இரண்டு-மூன்று மாதங்களாகிவிட்டன. இன்னமும் இவன் என்னுடன் தான் இருக்கிறான். ஆனால் வேலை அழுத்தங்களால் அவனுடன் உரையாடவே முடியவில்லை, சர்வ நிச்சயமாக, இம்மாதிரி இளைஞர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும். முடிந்தவரை போஷகம் செய்யவேண்டும். எப்படியுமே இவன் தேறிவிடுவான். என்ன, அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் போய் ஓடி ஓளிந்துகொள்ளாமல் இருந்தால் சரி. அப்படியே ஆனாலும், நான் அவனைப் புரிந்துகொள்வேன். ஏனெனில் நடைமுறை இஸ்லாமில் மிகவும் நிறைய கெடுபிடிகள். போகும்பாதை சரியானதாகவே இருந்தாலும்கூட, குறுக்கு சால் போடுவது மிகக் கடினம். :-(
But, this too shall pass. At least, I hope so…
May 13, 2017 at 16:32
குதாஹ் ஹபீஸ் மற்றும் அல்லாஹ் ஹபீஸ் என்றால் என்ன அர்த்தம் சார்?
May 13, 2017 at 16:39
[1] Allah Hafiz vs. Khuda Hafiz
https://www.dawn.com/news/833553/allah-hafiz-to-khuda-hafiz
[2] “I absolutely hate the de-Indianization of Indian Muslims…”
Allah Hafiz vs. Khuda Hafiz – http://muslimobserver.com/allah-hafiz-vs-khuda-hafiz/
May 13, 2017 at 20:43
ராம்,
நம்பிக்கை உள்ளவர்களைப் பார்த்து பொறாமைப்படத் தேவை இல்லை என்றே நினைக்கிறேன். நம்பிக்கை ஒர் மெல்லிய ஐஸ் படலம். கலிகாலத்தில் அது உடைய வாய்ப்பு அதிகம். அப்படி உடையும்போது மனிதன் தன் அடையாளத்தை இழக்கிறான். அடையாளத்தை இழப்பது நல்லதே. ஆனால், அந்த அடையாளமே தான் தான் என்று நினைக்கும் அளவிற்கு, நம்பிக்கை முற்றிப் போயிருந்தால், வேறு போக்கிடம் இல்லாமல் முழிப்பவர்கள் உண்டு. தற்கொலை அளவிற்கு போனவர்களும் உண்டு.
சில வருடங்களுக்கு முன், நபிகளின் ஒன்பது வயது மனைவி பற்றிய திரைப்படம் ஒன்று தயாரிக்கப்பட்டதால், கொதித்து எழுந்த சில தமிழ் நாட்டு முஸ்லிம்கள் சாலை மறியல் செய்து சென்னையை ஸ்தம்பிக்க வைத்தனர். அந்த சில நாட்களில் எனக்கு வண்டி ஒட்டிய ஒரு முஸ்லீம் இளைஞன் அதைப்பற்றி மிகத்தீவிரமாகப் பேசினான். “இந்திய முஸ்லிம்களுக்கு இதுதான் தலையாய பிரச்சினையா” என்று கேட்டேன். அதற்கு அவனிடம் பதில் இல்லை.
என் தர்க்கத்தை விட அவன் நம்பிக்கை வலிமையாக இருந்தாலும், இன்னும் பேச்சை வளர்த்து, அவன் நம்பிக்கைகளை குழப்பி இருக்க முடியும். ஆனால் அதனால் யார்க்கும் லாபமில்லை என்று நிறுத்திவிட்டேன்.
P.S: My take on faith based terrorism is at http://justexperience.blogspot.in/2017/04/blog-post.html
May 13, 2017 at 21:21
அய்யா, பொறாமைப்படவேண்டிய அவசியம் இல்லையென்பதை அறிவேன். ஆனாலும் சில தளர்வான தருணங்களில் இப்படி உணர்ந்ததும் உண்மை. (நேரில் பார்க்கும்போது பேசலாம், சரியா?)
மற்றபடி உங்கள் பதிவைச் சில நாட்கள் முன்பு படித்தேன். அதுபற்றி உங்களுக்கு எழுதவேண்டும் எனவும் நினைத்துக்க கொண்டே இருந்தேன் + இருக்கிறேன்… :-)
May 14, 2017 at 08:19
பேசலாம். தளர்வான தருணங்களுக்கு, பாரதியின் பராசக்தி பாடல்களை நினைவு படுத்திக்கொள்ளலாம். அவற்றிற்கு ஏனோ நம்பிக்கையோ பக்தியோ தேவைப்படுவதில்லை.
May 15, 2017 at 19:39
1 The replacing of Khoda(Persian and perhaps Shia) with Allah is a clear indication of a narrower and more fundamentalist world view. This has been pointed out repeatedly by many Pakistani intellectuals.
2 The recent contrived opposition to Hindi, which in discussions comes down to denying any advantage to Hindi speakers in Central Government jobs. The Justice Party ideas are still alive! The Brahmins from the south are moving to the US. Unfortunately the West has not realized how terrible the Brahmins are. And it is difficult to chase them there!
3 One may overlook the inanities of S Yamunan. One may forgive him for the usual stuff about the glories of ancient Tamilakam considering that the Tamils have an extremely inglorious present.
But he must be aware that he is being used by Ramakrishna to avoid a transfer to Assam(generally considered a punishment post) It is hilarious to even think of a role for BJP in the matter or that with the exit of Ramakrishna excavation work will come to a stop. As the saying goes “Sarkar kaariyam mura pola ”
4 Quite revealing is the use of the word “testimonial” for witness in the the picture which clearly indicates the egalitarian ignorance of English as well as Arabic among the followers of the true faith!