மங்கோலியாவில் ராமசாமி!

May 18, 2014

நெடுநாட்களாக, குறிப்பாக 2011லேயே இணையத்தில் பிரபலமாக இருந்த நான், ஒத்திசைவு இணையதளம் மூலமாக எழுதவந்து மேலும் உலகப் புகழ் பெறுவதற்கு முன்பிலிருந்தே – ஒரு வாசகர் குழு ஆரம்பித்து என் கொள்கைகளைப் பரப்ப வேண்டும் என்று என்னுடைய தேர்ந்த வாசகர்கள் கருதி எனக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டிருந்தனர்.  எனக்கு இந்த விஷயம் எல்லாம் ஒத்துவராது என்று கருதினாலும், கடந்த மூன்று வருடங்களாக அவர்களே கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள், க்ரேக்க மொழி உட்பட நான் எழுதியுள்ள கட்டுரைகளை அலசுகிறார்கள். நான் எழுதியுள்ள பல புத்தகங்களை எனக்கு அறிமுகப் படுத்துகிறார்கள். படுத்துகிறார்கள். என்னுடைய செல்லமான களைஞர் அவர்களைக் களைந்து வேகவைக்கிறார்கள்.  ஐன்ஷ்டீன் சொன்னவற்றை நான் சொன்னதுபோல, இசையில் விற்பன்னன், ஞானாசிரியன் போலவெல்லாம் எழுதுகிறார்கள் – எனக்கு இதில் பிரச்சினையில்லை – ஏதோ தமிழர்களுக்கு ஞானம் வளர்ந்து, சார்பு நிலைத் தத்துவம், இசை பற்றியெல்லாம் புரிதல்கள் ஏற்பட்டால் சரி! தமிழனுக்கு ஏதோ என்னாலான உபகாரம்.

இதுதொடர்பான அப்போதைய பிரச்சினையென்னவென்றால்,  என் வாசகர்கள் குழுவிற்கு ஒரு லோகோ, ஒரு நல்ல பெயர் வைக்கவேண்டுமாக இருந்தது.  வாசகர் வட்டம் என்றால் தட்டையாகவும், சகல பக்கங்களிலும் மொண்ணையாகவும் இருக்கும்; பிடிபடாமல் வழுக்கிக் கொண்டேயிருக்கும். வாசகர் சதுரம் என்றாலும் தட்டை; பட்டம் தறிகெட்டுப் பறப்பது போன்ற தோற்றம். இவை இரண்டும் முப்பரிமாணமற்றவை.  குழுமம் என்று சொன்னால் – ஏதோ கேப்பங்கூழினை  ‘மம்மம்’ என்று சொல்லி குழந்தைகளுக்குத் தாய்மார்கள் ஊட்டிவிடுவது போன்ற வழவழா கொழகொழா தோற்றம். ஒரே பிரச்சினை!  எனக்கு, பெயருக்கு அப்பால் –  நான் எழுதிஎழுதி,  லோகத்துக்கு அருள் பாலிக்கும் திறனையும் அந்த பெயரும், லோகோவும் வெளிக்கொணர வேண்டும். பரந்துபட்ட எம் தமிழ் மக்களுக்கு, எளிதாகவும் பிடிபடவேண்டும்.  ஆக, யோசித்து, யோசித்து…

… இப்படி, என்னுடைய வாசகர்களே ஒன்றுசேர்ந்து ஒருங்கிணைத்துக் கொண்டு நடத்தும் குழுவை  ‘ராமசாமி வாசகர் ஐகஸஹெட்ரன்  நற்பணி இயக்கம்’ எனப் பெயர் சூட்டினார்கள், சூட்டிகையான சூடிக் கெடுத்த சுடற்கேடிகள்.

ராமசாமி வாசகர் ஐகஸஹெட்ரன்; 20 பக்கங்கள் - முப்பது விளிம்புகள் - 20 கூர்முனைகள்; இது சாதா வட்டம், சதுரம், குழுமம் போன்றதல்லை. இது ஒரு முக்கியமான ப்லேடோனிக் திடமம். இதற்குள்ளே நான் உறைந்திருப்பேன், பல பக்கங்களையும், குத்தும் கூர்மையையும், விளிம்பு நிலை மனிதத்துவங்களையும் உள்ளடக்கி, உலகத்தை ரெமிமார்ட்டினூடே பார்த்து, கொழுப்பெடுத்துக் கொழுப்புகள் பலவகை உண்டு, தொப்பை மிகுந்து விக்கல்களையும் ஏப்பங்களையும் இன்னபிற வாயுத்தொல்லைகளையும் பகிர்ந்துகொள்வதே குறிக்கோள். இணைவதற்கு / மேலதிக விவரங்களுக்கு அணுகவும்.

ராமசாமி வாசகர் ஐகஸஹெட்ரன்; லோகோ!

இந்த லோகோவான பன்முகத்திண்மத்தைப் பற்றியும் அதன் குறிக்கோட்களைப் பற்றியும் சில வார்த்தைகள்:  முப்பரிமாணம்; 20 சமபக்க முக்கோணப் பக்கங்கள் – முப்பது விளிம்புகள் – 20 கூர்முனைகள்; இது சாதா வட்டம், சதுரம், குழுமம் போன்றதல்லை. இது ஒரு முக்கியமான ப்லேடோனிக் திடமம். இதற்குள்ளே நான் உறைந்திருந்து, பல பக்கங்களையும், குத்தும் கூர்மையையும், விளிம்பு நிலை மனிதத்துவங்களையும் உள்ளடக்கி, உலகத்தை ரெமிமார்ட்டினூடே பார்த்து, கொழுப்பெடுத்துக் கொழுப்புகள் பலவகை உண்டு, தொப்பை மிகுந்து விக்கல்களையும் ஏப்பங்களையும் இன்னபிற வாயுத்தொல்லைகளையும் பகிர்ந்துகொள்வதே குறிக்கோள். இணைவதற்கு / மேலதிக விவரங்களுக்கு அணுகவும்.

