தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (1/n)

November 12, 2013

இப்பதிவுகளுக்கான ஒரு இடஞ்சுட்டிப் பொருள் விளக்குதல்: பத்ரி, தமிழர்களாகிய நாம், ஏன் இப்படி இருக்கிறோம்?  (02/11/2013) இது  0/n – அதாவது முதல் பதிவு.

எச்சரிக்கை:  1) இந்தப் பதிவு வரிசை – பல மாதங்கள் முன் பத்ரிக்கு ஒரு கடிதம் போல எழுதப் பட்டது; ஆகவே, நான் கொஞ்சம் எடிட் செய்தாலும், வெட்டி-ஒட்டுவேலை செய்தாலும்  – சில காலாவதியான விஷயங்களும் இருக்கின்றன.  2) இப்பதிவுகள் சுமார் 15 போல வரலாம். ஆக, உங்கள் உயிருக்காக   ஓடவேண்டுமானால் தாராளமாக ஓடலாம். 3) ஆனால், மேலே படிக்கப் போகிறீர்களானால், அவசியம், இந்த வலைப்பூவின் முகப்பில் வலது பக்கத்தில் இருக்கும் பக்கங்களில் இதனைப் படிக்கவும்: ராமசாமி – யாரில்லை?

பத்ரியின் கேள்விகள்:

* What is your take on the solution to Sri Lankan issue going forward?
* What should the civil society of Tamil Nadu do? Fight or do nothing? If fight, fight for what?
* What is the role of Tamil Nadu mainstream parties and fringe groups? Why should they be shunned by the civil society and concerned citizens?
* What should Tamil Nadu students do at all – when they see things going all messy? Should they not get angry at all? Are they merely supposed to study well and get a degree and a job? That is it? Nothing more?”

சரி. பத்ரி கேட்டிருப்பதன் சாராம்சம் – 1) ஸ்ரீலங்கா பிரச்னைகளும் 2) ஸ்ரீலங்கா தொடர்பான தமிழகப் பிரச்னைகளும் – பற்றியவை.

ஆனால், சுமார் ஏழெட்டு மாதங்களுக்கு முன்பே, தமிழகக் கொதிப்பெல்லாம் வழக்கம்போல அடையாள உணர்ச்சிப்பிழம்புகள், ஃப்லெக்ஸ் தட்டி அடையாள உண்ணாவிரதங்கள், அடையாளக் கல்லெறிதல்கள் நடந்தபின்னர் பின்புறத்தில் (=குண்டிப்பட்டையில்) ஒட்டிக்கொண்ட மண் தட்டிவிட்டுக்கொள்ளப்பட்டு, அடங்கிப்போயிருந்தாலும், டெஸோக்கள் தஸ்புஸ்ஸோக்களாக உருமாறியிருந்தாலும், அவருடைய கேள்விகள் கேட்கப்பட்டு, பதில்கள் பெறப்படவேண்டியவையே.

மேலதிகமாக, அவருடைய இக்கேள்விகள் ஸ்ரீலங்கா பிரச்னைக்கு அப்பாற்பட்டு, தமிழர்களாகிய நம்முடைய பொதுவான வாழ்க்கை அணுகுமுறைகளைப் பற்றியும் கரிசனம் கொண்டு எழுப்பப்பட்டுள்ளதாகவும் நான் கருதுகிறேன். ஆகவே, இந்த ‘படு லேட்டா எழுதினாலும், லேட்டெஸ்டா எழுதும்’ ரஜினிகாந்தனைய முனைப்பு.

நிற்க, இந்த 1-ம், 2-ம் ஒன்றுக்கொன்று ஏதேச்சையாகத் தொடர்பானவை என்றாலும், இந்தக் கட்டுரையின் பாடுபொருள், பொதுவாக 2 மட்டுமே. ஆனால் 2-ன் மூலமாக 1-ஐ அணுக முயல்வதும் அதில் அடக்கம் என விரியலாம்,

மேலும் இது, முக்கியமாக, தமிழர்களாகிய நம்முடைய பொதுவான அணுகுமுறைகளைப் பற்றி ஒரு ‘குட்டி பூர்ஷ்வா’ எழுதும் நீளக் கட்டுரையாக பரிணாம வளர்ச்சி அடையும்போலத்தான் எனக்குத் தோன்றுகிறது. எப்படி இருந்தாலும், இந்தக் கட்டுரை என் அன்புக்குரிய இணைய வெறுப்பாளர்களை மேலும் அதிகரிக்கவைக்கும் என்பதில் எனக்கு ஐயமில்லை. B-)

எது எப்படியோ, பிரச்னை #1க்குள் நான் இப்போது போகவில்லை. முதலில் நாம் நம் வீட்டை, நம் கோணல் பார்வைகளைச் சரியாக்கிக் கொள்ளவேண்டும் என நான் நினைப்பதால், இந்த அணுகுமுறை.

