நம் தமிழ்த் திரைப்படங்களில் அறிவியல் படும் பாடு!

November 8, 2013

உபயம்: ஸ்ரீமான் வை ‘வைகோ’ கோபால்சாமி அவர்கள்.

உபஉபயம்: ஸ்ரீஸ்ரீ க்ரேவிடி(2013) எனும் பொருளீர்ப்பு சக்தி ஹாலிவுட் ரீல்.

நம் தமிழைக் கூறு போட்டுக் கூவி விற்கும், ’உலகத்தின் வரலாறிலேயே முதல் முறையாக’ ஃப்ரீ ‘ஆஃபர்’ (இத்தை வாங்கினால் அத்து ஃப்ரீ, அத்தை வாங்கினால் மாமா ஃப்ரீ!) கொடுக்கும் நல்லுலகத்தினரால், அறிவுஜீவி குமாஸ்தாக்களால் — ஏற்கனவே –

  • அய்யய்யோ_அணுசக்தி,
  • அடேங்கப்பா_மரபணு,
  • வணக்கத்துக்குரிய திருவாளர் கடவுள்(!) துகள்(!!),
  • கந்தறகோளக் கயாஸ் கோட்பாடு,
  • உலகின் முதல் குரங்கு, திராவிடக் குரங்கு, (புதுமைப்பித்தன்?)
  • உலகின் முதல் கழுதை, திராவிடக் கழுதை, (புதுமைப்பித்ததாசன்??)
  • பாவப்பட்ட ஜென் கவிதைக் கட்டுடைப்பு,
  • ஜென் கவிஞர்கள் பொழுது விடிந்தால், வழக்கமாக சாலையோர வேசிகளிடம் போவது,
  • ஷ்ராதிங்கனார் அவர்களின் பூனை,
  • வௌவால்கள் குருட்டு ஜென்மங்கள்,
  • கமுக்கமாகப் காப்பியடிப்பது எப்படி,
  • கம்பன் என்ன பெரிதாகத் தமிழுக்குச் செய்துவிட்டான் அரைகுறை ராமாயணம் ஒன்றை எழுதியதைத் தவிர,
  • நயாகரா வீழ்ச்சி! = வயாக்ரா எழுச்சி!!

…உள்ளிட்ட பல சிடுக்கல் பிரச்சினைகள் அனைத்தும் புரிந்துகொள்ளப்பட்டு செரிக்கப் பட்டுள்ளன என்பதை – இந்த ஒத்திசைவை வேண்டாவெறுப்பாக ஒத்திசையாமல்  தலையில் அடித்துக் கொண்டு படிக்கும் பாவப்பட்ட வாசகர்களாகிய நீங்கள் அனைவரும் (=எண்ணி, பத்து  பேர்! இது கொஞ்சம் அதிகம்தான்!) அறிவீர்கள்.

-0-0-0-0-0-0-0-

நிலைமை இம்மாதிரி இருக்கும் போது திடுதிப்பென்று வைகோ அவர்கள் புதுகுண்டுகளைப் போடுகின்றார்… இத்தனைக்கும் இவர் ஒரு வெத்துவேட்டு  அறிவுஜீவியல்லர்.

என்ன, இவர் கொஞ்சம் விடுதலைப்புலிவால் பிடித்த நாயர், அவ்வளவுதான்.

ஆனால், தமிழ் எழுத்துரு வரியுருக் குறி என்றெல்லாம் கருத்து தெரிவிக்காத  நாயர். இப்படி ஏதாவது வாயைத் திறந்திருந்தால், உடனே, டாய், வாயை மூட்றா  என்று உடனே தமிழர் பண்பாட்டின் வெளிப்பாடாக, கல்லெறிந்து விடமாட்டோமா? .

மனுநீதிச்சோழ வம்சக்காரர்களாகிய நாங்கள், மனு கொடுத்தே நீதியை வாங்க முயல மாட்டோமா? ஹஹ்ஹ.

ஆனாலும் முதலுக்கே மோசமில்லைதான்.

