நா. முத்துக்குமார், அரைகுறை, வில்லியம் பட்லர் யேட்ஸ், கவிதைகளைப் புரிந்துகொள்ளல், ஆத்மாநாம், #மற்றும், செந்தில்நாதன், கல்யாண்ராமன், மொழிபெயர்ப்பது எப்படி

July 18, 2016

12ஜூலை. எனக்குப் பிடித்தமான பல கவிஞர்(!)களில் நா. முத்துக்குமார் அவர்களும் ஒருவர் என ஒரு இளம் பிரக்ருதி நினைத்திருக்கிறார். ஆகவே, மேதகு நாமு அவர்களுக்கு 12ஜூலை அன்று பிறாண்டும் நாள் எனும் கோலாகலமான செய்தியை,   நான் அறிந்துகொண்டேன்.  ங்கொம்மாள, ரொம்ப முக்கியம். (இந்த அரிய அற்பச் செய்தியையும், அந்த மகாமகோ மனிதருடைய சினிமாக் கவிதையுளறல் ஒன்றையும், வெகுவாக  நெகிழ்ந்து, தேவையற்ற ஆவலுடன் எனக்கு அனுப்பியுள்ள இளம் அரைகுறையின் மின்னஞ்சல் முகவரி, இன்று முதல் ஸ்பேம் ஃபில்டர் செய்யப்படுகிறது. ஸர்ட்டிஃபைட் அரைகுறைகளுடன் எனக்கு ஒத்துவராது. நன்றி! என் நேரத்தை எப்படி வீணடிப்பது என்பது என் உரிமை. சர்வ நிச்சயமாக அரைகுறைகள் அதனை மீறமுடியாது. மிக்க நன்றி!)

எச்சரிக்கை: இந்தப் பதிவில் சுமார் 1850 வார்த்தைகள் இருக்கின்றன. பாவம், நீங்கள்!

-0-0-0-0-0-0-

சரி. என் வழக்கமேபோல, நான் பொதுவாகவே மதிக்கும் இருவருடைய (@bseshadri, @kalyanasc) சென்ற பத்துநாட்களின் ட்வீட்கள் சிலவற்றை, என்னால் முடிந்தவரை படித்தேன். சுட்டிக் காட்டப்பட்டவைகளுக்குச் சென்றேன். #வழக்கம்போலவேபத்ரியின்பலஃபேஸ்புக்பதிவுகளைப்படிக்கமுடியவில்லை. #என்னஎழவோபுரியவில்லை #404 #ஃபேஸ்புக்கிலும்நான்இல்லை #சரி

கல்யாண் அவர்கள், தன்னுடைய ட்வீட் ஒன்றில்,  மொழிபெயர்ப்புக்கான தெளிவான சட்டகம் ஒன்றைக் கொடுத்து, அதன் பின்னணியில் யேட்ஸ் கவிதையொன்றை மொழிமாற்றம் செய்திருக்கிறார். எனக்கும் பிடித்தமானதுதான் அது. மொழிபெயர்ப்பும் அழகு.  நேர்மை. க்ளிப்தம், சொற்சிக்கனம். ஜிகினாக்கள் பொழிப்புரைகள் இல்லை. அமைதி. உடனே அவரைக் கட்டிக்கொண்டு முத்தம் கொடுக்கவேண்டும்போலத் தோன்றியது. #அய்யோஓரினச்சேர்க்கை

ஆனால் என்னால் முடிந்தது – அவருக்கு ஒரு மின்னஞ்சல் எழுதுவது. அதைச் செய்தேன். பாவம், அவர்.

நானும் பலமுறை, என் மனதை முழுவதும் ஆட்கொண்ட சிலபல கவிதைகளைத் தொடர்ந்து, வெட்கமேயில்லாமல் மொழிபெயர்த்துக்கொண்டேயிருக்கிறேன், ஆனால் அவற்றில் சில கவிதைகளை 20-30முறை பெயர்க்க முயன்றாலும் (ரில்கெ, போர்ஹெஸ், ப்லாத், ப்லேக்++ தமிழுக்கு, ஆங்கிலம் வழியாக… சில தருமுசிவராம், பசுவய்யா, என்டி இராஜ்குமார், சி மணி, கலாப்ரியா, குறுந்தொகை++ கவிதைகளை ஆங்கிலத்தில்) அவை ஓரளவுக்காவது நன்றாக வந்திருக்கின்றன என என்னால் கருதவேமுடியவில்லை; பொதுச்சபையில் எதையாவது காத்திரமாக வைப்பதானால் அதற்குத் தரமும் மெனக்கிடலும் மிகமுக்கியம் என நினைப்பவன் நான். ஆகவே. ஹ்ம்ம்… ஸரஸ்வதியை நான் நம்பாததால், அவளும் எனக்கு அருள்புரியவில்லை என நினைக்கிறேன். வாக்தேவியே, ஏன் என்னை வெறுக்கிறாய்?

நிலைமை இப்படி இருக்கையிலே, குண்டுதைரியமாகச் சிலபலர் கவிதை மொழிபெயர்ப்பு என ஒப்பேற்றிக் கழுதைகளை அட்ச்சுவுடுவது – அடிப்படைப் புரிதல்களோ, அழகியல் குறித்த பண்பட்ட கருத்துகளோ அற்ற (அந்தக் காலத்தில்  மிக முக்கியமாக ‘இந்திரன்‘ இராசேந்திரன் போன்றவர்களைப்போலப் பலப்பலர் செய்தது) மனிதர்கள் இப்படிச் செய்வது, எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கிறது.

பழனிபாரதி பாம்பாட்டிச்சித்தர்களின் கவிதைகளே பரவாயில்லை என்றாக்கிவிடுகிறார்கள், இந்தப் பாவிகள்!