-0-0-0-0-0-0-0-0-

நிற்க.  என்னுடைய  செல்லமான ஐகஸஹெட்ரன்  சார்பாக, மங்கோலியாவின் உலான்-பாடர் நகர் கிளை அன்பர்கள் — —  அந்த நாட்டுக்குச் சென்று அருளாசி வழங்கும்படியும் என்னைத் தொடர்ந்து வற்புறுத்திக் கூப்பிட்டுக் கொண்டேயிருந்தார்கள்.

எனக்கும் மோதி பற்றிய மோதல் கருத்துகளை மறுபடியும் மறுபடியும் அரைத்த மாவோவை, ஃபுல் மார்க்ஸ் வாங்கிக்கொண்டு அரைத்துக் கொண்டிருந்ததால் ஒரே அயர்வு. மேலதிகமாக –  பின்புலங்களைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் அல்லது துளிக்கூட விருப்பமில்லாமல், வெட்டிப் பரப்புரைகளை மட்டும் ஜெரித்து, பீரங்கித் தாக்குதல் நடத்தும் பின்னூட்டக்காரர்களின் சக்கரச் சுட்டித்தன உரலாயுத  வியூகத்தையும் நக்கல்களையும் ‘சும்மா ரெண்டு கல் விடுதலையும்’ வேறு எதிர்கொள்ள வேண்டிய தொல்லைகள்… இவற்றைப் பொருட்படுத்தி பதில்கொடுக்கலாமா, எப்படிப் பொறுமையாக இருக்கவேண்டும், ஏன் உரையாடலுக்கு உள்ளீடற்ற எதிர்வினைகளும் அவசியம் என்றெல்லாம் யோசித்தே தலையில் மேலதிகமாக வழுக்கை விழுந்து விட்டது. :-(

கொசுறுக்கு என் செல்லமான மணிப் பிரவாளக்காரருடைய  நடை!  உதவிக்கு வருகிறாரா அல்லது கிண்டல் செய்கிறாரா என்று புரிந்து கொள்ளவே ஒரு மணி நேரம் ஆகும் லீலை!   எனக்கு நான் எழுதுவதைப் புரிந்து கொள்வதற்கே பதற்றம் ஆகிக் கொண்டிருக்கும்போது, இவர் வேறு அனுகூலசத்ரு! ஹ்ம்ம்… ஆக – ஓடினேன் ஓடினேன் வாழ்க்கையில் விளிம்பு நிலைக்கே, பின்நவீனத்துவமாக கட்டுடைத்துக் கொண்டு ஒடினேன்… (என் எழுத்திடமிருந்தும்தான்!)

… குடும்பத்திலிருந்து (ஆம், எனக்குக் குடும்பம் என்று ஒன்று இருக்கிறது)  என்னுடைய துணைவியார் வேறு நச்சரித்துக் கொண்டேயிருந்தார் – நான் வீட்டைவிட்டு வெளியே கிளம்பவில்லையானால் அவர் திருமணத்தை  விட்டு உடனடியாகக் கிளம்பிவிடுவதாக. தொடர்ந்து மிரட்டிக்கொண்டேயிருக்கிறார்.  நானும் என்னதான் செய்யமுடியும், சொல்லுங்கள். :-(

ஒரு கைதேர்ந்த கனவுலகத் தமிழ் எழுத்தாளனின் முதல் எதிரி, அவனுடைய மனைவிதான். அவன் எழுதுவதை நிறுத்தினால்தான் அவளுக்குத் திருப்தி.

சங்கப் பரிவார காலத்தில் தெருக்குரல் எழுதிய வாசுகியின் கணவன் தெருவள்ளுவன் முதல்,  அயோத்தியைப் பற்றிய ரசியப் புதினமான ‘கரசேவா சகோதரர்கள்’ எழுதிய தாசதயாவாசுகி வரை எல்லா போற்றத்தகும் தமிழ் படைப்பாளிகளுக்கும் இந்தப் பிரச்சினைதான். படைப்பூக்கம் மிக்க தமிழ்ப் படைப்பாளர்களுக்கெல்லாம் இதுதான் சாபக்கேடு என்பதை,  காலம் காலமான தனிமையில் உணர்ந்து நெடுஞ்சுருதி பிறழ இதனை விட்டு விடுகிறேன். ‘கம்பன் வீட்டுக் கற்புக்கரசியும் வசை பாடுவாள்’ என்று சும்மாவா சொன்னார்கள்?

எவ்வளவு பாவப்பட்ட தமிழ் எழுத்தாள ஆண்களை அவர்கள் மனைவியர்கள்ஆழ்ந்த ஆக்ரோஷத்துடன் வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பர். எவ்வளவு பாவப்பட்ட மடிக்கணினித் திரைகள், தட்டச்சுச் தொழிற்சாலை முதலாளி எழுத்தாளர்களைப் பார்த்து வெறித்துக் கொண்டிருக்கும் எனத் தன்னில்தானே உணர்ந்து ஆசுவாசப் படுத்திக் கொள்கிறேன்.

