தமிழ்ப் பட இழவுகளுக்கு, இழவுத் தமிழ்ப் பாடல்களை எழுதுவது எப்படி: சில குறிப்புகள்

January 18, 2014

இப்பதிவைப் படிக்கப்போகும் நீங்கள்,  ஒரு புலவராகவோ, கவிஞராகவோ, திரைப்படப் பாடலாசிரியராகவோ அல்லது இன்னபிற விசித்திர  ஜந்துவாகவோ இருந்தால், உங்கள் மனம் வீணாகப் புண்படக் கூடாது என்று தோன்றினால், தயவு செய்து மேலே படித்துத் துன்புறவும். இது முக்கியம். தற்காலத் தமிழப் பண்பாட்டின் படி, தான் எதையாவது கந்தறகோளமாகச் செய்து அதற்கு ஏதாவது எதிர்மறை எதிர்வினை வந்தால் அதனை நினைத்து உடனுக்குடன் புண்பட்டு, ஒப்பாரி வைத்து, பிலாக்கணம் பாடி, கண்டீரா – என்னைப் பற்றி, என்ன சொல்லிவிட்டான் இவன் என அழுது புரண்டு, ஆதூரமாக நாலு வார்த்தை எவனாவது சொல்லமாட்டானா என்று ஓரக்கண்ணால் பார்த்து, மூக்கிலிருந்து ஒழுகும் சளியை நக்கிக்கொண்டு அய்யோ உப்புக் கரிக்கிறதே என்றலைவது மிக மிக  முக்கியம்.

ஆம். எனக்குத் தெரியும், எவ்வளவு அயோக்கியர்கள்  புண்படுத்தியிருக்கிறார்கள் என்னை, அற்பர்கள்.  ஆனால், மார்கழிக்குளிர் முடிந்தும், மகரராசியில் புகுந்தும் – சளி, சனியன் போகவே மாட்டேனென்கிறது. ஆகவே, இக்காலங்களின் உணவிற்கான உப்பை மிகக் குறைவாகவே வாங்குகிறோம்.

சரி. மற்றபடி இந்த ஒத்திசைவு இழவைப் படிக்கும் மற்றவர்கள் எப்படியும் தங்களைத் துன்புறுத்திக் கொள்வதில் ஆனந்தம் கொள்பவர்கள், ப்ளடி மேஸொக்கிஸ்ட்ஸ்.  ஆகவே அவர்களும் தொடர்ந்து படிக்கலாம், அவர்களுக்கு வேறு வேலையே இல்லையென்பதும் எனக்குத் தெரியும்.

-0-0-0-0-0-0-0-0-

பொதுவாக, தமிழ்த் திரைப்படக் கவிஞர்கள் = கூவான்கள் என்று நான் சொல்லவருகிறேன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். உங்கள் கருத்துக்கு நான் ஆட்சேபம் தெரிவிக்கப் போவதில்லை. ஆனால், கூவான்கள் என்பது மிகவும் மரியாதைக்குரிய வார்த்தையாகப் படுகிறது என்கிற என் சிறிய தயக்கத்தைப் பதிவு செய்ய இங்கே நான் கடமைப் பட்டிருக்கிறேன்.

ஆனால், நான் உபயோகப் படுத்த விரும்பும் வார்த்தை, மெட்ராஸ் பாஷையிலேயே ஒரு மோசமான வார்த்தை –  எனக்கே  அதனை வெளிப்படையாக எழுதுவதற்கு கொஞ்சம் தயக்கமாக இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்! ஆக, என்னை நீங்கள் மன்னித்துவிடவேண்டும்.

-0-0-0-0-0-0-0-0-

ஒரு கணினிக் கழுதையானது, கழுதை அல்காரித்ம் (கட்டளைக் கட்டமைப்பு முறை) ஒன்றை வைத்துக் கொண்டு நம் கவிஞ்சர் பெருமகனார்களை, பெருமகளார்களை விட நன்றாக, அவர்கள் பாணியிலேயே எழுதி முடிக்கும் என்பது ஒரு ஆச்சரியமான விஷயம்.

இதே போன்று, எறும்புகள் போல சுறுசுறுப்பாகச் சுற்றி காப்பியடித்துக்கொண்டு, டெம்ப்லேட் இசையமைக்க அலையும் வேலையை நம்முடைய இசையமைப்பாளர்களும் செய்கிறார்கள் என்பதும் சரியே.

