பேராசிரியர் வா.செ. குழந்தைசாமி: தமிழ் (தமிழில் அல்ல) எழுதுவதற்கு ஆங்கில துணை வரிவடிவம் – சிந்தனைகள்

November 9, 2013

ஒரு வழியாக, இந்த தமிழ் எழுத்துரு, வரிவடிவம். வரியுருக்குறி வகையறா சச்சரவை முடிந்தவரை முழுதும் படித்துத் தெரிந்து கொள்ள முயன்றேன்.(நம் தமிழ் விஷயத்தில் என்னை மிகவும் இம்சிக்கும் பிரச்சினைகள் பலவற்றில், இந்த வரிவடிவமும் ஒன்று)

ஜெயமோகன் அவர்களின் கருத்து என்பது ஒரு யோசனையாக ஆரம்பித்து,  நடிப்புத் தமிழர்களால், கோமாளித்தனமாக எதிர்கொள்ளப் பட்டு, நம் தமிழர் பண்பாட்டின் இன்னொரு கூறை, எனக்குத் தெளிவு படுத்தியிருக்கிறது. முதலில் நான், இந்த சச்சரவைப் புரிந்து கொள்ள முயன்றதால், என்னுடைய 2 மணி நேரம் வீணாகியிருக்கிறது என நினைத்தேன்; ஆனால், இந்த வேலையைச் செய்ததனால், எனக்கு ஒரு முக்கியமான படிப்பினை ஒன்று கிடைத்ததால் இது பரவாயில்லைதான்.

அந்த படிப்பினையாவது: நிச்சயமாக, மெல்லட் டமிள் இணிச் சாவாது. ஆனாக்க, றொம்ப பைத்தியம் மேறி கைகொட்டிக்கினு சிறிக்கும்…

ஏண்ணாக்க, டமிள்ல மசுர்க்கூச்செறிய இணமாணத்தோட வாய்ஸ் வுட, எளுத, ஒரு மசுத்துக்கும், ஒர் எளவுக்கும் ஒரு வுஷயத்தப் பத்தியும் படிச்சிர்க்கவோ, தெர்ஞ்சிர்க்கவோ வோணவே வோணாம்! இன்னா நான் சொல்றது… பிர்ஞ்சிதா நயினா??

… நம் தமிழர்களின் அற்புதமான நகைச்சுவையுணர்ச்சியை மெச்சுவதைத் தவிர, எனக்கு வேறுவழியே இல்லை.

-0-0-0-0-0-0-0-

ஜெயமோகன் அவர்கள், தமிழ் எழுத்துருக்களை ஏன் ஆங்கிலத்திலேயே எழுதக்கூடாது என்று ஒரு யோசனையைப் பகிர்கிறார். ( ‘த ஹிந்து’  பத்திரிகையில்: ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன?)

பின்னர், நம் தமிழர்பண்பாட்டின் படி – தமிழ எதிர்வினைகள் வருகின்றன – அவற்றுக்கு மறுபடியும் பதிலளிக்கிறார். பின்னர் அவருடைய கருத்தோடு ஒப்புமை இருக்கும் வாசகர் கடிதங்களில் ஒன்றிற்கு, அவர் தளத்தில், இப்படி பதிலளிக்கிறார்:

“ஈ.வே.ராவில் ஆரம்பித்து வா.செ.குழந்தைசாமி உட்பட பல முக்கியமான தமிழறிஞர்கள் பல கோணங்களில் சிறிய வேறுபாடுகளுடன் சொல்லி முன்பும் விவாதிக்கப்பட்ட கருத்துதான் அது.

இதற்கு எனக்கு (உங்களுக்கும்தான்) முன்னறிமுகமாயுள்ள (அவர் எழுத்துகளின்(!) மூலமாக மட்டுமே!) ஸ்ரீஸ்ரீ யுவகிருஷ்ணனார் அவர்கள் சூடாக ஒரு பதில் கொடுத்திருக்கிறார்; சபாஷ், சரியான போட்டி. (இல்லை, மன்னிக்கவும்)

