… அல்லா டீச்சருங்ளயும் நிக்கவச்சி சுட்ணும் சார்!
April 20, 2013
(அல்லது) ”அட, எனக்கு இந்த மாதிரியெல்லாம் அர்ப்பணிப்புடன் அரசு வாத்யார்களெல்லாம் வேலை செய்கிறார்கள் என்பது ஆச்சரியமாகவே இருக்கிறது.”
- ஆசிரியர்கள் அயோக்கியர்கள் – அதுவும், அரசாங்கப் பள்ளிகளில் பணி புரிபவர்கள் படு அயோக்கியர்கள்.
- ஆசிரியர்கள் முட்டாள்கள் – அதுவும், அரசாங்கப் பள்ளிகளில் பணி புரிபவர்கள் அதிமுட்டாள்கள்
- ஆசிரியர்கள் ஏதாவது உபதொழில் (’ஸைட் பிஸினெஸ்’) வைத்திருப்பார்கள் – அதுவும், அரசாங்கப் பள்ளிகளில் பணி புரிபவர்கள் படு அயோக்கியர்கள்.
- ஆசிரியர்கள் மாணவர்களைக் கட்டுப் படுத்துவதே இல்லை — அதுவும், அரசாங்கப் பள்ளிகளில் பணி புரிபவர்கள், மாணவர்களைத் தண்ணீர் தெளித்து விட்டு விட்டார்கள்!
- ஆசிரியர்கள் எத்தர்கள் – அதுவும், அரசாங்கப் பள்ளிகளில் பணி புரிபவர்கள் மகாமகோ எத்தர்கள்.
- ஆசிரியர்கள் மாணவர்களை மிகவும் துன்புறுத்துகிறார்கள் – அதுவும், அரசாங்கப் பள்ளிகளில் பணி புரிபவர்கள், ’பிரம்பால’ மட்டும் தான் பேசுவார்கள்.
சரிதான். ஏனய்யா, நான் கேட்கிறேன் – உங்கள் ஊர் உலகத்தில் இல்லாத, உங்கள் தொழில் வட்டாரங்களில் இல்லாத, ஏன், உங்கள் குடும்பங்களிலேயே இல்லாத, – விகிதாச்சார / சதவிகித அயோக்கியர்கள், முட்டாள்கள், உபதொழில் வைத்திருப்பவர்கள், எத்தர்கள் இதில்தான் இருக்கிறார்களா?
நேரடியாகக் கேட்கிறேன் – நீங்க ரொம்ப ஒழுங்கா? முதலில் உங்கள் குண்டியில் மலம் இல்லாதபோது மட்டும், மட்டுமே – பிறர் குண்டியைக் குனிந்து பாருங்கள், சாக்கடை ஆய்வாளர்களே!
இன்னொன்று: நீங்கள் மிக மிக ஒழுங்கான, ஒரு ‘மாதிரி’ பெற்றோரா? குழந்தைகளை எப்படி வளர்க்கவேண்டும் என்று மனோதத்துவரீதியாகவும், சமூகமானுடவியல் ரீதியாகவும், லோகாயத ரீதியாகவும் கரைத்துக் குடித்துவிட்டது மட்டுமல்லாமல், செயல்பாடுகளிலும் அதி உன்னதமான பெற்றோராக இருக்கிறீர்களா?
நீங்கள் உங்களுக்குத் தேவையான, உங்கள் குழந்தைகளின் கல்விக்குத் தேவையான ஆசிரியர்களை வளர்த்தெடுக்க முடியுமா? பயிற்சி கொடுக்க முடியுமா? அல்லது இவ்வளவு கரிசனமுள்ள நீங்கள், உங்கள் தற்போதைய வேலையை உதறி விட்டு, உன்னதங்களை தரிசிக்கும் ஒரு ஆசிரியராக மாற / உருவாக முடியுமா? (சரி என்றால், என்னை, என் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்; எவ்வளவோ பள்ளிகளில் தரமான ஆசிரியர்களுக்கு ஏங்குகிறார்கள்; நான் நல்ல இடங்களை உங்களுக்கு நிச்சயமாகப் பரிந்துரைக்க முடியும், அதாவது, நீங்கள் என் பரிந்துரைக்குத் தகுந்தவராக இருந்தால்!)
