இதுதாண்டா கொழுப்புத் தமிழர்களின் விழுக்காடு!
December 13, 2013
நான் வேலைவெட்டியற்றுக் கொழுப்பெடுத்து, நாம் தமிழர்கள்: தோலடிக் கொழுப்பும், நொதுமல் நிலையும் எனும் காட்டுரையை எழுதியதற்கு, என். பக்கிரிசாமி அவர்கள் ஒரு பின்னூட்டமிட்டிருக்கிறார்கள்.
தாங்கள் கூறும் இத்தகைய தமிழர்கள் எத்தனை சதவிகிதம் இருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்?
கேட்டதற்கு நன்றி, பக்கிரிசாமி அவர்களே! மேலதிக ஆராய்ச்சி செய்ய என்னை நீங்கள் உந்துகிறீர்கள் என நினைக்கிறேன், மிக்க நன்றி. தமிழன் காணாத உன்னத உச்சங்களே இருக்கக் கூடாதல்லவா? ஆக, எனக்குக் கொஞ்சம் கூச்சமாக இருந்தாலும், நான் மேலே தொடர்கிறேன்… ஏதோ ணம் செள்ளட் டமிளுக்கு, டமிளர்கலுக்கு, எண்ணாள் ஆண வுதவீ.
ஒரு முக்கியமான விஷயம்: உங்கள் நகைச்சுவையுணர்ச்சி மீது நம்பிக்கை வைத்து, நீங்கள் கோபித்துக் கொண்டு கண்டமேனிக்கும் (பல மற்றவர்கள், இனமானர்கள் போல) என்னைத் திட்டமாட்டீர்கள் என்கிற தைரியத்தில், இதற்கு இரண்டுவிதமான பதில்களைக் கொடுக்கிறேன் – ஏற்க முடிவதை ஏற்றுக் கொண்டு, மற்றவைகளைக் கடாசலாம், சரியா?
1. கறாரான (=படு சீரியஸான) பதில்:
உங்களுக்கும் முன்னமே அறிமுகமாயிருக்கக் கூடும் சான்றோரான – தமிழறிஞர் பேராசிரியர் நிக்காதனார் அவர்களின் அனுமானத்தின் படி – இது – அதாவது, உலகத் தமிழர் எண்ணிக்கையில், ஏறக்குறைய, அதாவது இறங்கதிக, சுமார் 100%-ஆக இருக்கலாம். இவர்களில் சுமார் 92% புலம் பெயராதவர்கள் – தமிழகத்திலேயே (மண்டையில் அடித்துக்கொண்டு) வாழ்பவர்கள்; அதாவது, தமிழ்த் திரைப்படம் பார்த்து, உடனுக்குடன் திரைப்பட விமர்சனம் எழுதுவதில் மகாமகோ மும்முரமாக இருப்பவர்கள்.
சரி… இச்சமயம் உங்களுக்கு இன்னொரு முக்கியமான விஷயம் ஒன்றினைச் சொல்லவேண்டும், அதை நீங்கள் முன்னமே அறிவீர்கள் என்றாலும், நீங்கள் என்னைப் பார்த்து இப்படி ஒரு நுண்மையான கேள்வி கேட்டதால்தான் சொல்கிறேன்: அதாவது நான், பொதுவாக — ஆதாரமில்லாமல் எதையும் எழுதுவதில்லை .
ஆகவே, இப்புத்தகத்தைப் பார்க்கவும், வாங்கவும், படிக்கவும்; வாசிப்பனுபவம் பெறவும்: Dravidian Statistics and Pongal Sacred Geometry: Subaltern Resurrection of Dravidian Pride / Nikkumaa Nikkaathanaar – இதனை உழக்கு பதிப்பகத்தின் ஆங்கில இம்ப்ரின்ட்டான MeasuredThoughts 2012ல் வெளியிட்டது, நம்மைப் போன்ற தமிழறிஞர்களான அனைவருக்கும் தெரிந்ததே! இந்த ஆய்வுப் புத்தகத்திலிருந்து தான் என்னுடைய புள்ளிவிவரத்தை எடுத்திருக்கிறேன்.
இந்த அரிய. அறியவேண்டிய புத்தகத்தின் என்னுடைய அருமையான தமிழ் மொழிபெயர்ப்பை ராங்-கோலி வெளியிடவிருக்கிறது. மேலதிக விவரங்கள்: திராவிடப் புள்ளியியலும், புனிதப் பொங்கல் கோலங்களும் – ஒரு தமிழ்மீட்பியல் ஆய்வு / பேரா. நிக்குமா நிக்காதானார் (தமிழில்: வெ. ராமசாமியார், PhinisheD) / ராங்-கோலி பதிப்பகம் / கோலாலம்பூர் / 2013. இந்தப் புத்தகமும் 2014 சென்னை புத்தகச் சந்தையில் கிடைக்கவிருப்பது, வாசகர்களுக்கு ஒரு அதிகப்படி மகிழ்ச்சிகரமான செய்தி.