“பெரியார் தொடங்கி வா.செ.குழந்தைசாமி வரை இதே யோசனையை சில வேறுபாடுகளுடன் முன்பே சொல்லி விவாதிக்கப்பட்ட கருத்து என்று வடிகட்டிய புளுகுமூட்டையை வேண்டுமென்றே அவிழ்த்துவிடுகிறார் ஜெயமோகன். பெரியார் எங்குமே தமிழுக்கு பங்காற்றப் போவதாக சொல்லி எழுத்துச் சீர்த்திருத்தத்தை அமல்படுத்தவில்லை. அவர் பத்திரிகை நடத்தி வந்தவர். அச்சுக் கோர்ப்பதில் ஏற்படும் வீணான செலவையும், நடைமுறை சிக்கல்களையும் உத்தேசித்தே ‘பெரியார் தமிழ்’ உருவானது. ரோமன் போதும். தமிழ் வரிவடிவம் வேண்டாமென்று பெரியாரா சொன்னார்? பேராசிரியர் வா.செ.குழந்தைசாமியின் யோசனை எழுத்து வடிவம் தொடர்பானது. கொம்பு, சுழி போன்றவற்றை நீக்கி எழுத்துகளை எளிமைப்படுத்தும் பட்சத்தில் கற்றல் எளிமையாக இருக்கும். கணினி தொடர்பான எந்திரங்களுக்கு தமிழை கொண்டுவருவதற்கு உதவியாகவும் இருக்குமென்பது பேராசிரியரின் யோசனை.  அவர்களுக்கு இணையாக தன்னையும் தானே ஒப்பிட்டுப் பேசுவது அற்பத்தனமின்றி வேறில்லை. சீண்டுவதற்காக சொன்னேன் என்று சொல்லுபவரிடம் வேறென்ன எதிர்ப்பார்க்க முடியும்?

இதனால் யாவருக்கும் கிடைக்கும் நீதி என்னவென்றால்: நுணலும் தன் தட்டச்சுப் போராளித்தனத்தால், கீபோர்ட் வீரத்தால் கெடும்.

-0-0-0-0-0-0-0-

ஈவெரா அவர்களின் எழுத்துச் சீர்திருத்த முனைவுகளைப் பொத்தாம் பொதுவாக – ‘அச்சுக் கோர்ப்பதில் ஏற்படும் வீணான செலவையும், நடைமுறை சிக்கல்களையும் உத்தேசித்தே’ என்று மட்டுமே, ஒரு அரைகுறைச் சித்தாந்தச் சிமிழில் சுருக்கிவிடுவதன் அற்பத்தனம் புரிபடவில்லை. ஸ்ரீஸ்ரீ யுவகிருஷ்ணனார் அவர்கள், ஈவெரா அவர்களின் எழுத்துக்களை எவ்வளவு படித்திருக்கிறார் என்றும் தெரியவில்லை. (நான் இவர் எழுத்துக்களில் சுமார் 90 சதம் படித்திருக்கிறேன். குறிப்புகள் எடுத்திருக்கிறேன்).

என்னைப் பொறுத்தவரை, ஈவெரா அவர்களின், தமிழுக்கான ஒரேஒரு முக்கிய (ஆனால் இது ஒரு மகாமகோ முக்கியமானதொன்று), நீண்டகால சமூக மேன்மைக்காக / வளர்ச்சிக்காகத் தாக்கத்து கொடுத்த பங்களிப்பு என்பது – இந்த எழுத்துவடிவ மாற்றங்களே. இம்மாற்றங்களை ஏற்படுத்த அவரும் அவர் சகாக்களும் கட்டமைத்த சட்டகங்களே.

நண்பர் அவர்களுக்கு, இதன் முழுபின்புலம் புரிபடுவதற்காக – ‘திராவிட’ அறிஞர்களால் எழுதப்பட்ட ‘எழுத்துச் சீர்திருத்தம்’ (பெரியார் சுயமரியாதைப் பிரசார நிறுவன வெளியீடு, திருச்சி, 1973) என்கிற புத்தகத்தைப் பரிந்துரைக்கிறேன்.

ஆம், எனக்குத் தெரிந்து, ஈவெரா அவர்கள்  ‘ரோமன் போதும். தமிழ் வரிவடிவம் வேண்டாமென்று’ சொல்லவில்லை. தமிழ் வரிவடிவம்  போதும், ரோமன் வரிவடிவம் வேண்டாமென்றும் சொல்லவில்லை. ஏனெனில், அந்தக் காலச் சூழலில் அவருக்கு அது முக்கியமானதாகத் தோன்றவில்லை. பெரியார் ஒரு படிப்பாளியோ, அறிஞரோ அல்லர். அவருக்குப் பிரத்யட்சமாகத் தோன்றியதை, சரியென்று பட்டதை, அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார். எதிர்காலத்தில் இப்படியாகலாம் என்று நிகழ்காலக் கூறுகளை வைத்துக் கொண்டு யோசித்தவரில்லை அவர்.  முன்னுக்குப் பின் முரணாகத்தான் பலமுறை நடந்து கொண்டிருக்கிறார். ஆனால் காலத்திற்கேற்ப, அவர் சூழ்நிலைகளுக்கேற்ப சில முக்கியமான கருத்துகளையும் மாற்றிக் கொண்டிருக்கிறார் என்பதும் சரியே. தமிழைக் காட்டுமிராண்டி பாஷை என்று கூறிக் கொண்டே, தமிழர்களை அவர்கள் பண்பாட்டை இழித்துப் பேசிக் கொண்டே, தமிழ் மொழியின் சீர்திருத்தங்களுக்கும் உதவியிருக்கிறார். பின்னது, என்னைப் பொறுத்தவரை முக்கியமான விஷயம். ‘மாற்றல் இன்றேல் வளர்ச்சியில்லை’ என்பதைப் புரிந்துகொண்டிருந்தார் அவர்.

