இணையத்திலிருப்பதனாலேயே ஒரு விஷயம் சரியாகிவிடாது!

May 15, 2014

(அல்லது) கோத்ரா, தீர்ப்பு, என்னுடைய முயற்சிகள்: சில குறிப்புகள்

மேலே படிப்பதற்குப் பின்புலமாக நீங்கள் என்னுடைய முந்தைய பதிவை (அதன் பாவப்பட்ட பின்னூட்டங்களுடன்) படித்தால் நலம். படிக்காவிட்டாலும் ஒரளவு புரியலாம். (

குஜராத் பற்றி பீலா விடுவது எப்படி? (=ஹர்ஷ் மந்தர், தீஸ்தா ஸெதல்வாத், அருந்ததிராய் போன்றவர்களிடம் கற்றுக்கொண்டு, மேற்கொண்டு நம் தமிழ்க் குளுவான்கள் மசாலா சேர்ப்பது எவ்வாறு? கோத்ரா ரயிலெரிப்புக் கொலைகள்: திரித்தல்களும், அற்பத்தனங்களும்…

வெங்கடேசன் அவர்கள், தன்னுடைய பின்னூட்டங்களில் கீழ்கண்ட கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார்: ஒன்று, இரண்டு. இவற்றில் இரண்டாவதற்கு இந்த பதில்.

அன்புள்ள வெங்கடேசன்:

உங்கள் கரிசனத்துக்கும் – உண்மை என்னவாக இருந்திருக்கலாம் எனும் சிந்தனைகளுக்கும் நன்றி. எனக்குத் தெரிந்து பல மனிதர்கள் இப்படி இல்லை.

 • நான், அம்மணி தீஸ்தா ஸெதல்வாத் தளத்திலிருந்த பொதுத் தீர்ப்பைப் படிக்கவில்லை. அவர் மேல் எனக்கு துளிக்கூட நம்பிக்கையில்லை; ஏனெனில் தரவுகள் சார்ந்து அவரை ஒரு பண/கருத்து மோசடிப் பேர்வழியாகக் கருதுகிறேன். அதே சமயம் பல வடிவங்களை ஒருங்கிணைத்து எது சரி எதில் என்ன பாடபேதம் என்று ஆராயவேண்டிய அளவு, போயும்போயும் தீஸ்தாக்கள் மேல் நேரம் செலவு செய்ய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை – ஏன், உங்களுக்குமே இல்லை — என்பதுதான் என் எண்ணம். மேலும் வெறும் கூக்ல் மூலமாக, மௌஸை உருட்டி இணையத்தில் கிடைக்கும் சத்தற்ற செய்திகளை நான் உடனே நம்பி விடுவதில்லை. என் பயிற்சியும் அனுபவங்களும் (healthy skepticism) அப்படி என்னை ஆக்கிவிட்டிருக்கின்றன. ஆம். இன்டெர்நெட்டித்யேவ நஸாது ஸர்வம். :-( காளிதாஸன் எப்போதுமே காப்பாற்றிவிடுவான்! :-)

