ஸெல்மா லாகலொஃப்: #எஸ்ரா அட்ச்சு வுடுவதற்கும் ஒரு அளவு வேண்டும்… ஆனால்…
January 6, 2016
என்னுடைய பிரதம செல்லமான மகாமகோ #எஸ்ரா ஒரு கட்டற்ற கேளிக்கைக் களஞ்சியம்! வேறென்ன சொல்ல. ;-)
பின்புலம்: இலக்கியத்துக்கு நொபெல் பரிசு பெற்ற பரிதாபமிக்க ஸெல்மா லாகலொஃப் அவர்களின் நாவல் ஒன்றை பாவப்பட்ட கநாசு அவர்கள் மொழிபெயர்த்தார். இரு புத்தகங்களும் முக்கியமானவையே.
ஆனால், என் பிரச்சினை என்னவென்றால், என் பேராசான் எஸ்ரா அவர்கள், இப்புத்தகத்தையும் விக்கிபீடியாகந்தறகோளத்தையும் படித்துவிட்டு ஒரு கட்டுரையைத் தேற்றிவிட்டார். இந்த ‘ஸ்காலர்லி’ கட்டுரையில் உள்ள நகைச்சுவை (= ஜ்வெல்லரி-டேஸ்ட் ©எஸ்.ராமகிருஷ்ணன்) சிலபலவற்றை உங்களோடு பகிர்ந்துகொள்ளும் ஆவலில்தான் இந்த எழவெடுத்த பதிவு. மன்னிக்கவேண்டாம்.
-0-0-0-0-0-0-0-0-
எஸ்ரா உவாச: “செல்மா லாகர்லெவ் 1958-ம் ஆண்டு வாம்லேண்ட் என்கிற இடத்தில் பிறந்தார். “
ஆனால், எஸ்ரா அவர்கள், தான் உட்கார்ந்த இடத்திலேயே இருந்துகொண்டு, தம் கற்பனைக் கோவேறு கழுதையில் ஆரோகணித்து, அவரோகணிக்காமலேயே அட்ச்சுவுடும் திறம் என்று ஒன்றும் இருக்கிறதே!
நிலைமை இப்படி இருந்தாலும், அந்தத் திறமையால் எழும்பும் அலக்கியங்களை, என்னுடைய சக-தமிழ்க்கூவான்கள் படித்து ஒரு எதிர்வார்த்தையோ எதிர்வினையோகூட இல்லாமல், அப்படியே அள்ளிப் பருகி விழுங்கியே விடுகிறார்கள்!
எஸ்ரா உவாச: “இளம்பிள்ளை வாதம் தாக்கியவர் என்பதால் சிறுவயது முழுவதும் வீட்டுக்குள்ளும் மருத்துவமனைகளிலும் அடைந்து கிடந்தார். “
ஸெல்மா அவர்களுக்கு, பிறப்பிலேயே, கால்கள் உடலின் மற்ற பாகங்களுடன் சேருமிடத்தில் (ஹிப் ஜாயின்ட்) இணைப்பு சரியாக இல்லாமல் இருந்தது; ஆனால், விடலைப்பருவத்திற்கு முன்னமேயே அவர் கால்கள் சரியாகிவிட்டன. அவர் ஒன்றும் வீட்டுக்குள்ளும் மருத்துவமனைகளிலும் அடைந்து கிடந்து விரக்தியால் பாதிக்கப்பட்டு உளறிக் கொட்டவில்லை. தன் 23வது வயதில்தான், தான் வசித்துக்கொண்டிருந்த பண்ணையை விட்டுவிட்டு, ஆசிரியப் பயிற்சி பெறுவதற்காக ஸ்டாக்ஹோம் நகருக்குச் சென்றார். (ஆனால், இதில் ஏதாவது ஏகாதிபத்திய சதியெழவு இருந்திருக்கலாம். ஆகவே – எஸ்ரா அவர்கள், அந்த மருத்துவமனை விபரங்களை விபரமோதிவிபரமாகத் தெரிவித்தால் தேவலை. எது எப்படியோ, இந்த வரலாற்று மோசடியை தைரியமாக வெளிக்கொணர்ந்த எஸ்ரா அவர்களுக்கு ‘தமிழ்நாட்டின் ஸ்னொடென்‘ என்ற பட்டத்தை நான் அளிக்கிறேன். #எஸ்ராலீக்ஸ் வாழ்க!)
…மேலும், பீலாவிடுவதைத் தவிர வேறு ஜோலியே இல்லாமல் இருக்கும், என் மகாமகோ பேராசான் எஸ்ரா சொல்வது போல ஸெல்மா அவர்களுக்குப் போலியோவும் வரவில்லை.
ஒருவேளை இளம்பிள்ளைவாதம் என அவர் சொல்லவந்தது, மூத்ததாத்தாமுதல்வாதத்தின் ஒன்றுவிட்ட அக்காள் மகனோ?
அல்லது முதிர்முதலியார்போதம் என்பதன் எதிற்பதமோ? அல்லது இளம்பார்ப்பனவாதத்தின் போட்டியாளப் பதமோ?
யாராவது, என்னைக் கடந்தேற்ற முடியுமா… ப்ளீஸ்! :-(
எஸ்ரா உவாச: “இதன் பூரணத்துவம் நாவலை தனியொரு சிகரமாக உயர்த்துகிறது.“
இது என்ன எழவு பூரணத்துவமோ? என்ன சிகரமோ! கடவுளே!! ஒருவேளை, நம் செல்ல எஸ்ரா, கொழுக்கட்டைத்துவத்தில் பொதிந்திருக்கும் பூரணத்துவம் பற்றிச் சொல்லவருகிறாரோ எனச் சந்தேகமாகவே இருக்கிறது! :-(
கருத்துப்படம்: திராவிட முப்பெரும் கொழுக்கட்டைகள், ஐம்பெரும் கொழுக்கட்டைகள்!