(என் நினைவிலிருந்து எழுதுகிறேன், குறிப்புகளிலிருந்து அல்ல) 1933 வாக்கில் பச்சையப்பன் கல்லூரியில் நடந்த ’தமிழன்பர்கள் மாநாடு’ அமைப்பில் – தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய தீர்மானம் ஒன்று இருந்தது. இதற்குப் பின் 1934ல் ‘பகுத்தறிவு’ ஒரு அறிக்கையை வெளியிட்டது – மேலும் ‘குடி அரசு’ம் இந்த அறிக்கையின் படி – சில மாற்றங்களுடன் மட்டும் வெளிவர ஆரம்பித்தது.  1948ல் அவிநாசிலிங்கம் செட்டியார் அவர்கள் பரிந்துரை செய்ய ஒரு குழு அமைத்தார்.  இந்தக் குழுஅமைப்புகளிலெல்லாம் தமிழ் எழுத்துச் சீரமைப்பு, வரிவடிவ மாற்றங்கள், அவற்றின் தேவைகள் பற்றியெல்லாம் உரையாடியிருக்கிறார்கள். ஆனால் அறிக்கையாக, அவைகளுடைய பரிந்துரைகளாக வெளிவந்தவற்றில், எழுத்துச் சீர்திருத்தம் பற்றி மட்டுமே இருந்தது – ஏனெனில், தமிழர்களின் எதிர்ப்புணர்ச்சி  என்பது அப்படி.

என்ன சொல்லவருகிறேன் என்றால் – பெரியாருக்கு முன்னாலிருந்தே  இந்தச் சீர்திருத்தங்களைப் பற்றி நம் தமிழறிஞர்கள் யோசித்து வந்திருக்கிறார்கள். ஆனால் நம் பண்டமிழ்த் தொட்டில் பழக்கம் போல, நமக்குச் செயலூக்கம் இல்லாத காரணத்தால், நாம் எடுத்த காரியங்களை முடிக்கும் திறமையற்றவர்களாக இருப்பதால், அசட்டையும் தாமசமும் அளவுக்கதிகமாக நம்மிடம் இருப்பதால் நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

ஆனால், ஒன்று சொல்லவேண்டும்: ஈவெரா அவர்களுடைய சில வழித்தோன்றல்கள், அவர் போன்றோ, அவருடைய சொத்துக்கள் பின்னால் தொங்கிக் கொண்டு சும்மனாச்சிக்கும் சுயமரியாதை என்று அலைந்து காலட்சேபம் செய்து கொண்டிருக்கும் திகவினர் போன்றவர்கள் மாதிரியோ இல்லை. 

இந்தச் சிலர் – உண்மையான ஆய்வாளர்களும், தமிழ் மொழியில் வளர்ச்சியில் கரிசனம் கொண்டவர்களும் ஆவர் – இவர்கள் உழைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்… ஆனால்…

வா செ குழந்தைசாமி அவர்கள் போன்றவர்களை, நேர்மை மிக்க தமிழறிஞர்களை, நாம் தலையில் வைத்துக் கொண்டாட வேண்டும். ஆனால் நாம் அப்படிச் செய்தால் தமிழ் உண்மையிலேயே  வளர்ந்து விடுமே! செறிவு பெறுமே!

ஆகவே அவர் கருத்துகளைக் கூடப் படிக்காமல் – அவர் தமிழ் வரிவடிவம் பற்றி ஒன்றுமே சொல்லவில்லை என்று சொல்லி விடுவோம்.

(ஆக, ஸ்ரீஸ்ரீ யுவகிருஷ்ணனார் அவர்களே! முதலில், நிறைய படித்து, கருத்தாக்கங்களை உருவாக்கிக் கொண்டு, தரவுகளை எடுத்துக் கொண்டு எழுதுங்கள்; சும்மனாச்சிக்கும் தமிழுணர்ச்சிப் புல்லரிப்புகள் வேண்டாம்)

-0-0-0-0-0-0-0-

நான் மிகவும் மதிக்கும் அறிஞரான, பேராசிரியர் வா செ குழந்தைசாமி அவர்கள் எழுதிய ‘அறிவியல் தமிழ்’ என்கிற புத்தகத்தில் (1985ல் வெளியிடப்பட்டது) – வெகு விஸ்தாரமாக, தமிழிற்கு ஆங்கில எழுத்துக்களில் – ரோமன் வரிவடிவத்தில் –  எழுதப்படக்கூடிய ஒரு துணை வரிவடிவம் தேவை என்பதைப் பற்றி  எழுதியிருக்கிறார்.

அவர் வெறும் கொம்பு, சுழி என்பவற்றைப் பற்றி மட்டும் எழுதவில்லை.

