ஒரு திருத்தம்: பாவம், எம்ஜிஆரை போயும்போயும் கருணாநிதியாக்கி விட்டேனே! மன்னிப்பு உண்டா? :-(

July 2, 2015

நேற்றைய பதிவில் (பாவப்பட்ட தமிழகத்தின் அயோக்கிய திராவிடக் கொள்ளைக்காரர்கள் பற்றிய பழங்கதையாடல்களின் தேவை) கீழ்கண்டவாறு எழுதியிருந்தேன்.

/* ஒரு எடுத்துக்காட்டாக – நீதிபதி பால் கமிஷன் என்று ஒன்றிருந்ததா, அதன் குறிக்கோள் என்ன, கருணாநிதி அரசின்போது  அதன் ரிப்போர்ட் எப்படி மாயமாகக் ‘காணாமல்’ போனது என்பதெல்லாம் யாருக்குத் தெரியும்? */

இதில் கருணாநிதி என்பது எம்ஜிஆர் என இருந்திருக்கவேண்டும். என் தவறு. ஆச்சரியம் என்னவென்றால், ஒருவரும் இதுவரை இதைச் சுட்டிக் காட்டவில்லை!  ‘கருணாநிதி எதிர்ப்பென்றால், கண்ணை மூடிக்கொண்டு எந்த எழவை வேண்டுமானாலும் படிப்போம்!’ என்றிருப்பவர்கள் மட்டுமே ஒத்திசைவுக்கு வருகை தருகிறார்களா என்ன? ;-) ஆனால், அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. நம் தலைவரின் நம்பகத் தன்மை என்பது அப்படிப்பட்ட பராக்கிரமம் வாய்ந்தது, வேறென்ன சொல்ல!

-0-0-0-0-0-

ஆனால், இது ‘மாயமாகக் ‘காணாமல்’ போனது’ என்பது, மேதகு கருணாநிதி அவர்கள் முன்னெடுத்து நடத்திய திருட்டுத்தனம் + மேலதிகமாக அரசு விவகாரங்களைத் தேவையற்று (=சுயநலத்துக்காக மட்டுமே) அடிப்படை அரசுவிதிகளுக்குப் புறம்பாக வெளியிட்ட கிரிமினல் குற்றம்.

ஹ்ம்ம்… கவனக் குறைவாக இத்தவற்றைச் செய்ததால் :-( – மீட்சிக்காக, ஒரு பிராயச்சித்தமாக – மண்டையில் அடித்துக்கொண்டு – அந்தக் காலத்தில் நடந்த பால் கமிஷன் விவகாரத்தைப் பற்றிச் சில விவரங்களை – என் நினைவிலிருந்து, குறிப்புகளிலிருந்து கொடுக்கிறேன்.  B-) (இவற்றின் விவரங்களை ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்திருக்கிறேன், சரியா?)

 -0-0-0-0-0-0-0-0-

சி. சுப்ரமணிய பிள்ளை என்பவர், திருச்செந்தூர் முருகன் கோவிலில் ‘நகைகளைச் சரிபார்க்கும் அதிகாரி’யாக (Verification Officer-Jewels, இந்து அற நிலையத் துறை(HR&CE Dept), தமிழக அரசின் கீழ்) பணியாற்றிக்கொண்டிருந்தார். கோவில் விடுதியில் சந்தேகாஸ்பதமான முறையில், திடீரென்று நவம்பர் 26, 1980 அன்று தூக்கு மாட்டிக்கொண்டு இறந்தார், பாவம். சுபம். அப்போது இந்த பரிதாபம் தொடர்பாக, பலப்பல வதந்திகள் உலவின. ஆனால் அனைவற்றிலும் ஒரு பொதுச் சரடு இருந்தது.

