டாக்டர் அய்ஜஸ் இல்மி: அல் கக் அயலுல்லா = வசுதைவ குடும்பகம் [= யாவரும் கேளிர், ஆகவே மோதி!]
April 17, 2014
எச்சரிக்கை: அய்ஜஸ் இல்மி அவர்கள் பொஜக-வின் (= ஆம்ஆத்மி டீ பார்ட்டி) தலைவர்களின் ஒருவரான அம்மணி ஷஸியா இல்மி அவர்களின் சகோதரர். இந்த ஷஸியா அம்மணியானவர், ஊழலுக்கு எதிராக கொதித்துக் கொண்டிருக்கும்போதும், காங்க்ரெஸ்ஸுக்கு எதிராக கொந்தளித்துக் கொண்டிருக்கும்போதும், தொலைகாட்சிக்காரர்களால் அடிக்கடி ஆம்ஆத்மி கட்சி சார்பாக பப்பரப்பா நேர்காணல் செய்யப்பட்டுக் கொண்டிருந்தபோதும்…
… முடிந்தபோதெல்லாம் மன்மோஹன் ஸிங் அவர்களுடன் ஒரு பத்திரிக்கையாளர் என்ற முறையில் துள்ளிக்குதித்துக் கொண்டு இந்திய அரசுச் செலவில் (= நம்முடைய வரிப்பணம்), இலவச வெளி நாட்டுப் பயணங்கள் சென்றவர்! இதுதான் பெரும்பாலான தொழில்முறை ‘பொதுவாழ்வில் தூய்மை விரும்பி’களின் அழகு; ஒரு பக்கம் போராட்டம், இன்னொரு பக்கம், விட்டெறியப்பட்ட எலும்புகளைப் பொறுக்கித் தின்றுகொண்டு, அற்ப மாறாட்ட போங்காட்டம்!
ஆனால், ஷஸியா அம்மணியின் சகோதரர் அய்ஜஸ் அப்படியல்லர். இரட்டை வேடமணிபவர் அல்லர்.
அய்ஜஸ் அவர்களின் குடும்பம் ஸியாஸத் ஜதித் (Siyasat Jadid) எனும் உருது தினசரியை நடத்திக் கொண்டிருக்கிறது. எந்தக் கட்சியிலும் இல்லாமல் ஒரு இந்தியவிரும்பியாக மட்டுமே இருந்த இந்த அய்ஜஸ், எம்ஜெ அக்பர் (நாம் மிகவும் மதிக்கும் படிப்பாளிகளில், சிந்தனையாளர்களில், பத்திரிகையாளர்களில் ஒருவர் இவர்) அவர்களுடன் பாஜக-வில் அண்மையில் இணைந்தார்.
சரி. இப்போது, அய்ஜஸ் இல்மி அவர்கள் திருப்பித் திருப்பிச் சொல்லும் சில கருத்துகளின் தமிழாக்கம்:
- இந்தியா முழுவதும் பலதரப்பட்ட மக்கள் ஏழ்மையில், அறியாமையில் இருக்கிறார்கள். இவர்களில் முஸ்லீம்களும் அடக்கம்.
- பொருளாதாரத்திலும், கல்வியறிவிலும், ஆரோக்கியத்திலும், வேலைவாய்ப்புகளிலும் பின்தங்கியுள்ள அனைவரையும் உள்ளடக்கி, அனைவரின் முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு திட்டங்கள் தீட்டி, அவற்றைச் செவ்வனே நிறைவேற்றுவதே அரசின் கடமை.
- ஆனால், முஸ்லீம்களைத் தனிமைப் படுத்தும் திட்டங்கள் (=isolationism) பலவிதமாக நடைபெறுகின்றன. இவை முஸ்லீம்களுக்குப் பிரத்தியேக சலுகைகள் அளிக்கப் படுவதாலும் ஏற்படுகின்றன. ஆனால், அந்தச் சலுகைகளால், எவ்வளவு முஸ்லீம்கள் சரியாகப் பயனடைகின்றனர் என்பதும் விவாதத்துக்குரியது.