ஸ்ரீஸ்ரீ யுவகிருஷ்ணனார் அவர்கள் திரைப்படவிமர்சனம் மட்டும் செய்து கொண்டிருந்திருந்தால் அதை யாரும் விமர்சனம் செய்ய மாட்டார்கள்.

ஆனால் அவருக்கு யோசிக்க, ஆராய்ச்சி செய்ய, அறிந்துணர நேரமின்மையால் (எனக்குப் புரிகிறது, சினிமா விமர்சனம் உடனுக்குடனே சூடாக  எழுத வேண்டுமே!) – இப்படிக் கண்டமேனிக்கும் எழுதுகிறார் என்பது புரிகிறது. ஆனாலும் ஏன் இப்படி எழுதித் தொலைக்கவேண்டும் என்றும் தோன்றுகிறது.

ஆகவே ஐயன்மீர், தயவு செய்து, மற்ற எந்தத் துறை பக்கமும் நீங்கள் வரவேண்டாம், கடும்பீதி எழுப்பவேண்டாம் என நா தழுதழுக்க, கண்ணீர் மல்க அவரிடம் விஞ்ஞாபனம் செய்கிறேன்.

-0-0-0-0-0-0-0-0-

‘அறிவியல் தமிழ்’ புத்தகத்தின் 144 – 165 பக்கங்கள் வரையான இந்த ‘துணை வரிவடிவம்’ பகுதியை ஸ்கேன் செய்து கொடுக்கலாமா என நினைத்தேன் – ஆனால் தற்போதைக்கு எனக்கு ஸ்கேன்னர் வசதியில்லை. ஆக. அந்த அழகான, நேர்மையான விழைவுகள் கொண்ட அந்தக் கட்டுரையின் 165ஆம் பக்கத்தில் உள்ள கடைசிப் பத்தியை மட்டும் கொடுக்கிறேன்.

“துணை வரிவடிவத்தின் தேவையை நாம் சற்றுத் தொலை நோக்கோடும், பரந்த அடிப்படையோடும், நமது இனத்தையும் மொழியையும் இன்று எதிர் நோக்கும் பிரச்சினைகள் பற்றிய கவலையுடனும், அவற்றின் பரிமாணங்கள் பற்றிய கற்பனையோடும் பார்க்கவேண்டும்.

இது ‘பல கோணங்களில் சிறிய வேறுபாடுகளுடன் சொல்லி முன்பும் விவாதிக்கப்பட்ட கருத்து’’ இல்லாமல் வேறென்ன?

எது அற்பத்தனம்?

எது வடிகட்டிய புளுகுமூட்டை?

யாருடையது அற்பத்தனம்?

ஸ்ரீஸ்ரீ யுவகிருஷ்ணனார் அவர்கள் அடிமுட்டாள் அல்லர். புத்திசாலிதான். ஆனால், தற்போதைக்கு, இவருக்குரிய சமன்பாடு என்னவென்றால்:

புத்திசாலித்தனம் + சோம்பேறித்தனம் (ஆகவே படிப்பறிவின்மை) + புல்லரிப்பு + மிதப்பு + பொறாமை = கந்தறகோள அரைவேக்காட்டு ஆவேசக் குப்பை + சகோதர விசிலடிச்சான்களின் ஆமோதிப்பு.

ஆனால், இவருக்கும் ரிடெம்ப்ஷன் – மீட்பு உண்டு. ஆமென்.

-0-0-0-0-0-0-0-

ஆக, பேராசிரியர் வா செ குழந்தைசாமி அவர்களையும் இந்த விசிலடிச்சான்குஞ்சுகள் பொறுக்கித்தனமாக ஏசி, தமிழக அரசிடம், இவரைக் கைது செய்ய மனு கொடுத்து விடுவார்களோ என்று பயமாகவே இருக்கிறது.

தமிழில் ஆரோக்கியமான, கருத்துசார்ந்த உரையாடல் என்பது நடக்க சாத்தியக் கூறுகள், தற்போதைக்கு, அவ்வளவாக இல்லை.

… மாறாக, உணர்ச்சி பொங்க, பொய்கள் பல சொல்லி, இல்லாத அறிவை இருப்பதாகக் காட்டிகொண்டு, இல்லாத தமிழ் அபிமானத்தை வெறியாக வெளிப்படுத்தி மினுக்கிக் கொண்டு அலைந்து, கல்லெறிவதுதான் சாஸ்வதம்.

ஆனால், இதுவும் மாறும்.

இப்போது சிறு குழந்தைகளாக இருப்பவர்கள் வளர்ந்து, பழங்குப்பைகளைத் தவிர்த்து, சுட்டுப் பொசுக்கி, அற்பர்களை நிராகரித்து, அயோக்கிய அரைகுறைத்தனங்களை ஒழித்து  – ஒரு நல்ல, ஆரோக்கியமான சமூகத்தை நிச்சயம் கட்டமைப்பார்கள்.

இது என் நம்பிக்கை.