என்னைப் பொறுத்தவரை, எல்லா துறைகளிலும் – எத்தர்களும், புல்லுருவிகளும், அயோக்கியர்களும் இருக்கிறார்கள். இந்த அரைகுறைச் சாகரத்தில் தத்தளித்துக் கொண்டிருக்காமல், நாம் தான் சரியானவர்களை இனம் கண்டுகொண்டு, அவர்களை லபக்கென்று இறுக்கிப் பிடித்துக் கொண்டு, நீந்திக் கடைந்தேற வேண்டும்.
ஆக, அதீத நிலைப்பாடுகள் வேண்டாம். அரைக்கால் வேக்காட்டு அரைகுறை அறிவுஜீவித்தனம் வேண்டாம். எந்த எழவுக்காகப் போராடுகிறோம் என்பது தெரியாத போராளித்தனம் வேண்டாம்.
கறுப்பு-வெள்ளை ரீதியாக உலகத்தைப் பார்க்காமல், அதன் காலவெளியற்ற, எண்ணிறந்த சாம்பல் நிறங்கள், சாயைகளினூடே, நம்மையும், நம்மைச் சூழ்ந்திருக்கும் உலகத்தையும அவதானிக்கலாம். என்ன சொல்கிறீர்கள்?
-0-0-0-0-0-0-
சரி. குனிந்து உங்கள் குதத்தைப் பார்த்துக் கொள்ள முடியாமல் மேற்கண்டதைப் படித்த பின்னரும் இப்படி – ‘… அல்லா டீச்சருங்ளயும் நிக்கவச்சி சுட்ணும் சார்!” – என்று சொல்பவர்களுக்கு ஒரு விண்ணப்பம்: தங்களுக்கு எப்படி இந்த உரிமை வந்தது என்று முடிந்தால், ஒரு வார்த்தை, கோரமான அமிலத்தன்மையுடன் பின்னூட்டமிடவும். நன்றி.
-0-0-0-0-0-0-
இது என்னடா திடீரென்று என்று கேட்கிறீர்கள். ஹ்ம்ம்.
என்னுடைய குழந்தைகளின் ஒருத்தியின் தகப்பனான ஒரு மொடாக்குடிமகனைப் பார்த்து, நேற்று முன்தின மாலை பேசிக் கொண்டிருந்தேன் — என்னுடைய உச்சகட்டப் பொறுமைப்பண்பை சோதித்துக் கொண்டு – நாளையே குடும்பத்துடன் ஓடிப் போய் ஏதாவது ஊர்பேர் தெரியாத நகர்ப்புறத்திற்குச் சென்று, எல்லா ஓட்டைகளையும் மூடிக் கொண்டு சரணடைந்து விடவேண்டும் என்று… போங்கடா குடிகாரக்கூவான்களே நீங்களும் ஒங்க டாஸ்மாக்கும் என மனப்பிரமைகளில் அமிழ்ந்து கொண்டு…
விஷயம் என்னவென்றால் – அந்தக் குழந்தைக்கு கடந்த ஒரு வாரமாக அவர்கள் வீட்டில் இரவு உணவும் இல்லை, காலையுணவும் இல்லை. வீட்டில் அடுப்பு எரியவேயில்லை. அவள் அம்மாவை குடிகார அப்பன் தொடர்ந்து அடித்து நொறுக்கிக் கொண்டிருப்பதுதான் காரணம், குழந்தை நடுவில் வரும்போதெல்லாம் அவளையும் மொத்தியிருக்கிறான். ஈஸ்வரா! ஆக, அகோரப் பசி பசித்துக் கொண்டே காலை பள்ளிக்கு வந்துகொண்டிருக்கிறது அந்தக் குழந்தை. யாரிடமும் சொல்லாமல் ஒரு மூலையில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்திருக்கிறது. (என் பள்ளியில், எங்கள் குழந்தைகளுக்கு காலை மாலை இடைவேளைகளில் சிற்றுண்டியும், மதிய உணவும் கொடுக்கிறோம் – இதற்கு பணம் தேற்றுவதற்குள்ளேயே ததிங்கிணத்தோம் ஆகி விடுகிறது)
மூன்று நாள் முன்னர்தான் எனக்குத் தெரியவந்தது இந்தச் சோகம். அதற்குப் பின் காலை தினமும் அதற்கு ஏதாவது வாங்கிக் கொண்டு போய்க் கொண்டிருக்கிறேன். இரவு உணவுக்கு பன், ஜாம் போலவும். முதலில் கொஞ்சம் வெட்கப் பட்டாலும் பின்னர் அதுவும் கொடுப்பதை வாங்கிக் கொண்டு பரக்கப் பரக்கச் சாப்பிட்டு விடுகிறது. பரிதாபம்.
