எஸ். ராமகிருஷ்ணன்: ஓற்றியெழுத்து™
April 15, 2014
(அல்லது) பாமோலின் கவரால்…
பாமாயில் (PalmOil) என்ற பெயரை வக்காளிகள் தங்கள் பிள்ளைகளுக்கு ஆசையாகப் பெயரிடுகிறார்கள்.
அடச் சட்… :-(
நான் எழுத வந்தது: ‘கோகோல் (Gogol) என்ற பெயரை வங்காளிகள் தங்கள் பிள்ளைகளுக்கு ஆசையாகப் பெயரிடுகிறார்கள்‘ என்றவொரு மகாமகோ படுபயங்கர பயபீதியளிக்கும், திடுக்கிடவைத்துத் தூக்கிவாரிப்போடும் தகவலுடன் ஆரம்பிக்கும் ‘கோகோலின் பெயரால்’ எனும் தலைப்புடைய மிக முக்கியமான கட்டுரையைப் பற்றித்தான். :-((
சரி. பெயரைப் பெயரிடுவார்கள் – ஆகவே, மயிரை மயிரிடுவார்கள் எனும் அடிப்படைப் புரிதலுடன் ஆரம்பிக்கத்தான் நினைக்கிறேன். :-((( இருந்தாலும் அழுகைஅழுகையாக வருகிறது.
-0-0-0-0-0-0-
எவ்வளவு வங்காளிகள் தங்கள் குழந்தைகளுக்கு கோகொல் எனப் பெயரிட்டு கொகொல்லென்று சிரித்து – உடனடியாக மிஷ்டி தொய்-யுடனும் (=இனிப்புத் தயிர்), ரொஷ்கொல்லோக்களுடனும் (=ரஸகுல்லா) என்னிடம் வந்து “நானும் கோகோல் பெயரை என் பிள்ளைக்குப் பெயரிட்டுவிட்டேன்; தயவு செய்து, தேவரீர் எய்ட்ஸ் வராத புள்ளி ராஜாவாகிய நீவிர், உடனடியாக எங்கள் புள்ளியை உம் புள்ளியியல் விவரத்தில் மேம்படுத்திக் கொள்ளவும்!” என்று சொல்லியிருப்பார்கள்?
எவ்வளவு பாமாயில் கவர்கள் என்னைப் பார்த்து, எண்ணெய் வழிந்திருக்கும். கஸாக்குகளுக்கும் கொஸ்ஸாக்குகளுக்கும் வித்தியாசம் தெரியாமல், கோகொலுக்கும் கூக்லுக்கும் வித்தியாசம் தெரியாமல் விக்கிபீடித்து விக்கி விசும்பி சளி ஒழுக அழுதிருக்கும்? காலத்தின் நீட்சியில் தனிமையான சாட்சியங்களாய் பிசுக்கியிருக்கும்? கண்களைக் கசக்கியிருக்கும்?
பாமாயில் என்பதே கொலஸ்ட்ரால் இருப்பின் நெட்டைநெடு மரமான தனிமையின் அவஸ்தைதானே! கொலஸ்ட்ராலுக்கு அஞ்சாமல் இருக்க அஞ்சியோப்ளாஸ்டி இருக்கிறதே என சிறிது ஆசுவாசப் படுத்திக் கொள்கிறேன்.
அடுத்து செர்னோபில் சென்று அணுக்கருவுலையைப் பார்வையிட்டு அதன் மறுதிறப்புமூடுவிழா குறித்து நிபுணத்துவமான ஆலோசனைகளை உக்ரைனிய அரசுக்கு வழங்க என் உக்ரைனிய தமிழ் வாசகர்கள் அழைத்திருக்கிறார்கள்… சென்று பதிவு இடுகிறேன்.
அடச் சட்.
-0-0-0-0-0-0-
விக்கிபீடியாக்களை, காலாவதியான இணையப் பக்கங்களை, புத்தகங்களின் அறிமுகங்களை (புத்தகங்களை அல்ல) வைத்து கண்டமேனிக்கும் டர்புர்ரென்று பீலா விடுவதற்கும் ஒரு அளவு வேண்டாமா?
சரி. அப்படியே ஒற்றி எடுத்தாலும் பிரச்சினையில்லை – குறைந்தபட்சம் அடிப்படை நேர்மையுடன் — ஒரு மேற்கோளாவது, ஒரு அடிக்குறிப்பாகவாவது காட்ட/சுட்ட வேண்டாமா? (என் சொந்த அனுபவத்திலிருந்து சொல்கிறேன்: ஒருவர் அப்படிக் கொடுத்தாலும் கூட நூற்றுக்கு ஒரு நாலுபேர் அந்த அடிக்குறிப்புகளைப் படித்தால், சுட்டிகளுக்குச் சென்றால் அது அதிகம்! மிகப்பெரும்பாலான தமிழ் வாசகர்கள் மகாமகோ சோம்பேறிகள், ஆம்! எப்படியும், தமிழ் எழுத்தாளர்கள் நல்ல படிப்பாளிகள் போல மினுக்கிக் கொள்வதை யாரும் கேள்வியே கேட்கப் போவதில்லை!)