-0-0-0-0-0-0-

ஆலாபனை (=தன்னிலை விளக்கம்) ஆரம்பிக்கிறது; இது இந்த நீளக் கட்டுரையின் பின்புலத்தைப் புரிந்துகொள்ள உதவும்.

“ஆரம்பத்தில் நாம் எல்லாவற்றிலும் நம்பிக்கை வைக்கிறோம், அதன்பின் சில காலம் பகுத்தாய்ந்து சில விஷயங்களில் மட்டும் நம்பிக்கை வைக்கிறோம், பின்னர் சில காலத்துக்கு நாம் எதனையுமே நம்புவதில்லை – கடைசியில் நாம் அனைத்தையும் மறுபடியும் நம்ப ஆரம்பிக்கிறோம் – மேலும், இப்போது நாம், நம் நம்பிக்கைகளுக்கு, காரணம்  வேறு கொடுப்போம்.”

ஜியோர்க் க்ரிஸ்டோஃப் லிஹ்டென்பர்க் – Georg Christoph Lichtenberg (1742-99)

என்னமாச் சொல்லிவிட்டுப் போய்ச் சேர்ந்தான் இந்த ஜியோர்க்! பாவி.

எச்சரிக்கை: நான் எதிர்த் தொலைக்காட்சியாளன். இக்காலங்களில், தமிழ்ப் பத்திரிக்கைகளையோ (சிறிது/பெரிது), தினசரிகளையோ படிப்பவனேயல்ல. ‘த ஹிந்து’ மட்டும் ஒரு வாரம்-பத்து நாட்களுக்கு ஒரு முறை படிப்பவன் – புரட்டுபவன் என்பதே சரியாக இருக்கும்.. இதற்கு நேரமின்மையும் அயர்வும் முக்கியமான காரணங்கள் என்றாலும் – எந்த ஒரு செய்தியையும் ‘அனலைஸ்’ செய்தால், பாகுபடுத்தி அறிந்தால் – பெரும்பாலும் அவை கவைக்குதவாதவையாக, கிளுகிளுப்பு சார்ந்தவையாக, முட்டியடி எதிர்வினைகளாக அல்லது மறைமுகமாக ஒரு பக்க நியாயத்தை மட்டும் அரைகுறையாகச் சொல்பவையாக மட்டுமே இருப்பதுதான் அல்லது நேரடியாகவே  அயோக்கியத்தனமானவையாக இருப்பதுதான் ஸாஸ்வதம் என்றாகிவிட்டபடியாலும்தான்.

ஊக்க போனஸாக, நான் ஐம்பது வயதை நெருங்கிக் கொண்டிருப்பதனால், கூடப் படித்தவர்களின், சிறுவயதில் என்னுடன் ஒடியாடி விளையாடினவர்களின் திடீர் மரணங்களால், வரும் அடிப்படை வாழ்வியல் சந்தேகங்களும், சரித்திரச் சக்கரங்களும், நினைவுச் சங்கிலிகளும், நிகழ்காலக் கண்ணிகளும் – ஆக, எனக்கு தினசரி பரபரப்புப் பப்பரப்பா விஷய ஞானத்தில் அக்கறையே இல்லாமல் போய்விட்டது…

ஆனாலும், சுமார் 5 வயதிலிருந்து நிறையப் படிக்கிறேன். விதம் விதமாகப் படிக்கிறேன், யோசித்துக்கொண்டிருப்பதாகவும் நினைக்கிறேன். அமெச்சூர் ‘ஹாம்’  ரேடியோவுக்கு மிகப்பல நன்றிகளுடன், பலதரப்பட்ட, பலதேச மனிதர்களுடன் (சில சிங்களப் பொறியியல், ஆர்மி ஆசாமிகள் உட்பட) தொடர்ந்து உரையாடலில், ஒரு காலத்தில் (1980களின் நடுவில்) இருந்திருக்கிறேன், இப்போதும் ஓரளவு இருக்கிறேன். பலவிதமான அனுபவங்கள் பெறும் பேறு பெற்றிருக்கிறேன். கொஞ்சமாக உழைக்கிறேன். பாபுஜி சொன்ன அனுதின சிரமதானம் – ‘ப்ரெட் லேபர்’ கூடவும்தான். (‘Earn thy bread by the sweat of thy brow,’ என்று பைபிள் சொல்கிறதல்லவா?)