 • நான் படித்தது – தீர்ப்பின் ஒரு  ‘ஸெர்டிபைய்ட் நகல்’ – சரியெனக் கண்டு சான்றளிக்கப்பட்ட ஆவணம் – இது ஒரு மின்ஆவணம் அல்ல; அதாவது குஜராத் உயர் நீதி மன்றத்தில் பணம் கட்டி, ரசீது பெற்று என் நண்பர் அனுப்பிய பெரும்காகித பார்ஸல், அவ்வளவுதான்.  ஆனால் – உங்கள் பக்க எண்ணிக்கைகளைப் பார்த்தால், நீங்கள் படித்துள்ளது ஏழு வழக்குகளுக்கான பொது தீர்ப்பைத்தான் என நினைக்கிறேன்; ஆனால் இது தொடர்பாக (எனக்குத் தெரிந்தே) 11 பிற வழக்குகள் இருக்கின்றன. சில நிலுவையிலும் சில ஃபைஸல் செய்யப்பட்டும் உள்ளன. நீங்கள் இவற்றைப் பற்றி அறிந்திருக்கலாம், படித்துமிருக்கலாம். இவற்றைத் தவிர பிற முன்மாதிரி வழக்குகளின் தீர்ப்புகளும் இருக்கின்றன. இவற்றையும் படித்திருந்தால் நலம். இவையெல்லாம் பெரும்பாலும் இணையத்தில் கிடைக்கமாட்டா.  அப்படியும் கிடைக்கும் சில ஆவணங்களும் முழுமையானவையாக இல்லை – வெறும் தீர்ப்புகள் மட்டுமே கிடைக்கின்றன.
 • கடந்த 15 மாதங்களில் – இம்மாதிரி குஜராத் நீதிமன்றப் பதிவாளர்களிடம் பணம் கட்டி,  பல ஆவணங்களைப் பெற்றுள்ளேன் – இவை சுமார் 12700 பக்கங்கள் போல இருக்கலாம்; இதைத் தவிர, ஆர்டிஐ மூலமாக பலவிதமான (மோதி அரசு தொடர்பான) தரவுகளைப் பெற்றிருக்கிறேன் – பின்னவற்றை என் நண்பர்கள் பணம்கட்டிப் பெற்று அளித்திருக்கிறார்கள் – இவை அனைத்தும் இப்போது, கொஞ்சம் கொஞ்சமாக ஒரு பக்கக் காகிதங்களாக என் பள்ளியில் உபயோகப் படுத்தப் பட்டுக் கொண்டிருக்கின்றன; மேலும் சரியாகப் புரியாத விஷயங்களைப் பற்றித் திறமையான நீதிபதி ஒருவரிடம், மூன்று மூத்த  (குஜராத் ஐஏஎஸ் அதிகாரிகளிடம், சான்றோர்களிடம் கேட்டு நிவர்த்தியும் செய்துகொண்டிருக்கிறேன். என் நண்பர் மூலமாக காஞ்ச்சி ஜாதி முஸ்லீம் பெரியவர்கள் இருவருடன் (பெரும்பாலும் இந்த ஜாதியைச் சேர்ந்த முஸ்லீம்கள் தாம் கோத்ராவில் ரயில்பெட்டியை எரித்தவர்கள்; இவர்களில் ஒருவருடைய மருமகனுக்கு கொலைக்குற்றத்துக்காக ஆயுள்தண்டனை) பேசியிருக்கிறேன். குஜராத் அரசுக்கு, மோதிக்கு, அரசு வழக்கறிஞர்களுக்கு நீதிபதிக்கு இவர்கள் நன்றிக்கடன் பட்டுள்ளதாகத்தான் சொன்னார்கள் – ஏனெனில், அரசுத் தரப்பு மரணதண்டனைக்காக அழுத்தம் கொடுக்கவில்லை என்பதால் – இது ஒரு கொசுறுச் செய்தி.
 • நீங்கள் வெகு சுளுவாக பிரிவு 301 (கொலை), பிரிவு 315 என்றெல்லாம் இந்திய தண்டனைச் சட்டத்தை மேற்கோள் காட்டி – நீதிமன்றத் தீர்ப்பு பற்றி எழுதியிருக்கிறீர்கள்; நீங்கள் சட்டம் படித்தவரா என்று தெரியவில்லை. ஆகவே, என்னைப் போல ஒருவர்தான் (=நீதித் துறையில் முறையான பயிற்சியில்லை) என்று உங்களை நினைத்துக்கொள்கிறேன் – தவறாயிருந்தால் திருத்திவிடுங்கள். ஆனால் – நீங்கள் நினைக்கக் கூடுவது போல – அவ்வளவு சுலபமான விஷயங்கள் (= தமிழ்த் திரைப்படங்கள் போல) அல்ல இவை. சட்டம், குற்றம், குற்றத்தின் தன்மை,  குற்றம் புரிந்தவரின் தன்மை, சுற்றுச் சூழல், சாட்சியங்களின் தன்மை, ருசுக்கள், வாதப் பிரதிவாதங்கள் (இது மிகவும் குறைவாகத்தான் இருக்கும்), வக்கீல்களின் திறமை, முந்தைய தீர்ப்புகள், நீதிபதியின் புலமை/அறிவூக்கம் / அனுபவம், போன்ற பல  போரடிக்கும் விஷயங்கள் இருக்கின்றன. நான் இந்தப் பிரிவுகளை ஓரளவாவது அவற்றின் பின்புலங்களினூடே புரிந்துகொள்ளவே பல வாரங்களானது. நான் ஒரு புத்திசாலியில்லை, ஒப்புக் கொள்கிறேன். என்னுடைய பிரச்சினை என்னவென்றால் – போஸ்ட்மார்ட்டெம் பரிசோதனைகளைப் பற்றி மேம்போக்காக விக்கிபீடியாவில், டைம்ஸ் ஆஃப் இந்தியாவில், தெஹெல்காவில், ஹிந்துவில் படித்துவிட்டு பத்தே நிமிடங்களில், என்னால் பிணவியலின்(!) மகாமகோ விற்பன்னனாகிவிட முடியாது என உணர்ந்திருக்கிறேன்.
 • என்ன சொல்லவருகிறேன் என்றால் நான், சரியானபடி விஷயங்களைத் தெரிந்துகொள்வதற்காக நம்பவேமுடியாத ஒரு வெறியுடன் பல மாதங்கள் செலவுசெய்து ‘ஹோம்வர்க்’ செய்திருக்கிறேன். நீங்களும் அப்படிச் செய்திருக்கலாம் என நினைக்கிறேன். ஆக, தாராளமாக, உங்கள் நோக்கில் நீங்கள் எந்த ஆவணத்தையும் படித்து போதுமானது, சரியென நினைத்துக் கொள்ளலாம். உங்களுடைய நேரத்தையும்,குவிந்த உழைப்பையும், தகவல்களைச் சரியாகத் தெரிந்து கொள்வதற்கான விழைவையும் பொறுத்த விஷயம் இது.