-0-0-0-0-0-0-

இப்பகுதியில், ‘த ஸ்காலர்ஸ்’ என யேட்ஸ் (WB Yeats) அவர்கள் எழுதிய மூலத்தையும், சிலபல நிர்மூலங்களையும், ஒரு மொழிபெயர்ப்பையும் கொடுக்கிறேன்:
Screenshot from 2016-07-15 13:06:55

கீழ்கண்டது ஆத்மாநாம் அவர்களால் பெயர்க்கப்பட்டது:  ஆத்மாநாம் படைப்புகள்

படிப்பாளிகள்

தம் பாவங்களை மறக்கும் வழுக்கைத் தலையர்கள்
வயதான படித்த, மரியாதைக்குரிய வழுக்கைத் தலையர்கள்
வரிகளைப் பதிப்பித்து உரை விளக்கி
அந்த இளம் மனிதர்கள் படுக்கையில் புரண்டு
காதலின் மனமுறிவைச் சந்தமாக்குவர்
அழகின் அறிவிலிக் காதுகள் மகிழ்ச்சியுற
எல்லோரும் கூடிக்கலைவாரங்கே;
எல்லோரும் கையில் இருமுவர்;
எல்லோரும் தம் காலணிகளுடன் கார்பெட் அணிவர்;
எல்லோரும் சிந்திப்பர் மற்றவர் சிந்திப்பதையே;
எல்லோரும் தெரிவர் அண்டை வீட்டாருக்குத்
தெரிந்த மனிதனையே.
ஆண்டவரே என்ன சொல்வர் அவர்கள்
அவர்களின் காட்டுலஸ் அவ்வழி நடந்தால்?

கீழ்கண்டது செந்தில்நாதன் அவர்களால் பெயர்க்கப்பட்டது: யீட்ஸ் , ஆத்மாநாம் மற்றும் நான்

சான்றோர்கள்

தங்கள் தவறுகளை மறந்த வழுக்கைத் தலையர்கள்,
மெத்தப் படித்த, மரியாதைக்குரிய, வயதான வழுக்கைத் தலையர்கள்,
காதல் நோயால் பீடிக்கப்பட்டுப் 
படுக்கையில் புரண்ட இளைஞர்கள்
சவுந்தர்யத்தின் மடக்காதுகளுக்காக யாப்பமைத்த புகழுரை
வரிகளைத் திருத்தி உரை எழுதுகிறார்கள்.
இவர்கள் எல்லோரும் இங்குமங்கும் செல்வார்கள்;
எல்லோரும் புத்தகங்களுக்குள்ளேயே இருமுவார்கள்
எல்லோரும் வகுப்பறைக் கம்பளங்களைக் காலணிகளால் தேயச் செய்வார்கள்;
எல்லோரும் அடுத்தவர் நினைப்பதையே நினைப்பார்கள்;
எல்லோருக்கும் அடுத்தவருக்குத் தெரிந்தவனையே தெரிந்திருக்கும்.
கடவுளே, இவர்களது காட்டுலஸ்* இந்தப் பக்கமாய்க் கடந்தால்
என்ன தான் சொல்வார்கள் இவர்கள்?

* காட்டுலஸ் — 2000 வருடங்களுக்கு முற்பட்ட ரோம் நகரக் கவிஞன். காதல் கவிதைகளுக்காகப் புகழ் பெற்றவன். https://en.wikipedia.org/wiki/Catullus

கீழ்கண்டது கல்யாண்ராமன் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டது: ‘The Scholars’ by WB Yeats – மூன்றாவது மொழிபெயர்ப்பு

அறிஞர்கள்

தத்தம் தீவினையை மறந்துவிடும் வழுக்கைத் தலைகள்
வயதில் மூத்த, அறிவிற் சிறந்த, மதிப்புக்குரிய வழுக்கைத் தலைகள்
படுக்கையில் புரண்டு தவிக்கும் வாலிபர்கள்
தம் காதலின் நிராசையில்
அழகின் அறியாச் செவியிடத்தே
இச்சகம் பேசிட இசைத்த வரிகளை
திருத்தி, குறிப்புடன் உரைகள் இயற்றுவர்.

யாவரும்
அங்கே கால் தேய்த்து நடப்பர்; இருமுவர் மசியாய்.;
தத்தம் ஜோடுகளால் தரை விரிப்பை நையச் செய்வர்;
மற்றவர் நினைப்பதையே தாமும் நினைப்பர்;
அடுத்தவர் அறிந்தவனையே தாமும் அறிவர்.
ஆண்டவரே, எதைத்தான் இவர்களால் கூற இயலும்?
அவர்தம் காட்டுலசும் அவ்வழியே நடந்தான் என்றா?

படித்துவிட்டீர்களா – இந்த நான்கு வடிவங்களையும்? நன்றி.

-0-0-0-0-0-0-0-

இந்த யேட்ஸ் கவிதை எனக்குப் பிடித்தமானது. அதன் சுதியும், லயமும் சுழற்றிச் சுழற்றிப் படிப்பாளிப் பெருமக்களைக் கிண்டல் செய்வதும் (கொஞ்சம் ஓவராகவே இருந்தாலும்) எனக்குப் பிடித்தமானவை.

அதன் ஆத்மாநாம் மொழியாக்கம் – பாவம், என் வடிகட்டின முட்டாக்கூ மூஞ்சியைப் போலவே அழகாக இருக்கிறது. ஏதோ அவர் காலத்திற்குட்பட்டு, கிடைத்த தகவல்களை வைத்துக்கொண்டு, தனக்கு லபித்த ஆங்கில அறிவை வைத்துக்கொண்டு ஏதோ எழுதிவிட்டுப் போய்ச்சேர்ந்தார், பாவம்.  ஆனால், அவருடைய சில சொந்தக் கவிதைகள் எனக்குப் பிடித்தமானவை, உண்மையிலேயே கவித்துவம் கொண்டவை என்பதால் அவரை நோகடிக்காமல் விட்டுவிடுகிறேன்.

ஆனால் செந்தில்நாதன் அவர்கள்? அவருடைய முழிபெயர்ப்பு? அது பாவம், கருணாநிதி அவர்களின் திருமுகம்போலவே மிகமிகஅழகாக இருக்கிறது. கோரம். இதனைக் கல்யாணராமன் சுட்டியிருந்ததால்தான் படித்தேன், இல்லையென்றால் செந்தில்நாதன் அவர்கள் பக்கம் போயிருக்கவேமாட்டேன். ஆகவே, கல்யாண்ராமன் அவர்கள் பேரிலும் கோபம்கோபமாக வருகிறது. எனக்கு எஸ்ரா யுவகிருஷ்ண அதிஷ மணிகண்டனார்கள் போன்றவர்களின் லெவலே போதுமே!