சில வருடங்களாகத்தான், பொது மேடைகளில் பேசியிருக்கிறேன் – ஆனால், இனி இப்படிப் பேச்சுப் பேசுவதையும் குறைத்துக்கொண்டு, அல்லது சுத்தமாக  நிறுத்திக்கொண்டு, செயல்படுவதில் புத்தி போகவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. வீட்டில் நிறையப் பேசுகிறேன். பல வருடங்களாக, பலதரப்பட்ட இளைஞர்களுடன், குழந்தைகளுடன் தொடர்ந்து உரையாடலில் இருக்கிறேன். கருப்பு, பழுப்பு, வெள்ளைத் தோலர்களான, பல தளங்களில் இயங்கும், அற்புதமான நண்பர்களைப் பெற்றிருக்கிறேன். வாய்ப்பு கிடைக்கும்போது ஆப்த நண்பர்களைத் துவைத்து எடுக்கிறேன், என் சந்தேகங்களைச் சரிபார்த்து, நிவர்த்தி செய்துகொள்கிறேன், அநுமானங்களைச் செம்மைப்படுத்திக்கொள்கிறேன் – சில மாதங்களுக்குமுன், நான் சென்னையில் உங்கள் (=பத்ரி) கழுத்தை அறுத்தது போல – இவை போதும்.

நான் அதிகம் பத்திரிகைகளில் / இணையத்தில் – அதுவும், தமிழில்  எழுதியவனல்ல – நான் தமிழ் அறிவுஜீவியல்ல. களப்பிணியாளனுமல்ல; நிறைய எழுதியிருக்கிறேன் – ஆனால், சில மிகக் கசப்பான அனுபவங்களால், தமிழ்ப் பத்திரிக்கைகளுக்கோ, எழுத்துலகுக்கோ – அதிகபட்சம் அவற்றைப் படிப்பதைத் தவிர – ஒன்றும் செய்யக் கூடாது (இப்போது யோசித்தால், தப்பித்தது தமிழ்  என்பதுதான் உண்மை!) என்று சுமார் 20 வருடங்கள், கொஞ்சம் சிறுபிள்ளைத்தனமாகவே இருந்தேன். ஆனால், சுமார் 40 நோட்டுப் புத்தகங்கள்போல, தமிழிலும், ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் அடர்த்தியாக – நான் பலவிஷயங்களைப் பற்றியும் கிறுக்கிய குறிப்புகள் – மூட்டை கட்டப்பட்டு, ஒரு அட்டை டப்பாவில், என் பெங்களூர் வீட்டு பேஸ்மென்டில் பல வருடங்களாகத் தூங்கிக்கொண்டிருக்கின்றன.  இவற்றை வெள்ளைக் கரையான்கள் அரிக்காமல் இருந்தால் ஆச்சரியம். கடந்த மூன்று-நான்கு வருடங்களில் இங்கு, இன்னமும் ஆறு நோட்டுகள் சேர்ந்து விட்டன. பயப்படாதீர்கள் – இவற்றை நான், உங்கள் மீது கவிழ்த்திவிடமாட்டேன். உங்களுக்கு மனதில் தைரியம் தேவை. உங்களுக்கு கடவுள்மீது நம்பிக்கை இல்லாவிட்டாலும் வெள்ளைக் கரையான்கள்மீது நம்பிக்கை வைக்கவும். :-)

ஹ்ம்ம். இப்போது சுமார் இரண்டு வருடங்களாகத்தான் தமிழில் இணையத்தில் தொடர்ந்து எழுதி(!) வருகிறேன். மனம் போன போக்கில் வாழ்க்கை போய்க்கொண்டிருக்கிறது, அவ்வளவே. ஆக, தன் மனத்துக்கு உவப்பான வேலைகள் செய்வது, இதிலும் சீரிய வழியில் கொஞ்சம் கொஞ்சமாக என் இணைய வெறுப்பாளர்களின் எண்ணிக்கையை வளர்த்துக்கொண்டிருப்பது – என்று பார்த்தாலொழிய நான் வேறெந்த புண்ணாக்கையும் சாதிக்கவில்லை.