ஆனால் – அப்போதைய எம்ஜிஆர் அரசு இதனை ஒரு வெறும் தற்கொலை நிகழ்வாக, வெகு சௌகரியமாகப் பார்த்தது. ஆனால் அவர் அரசும் ஒரு திராவிட அரசுதானே? ஆக, இந்தச் சப்பைக்கட்டலும் – இந்து கோவில்கள், மடங்கள், ஆதீனங்கள் – அவற்றின் அளப்பரிய (அவற்றின் சரியான பராமரிப்புக்குத் தேவையான) சொத்துகள் பொதுச் சொத்துகள் எல்லாம் கயமையுடன் கொள்ளை அடிக்கப்பட்டு கபளீகரம் ஆகிக் கொண்டிருந்த மகாமகோ திராவிடப் பாரம்பரியத்தின் படி ( கடமை களவு, கண்ணியம் காமம், கட்டுப்பாடு சுட்டுக்கொள்/ஊத்திமூடு) நடந்த முறைகேடுகளின் தொடர்ச்சிதான்!

சரி. அப்போதைய தமிழக அற நிலையத் துறை அமைச்சர், தன்னைப் பற்றிய வீங்கிய மதிப்பும், மேற்கண்ட திராவிடப் பாரம்பரியத்தில் ஊறி உப்பிய மனப்பாங்கும் கொண்ட மேதகு இராம ‘ஆர்எம்’ வீரப்பன் அவர்கள். அப்போதைய செய்திகள் அவரை நேரடிக் குற்றவாளியாகக் காட்டின. ஏனெனில், திராவிடப் பாரம்பரியத்தின் படி, திருச்செந்தூர்முருகனின் நகைகளும் களவு போயிருந்தன – ஒரு வைரவேல் உட்பட. அப்போதைய எதிர்கட்சித் தலைவரான கருணாநிதி அவர்களுக்கு இம்மாதிரி ‘களவு,’  ‘சந்தேகாஸ்பதமான மரணம்’ போன்றவையெல்லாம் எப்படி திராவிடத்தனமாக அமோகமாக நடக்கும் என்பவை பற்றியெல்லாம் நேரடி அனுபவம் பலகாலமாக இருந்ததால் – அவர் நேரடியாக அறிக்கைகள் மூலமாகவும், மேடைப்பேச்சுகள் மூலமாகவும், சட்டசபை நடவடிக்கைகள் மூலமாகவும் அஇஅதிமுக அமைச்சர் வீரப்பனைக் குற்றவாளியாகக் குற்றம் சாட்டினார்.

இது தொடர்பாக – மேடைப் பேச்சுகளில் அளவு கடந்த கொச்சைத் தனத்துடன் (வீரப்பன் மனைவி பற்றியெல்லாம்கூட) மிகவும் கீழ்த்தரமாக, அதாவது திராவிடத்தனத்துடன் (எடுத்துக்காட்டு: வீரப்பனின் திருட்டுவேல், அவர் மனைவியின் உடலுறுப்பு ஒன்றில் வைக்கப் படுவதாக) திமுகவின் முன்னணிப் பேச்சாளர்கள் (கருணாநிதியும் மேடையில் இருக்கும்போதுகூட, ஆகவே அவருடைய ஆமோதிப்புடன்) பேசினர். வீரப்பனாதிகளும் பதிலுக்கு நிறைய இம்மாதிரி பேசினர். ஒருபடி மேலேபோய், சுப்பிரமணியபிள்ளை அவர்கள் – தான் நகைகளைத் திருடி மாட்டிக்கொண்ட அவமானத்தால் தற்கொலை செய்துகொண்டதாகவும் வதந்திகளைப் பரப்பினர். கருணாநிதியும் போராட்டத்துக்குப் பின் போராட்டம், வதந்திக்குப் பின் வதந்தி என்று போராடிக்கொண்டிருந்தார். நிறைய செய்திகள், தமிழர்களின் வம்புவாய்க்குத் தீனிபோட வந்துகொண்டேயிருந்தன.