 • இந்த  கரு, இழுத்தல், கத்தியால் குத்துதல், சூலாயுதத்தால் சுற்றுதல் பற்றியெல்லாம் – முந்தைய பின்னூட்டத்தில் பதிவிட்டிருக்கிறேன் (= மேலதிகமாக — நிச்சயம், திட்டவட்டமாக – கருப்பையைக் கிழித்துச் சிசுவை வாளாலோ/திரிசூலத்தாலோ தூக்கி பின்னர் அதன் மேலும் பெட்ரோல் விட்டெரித்தாகத் தீர்ப்பில் இல்லை. போஸ்ட்மார்ட்டெம் ரிபோர்ட்டும் அப்படியில்லை. ஆனால், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனைகள் வழங்கப் பட்டு அமல்படுத்தப் பட்டிருக்கின்றன).  அதாவது, இந்த கர்ப்பிணி விஷயத்தில் தெளிவு என்பது தீர்ப்பிலும் இல்லை. என்னுடைய ஆவணங்களைப் பொறுத்தவரை – இந்தச் செய்தியே ஹர்ஷ் மந்தர் எழுதிய பப்பரப்பாவின் பின்தான் மேலெழும்பியது.
 • பாபு பஜ்ரங்கி – கோத்ரா சம்பவம் நடந்துகொண்டிருந்தபோது -பல வருடங்களுக்கு முன்பிலிருந்தே ஷிவ்ஸேனா-வில் இருந்த ஆள். இவர், விஹெச்பி அமைப்பில் அச்சமயம் இல்லை. மற்றபடி தாராளமாக விஹெச்பி இயக்கத்தைத் தாங்கள் தடை செய்துகொள்ளலாம்.
 • பாருங்கள் வெங்கடேசன் – கயமைச் செயல்கள், கொடூர மாபாதங்கள் இரண்டு பக்கங்களிலும் நடந்திருக்கின்றன. நான் சொல்ல வருவது ஒருபக்கச் செய்திகளைக் கொடுப்பது மட்டுமல்லாமல், மேலதிகமாகத் திரிப்பதைப் பற்றியும்தான். ‘நாகரீகம்’ என்பது சார்பில்லாதது அல்ல – மனதாறச் செய்தி திரித்தல்களையும், வதந்திகளை மறுபேச்சு பேசாமல் நம்புவதையும் மேலதிகமாக அவற்றை மசாலா சேர்த்துக் குயுக்தியுடன் பரப்புவதையும், புதிய பொய்களை அவிழ்த்துவிடுவதையும், ஒரு தேசத்தின் மனத்தையே நிலைகுலைப்பதையும் விடவா அயோக்கியத்தனம் அதிகமாகச் செய்துவிட்டார்கள் இரண்டுபக்க மதவெறி குண்டர்களும்,  எனச் சமனம் குறைவான நேரங்களில் கேட்கத்தான் தோன்றுகிறது.
 • விஷ்வஹிந்து பரிஷத் இயக்கத்திலும் பல வெட்டி குண்டர்கள் இருக்கிறார்கள். கொடூரர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் எந்த இயக்கத்தில்தான் இவர்கள் இல்லை? இதனைத் தடை செய்யவேண்டுமென்றால் – முதலில் கத்தோலிக்க திருச்சபையிலிருந்து ஆரம்பித்து,  எல்லா மதச் சார்புடைய தீவிரவாத /  மதமாற்ற / ஒற்றை தரிசன இயக்கங்களினூடே (இஸ்லாம் உட்பட) தொடர்ந்து மா-லெ கண்ணர்கள் (= நக்கிலைட்டுகள்) வரை அவர்களுடைய வெளிப்படையான அமைப்புகள் வழியாகவும் வந்து என்டோஸல்ஃபான் தயாரிப்பு நிறுவனங்கள் வரை தடை செய்து வேரறுக்க வேண்டும். நேர்மையோடு இதனைச் செய்யவேண்டும்; ஆனால்,  நம்மால் இது முடியாது என்பதால் –  நாம் சும்மனாச்சிக்கும் உட்கார்ந்த இடத்திலிருந்து ஆனந்தமாகக் குசு விட்டுக் கொண்டிருக்கலாம்தான்! மேலும், நடைமுறை  ஜனநாயகம் என்கிற ஜந்து வேறு இருக்கிறதே!
 • பொதுவாக படித்த தற்குறிகளிடையே (= என்னைப் போன்றவர்களுக்கெல்லாம்) இந்த நீதிமன்றங்களைப் பற்றி மிக இளப்பமான அபிப்ராயம் இருக்கலாம். இருந்தாலும், குறிப்பிடத்தக்க வகையில் நீதிமன்றங்கள் முடிந்தவரை சரியாகத்தான் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஆனால், என்னைப் பொறுத்தவரை  – நீதிமன்றத் தீர்ப்புகள் என்றால் நான் கரிசனப்படும் விஷயங்களில்- அவைகள் கொடுப்பதே சரியென்று  ஒப்புக் கொள்ளாமல், மேலதிகமாக கொஞ்சம் நோண்டுகிறேன். அவ்வளவுதான். ஆகவேதான் கருணாநிதி, அழகிரிகளை நிரபராதிகள் என்கிறேன். திருப்தியா?
 • அய்யா இளைஞ வெங்கடேசன் அவர்களே – வாழ்க்கையில், உலகத்தில் ஒரு மசுத்துக்கும் கூட ஸில்வர்-புல்லெட் (அல்லது சர்வரோக நிவாரணி) என்பதாக ஒன்று இல்லவேயில்லை என்பதை நீங்களும்தானே அறிவீர்கள்? எல்லாமே சாம்பல் நிறத்தின் சோகைகள்தாம் அல்லவா. கறுப்பு வெள்ளைகளில் மட்டும் உலகைப் பார்க்கப் போவதற்குமுன் நம்முடைய சொந்த  சாம்பல்தன்மைகளை, நிழல்களைப் பார்க்க ஆரம்பிக்க வேண்டுமல்லவா? (ஆனால், அவற்றிலும் அவற்றுக்கேயுரித்தான அழகுமிருக்கிறது என்பதுதான் சோகம் தரும் விஷயம்)
 • மேலும் – என்னைப் பொறுத்தவரை – பழைய விஷயங்களைப் பற்றிய பொய்மைகளில், திரித்தல்களில் – இவை தொடர்பான மண்வெட்டிதாச ஆராய்ச்சிகளில்அளவுக்கதிகமாக நேரத்தையும் பணத்தையும் சக்தியையும் (=வாழ்க்கையையும்) செலவழிக்காமல் – இனிமேல் என்ன செய்வது என யோசிப்பது, பணிசெய்வது முக்கியமெனக் கருதுகிறேன். இந்த கோத்ரா, குஜராத் புரிந்துகொள்ளல்களுக்காக கடந்த 15 மாதங்களில் செலவழித்த தொகையில் மட்டுமே எங்கள் பள்ளிக்குழந்தைகளுக்கு இரண்டு மாதங்கள் மதிய சாப்பாடு போட்டிருக்கலாம். *ப்ச்*  இருந்தாலும், செலவழித்த நேரத்தையும் சக்தியையும் நினைத்தால் மலைப்பாகவே இருக்கிறது.
 • ஆகவேதான், மேலதிகமாக பயணம்/ஆராய்ச்சி செய்து சக்தியைச் செலவழித்து இந்த குஜராத் திரித்தல்கள் தொடர்பாக விலாவாரியாக 2000 பக்க இரு-பாகப் புத்தகமொன்றை எழுதி அதனைச் சொந்தமாக வெளியிடும் எண்ணத்தையும் கைவிட்டேன். (மேலும் என் வீடு சிறியது. பரண் வசதியுமில்லை. எங்கு நான் விற்காத பிரதிகளை (=100%) வைத்துக் கொள்ள முடியும், சொல்லுங்கள்?)