சரி… மிச்சமுள்ள 8%ல் — 90% தமிழர்கள் புலம் பெயர்ந்து கலம் ஏந்திக் கொண்டு இருக்கிறார்கள். இந்தத் தமிழகத்தில் ஒரு சுக்கு வோட்டும் போடாத திருவோட்டுத் தமிழர்களான இவர்களுக்கு — தமிழகத்தில் இல்லாமல் மிகப் பாதுகாப்பான சூழலில் வேறெங்கோ வாழ்வதால், தமிழகத்தின் மீது ஒருவிதமான, அற்புத அலாதியான ‘தொலைதூரக் காதல்’ அவ்வப்போது டமாலென்று வந்துவிடுகிறது என நினைக்கிறேன், பாவம்.
தமிழ் நாட்டில் இருந்தவரை, எந்த இழவையும் ‘இலவசமாகவே’ வாங்கிப் பழக்கப் பட்டிருக்கும் அவர்களுக்கு — வருடம் முழுவதும், மிகவும் ‘சீப்’பாக விமானப்பயண டிக்கெட்டுகள் கிடைக்க லபிக்காத காரணத்தால், வருடத்திற்கு ஒருமுறைதான் தமிழகம் வர முடிகிறது என்பதும் புரிந்து கொள்ளக் கூடியதே! மேலும் — எவ்வளவு முறைதான் இந்தக் கேடுகெட்ட தமிழகத்து உறவினர்களுக்கும், பொறாமை மிகுந்த நட்புக் காரர்களுக்கும் அமெரிக்காவில் (=’ஸ்டேட்ஸ்!’) வாங்கிய சீனத்தயாரிப்பு ஒரு டாலர் வெகுமதிகளை, சூட்கேஸ் சூட்கேஸாக இவர்கள் வாங்கி வரமுடியும். இந்த ஒரு டாலர் இழவுகளெல்லாம் தமிழகத்திலேயே வேறு சல்லீசாகக் கிடைக்கின்றனவாமே! என்ன அநியாயம் பாருங்கள். :-(
ஆகவே, பாவம் – இவர்கள் பொதுவாக தமிழகத்தின் திசை நோக்கி, நாளுக்குச் சுமார் ஏழரை முறை இணையம் மூலமாகத் தொழுகிறார்கள். தமிழகம், தமிழ் தொடர்பாக என்ன இழவுகள் நடந்தாலும், உடனடியாக அவர்களின் மேலான கருத்துகளைத் தெரிவிக்க வேண்டிய பொறுப்புணர்ச்சி கொண்டவர்களாகவும் கீபோர்ட் செயலூக்கம் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். நாமெல்லாம் பெருமைப் படவேண்டிய விஷயம் அல்லவா இது?
தொலைக்காட்சி பார்ப்பதற்கிடையில் நேரம் இருக்கும் போது — தமிழகம் எப்படி இருக்க வேண்டும் – தமிழக அரசியல் எனும் சாக்கடையை கையில் ஒரு ரிமோட் கன்ட்ரோலை மட்டும் வைத்துக் கொண்டு, அலுங்காமல் நலுங்காமல் தூய்மை செய்வது எப்படி – தமிழ் வழிக் கல்வியின் உன்னதம் – திராவிடன் தன் இனமானத்தை மீட்டெடுப்பது எப்படி – ஸ்டூடென்ட்ஸ் எப்படி ப்ரொடெஸ்ட் செய்யவேண்டும் – கூடங்குளம் ஏன் கூடாக்களம் – ஈழத்தமிழர்கள் எப்படி சிங்களவனை எதிர்த்துச் சண்டை போடவேண்டும் – … – … என்று அற்புதமான அறிவுரைகள் கொடுத்துக் கொண்டேயிருக்கிறார்கள்; மிக மிக அதிமுக்கியமாக, உடனுக்குடன் தமிழ்த் திரைப்படங்களும் பார்த்து சூட்டோடுசூடாக, விமர்சனச் சேவைகளும் செய்கிறார்கள்.
ஆனால், இவர்கள் இப்படி தமிழகத்தை முன்னேற்றியே தீருவோம் என்று ஆர்வமாக செயல்படுவதால், சில சமயங்களில் – நம்முடைய இணமாணட் டமில்ட் டாய் அவர்களுக்கு, தீவிரமாகச் சிரித்துத் சிரித்து வாயே சுளுக்கிக்கொண்டு விடுகிறது, பாவம்.
அதனால் என்ன, தமிழ்த் தாயைச் சுளுக்கெடுப்பதற்குத் தான் பச்சைத் திராவிடர்களாகிய நாம் புற்றீசல்கள் போலக் கிளம்பி, டமிளகத்திலேயே இருக்கிறோமே! ஹ…!