ஹ்ம்ம். எனக்கும் பல வேலைகள் இருக்கின்றனதாம் – ஆனாலும் சில அறிக்கைப் புழுக்கைகளைப் படிக்க நேரும்போது வாழ்க்கையே வெறுத்துவிடும்  அளவுக்குத் தள்ளப் படுகிற காரணத்தால்…

-0-0-0-0-0-

மாமல்லபுர வட்டார திருக்கழுகுகுன்றம் பக்கத்தில் உள்ள திருமணி கிராமத்தில், கட்டமைக்கப் பட்டுக் கொண்டிருக்கும் அதி நவீன உயிரியல், நோய்த்தடுப்பியல் ஆராய்ச்சி மையத்திற்கு எதிராக கொஞ்சம் கொஞ்சமாக – வழக்கம்போல, ஒரு இழவையும்  புரிந்து கொள்ளாத எதிர்ப்பு கிளம்பிக் கொண்டிருக்கிறது.

இன்னமும்,  நம் தேங்காய்மூடி அறிவுஜீவிகள் இதற்கெதிராக அணி திரளவில்லை – அதாவது, எனக்குத்  தெரிந்தவரை. ஆனால், இந்தியாவில் எங்கெல்லாம் உருப்படியாக வேலை நடந்துகொண்டிருக்கிறதோ, உடனே அதனை ஸ்தம்பிக்கவைக்க, தீம்தரிகிடவென்றுத் திரண்டெழுந்து – ப்ரொடெஸ்ட்வாலாக்களாகக் குதூகலமாகக் கிளம்பிவிடுவார்கள் தாம் – நம்முடைய பிதாமகர்கள்!

சரி, இந்த மையத்திற்கெதிராக, தற்போதைக்கு வைகோ அவர்கள் போராட ஆரம்பித்திருக்கிறார்; கீழே அவர் அறிக்கையிலிருந்து சில பகுதிகள்:

“மத்திய அரசின் நிறுவனங்களில் ஒன்றான இந்துஸ்தான் லேடெக்ஸ் (எச்.எல்.எல்) பயோடெக் லிமிடெட் நிறுவனம் காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டை அடுத்த திருக்கழுக்குன்றம் தாலுக்கா, திருமணி ஊராட்சியில் சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பில் மனித உயிர்களைப் பறித்திடும் கொடிய கொள்ளை நோய்களான அம்மை, காசநோய், காலரா, போலியோ, ரேபிஸ், ஆந்ராக்ஸ், டெட்டனக்ஸ், மஞ்சள் காமாலை, புற்றுநோய், பால்வினை உள்ளிட்ட பல்வேறு நோய்களை உருவாக்கும் கிருமிகளை அழித்து எதிர்வினை ஆற்றி குணப்படுத்தும் மருந்தைக் கண்டறிய, நடப்பாண்டில் மத்திய அரசு சுமார் 600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, பணிகள் நடந்துகொண்டிருக்கிறது.

“நோய் எதிர்ப்பு மருந்துகள் உருவாக்குவதை வரவேற்கின்றேன். மாறிவரும் பருவ மாற்றங்களில் புதிது புதிதாக நோய் கிருமிகள் உருவாகி உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுப்பதற்கு நோய் எதிர்ப்பு மருந்துகளை கண்டுபிடிப்பது அரசின் கடமை.

இதுவரை சரி, ஆனால் – இவருக்கு, இந்த ஆய்வுக்கூடம் இந்த இடத்தில் உருவாக்கப் படுவது பிடிக்கவில்லை … ஆகவே, காரணங்களைத் தேடிப் பிடித்து இழுத்துவந்து போராடுகிறார். என்ன செய்வது!