எது எப்படியோ – என்ன சொல்ல வருகிறேன் என்றால், ஒரு வாரம் முன்பு மங்கோலியா சென்றேன். இன்றுதான் திரும்பி இந்தியா வந்தேன்.  என் பயணத்தின் குறிப்புகளை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

-0-0-0-0-0-

பயணத்துக்குப் பல மாதங்கள் இருந்ததால், மங்கோலியா பற்றி நிறையப் படித்தேன். ஆழ்ந்த ஆராய்ச்சிகள் பல செய்தேன்.  அதாவது, பெரும்பாலும் நான் முன்னமே எழுதியவற்றை மறுபடியும் படித்தேன். ஆச்சரியமளிக்கக் தக்கவகையில், எவ்வளவோ எழுதியவன் – இந்த அற்ப மங்கோலியா பற்றி ஒன்றுமே எழுதவில்லை! ஏன் என யோசிக்கவேண்டும். ஆனால் நல்லவேளை – என்னுடைய செல்ல சக தமிழ்ச் சான்றோர்களின் தளங்களில்  சரணடையாமல் வேறுவழிகளில் நான் கற்றுக் கொண்டவைகள் ஏராளம்!

மங்கோலியா பற்றி  ‘இதயம் பேத்துகிறது’ புகழ் மணியன் அவர்கள் ஒன்றுமே – ஒரு சுற்றுப்பயணக் கட்டுரையைக் கூட, பழைய ஆனந்தவிகடன்களில் எழுதவில்லை என்பது தமிழகத்தின் சாபக்கேடுதான்; எழுதியிருந்தால், அந்த ஊர் ஜென் கவிஞர்கள் அந்த ஊர் தெருவோர வேசைகளிடம் இளித்துக் கொண்டிருப்பதைப் படித்து இளித்துக் கொண்டிருக்கலாம்.

இதைவிடச் சோகம், ‘பொன்னியின் செல்வன்’  புதினத்தில் நந்தினியின் மங்கோலிய ஆபத்துதவிகளைப் பற்றி கல்கியும் எழுதவில்லை; ஆனால் சாண்டில்யன் எழுதிய  ‘மங்கோலிய மோகம்’  வரலாற்று நவீனத்தின் கதாவிலாசவில்லன் உதயகுமாரன், மங்கோலிய விடுதலைக்குப் போராடாமல் ஜலதாபத்தில்,  நாயகியின் மார்புக்கச்சையை அவிழ்த்து, அணுவுலை விடுதலைக்குப் போராடுவது மெய்சிலிர்க்க வைத்தது.

சரி. என் நூலகத்தில் ,  ஏகே செட்டியார், சுப்புரெட்டியார், சுத்தானந்த பாரதி, வரதராசனார், நரசிம்மலு நாயுடு புத்தகங்களில்  தேடினேன். ம்ஹூம். ஒரு எழவும் இல்லவேயில்லை.  இவர்களெல்லாம் என்ன பயணம் செய்து என்ன புண்ணாக்குப் பயன்? எனக்குப் பொறாமைதரும் விதத்தில் கோயில்கோயிலாகச் சென்ற பரணீதரன், பாஸ்கரத்தொண்டைமான் போன்றவர்களெல்லாம், ஊர் ஊராகச் சென்றுள்ள ஜெயமோகன், மஞ்சுநாத் போன்றவர்களெல்லாம்கூட, மங்கோலியா பக்கம் செல்லாதது இனவெறியோ? அல்லது இந்திய மேட்டிமை வாதமோ?

என் அபிமான ஆங்கில எழுத்தாளர்களான பில் பிரைஸன், டேவ் பேர்ரி, மைக்கெல் பாலின் போன்றவர்களெல்லாம் கூட மங்கோலியப் பயண அனுபவங்களை எழுதவில்லை. ஏன் இந்த பாரபட்சம்? ஆனால்,  சாரு நிவேதிதா மங்கோலியா பற்றி போகிறபோக்கில் ஏதோவொரு நாவல் விமர்சனத்தில் எழுதியதுபோல ஓர்மை, மன்னிக்கவும் ஓநாய்மை.

பின்பு நூலகத்துக்குச் சென்று – முதலில் துப்பறியும் சாம்பு, யுவான்சுவாங்,  போதிதர்மர், சங்கர்லால், திகம்பரசாமியார் போன்றவர்கள் மங்கோலியா சென்ற விவரங்களைத் திரட்டினேன். மாபெரும் வரலாற்று ஆவணமான எழவாவது அறிவு படத்தையும் பார்த்தேன். குண்டு சூர்யாவாக நடித்த  பேதிதர்மருக்கு நன்றாகக் குண்டி வலித்திருக்கும் என்று மீண்டும் மீண்டும் தோன்றிக்கொண்டேயிருந்தது. பாவம். குதிரைக்கும் முதுகு வலித்திருக்குமோ?

ஆச்சரியமாக இருந்தது எனக்கு. கணேஷ்-வசந்த் இன்னமும் அங்கே போகவில்லை. சுஜாதாவுக்கு மங்கோலிய விசா கிடைக்கவில்லையோ? ஏதாவது திருஷ்டாந்தங்கள்? ஹ்ம்ம்… சத்யஜித் ராயின் ஃபெலூதா கூட அங்கே போகவில்லையாமே?

பொதுவாக எதைப் பற்றியும் கூக்ளாண்டவர் துணையுடன் ஒரு விட்டேற்றியான விடலைக் கருத்துபேதியெடுத்து வைக்கும் வினவு தள அரைகுறைகள் கூட, மங்கோலியாவைப் பற்றி ஒன்றும் எழுதவில்லையே! ஏதாவது ‘பன்னாட்டுப் பன்னாடைகள் மங்கோலியாவைச் சூறையாடுகின்றன!’    ‘பெருந்தரகுமுதலாளிகளின் பேராசையால் மங்கோலிய வரகு விவசாயிகள் கொத்துக் கொத்தாக தற்கொலை!’   ‘பார்ப்பன பனியா மோதியின் அடுத்த டார்கெட்: மங்கோலியாவிலிருந்து அனைத்து முசுலீம் சகோதரர்களையும் துரத்துதல்!’   ‘ஆர்எஸ்எஸ் காக்கி டவுசர்களின் மங்கோலிய இனவெறித் தாக்குதல்கள்!’ என ஒரு எழவும் எழுதவில்லையே!