ஆனால், தமிழர்களாகிய நாம் நம் மட்டத்தை அடைந்தவர்கள், அதனை அறிந்தவர்கள் – நம் மட்டத்தைப் பற்றிய புளகாங்கிதமும் பெருமையும் உடையவர்கள். அந்த மட்டத்திலேயோ, அல்லது அதை விடப் படுமட்டமாகவோ செய்யப்படும் எந்த விஷயத்தையும் மிக மகிழ்ச்சியுடன் அள்ளி அள்ளிப் பருகுபவர்கள். பொதுவாக Nம்கெட்டான்கள்.  ஆகவே, பொதுவாக நமக்குப் பிரச்சினையில்லை என்றாலும்…

… சரி, ஒப்பாரி ஆலாபனை போதும். இப்பதிவு, நம்முடைய டெம்ப்லேட் கவிஞ்சர்கள், தெரைப் பாடலாசிரியக் கோமாளிகள் பற்றி மட்டுமே.

-=-=-=-=-=-

ரமேஷ் மஹாதேவன், ரமேஷ் மஹாதேவன் என்று ஒருவர் அந்தக்கால இன்டெர்நெட் நேரம்போக்கிகளில் ஒன்றான யூஸ்நெட்-ல் இந்திய ‘கலாச்சாரத்தை’ பற்றி உரையாடும் குழுக்களில் (soc.culture.indian, soc.culture.tamil போன்றவைகளில்) மிகப் பிரபலமாக இருந்தார். இதெல்லாம் 1987-88 வருடங்களின் என எனக்கு நினைவு. அவற்றில் அவர் தொடர்ந்து பல விதமான, அழகாக வடித்தெடுக்கப்பட்ட கட்டுரைகளை எழுதிவந்தார். இசையிலிருந்து, அரசியல் ஊடாக, என்ஆர்ஐ ‘தேசி’ ஜந்துக்களின் வாழ்க்கைப் போராட்டங்கள் வரை என, பல விஷயங்களைப் பற்றி இயல்பான, குமிழியிடும் நகைச்சுவையுடன் எழுதிக்கொண்டிருந்தார்…

அவர் எழுதிய  “Algorithmic approach to writing Tamil verse” எனும் ஆங்கிலக் கட்டுரையில், தமிழ்ப் படப் பாடல்கள் எப்படி உருவாக்கப் படுகின்றன என்று அவருடைய நகைச்சுவையான பாணியில் எழுதியிருக்கிறார். இது அவசியம் படித்து இன்புற வேண்டிய கட்டுரை.

ரமேஷ் அவர்களின் கட்டுரைகளை, அக்காலங்களில் ஏறக்குறைய எல்லாவற்றையும்,  புதுக்கருக்கு குலையாமல் தரவேற்றப்பட்டவுடன் படித்து மகிழ்ந்தவன் என்ற முறையில், அவருடைய எந்தக்  கட்டுரையையும் நான் பரிந்துரைப்பேன்.

இந்த ரமேஷ் மஹாதேவன் அவர்களை, ஒரு அண்மைய பின்னூட்டத்தில் நினைவுபடுத்திய ‘யயாதி’ அவர்களுக்கு மிக்க நன்றி.  இவர்களெல்லாம் இப்போது தொடர்ந்து எழுதுகிறார்களா என்ன?

–=-=-=-=-=-

என்னுடைய மதிப்புக்குரிய நண்பர் ஒருவரின் மனைவி, கிண்டி பொறியியல் கல்லூரியில் (Guindy Engg College, Anna Univ), கணினித் துறையில் ஆசிரியராகப் பணி புரிந்து கொண்டிருக்கிறார். சில வருடங்கள் முன் அவர் ஒரு மாணவர்குழாமுடன் ஒரு பரிசோதனை முறை ‘திரைப்பாட்டு எழுதுவான்’ (Lyric Generator) மென்பொருள் ஒன்றை வடித்தெடுத்திருக்கிறார்.

அதாவது, ஒரு நிகழ்வின் பின்புலத்தை ( ‘சிச்சுவேஷன்’ என்று சொல்லிச் சொல்லி அலற வைப்பார்களே, நம் திரைப்பட அஸிஸ்டென்ட் டைரடக்கர், டைரடக்கர் குளுவான்கள் – அதேதான் இது) குறித்துக் கொடுத்து, எப்படிப்பட்ட கவிஞ்சர் போல கவிஞ்சை எழுதி அதைத் திரைப்பாடலாக்கவேண்டும் என்று சொன்னால், அந்த எழுதுவான்  அதனை அப்படியே எழுதிவிடும்.

