சரி, தமிழிளைஞர்கள் கோபமே படக்கூடாதா? பொதுமக்களாகிய நாம் என்னதான் செய்யவேண்டும்??
February 22, 2014
பத்ரியின் விட்டுப்போன கேள்வி: [தமிழ்நாட்டு மாணவர்கள்] கோபமடையவே கூடாதா? (“… Should they not get angry at all?”)
(அல்லது) … தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (23/n)
அய்யா பத்ரி, இளைஞர்கள் / மாணவர்கள் கோபப்படலாம். படவேண்டும்தான். இந்த வயதில் ஒரு தார்மீகக் கோபம் இல்லாதவர்களுக்கு, எப்போதுமே அது வராதுதான். அவர்களுக்கு ஒரு வடிகால் தேவைதான். ஒப்புக் கொள்கிறேன்.
ஆக, அப்படிக் கோபப்படுபவர்களை, உடனடியாக ஏதாவது உருப்படியாக, உபயோககரமாக, ’ஸ்டூடென் ட் ப்ரொடெஸ்ட்’ அல்லாத, பணி செய்ய வேண்டும் என விரும்புபவர்களை – கீழ்க்கண்ட உடலுழைப்பு சார்ந்த பணிகள் செய்யச் சொல்லலாம். குறைந்தபட்சம் 6 மாதங்கள் ஒரு பணியைச் செய்யவேண்டும் – நடுவில் விட்டு விட்டு ஓடி வரக்கூடாது. இது ஒரு கேளிக்கை உண்ணாவிரதமல்ல – சும்மனாச்சிக்கும் ஒரு வேளை சாப்பிடாமல் இருப்பது போல – என அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும். (இதற்கு தமிழ் நாடு, இந்திய அரசுகள் ஸ்ரீலங்கா அரசிடம் விண்ணப்பித்து முறையாக அனுமதி பெறவேண்டும்; மேலும் இந்நடவடிக்கைகளால், சிங்களப் பொதுஜனங்களுக்கும் உதவி விளைவது போலத்தான் இருக்கவேண்டும்.)
அ: அங்குள்ள இடிந்த கட்டடங்கள், உடைந்த பாலங்கள், சிதைந்த சாலைகள், அறுந்த மின்கம்பித் தடங்கள் போன்றவற்றை மராமத்து செய்யலாம். (இதற்கு அடிப்படை அறிவும், பயிற்சியும், கடின உழைப்பும் வேண்டும்.)
ஆ: தமிழர் பகுதிகளில் எல்டிடிஇ ஆட்களால் புதைத்து வைக்கப்பட்டிருக்கும் கண்ணி வெடிகளை அகற்றுவதை, இந்திய, இலங்கை ராணுவத்தினருடன் சேர்ந்து செய்யலாம். (வீரம் செறிந்து தினவெடுத்து அலைபவர்களுக்கு ஒரு வடிகாலாக அமையும் இது. இதற்கும் மூளையும், பயிற்சியும், கடின உழைப்பும் – மிக முக்கியமாக, முன்னனுபவம் உடையவர்களின் அறிவுரையைக் கேட்டொழுகும் பண்பும் வேண்டும்; மேலும் ஏனோதானோ என்று இந்த வேலையைச் செய்தால் ஊக்க போனஸாக, ‘வெற்றி அல்லது வீரமரணம்’ கிடைத்தாலும் கிடைக்கும்!)
இ: தமிழர்களின் வயல்களில் வேலை செய்யலாம். ஸ்ரீலங்கா (தமிழ்) மீனவர்களுடன் கூடமாட உழைத்து – எப்படி, தமிழக மீனவர்களால், அவர்களுடைய ட்ரால் / மடிப்பு வலைகளால், எல்லை அத்துமீறல்களால் – ஸ்ரீலங்கா (தமிழ்) மீனவர்களுக்கு எவ்வளவு மோசமான வாழ்வாதாரப் பிரச்னைகள் வருகின்றன எனப் புரிந்துகொள்ள முயலலாம். (உள்ளுறுதி, தாங்குதிறன் எல்லாம் இதற்கு நிறையவே வேண்டும். மாடு அல்லது ட்ராக்டர் ஓட்டுவதிலும், பல மணி நேரங்கள் நீச்சலடிப்பதிலும், கடலில் மீன்பிடிபடகில் வாந்தியெடுக்காமல் பயணம் செய்வதற்கும் பயிற்சி வேண்டும்.)