… … நம் (மெக்காலே+மார்க்ஸ்)/2 அறிவுஜீவிகளின் அடிப்படை சிரத்தையின்மையையே விடுங்கள் – அவர்களுடைய ஒரு சுக்கும் பெறாத நாணயமின்மை  என்பது ஒரு தொடரும் சோகக்கதை. இதனைப் பற்றி எவ்வளவு எழுதினாலும் மாளாது.

அய்யா, முடிவாக – நான் சொன்னேன் என்றும் நீங்கள் எதையும் சரியென்றோ அல்லது சரியில்லையென்றோ என  நினைத்துக்கொள்ள வேண்டா. ஆய்ந்து அறிந்தால் அதுவே போதுமானது. சரியா?

சரி… நண்பர் பூவண்ணன் அவர்களுடைய அதிபுனைவுக் கட்டுரையின் மீதான என் காட்டுரையை வேறு எழுத ஆரம்பிக்க வேண்டும்.  கொஞ்சம் ஆயாசமாகவே இருக்கிறது.

“கிழவனுடைய   அறிவு முதிர்ச்சியும், நடு வயதினனுக்குள்ள மனத் திடனும், இளைஞனுடைய உத்ஸாகமும்,  குழந்தையின் ஹ்ருதயமும், தேவர்களே, எனக்கு எப்போதும் நிலைத்திருக்கும்படி அருள் செய்க…”
– – சுப்ரமண்ய பாரதி

நரேந்த்ர மோதி!

 

13 Responses to “இணையத்திலிருப்பதனாலேயே ஒரு விஷயம் சரியாகிவிடாது!”

 1. Venkatesan Says:

  உங்கள் நீண்ட பதிலுக்கு நன்றி.

  நான் சட்டப் பயிற்சி பெற்றவன் அல்லன். கணினியியல் துறை சார்ந்தவன். தீர்ப்பை படிக்க சட்டம் பயின்று சில வருடங்கள் வக்கீலாக (ஜூனியராக) பணியாற்றிய எனது மனைவியின் உதவி பெற்றேன்.

  நான் படித்தது பல வழக்குகளை தொகுத்து நடந்த வழக்கில் நீதிபதி ஜியோத்சனா யாக்னிக் வழங்கிய தீர்ப்பு. நேரடியாக நீதிமன்றத்தில் போய் நகல் பெருமளவு உங்களைப்போல் எனக்கு சிரத்தை இல்லை. cjp தளத்தில் கிடைக்கும் நகல் மட்டுமே என்னிடம் உள்ளது.

  Section 302, 315 பற்றி பேசியது இவை பற்றி புரிந்து விட்டது என்ற அர்த்தத்தில் இல்லை. For the ease of identification only. இங்கே இரண்டு விவகாரங்கள் உள்ளன. ஒன்று கௌஸர் பானு (திருப்தியா க்ருஷ்ணகுமார்!) கொலை. இதை Section 302 என குறிப்பிடுவோம். இரண்டாவது அவரது பிறக்க இருந்த சிசுவின் கொலை. இதை Section 315 என குறிப்பிடுவோம்.

  Section 302 கீழ் பாபு பஜ்ரங்கி, மோடி அரசில் அமைச்சராக இருந்த மாயா கோட்னானி ஆகியோர் உட்பட பலர் guilty என தீர்ப்பு. எப்படி கொலை நடந்தது என்ற கேள்விக்கு பானுவின் வயிற்றை கிழித்து, அவரை எரித்து கொன்றார்கள் என்கிறது தீர்ப்பு.

  Section 315 கீழ் benefit of doubt தந்து not guilty என தீர்ப்பு.

  பானுவின் கொலையை நேரில் கண்ட சாட்சியம் PW-228 என குறிப்பிடப்படும் 14 வயது சிறுவன். பானுவின் உறவினன். இவனது வாக்குமூலத்தின் பகுதி கீழே (தீர்ப்பு பக்கம் 1376):

  His family members were parted here, he saw his cousin Kausharbanu, Khalid Noor Mohammad Shaikh, who was pregnant, she was caught hold by four persons and A-18 has slit her stomach, A-18 has taken out the fetus on tip of sword and has swirled and thrown it in the fire. (A-18 என்பது பாபு பஜ்ரங்கி).

  கத்தி முனையில் சிசு சுழட்டப்பட்டது பற்றி தீர்ப்பில் ஒன்றும் கூறப்படவில்லை என நீங்கள் சொன்னது சரி அல்ல. சொல்லப்பட்டுள்ளது.

  மேலே சொன்ன பத்தி தீஸ்தா செய்த இடைசெருகல் என நீங்கள் கருதினால் உங்களிடம் உள்ள மூல பிரதியில் இப்படி இருக்கிறதா, இல்லையா என சரி பார்த்து விட்டு சொல்லுங்கள்.

  மேலே சொன்ன பத்தி அச்சிறுவனின் சாட்சியம் மட்டுமே. இது பற்றி நீதிபதியின் கருத்து கீழே (பக்கம் 1382).

  No doubt is left out in the mind of the Court about A-18 to have slit stomach of Kausharbanu as was witnessed by the PW, but at the same time, the description seems exaggerated. While seeing the witness to have been given exaggerated version, it must be understood that after all, this is an observation of child of about 14 years old then and that his perception to such ghastly occurrence would be little different then the adult man with all understanding. The sum and substance is Kausharbanu was pregnant whose stomach was slit open, the other thing of swirling etc. even if is not believed then also the fact of homicidal death of Kausharbanu by slitting her stomach and burning her, obviously with the fetus, stands proved.

  மேலே சொன்னவற்றை வைத்து பார்க்கும் போது “பானு வயிற்றை கிழித்து, சிசுவை வாள் முனையில் சுழற்றி, எரித்தார்கள்” ஒருவர் எழுதினால் அது தவறு இல்லை என நான் கருதுகிறேன். அவர் சிறுவனின் சாட்சியத்தை முழுதும் ஏற்கிறார் என பொருள். மறுபுறம், நீதிபதி கௌசர் பானு கொலை பற்றிய பகுதியை ஏற்றாலும், வாள் முனையில் சிசுவை சுழற்றியதை exaggeration என கருதுகிறார். அவ்வளவே.


  • நன்றி – நீங்கள் சொல்வது சரி. இரண்டு ஆவணங்களிலும் இந்தப் பகுதி சரியாகத்தான் இருக்கிறது. ஆனால் இந்தக் கத்திமுனையில் சுற்றும் விவகாரம் வாக்குமூலத்தின் சாராம்சத்தில் தான் இருக்கிறது. தீர்ப்பிற்கான ஓட்டத்தில் இல்லை என்பதுதான் நான் சொல்லவந்தது.

   அதே ஆவணத்தில் 1933-ஆம் பக்கத்தில் பஜ்ரங்கியின் விண்ணப்பமும் பதிவாகிறது: A-18 has also made submission like A-2. In addition thereto he submits that he is a businessman and he has never done any crime. A-18 has submitted that he has not even killed
   an ant which may be considered. என்று.அதற்காக, தீர்ப்பில் இந்த மனிதர் ஒரு எறும்பைக் கூடக் கொன்றதில்லை எனச்சொல்லப் படுகிறது என்று கருதமுடியுமா சொல்லுங்கள். பஜ்ரங்கியின் தன்னிலை வாக்குமூலத்தை முழுதும் அந்த நீதிபதி ஏற்கிறார் எனவா சொல்லமுடியும்?