ஒரு விதமான பேரிடரும் நடக்கவே நடக்காத எழவெடுத்த நாட்டிற்கு என்னை ஏன் என் உயிரினும் இனிதான ஐகஸஹெட்ரனார்கள் அழைக்கிறார்கள்? நான் திரும்பி வந்து  தொழில்முறை ‘தொழில்நுட்பத்தின் எதிரிகள்’ அமைப்பினர் கேட்டால் எதைப் பற்றித்தான் ஏச முடியும்?

மங்கோலிய ஞானமரபு, தத்துவ தரிசனங்கள், உள்மனக் கிடக்கைகள்,  ஆன்மிக குழுஊக்குறிகள் பற்றியாவது யாரிடமாவது ஏதாவது தெரிந்துகொள்ளலாம்  என்றால் பாவி அகங்கார மனது என்னைத் தடுக்கிறது. அஹம் பஸ்மாஸ்மி அல்லவா? என்னை விட யாருக்கு என்ன பெரிதாகத் தெரிந்து விடப் போகிறது என்ற புளகாங்கிதம் தரும் மனப்பான்மையால் மட்டுமே பல விஷயங்களில் நான் முதன்மையான ஞானத்தைப் பெற்றவனாய்த் திகழ்கிறேன் என்பதில் எனக்கு நிகர் நானே என மிகப் பணிவுடன் நினைத்துக் கொள்கிறேன்.  …

இருந்தாலும் மங்கோலியா பற்றித் தெரிந்து கொள்ள, நண்பர் டவுன்லோட் திரைப்படனார் அவர்களின் ‘வொலக ஸினிமா’ தர பரிந்துரைப் படி மங்கோலியா படம் என்று தேடிப் பார்த்தால், அது நம்ம பால் தாமஸ் அன்டர்ஸன் அவர்களின் மக்நோலியா (Magnolia); வழக்கம் போல மாடர்ன் டைம்ஸ் படத்தை மார்டன் டைம்ஸ் என்று எழுதுபவர் மக்நோலியாவை மங்கோலியா என்று எழுதியிருக்கிறார்! இவரையா தமிழகம் ஒரு பெரிய எள்த்தாளர் என்று கொண்டாடுகிறது, அதாவது என்னைக் கொண்டாடாமல்? வெட்கக் கேடு!

சேசுவே! என் என்னை இப்படி சோதிக்கிறீர்? தேர்தல் முடிந்தாலும் வரலாறு காணாத ரீதியில் தோற்றாலும், அழகிரியின் தொல்லை தாங்க முடியவில்லையே! இருட்பெரும் சோதி, தனிப் பெரும் கருணா!! ஐயகோ!!

என் பிரச்சினைகளுக்கும், எம் இனமானப் பகுத்தறிவுப் பகலவர் தலைவரின் பிரச்சினைகளுக்கும் முடிவே இல்லையா! ஏடு கொண்டலவாடா! :-( என் மஞ்சத் துண்டக் கொண்டுவாடா.

-0-0-0-0-0-0-0-

… வீட்டின் இணைய இணைப்பு பல நாட்களாகச் சரியாக வேலை செய்வதில்லை – என் துணைவியாருக்கு ஏக சந்தோஷம் இதில்; ஹ்ம்ம்…  இல்லையேல் அனைத்து விவரங்களையும் முன்னமே கரைத்துக் குடித்திருப்பேன்…. தமிழ் எழுத்தாளனின் நிலைமை சோகம்தான்.  டவுன்லோட் செய்யாவிட்டால் அவனால் எதையும் எழுதமுடியாது. ஆகவே, அதனை மூழ்கடிக்க வைக்க ரெமி மார்ட்டினால்தான் முடியும். என் சாபக்கேடு கடந்த ஒரு வாரத்தில் ஒரு நாள் கூடக் குடிக்கவில்லை. இருந்தாலும் தமிழகத்தில், பெரிய பிரச்சினை குடிப் பிரச்சினைதான். நாட்டையே ஒழித்துக் கொண்டிருக்கிறது இது. குடிப் பழக்கத்தை அரசே ஊக்குவிக்கும் அவலம் நம் தமிழகத்தில்தான் நடக்கும். குஜராத்தைப் பாருங்கள்.

சென்னையில் சைனா பஜாருக்கு அருகம்புல் சாற்றை ஈசல்களுடன்  கலக்கி (இதனை, நாளுக்கு ஒருமுறை குடித்தால், மனைவியிடமிருந்து வரும் தொல்லைகள் எல்லாம் போச்!) குடிக்கச் சென்றபோது, மூச்சிறைக்க ஒடிவந்து என்னிடம் ஆட்டோகிராஃப் வாங்கிய ஒரு மங்கோலியப் பெரியவர் – இவர் என்னுடைய எல்லா நாவல்களையும் படித்திருக்கிறார் –  சொன்னார்: மங்கோலியா போவதற்கு முன்னால் குடிக்கவே கூடாதாம். அது ஒரு புனிதமான தேசமாம். ஆனால் இதைப் பற்றியெல்லாம் நாம் 50 வருடங்கள் முன்னால் ‘நேர் விளிம்புகள்’ கட்டுரைத் தொகுதியில் அசோகமித்திரனை தமிழ் இலக்கிய உலகத்துக்கு அறிமுகம் செய்யும்போதே எழுதிவிட்டேன் என்று அவருக்குத் தெரியாது. ஹ்ஹ.