சரி. எனக்கு இந்த செந்தில்நாதன் அவர்கள் யாரென்று தெரியாது, இவரும் பொதுவாக நல்லெண்ணம் கொண்டவராகத் தோன்றினாலும், படுமோசமாகத்தான் முழிபெயர்த்திருக்கிறார்! ஆனால் இவர் #எஸ்ரா அளவுக்குப் படுகோரோதிகோரமாக இல்லை என்பது நிச்சயம் ஆசுவாசம் தருகிறது…  ஒரு முத்தாய்ப்பாக –  ஸ்காலர்ஸ் என்றால் அறிஞர்கள், படிப்பாளிகள் என்றுகூடச் சொல்லலாம் – ஆனால் அவர்கள் சர்வ நிச்சயமாகச் ‘சான்றோர்கள்’ அல்லர்; scholars wisemen! பால்ட் ஹெட்ஸ் (bald heads)  என்றால் வழுக்கைத் தலைகள், வழுக்கைச் தலையர்கள் அல்லர். இப்படி வரிக்குவரி சொல்லிக்கொண்டே போகலாம்!

…இக்காலங்களில் – அறிந்துகொள்ள விஷயங்கள் கொட்டிக்குவிக்கப்பட்டிருக்கின்றன, அதுவும் இலவசமாகவே – இணையம் மூலமாகவும் மற்ற வழிகளிலும்… எவ்வளவு சுளுவாக விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம், மண்டையில் அடித்துச் சரிசெய்துகொள்ளலாம்… ஆனால் சிரத்தையின்மை, எந்தவிஷயத்தையுமே விட்டேற்றியாக மட்டுமே அணுகுவது என்பவை தமிழனின் அடிப்படை குணங்களாக மாறிவரும் இக்காலங்களில்…

முதல்கோணல், முற்றும் கோணல்! இவருடைய தலைப்பு: யீட்ஸ் , ஆத்மாநாம் மற்றும் நான்

முதல்கோணலானது  – யேட்ஸ் அவர்களை யீட்ஸ் எனவெழுதியது. செந்தில்நாதன் அவர்களின் பெயரை ஆங்கிலத்தில் chenthilnathan எனப் படித்துவிட்டு, தமிழில் செண்ட்ஹில் நாட்ஹன் (=நறுமணச்சாமான்குன்று சைனாக்காரனல்லன்) என்று எழுதினால், அவருடைய அழகான பெயர் கந்தறகோளமாகிவிடாதா? அவறே இதணை ஒப்புக்கொல்வாரா, சொள்ளுங்கல்?

மேலும் யீட்ஸ் என்பது eats எனப் படுத்தப்பட்டால், எனக்கு அது ரோட்டோர பஜ்ஜிக்கடையை நினைவுபடுத்துகிறதே, என்ன செய்ய! ஆனால் நல்லவேளை – யீஸ்ட் பேக்டிரியா என மேலதிகமாக இந்தக்கவிதையை #எஸ்ராபடுத்தாமல் இருந்ததற்கு, நான் அவருக்குப் பிரத்தியேகமாக நன்றி ஒன்றை நவின்றுகொள்கிறேன்.

இப்போது ‘மற்றும்’ கோணல் – வகையறா அரைகுறைத்தனத்தனத்தைப் பற்றி:

அழகான தமிழைப் பற்றி, அதன் பாரம்பரியத்தைப் பற்றி ஒரு மசுத்துக்கும் அறிந்துகொள்ளாமல் மேதாவித்தனமாக அதை மேம்போக்காகப் போற்றிவிட்டு, கமுக்கமாக அதனை ஒழித்தலைப் பார்த்தாலே எனக்கு #மற்றும் எரிச்சலாக வரும். அது என்ன ‘மற்றும்?’

நான் சர்வ நிச்சயமாக – இலக்கணசுத்தமான ஒழுக்கவாதியோ, ங்கோத்தா, #மற்றும்  தமிழ்வாத்தியோ, அல்லது #மற்றும் யேட்ஸ் கிண்டல்செய்யும் அரைகுறைப்படிப்பாளியோ அல்லன். இருந்தாலும் ஒரு பிறமொழி க்ளாஸ்ஸிக் கவிதையை/ஆக்கத்தை, தமிழ் க்ளாஸ்ஸிக்காக மாற்றும்போது இரண்டு பாரம்பரியங்களுக்கும் உரிய மதிப்புக்கொடுக்கவேண்டும் என்பது என் கட்சி. அது முடியாவிட்டால், குறைந்த பட்சம் ஒரு பாரம்பரியத்துக்காவது மதிப்புக்கொடுக்கலாம் என்பதென் எண்ணம்.

ஹ்ம்ம்… (கீழ்கண்டவற்றை என் நினைவில் இருந்து எழுதுகிறேன்; ஆகவே, நான் தவறாக எழுதியிருந்தால், அதனை/அவற்றைத் கண்டிப்பாகச் சுட்டிக்காட்டலாம்; மண்டையில் குட்டலாம்; தாராளமாகத் திருத்திக்கொள்கிறேன்; நான் என் தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டு மட்டுமே மேலெழும்ப தொடர்ந்து முயற்சிசெய்பவன். நன்றி. aao77ckn)

தொல்காப்பியத்தின் படி இந்த ‘மற்று’ (+ இதன் பொருளே/அர்த்தமே உடைய பிற சொற்கள்: மற்றும், மற்றை, மற்ற) அசைநிலையாகவும், வினைமாற்றாகவும் உபயோகப்படும் விஷயம். பிற, வேறு, இன்னொன்று, பின்பு என ஒரு விஷயத்தைக் குறிக்கப் பலவகைகளில் உபயோகமாகும் சொல்.