   மேலும் இந்தக் குழந்தையின் வாக்குமூலமும், ஹர்ஷ்மந்தர் அவர்களின் கதை கிளப்பப் பட்டதற்குப் பிறகு பெரிதாக்கப் பட்டதுதான். (இது என் எம் கிகனி எனும் வழக்குரைஞரின் கருத்து. தேதிகளும், விவரங்களும் ஒத்துப் போகின்றன).

   நான் சொல்லவந்ததெல்லாம் அயோக்கியத் திரிப்பு பற்றித்தான். ஆனால் குற்றம் குற்றம்தான்.

   இன்னொரு விஷயம் – அதேபோல ஸபர்மதி ரயில்வண்டியில் பலருடன் சேர்ந்து கர்ப்பிணிப்பெண் எரிக்கப்பட்டதைப் பற்றியோ, அல்லது யாத்ரீகப் பெண்கள் கடத்தப் பட்டதாக வந்த கதைகளையோ யாரும் ஒரு ஃபால்லோஅப்பும் செய்யவில்லை! இதுதான் எனக்கு ஆச்சரியம் தரும் விஷயம்.

   ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகை நீதியென்பது. வேறென்ன சொல்ல. ஆனால் இதுதான் நடைமுறை மனிதவுரிமை.

 2. Venkatesan Says:

  நீதிபதி சிறுவனை நம்பத்தகுந்த சாட்சி என ஏற்கிறார். பானு கொலையில் பாபு பஜ்ரங்கி உட்பட பலர் குற்றவாளிகள் என முடிவுக்கு வர இவனது சாட்சியமும் அடிப்படையாக எடுத்துக் கொள்கிறார். எனினும், அவனது சாட்சியத்தின் சிசு கொலை தொடர்பான பகுதிகளை முழு மனதோடு ஏற்க மறுக்கிறார். ஆனால், அவன் பொய் சொல்வதாக நினைக்கவில்லை. மிகக் கொடூரமான ஒரு சம்பவத்தை நேரில் கண்ட சிறுவனின் மனநிலையை கருத்தில் கொண்டு, exaggeration ஆக இருக்க கூடும் என கருதுகிறார். இப்படிப்பட்ட சாட்சியம் ஒரு புறம். மறுபுறம், நீங்கள் குறிப்பிட்டது போல குற்றம் சாட்டப்பட்ட பாபு பஜ்ரங்கியின் “நான் அஹிம்சாவாதி” என்ற வாக்குமூலம். இரண்டையும் ஒப்பிட முடியுமா ஐயா? “நேர்மைத் திறமின்றி வஞ்சனை செய்வது” உங்களைப் போன்ற மேன்மக்களுக்கு அழகல்ல.

  நான் சொல்லவருவது, “வயிற்றைக் கிழித்து சிசுவை வாள் முனையில் சுழற்றி, நெரிப்பில் போட்டு எரித்தார்கள்” என சொல்வது யாரோ கிளப்பிவிட்ட கற்பனை அல்ல. அதற்கு சிறுவனின் சாட்சியம் என்ற அடிப்படை உள்ளது. இதில் மசாலா சேர்த்து பலர் எழுதியிருக்கலாம். அப்படி செய்திருந்தாலும், அதை நான் தவறாக நினைக்கவில்லை. நடந்த கொடூரம் அப்படி. நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்க படும் முன்பே, CAG சொன்ன மூன்று கணிப்புகளில், 1.76 லட்சம் கோடி என்பது மட்டும் பிரபலமாகி, இந்த பணம் எவ்வளவு பெரியது, ஒரு ரூபாய் நோட்டுகளாக மாற்றி அடுக்கினால் எவ்வளவு நீளம் வரும் என்றெல்லாம் பேசப்பட்டது அல்லவா. அது போல. நடந்த ஊழல் அப்படி. மற்றபடி, இந்த சிசு வன்முறை விவகாரம் எப்போது பரவலாக பேசத் தொடங்கினார்கள் என்ற விவரங்கள் எனக்குத் தெரியாது.

  குஜராத் கலவரம் அளவு கோத்ரா பற்றி பேச மறுப்பது தவறு என்றே நானும் கருதுகிறேன். இது ஒரு விபத்து என சொல்வாருமுண்டு. எனினும், magnitude என ஒன்று உண்டல்லவா? மேலும், கோத்ரா சம்பவத்தில் ஈடுபட்டோர் தனிகுழுவினர். குஜராத் கலவரத்தில் ஈடுப்பட்டது அரசியல் பின்புலம் கொண்ட சக்தி மிக்க ஒரு கொலைகார இயக்கம். எனவே குஜராத் கலவரம் அதிக கவனம் பெறுவது இயற்கையே. கோத்ரா பற்றி அதிக விவரம் எனக்கு தெரியாததால் மேலும் சொல்ல என்னிடம் ஒன்றுமில்லை.


  • சரி. எனக்கும் மேலதிகமாகச் சொல்ல ஒன்றுமில்லை – என விட்டுவிடவில்லை. :-)

   என்னைப் பொறுத்தவரை, ஒரு உபயோககரமான ஆயுதம்: ‘கண்ணால் கண்டதும் பொய், காதால் கேட்டதும் பொய், உண்மையைத் தீர விசாரிப்பதே மெய்’ – சரியா?

   // “நேர்மைத் திறமின்றி வஞ்சனை செய்வது” உங்களைப் போன்ற மேன்மக்களுக்கு அழகல்ல.

   எனக்கு நேர்மையிருப்பதாகவும் சொல்லவில்லை; நான் மேன்மக்களில் ஒருவனும் அல்லன். வெறும் சராசரிச் சாதாரண மனிதன். ஆனால் இரட்டைவேடம் போடும் மனிதவுரிமை மண்டூகமோ, அல்லது புர்ச்சிகர நக்கலைட் குளுவானோ அல்லது கீபோர்ட் போராளியோ அல்லது இன்ஸ்டன்ட் அறிவுஜீவியோ அல்லன் என்பதில் பெருமை கொண்டவன்; அவ்வளவுதான்.