ஆனால், தெஹெல்காவின் தருண் தேஜ்பாலுக்கு இதெல்லாம் தெரியும். பாவம் அவன். ம்ம்ம்.  ஒரு பெண் இவனைக் கற்பழிக்க முயன்றபோது அதற்கு அவன் தேவையற்று உடன்பட்டது சரியல்லதான். காந்தி சொன்னது போல் – இவன் தன் நகத்தையாகவது உபயோகித்து அந்தப் பெண்ணைக் கீறி விட்டுத்  தப்பித்து ஓடியிருக்கலாமே! பாவம். கம்பி எண்ணித் துணிக கருமாந்திரம் என்பதை அவனுக்குச் சொல்ல மறந்துவிட்டேன்.

… … அந்த மங்கோலியப் பெரியவர் ஜெங்கிஸ்கானுக்கு உறவு,  தாய்மாமன் முறை என்றார் – அதற்குமேல் குதிரை வில் அம்பு பற்றியெல்லாம் அவருக்கு ஒன்றுமே தெரியவில்லை! ராமாயண சீரியலை (வொங்க்ளுட்ய) மங்கோலிய ஸன் தொளைக்காட்சி சேன்னல் ஒளிபரப்பவில்லை போலும். ஏன்,  ஜான் வேய்ன் நடித்த ‘த கான்க்வரர்ஸ்’ படத்தைக் கூட இந்த மனிதர் இன்னமும் பார்க்கவில்லை. என்ன அவலம்.

வேறு வழியேயில்லை – மங்கோலியர்களுக்கும் முதலில் ஹாலிவுட்டை அறிமுகப் படுத்துவது நானாகத் தான் இருக்கப் போகிறேன் என நினைத்தேன் –  ஆனால், ஆனானப்பட்ட ஜெங்கிஸ்கானையேகூட  அவர்களுக்கு நான்தான் அறிமுகப் படித்தப் போகிறேன் என்பது என் அறிவைப் பற்றி எனக்கு இருந்த சந்தேகங்களை நிவர்த்தி செய்துவிட்டது.

டேய் தமிழனுங்களா! நீங்களெல்லாம் நான் எழுதுவதைப் படிப்பதற்கு புண்ணியம் செய்துதான் இருக்கவேண்டும்; இருந்தாலும், நான் இன்றி ஒரு அணுவும் அசையாது போலிருக்கிறதே எனப் பணிவுடன் நினைத்து ஜூனியர்விகடனில் என் சாப்பாட்டுக் கட்டுரைத் தொடரின் அடுத்த பகுதியை எங்கிருந்து டவுன்லோட் செய்யலாம் என யோசித்தேன்…

… … சுந்தர ராமசாமிக்கு என்னுடைய திறமையின்மேல், வணிகரீதியான வெற்றிகளின் மேல் பொறாமை; என் மொழிபெயர்ப்புகள் மேல் பொய் விமர்சனம் வைக்கிறார்; ten rupee note என்பதை ‘பத்து ரூபாயும் ஒரு குறிப்பும்’ என கற்பனை வளம் ததும்ப நான் மொழிபெயர்த்தால், இவருக்கு எங்கே எரிகிறது? ஒருவழியாகப் போய்ச் சேர்ந்து விட்டார் என்பதால் விட்டுவிடுகிறேன். என்னாலும் – என்னால் அவர் நேரடியாகக் கிழிபட்ட வரலாறுகளை,  என்னிடம் வாதாட முடியாமல் அவர் புறமுதுகிட்டு ஓடியதையெல்லாம் தொழில்முறையில் ஃபேக்டரி  ரீதியில் புனைய முடியாதா என்ன?  ஒரு பேச்சுக்குத்தான் சொல்கிறேன் – அவர் உயிர்த்தெழுந்து வந்தா உண்மைகளை விளம்பப் போகிறார்?

எருமைத் தமிழர்களுக்கு என் அருமை தெரியவில்லை. என் அடுத்த நாவலை மங்கோலிய மொழியில் தான் எழுதப் போகிறேன். அதனை வேண்டுமானால் கல்யாணராமன் தமிழில் மொழிபெயர்த்துக் கொள்ளட்டும். கிழக்கு பதிப்பகம் போட்டுக்கொள்ளட்டும். தமிழிலிருந்து ஆங்கிலத்தில் வ. கீதா மொழிபெயர்த்துக்கொள்ளட்டும்.  நவயானா ஆனந்த் பதிப்பித்துக் கொள்ளட்டும். ஆங்கிலத்தில் இருந்து எஸ்ரா_தமிழில் எஸ். ராமகிருஷ்ணன் முழிபெயர்த்துக் கொள்ளட்டும்.  எனக்கு ஆட்சேபனையேயில்லை.

என் புத்தகம் பத்துலட்சம் பிரதிகள் விற்கும். பேரண்டப் புகழ்பெற்ற நொக்கர் பரிசு வாங்கும். எனக்குப் புகழ்மேல் துளிக்கூட ஆசையேயில்லை.  நான் ஒரு யோகி. தமிழர்களுக்குப் பொறாமை அதிகம். மங்கோலியர்களுக்கு அப்படியல்ல. என்னைத் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள் அங்கு. அவர்களுக்குத் தான் தெரியும் உலகத் தரம். நான் அங்கேயே தங்கி விடலாம் என நினைக்கிறேன். தமிழகமும் தமிழர்களும் எக்கேடோ கெட்டுப் போகட்டும். எனக்குத் தமிழைப் பிடிக்கும். ஆனால் தமிழில் எழுதவே போவதில்லை இனிமேல். தமிழ் சினிமா ஒரு குப்பை; அதனால்தான் அதற்குக் கதை-வசனம் எழுதிக்கொண்டிருக்கிறேன்.