ஆனால் கேடுகெட்ட திராவிடக் கட்சிகளின் தொலைக்காட்சிகளிலிருந்து, மெத்தப்படித்த அரைகுறைப் பேராசிரியர்கள், தனித்தமிழ் அரைகுறைகள் (அதில் இந்த மோசடிப் பேராசிரியரான திமுக ‘பேராசிரியர்’ அன்பழகன் அவர்களும், தமிழ்தமிழ் என உயிரை விடும் விடுதலை வீரமணிகளும், #மற்றும் கருணாநிதிகளும் அடக்கம்!) உட்பட, – அ, ஆ மற்றும் என்றுதான் இளிப்பார்கள். என்னடா இது ‘மற்றும்,’ ஏண்டா இப்டீ வொளற்றீங்க என்றால், ஙே!

 

முத்தமிழ் வித்தவர் அவர்களின் சொந்த, முதன்மைக்குடும்ப ‘கலைஞர் டீவி’ எழவிலோ கேட்கவே வேண்டாம்:  ‘செண்ணை, திறிச்சி, மதுரய் மட்றும் திறுனெள்வேளியிள் கலக அடளேருகல், அரப்போற்!’ என்று செய்தி படித்தே, ங்ஙொம்மாள, கொன்றுவிடுவார்கள்… (ஆனால் இம்மாதிரித் தமிழைக் குதறுபவர்கள்தாம், தமிழைக் காப்பவர்களாகவும் மினுக்கிக்கொண்டு பவனிவருவார்கள், மற்றவர்களுக்குத் தமிழைப் பற்றி அறிவுரை நல்குவார்கள் என்பது, பொதுவாகவே என் சொந்த அனுபவம்; ஆனால்,  இந்த செந்தில்நாதன் அவர்களும் அதே வகையினரா என அறியேன்; ஒருவேளை – அவருடைய இம்மொழியாக்கம், கணநேரப் பிறழ்வாகவும் இருக்கலாம். அல்லது ஆர்வக்கோளாறு பாற்பட்டதாகவும் – இருந்தாலும்…)

இவர்களாவது பரவாயில்லை. திராவிட அரசியலில் ஈடுபட்டு திரவியம் தேடுபவர்கள், ஆகவே சராசரிக் கொள்ளைக்கார அரைகுறைகள், இவர்களுக்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு என விட்டுவிடலாம். ஆனால்…

…நான் மரபுமரபு என அரற்றிக்கொண்டு அதனைப் பேண நினைப்பவன் அல்லன். ஆனால், சர்வ நிச்சயமாக, அதற்குரிய மதிப்பைக்கொடுக்கவிழைபவன்; மேலும் – எதிலிருந்து எதை எடுத்துக்கொள்ளலாம், எதனைக் கடாசலாம், எதனை மறுபரிசீலனை செய்யலாம் எனவும் தொடர்ந்து அலைபவன், அவ்வளவுதான்.

நம் ஆட்கள் – எண்ணும்மை என்றால் ஏதோ மணல்வாரியம்மை என நினைக்கிறார்கள் என நினைக்கிறேன். ஆகவேதான் அவர்கள் எண்ணும்மை வரும் இடங்களில், ஆங்கிலத்தில் அண்ட் (=and) உபயோகப்படுத்துவதுபோல நம் ‘மற்றும்’ சொல்லையும் பயந்துகொண்டே பயன் படுத்துகிறார்கள். எழவெடுத்தவர்களுக்கு எண்ணும்மையின் உபயோகமும் ‘மற்றும்’ உபயோகமும் வேறுவேறு என்ற அடிப்படை உண்மை புரியவேயில்லை என நினைக்கிறேன்.

‘மற்றும்’ என்பதை நுணுக்கமான அர்த்தங்களை விரிக்கும் ஒரு உபாயமாக, கருவியாக உபயோகிக்கவேண்டும். ஆனால் திடீரெக்ஸ் முழிபெயர்ப்பாளர்களுக்கு இது கஷ்டம் தான்.

ஏன், தலைப்பில் உள்ள ‘மற்றும்’ கடாசப்பட்டு  ‘யீட்ஸ் , ஆத்மாநாம், நான்’ என்றிருந்தால் எந்தவிதத்தில் அது பின்னப்படுகிறது? பொருட் சேதமாகிறது? – இந்தக் கேள்விகள் கேட்கப்பட்டாலே விடைகள் கிடைத்துவிடும். ஆனால்…

இந்த ‘மற்றும்’ எழவுப் பிலாக்கணத்தை விட்டுவிடுகிறேன்; செந்தில் நாதன் அவர்களின் பிற பெயர்க்கப்பட்ட வரிகளுக்குப் போகிறேன்.

Bald heads forgetful of their sins / தங்கள் தவறுகளை மறந்த வழுக்கைத் தலையர்கள்,

ஸின் என்றால் வெறும் தவறா? அப்போது மிஸ்டேக் என்பது? எர்ரர் என்பது? எப்படி நீர்க்கடிக்கச் செய்துவிட்டார் இந்த செந்தில் நாதன்.

Old, learned, respectable bald heads / மெத்தப் படித்த, மரியாதைக்குரிய, வயதான வழுக்கைத் தலையர்கள்,

ஏனிப்படி வார்த்தைகளின் வரிசையை மாற்றினார்?  லேர்ன்ட் என்றால் மெத்தப் படித்த என்றா விரியும்? கொஞ்சமாவது யோசிக்கவேண்டாமா?

love’s despair… / காதல் நோயால்

அய்யோ! ஏமாந்த சமயத்தில், பசலை நோய் என்றெல்லாம் எழுதவில்லை என இறும்பூதடையவேண்டியதுதான்!

