உலகத்திலேயே படுவேகமாக ஓடுபவன், அஞ்சலியை முந்தித் தரும் தமிழ் எழுத்தாளச் சிகாமணிதான்!
April 17, 2015
எனது செல்லமான பழம்பெரும் எழுத்தாளர், ஜெயகாந்தன் இறந்த செய்திகேட்ட அடுத்த கணம், அடுத்த கணமே, துள்ளிக்குதித்துக்கொண்டு வாயுவேகம் மனோவேகமாக ஜெயகாந்தனின் வீட்டையடைந்தது ஒரு சாகசச் செய்தி என்றால், அடுத்தவரியில் ‘கம்பீரமான குரலில் வரவேற்கும் ஜெயகாந்தன் அங்கு இல்லை,’ என்ற முக்கியமான செய்தி உண்மையிலேயே திடுக்கிடவைப்பதுதான்!
அதாவது, ஒருவர் இறந்ததற்குப் பின் அவர் உயிருடன் இருக்கமாட்டார் எனும் திடுக்கிடும் உண்மையை – ஒரு பக்கா தமிழ் அலக்கிய எழுத்தாளனைத் தவிர வேறுஎவன், மிகச் சிறப்பாக அவதானிக்க முடியும், சொல்லுங்கள்?
அதனால்தான், அவர் எழுதிய இந்த மானாவாரி நெகிழ்வஞ்சலிக் கட்டுரைக்காக, அவருக்குமட்டுமேதான் இனிமேல், வருடாவருடம் தவறாமல் நொக்கர் விருது கிடைக்கப்போகிறது!
ஆகவே, எனக்குப் புல்லரிப்பு எழவு நிற்கவேமாட்டேனென்கிறது. அவ்ளோ மகிள்ச்சி. உங்களுக்கும் இதில் சந்தோஷம்தானே? (பார்க்க: வாழ்த்துகள்: எஸ் ராமகிருஷ்ணனுக்கு நொக்கர் (2014) விருது! 25/01/2014)
-0-0-0-0-0-
இந்த மகிள்ச்சியை முழுவதும் அனுபவிப்பதற்கு முன் இன்னொரு செய்தி: குண்டுப் புல்லர் மரணித்தார்!
குண்டர் கிராஸ் – என ரவுடித்தனமாக அழைக்கப் படும் நபர், பாவம் குந்தர் க்ராஸ் அவர்கள். உயிருடன் இருந்தால், தன்னை குண்டர் என்றழைத்தமைக்காக, பேர்ல் அவர்களை சிப்பிக்குள் அடைத்துச் செத்தகடலில் விட்டெறிந்திருப்பார்.
ஒரு பெரிய நீளோதிநீள ஜாபிதா தயார் செய்துகொண்டிருக்கிறேன்.
என்ன விஷயம் என்றால் – இவர்களெல்லாம் இறக்கப் போகிறவர்கள் தானே! ஆகவே — இவர்கள் பற்றியெல்லாம் விலாவாரியாகக் குறிப்புகள், அதாவது:
- அவர்களை நான் நேரில் பார்த்துப் பேசி அறிவுரைகள் பல தந்தமை
- ‘மூன்றாம் மனிதர்களுக்குத் தெரியாமல்’ அவர்களுக்கு நான் செய்த பலப்பல உதவிகள்
- அவர்கள் என்னைப் பற்றி, என்னிடமே தெரிவித்த மிக உயர்வான கருத்துகளை கூச்சத்தின் காரணமாக, அவர்கள் இறந்தபின்னர்தான் நான் கொடுப்பது
- அவர்களுடைய இல்வாழ்க்கை ரகசியங்கள் ;-)
…இன்னபிறவற்றை இப்போதே எழுதி வைத்துக்கொள்ளப்போகிறேன். எந்தப் பிணம் என்றைக்கு விழுமோ!
உங்களுக்கு நான் என்ன சொல்லவருகிறேன் என்பது புரியாமல் இருந்தால் – விஷயம் என்னவென்றால் – இவர்களெல்லாம் இறந்து விட்டதற்குப் பின்னர்தான் நான் எழுதியதை வெளியிடப் போகிறேன் என்பதால் ஒரு பெரிய சௌகரியம்: அவர்களுடன் எனக்கான பிரத்தியேக தொடர்புகளை, ‘தனிப்பட்ட முறை’ மகத்தான பீலாக்களை ஜாலியாக அவிழ்த்து விடலாம்.