7ஆம் அறிவு, தசாவதாரம் போன்ற திரைப்படங்களால் நச்சுக்கிருமிகளால் ஏற்படும் ஆபத்துகளை அறிந்துள்ள மக்கள், சோதனைக்கூடங்களில் இருந்து வெளியேறும் கிருமிகளாலும், பரிசோதனைக்கு உள்ளாகும் எலி, முயல், பன்றி, நாய் போன்றவை தப்பி வெளியே வந்தால் ஏற்படும் விழைவுகளுக்கு யார் பொறுப்பேற்பது?

இதை இப்படி எழுத ஆரம்பித்து “7ஆம் அறிவு, தசாவதாரம் போன்ற திரைப்படங்களால், நச்சுக்கிருமிகளால், ஏற்படும் ஆபத்துகளை…”  – பின்பு, திரையுலக விஜய்குஜய் ரஜினிகிஜினிகளின் கோபத்திற்கு பயந்து, அந்த இரண்டு கமா-க்களையும் எடுத்துவிட்டாரோ என்ற சந்தேகம் இருந்தாலும், நம் மட்டைகள் ஊறும் குட்டையான தமிழகத்தில், அரைகுறை அறிவியல் சார்ந்த சிந்தனைகளை பரப்புவதற்கும் இந்தக் கேடுகெட்ட தமிழ் திரைப்படங்கள் தாம், அவற்றிலும் மிக அற்பமான படங்கள் தாம், பாடுபடுகின்றன என நினைத்தால், என் நெஞ்சு பொறுக்குதில்லையே!

இப்படி எழுதவேண்டிய, அறிக்கை வெளியிடவேண்டிய அவசியம் – நம் அரசியல்வாதிகளில் அதிக அளவு விஷயஞானம் உடையவரும், நிறையப் படிப்பவரும், விளையாட்டுகளில் ஆர்வமுடையவரும், திராவிட அரசியலின் ஒரேயொரு பொருட்படுத்தத்தக்க நேர்மையுள்ள மனிதருமான – வைகோ  அவர்களுக்கு ஏன் வந்தது… வருத்தமாகவே  இருக்கிறது.

எப்படிப்பட்ட ஆள் இந்த வைகோ! ஒரு அற்பக் கட்சியில் பல காலம் இருந்ததற்கு இவர் கொடுத்துக் கொண்டிருக்கும் விலை மிக  அதிகம்தான், பாவம்.

ஹ்ம்ம்ம். எல்லாம் கலிகாலம்தாம். (அல்லது கலிங்கத்துப்பட்டிக் காலமா?)

-0-0-0-0-0-0-0-0-0-

இந்தப் பதிவை, நான் முந்தாநாள் கிறுக்கி முடிக்கும்போது, பத்ரி சேஷாத்ரி அவர்களிடமிருந்து கமல்ஹாச விஸ்வரூபப் படத்தில் இருக்கும் அஅறிவியல் சமாச்சாரம் பற்றிய ஒரு செய்தி வந்தது. (அதாவது ஸெல்ஃபோனை மைக்ரொவேவ் அடுப்பில் வைத்தால் அது வேலை செய்யாது எனும் வான்கவித்துவமான நகைச்சுவை).

தன் பரிசோதனையில் இந்த நகைச்சுவை பிடிபட்டது என்றார். எப்படியும், அறிவியலைச் சரியாகக் காண்பிப்பார்கள் என தமிழ் பிலிம்காரர்களிடம் எதிர்பார்க்கமுடியாதுதான் என்றார்.

ஆக, தமிழர்களுக்கு அறிவியலைப் புகட்டுவதும், அந்தக் கேடுகெட்ட தமிழ்த் திரையுலகம்தான் என்ற முகத்திலறையும் பிரத்யட்சமான உண்மையை மறுபடியும், அதுவும் நூறு வார்த்தைகளுக்குள் இரண்டாம் முறை எண்ணும் போது – என்ன மசுத்துக்குப் பள்ளிகளில் அறிவியல் கற்றுத் தரவேண்டும் எனத்தான் தோன்றுகிறது.