–0-0-0-0-0-0–

இப்படியாகத்தானே… தொல்லை தாங்காத எம்ஜிஆர், வீரப்பனைத் தன் தோட்டத்துக்குக் கூப்பிட்டுக் கடிந்துகொண்டு (இம்மாதிரி ஒரு ஊழல்விஷயத்தில் முசிறிப்புத்தனை, தன் தோட்டத்திற்கு அழைத்து, அவரைத் தன்னுடைய தோல்பெல்ட்டைக் கழற்றி விளாறியது இப்போது நினைவுக்கு வருகிறது!) – அதேசமயம் இன்னொருபக்கத்தில் ஒரு விசாரணைக் கமிஷனையும் நியமித்தார்.

பெரும்பாலும் நியாயஸ்தரான நீதிபதி சிஜெஆர் பால் அவர்களும், தன்னுடைய விசாரணைக் கமிஷன் வேலைகளைக் கடகடவென்று முடித்துவிட்டு (ஐந்தாறு மாதங்களிலேயே என நினைவு) – அரசுக்குத் தன் அறிக்கையைக் கொடுத்த அடுத்த சில நாட்களில் வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டார் – அம்பேல்?

எம்ஜிஆர் அரசுக்குப் பிரச்சினை என்னவென்றால் – இவ்வறிக்கையில் பால் அவர்கள், சுப்பிரமணியபிள்ளையின் இறப்பு தற்கொலை காரணமாக இல்லை என்றும், சந்தேகாஸ்பதமான முறையில்  அவர் இறந்துள்ளதால் (‘because of homicidal violence’), அந்த விவகாரத்தைத் தீற விசாரிக்கவேண்டும் என்றும் எழுதியிருந்தார். இந்த அறிக்கையைச் சமர்ப்பிக்கலாமா என அரசு யோசித்துக்கொண்டிருக்கும்போதே…

… அவசரம் அவசரமாக,  26 நவம்பர் 1981 அன்று கருணாநிதி அவர்கள், ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தைக் கூட்டி அதில் அரசுக்கென்று பிரத்தியேகமாக, நீதிபதி பால் அவர்கள் அளித்திருந்த அறிக்கையை தன்னிச்சையாக வெளியிட்டார் – சட்டத்திற்கும், அரசாண்மைக்கும் புறம்பாக…

இந்த அறிக்கை அவருக்குக் கிடைத்தது சட்டவிரோத வழிமுறைகளால் – அதாவது இரு அரசு அலுவலர்கள் மூலமாக: 1) கே ஷண்முகநாதன் (இவர் தமிழக அரசின் செய்தித் தொடர்புதுறையில் இருந்தாரென நினைவு) 2) சதாசிவம் (இவர் மொழி பெயர்ப்புத் துறையில் இருந்தார்; அறிக்கையை, ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிமாற்றம் செய்த பணியில் ஈடுபட்டவர் இவர்).

இவர்கள் இருவரும் கருணாநிதிக்காக (மேலும் சுய ஆதாயங்களுக்காக++) இந்த அறிக்கை ஆவணங்களின் மூலங்களைத் திருடிக்கொடுத்து – கருணாநிதியின் மதிப்பில் உயர்ந்தனர்; இதனால்தான், அந்த அறிக்கை அரசு கோப்புகளிலிருந்து திடீரென்று மாயமாகக்  ‘காணாமல்’ போனது.

இந்த நிகழ்வினால் கோபமடைந்த எம்ஜிஆர் அரசு இந்த இரு திருட்டு அதிகாரிகளையும், தற்காலிக பணி நீக்கம் செய்து விசாரணை நடத்த ஆரம்பித்தது. அதே சமயம் இந்த ஆவணத் திருட்டை ஆராய்ந்து ஒரு வழக்கையும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்தது. இதில் நான்காம் குற்றவாளியாகக் கருணாநிதியும் சேர்க்கப்பட்டிருந்தார். ஏனெனில் இந்திய சட்டங்களின்படி (அரசை நடத்தும் வழிமுறைகளையே/நெறிகளையே விடுங்கள்!) அவர் செய்தது ஒரு கிரிமினல் குற்றம்.