தொடர்புள்ள பதிவுகள்:

12 Responses to “பேராசிரியர் வா.செ. குழந்தைசாமி: தமிழ் (தமிழில் அல்ல) எழுதுவதற்கு ஆங்கில துணை வரிவடிவம் – சிந்தனைகள்”

  1. Prabhu Says:

    I used to wonder why you give undue importance to ppl like yuvakrishna . But after reading his article I was damn sure he would have verbally farted and I was eagerly looking forward to your article. Your article confirms it. These guys need people like you to keep them on their toes. In fact it’s people like him who are dangerous to Tamil and the society.

    • ramasami Says:

      Believe me, Prabhu – this is a bloody tiring job. :-(

      And, as I have said elsewhere – deep seated cancer can NEVER be cured by the cosmetic skills of dermatology.

      We need surgery. This is unfortunate, but if I have the time and sufficient energy, I am more than willing to be a surgeon.

      But, in that offending article – which needs to be ripped completely, I just handled a paragraph or so. It has line after line of stupidity, lies and gross misunderstandings.

      It is sad to see a youth acting so brazenly and worse still, when he does so, he still has an asinine fan following. Lumpens, what else.

      __r.


  2. […] நான் மிகவும் மதிக்கும் அறிஞரான, பேராசிரியர் வா செ குழந்தைசாமி அவர்கள் எழுதிய ‘அறிவியல் தமிழ்’ என்கிற புத்தகத்தில் (1985ல் வெளியிடப்பட்டது) – வெகு விஸ்தாரமாக, தமிழிற்கு ஆங்கில எழுத்துக்களில் – ரோமன் வரிவடிவத்தில் – எழுதப்படக்கூடிய ஒரு துணை வரிவடிவம் தேவை என்பதைப் பற்றி எழுதியிருக்கிறார். ஒத்திசைவு ராமசாமி எதிர்வினை […]


  3. நல்ல பதிவு. ஜப்பானியர் கஞ்சி, கானா, ரோமாஜி என்ற 3 லிபிகளைப் பயன்படுத்துகின்றனர். அதுபோல், தமிழரும் தமிழ், ரோமன், கிரந்தம் என்னும் 3 லிபிகளும் பயன்படுத்தலாம்.

    தமிழ் லிபியின் வளர்ச்சி உ, ஊ உயிர்மெய்களைச் சீர்செய்வதில் இருக்கிறது. அதைச் செய்தால் வா.செ.கு. சொல்வதுபோல் தமிழ் மிக வளரும்.

    நா. கணேசன்
    http://nganesan.blogspot.com


  4. நல்ல நேர்மையான பதிவு. ஜப்பானிய மொழியில் மூவாயிரம் காஞ்சி குறியீடுகள் உள்ளன என்றும் அவை மிகவும் கடினமாக உள்ளதால் அரசாங்கமே இரண்டாயிரம் காஞ்சி எழுத்துக்களை அங்கீகரித்து உள்ளது என்று எனது ஜப்பானிய ஆசிரியர் தெரிவிக்கிறார். மேலும் அம்மொழியில் ஹிராகானா , கதகானா, காஞ்சி என்ற மூன்று எழுத்துருக்கள் உள்ளன. இதில் கதகானா அந்நிய மொழிச் சொற்கள் ( கணினி முதலியன ), அந்நிய ஆட்களின் பெயர்கள் முதலியனவற்றைக் குறிக்கப் பயன் படுத்துகிறார்கள்.

    மொழியின் வளர்ச்சி காலத்தின் தேவைக்கேற்ப மாற வேண்டும். எழுத்துக்கள் கூடுவதும் குறைவதும் இயல்பே.

    ஜெயமோகனின் கருத்துக்கு ‘புரட்ச்சியாளர்கள்’ , ‘முற்போக்குவாதிகள்’ அணிதிரண்டு கத்தியது புல்லரித்தது.

    • பொன்.முத்துக்குமார் Says:

      // நிச்சயமாக, மெல்லட் டமிள் இணிச் சாவாது. ஆனாக்க, றொம்ப பைத்தியம் மேறி கைகொட்டிக்கினு சிறிக்கும்…

      ஏண்ணாக்க, டமிள்ல மசுர்க்கூச்செறிய இணமாணத்தோட வாய்ஸ் வுட, எளுத, ஒரு மசுத்துக்கும், ஒர் எளவுக்கும் ஒரு வுஷயத்தப் பத்தியும் படிச்சிர்க்கவோ, தெர்ஞ்சிர்க்கவோ வோணவே வோணாம்! இன்னா நான் சொல்றது… பிர்ஞ்சிதா நயினா?? //

      நூலகத்தில் இருந்தமையால் வாய்விட்டு சிரிக்க இயலாமல் தவித்துப்போய்விட்டேன் ராமசாமி சார்.

      எதற்கு, இல்லை எதற்கு இவ்வளவு பாடு என்கிறேன். அவர் என்ன எழுதி இருப்பார் என்று தெரியாதா ? விட்டுத்தள்ளுங்கள்.