சரி. மீண்டும் நம்முடைய திக்குத் தெரியாத விழுக்காட்டிற்குள் செல்லலாம்…
மிச்சமுள்ள 10% வெளி நாட்டுத் தமிழர்கள், ஒரு விதமான சுற்றுமுறையில், கவிஞர் அறிவுமதி அவர்களிடம், தங்கள் குழந்தைக்குத் தமிழ்ப் பெயர் வைக்கவேண்டும் என மன்றாடி – பெயர்களைப் பரிந்துரை செய்யச் சொல்கிறார்கள். அவரும் இப்படிப்பட்ட தமிழ்த்தொண்டு செய்வதில் மகாமகோ பெருமையடைகிறார். பிற தமிழர்களுக்கும் நிம்மதி.
ஆக, 92 + 7.2 + 0.8 = 0.
2. நகைச்சுவை பதில்:
உங்கள் கேள்வியில், ஒரு தர்க்கரீதியான பிரச்சினை இருக்கிறது. நானும் தமிழன் தான். என் தோலடிக் கொழுப்பும் என்னில் உறைந்திருக்கும் கடவுள்தான். ஆக, நானும் ஜோதியில் கலந்தவன் என்கிற முறையில் சொல்கிறேன் – நம் தமிழர்களுக்கு தோலடியில் கொழுப்பே இல்லை.
நான் சொல்கிறதுபோல தமிழர்களுக்கு கொழுப்பு அதிகமாக இருந்தால், அவர்கள் நெருப்பின் கிட்டவே போகமுடியாது அல்லவா? அங்கங்கே தனக்குத்தானே எரிக்கப்பட்டுக்கொண்டு ‘spontaneous combustion’ ஆகிக் கொண்டிருப்பார்கள் அல்லவா? மேலும் முக்கியமாக, திமுக தலைவர் கருணாநிதி அவர்களிடம் யாரும் போகவே முடியாது அல்லவா? (ஆதாரம்)
இப்படியெல்லாம் நடப்பதே இல்லையே! ஆக, தமிழர்களுக்குத் தோலடிக் கொழுப்பு என்பது அறவேயில்லை.
ஆகவே, 100 = 0.
எவ்வளவு சந்தோஷமான செய்தி இது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
இப்பதிவின் நீதி:
தமிழர்கள், மிக மகிழ்ச்சியாக, பல்லாண்டுக்காலம் – புலம் பெயர்ந்தோ, பெயராமலோ – இறந்து கொண்டேயிருப்பார்கள். கவலை வேண்டேல்.
முந்தைய பதிவு அநீதி.
நான் என்னுடைய கந்தறகோளக் கட்டுரையில், அநியாயமாக, தமிழர்களின் தோலடிக் கொழுப்பைப் பற்றியும், விட்டேற்றித்தனத்தைப் பற்றியும், படு கேவலமாக எழுதியது தவறு. தவறு. தவறு. :-(
எப்படித்தான் இப்பாவத்திற்குப் பிராயச்சித்தம் செய்யப் போகிறேனோ… (வேறு வழியேயில்லை. 16/n எழுதியேயாகவேண்டுமோ? இயற்கையே!!)
-0-0-0-0-0-0-0-0-0-
இந்தப் பதிவு: தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (15/n)
மேலும், அடுத்தது… தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (16/n)
தொடர்புள்ள பதிவுகள்: தமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்? ஹ்ம்ம் ??
December 13, 2013 at 14:38
பொதுவாக அனைவருக்கும் கொழுப்பு இருப்பது உண்மைதான். இதில் தமிழரென்ன, மற்றவரென்னெ? எனக்குத் தெரிந்து பிறந்ததிலிருந்தே தமிழ் பேசிக்கொண்டு மற்றவர்களைத் தமிழன் என்றும், தான் தமிழனில்லை என்று கூறுபவர்களை அனுபவ பூர்வமாகத் தெரியும். இயற்கையில் 100 சதவிகிதம் என்று எதுவும் கிடையாது என்று நான் நம்புகிறேன். இங்கு ஆஸ்திரேலியாவில், தமிழ் நாட்டிலிருந்து வந்தவர்களில் சிலருடைய குழந்தைகள் தமிழ் படிக்கிறார்கள். சிலர் குழந்தைகள் சமஸ்கிரிதம் படிக்கிறார்கள். எப்பொழுதும் புதிதாக வருபவர்களின் குழந்தைகளை மட்டுமே இந்தப் பள்ளிகளில் பார்க்கலாம். அடுத்த தலைமுறை குழந்தைகளை இந்தப் பள்ளிகளில் பார்க்க முடியாது. 70-களிலிருந்து இங்கே தமிழ் நாட்டிலிருந்து வந்தவர்கள் இருக்கிறார்கள். எப்படியிருந்தாலும், ஆசிரியரின் தீர்ப்பே இறுதியானது இல்லையா? ஜமாயுங்கள். பதிலுக்கு நன்றி.