-0-0-0-0-0-

என்னுடைய மங்கோலியப் பிரயாணத்துக்கான அனைத்து செலவுகளையும் அவர்கள் – அதாவது ‘ராமசாமி வாசகர் ஐஸொஸேஹாஹெட்ரன்’ நற்பணி இயக்கத்தினர் – ஏற்றுக் கொண்டார்கள் – இதுதான் வெளி நாட்டுத் தமிழனின் விருந்தோம்பல் பாங்கு. தமிழ் நாட்டுத் தமிழன் பணத்தை தன் பாங்கை விட்டு எடுக்கவே மாட்டான்.

என் வீட்டிலிருந்து என்னைச் சென்னை விமான நிலையம் அழைத்துச் செல்வதற்காக கார் ஏற்பாடு செய்து அனுப்பியிருந்தார்கள் என் மனைவியார். அவருக்கு, தன் கணவன் வெளி நாட்டுப் பயணம் செய்வதில் அவ்வளவு ஆவல். எப்படியாவது கொஞ்ச நாளாவது நிம்மதியாக இருக்கலாம் என்ற எண்ணம் போலும்.  நான் பயணம் செய்யும் விமானமே அந்தப் பாவப்பட்ட மலேஷிய விமானம் ஃப்ளைட் 370 போலத் தொலைந்தே போனாலும் அவளுக்குக் கொண்டாட்டமாகத்தான் இருக்கும்…

தமிழ் எழுத்தாளனின் அவல நிலை பற்றி மேலதிகமாகச் சொல்ல வேண்டியதில்லை. அவனுடைய எதிரிகள் இருவர் – தமிழ் வாசகன், தமிழ் வாசகி(மனைவி). :-(

விமான நிலையத்திற்குப் பல நண்பர்களும் உறவினர்களும் வந்திருந்தார்கள். யாவரும் கேளிர் அல்லவா?

-0-0-0-00-

(தொடரும்)

… அடுத்த ஒரு பதிவில்,  எனக்கு மங்கோலியாவில் கிடைத்த வரவேற்பு பற்றியும், நான் மங்கோலியாவில் ஆற்றிய பேருரைகளைப் பற்றியும், அங்கு என் புத்தககங்கள் வெளியிடப்பட்ட விழாவைப் பற்றியும் எழுதுகிறேன். நன்றி.

-0-0-0-0-0-0-

குறிப்புகள்:  உரலாயுதம் – திரு க்ருஷ்ணகுமார் உபயோகிக்கும் பதம் – இதனைச் சூடாக சுட்ட சுட்டிகளை மட்டுமே கொடுத்து எந்த எழவையும் பத்தே 10 வினாடிகள் செலவழித்துப் புரிந்து கொள்ளும், எந்த விஷயநியாயத்தையும் நிறுவும்  மேதாவிகளின் கருவி பற்றிச் சொல்லக் குறிக்கிறார்; உதவிய விசிலடிச்சான் குஞ்சப்ப டமிள் எளுத்தாலர்கலின் திருத்தலங்கள் – வி1, வி2, எஸ்ரா, யுகி, சாநி, ஸிஎஸ்கே.

அக்கப்போர் தொடர்பான முந்தைய பதிவுகள் – இவற்றைப் படித்தால், ஓரளவு பின்புலம் புரியலாம்!

அலக்கியம், காப்பிக்கடை, இன்னபிற இழவுகள்…

13 Responses to “மங்கோலியாவில் ராமசாமி!”

 1. க்ருஷ்ணகுமார் Says:

  ம்……….தேசாந்திரம் போகிறீர்கள். அதுவும் மங்கோலியா.

  Bon voyage!!!!!

  லோகத்தில் உள்ள பத்னி கணங்களின் பொது சத்ரு கணினி என்று தெரிந்து கொண்டதில் சந்தோஷம்.

  தசாப்தங்கள் முன்னர் leon uris ஐ பாராயணம் செய்து மானசீகமாக பைப்ளிகள் தேசாதிகள் மற்றும் ஐரோப்பா பற்றி கனவு கண்டதுண்டு.

  உங்கள் மூலமாக மங்கோலியா பற்றி தெரிந்து கொள்ள வாய்ப்பு.

  மங்கோலியா பற்றி பன்முகத் தகவல்கள் உங்கள் மூலம் கிட்ட இருக்கிறது.

  ஊடே மங்கோலியாவில் வஜ்ரயான பௌத்தம் பற்றிய குறிப்புகள் ஏதும் கிட்டினால் பகிரவும்.

  —->>>> அய்யோ அய்யா! எனக்கு தேசாந்திரம் அல்ல, தீவாந்திரம் தான் கிடைக்கும். :-)

  இது ஒரு நையாண்டிக் கதை – தமிழ் எழுத்துலகப் பிதாமகர்கள் சிலரைப் பகடி செய்து எழுதப் பட்டது. அவ்வளவுதான்.

  பல விஷயங்களில் விவரமான நீங்கள், இந்த அலக்கிய விவகாரங்களில் குழந்தையாக இருக்கிறீர்களே! :-(

  எது எப்படியோ, இலக்கிய அலக்கிய சகதிகளில் மூழ்காத பாக்கியம் உங்களுக்குக் கிடைத்திருக்கிறதை நினைத்தால் எனக்குப் பொறாமையாகவே இருக்கிறது. :-((

  __​ரா.

 2. சரவணன் Says:

  /// முப்பரிமாணம்; 20 சமபக்க முக்கோணப் பக்கங்கள் – முப்பது விளிம்புகள் – 20 கூர்முனைகள்; ///

  தேவுடா! 12 விளிம்புகள்தான் ஐயா! எந்த ஒரு நான்-இன்டர்செக்டிங் பன்முகிக்கும் ஆய்லர் விதி பொருந்தும். முகங்கள் + விளிம்புகள் – கூர் முனைகள் = 2 என்று வரவேண்டும். 20 + 12 – 30 = 2.