      • ramasami Says:

        தலீவரே! கோச்சுக்கினீங்ளா? இந்த தபா மன்னிச்டுங்க!

        வுட்டுத் தள்ளிட்டேன்… நாளேலேர்ந்து இப்டி பண்ணவே மாட்டேன், என் சாய் மீதாணை.

        அவர்: ஒரு காப்பியிலே என் குடியிருப்பு.

        நான்: இன்று முதல் நாளை கடனெழவு.

        மன்னிக்(ஹிக்)கவும்.

  5. tamil Says:

    விவாதிக்கப்பட வேண்டியது, பேரா.குழந்தைசாமி எழுதிய கருத்துக்கள், அதை இன்று நடைமுறைப்படுத்த இயலுமா, ஆம் எனில் அதன் நிறைகள்,குறைகள்.யுவகிருஷ்ணா போன்றோரை இங்கு குறிப்பிடத்தேவையில்லை. ஒரு வார்த்தையில் அவர் எழுதியதை புறம்தள்ளிவிட்டு எதை அறிமுகப்படுத்தி விவாதிக்க வேண்டுமோ அதை எழுதாமல் ஜல்லியடிப்பது ஏன்.குழந்தைசாமி உட்பட பலர் முன்வைத்த எழுத்து சீர்திருத்தங்களை முன் வைத்தும் தொகுத்து எழுதி,அலசி ஆராய்ந்து அவற்றின் பொருத்தப்பாடுகளை விவாதிக்க வேண்டும்.ஜெயமோகனுக்கோ உங்களுக்கோ அக்கறை இருந்தால் இதைச் செய்யுங்கள் முதலில்.

  6. ramasami Says:

    தங்கள் அறிவுரைக்கு நன்றி, ‘tamil’ அய்யா!

    நான் ஜெயமோகன் அவர்களுக்காகப் பேசமுடியாது. ஆனால் நான் ‘அக்கறை’ இல்லாதவன் என்பதை ஒப்புக் கொள்கிறேன்.

    ஆனால் குழந்தைசாமி அவர்களின் கருத்துகளோடு 100% உடன்படுபவன் நான். ஆனால், இப்படி உரக்கச் சொன்னால் இவரைக் கழுவிலேற்றி விடுவார்கள், பாவம்.

    பிறர் கட்டுரைகளுக்காக, கோனார் நோட்ஸ்களுக்காக காத்துக் கொண்டிருக்காமல், தாங்கள் ஏன், வா செ கு அவர்களின் புத்தகங்களைப் படித்து அலசி ஆராய்ந்து ஒரு பதிவை வெளியிடக் கூடாது. (அவருடைய ‘அறிவியல் தமிழ்’ – ’அறிவியற் றமிழ்’ அல்ல – பாரதி ப்திப்பகம் பதிப்பித்தது என நினைக்கிறேன் – விலை கூட முப்பது நாற்பது ரூபாய்க்குள்தான் இருக்கும்)

    யுவகிருஷ்ணா அவர்களின் எழுத்துகளை நான், தற்குறிகளுக்கான, தமிழ்ச் சூழலில் விரும்பத்தகாத, அருவருப்படையவைக்கும் கூறுகளின் ஒரு குறியீடாகத்தான் பார்க்கிறேன். எனக்கு அவர் மேன்மையடைதலிலும் ஒரு ஆசைதான்.

    ஆனால் புறந்தள்ளி விடுகிறேன். அறிவுரைக்கு மீண்டும் நன்றி.

    நாளைமுதல் குடிக்கமாட்டேன் சத்தியமடி தங்கம். 8-)

  7. கல்யாணராமன் Says:

    எழுத்துரு மாற்றத்துக்கான வாதத்தை திரு ஜெயமோகன் இப்படிக் தொடங்குகிறார்:

    ”…இந்தியாவெங்கும் ஆங்கிலக் கல்வி பரவலாகிவருகிறது. உலகமயச் சூழலில் ஆங்கிலமே வேலை வாய்ப்புக் கல்விக்குரிய மொழி என நிறுவப்பட்டுவிட்டது. அது தெளிவான உண்மையும்கூட. ஆகவே, எதிர்காலத்திலும் ஆங்கிலமே இங்கே கல்வியின் மொழியாக இருக்கும். அதைத் தடுக்கவே முடியாது. வரலாற்றின் போக்கு அது. அதற்கு எதிராகப் பிடிவாதமாக நிலைகொள்வது அடிப்படைவாதம் மட்டுமே.”

    இதைப் பற்றி உங்கள் கருத்தைத் தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன். நான் ட்விட்டரில் பதிவு செய்த எதிர்வினையைக் கீழே கொடுத்திருக்கிறேன்:

    “இந்தியாவில் வேலை/தொழில் செய்வோரின் எண்ணிக்கை ஏறக்குறைய 450 மில்லியன். இவற்றில் அமைப்பு சார்ந்த வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை 30 மில்லியன் மட்டுமே.