ஜெயகாந்தன் நினைவுகள்: அவர் பிரதமசீடனான அடியேனின் அஞ்சலி
(கொஞ்சம் தாமதமாக பதிப்பிப்பதற்கு மன்னிக்கவும்! இதனை சூட்டோடுசூடாக அவர் இறந்தவுடனேயே எழுதி விட்டேன், இருந்தாலும் என்னை மகத்தான சோகம் கவ்விக்கொண்டு போய், ஒரு தொலைதூர குப்பைமேட்டில் போட்டுவிட்டதால்தான் கொஞ்சம் லேட். குறிப்பு: சோகம் என்பது என்னுடைய வளர்ப்பு ஸெய்ன்ட் பெர்னார்ட் நாய்.)
ஜெயகாந்தன் இன்று மரணித்து விட்டார். ஆ!
நேற்றிரவு கூட என்னுடைய திராவிட எதிர்ப்புக் கட்டுரைகளை, அவர் தன்னுடைய மீசையை முறுக்கியவண்ணம் ரசித்ததை என்னிடம் சொல்லி, வெகுவாக சிலாகித்தாரே! அய்யோ!
“என்னுடைய வாரிசு நீதான், எவ்ளோ தைரியசாலி நீ!” என்று அவர் மறுபடியும் மறுபடியும் கண்ணீர் மல்கச் சொன்னதை, என்னால் மறக்க முடியுமா?
“உன் முகத்துக்கு – முழுதும் மழித்துக்கொள்ளாமல், தாடிமீசையோடு இருந்தால்தான் பாரதி போல மிடுக்காய் இருப்பாய்!” என்று சொன்னாரே! இப்படி என்னை விட்டுவிட்டுப் போய்விட்டாரே!
‘ஒரு நாடகம் நடிகையைப் பார்க்கிறது‘ என என் சக எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய கதையைப் படித்துவிட்டு நாம் இருவரும் விழுந்து விழுந்து சிரித்தோமே! எல்லாவற்றையும் மறந்து, போய்ச் சேர்ந்தீர்களே அய்யா!
ஜேகே எழுதிய ‘அக்கினிப் பரீட்சை’ கதை பின்னர் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ எனத் திரைப்படமாக வந்தது என் வாசகர்களாகிய உங்களுக்கு நினைவிருக்கலாம், தெரிந்திருக்கலாம்.
ஆனால் உங்களுக்குத் தெரியாத விஷயம் என்னவென்றால் – அக்கினிப் பரீட்சைக்கான கருவை, நான் தான், ஒரு சுக்கிலபட்சத்துப் பின்னிரவில், சென்னை மெரீனா கடற்கரையில் வைத்து, அவருக்குச் சொன்னேன்.
ஆனால், இதனைப் பற்றி ஒன்றுமே சொல்லாமல், ஜேகே, அதனைத் தன் கதை போலவே பாவித்ததால், எங்கள் உறவில் விரிசல் ஏற்பட்டது நிஜம். ஆனால், இறப்பதற்கு முன் தினம், என் கையைப் பிடித்துக்கொண்டு – ராமசாமி, நீ என்னை மன்னிப்பாயா? – என என்னை ஆரத் தழுவிக்கொண்டு கேட்டுக்கொண்டார்.
நானும் கண்கள் பனிக்க, இதயம் இனிக்க – ஜேகே, பரவாயில்லை, எதற்குக் குழந்தைமாதிரி இப்படி – என்றேன். அவர் எப்படிப்பட்ட கலைஞன். என் பெருந்தன்மையை அவர் மெச்சினார். அவரை உச்சி முகர்ந்தேன். அவர் தலையில் தேங்காயெண்ணெய் வாசனை – இது இன்னமும் என் மூக்கிலேயே இருக்கிறது…
…
…
நானும் வலியில், நெடும் துக்கத்தில், தவித்துக் கொண்டிருக்கிறேன்.