To flatter beauty’s ignorant ear. / சவுந்தர்யத்தின் மடக்காதுகளுக்காக யாப்பமைத்த புகழுரை

அய்யா, ரைம் என்றால் யாப்பமைத்தலா? இக்னரண்ட் என்றால் மடமையா? சவுந்தரியம் என்பது ரஜினிகாந்தியம் என்பதற்கு தமிழ் சினிமா வழியாக உறவா? இக்னரண்ட் என்றால் அறியாமையா மடமையா? தருமுசிவராம் கவிதைகளைப் படித்து அவற்றின் பாதிப்பில் எழுதினாலோ, அல்லது ஸம்ஸ்க்ருத வார்த்தைகளை வலிந்து உபயோகித்தாலே ஆட்டோமேட்டிக்காகக் கவித்துவம் வந்துவிடும்ஜனனித்துவிடும் அல்லது உரைநடைத்துவம் செத்துமரணித்துவிடும் என்கிற குண்டுதைரியமா?
All shuffle there; / இவர்கள் எல்லோரும் இங்குமங்கும் செல்வார்கள்;

அய்யா, லிஃப்கோ அகராதியைப் புறம்தள்ளிவிட்டு, கவிதை வாசிப்பைச் செய்து, அதன் பின்புலத்தில் அதனைப் புரிந்துகொண்டால், இதனை வேறுமாதிரி பெயர்த்திருப்பீரோ?

all cough in ink; / எல்லோரும் புத்தகங்களுக்குள்ளேயே இருமுவார்கள்

ஆ! அப்போது இங்க் என்றால் புத்தகமா? அல்லது பேராசிரியர்கள், அவர்களுடைய தொண்டை கமறும்போது புத்தகத்துள் வாயைப் பதித்து இருமுவதாகக் கற்பனை செய்துகொண்டுவிட்டீரோ! ஐயகோ! புக் அல்லது டோம் என்று ஒரு சொல், அக்கவிதையிலிருக்கிறதா? நீங்களே ஒரு பொழிப்புரை எழுதி அதனைக் கவிதைப் பெயர்ப்பாகக் கருதினால், போக்கத்த சாதா வாசகர்களான நாங்கள் என்னதான் செய்யமுடியும், சொல்லுங்கள்?

All wear the carpet with their shoes; / எல்லோரும் வகுப்பறைக் கம்பளங்களைக் காலணிகளால் தேயச் செய்வார்கள்;

ஆ! வகுப்பறையில் தான் கம்பளம் எனப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள். நீங்களே, இவையெல்லாம் ஒரு வகுப்பறையில் நடப்பதாகக் கற்பனை செய்திருக்கிறீர்கள்! ஆனால் யேட்ஸ் இக்கவிதையைச் சொல்ல ஆரம்பிப்பது – அந்தப் படிப்பாளிகளின் எழுத்துகளைப் பற்றியல்லவா? கார்பெட் என்றால் வெறும் தரைவிரிப்புதானே, அதற்கு ஏன் செம்மறியாட்டின் மசுத்தை சிரைத்துக் கம்பளியாக்கிக் கொண்டிருக்கிறீர்?

…சரி. எனக்கே போரடிக்கிறது. விட்டுவிடுகிறேன். அக்கப்போர்களில் ஈடுபடுவதற்கு அப்பாற்பட்டு எனக்கு மற்றவேலைகளும் இருக்கின்றன.

-0-0-0-0-0-0-

கல்யாண்ராமன் அவர்களின் ‘அறிஞர்கள்’ மொழிபெயர்ப்பு அழகாகவே வந்திருக்கிறது. அதேபோல, தெளிவாக, அவர் எடுத்துக்கொடுத்திருக்கும் கவிதைமொழிபெயர்ப்புக்கான அடிப்படைச் சட்டகமும். நன்றி.  அவருடைய ட்விட்லாங்கரின் ஒரு பகுதியைக் கீழே கொடுக்கிறேன்.:-)

“கவிதை மொழிபெயர்ப்பில் இன்றியமையாதவையாக எனக்குப் படுபவை:

ஊன்றிப் படித்தல்: கவிதையின் ஒவ்வொரு சொல்லும் வரியும் எவ்வாறு பொருள் கொள்கின்றன என்பதைப் பற்றிய துல்லியமான தெளிவு வேண்டும்.

சொற்சிக்கனம்: அடர்த்தியில்லாமல் கவிதையில்லை. எனவே, மொழியாக்கமும் கவிதையாக இருக்கவேண்டுமெனில் சொற்சிக்கனம் மிக அவசியம். கூட்டுதலும் நீட்டுதலும் தவிர்க்கப்பட வேண்டும்.

தாள லயம்: மொழியாக்கத்தில் சொற்களும் அவற்றின் ஒலியும் தொடர்ந்து வரும்போது ஒரு கதி உருவாகவேண்டும். இது மூலத்தில் இருப்பது போன்றே இருக்கவேண்டுமென்பதில்லை. ஆனால் தமிழுக்குரிய ஒத்திசைவோடு அமையவேண்டும். குறைந்தபட்சம் பிசகாமலாவது இருக்கவேண்டும்.

பிறழ்வு தவிர்த்தல்: மூலக் கவிதையில் காணப்படும் சொற்களை இயன்றவரை அப்படியே அவற்றின் பொருள் பிறழாமல் வருமாறு மொழியாக்கம் செய்த்ல் வேண்டும். கவிதை நம் தன்னிலையில் உருவாக்கக்கூடிய மனப்பதிவை மொழிபெயர்த்தால் அது பிறழ்வு. மூலத்துக்கும் மொழியாக்கத்துக்கும் உள்ள தொடர்பு எத்தருணத்திலும், இடத்திலும் துலக்கமாக இருத்தல் வேண்டும்.

மேலே கூறப்பட்டிருக்கும் எல்லா ”நெறிமுறைகளுக்கும்” ஒரு “இயன்றவரை” என்பதை சேர்த்துக்கொள்ளவும். முயல்வதும் இயல்வதும்தான் மொழிபெயர்ப்பின் சாராம்சம்.

இருமுவர் மசியாய்‘ – ஆஹாஹா! என்ன அழகான, சொற்சிக்கனம்! :-)) கல்யாண்ராமன் மொழிபெயர்ப்பில் இருக்கும் சுதியும் கவிதையுடன் ஒத்திசைந்து இருப்பது எனக்கு ஒரு நல்ல அனுபவம்.