- முஸ்லீம்கள், மற்ற இந்தியர்களைப் போலவே பொருளாதார வளர்ச்சியையும், அமைதியையும் விரும்புபவர்கள். கல்வியறிவு பெற்று, சரியான வேலைகளில் சேர்ந்து நேர்மையாக உழைத்து நிம்மதியாக வாழ விரும்புபவர்கள்.
- ஸெக்யூலரிஸ்ம் பூச்சாண்டியை உபயோகித்து முஸ்லீம் சமூகத்தை, தேசீய நீரோட்டத்திலிருந்து பிரிப்பது தான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.
- இந்த ஸெக்யூலரிஸ்த்தின் குறிக்கோள் – வளர்ச்சியை நோக்கிய பாதையில் முஸ்லீம்களை எடுத்துச் செல்லாமல் இருப்பதுதான். அப்படி எடுத்துச் செல்லப்படாமல் இருந்தால்தான், முஸ்லீம்களின் பய உணர்ச்சிகளை, சிறுபான்மையை உபயோகித்து – அரசியல் ஆதாயங்களுக்காக அவர்களைப் பயன்படுத்திக் கொள்ளமுடியும்.
- முஸ்லீம்களுக்கென்று 15 விழுக்காடு ஒதுக்குவோம் என்பதெல்லாம் மாய்மாலம். இது முஸ்லீம்களின் மீதான வெறுப்பை உருவாக்குமே தவிர, அவர்களுக்கு ஒரு உபயோகமும் இல்லை. எப்படியும் உச்ச நீதி மன்றம் இதனை ஒப்புக் கொள்ளாது; ஏனெனில், இது இந்திய அரசியல் சட்டத்துக்கு விரோதமானது.
- மத்திய அரசுக்கு, திட்டங்களைத் தீட்டுவதில், திறப்புவிழாக்கள் நடத்துவதில், அவற்றை பரப்புரை செய்வதில் உள்ள முனைப்பு, அவற்றைச் சரியாக நிர்வகிப்பதில் இல்லை.
- 2008ஆம் வருடத்தில் கோலாகலத்துடன், மத்திய அரசால் ஆரம்பிக்கப் பட்ட பல்துறை வளர்ச்சித் திட்டமானது (~ MSDP – Multi Sectoral Development Plan) – சிறுபான்மையினரின் மேன்மைக்காகவென்று திட்டமிடப்பட்டது. அதாவது இந்தத் திட்டத்தில், அகில இந்திய அளவில் சிறுபான்மையினர், பெரும்பான்மையினராக இருக்கும் 90 மாவட்டங்களைக் குறிவைத்துத் தொடங்கப் பட்டது. ஆனால், இத்திட்டம் 2012ஆம் ஆண்டு ஆய்வு/பரீசிலனை செய்யப் பட்டபோது (தேசீய சிறுபான்மைக் கமிஷனின் தலைவர் வஜாஹத் ஹபிபுல்லா அவர்கள் தலைமையில் இது நடந்தது) – இத்திட்டத்தில் பல குளறுபடிகள் இருப்பது – அதாவது திட்டமிடுதலிலும், நிர்வாகம் செய்வதிலும் ஏகப்பட்ட குறைகள் இருந்தது தெரியவந்தது. [அதாவது, எம்என்ரெகா (MNREGA) திட்டம் போன்ற ஒரு அடிப்படையிலேயே தவறான ஒரு திட்டம்தான் இது]
- 1994ன் இறுதியில் தொடங்கப்பட்ட தேசீய சிறுபான்மை வளர்ச்சி, நிதி வாரியம் (National Minorities Development and Finance Corporation) என்பது இன்று வரை ஒரு ஏமாற்றுவேலைத் திட்டமாகவே தொடர்கிறது. சச்சார் அறிக்கைக் குழுவின் அங்கத்தினரான அபு ஸாலெ ஷெரிஃப் அவர்களால், இந்தத் திட்டத்தின் தன்மையைப் பற்றியும் அதன் உபயோகத்தைப் பற்றியும் பல அதிர்ச்சியளிக்கும் கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. சுமார் 20 வருடங்களாக நடந்து கொண்டிருக்கும் இந்த வாரியமானது, தான் முதலில் தெரிவு செய்த உத்தேச உபயோகிப்பாளர்களில் – கேவலம் ஐந்து சதவிகிதத்தைக் கூட தம் திட்டங்களுக்குக் கொண்டு வர முடியவில்லை! இந்த வாரியத்தில் சொகுசு, மேல்தட்டு முஸ்லீம்கள் பலருக்கு வேலை கிடைத்ததுதான் ஒரே நல்ல விஷயம்.