… … இந்தப் பின்புலத்தில் நீங்கள் என்னிடம் இந்த மாதிரி திடுதிப்பென்று கேள்விகள் கேட்பது என்னைக் கொஞ்சம் திடுக்கிட வைத்தது. ஆனால்… இலங்கை-தமிழ்-இந்தியா-சீனா என்று கொஞ்சம் எனக்கு எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் ஒரு கருத்து இருக்கிறது – நிச்சயம், இதற்கு என் மூளை காரணமல்ல – கண்டமேனிக்கு வயதாகியமையும், பலதரப்பட்ட, பட்ட அனுபவங்களுமே காரணம் என்று சொல்லலாம்.

-0-0-0-0-0-0-0-0-

ஆனால். சுமார் 17 (என்னுடைய) வயதிலிருந்து தொடர்ச்சியாக பலதரப்பட்ட இளைஞர்களிடம், குழந்தைகளுடன் உரையாடும் பாக்கியமும், அவற்றில் சிலரைத் தத்து  எடுத்துக்கொண்டதுபோலவும் போன்ற அனுபவங்களினாலும், எனக்கு, இளைஞர்களின் உலகப் பார்வை, முக்கியமாக, தமிழ் இளைஞர்களின் சமகால உலகப் பார்வை / இருப்பின் அவதானிப்பு / சமகால ஆன்மா (Tamil Youth Zeitgeist) என்பது ஓரளவு தொடர்ந்து பிடிபட்டிருப்பதாகக்கூட ஓர் எண்ணம் இருக்கிறது. (இது பிரமையாகவும் இருக்கலாம்)

ஆக, என்னிடம் ஓரளவு அதிமேலளவிலான கோட்பாட்டளவுப் பார்வையும் (bird’s eye view), அடி மண்ணில் விஷயங்கள் எப்படி இருக்கின்றன என்பதன்மீதான அனுபவம் சார்ந்த பார்வையும் (earthworm’s view), இவற்றை இணைக்கும் படிப்பு/பயிற்சிப் பின்புலமும் ஒரளவுக்கு இருக்கின்றன எனவும் வைத்துக்கொள்ளலாம்.

இன்னொரு விஷயம் — என் எதிரில் நடக்கும், அல்லது நான் புரிந்துகொள்ளக்கூடிய விஷயங்கள் பற்றித்தான், அதுவும் என் சொந்த அனுபவம், ஞானம் சார்ந்து நான் அறிந்துகொள்ளக்கூடியவை பற்றித்தான், நான் எழுத முடியும். நேற்று தொலைக்காட்சியில் அல்லது இணையத்தில் மேய்ந்துவிட்டு இன்று விலாவாரியாக, கண்-காது-மூக்கு வைத்து ஒரு விசேஷ இஎன்டி மருத்துவர்போல என்னால் எழுதமுடியாது. மேலும், ஊடகங்களின் – நாளொரு மேனியாவும் பொழுதொரு தண்டமாகவும் – விரியும் பப்பரப்பா காட்சிகளால் அலைக்கழிக்கப்படாததால், என் பார்வை கொஞ்சம் கிறுக்குத்தனமாகவே, கொஞ்சம் பழங்காலப் பஞ்சாங்கமாகவே இருக்கக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம்.

இருந்தாலும் என் (இதுவரை) நண்பர் நீங்கள், ;:-) – கேள்விகள் பல கேட்டுவிட்டீர்கள். ஆக, என் பதில்களைக் கொடுக்க முயற்சிக்கிறேன். You really, really asked for it, young man. (வளவளாவென்று எழுதுகிறேன் அல்லவா?) 8-)

… இருப்பினும், என் கண் முன்னால் நடந்துகொண்டிருப்பவற்றை – எனக்கு உவப்பானவையோ இல்லையோ, என் முன்னால் நிற்கும் நிதர்சன நிகழ்வுகளை, உண்மைகளை, அதன் பின்புலங்களை அறிந்து அவற்றுக்கான என் எதிர்வினைகளை வகுத்தெடுப்பது எனக்கு  முக்கியம். எதிர்வினைகள் இல்லையென்றாலும் ஏன் இப்படியானது  என்று புரிந்துகொள்வதும் எனக்கு அவசியம். ஆகவே…

“உண்மையின் பிரச்னை என்னவென்றால், அது அடிப்படையில் அசௌகரியமானதும், பெரும்பாலான சமயங்களில் உப்புசப்பில்லாமல் இருப்பதும்; ஆனால், மனிதமனம் தேடுவதோ, நகைக்கக்கூடுவதை, தடவிக்கொடுக்கப்படுவதை…”

— ஹெச் எல் மென்க்கென் (Henry Louis “H. L.” Mencken (1880 –1956))

எனக்கு மிகவும் பிடித்த ஹெச் எல் மென்கென் - அழகான அங்கதமும், அமெரிக்க வாழ்க்கைமுறை பற்றிய ஆழமான விமர்சனங்களும் உள்ளடக்கிய நையாண்டிக் கட்டுரைகளிலிருந்து பலவகையான எழுத்துகளை எழுதியிருப்பவர். இவருடைய ‘அமெரிக்க மொழி’ - The American Language - என்பது ஒரு முக்கியமான புத்தகம்...