கொழுக்கட்டைத்துவ ப்ரஹ்மனின் உள்ளே பூரணத்துவ ஆத்மன்; இதுதாண்டா சரணாகதித்தத்துவம்!
ஒரு எழவும் சொல்லத் தேவையில்லையென்றாலும், ஒன்றும் சொல்லத் தோன்றவில்லையானாலும், ஏதோ ஒரு அரிப்பினால்தான் இந்த 1) பூரணத்துவம் 2) தன்னளவில் அமைதி 3) கவித்துவம் 4) வாழ்வின் அர்த்தம்… … போன்ற வெட்டிச் சொற்றொடர்களும் சொற்களும் மானாவாரியாகத் தடுக்கி விழுந்து படாதபாடு படுகின்றன.
எஸ்ரா உவாச: “மனிதனுடன் பழகிய புறாக்களைப் போல உயர்ந்த சிந்தனைகள் அவன் வார்த்தைகளில் தானே வந்து சிக்கிக் கொண்டன.“
இதைப் படிக்கும்போதே அதன் கவித்துவம் சொட்டும் வரிகளால், உருவகங்களின் உருவாக்கத்தினால் என் மனமும் வேட்டியும் நெகிழ்ந்துவிட்டன. ஆ! அய்யய்யோ!! நான் கோமணம் கட்டிக்கொள்ள மறந்துவிட்டேன் போலிருக்கிறதே! வேட்டி சனியனும் எங்கு போனது என்றே தெரியவில்லையே! அட ராமகிருஷ்ணா!!
இன்னாபா இதூ! புறா, உயரப்பறந்து அதனுடைய சிந்தனைகளும் ஆகவே உயரப் பறந்து, பின் கொக்கியில் சிக்கி… புறாக்கள் புர்புர்ரென்று தனக்குத்தானே அமைதிகண்டு மனிதர்களிடம் ‘சிக்கி’விடுமா? அவற்றை அப்படி பழக்கப்படுத்த முடியுமா? புறாக்களுக்கும் உயர்ந்த எண்ணங்களுக்கும் எண்ணய்யா சம்பந்தம்? வெளக்கமே கொடுக்கமுடியாத அளவுல, சரியான வெளக்கெண்ணெய் அலக்கிய எள்த்தாளராராக் கீறாரேபா!
எப்டீபா வொங்க எஸ்ரா இப்டீல்லாம் எழுதறாரு! ஒர்ரேடியா புல்லரிக்குதுபா!
இம்மாதிரி மாணிக்கங்களுக்கு அப்பாற்பட்டு, கநாசு முன்னுரையிலிருந்தே சில வாக்கியங்களைத் தடுத்தாட்கொண்டு தன்னுடைய கட்டுரையில் – தானே நினைத்ததை எழுதுகிறாரா, அல்லது கநாசு அவர்களை மேற்கோள் காட்டுகிறாரா என்பது தெரியாமல் கலந்தடித்துக் கதம்பமாக பரிமாறியிருக்கிறார்.
வீடில்லாப் புத்தகங்கள் 50: வான் தொடும் குரல்! படித்து இன்புறவும்.
இதன் தலைப்பைப் பார்த்தால், என் செல்ல எஸ்ரா அவர்கள், 50 புத்தகங்களைப் பற்றி இப்படி 50 கட்டுரைகளைத் தேற்றியிருக்கலாம் எனப் படுகிறது.
கொஞ்சம் பயமாகவே இருக்கிறது. உடம்பெல்லாம் உதறல் எடுக்கிறது. பயங்கரபீதியில் இருக்கும் எனக்கு பேதி வரும்போல இருக்கிறது. தயவுசெய்து உங்களில் யாராவது என் கணிநி இருக்கும் மேஜையிலிருந்து என் பாத்ரூம் வரை கையைப் பிடித்துக்கொண்டு அழைத்துச் செல்ல முடியுமா?
மேலதிகமாக, நான் தூங்கும்போது, அதில் புறாக்கள் என்னைக் கொத்திப் பிய்த்துத் தின்பது போல, கொடுங்கனா எழவு ஏதாவது கண்டு அலறினால் என்னை ஆசுவாசப் படுத்தி, எஸ்ரா புத்தகங்களைக் கூழாக்கி, உப்பும் காரமும் சேர்த்து ஒரு டம்ளர் சூடாக எனக்குக் கொடுக்க முடியுமா?
நன்றி.
- ஏற்கனவே மிகுந்த துக்கத்தில் இருப்பவனுக்கு, மேலதிகமாக மாரடைப்பு ஊக்கபோனஸ்! :-( 04/01/2016
- அலக்கியம், காப்பிக்கடை, அரைகுறைத்தனம் – இன்னபிற இழவுகள்… (26/08/2015 வரை )
January 7, 2016 at 09:11
“ஒருவேளை இளம்பிள்ளைவாதம் என அவர் சொல்லவந்தது, மூத்ததாத்தாமுதல்வாதத்தின் ஒன்றுவிட்ட அக்காள் மகனோ?
அல்லது முதிர்முதலியார்போதம் என்பதன் எதிற்பதமோ? அல்லது இளம்பார்ப்பனவாதத்தின் போட்டியாளப் பதமோ?
யாராவது, என்னைக் கடந்தேற்ற முடியுமா”
சிரித்து “மாள” முடியவில்லை!.ஐயோ பாவம் அவரை விட்டு விடுங்கள் ப்ளீஸ்