 

மேலும் மூலத்தில் இருக்கும் அனஃபொரா – ஒரே சொல்லையே திரும்பத்திரும்ப உபயோகித்து (=All) அதனால் வரும் விரிவும் அழுத்தமும் – தமிழில் வேறுமாதிரி வருகிறது. ‘யாவரும்’ என்று போட்டுவிட்டு அந்த அனஃபொரா தொடர்பைக் கோடிகாட்டிவிட்டார், கல்யாண்; இல்லாவிடில் தமிழ் வழி நீர்த்துப்போயிருக்கும். இதை எழுதஎழுத, எனக்கு ப்பிங்க் ஃப்லாய்ட் பாட்டு ஒன்று நினைவுக்கு வருகிறது.

 

…மொழிபெயர்ப்பில் அடிப்படை நேர்மை முக்கியம் என்பது எனக்குப் படுகிறது. அதில் ‘நான் எப்படி இந்தக் கவிதையைப் புரிந்துகொண்டிருக்கிறேன்பார், எப்படிப் பொழிப்புரை கொடுக்கிறேன்பார், என்னுடைய பராக்கிரமத்தைப் பார்!’ எனும் மனப்போக்கு மோசமானது எனவும் தோன்றுகிறது. அதனால்தான் பல மொழிபெயர்ப்பாளர்கள், முழிபெயர்ப்பாளர்களாகிவிடுகின்றனர், என்ன செய்வது சொல்லுங்கள்… :-(

 

இச்சராசரித்தனம் மிகுந்த சூழலில் – கல்யாண்ராமன் அவர்கள்,   வெகுவாக மெச்சத்தக்க, கொண்டாடப்படவேண்டிய  ஒரு மொழிபெயர்ப்பாளர். தமிழ்த்தந்தை  இவர்களைப் போன்றவர்களிடம் நன்றியுடன் இருப்பான்.

-0-0-0-0-0-0-0-

இப்போது கவிதை மொழிபெயர்ப்பு குறித்த  மேற்படி கல்யாணராமக் கருத்துகளைப் பற்றி…

 

Or… this is the YOGA of translation, if you will…
தரமான மொழிபெயர்ப்பினை அகவயமாகப் புரிந்துகொள்ள அல்லது செய்ய –  கல்யாண்ராமன் அவர்களின் கருதுகோட்கள் முக்கியம். க்வாலிட்டி-தரம் என்றால் என்ன எனச் சரியாகப் புரிந்துகொள்வதும் முக்கியம். ஆனால் (க்வான்டிட்டி பூர்வமான) எண்ணிக்கைகளை வைத்துக்கொள்ளாமல் பரிந்துரைக்கப்படும் எந்தச் சட்டகமும், நம்முடைய அரைகுறைகள் ததும்பும் சூழலில் ஒத்துவராது என நினைக்கிறேன்.

ஏனெனில், நானும் இப்படியெல்லாம்தான் செய்கிறேன் என, தமக்குத்தாமே தர வரைமுறைகளை அதலபாதாளத்தில் வைத்துக்கொண்டு, ஒரு  ஈசல்கூட்டம் கிளம்பலாம். கிளம்பிற்று காண் குறுமதியாளர் கும்பலென…

நமது மொழிபெயர்ப்பு முயற்சியாளர்களுக்கு எண்ணிக்கை பூர்வமாக, குறிப்பிடத்தக்க மொழிபெயர்ப்பாளர்களின் பெயர்களைச் சொல்லி செய்யுங்கடா இதை, ங்ஙொம்மாள, படிங்கடா அதை என்றுதான் சொல்லமுடியும். அரைவேக்காட்டுச் சமூகத்துக்கு – இப்படித்தான் சொல்லமுடியும். பத்திருபது வருடம் கீழ்கண்டவற்றைத் துப்புரவாகச் செய்துவிட்டு அப்பால வாங்கடா எனத்தான் அலறமுடியும்.

1. ஒரு 500 உலகப் புகழ் பெற்ற கதாசிரியர்களை/கவிஞர்களைப் படிடா. இவற்றில் ஒரே புனைவுக்குப் பலர் விதம்விதமாக மொழி பெயர்த்திருப்பார்கள்; இவ்வனைத்தும் படிக்கப்படவேண்டியவை; இவற்றையெல்லாம் அசைபோடுங்கடா.

2. மொழியியல் துறையில் 100 புத்தகங்கள்; அழகியல் பற்றி 100புத்தகங்கள்; இலக்கிய விமர்சனம் பற்றி 50; மொழிபெயர்ப்பது எப்படி என்பதுபற்றி 10 – என்கிற ரீதியில் முக்கியமான கருத்தாக்கங்களைப் படிங்கடா.

3. ஆங்கில மொழிபெயர்ப்பாளர்களைப் படிங்கடா: ஸ்காட் மான்க்ரியெஃப், டெரென்ஸ் கில்மார்ட்டின், ஜேம்ஸ் மார்ட்டின், லிடியா டேவிஸ், டி ஜியோவன்னி, அலெக்சாண்டர் கோல்மன், பால் பௌல்ஸ்… … ஒன்றுவிடாமல்.

4. தமிழில் குறுந்தொகை, கம்பராமாயணம் போன்றவற்றைத் தீவிரமாகப் படித்தல். உரைகளோடு அசைபோடுதல். இவற்றை (நல்ல) ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க முயற்சி பண்ணுங்கடா.

5. ஆங்கிலம் <–> தமிழ் மொழிபெயர்க்கப்பட்ட சில கவிதைகளையாவது (எகா: தருமு சிவராம், கல்யாண்ராமன் செய்தது; மிகுந்த தயக்கத்துக்குப் பின் ஏகே ராமானுஜம்) திருப்பித் திருப்பிப் படித்து – மூலத்தையும், நிர்மூலத்தையும், பெயர்ப்பையும்  ஒப்பிட்டுப் பார்த்து, அவை எப்படி வந்திருக்கின்றன என அசைபோடுங்கடா.
Screenshot from 2016-07-15 13:07:52
6. ஒரு குறிப்பிட்ட கவிதையை மொழிபெயர்க்க முயற்சிக்கும்போது – அதே எழுத்தாளரின் பலப்பல பிற கவிதைகளையும், பிற எழுத்துவகைகளையும் படீங்கடா. அவற்றைச் சரியான பின்புலத்தில் புரிந்துகொள்ளுங்கடா. அக்கவிஞனின் மனத்திற்குள் அமிழ்ந்து அல்லாடுங்கடா. இல்லையேல் பெயர்த்த கவிதை, சொல்லிக்கொள்ளும்படியாக இருக்கச் சாத்தியக்கூறுகள் குறைவுடா.