ஆனால், நீதிமன்ற விசாரணைக்கு –  அரசுதரப்பும் நீதிமன்றமும் பலமுறை முயன்றும் கடைசிவரை கருணாநிதி போகவேயில்லை. ஏனெனில் அவருக்குத் தெரியுமல்லவா அவர் செய்துள்ள கேவலமான குற்றத்துக்கு தண்டனை நிச்சயம் என்று? மடியில் கனம் இருப்பதால்தானே வழியில் பயம்??

… ஆகவே, இவ்வழக்கைத் தீவிரமாக விசாரிக்க முயன்று, ஆனால் கருணாநிதியின் பொறுப்பற்ற செயல்பாட்டால்  மிகவும் வெறுத்துப்போன நீதிபதி எஸ்ஆர் சிங்காரவேலு அவர்கள், “குற்றம் சாட்டப்பட்டவர் எண் நான்கு, வலுக்கட்டாயமாக நீதிமன்றத்துக்குக் கொணரப்பட்டாலும் கூட அது வியர்த்தமாகத்தான் இருக்கும்; மேலும் கொடுக்கப்படும் மருந்தானது, நோயின் தீவிரத்தை மேலும் சிக்கலாக்கும்!” என்று சொன்னார்.  பாவம், பண்பட்ட நீதிமானும் புத்திசாலியுமான அவருக்குத் தெரியாதா, கருணாநிதியின் பவிஷு?  (“Even if the 4th accused is brought to Court through some coercive steps, it would be futile and the proposed remedy would only aggravate the malady!”)

-0-0-0-0-0-0-

பின்குறிப்பு1:   அரசு ஆவணத்தைத் திருடி மாட்டிக்கொண்ட ஷண்முகநாதன் என்ன ஆனார்? அவர் பதவிநீக்கம் பெற்றார். ஆனால் அவர் செய்த காரியங்களுக்காக கருணாநிதியால் தொடர்ந்து பேணப்பட்டார். பின்னர் 1989ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த கருணாநிதி, இந்த மனிதருக்கு மீண்டும் பதவி வழங்கி தனது நேர்முக உதவியாளராக ஆக்கிக் கொண்டார். இது மட்டுமல்ல – அந்த அதிகாரிக்கு 8 ஆண்டுகள் பணியில் இல்லாத காலத்துக்கும் ஒரே நாளில் சம்பள பாக்கியை வாரி வழங்கினார். பின்னர், ஷண்முகநாதன் பணிமூப்பு அடைந்தபின்கூட  இந்த நாள் வரை – இந்த மனிதர் கருணாநிதியின் பிரத்தியேக உதவியாளராகத் தொடர்கிறார். கடந்த கருணாநிதி ஆட்சியில் இந்த மனிதர் போட்ட ஆட்டமும் (=ஆட்டையும்) கொஞ்சநஞ்சமில்லை. ஆக, திருட்டின் மூலகர்த்தா யார்?DMK_GENERAL_COUNCI_1686335fபடத்தில் கருணாநிதி அவர்களின் வலது பக்கத்தில் பவ்யமாக நின்றுகொண்டு இருப்பவர்தான் இந்த மனிதர். (நன்றி: த ஹிந்து)

பின்குறிப்பு 2: அவ்வப்போது, ஏன் இன்றுவரை மேதகு கருணாநிதி அவர்கள் – இந்த பால் கமிஷன் ஆவணம் காணாமல் போனதற்கு எம்ஜிஆரே காரணம், அவர் ஏன் பதவி விலகவில்லை எனத் தொடர்ந்து சொல்லி வருகிறார். இது மிகவும் ஆச்சரியமான விஷயம்தான். தான் ஒரு பொருளைத் திருடி மாட்டிக்கொண்டாலும், திருடுகொடுத்தவன்தான் குற்றவாளி என்பது திராவிடத்தன நியாயவாதம்தான்!