   ஆனால், ஒரு விஷயம் – உழைத்து விஷயங்களைச் சேகரித்து விவரங்களைச் சரிபார்த்திருக்கிறேன். அவ்வளவுதான். மேலும் கற்றுக்கொள்ள நிறைய இருக்கின்றன என்பதையும் ஒப்புக்கொள்கிறேன்.

   இன்னொன்று, நான் பேசியவர்களில் அந்த காஞ்ச்சி முஸ்லீம் பெரியவர் சொன்ன அற்புதமான விஷயங்கள் – ஆனால் நான் எழுதாதது – இந்த தொழில்முறை மனிதவுரிமைக்காரர்களின் அழிச்சாட்டியம், அவர்களின் பிரித்தாளும் திறன், துரோகம், பணக் கையாடல்கள், ஆவணமாற்றல்கள் பற்றியெல்லாம்; அது மட்டுமல்ல ஆர்எஸ்எஸ் பிரச்சாரகர் ஒருவரின் தன்னலம்பாரா உதவி, காவல்துறையினரின் கரிசனம், நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞரின் கருணை போன்றவையெல்லாம் கூட! (இவர் மருமகன் கோத்ரா ரயிலெறிப்புப் படுகொலைகளில் தூக்கில் தொங்கியிருக்க வேண்டியது, ஆயுள் தண்டனையாயிற்று)

   இவற்றையெல்லாம் கேட்டால், வாழ்க்கையில், எதிர்காலத்தின் ஒரு நம்பிக்கையே வருகிறது. எப்போதும் நம்பிக்கையுள்ளோர்களிடம் இருத்தல், அரைகுறைகளிடம் சேராதிருத்தல் என்பதற்கு ஒருவன் கொடுத்து வைத்திருக்கவேண்டும்.

   நன்றி.

  • Venkatesan Says:

   // அரைகுறைகளிடம் சேராதிருத்தல் என்பதற்கு ஒருவன் கொடுத்து வைத்திருக்கவேண்டும்.

   என்னோடு இனி உரையாடுவதில்லை என்பதை சூசகமாக சொல்கிறீர்களோ என சந்தேகம் எழுந்தாலும், அப்படி எல்லாம் இருக்காது என நம்புகிறேன் :-)

 3. Venkatachalam Says:

  அன்பு ராமசாமி அவர்களே தங்கள் உழைப்பு நல்ல முடிவினை நல்கி உள்ளது. உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்.

  —->>> நன்றி. என் எழுத்தினால் நல்ல முடிவு வந்திருக்கிறது என்பது லாகிரி கொடுக்கும் கற்பனைதான். ஆனால், நான் / நாம் விரும்பியது நடந்திருக்கிறது. சந்தோஷமாகவும் அமைதியாகவும் இருக்கிறது.

  ஆனால் – உடனடி அதிரடி மாற்றங்களை எதிர்பார்ப்பதற்குப் பதிலாக, நீண்டகால ரீதியில் பாரதத்தை மேலெடுத்துச் செல்லும் காரியங்களை மோதி செய்வார் என எனக்கு நம்பிக்கையிருக்கிறது. நான் சாளரம் #1 தவற்றைச் செய்யமாட்டேன். (https://othisaivu.wordpress.com/2013/11/15/post-285/)

  அன்புடன்,

  __ரா.

 4. க்ருஷ்ணகுமார் Says:

  அன்பின் வெங்கடேசன்,

  \\ ஒன்று கௌஸர் பானு (திருப்தியா க்ருஷ்ணகுமார்!) \\

  மோ(ஹ்)தர்மா பானோ பேகம் ஆப் கோ துவா கரேன். ம்………..த்ருப்தோஸ்மி.

  நான் எழுதுவதில் ஸ்பெல்லிங்க் மிஸ்டேக்ஸ் உங்களை விட பல மடங்கு ஜாஸ்தி. தல தாடி நரச்ச வயசில் திருந்த முடியாது பாருங்கள்.

  ஒரு விஷயத்தை தெளிவாக அறிந்து கொள்ள ஆழமாக அது பற்றி அறிய விழைந்த உங்களது நேர்மைக்கு வணக்கங்கள்.

  \\ இதில் மசாலா சேர்த்து பலர் எழுதியிருக்கலாம். அப்படி செய்திருந்தாலும், அதை நான் தவறாக நினைக்கவில்லை. \\

  நான் தவறாக நினைக்கிறேன். கேவலமான செய்கையாகக் கருதுகிறேன்.

  பொழுது போகாது இணையத்தில் எழுத முனையும் விசிலடிச்சன் குளுவான் கள் மசாலா சேர்ப்பது என்றால் புரிந்து கொள்ள முடிந்த விஷயமே.

  சமூஹத்தில் மெத்தப்படித்தவர் என்ற ஸ்தானத்தில் உள்ள ஒருவர் மிர்ச் மசாலா சேர்த்து ஒரு விஷயத்தை மிக அதிகமான கோரமாக காட்ட முனைவது — ஒரு ஒட்டு மொத்த சமூஹத்தை வெறுப்பு மசியால் தீட்டவே.

  அது ஹிந்து சமூஹத்தை வெறுப்பு மசியால் தீட்டுவதாக இருக்கட்டும் அல்லது முஸல்மாணிய சமூஹத்தை வெறுப்பு மசியால் தீட்டுவதாக இருக்கட்டும். இரண்டும் சரியல்ல. இது சமூஹத்தில் இணக்கத்தை விரும்புபவர்கள் செய்யும் செயல் ஆகாது.

  \\ குஜராத் கலவரத்தில் ஈடுப்பட்டது அரசியல் பின்புலம் கொண்ட சக்தி மிக்க ஒரு கொலைகார இயக்கம். \\

  ஸ்ரீமன், குஜராத் கலஹத்தில் ஹிந்துக்கள் முஸல்மாணியர் இரு சமூஹத்தினரும் ஈடுபட்டு ஒருவரை ஒருவர் கொன்றார்கள். ஹிந்துக்கள் சில நூறு பேரும் முஸல்மாணியர் ஆயிரத்து சொச்சமும் இறந்தார்கள். இந்த அளவுக்கு என்னால் இந்த கலஹம் பற்றிய செய்திகளை ஏற்க முடிகிறது.