7. மூலத்தின் கலாச்சாரப் பின்புலத்தையும் புரிஞ்சுக்குங்கடா.

8. மொதல்ல, வொங்க மரபைக் கொஞ்சமாச்சும் புரிஞ்சுக்கங்கடா – அப்பால அத்த மீற்றது எப்டின்னு பாக்கலாம்…

9. கவிதை மொழிபெயர்க்கிறேன்னிட்டு – பொழிப்புரை, பதவுரை எழுதறத வுடுங்கடா. வொங்க சொந்த மசலாவைக் சேத்து கலப்படம் பண்ணாதீங்கடா!  பழிப்புரையயெல்லாம் கலைங்கர் பாத்துப்பார்டா.

10. இத்தெயெல்லாம் செய்ய முடீலன்னாக்க –  அட் லீஸ்ட், அந்தப் பாவப்பட்ட கவிதைங்கள வுட்ருங்கடா, வொங்களுக்குப் புண்ணியமாப் போவுண்டா! இதையெல்லாம் செய்யாமல், ஒரு விதமான பின்புலமுமில்லாமல், வெற்றிடத்தில் வெறிகொண்டு பணிபுரிந்தாலும், உங்களால் ஒரு எழவையும் சாதிக்கமுடியாதுடா.

போங்கடா, நீங்களும் வொங்களோட #மற்றும் பெயர்ப்புப் பம்மாத்தும்…

 

அலக்கியம், காப்பிக்கடை, அரைகுறைத்தனம் – இன்னபிற இழவுகள்… (26/08/2015 வரை )

 

8 Responses to “நா. முத்துக்குமார், அரைகுறை, வில்லியம் பட்லர் யேட்ஸ், கவிதைகளைப் புரிந்துகொள்ளல், ஆத்மாநாம், #மற்றும், செந்தில்நாதன், கல்யாண்ராமன், மொழிபெயர்ப்பது எப்படி”

  1. ஆனந்தம்'s avatar ஆனந்தம் Says:

    மற்றும் உபயோகப்படுத்தக்கூடாது என்றால் ஆங்கிலத்தின் andக்கு வேறு என்ன மாற்று?
    அதாவது ஒரு பட்டியலின் கடைசிக்கு முந்தைய சொல்லுக்கும் கடைசிச் சொல்லுக்கும் இடையில் இணைப்பாகப் பயன்படுத்த வேண்டிய சொல் எது? அல்லது தமிழ் இலக்கண மரபில் அப்படி ஒரு சொல் இல்லையா?
    (அவற்றுடன்/ அவர்களுடன் (இடத்தைப் பொறுத்து) என்பது போன்ற பயன்பாடு சரியாக வருமா?)


    • AndAndam அவர்களே!

      and போடவேண்டியதேயில்லை. 1,2,3 என எழுதினால்/பேசினால் போதும். 1,2 மற்றும் 3 தவறு.

      மற்றும் என்பது ‘வேறு’ பொருளைக் குறிக்க, அப்பொருளின் விசித்திரமான குணாதிசியத்தைக் குறிக்கவென்றெல்லாம் பயன்படுத்தலாம். அசைநிலையாகவும் (=http://www.tamilvu.org/courses/degree/a021/a0213/html/a021334.htm) வினைமாற்றாகவும் (=http://www.tamilvu.org/slet/l0B20/l0B20pd2.jsp?bookid=10&pno=420) பயன்படும்.

      ரொம்பவும் நீர்க்கடிக்கச் சொல்லப்போனால் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத வரிசையில் (ஹெடரஜனஸ் லிஸ்ட்) என்றால் மற்றும் ஒத்து வரலாம். அவ்வளவுதான்.

      என் கருத்தில் (தொல்காப்பியத்தின் கருத்துதான் இது, நல்ல தமிழின், நம் பாரம்பரியத்தின் விழைவாளர்களின் எண்ணமும்தான்!) சுமார் 99.999999% மற்றும்கள் மிகத் தவறாகத்தான், உளறலாகத்தான் உபயோகிக்கப் படுகின்றன.

      நன்றி.

  2. ஆனந்தம்'s avatar ஆனந்தம் Says:

    உங்களுடைய கட்டுரையின் பொருள்படிப் பார்த்தால் யீட்ஸ், ஆத்மாநாம் மற்றும் நான்(செந்தில்நாதன்) என்பது ஹெடரஜனஸ் லிஸ்ட்தானே? ;-)
    செந்தில்நாதன் மற்றும் போட்டது சரிதானே? ;-)


    • ஹ்ம்ம்… அப்படிச் சொல்கிறீர்களா? உங்களுக்குத் திமிர் அதிகமாகிவிட்டது, அம்மணீ!

      கிண்டல்களுக்கு அப்பாற்பட்டு — ஆனால் செந்தில் நாதன் அவர்கள் அப்படி நினைக்கவில்லை எனத்தான் படுகிறது. கட்டுரையைப் படித்தேன், தன்னை வேறுபடுத்திக் காட்டிக்கொள்ளும் (நேரிடையாகவோ, பூடகமாகவோ உயர்த்தியோ தாழ்த்தியோ) போக்கு அதில் இல்லையே! மனிதர் கொஞ்சம் ஸீரியஸானவர் போலவே படுகிறார்!