ஈ: ஸ்ரீலங்கா பள்ளிகளில் படிப்பு சொல்லிக் கொடுக்கலாம். (இதற்கு முதலில் நான்கு வார்த்தை தொடர்ந்து, கோர்வையாகப் பேசவேண்டிய, அதுவும் தமிழிலேயே செய்யவேண்டிய பூதாகாரமானப் பிரச்னையையும் தாண்டி – அடிப்படை அறிவு என்பது முக்கியம்.)
உ: மருத்துவ நிலையங்கள் / முகாம்கள் அமைத்து நிர்வகிக்கலாம். வாழுமிடங்கள் கட்டித் தரலாம். (இதற்கெல்லாம் நிர்வகிக்கும் திறனும், கட்டிடக் கட்டுமானக் கலைகள் பற்றிய அறிவும் வேண்டும் – பூஞ்சை உடல்கள் கொண்டவர்களால், வெறும் ஸிக்ஸ்-பேக்-காரர்களால் – இவற்றைச் செய்ய முடியாது)
ஊ:அங்குள்ள குழந்தைகளுக்கு கதைகள் சொல்லலாம். விளையாட்டுப் பயிற்சிகள் தரலாம். தோட்டங்கள் அமைக்கலாம்.
இப்போதைக்கு இவ்வளவு போதுமென நினைக்கிறேன்.
(இம்மாதிரி அமைதிக் கட்டுமான இயக்கங்களில் பணிபுரியும் இளைஞர்களுக்கு, தமிழக-இந்திய அரசுகள் பலவிதங்களில் ஊக்கமளிக்கலாம்.)
-0-0-0-0-0-0-0-
பத்ரியின் இன்னொரு விட்டுப்போன கேள்வித்துகள்: “அவர்கள் நன்றாகப் படித்து, நல்லமதிப்பெண் பெற்று ஒரு வேலையைத் தேடிக்கொண்டால் போதுமா? அவ்வளவுதானா? (“…Are they merely supposed to study well and get a degree and a job? That is it? Nothing more?”)”
அய்யா, பத்ரி – இந்த ‘நன்றாகப் படித்து நல்ல மதிப்பெண் பெற்று ஒரு வேலையைத் தேடிக்கொள்வது’ என்பது உங்களைப் பொறுத்தவரை சுளுவாகவே இருக்கலாம். அதனால்தான் ‘அவ்வளவுதானா?’ என்றெல்லாம் ஆற்றாமையால் கேட்கிறீர்கள். என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
ஆனால், பெரும்பாலான தற்காலத்திய இளைஞ மாணவக் குஞ்சாமணிப் பெருந்தகைகள், இதனையாவது செய்யமுடிந்தால் அது பெரிய விஷயம்தான். ஆக, அவர்கள் இதனைச் செய்தால் அது மெச்சக் கூடியதே! (இதனை, இத்தோடு விட்டுவிடுகிறேன், இல்லாவிட்டால் அழுதுவிடுவேன்)
-0-0-0-0-0-0-0-0-0-
இதெல்லாம் சரி, தமிழப் பொதுமக்களாகிய நாம் என்னதான் செய்யவேண்டும்??
ஸ்ரீலங்கா தமிழர்களுக்கு, ஒருங்கிணைந்த ஸ்ரீலங்கா தேசத்தின் கீழ சமஷ்டி அமைப்பில், தேவையான அதிகாரங்களுடன், முடிந்தவரை அமைதியுடன் வாழ்வதே ஒரு லாபகரமான, வளமான எதிர்காலத்தை நோக்கிய பயணமாக இருக்கும்.