  இப்பவே கண்ணக் கட்டுதே!

  —–>>>>> அய்யா சரவணன், என் தவற்றைத் தவறுதலாகத் திருத்தியதற்கு நன்றி. சரியாகத் திருத்தி விட்டேன்.

  நான் எழுதியது: ஐகஸஹெட்ரனுக்கு 20 சமபக்க முக்கோணப் பக்கங்கள் – முப்பது விளிம்புகள் – 20 கூர்முனைகள்.

  சரியான விவரம்: 20 சமபக்க முக்கோணப் பக்கங்கள் – முப்பது விளிம்புகள் – 12 கூர்முனைகள்; ஆக 12 கூர்முனைகள் என்பதே சரி – 12 விளிம்புகள் அல்ல.

  நீங்கள் சொல்வது: முகங்கள் + விளிம்புகள் – கூர் முனைகள் = 2 என்பது ஆய்லர் விதியல்ல, சரியும் அல்ல.

  பக்கங்கள்+கூர்முனைகள் = விளிம்புகள் + 2 – இதுதான் சரி.

  எது எப்படியோ – தவற்றினைக் கண்டுபிடிக்கும் உங்கள் குணம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. மூளை அழகாக வேலை செய்தால்தான் இதனைச் செய்யமுடியும். நன்றி.

  ​​__ரா. (இப்பவே கண்ணக் கட்டுதே! – என்பதன் கலாச்சாரப் பின்புலம் என்ன?)

 3. சரவணன் Says:

  நான் எழுதியதில் கூட்டல், கழித்தல் குறிகள் இடம் மாறிவிட்டன… ‘இப்பவே… ‘ விளக்கம் வடிவேல் காமெடிகளில் காண்க…

  • க்ருஷ்ணகுமார் Says:

   \\ விளக்கம் வடிவேல் காமெடிகளில் காண்க…\\

   சரவணன், இப்படி போகாத ஊருக்கு வழிகாண்பிக்கலாமா?

   இடியட் பாக்ஸ் என்பது ராமசாமி சாரிடம் படிக்கும் குழந்தைகள் பிரித்து மேய்ந்து புரிந்து படம் வரைந்து பாகங்கள் குறி என்ற சமாசாரத்திற்காக இருக்கும் சாதனம் என்பது தெரிந்தும் இப்படிச் சொல்லலாமா.

   விட்டால் விஸ்வாமித்ரரின் டிவி பார்க்கமாட்டேன் என்ற தபஸையே கலைத்து விடுவீர்கள் போல!

   தபஸ் கலைஞ்சால் த்வீபாந்தரம் நிச்சயம்!!!!!!!!!!

 4. ரங்கன் Says:

  ஒண்ணுமே புரியலையே ! இது வரைக்கும் நல்லாத்தானே போய்கிட்டிருந்தது !!

 5. Anonymous Says:

  மேற்கண்ட வ்யாசத்தை கண்டு மனம் மிக த்வ்யமான சந்தோஷத்தை அடைந்தது. ஷ்ரீமான் ராமஸ்வாமி அவர்கள் உத்தரபாரதத்தை கடந்து மங்கோலியா தேஷத்தவருடம் சம்பாஷனை பல செய்து பல உத்ரங்கள் படைக்க வேண்டும். மங்கோலியாவின் ராஜ்ய சர்க்காரின் தலைவரையும், கேந்திர, மட்டும் ராஷ்டிர சர்க்கார் தலைவருக்கும் உபயகுசலோபரி. :)

  முக்கியவிஷயம், மங்கோலிய நாட்டில் மட்டுமே கிடைக்கும் உச்ச தேயிலையை பற்றி நீங்கள் எழுத வேண்டும். அங்குள்ளவர்கள் எப்படி நூடுல்ஸ் செய்கின்றார்கள், அதனால் எப்படி அவர்கள் அறுபது வயதிலும் எப்படி நிம்மதியாக தூங்குகின்றார்கள் என்றும், அங்குள்ள வண்ணத்து பூச்சிகள் அதன் தலைமுறைதோறும் கண்டுவருவதையும், தினமும் எழும் சூரியன் எதை காண்கின்றான் என்றும் வியந்து எழுதுவீர்கள் என்று நம்பிக்கையுடன் காத்துக் கொண்டிருக்கின்றேன். நீங்கள் எழுதுவதை ஹுவலி மொழியில் மொழி பெயர்க்க ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றேன்.

  முக்கிய குறிப்பு, போகும் போது மரியாதையாக விமானம், கப்பல், எதிலாவது போங்கள். யாருடைய மோட்டர் சைக்கிள், காரில் சென்று நேரமாகி விட்டது என்று கட்டுரை எழுத வேண்டாம். அதை படிக்க எங்களுக்கு பொறுமை இல்லை.

  —->>> lovely. :-)

  __r.


 6. கஷ்டப்பட்டு நான் எழுதியது கடைசியில் அனானி கையில் போய்விட்டதே. வேர்ட்ப்ரெஸ் ஒழிக திட்டுபவர்கள் யாரை திட்டுவது என்று யோசிக்க கூடும், அதை எழுதியது யார் என்று யோசிக்க கூடும். அதை பல ஆண்டுகளுக்கு முன்னரே முதன் முதலில் எழுதியது நான், இன்று மீண்டும் எழுதியுள்ளேன்.