இந்தச் பின்புலத்தில், முந்தாநாள் மாலையில் அந்த அரைகுறை அயோக்கியத் தகப்பனைப் பார்த்தேன்; கொஞ்சம் சுற்று வளைத்துப் பேசி, பின்னர் வருத்தத்துடன் ஏனப்பா இப்படி இந்த வளர்ந்து கொண்டிருக்கும் சூட்டிகையான பெண்ணை இப்படிச் செய்கிறீர்கள், அது பசியால் வாடுகிறதே, உங்களுக்கு இருப்பது ஒரேயொரு குழந்தைதானே, கொஞ்சம் பார்த்துக் கொள்ளக் கூடாதா எனக் கேட்டேன். அவர் சொன்னார் – ஏன் நீங்களே காலை உணவும், இரவு உணவும் கொடுத்தால் குறைந்தா போய் விடுவீர்கள்? ஹ்ம்ம். எனக்கு என்னிடமிருந்து எழும்பிய மகாமகோ கோர வன்முறை உணர்ச்சியைக் கட்டுப் படுத்திக் கொள்வதற்குள் வேர்த்து விறுவிறுத்து விட்டது.
சுற்றித் திரண்ட கும்பல் அறிவுரை சொல்ல ஆரம்பித்தது: ஆசிரியர்களின் ஸைட் பிஸினெஸ் பற்றி, அவர்கள் திறமையின்மை பற்றி, பள்ளிகள் குழந்தைகளைச் சரியாகப் கவனித்துக் கொள்ளாததைப் பற்றி … … டட்டடா டட்டடா டட்டடாவென்று. சரி, இன்னொரு நாள் பார்த்துக் கொள்ளலாம் என நான் கிளம்பி விட்டேன். அந்தக் குடிமகன் – என்னை நோக்கி கையை நீட்டி, குழறும் குரலில் சொன்னார்: ‘… ஒங்க்ள மாரி அல்லா டீச்சருங்ளயும் நிக்கவச்சி சுட்ணும் சார்!”
இன்னொரு ஆள் சொன்னார் – இவனுங்க திருந்தவே மாட்டாங்கபா, ஏதோ வெளீவேலயிருக்கும், கிளம்பிட்டாரு – என்ன ப்ராப்ளம்னிட்டு சொல்லாம.. என்ன,. நம்பகிட்ட சொன்னா சால்வ் பண்ணிட மாட்டோம்?
சுபம்.
… இலவசம் இலவசமாக அனைத்தையும் பிச்சையாகக் கொடுத்து, வேலை செய்யச் சொல்லாமல் சம்பளம் மட்டும் கொடுத்து (NREGA!), தொலைக்காட்சிச் சீரழிவை வீட்டிற்குக் செலுத்திக் கொண்டு, டாஸ்மாக் கள்ளை ஊற்றிக் கொடுத்து, வளர்ந்த ஆண்களைப் பொறுக்கிகளாக ஆக்கி, குழந்தைகளின் எதிர்காலத்தைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கி, நமது பெண்களை நிர்மூலம் செய்து, வாழ்வாதாரங்களை ஒழித்து, இந்த அரசு என்னதான் செய்து கொண்டிருக்கிறது?