இதில் ஒரு சந்தோஷமான விஷயம் என்னவென்றால், எல்டிடிஇ பிரபாகரன்கள் செய்த நம்பவே முடியாத சகதமிழர் படுகொலைகளை மீறி, இன்னமும் பல ஜனநாயகவாதிகள், மக்கள் தலைவர்கள் – ஸ்ரீலங்கா தமிழர்களிடையே இருக்கிறார்கள். இவர்களை இனம் கண்டுகொண்டு, அவர்களுக்கு நாம் உதவி செய்வதும் – ஒரு நீண்டகாலப் பார்வையில் – அனைவருக்கும் நன்மை பயக்கும்.
என்ன செய்யலாம்?
க: நாம் செய்யக்கூடிய உதவி நமக்கு அல்ல – பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்மை பயக்கவேண்டும் என்கிற எண்ணம்தான் ஆதாரசுருதியாக இருக்கவேண்டும். நாம் இது தொடர்பாக ( நல்ல எண்ணத்தில் என்றே வைத்துக்கொள்ளுவோம்) எது செய்தாலும் இதனை மனத்தில் கொள்ளவேண்டும். இப்படி யோசித்தால், சுமார் 99% வெற்றுவேட்டுப் போராட்டங்கள், டெஸொ-புஸொக்கள் போன்ற ‘டைம்பாஸ்’ அபத்தங்கள், ‘நாம் டமிளர்’ போன்ற வேடிக்கைவினோதங்கள் இழுத்து மூடப்படும்.
ங: நாம் செய்யக்கூடிய உதவிகள், உண்மையாகவே அங்குள்ள தமிழர்களுக்கும் உபயோககரமாக இருக்கவேண்டும். நிகழ்கால நோக்கிலும், எதிர்காலத்திலும் நன்மை விளைவிப்பனவாக இருக்கவேண்டும். இதற்கு, இவர்கள் – இந்தப் பிரிவினர் (அங்குள்ள சகல பகுதிகளில் இருக்கும் தமிழர்கள்) என்ன சொல்கிறார்கள், இவர்கள் விருப்பம் என்ன என்று அறியவேண்டும்.
மற்றெங்கோ இருக்கும் நம் போன்றவர்களின் விருப்பங்கள் இங்கு இரண்டாம் அல்லது கடைசிப் பட்சமே. ஒரு விஷயம் – அங்குள்ள தமிழ் மக்களின் பிரதிநிதிகள் – ஜனநாயகரீதியாக அவர்கள் (டக்ளஸ் தேவானதந்தா போன்றவர்கள்) குரல்களை இன்றும் எழுப்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், நாம் இவர்களைக் கவனிக்காமல், கேட்காமல், சொல்வதை அவதானிக்காமல், தூரத்தில் ‘புலம் பெயர்ந்து’ பாதுகாப்பாக, மிகவும் சொகுசாகவேகூட, இருப்பவர்களின் வாயோர நுரை தள்ளல்களிலும், இங்குள்ள உதிரி அரைகுறைகளின் (டெஸொ-புஸொக்கள், தமிழ் தோசையம் சார்ந்தவை போன்ற கோமாளி இயக்கங்கள்) உளறல்களிலும் வசீகரப்பட்டு – நம்பவேமுடியாத வகையில் குண்டுச்சட்டியில் போராட்டக் கும்மி அடித்துக்கொண்டிருக்கிறோம்!
ச: இந்த உதவிகள், ‘புலம் பெயர்ந்த’ தமிழர்களுக்கு உபயோகமாக இருக்கவேண்டிய அவசியமே, துளிக்கூட இல்லை.
ஸ்ரீலங்காவில் சூழ்நிலை சரியானால்கூட, இந்த ‘மேற்கத்திய’ நாடுகள் (ஆஸ்ட்ரேலியா உட்பட) போனவர்கள் திரும்புவார்களா என்பது சந்தேகமே! யோசித்துப் பாருங்கள் – பெருமளவு ரத்தம் சிந்துதல்கள் இல்லாத, அமைதியான நம் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு பணியும் பணியாரமும் தேடிப் போனவர்களே, திரும்ப வருவதில்லை. அதற்கு அவர்கள் லொட்டுலொசுக்கு என ஆயிரம் காரணங்கள் வேறு சொல்வார்கள்.