- எல்லோரும் நம்புவது போல – முஸ்லீம்கள் என்பவர்கள் ஒரு திடமான ஓட்டு வங்கி சார்ந்தவர்கள் அல்லர். அவர்கள் ஓட்டளிக்கும்போது அவர்கள் முஸ்லீம்களாக மட்டுமே விஷயங்களைப் பார்ப்பதில்லை.
- ராஜஸ்தானில் பாஜக-வுக்கு முஸ்லீம் எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள்.
- மத்தியப் பிரதேசத்தில் இருக்கும் 22 முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள சட்டசபைத் தொகுதிகளில், 21 தொகுதிகளில் பாஜக-தான் வென்றிருக்கிறது.
- கோவாவின் மனோஹர் பர்ரிகர் அரசில் – 6 க்றிஸ்தவர்கள் பாஜக எம்எல்ஏக்களாக இருக்கிறார்கள்.
- நாடெங்கும் பாஜக-வுக்கு வாய்த்துள்ள கூட்டணிகள், மோதி தலைமையில் பாஜகவுக்கு நல்ல எதிர்காலம் இருப்பதைக் குறிக்கின்றன. ஆக, இன்னமும் ‘ஸெக்யூலரிஸ்ம்’ எனும் குண்டுசட்டியில் ஒரு தன்னந்தனியான ஓட்டுவேட்டைக் கழுதையை ஓட்டிக் கொண்டு மக்களை ஏமாற்றமுடியாது என்பது தெளிவு.
- அரபிய மொழியில் அல் கக் அயலுல்லா என்பதும் இந்தியாவின் வசுதைவ குடும்பகம் என்பதும் ஒன்றுதான். இனிமேலும் ஸெக்யூலரிஸம் என்று பேசிக்கொண்டு, மக்களைப் பின் தங்கியவர்களாக வைத்திருக்காமல், அவர்களின் முன்னேற்றத்திற்குப் பாடுபடவேண்டும்.
-0-0-0-0-0-

அண்மையில் இந்த ட்விட்டர் ஜந்துவில் ஐக்கியமாகியிருக்கிறார் இந்த அய்ஜஸ் இல்மி அவர்கள்… முடிந்தால் தொடரவும் – பல திறப்புகள் கிடைக்கலாம்…
அய்ஜஸ் இல்மி அவர்களின் ஒரு ஆங்கிலக் கட்டுரையை முடிந்தால், ஒரு எடுத்துக்காட்டாக, படிக்கலாம். இதைத்தவிர ஹிந்தி /உர்து தெரிந்தவர்கள் மேலும் படிக்க கூக்ளாண்டவன் சன்னிதானத்தில் சரணடையலாம். மேலும் ஸியாஸத் தளத்தில் அவருடைய பல கட்டுரைகள் இருக்கின்றன.
மேலும் ஆட்சி மாற்றம் தேவை, நரேந்த்ர மோதி குறித்த பதிவுகள்:
April 18, 2014 at 15:10
பத்திரிக்கையாளர் எம்.ஜே.அக்பர் அவர்களும்இதே கருத்தை தொலை காட்சியில் வலியுறித்தினார். ஆனாலும், மக்கள் இன்னும் செக்குலரிசம் என்ற போதையில் இருந்து வெளிவர நாளாகும் போல் தான் தெரிகிறது.