இச்சமயம் ஒரு விஷயத்தைச் சொல்லவேண்டும்: அறிவியல் பூர்வமாக ஊழல் செய்த மனிதர் என நீதிபதி சர்க்காரியாவால் வர்ணிக்கப்பட்டவர் இந்தக் கருணாநிதி. இது தொடர்பாக ஏற்கனவே  – இந்திரா காந்தி, ஜனதா கட்சி என யார்யார் காலில் விழுந்தால் சிறை செல்லவேண்டாமோ அங்கெல்லாம் தேவையான ‘ஆவன’க்களைக் கருணாநிதி செய்திருந்தாலும் – தமிழக அரசு (அப்போது அது எம்ஜிஆர் அரசு) நினைத்திருந்தால் அவர் சிறைக்கு நிச்சயம் சென்றிருப்பார்;  ஆனால், எனக்கு இன்றுவரை பிரமிப்பளிக்கும் விதத்தில், சர்க்காரியா அறிக்கையின் அடிப்படையில் கருணாநிதியைக் கைது செய்ய வேண்டாம் என்று எம்ஜிஆர் தேவையற்ற பெருந்தன்மையோடு நடந்து கொண்டார். ஆச்சரியம்தான். (பதிலுக்கு இன்றுவரை – கருணாநிதி எம்ஜிஆரை மிக அன்புடன் தொப்பித்தலையன், மலையாளி, கோமாளி, குளறுவாயன் என்றெல்லாம் பகிரங்கமாக அழைத்ததற்கு ஒரு வருத்தம் கூடத் தெரிவிக்கவில்லை!)

பின்குறிப்பு 3: ஃபெப்ருவரி 1, 1982 அன்று – தமிழகச் சட்டசபையில், பால் கமிஷன் அறிக்கை, பரிந்துரைகள்  தாக்கல் செய்யப்பட்டன. ஃபெப்ருவரி 11, 1982 அன்று இராம.வீரப்பன் கீழ்கண்ட தீர்மானத்தை முன்வைத்தார்:

Screenshot from 2015-07-02 22:19:14
ஆதாரம்: The Tamilnadu Legislative Assembly, Seventh Legislative Assembly, Fourth Session – First meeting (From 2nd February, 1982 to 19th February 1982), p19.

பின்குறிப்பு 4: கேட்பதற்கே கூசும்படி, ஒருவரையொருவர் மிக அசிங்கமாகத் தூற்றிக்கொண்டாலும் – இராம ‘ஆர்எம்’ வீரப்பனும் கருணாநிதியும் இப்பொழுது நல்ல ‘நண்பர்கள்’ தான். நட்புக்கு இலக்கணம் என்ன என்பதே எனக்குச் சத்தியமாகப் புரியவில்லை. திராவிட நட்பு வாழ்க.

திராவிட (எதிர்ப்)பக்கங்கள்… (01/07/2015 வரை!)

2 Responses to “ஒரு திருத்தம்: பாவம், எம்ஜிஆரை போயும்போயும் கருணாநிதியாக்கி விட்டேனே! மன்னிப்பு உண்டா? :-(”

  1. vijay Says:

    ராம், மீண்டும் ஒரு திருத்தம். மேலே உள்ள படத்தில், சண்முகநாதன் என்பவர் கருணாநிதியின் வலது பக்கத்தில் உள்ளவர் என்று குறிப்பிட்டு உள்ளீர்கள். ஆனால், படத்தில், இடது புறத்தில் பவ்யமாக இருக்கும் நபர் தானே நமது தோழர் :)

  2. K.Ganapathi SUbramanian Says:

    Karunanidhi recently recalled with utmost happiness his “Kallakadal ” with Rm. Veerappan in a function to felicitate Rm,V


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s