மாங்குமாங்கென்று மாசக்கணக்காக இந்த இஞ்சினீயரிங் கஞ்சினீயரிங் கல்லூரிகளில் சொல்லிக் கொடுக்கப் படுவதையெல்லாம், இப்படி ஒரு பத்து வினாடிகளில் ஒரு அற்பப் படம் சுருட்டியெறிந்துவிடுமென்றால், நமக்கு இந்தப் படங்களும் தேவையில்லை, கல்வியும் சர்வ நிச்சயமாகத் தேவையில்லை. (ஆனால் இந்த ஃபேரடே கூண்டு கதை எட்டாம் வகுப்பிலேயே முடித்து விடக் கூடியதுதானே! ஆக, கல்லூரி அளவுக்குக் கூடப் போகவேண்டாமே என்று நினைத்தால், நம் தமிழ் பிலிம் அறிவியல் என்பது, ஒரு எட்டாம் வகுப்பளவு அறிவியல் அளவுக்குக் கூட இல்லையே என்று உள்ளபடியே எனக்குப் பெருமையாகவே  இருக்கிறது!)

-0-0-0-0-0-0-0-0-

இப்படி யோசித்துக் கொண்டிருக்கும்போது அண்மையில் வெளிவந்திருக்கும் க்ரேவிடி(2013) – (பொருள்(ஈர்ப்பு)) – எனும் கந்தறகோள ஹாலிவுட் படத்தைப் பற்றி என் நண்பன் ஒருவன் (இவன் ஸ்பேஸ்எக்ஸ் எனும் படு சுவாரசியமான தனியார் ராக்கெட்-செயற்கைக்கோள் தயாரிக்கும், செலுத்தும் நிறுவனத்தில் பணி புரிந்து கொண்டிருக்கிறான்) இரண்டுமூன்று வாரங்கள் முன்பு புலம்பி எழுதியிருந்தது நினைவுக்கு வருகிறது.

இந்தப் படத்தின் அவனுக்கு மிகவும் பிடித்த ஸேன்ட்ரா புல்லக் அவர்கள் நடித்திருந்தாலும் – இதில் இருந்த நம்பவே முடியாத மானாவாரி அறிவியல் பிழைகள் பற்றி விலாவாரியாக எழுதியிருந்தான், பாவம்; அவன் அலுவலகத்தில் இருப்பவர்களில் இருப்பவர்களுக்குக் கூட இந்தப் படம் நல்ல அறிவியல்புனைகதைப் படம் என்ற எண்ணமாம்! பாவம், அவன் துக்கம்  அவனுக்கு. (கொஞ்சம் என்னைப் போல, மனப் பிறழ்ச்சியோ என்ன இழவோ)

… எவண்டா இவன், கத வுட்றதப் பாக்காம, சுவாரஸ்யத்த பாக்காம, ஜனரஞ்சகத்தப் பாக்காம, க்ராஃபிக்ஸ பாக்காம, ஸ்டுடியோ செட்கள பாக்காம, கதாநாயகியோட சதயப் பாக்காம — போயும்போயும், இந்த கதயோட அறிவியல  பாக்குறான், குசும்பு புட்ச்ச பய… இவனுங்ள, ங்கொம்மாள, நல்லா கட்டிபோட்டு ஒதிக்கணும்… அப்பதான் திர்ந்துவானுங்க.

இந்தப் படம் இந்தியாவில் திருட்டு டிவிடியிலோ, நேரடியாகவோ வெளியிடப்பட்டிருக்கிறதா என்று தெரியாது. ஆனால், கூடிய விரைவில், எப்படியும் –  நம் தமிழ் சினிமா விமர்சகப் பெருந்தகையோர் யாராவது இதற்கு விமர்சனம் என்று ஒன்று எழுதி, ஆஆஆஹாஹ்ஹாஹ்ஹா என்ன அறிவியல் என்றெல்லாம் புளகாங்கிதம் அடைந்து – இதற்குப் பத்து ஆஸ்கார் (ஆஸ்கர் அல்ல) நிச்சயம் என்று, யாரும் ஆஸ்காமலேயே  ஆன்ஸரிக்கப் போகிறார்கள்தாம் என்று நினைத்தால், அதையும் நாம் படிக்க நேர்ந்துவிடுமோ என்பதை எண்ணினால், பாவி  மனது பதைபதைக்கிறது. :-(