இப்படிப் போனவர்களெல்லாம், பொதுவாக என்ஆர்ஐ-களுக்கே உரித்தான மேட்டிமை மனப்பான்மையுடன், பெரிய மனசு வைத்துத் திரும்பி வந்தால், இந்தியாவே கந்தறகோளம் ஆகிவிடும் என்பது வேறு விஷயம்; அதேபோல ‘புலம் பெயர்ந்த’ ஸ்ரீலங்கா தமிழர்கள் திரும்பிப் போனால், ஸ்ரீலங்காவும் கந்தறகோளம் ஆகிவிடும்! இம்மாதிரி படுபயங்கர நிலை ஸ்ரீலங்கா வாழ்தமிழர்களுக்கு வரவே கூடாது, பாவம்.
ஞ: எந்த உதவியும் தமிழர்களல்லாத மற்ற மக்களை – பொது மக்களை (முக்கியமாகச் சிங்களர்களை) உசுப்பேற்றுவதாக இருக்கக்கூடாது. ஒரு ஸ்ரீலங்கா தமிழர் உதவி பெற்றால், ஒரு தமிழரல்லாத ஸ்ரீலங்கா மனிதராவது உதவி பெறவேண்டும். (இல்லையேல் பரஸ்பர அவ நம்பிக்கைகள் தொடர்ந்து பெரிதாக ஊதப்பட்டு புதிய பிரச்னைகளைக் கிளப்பும்.)
ட: நாம் இங்கே தைரியத்துடன் நம் தமிழகத்தில் இருந்துகொண்டு, நமக்கு பொழுதுபோகாமல் இருக்கும்போதெல்லாம், அங்கிருக்கும் தமிழர்களுக்கு உசுப்பேற்றக் கூடாது.
‘குட்டி நடிகை, மீசைக்கார ஹீரோவுடன் மாயம்!’ போன்ற மிக முக்கியமான, உலகைக் குலுக்கும் செய்திகள் கிடைக்காதபோது, அரைகுறை அயோக்கிய ஸன் டீவிதனமாக ‘இளங்கையிள் இணப் படுகொளை’’ எனப் பொய்ச் செய்திகளைப் பரப்பக்கூடாது. இங்கு வரும் யாத்ரீகர்களுக்கு (புத்த/சிங்கள/…) நம்முடைய புறநானூற்று வீரத்தையும், மழபுல வஞ்சித்தனத்தையும் ( = கல்லெறிதல், விரட்டுதல், கோஷ்டம் போடுதல், தட்டிகளைக் கிழித்தல்) பரிசளிக்கக் கூடாது.
இணையத்திலும் நம் வீரத்தைக் காட்டக்கூடாது. இல்லையேல், அங்கு தமிழர்களின் பிரச்னைகள், மேலும் சிக்கலாகும் என்பதுகூட நமக்குப் புரியமாட்டேன் என்கிறது?
ஸ்ரீலங்காவாழ் தமிழர்கள் அமைதியாக வாழ்வது, முன்னேற்றம் காண்பது போன்றவற்றைத் தமிழகத் தமிழர்களாகிய நமக்குப் பல காரணங்களால் பிடிக்காமல் போகலாம், இருக்கலாம். இருந்தாலும் நாம் கொஞ்ச நாட்களுக்காவது அந்த ஸ்ரீலங்கா தமிழர்களைப் பற்றி யோசிக்காமல், ஏதாவது ஹிந்தித் திரைப்பட விமர்சனம் எழுதலாமே?