-0-0-0-0-0-0-
“முட்டாள்தனத்தால் விளைந்தது என்கிற ரீதியிலேயே, தேவையான அளவு விளக்கப்படக் கூடிய எந்த எதிர்மறை நிகழ்வையும் நாம், வன்மத்தினால் ஏற்பட்டது எனக் கருதக் கூடாது.”
(“Never attribute to malice that which is adequately explained by stupidity” — Hanlon’s Razor)
நேற்று காலை ‘த ஹிந்து’ படித்துவிட்டு என்னைத் தெரிந்த ஒருவர் (நண்பர் அல்ல, நல்லவேளை! வெறும் சொந்தக்காரர்தான்.) வேலை மெனக்கெட்டு சென்னையிலிருந்து ஃபோன் செய்து – இளக்காரம் சொட்டும், குத்தல் தொனியில், ”பார்த்தீர்களா, நம்ம கவ்ர்ன்மென்ட் டீச்சர்செல்லாம் கூட உங்களப் போல, இந்த மாதிரியெல்லாம் அர்ப்பணிப்புடன் வேலை செய்கிறார்கள், கஷ்டப்படும், நன்றாகப் படிக்கும் பையன்களுக்கு உதவுகிறார்கள் என்பது எனக்கு ஆச்சரியமாகவே இருக்கிறது.” இவர் குறிப்பிட்ட கட்டுரை இது: A bitter battle turns sweet at the end.
உடனே எனக்கு இவரிடம் – உங்களுக்கு எவ்வளவு ஆசிரியர்களைத் தெரியும்? எவ்வளவு அரசு ஆசிரியர்களைத் தெரியும்? ஒரு நல்ல அரசு ஆசிரியரைக் கூடத் தெரியாதா? அவர்களது பிரச்சினைகள் என்னவென்று தெரியுமா? நீங்கள் அர்ப்பணிப்புடன் வேலை செய்து, எவ்வளவு கஷ்டப்படும், நன்றாகப் படிக்கும் பையன்களுக்கு உதவுகிறீர்கள்? — என ஆரம்பித்து ஆயிரம் கேள்விகளைக் கேட்க வேண்டும் எனத் தோன்றிய எண்ணத்தை, முளையிலேயே கிள்ளினேன்.
அப்படியா என்றேன். அவ்வளவுதான். அலுப்பாக இருந்தது எனக்கு.
என்னுடைய பின்வாங்குதலுக்கு இன்னொரு காரணம், மேற்கண்ட ஹான்லன் கோட்பாடு – சில சமயங்களில் எனக்கு இது மறந்து விடுகிறது என்றாலும். அண்மையில் நடந்த ஒரு அவசர உரையாடலின்போதுகூட, என்னுடைய இந்த மறதியை நிவர்த்தி செய்ய, பத்ரி சேஷாத்ரி என் மேல் இந்தக் கோட்பாட்டைத் திருப்பி வீசி என்னை ஆசுவாசம் கொள்ளச் செய்தார்; நன்றி, பத்ரி. 8-)
… மதியம் ஆசிரியர்கள் அறையில் கிடந்த ‘த ஹிந்து’வில் இந்த கட்டுரையைப் பார்த்தேன். சந்தோஷமாகத்தான் இருந்தது. ஆனால், எனக்குத் தனிப்பட்ட முறையில் அறிமுகம் இல்லாவிட்டாலும், இந்தமாதிரி பல நூறு அரசுப் பள்ளி – திறமைவாய்ந்த, பரோபகார – ஆசிரியர்களைப் பற்றித் தெரியும் – இவர்களெல்லாம் தமிழ்நாட்டுக் காரர்கள்தான். இந்தியா முழுவதும் என்றால் சில ஆயிரங்களாவது இருப்பார்கள் இவர்கள், என்பது என் அனுமானம்.

ஒரு உத்தராஞ்சல் அரசுப் பள்ளி வகுப்பறை – இந்த குழந்தைகளின் குவிந்த கவனிப்புக்குக் காரணம் – ஒரு அற்புதமான ஆசிரியர்தான். அவரை மன்னித்து விடுங்கள், தயவுசெய்து… [மதன்ஜீத் அவர்கள் எடுத்த புகைப்படம்; கறுப்புவெள்ளைப் படங்களுடைய ஆழமே அலாதிதான்!]