இப்படி ‘செய்யப் பட்ட’ கழுதையையும், ‘எழுதப் பட்ட’ கழுதையையும் ஒன்றோடொன்று பொருத்திப் பார்த்தால், அவற்றுக்குள் இருக்கும் வித்தியாசத்தைக் கண்டுபிடிக்க முடிவதில்லை என்பது இந்த மென்பொருளின் தரத்துக்கு ஒரு சான்று. (உதாரணத்துக்கு, ஏப்ரல் 2012 வாக்கில் உள்ள கவிதை(!)களைப் பார்க்கவும்)

https://www.facebook.com/LyricGeneration ( நான் ஃபேஸ்புக் போன்ற இக்கால நேரக்கொள்ளை வியாதிகளுக்கெதிரியானதால்,  இதனைப் பற்றி அதிகம் படிக்க(முடிய)வில்லை. ஆனால், இந்த ஆசிரிய-மாணவர்களின் முயற்சி மிகவும் நல்லதான, தேவையான ஒன்றுதான். லிரிக் எஞ்சினீயரிங் (Lyric Engineering) கிரிக் கிஞ்சினீயரிங் என மானாவாரியாக உளறப்படும் இக்காலங்களில், இம்முயற்சிகள் – வெப்பக்காற்று அரைவேக்காட்டு பலூன்களை, ஊசி கொண்டு காற்றிறக்கும் பணியைச் செவ்வனே செய்யும்தான்)

அதாவது, ஒரு விதத்தில், அந்த ‘எழுதுவான்,’  ட்யூரிங் சோதனையை வெற்றிகரமாக எதிர்கொண்டிருக்கிறது. இது ஒரு பெரிய விஷயம்தான்.

இதுதாண்டா நம்முடைய டெம்ப்லேட் பாடலாசிரியன் – பாவி ஜய், மதன் கார் கீ, நாமு த்துக்கு மார், அ றிவும தி … எல்லாரும் அவ்வளவுதான். தகர டப்பாவில் வார்த்தைகளைப் போட்டு உலுக்கி அதனைக் கொட்டி, வார்த்தைப் படையல் வைத்தால், நம் தமிழச் சராசரிக் கூவான்களுக்கு ஒரே இன்பம்ஸ்தான்!

படைப்புத் திறனாவது, கற்பனாவளமாவது, மண்ணாங்கட்டியாவது… போங்கடா போக்கத்த கவிஞ்சர் பயலுவளா… எவ்ளொ நாள்டா ஏமாத்திக்கினே இர்ப்பீங்க?

-=-=-=-=-=-=-=-=-=-

இது சுமார் இரண்டுவருடமுன்பு நடந்த சமாச்சாரம். என்னிடம் சிலசமயம் இஞ்சினீயரிங் கணிதம் தெருப்புழுதி என்று கற்றுக்கொள்ளவந்து கொண்டிருந்த மாணவன் ஒருவன் தன்னுடைய கல்லூரியின்(!) ஆண்டுவிழாவுக்கு அவசியம் வரவேண்டும், தாம் நடனமாடுவதை(!) பார்க்கவேண்டும் என்னை மிகவும் தொந்திரவு செய்து கொண்டிருந்தான்.

எனக்கு இம்மாதிரி விசிலடிச்சான் குஞ்சிளைஞக் கேளிக்கைகளுக்குப் போக இஷ்டமே இல்லை. ஆனால் பையனைப் பார்த்தால் பாவமாக இருந்தது.ரொம்ப தூரமேடா (அந்தக் கல்லூரி 70-80 கிமீ தூரத்தில் இருப்பது), வேலை ரொம்ப இருக்குடா என்றெல்லாம் சால்ஜாப்பு சொல்லிப் பார்த்தாலும் கேட்கவில்லை அவன். (இம்மாதிரி கொஞ்சம் நெருங்கிப் பழகினால், இப்படி ஒரு பிரச்சினை: அவர்களே அறியாமல் இந்தப் பையன்கள் என்னை தரதரவென்று கீழிரக்கிச் சென்றுவிடுவார்கள், யோசித்தால் அவர்களும் பாவம்தான் – அவர்கள் அறிந்த உச்சங்களெல்லாம் விஜய், அஜித் இன்னபிற ஜந்துக்கள் மூலமாக வந்தவைதான், என்ன செய்வது சொல்லுங்கள்)

… வேறென்னவெல்லாம் பண்ணப் போறீங்க அந்த விழாவுல என்று கேட்டதற்கு மேற்கண்ட கந்தறகோளப் பாடலாசிரியர்கள் போன்றவர் ஒருவரைத்தான் சீஃப் கெஸ்ட்டா கூப்ட்ருக்கோம் என்றானே பார்க்கலாம்! (எனக்கு இந்தப் பெயர் ஞாபகத்துக்கு வரமாட்டேனென்கிறது, ஒரு கேள்வி: எவ்வளவு குளுவான்கள் இப்படிப் பாடல்கள் எழுதிக்கொண்டிருப்பதை, அப்பாடல்கள் வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கின்றன?)