சரி. அவன் அனுப்பியிருந்த – பிரபலமான ‘அறிவியல் – விசும்புப் பயண’  திரைப்படங்களில் இருக்கும் இயற்பியல் (மட்டும்) தொடர்பான பிழைகள் பற்றிய சித்திரம் ஒன்றை உள்ளடக்கிய பதிவின் சுட்டி இது: Bad Movie Physics: A Report Card

ஆக, ஆனானப்பட்ட(!) வெள்ளைக்காரனே(!!) அரைகுறை அவியலறிவியல் திரைப்படம் எடுக்கும் போது, பத்ரி அவர்களே, பொதுவாகவே  அட்டைக்காப்பியடித்துப் பழக்கப்பட்டுப் போய்,  படமெடுக்கும் நாமெல்லாம் எந்த மூலைக்கு? ;-)

-0-0-0-0-0-0-0-0-0-

தொடர்புள்ள (ஒரு மாதிரியான, ஆனால் அந்த  மாதிரியில்லாத) பட விமர்சனங்கள்:

5 Responses to “நம் தமிழ்த் திரைப்படங்களில் அறிவியல் படும் பாடு!”


  1. ராம்,
    ஒன்றும் தெரியாவிடில் பிரச்சினை இல்லை, பாதகம் இல்லை. அதிகம் தெரிந்து விட்டால் தவறு என்று ஒதுங்கி விடலாம், அங்கும் பாதகம் இல்லை .

    அரைகுறையாகத் தெரிவதால், தவறான ஊடகங்களிடம் இருந்து தெரிந்துக்கொள்வதால், அவ்வாறு தெரிந்தவற்றை சரி பார்துக்கொள்ள முன்வராததால், முடியாததால் தான் பாதகம். cinema caters less to the people who know enough and more to the people who don’t know or who know a little (wrong) bit.

    In the process the movies create wrong impressions in people’s mind and that is taken as the truth by another set of people and all get into a vicious cycle.

    May be the government should give tax exemption to movies that get their science right :-)

    One hopes that a wrong info shared in a film like viswaroopam , makes people discuss faraday cage, what it is and what it is not. But then people need to be curious for that.

    iPhone 4, when held by hand in a certain position acted as a faraday cage and this resulted in call drops

    Thanks

  2. Yayathi Says:

    Remember how the “Chaos Theory” BS in “Dasavatharam” got twisted by the die hard fans of the so called “Kalaignani” to show off as though he is also a “Vingnani” – people not understanding the difference between non-predictability in deterministic systems Vs non-deterministic(stochastic) systems went screaming in on-line discussions. Finally went on to say, “at least he made people talk about it”, “this is only commercial movie” etc – The only butterfly I would associate with him is his movie “Pattampoochi” (1975).

  3. R Venkatachalam Says:

    ராமசாமி வைகோவைப்பற்றி எழுதியதைப்படித்தவுடன் இலங்கையில் என்னதான் நடந்தது/ நடக்கிறது என்று உங்களுடைய தகவல் மையத்தில் ஏதேனும் செய்தி இருந்தால் கூற முடியுமா என்று கேட்கத்தோன்றுகிறது. அங்கே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரே பிரதமர் வரவேண்டும் என்று கூறுகிறார்.இங்கே உள்ள அரசியல்வாதிகள் சண்டப்பிரசண்டம் செய்கிறார்கள்.


  4. Ram, I watched Gravity with my daughter, Apoorva. Am sure it has a lot of mistakes that will make any physicist squirm, laugh, roll on the floor with laughter, whatever. But do watch it. It is a beautiful movie for sheer visual perspective of space just outside the earth. Brilliant, aesthetic camera work, some good dialogues make this worth watching. Forget physics, but don’t miss it. It does convey something wonderful about life.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s