ண: போர், கொலைகள் எல்லாம் விளையாட்டுகள் அல்ல, ஐபிஎல் கேளிக்கைகள் அல்ல என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
சும்மனாச்சிக்கும் பிரபாகரன் கையில் டுப்பாக்கியுடன் வெறித்தனமாகச் சிரிக்கும் படங்களுடன் தங்கள் படங்களையும் போட்டுக்கொண்டு, பகிரங்கமாக கவைக்குதவாத தற்குறிச் சுயமைதுனம் செய்வதைத் தவிர்க்கவேண்டும். ஒரு கேளிக்கைக்குத்தான், கையலாகாத்தனத்தினால்தான், இதனை நாம் தமிழர் செய்கிறோம் என்றாலும், பாதசாரிகள் இந்த ஃப்லெக்ஸ் தட்டிகளைப் பார்த்து சாலையோரங்களில் வாந்தியெடுப்பது, நன்றாகவா இருக்கிறது?
த: அர்த்தமற்ற – ‘ராஜபக்ஷவைத் தூக்கில் போடு!’ ‘ஸ்ரீலங்காவில் நடத்தது இனப் படுகொலை என அறிவி,’ ‘சிங்களப் பேரினவாதம்,’ ‘மனிதவுரிமை மீறல்களை ஐநா நிறுவனம் விசாரிக்கவேண்டும்,’ ’ஸ்ரீலங்காவின் மீது பொருளாதாரத் தடை விதி’ ‘ராஜபக்ஷவை போர்க் குற்றவாளியாக அறிவி’ ’இலங்கைத் தமிழினம் ஒரு தனி தேசிய இனம்,’ ‘இலங்கையில் நடந்தது இனப் படுகொலை’ என்பது போன்ற அரைவேக்காட்டு வெற்றுக் குப்பை கோஷங்களை அருவருத்து வெறுத்து ஒதுக்குதல் வேண்டும்.
சரி, ஒரு பேச்சுக்கு இந்த அற்பக் ‘கோஷ்டங்கள் விடுவதை’ சரியென்று வைத்துக்கொள்வோம்; நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்றும் வைத்துக்கொள்வோம்; நிலைமை இப்படியானால், ஸ்ரீலங்காவில் இதனால் தேவைக்கும் அதிகமாக அவதியுறுவது அங்குள்ளத் தமிழர்களாகத்தான் இருக்கும்! இந்த அடிப்படை எழவெல்லாம்கூட, மரத் தமிழர்களாகிய நமக்குப் புரிய மாட்டேன் என்கிறது.
ந: ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணி இங்கே வரக்கூடாது, இந்தியா காமென்வெல்த் கூட்டத்துக்குப் போகக்கூடாது என்ற அரைவேக்காட்டுத்தனம் எல்லாம் கூடாது. இந்தக் குப்பைப் புறக்கணித்தல்களினால் யாருக்கு என்ன பயன்? (ம்ம்ம்… மன்னிக்கவும்: நமக்கு ஏற்பட்ட தினவை, நாம் இம்மாதிரி குழந்தைத்தனமாகத் தீர்த்துக்கொள்ளக் கூடாதா என்ன?)
ப: நமக்குத் தேவை, நிதானம். காரணகாரியங்களை அறிந்து செயல் புரியும் தன்மை.
ஆனால், திராவிடத் தமிழர்களாகிய நமக்கு, இதெல்லாம் மிகவும் கடினம் என்பதால், நம் அனைத்து துவாரங்களையும் மூடிக்கொண்டு, ஸ்ரீலங்கா விஷயத்தில் ஒன்றும் செய்யாமல், நமக்கெல்லாம் கைவந்த கலையான, கந்தறகோளத் திரைப்படங்களைப் பார்த்து, சூட்டோடு சூடாக, ‘சினிமா விமர்சனம்’ எழுதுவதை, திராவிடமுயக்கங்களைப் போற்றுவதைச் செய்யலாம்.
எழவாவது அறிவுக்குப் பிறகு ‘எட்டாவது சொறிவு’ என்ற படம் எடுக்கப் போகிறார்களாமே? நன்றி.
-0-0-0-0-0-
அடுத்து… தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (24/n)