எனக்கு வந்த வெறுப்பில், அந்தப் பையனை ரெண்டு சாத்து சாத்தி, வீட்டை விட்டு வெளியே போடா என்று சொல்லலாம் எனத் தோன்றியது.

கோபத்தை அடக்கிக் கொண்டு, அப்டீ அவ்ரு என்ன பெருசா எஞ்சினீயரிங் சாதன பண்ணியிருக்காருடா?

அவ்ரு சினிமா பாட்டெழுதறவர் சார்.

அவர் ஏதாவது இளைஞர்களுக்கு முன்மாதிரியா இருந்திருக்கிறாரா? ஏதாவது வித்தியாசமாச் செஞ்சிருக்காரா?

இல்ல சார். அவர் சில ஹிட் பாடல்கள எழுதியிருக்காரு சார்.

நம் தமிழ் அல்லது இந்தியப் பண்பாட்டுக்கு ஏதாச்சும் உருப்படியா செஞ்சிருக்காரா?

இல்ல சார். அவ்ரு ரெண்டு பேருக்கு வீல்சேர் கொடுத்திருக்காருன்னிட்டு பேப்பர்ல வந்துது சார்.

சரி,  நல்ல விஷயம்தான்; ஆனாக்க, அவர் கிட்டேர்ந்து ஏதாவது கத்துக்கப் போறீங்களா? நீங்க ஒங்க விழால இருவது பேருக்கு வீல்சேர் கொடுக்கப் போறீங்களா?

இல்ல சார். டேன்ஸ் ஆடப்போறோம்.

பின்ன எதுக்குடா அவ்ர கூப்பட்றீங்க?

சார், அவர் ஃபேமஸ் சார். பக்கத்து கல்லூரில ஒரு  சப்பை சினிமா நடிகரைக் கூப்டாங்க சார். நாங்க அந்த காலேஜ்ஜ விட பெட்டர் ரேன்கிங் சார்.

அதுக்காவ, இவர ஏண்டா கூப்டறீங்க?

இவ்ரு புகழ் பெற்றவர் சார்.

நல்ல தமிழ்ல நல்லா பேசுவாரா? என்ன பேசப்போறார்?

தெரியாது சார். ஆனா அவர் எழுதின மூணு பாட்டுக்கு நாங்க டேன்ஸ் ஆடப்போறோம்.

அவ்ளோதானா?

இல்ல சார் – அவருக்கு மாலை போடுவோம். அவருக்கு கவுரதையாக இருக்கும். எங்க கல்லூரியின் தலைவர் அவருக்குப் பொன்னாடை போத்துவார்.  பேப்பர்ல பேர். ஃபோட்டோ வரும் சார்.

டேய், நீங்க எதுக்குடா அவ்ருக்கு கௌரவம் கொடுக்கணும்? நீங்க அவ்ர விட பெரிய ஆளுங்களா?

இல்ல சார்.

அவ்ருக்கு ஒங்கள விட இஞ்சினீயரிங் தெரியுமா? அவ்ரு ஒங்கள கௌரவம் பண்ணனுமே!

இல்ல சார்.  அப்பவே சொன்னேனே, அவர் வெறும் பாட்டெழுதறவர்தான் சார்.

அப்டியா, ரெண்டு வரி அவ்ரு எழ்தினத சொல்லு (சொன்னான்: எனக்கு வாந்தி)

தம்பி, நான் வரமுடியாது. எனக்கு இதுக்கெல்லாம் சக்தியில்லேப்பா! வயசாய்டிச்சிப்பா! என்ன வுட்ரூ(அப்பாடா!)

பையனுக்கு ஏமாற்றம்தான். ஆனால், எனக்கு வேறு வழியேயில்லை.

-0-0-0-0-0-0-0-0-

ஏன் நம் இளைஞர்கள், சராசரிச் சினிமாக்காரர்களின், சராசரிக் குஞ்சாமணிகளைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பதிலேயே காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறார்கள்?