ஏன் கண்டகழுதைகளுடன், காப்பிக்கடை முதலாளிகளுடன், படு மட்டமாக எழுதுவதற்குத் தொடர்ந்து போட்டி போட்டுக்கொண்டேயிருக்கிறார்?
இவரால், போங்காட்டம் ஆடாமல் – சாதாரணமாக நன்றாகவே எழுதமுடியும் – எனக்கு இவர்மேல் நம்பிக்கையிருக்கிறது; ஆனால், அவருக்குத்தான் தன்மேல் நம்பிக்கையோ, தொழிலில் சிரத்தையோ இல்லையோ?
இவருக்கு நிறைய வாசகர்கள் இருக்கிறார்கள் – இவர்களில் பலர் புளகாங்கிதக் குளுவான்களாக இருந்தாலும், சிலர் அப்படியல்லர் – பாவப்பட்ட படிப்பாளிகள். மேலும் ‘மலேசியா சிங்கப்பூர் முதலிய நாடுகளில் மக்களின் பேராதரவு பெற்ற கோபால் பல்பொடி’ க்கு அடுத்தபடியாக இவர்தான் அதிக எழுத்தாள வசீகரம் உள்ளவர். ஆக, புலம் பெயர்ந்த புலமை பெயர்த்த தொலைதூரத் தமிழக் காதலர்கள் இவரை வேலைவெட்டியற்றுக் கூப்பிட்டுக் கூப்பிட்டு ஆரத்தி எடுக்கிறார்கள், பேசுவதைக் குறிப்பெடுத்துக்கொண்டெல்லாம் கவனிக்கிறார்கள் – சுற்றுலா அழைத்துச் செல்கிறார்கள்; எனக்குப் பொறாமையாகவே இருக்கிறது.
எழுதுவதையெல்லாம் வரிசையாக அழகுணர்ச்சியில்லாமல் தொடர்ந்து போட, ஒரு பதிப்பகமும் இருக்கிறது – ஆனால் இது ஒழுங்காகப் பணம் கொடுக்கும் வகையறா இல்லைதான், பொதுவாகவே ராயல்டீ-க்கு பதிலாக ராயல்ஹல்வாதான் கொடுக்கும். இருந்தாலும்…
அணுசக்தி பற்றி அதிகம்தெரிந்துகொள்வதற்குப் பதிலாக அணுஅணுவாக ஏன் சகதிக்காரராக மாறி சதிக் குத்தாட்டம் போடுகிறார்? படிக்காத புத்தகங்களைப் பற்றி ஏன் விலாவாரியாக எழுதுகிறார்? கண்டமேனிக்கும் கந்தறகோள மொழிபெயர்ப்புகளை ஏன் தொடர்ந்து வெளியிடுகிறார்?
ஏன், என்னுடைய தமிழை(!) விட படுமோசமான தமிழில் – இலக்கணப் பிழைகளையே விடுங்கள் – சொற்பிழைகள் மலிய விட்டேற்றியாக எழுதுகிறார்? பதிவுகளுக்கு ஒரு ப்ரூஃப் ரீடிங் மண்ணும் செய்வதில்லையா? கேட்டாள், ஓடி வந்து உதவ ஆயிறம் நன்பற்கல், உலகலாவிய வாசகக் குலுவான்கல் இருப்பார்கலே! இத்தனைக்கும் எஸ்.ரா அவர்கள் என்னைப் போலல்லாமல், ஒரு முழுநேர எழுத்தாளர் வேறு! இந்த மகாமகோ அசிரத்தையை என்னால் ஒப்புக் கொள்ளவே முடியவில்லை. (நான் ஒரு தமிழ் எழுத்தாளன் அல்லன் என்பதையும் இங்கு கவனிக்கவும். நான் தமிழ் எழுத்துகளின் ஒரு நுனிப்புல் நுகர்வோன் மட்டுமே!)
கேள்விகள், கேள்விகள்…
வருத்தத்துக்குரிய பின்குறிப்புகள்:
- என் உறவினர் ஒருவர் இந்த எஸ்ரா-வுடைய துணையெழுத்தைப் படித்து விட்டு ‘நன்றாகத் தானே எழுதுகிறார் இவர்’ என்கிறார். எல்லாம் என் தலையெழுத்து, வேறென்ன சொல்ல. நான் ‘ நீயே வைத்துக்கொள், திருப்பிக் கொடுக்கவே கொடுக்காதே’ என்று சொல்லி இந்தப் புத்தகத்தைக் கொடுத்ததற்கு எனக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்.
- ஓற்றியெழுத்து™ – இது இணையப் பக்கங்களிலிருந்து, உருவப்படத் தக்கதாக தோதான விஷயங்கள் கிடைக்கும்போது, மானாவாரிச் சாகுபடி முறையில், கமுக்கமாகக் காப்பியடித்து – ஒற்றி ஒற்றி எழுதப் படுவது. இவ்வகையில், தமிழ எழுத்தாளர் யுவகிருஷ்ணா அவர்கள் ஒரு முன்னோடி ஓற்றியெழுத்தர்; அதன் ட்ரேட்மார்க் அவரிடம்தான் இருக்கிறது. மேலதிக விவரங்களுக்கு அவரை அணுகவும்.