      புதுமைப் பித்தனின் ‘வாடா மல்லிகை’ கதையைப் போய் ‘மங்காத மல்லி’ (‘unfading jasmine’) எனப் பெயர்த்திருக்கிறார், பாவம். ‘unwilting(!) jasmine’ என்று இருந்திருக்கலாம் அல்லவா? வெள்ளை நிறம் மங்கி என்னவாகப் போகிறது, மங்காமலிருந்து எப்படிப் பளீரென்று ஆகப்போகிறது, சொல்லுங்கள்? (https://medium.com/@chenthil_nathan/fresh-forever-a1d06c58dc4)

      பாவம், முயற்சி செய்துகொண்டிருப்பவரை ஏன் உலுக்கவேண்டும் என்றும் தோன்றுகிறது. ஆனால் சிரத்தை வேண்டுமல்லவா? :-(

      • Sivakumar Viswanathan's avatar Sivakumar Viswanathan Says:

        யேட்சை ஒதுக்கிவைத்துவிட்டு மூன்று கவிதைகளாக படித்துப் பார்த்ததில், செந்தில்நாதன் மிக இயல்பாகத்தெரிந்தார். ஆனால் நீங்கள் சொல்வது போல் பொழிப்புரையாக… கவிதை என்பதே தர்க்கத்திற்கு வெளியே வைத்தே பார்க்கவேண்டிய விஷயமாக நான் நினைக்கிறன். பல வருடங்களுக்கு முன்பு சுஜாதா ஹைக்கூ இலக்கண வரையறை பற்றி பேசி ஒரு சர்ச்சையில் சிக்கியதாக நினைவு. உங்கள் பன்முக அறிவு,விழைவு ஆச்சர்யமூட்டுகின்றன. we will keep foraging in your field ,by denial or defiance or acceptance .


  3. […] மொழிபெயர்ப்பு ஒன்றை விமரிசித்து அவர் மிகக் கடுமையாக எழுதியிருப்பது  மிகுந்த மனவருத்தத்தை அளிக்கிறது. […]


  4. வெகு நாட்களாகி விட்டது என்றாலும், இந்தப் பதிவு என்னை நிறுத்தி விட்டது. நான்கு பேர் தான் நாயகர்கள் என்றாலும், நீங்கள் ஏழெட்டு பேரை இழுத்துப் பிடித்து அடித்திருக்கின்றீர்கள். கொஞ்சம் அதிகம் தான். ‘எல்லோரும் கையில் இருமுவர்; எல்லோரும் தம் காலணிகளுடன் கார்பெட் அணிவர்’ என்று அழகிய தமிழில் எழுதிய ஆத்மாநாமை, அவருக்கு லபித்த ஆங்கில அறிவை மன்னித்து விட்டிருக்கின்றீர்கள். செந்தில்நாதன் அகப்பட்டுக் கொண்டார். சிவகுமார் விஸ்வநாதன் எழுதிய மாதிரி, செந்தில்நாதன் தான் எனக்கும் இயல்பாக தெரிகின்றார். 1980 களின் ஆரம்பத்தில் Octavio Paz என்ற பெயரை உச்சரிப்பதில் ஒரு uniformity வருவதற்கே வெகு காலம் பிடித்தது. இன்றுவரை Sartre ன் பெயர் மூன்று வகையாக எழுதப்படுகின்றது. அழியாச்சுடர்/Undying flame (Lakshmi Holmstorm) என்றவுடன் அதற்கு ஒரு mortality வந்து விடுகின்றது. சரியான வார்த்தை இன்னும் யோசித்துக் கொண்டிருக்கின்றேன்.
    திரு. கல்யாணராமன் தமிழின் முதன்மை மொழிபெயர்ப்பாளர் சந்தேகமில்லை. செந்தில்நாதன் ஆத்மாநாமை விட 1000 மடங்கு சிறந்த மொழிபெயர்ப்பாளர். குறைந்தபட்சமாக, syntactic order அவருக்குத் தெரிந்திருக்கின்றது. இறுதி இரண்டு வரிகள் தான் மிகப்பெரிய மாறுபாடு கொண்டிருக்கின்றது. உங்களை மாதிரி என்னால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. அதனால்தான் திரும்ப திரும்ப பார்த்து தவிர்க்க முடியாமல் இதை எழுதுகின்றேன். இந்தக் கவிதை பற்றி, முக்கியமாக இறுதி இரண்டு வரிகள் பற்றி Emily Ardagh என்பவர் எழுதியவை இணையத்தில் காணக்கிடைக்கின்றது. நீங்களும் படித்திருக்கலாம். நன்றி
    செல்வக்குமார்


    • ஆ! சும்மா ஒரு பேச்சுக்கு எழுதினால், மண்டையில் இப்படியா குட்டுவார்கள்? ;-)

      முத்துகுமார் – இந்த செந்தில் நாதன் அவர்கள் யாரென்று எனக்குத் தெரியாது. இப்போதைக்குத் தெரிந்துகொள்ள ஆர்வமும் இல்லை. ஆனால், உங்களைப் போலவே என்னுடைய மூன்று நண்பர்கள் இந்தப் பதிவைக் குறித்து தங்கள் வருத்தத்தை மின்னஞ்சலில் தெரிவித்திருக்கிறார்கள். செந்தில்நாதன் அவர்களைப் பற்றிக் கட்டுரை நீளத்தில் ஆதரிப்புரைவேறு – ஆனால் அவற்றைப் பதிக்கக்கூடாது எனக் கோரிக்கை.

      அவர் நிச்சயம், ​எந்த விஷயத்திலாவது​ பராக்கிரமம் மிக்கவராகத்தான் இருக்கவேண்டும். எனக்கு உங்கள் கருத்துகளின்மீது மதிப்பு உண்டு. ஆகவே, உங்கள் பார்வையில் செந்தில் நாதன் அவர்கள் மிகச் சிறப்பாக எழுதிய அல்லது மொழிபெயர்த்த விஷயம் என ஒன்று இருந்தால், அதனை எனக்குச் சுட்டிக்கொடுக்க முடியுமானால், நன்றியுடன் இருப்பேன்.

      அவர் பெயரில் ஏதாவது புத்தகம் வந்திருந்தால் – வாங்கிப் படிக்க நான் தயார்.

      நன்றி.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Your email address will not be published. Required fields are marked *