மற்ற துறைகளின் நிலைமை இதைவிட, இந்த விகிதாச்சாரத்தைவிட மோசம்தான். இதனை, நான் என்னுடைய சொந்த அனுபவத்திலிருந்து சொல்கிறேன்.
100 பேர் தமிழில் எழுதுகிறேன் பேர்வழி என்று (நான் உட்பட) மானாவாரியாக கண்டதையும் காப்பி அடித்துக்கொண்டு, வெட்கமேயில்லாமல் புற்றீசல் போலக் கிளம்பினால், – அதில் ஒரு ஆள் ஒழுங்காகத் தேர்வதே மிக மிகக் கடினம் – இந்த அழகில் ’தமிழ் இலக்கியம்’ எனும் ஜந்துவையே விட்டு விடுங்கள்.
மென்பொருள் சேவை நிறுவனங்களில் இது 5 சதம் இருந்தால் அது அதிகம். மருத்துவர்களாக வெளிவருபவர்களில் 100ல் ஓரிருவருக்குத் தான் என்னால் தைரியமாக, என் மனதைத் திடம் செய்துகொண்டு, என் உடம்பைக் காண்பிக்க முடியும்.
பெற்றோர்களாகிய நம்மையே எடுத்துக் கொள்ளுங்கள் – உயிரியல் ரீதியாக நம் மானுடக் கடமையை ஆற்றிவிடும் வீரத்தைத் தவிர, நம்மில் சுமார் 5% ஆட்களுக்குத்தான் குழந்தை. அதன் வளர்ப்பு என்றால் என்ன என்பது கொஞ்சமாவது பிடிபட்டிருக்கிறது.
அந்த சென்னை அற்ப ஜந்துவைப் போல தினச்செய்தி படிக்கும் ஆசாமிகளில் ஆயிரத்தில் ஒருவராவது ஒரு துரும்பையாவது அசைப்பவராக இருந்தால் அது கூட எனக்கு ஆச்சரியம் கொடுக்கும்.
(ஆனால் இவர்களை வக்கணையாகப் பேசச் சொல்லுங்கள், அறிவுரை கொடுத்துத் தள்ளி விடுவார்கள்!)
-0-0-0-0-0-0-
மூன்று வருடங்கள் முன் என நினைக்கிறேன். இப்படி நம் அரசு ஆசிரியர்கள் மேல் மகாமகோ அவமதிப்பு வைத்திருக்கும் ஒரு இளைஞருக்கு – அரசுப் பள்ளிக்கூடம் ஒன்றில் லோல் (LoL அல்ல) பட்டுக்கொண்டிருந்தாலும் மன எழுச்சியுடனும், தன்னூக்கத்துடனும் பணி புரிந்து கொண்டிருக்கும் என் நண்பரை அறிமுகம் செய்தேன்.
இந்த இளைஞருக்கும் பாவம், ஏதாவது சமூக சேவை புரியத்தான் ஆசை, எப்படியாவது இந்தச் சமூகத்தை வேறு யாராவது உய்விக்க வேண்டும் என்கிற அடாத அவா வேறு – ஆனால், குளிரூட்டப்பட்ட வீட்டில் அல்லது அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டு கணினி மூலம் மட்டும் தாம் அதனைச் செய்ய முடியும் இவருக்கு – அதுவும் கிண்டல் பின்னூட்டங்களும், நக்கல் ட்வீட்களும் ஆன வெடி மருந்து மூலமாக மட்டுமே சாத்தியம்! மேலதிகமாக, ஏதோ தன்னளவில் மாற்றங்களுக்கு முயன்று உழன்றுகொண்டிருக்கும் மற்றவர்களை அவநம்பிக்கைவாதிகள் (’ஸினிக்ஸ்’) என்று கரித்துக் கொட்டும் மனப்பாங்கு வேறு — நல்ல முரண்நகைதான் இது!