    அமைப்புசாராத 420 மில்லியன் வேலைவாய்ப்புகள் பெரும்பாலும் சுயதொழில். தினக்கூலி மற்றும் சில்லறை வியாபாரம் சார்ந்தவையாகவே (Self-employed + Casual labour) அமைந்திருக்கின்றன. இவற்றில் ஆங்கில அறிவு இன்றியமையாது தேவைப்படும் என்று நாம் அடையாளப்படுத்தக்கூடியது (மருத்துவர், வழக்குரைஞர் போன்ற சுயதொழில்கள்)வெகு சிலவே. ஆண்களுக்கும் பெண்களுக்குமான மொத்த வேலைவாய்ப்புகளில் இவை முறையே 82% மற்றும் 91% விழுக்காடு என்று கணிக்கப்பட்டுள்ளன.

    மீதம் 29-30 மில்லியன் வேலை வாய்ப்புகளில் பொதுத்துறை (மத்திய, மாநில அரசுகள், குவாசி கவர்ன்மெண்ட் மற்றும் ஊராட்சி அமைப்புகள்) வேலைவாய்ப்புகள் 2011-இல் 17.5 மில்லியன். 1995-இல் இந்த எண்ணிக்கை 19.5 மில்லியனாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    தனியார் துறை வேலை வாய்ப்புகள் 2011-இல் 11.5 மில்லியன். மொத்த அமைப்புசார் வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கை 1995-இலிருந்து 2011வரையான 16 ஆண்டுகளில் வெறும் 11 இலட்சம் அளவே உயர்ந்திருக்கிறது என்பதையும் கவனிப்போம்.

    இந்த நிலையில் ஆங்கிலம் இன்றியமையாது தேவைப்படும் வேலைகளின் எண்ணிக்கை மொத்த அமைப்புசார் வேலைகளில் 20% என்று வைத்துக்கொண்டாலும் கூட 6 மில்லியன் அல்லது 60 இலட்சத்தைத் தாண்டாது. இந்த வேலைவாய்ப்புகளும் இன்றைய பொருளாதாரக் கொள்கைகளின்கீழ் எளிதில் பெருகக்கூடியவை அல்ல.

    (ஆதாரம்: Employment in Organised Sectors – Public and Private, Economic Survey 2012-13 – http://data.gov.in/dataset/employment-organised-sectors-public-and-private)

    இந்த 60 இலட்சம் _மொத்த_ வேலை வாய்ப்புகளை முன்னிட்டு 20 கோடி பள்ளிச் சிறார்களின்மீது அவர்களின் சூழலுக்கு முற்றிலும் அன்னியமான ஆங்கிலத்தைத் திணிப்பது மிகவும் மோசமான பித்தலாட்டம் மற்றும் வன்முறையாகவே இருக்கும். இந்த ஆங்கிலத்தையும் குறைந்த பட்சத் தரக்கட்டுப்பாட்டுடன் கற்றுத்தருவதற்குத் தேவையான மனித மற்றும் நிதி வளங்கள் நம்மிடம் கிடையாது என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.

    ஆங்கிலவழிக் கல்வி பற்றி மகாத்மா காந்தி, லோஹியாவிலிருந்து கல்வித்துறை வல்லுநர்கள் வசந்தி தேவி, கிருஷ்ண குமார் வரை நிறையவே எழுதியிருக்கிறார்கள். (பெரியார் என்ன சொல்லியிருக்கிறார் என்று தெரியவில்லை. காமாராஜ் ஆட்சிக்காலத்தில் தமிழ்வழிக் கல்விக்கு மாநில அரசின் முழு ஆதரவு இருந்ததாகத்தான் தெரிகிறது.) இந்த கருத்துகளை முறையாக எதிர்கொள்ளாமல் ஆங்கிலம் பற்றிய ஆதிக்க குழுக்களின் பரப்புரையை திரும்பச் சொல்வது மக்கள் விரோதச் செயல்பாடு என்றுதான் நினைக்கிறேன்.”

    நன்றி.

  8. ramasami Says:

    அய்யா கல்யாணராமன் அவர்களே,

    உங்கள் கருத்துகளைப் (= ஜெயமோகன் அவர்களுடைய கருத்துகளின் மீதான எதிர்வினைகள்) படித்தேன். கண்ணியமாக, ஒப்புக்கொள்ளக் கூடிய தரவுகளை வைத்து பொறுப்புணர்வுடன் தங்கள் கருத்துகளை, எண்ணவோட்டங்களை எழுதியிருக்கிறீர்கள் – இதற்கு உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும்.