எனக்கு மிகவும் பிடித்த ஹெச் எல் மென்கென் – அழகான அங்கதமும், அமெரிக்க வாழ்க்கைமுறை பற்றிய ஆழமான விமர்சனங்களும் உள்ளடக்கிய நையாண்டிக் கட்டுரைகளிலிருந்து பலவகையான எழுத்துகளை எழுதியிருப்பவர். இவருடைய ‘அமெரிக்க மொழி’ – The American Language – என்பது ஒரு முக்கியமான புத்தகம்…

என்ன சொல்லவருகிறேன் என்றால் – நான் தடவிக் கொடுக்கப் போவதில்லை. சொறிந்து விட முயலப் போவதில்லை.  நகைச்சுவை கலந்தடித்து எழுதப் போவதில்லை.

தமிழினமே, உனக்கு யார் இருக்கிறார்கள்,’ என்றோ ‘தமிழீழமே, ஏழரைக் கோடித் தமிழர்கள் உன் பின் இருக்கிறோம், நீ மலரப் போவது உறுதி!’  என்றெல்லாம் திரைப்பட அதியுணர்ச்சித்தனமாகப் புல்லறிப்புப் பொய்ப்  பேச்சு பேசப் போவதில்லை. (ஏனெனில், எனக்குத் தெரியும் – ஸ்ரீலங்கா தமிழர்களைப் பொறுத்த வரையில் நாம் ஏழரை நாட்டுச் சனிகள்தானென்று)

நமக்கு அசௌகரியமாக இருக்கும், என்னைப் பொறுத்தவரையிலான சில நிதர்சனங்களை, உண்மைகளைப் பற்றி மட்டுமே – என் கருத்துகளை எழுதப் போகிறேன்.

… எது எப்படியோ, நீங்கள் தமிழகத்தின்மீது, தமிழர்களின்மீது கரிசனம் உடையவராக நான் நினைக்கிறேன். ஆக, இந்தக் கட்டுரையை, அன்னார்களின் மனநலனுக்காக, நீங்கள் பதிப்பிக்காமல்   இருந்தாலும், அதையும் ஒப்புக்கொள்கிறேன். ஒரு பிரச்சினையுமில்லை, சரியா?

(ஆனால் பத்ரி பதிப்பிக்காமல் இருந்ததற்குக் காரணங்கள் வேறு; 0/n பதிவில் இதற்கான விவரங்கள்…)

அடுத்த பதிவில் (2/n) மேலும் தொடர்கிறேன்…

-0-0-0-0-0-0-

தமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்? ஹ்ம்ம்??

போங்கடா, இதுதாண்டா *&#@! பதிவுகள்

குழந்தைப் படுகொலைகள், எல்டிடிஇ பிரபாகரன், போராட்டங்கள்: சில சிந்தனைகள், குறிப்புகள்  25/03/2013

2 Responses to “தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (1/n)”

 1. க்ருஷ்ணகுமார் Says:

  \\\ எப்படி இருந்தாலும், இந்தக் கட்டுரை என் அன்புக்குரிய இணைய வெறுப்பாளர்களை மேலும் அதிகரிக்கவைக்கும் என்பதில் எனக்கு ஐயமில்லை. \\\

  ம்…..அல்லது

  எப்படி இருந்தாலும், இந்தக் கட்டுரை என் அன்புக்குரிய இணைய வெறுப்பாளர்களை மேலும் *அரிக்கவைக்கும்* என்பதில் எனக்கு ஐயமில்லை.

 2. க்ருஷ்ணகுமார் Says:

  \\ நகைச்சுவை கலந்தடித்து எழுதப் போவதில்லை. \\

  ம்…. இதை விட்டு விட்டேனே. பீஷ்ம ப்ரதிக்ஞை போல படுத்தி பயமுறுத்தாது யதோக்தமாக *நாளை முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்* ரீதியில் தொடர விக்ஞாபித்து கொ ள்/ல் கிறேன்.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s