எல்லாம் சரி. அடுத்த பிரபலப் பிணம் எப்போது விழும்? 8-)
April 18, 2015 at 08:55
ஜேகேவின் கதை ‘அக்கினிப்பிரவேசம்’ – நீங்கள் சொல்வதுபோல் ‘அக்கினிப் பரீட்சை’ அல்ல. தகவல்களைச் சரிபார்த்து எழுதவும்.
April 18, 2015 at 09:16
அய்யா, அனாமதேய அஞ்ஞாநி!
நான் ஜேகேவுக்குச் சொன்ன கதையின் தலைப்பு, ‘அக்கினிப் பரீட்சை’தான். அதனால்தான் அப்படி எழுதினேன். அதை அவர் மாற்றி, ‘அக்கினி சாட்சி’ என ஆக்கியபோது நான் கடும்கோபம் கொண்டு அவருடன் பல வாராங்கள் பேசாமல் இருந்தேன்.
பின்னர் சுந்தர ராமசாமி, ஹோற்ஹே லூயிஸ் போற்ஹெஸ் போன்றோர் ஒருசேரவந்து, என் காலில் விழுந்து – எங்களிருவரையும் சமாதானம் செய்ததை, உலக இலக்கியப் பாரம்பரியம் அழியாமல் காத்ததை நீங்கள் அறிய மாட்டீர்கள். கருணாநிதி கூட, அப்போது – டமிள்மொளி ஸெம்மொளி அழிந்து விடுமோ என பயந்து – எங்களிருவருக்கும் பணம்கொடுத்து, வாரியத் தலைவர்கள் பதவி கொடுத்து – எங்களிடம் ஏற்பட்ட பூசலை அவருக்கேயுரித்த திராவிட வழியில் ‘ஸெட்டில்’ செய்ய முனைந்தார் – என்பதாவது உங்களுக்குத் தெரியுமா?
ஆகவே இருவருக்கும் வேண்டாம் – ஒரு பொது தலைப்பு – ‘அக்கினிப் பிரவேசம்’ என வைப்போம் என்று அவர்கள் பரிந்துரைப்படி பெயர் மாற்றப் பட்டது – பின்னர், நானும் ஜேகேயும் ராசியாகிவிட்டோம்.
உங்களைப் போன்ற வரலாற்றறிவு இல்லாதவர்களிடம், பொய்க் குற்றம் கண்டுபிடித்தே ஜீவிக்கும் கிருமிகளுடனும், விதண்டாவாதம் செய்வதற்கு என்னால் ஏலாது.
ஆகவே, என்னைப் பொறுத்தவரை நான் எழுதியதுதான் சரி.
April 19, 2015 at 15:56
Idhukum evanavadhu serious’a reply adikaradhuku munnadi, satire’nu oru disclaimer podunga sir.
April 18, 2015 at 11:00
அய்யா,
இவ்வளவு தன்னடக்கம் ஒரு மனிதனுக்கு ஆகவே ஆகாது. ” ஒரு பிளேடு, ஒரு பன்னி, ஒரு உலக்கை, பொது செருப்பால் அடிப்பேன்” போன்ற படைப்புகளில் உங்கள் பங்கினை வானம் கீழே விழும்வரை யாராலும் மறுக்க முடியுமா? கொஞ்சம் உங்களையும் பகட்டிக் கொள்ள முயற்சியுங்களய்யா.
October 31, 2017 at 15:21
[…] உலகத்திலேயே படுவேகமாக ஓடுபவன், அஞ்சல… […]
February 11, 2018 at 06:43
[…] உலகத்திலேயே படுவேகமாக ஓடுபவன், அஞ்சல… 17/04/2015 […]
July 31, 2018 at 16:30
[…] இந்த அஞ்சலிதேவன்களை நினைத்தாலே எனக்குக் கதி கலங்குகிறது. (உலகத்திலேயே படுவேகமாக ஓடுபவன், அஞ்சல…17/04/2015) […]
October 5, 2020 at 12:57
[…] அஞ்சலி அழுவாச்சிகளும்: உலகத்திலேயே படுவேகமாக ஓடுபவன், அஞ்சல… […]