  ஹிந்துக்களையோ அல்லது முஸல்மாணியர்களையோ இயக்க ரீதியாக கொன்றார்கள் –என்பது முறையான விசாரிப்பின் பாற்பட்டு எந்த ந்யாயாலய ஆவணங்களிலாவது சொல்லப்பட்டுள்ளது என்றால் பகிரவும்.

  அப்படியில்லாத பக்ஷத்தில் இதை ஒதுக்கி மேல் நகருவேன்.

 5. Venkatesan Says:

  அன்பிற்குரிய க்ருஷ்ணகுமார்,
  இது இந்து இயக்கங்கள் முன்னின்று நடத்திய கலவரம் என்பது இணையதளங்களை மேய்ந்ததினால் கிடைத்த கடன் வாங்கிய புரிதல். இக்கலவரம் தொடர்பாக போதுமான் முனைப்போடு நான் படித்துள்ள ஒரே ஆவணம் நரோடா பாட்டியா தீர்ப்பு. இத்தீர்ப்பு மேலே கிடைத்த புரிதலுக்கு வலு தந்தது.

  நேரடி ஆவண அடிப்படையில் என்னால் நாரோடா பாட்டியா கலவரம் பற்றி மட்டுமே பேச முடியும்.

  தீர்ப்பில் நரோடா பாட்டியா கலவரத்தின் பின்னால் சதித் திட்டம் (conspiracy) இருந்ததா என்ற கேள்விக்கு “ஆம்” என பதில் அளிக்கும் நீதிபதி அதற்காக பலரை குற்றவாளி என தீர்ப்பளிக்கிறார். இவர்களில் principal conspirators என இருவரை சொல்கிறார்: ஒன்று மாயா கோட்னானி, இரண்டு பாபு பஜ்ரங்கி (பக்கம் 249).

  இதில் மாயா கோட்னானி அப்போதைய, அப்பகுதி சட்டமன்ற உறுப்பினர். பிஜேபி கட்சி சார்ந்தவர். பின்னாளில் மோடி அமைச்சரவையில் பங்கு பெரும் அளவு செல்வாக்கு உள்ளவர்.

  பாபு பஜ்ரங்கி அச்சமயம் விஸ்வ ஹிந்து பரிஷத் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டவர் (“A-18 has proved to be a very active worker of Vishwa Hindu Parishad then” – பக்கம் 1588. A-18 = பாபு பஜ்ரங்கி).

  தீர்ப்பில் பல பாதிக்கப்பட்ட இஸ்லாமிய சாட்சிகள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஹிந்து இயக்கங்களை சார்ந்தோர் என வாக்குமூலம் தருகின்றனர். இதை போலீஸ் தரப்பு விசாரணை அதிகாரியான சுதாசாமாவும் உறுதி செய்கிறார். இதை நீதிபதி ஏற்கிறார்: “Through this witness, it stands established that the miscreants of the mob were workers of RSS, VHP and Bajrang Dal which supports the version of numerous victim PWs” (page 1555)

  பக்கம் 1588: In addition to A-37, A-44, A-2, A-20, A-38, A-41 and A-18, etc. have been identified as workers and leaders of B.J.P., R.S.S., Bajrang Dal, V.H.P., etc.

  பக்கம் 1589: It is an admitted position that they all were workers of B.J.P., V.H.P., R.S.S., etc. Their affiliation, intimacy and relationship with one another is inferred as their organizational belonging is common(they = conspirators).

  நரோடா பாட்டியா கலவரத்தில் ஈடுபட்டோர் இந்து இயக்கங்களை சார்ந்தவர்கள் என்பது பாதிக்கப்பட்ட சாட்சிகளின் வாக்குமூலம், நீதிபதியின் கருத்து ஆகியவற்றால் உணர முடியும். தீர்ப்பில் பரவலாக இவை காணப்படுகின்றன. உங்களுக்காக சில பத்திகளை “keyword search” மூலம் கண்டறிந்து எடுத்துப் போட்டுள்ளேன்.

  அதே சமயம் இது தனி நபர்கள் மீதான வழக்கு, எந்த இயக்கத்தின் மீதான வழக்கு அல்ல என்பதையும் நீதிபதி குறிப்பிடுகிறார் (உதாரணமாக பக்கம் 1414). எனவே, தீரிப்பில் எந்த ஒரு இயக்கமும் நேரடியாக குற்றவாளி ஆக்கப்படவில்லை.

  மேலே சொன்னவற்றை வைத்து நான் நரோடா பாட்டியா இந்து இயக்கங்கள் முன்னின்று, சதி செய்து நடத்திய கலவரம் என்ற முடிவுக்கு வருகிறேன்.

  மாறாக, இது சில தனி நபர் குண்டர்களால் நடத்தப்பட்ட தாக்குதல் என்ற முடிவுக்கு வருவது உங்கள் இஷ்டம். தன்னெஞ்சறிந்து பொய்க்காதவரை நலமே.

  —>>>> உங்கள் கருத்துகளுக்கு நன்றி. பிரச்சினையென்னவென்றால், இந்தத் தீர்ப்பில் பிழைகள் மிக அதிகமாக இருக்கின்றன. இந்த மண்வெட்டித்தாசத்தனம் அதிகமாகச் செய்யாமல் – ஒரு விஷயம்: இந்த பாபு பஜ்ரங்கி 1999 வாக்கில் விஹெச்பி அமைப்பிலிருந்து வெளியேற்றப் பட்டார். பின்னர் ஷிவ்ஸேனாவில் சரணடைந்தார். 2002 வாக்கில் கோத்ரா கலவரங்கள் நடந்தன. இது பெரிய விஷயம் இல்லையென்றாலும் – அறிக்கையின்/ஆவணத்தின் விவரணங்களுக்கு, நம்பகத்தன்மைக்கு இது ஒரு சுளிக்கவைக்கும் விஷயம்தான். இது தொடர்பான என்னிடம் இருக்கும் ஆவணத்தைத் தேடி, கிடைத்தால் உங்களுக்கு ஒரு நகல் அனுப்புகிறேன். 2000 பக்க விஷயம், இதெல்லாம் சகஜம் என்றாலும் – இம்மாதிரித் திரித்தல்கள் மறுபடியும் மறுபடியும் சுழற்றப் பட்டு தேவையற்ற களங்கங்களை ஏற்படுத்துகின்றன அல்லவா?