 7. Venkatesan Says:

  அரசியல் ஆய்வுகளிலும், கருத்துப் பரிமாற்றங்களிலும் தீவிரமாக இருந்த காரணத்தாலே தங்கள் மங்கோலிய கட்டுரைகளை படிக்கும் வாய்ப்பு இப்போதுதான் கிட்டியது!

  Very funny :-)

  // இமயமலையைத் தாண்டும்போது மறுபடியும் நெடும்பனிகளைப் பற்றியும், ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அவை, மவுனமாக கடந்துகொண்டிருக்கும் காலவெளிகளை அவதானித்துக் கொண்டிருப்பதைப் பற்றியும், நெடுங்குளிர் திபெத்திய யாக் எருமைகள் பனிப்புயலின் நடுவே வாழ்க்கையின் அர்த்தமுள்ள அர்த்தமின்மையைப் பற்றி எண்ணிக்கொண்டிருப்பதையெல்லாம் எழுதலாமென்றால் //

  ஹி ஹி! Super! அடியேனுக்கு எஸ் ராவை பிடிக்கும் என்றாலும், இதுவும் பிடித்தது!

  Icosehedran என்பதற்கு விக்கிபீடியா வேறு மாதிரி pronunciation சொல்கிறது என்பது என் புரிதல்!


 8. எவ்வளவு தவறுகள் பன்னெடுங்காலமாக என்னைப் பார்த்துக்கொண்டு இருக்கின்றன – மனிதனின் தனிமையே தவறுதானோ? உடனடியாகத் தவறுகள் தம்மைத் திருத்திக் கொள்கின்றன என ஆசுவாசப் படுத்திக்கொண்டு ஹைடீயினைக் குடித்துக்கொண்டு, அடுத்த விகடன் தவணையை விக்கிபீடீயாவிலிருந்து தேத்திக் கொண்டிருக்கிறேன்.

  எனது அடுத்த பயணம் ஈஸ்ட் திமோர் நாட்டுக்கு. தடியன் தருண் தேஜ்பாலுடன் தான் செல்லப் போகிறேன். யாராவது அவனை அங்கு பலாத்காரம் செய்து கற்பழிக்காமல் இருந்தால் சரி.

  • Venkatesan Says:

   // எவ்வளவு தவறுகள் பன்னெடுங்காலமாக என்னைப் பார்த்துக்கொண்டு இருக்கின்றன – மனிதனின் தனிமையே தவறுதானோ? //

   ஹ ஹ! போட்டுத் தாக்கறீங்க சார!

   “பார்த்துக்கொண்டே” அப்படின்னு போட்டிருந்தா இன்னும் நல்லா இருந்திருக்குமோ?

   :-)
   —–>>> ஆம். :-(

   உங்கள் பெயர் இனிமேலிருந்து: இரண்டாம் rawமகிருஷ்ணன். Yes! ;-)

   __ரா.

 9. இரண்டாம் rawமகிருஷ்ணன் Says:

  எனது வாழ்க்கையில் இதுவரை யாரும் எனக்கு பட்டப் பெயர் தந்ததே இல்லை. திட்டுவதற்கோ, நையாண்டி செய்வதற்கோ கூட பட்டப் பெயர் கிடைக்கவில்லை என்பது எவ்வளவு பெரிய சோகம்.

  ‘வெண்ணிற இரவுகள்’ கதையின் தஸ்தாவயஸ்கி நினைவுக்கு வருகிறான். தனக்கு ஒரு பட்டப் பெயர் கூட இல்லை என்ற விரக்தியில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரம் முழுதும் சுற்றி வரும் அவனது இரவுகள் மீது வெறுமை படர்ந்திருக்கிறது. நெஞ்சை அழுத்தும் துக்கத்தோடு நடந்து கொண்டே இருப்பவன், ஒரு முரடன் மீது மோதி விடுகிறான். அந்த முரடன், “டேய் பன்னாடை” எனத் திட்டியதும், தஸ்தாவயஸ்கி உலகமே தலை கீழ் ஆனது போல் உணர்கிறான். தனக்கும் ஒரு பட்டப் பெயர் கிடைத்த சந்தோஷத்தில், உருகிப் போய் கண்ணீரோடு நிற்கிறான். அத்தருணத்தில் சுற்றி இருக்கும் பனிக் கட்டிகளும் அவனோடு சேர்ந்து உருகுவதாக அவனுக்கு தோன்றுகிறது. உலகமே உருகி, உருகி ஒரு மாதிரி கருகி விடுகின்றன.

  ——————

  போதும் சார்! நிறுத்திக்குவோம், இத்தோட நிறுத்திக்குவோம். வேணாம். அப்புறம் நான் அழுதுடுவேன். சிரிச்சு சிரிச்சு அழுதுடுவேன் :-)


  • யோவ்! எவ்ளோ பேருய்யா இப்டீ கெளம்ப்றிக்கீங்க?

   ஒரு ஆளயே டமிளகம் டாங்க மிடியல… புற்றீசல் போல கெளம்ப்டீங்களேய்யா!

   இப்டீ பின்னூட்டத்துக்கு பின்னூட்டம் பின்னி எடுத்தீங்கன்னா நாயமா?

   பாவம்யா, வுட்ருங்கய்யா!

   குதறப்பட்ட மூளைகளிலிருந்து நெடுங்குருதி பொங்குதுய்யா… :-(


 10. […] இருக்கக்கூடாது, முன்னமே மங்கோலிய வாசகர் வட்டத்தில் ஏகோபித்துப் புழக்கத்திலிருக்கும் […]


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s