    தங்களுடைய சில கருத்துகள் மீதும், ஜெயமோகன் அவர்களுடைய சில கருத்துகள் மீதும் எனக்கு விமர்சனங்கள் இருக்கின்றன. மாற்றுக் கருத்துகள் இருக்கின்றன. புள்ளியல் விவரங்களுக்கும் அவற்றின் மீதான கருத்தாக்கங்களுக்கும் எல்லைகள் உள்ளன என்பது என் எண்ணம்.

    மேலும், என்னுடைய பார்வை – இக்காலங்களில் மண்புழுவினுடையதாக உள்ளது, இது பிரத்யட்ச உண்மைகளைப் பார்த்துத் தயங்குகிறது – ஆனால், விழைவுகள் மேகங்களின் மேலிருந்து கீழ்நோக்கிய படியான கற்பனைப் பாதையில் குவிந்து இருக்கின்றன. இந்த முரணியக்கதில் நான் மாட்டிகொண்டு, சில சமயம் எனக்குத் தூக்கம் வரமாட்டேன் என்கிறது. (சமயம் கிடைக்கும்போது, என் குறிப்புகளிலிருந்து தூசிதட்டி என் கருத்துகளை எழுதுகிறேன்.)

    நான் அடிப்படையில் (strategically speaking) பாபுஜியின் நயீதலீம், அரவிந்தரின் ஒருங்கிணைக்கப்பட்ட கல்விமுறை, ‘குலக்கல்வி’ (= குரு-ஸிஷ்ய பாரம்பரிய) விரும்பி. அடிப்படைகள் படிப்பிக்கும் முறைக்காக (tactically speaking) மான்டிஸொரி, ஸ்டெய்னர் வழிமுறை விரும்பி. ஆக தாய்மொழி வழி அடிப்படைக் கல்வியைத்தான் பரிந்துரைப்பவன். ஆனால் – இதற்கு, நம்பவேமுடியாத அளவு, திகைக்கும் படியாக — நடைமுறைப் பிரச்சினைகள் பல இருக்கின்றன. வேறு எந்த தென்னக ‘திராவிட’ மொழியிலும் நிலைமை இவ்வளவு கேவலமாக இல்லை. எனக்கு இது பற்றி தாங்கவே முடியாத வருத்தம்தான்.

    நம் தமிழகத்தில் நம் தாய்மொழியின் நிலைமை, வளர்ச்சி இவ்வளவு கேவலமாக ஆனதற்கு நான் நம் செல்ல திரா விடக் கட்சிகளைத்தான், அவர்களுடைய அரைகுறை அறிவுஜீவிகளைத்தான் குற்றம் சொல்ல முடியும்.

    விவாதம் தொடரப்படவேண்டும்தான். இது ஒரு முடிவிலா உரையாடல்தான். (என் அலுப்பை மீறி நான் மேலெழும்பி வரவேண்டும் – செய்வேனா?)

  9. க்ருஷ்ணகுமார் Says:

    ஆங்கில வழிக்கல்வி – ஆங்க்லத்தை அடிப்படையாகக் கொண்ட ரோமன் எழுத்து வரிவடிவம் இரண்டும் வேறு ஆயிற்றே.

    ஆங்கில வழிக்கல்வி – தாய்மொழி வழிக்கல்வி விவாதிக்கப்பட வேண்டியது தான்.

    ப்ரபலமாக இருக்கும் ஒரு மொழியின் எழுத்து வரிவடிவம் அன்றி வேறு ஒரு எழுத்து வரிவடிவத்தை அறிமுகம் செய்வது மொழி வளர்ச்சிக்குக் குந்தகம் விளைவிக்குமா?

    தேவநாகர லிபியை உர்தூ எழுதுவதற்குப் பயன்படுத்தியதில் Fair amount of Success இருந்ததை மறுக்க இயலாது. ஆனால் இது மாற்று எழுத்து வரிவடிவம் என்ற படிக்கு சரி. அரபியிலும் தேவநாகரியிலும் உர்தூ எழுத முடியும் என்ற வரைக்கும் சரி. அரபியை ஒட்டுமொத்தமாக விடுத்து தேவ நாகரியைப் புழக்கத்தில் கொண்டு வருதல் என்பது எந்த அளவுக்கு சாத்யம் என்பது விவாதத்திற்கு உரியது.

    ஒட்டு மொத்தமாக புழக்கத்தில் இருக்கும் ஒரு எழுத்து வரிவடிவத்திற்குப் பதிலாக வேறொன்றை அறிமுகம் செய்தல் என்பது எந்த மொழிக்குமே மிகப்பெரிய சவால்.

    தமிழின் முந்தைய எழுத்து வரிவடிவங்களையும் தற்போது புழக்கத்தில் இருக்கும் வரிவடிவத்தையும் பார்க்கும் போது பழையதிலிருந்து முற்றிலும் வேறான மாற்று வரிவடிவத்திற்கு நாம் பயணித்துள்ளோம் என்பது புரிகிறது. அதனால் மொழிக்கு எந்தக் கேடும் ஏற்படவில்லை என்பதும் புரிகிறது.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s