  இன்னொன்று – கோத்ரா கலவரங்களில் ஹிந்து அமைப்புகளின் பங்கை நிராகரித்தது இந்தத் தீர்ப்பு மட்டுமல்ல. நானாவதி தீர்ப்பும் – முக்கியமான எஸ்ஐடி ஆவணங்களும் தீர்ப்புகளும் (அந்தக் காமாலைக் கண்ண ஃப்ரண்ட்லைன், த ஹிந்து போன்றவைகளேகூட ஒப்புக் கொண்டவை இவை) இந்தச் சதி – பார்வையை நிராகரிக்கின்றன. அதே சமயம் ரயிலெறிப்பு விவகாரத்தில் சதி என்பது சந்தேகத்துக்கிடமில்லாமல் நிரூபிக்கப் பட்டு நீதிமன்றங்களால், தீர்ப்புகளால் ஒப்புக் கொள்ளப் பட்ட விஷயம்; ஆனால் – தொழில்முறை மனிதவுரிமைக் காரர்கள் சொல்வது தலைகீழ்.

  சரி. இப்போதைக்குப் போதும். தூங்க வேண்டும். மீண்டும் நன்றி.

 6. Venkatesan Says:

  நன்றி. நீங்கள் குறிப்பிடும் நானாவதி, SIT ஆவணங்களை நான் படித்ததில்லை. நீங்கள் சொன்னதில் ஒரு சிறு திருத்தம் மட்டும்.

  // கோத்ரா கலவரங்களில் ஹிந்து அமைப்புகளின் பங்கை நிராகரித்தது இந்தத் தீர்ப்பு மட்டுமல்ல

  குஜராத் கலவரங்களில் இந்து அமைப்புகளுக்கு அமைப்பு ரீதியான பங்கு இல்லை என இத்தீர்ப்பு கூறவில்லை. The court did not take this as an issue for determination.


  • சரிதான். :-)

   Terms of reference என்று ஒன்று இருக்கிறதல்லவா? அதில் இந்தக் கோணமும் இருந்தாலும் – நீதிமன்றத்தால் சிக்கலான வழக்குகள் கொஞ்சம் சுளுவானதாக் மாற்றப்பட்டதால் சில பிரச்சினைகள், பிறழ்வுகள்.

   இருந்தாலும் போகிற போக்கில் ஆவணங்களில் கருத்துகள் உட்செலுத்தப் பட்டன. ஆனால், இது ஒரு சிக்கலான விஷயம். உணர்ச்சிபூர்வமாக அணுகப் படும் விஷயம். அதனால், தர்க்க பூர்வமாக, ஓரளவுக்கு மட்டுமே ஒருவரால் எதிர்கொள்ள முடியும்.

   ஆனாலும், நீதிபதிகளின் தீர்ப்புகள் (பானர்ஜி-யின் நகைக்கத்தக்க கமிஷனைத் தவிர) பொதுவாக, அமைதியாக, நன்றாகவே இருக்கின்றன.

   மங்கோலியாவிலிருந்து திரும்ப வந்த களைப்பில் இருக்கிறேன். மற்றவை பின்னர். ;-)

   __ரா.

 7. Venkatesan Says:

  நான் ஒரு வாரம் அமெரிக்கா செல்ல வேண்டிய சலிப்பில் இருக்கிறேன் :-(

  பிறகு பேசுவோம் :-)

 8. க்ருஷ்ணகுமார் Says:

  அன்பின் ஸ்ரீ வெங்கடேசன்

  bon voyage!

  \\\ அதே சமயம் இது தனி நபர்கள் மீதான வழக்கு, எந்த இயக்கத்தின் மீதான வழக்கு அல்ல என்பதையும் நீதிபதி குறிப்பிடுகிறார் (உதாரணமாக பக்கம் 1414). எனவே, தீர்ப்பில் எந்த ஒரு இயக்கமும் நேரடியாக குற்றவாளி ஆக்கப்படவில்லை. \\\

  இப்படி தீர்மானமாக நீதிபதி சொன்ன பிறகும் நிகழ்வுகளை ஒரு இயக்கத்தின் மீதானதாக திருப்ப முனைவது உங்களது இஷ்டமாக இருந்தாலும் ……..ஏற்புடையதல்ல.

  அமைப்பு ரீதியாக ஆர்.எஸ்.எஸ் இயக்கம் ( முழு சங்கபரிவார் இயக்கங்கள்) மாற்று மதத்தைச் சார்ந்த சஹோதரர்களுக்கு இந்த கலஹங்களுக்கு முந்தியும் பின்னரும் ……… ஹிந்துஸ்தானம் முழுதும் மத வேறுபாடு இல்லாது அனைத்து மக்களுக்கும் தொடர்ந்து செய்து வரும் சமூஹ நலப்பணிகள்………. வேறு எந்த இயக்கத்தினராலும் செய்யப்படாதவை.

  1984 ல் நடந்த கலஹத்தில் தில்லியில் வெறியாட்டம் நிகழ்த்தியதில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் மிகப் பெரும்பாலானோர் காங்க்ரஸ் கட்சியுடன் தொடர்புடையவர்கள். அதற்கும் மேலாக அமரர் ஸ்ரீ ராஜீவ் காந்தி ஒரு பெரிய மரம் விழுந்தால் அதை ஒட்டி பெரும் சலசலப்பு இருக்கும் என மறைமுகமாக நடந்த நிகழ்வுகளை தன் மனத்தாங்கலும் வெறுப்பும் மிக கருத்தும் பகிர்ந்தார். அத்தனையும் மனதில் வைத்தும் கூட…………..ஹிந்துஸ்தானத்தின் 60 வருஷ செயலின்மைக்கு பெரும் காரணம் காங்க்ரஸ் என்பது எனது புரிதலாக இருந்தாலும் கூட…………இதை வைத்து காங்க்ரஸ் இயக்கம் என்பதே சீக்கியர்களுக்கு எதிரான இயக்கம் என்று சொல்லவே மாட்டேன். அது எவ்வளவு அபத்தமோ அவ்வளவு அபத்தம். வி.ஹி.ப மற்றும் ஆர்.எஸ்.எஸ் போன்ற இயக்கங்களை அமைப்பு ரீதியாக ஒரு சமூஹத்தினருக்கு எதிராகக் காண்பிப்பது.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s