வேறெந்த மாநிலத்திலும், நாட்டிலும் – இந்த அளவுக்குக் படு கேவலமாக,  நாம் அரைகுறைச் சினிமாக்காரர்களின் அரைவேக்காட்டுக் கோமணங்களை முகர்ந்து கொண்டே இருந்து புளகாங்கிதம் அடைவதைப் போன்றவைகளைச் செய்வதேயில்லையே?

எனக்குத் தெரிந்து, நம் தமிழகத்திலிருந்து கூப்பிடு தூரத்திலிருக்கும் இலங்கைத் தமிழர்கள் கூட இப்படி, வசீகரக் கழுதைக் கோமாளிகள் பின்னால் படு அசிங்கமாக அலைவதில்லையே! நாம் தமிழ்நாட்டுத் தமிழர்கள் மட்டும் ஏன் இப்படி  இருக்கிறோம்?

(இப்படியே போனால், எனக்கு இன்னமும்  சுத்தமாக மறை கழன்று, ஒரு நாள் இல்லாவிட்டால் ஒரு நாள், புதுச்சேரி தியேட்டர் இழவுகளின் வாசலில் இருக்கும் அற்ப விஜய்/அஜித்/சூர்யா/சந்திரா/சனியா வகையறா  ஃப்லெக்ஸ் விளம்பரங்களைத் தீயிட்டுக் கொளுத்தத்தான் போகிறேன்)

3 Responses to “தமிழ்ப் பட இழவுகளுக்கு, இழவுத் தமிழ்ப் பாடல்களை எழுதுவது எப்படி: சில குறிப்புகள்”


  1. அருண் நரசிம்மன் அவர்களின் பதிவு: http://www.ommachi.net/archives/2053 (ஞாபகம் வருதே 2.0)

    அவர் படித்த கல்லூரி + அதன் பவள ‘விழா’ நினைவுகள் + சினிமாக்காரர்கள் பின்னால் அலையும் தமிழத்தன்மை பற்றிய சிந்தனைகள்…

  2. சான்றோன் Says:

    என்ன சார் பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டீங்க….

    .இப்போதைய முதல்வரையும் ,இதற்கு முந்தைய மூன்று முதல்வர்களையும் கொடுத்து , அடுத்த [குறைந்த பட்சம் ] மூன்று முதல்வர்களையும் தர இருக்கிற தமிழ்த்திரை உலகை இவ்வள‌வு இழிவாக விமர்சிப்பதை……

    தமிழாய்ந்த , தலையானங்கானத்துச்செருவென்ற பாண்டிய நெடுஞ்செழியன் வழியில் தோன்றிய , கலிங்கத்துப்பரணி பாடல் பெற்ற , கல்தோன்றி , மண் தோன்றாக்காலத்தே முன் தோன்றி மூத்த குடியில் பிறந்த , வள்ளுவன் வழி வந்த,
    [ கம்பனையெல்லாம் பட்டியலில் சேர்க்க மாட்டோம் …… கம்பன் மட்டுமல்ல , இறைவனை தமிழால் துதித்த ஆழ்வார்களையும் , சமயக்குரவர்கள் நால்வரையும் கூடத்தான்…..இவர்களெல்லாம் தமிழர்களே அல்ல] மறக்குடியில் பிறந்த திராவிட தமிழன் என்ற வகையில் கடுமையாக ஆட்சேபிக்கிறேன்…….

    தமில் சினிமாவை இழிவு செய்பவரை என் தாய் தடுத்தாலும் விடேன்……

  3. வெளக்கெண்ணை மகாதேவன் Says:

    இந்த மகா அறிவுஜீவி ரமேஷ் மகாதேவன் வைரமுத்து என்ற பெயர் எத்தகைய முட்டாள்தனமானது என்று விளக்கெண்ணை விளக்கம் அளிக்கிறார்.ஏன் அவர் ரசீது கதவு (Bill gates) ஸ்டீவ் வேலைகள்(steve jobs) ஜார்ஜ் புதர் (George Bush) இந்த பேரை பற்றியெல்லாம் நையாண்டி செய்யல?ஏன்னா அவை இன்குலீசில் இருக்கு.இங்க சில பேரு i dont read tamil என்று சொல்லுறாங்களே அப்படி.தமிழை மட்டும் விமர்சிப்பது.பிற மொழிகளில் எவ்வளவு முட்டாள்தனங்கள் இருந்தாலும் பொத்திக்கொண்டு போவது.இந்த மகாதேவன் அமெரிக்காவில் இருக்கார் என்று யூகிக்கிறேன்.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s