-0-0-0-0-0-
சரி – ஒரு வழியாக ஹொசூர் பக்கத்திலிருந்த அந்தக் கிராமப் பள்ளிக்குக் கூட்டிச் சென்றேன் அந்த இளைஞரை. பள்ளி = இரு சிறு அறைகள்; கழிவறை இல்லை; குடிநீர் இல்லை; மின்சாரம் இல்லை; 6-14 வயதுடைய 70 மாணவர்கள், மாணவிகள்; ஒரு ஆசிரியர் + ஒரு தன்னார்வலர் (எனக்கு முன்னறிமுகவானவர்). முடிந்தது.
செருப்பைக் கூடக் கழற்றும் பண்பாடில்லாமல் ஒரு வகுப்பறைக்குள் நுழைந்த இந்த இளைஞர் அங்கிருந்த ஒரே நாற்காலியில் கால்மேல்கால் போட்டு உட்கார்ந்துகொண்டு, ஒரு பெருமித முகபாவத்துடன், தற்செருக்குடனும் ஹன்ஹ, ஹன்ஹ என்ற மேட்டிமைத்தனக் கனைத்தல்களுடன், அந்த ஆசிரியர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதைக் கேட்டுக் கொண்டிருந்தார். நான் அறைவாயிலுக்கு வெளியே நின்று கொண்டிருந்தேன்.
என் தன்னார்வ ஆசிரிய நண்பருக்கு கூச்ச சுபாவம். ஐந்து நிமிடங்களில் வேகமாகச் சொல்லவேண்டியதைச் சொல்லி விட்டு — இது பெரும்பாலும் தலித் குழந்தைகள் படிக்கும் அரசுப் பள்ளி, நான் ரிஷி-பள்ளத்தாக்கு முறையைப் பின்பற்றி வேலை செய்கிறேன், எனக்கு என் வேலை பிடித்திருக்கிறது, நான் கல்வியியல் பட்டதாரி அல்ல, ஒரு தன்னார்வ ஆசாமிதான் ++ — ஏதாவது கேள்வியிருந்தால் கேளுங்கள் பதில் சொல்கிறேன், எதாவது சொல்லவேண்டுமென்றால் சொல்லுங்கள், கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
இளைஞப் பெருந்தகை சொன்னார் – நீங்கள் படிப்பிக்கும் முறை சரியில்லை. ஆந்திராவுக்கு ஒத்து வரும் முறை தமிழ் நாட்டுக்கு எப்படி ஒத்து வரும். ஒரு கணினியைக் கூட உபயோகப் படுத்தவில்லை. உங்களுக்கு கணினி தெரியுமா? எதிர்காலம் கணினிமயம் என்பதாவது தெரியுமா? மென்பொருள் என்றால் என்ன தெரியுமா? ஆன்லைன் லேர்னிங் என்றால் என்ன தெரியுமா, உலகவங்கியில் இருந்து கணினிமயமாக்கலுக்கு நேரடியாகக் கடன் கிடைப்பது தெரியுமா? (இந்த ரீதியில் இன்னும் சில அறிவுரைகள் சொன்னார், கேள்வியுரை அளித்தார்.)
துணுக்குற்ற அந்தத் தன்னார்வ ஆசிரியர், என்னைப் பார்த்து, ஏதோ வேலை இருக்கிறது என்று சொல்லி, கழன்று கொண்டு விட்டார். கருமமே கண்னாயினார். கருமாந்திரங்களைக் காணவே காணாதார். அப்படியே கண்டாலும், காணாதது போல் அகன்று விடுவார். யோகி. என்னைப் போல அனாவசிய வம்புதும்புகளில் ஈடுபடாதவர் அவர்.
அவருடன் பணி புரிந்து கொண்டிருந்த அரசு ஆசிரியரும் அவர் போலவே ‘ஏதோ எங்களால முடிஞ்சத இந்தப் பிள்ளைகளுக்குச் செய்யறோம்’ என்று சொல்லி விட்டு, கொஞ்சம் சுற்றிக் காண்பித்து விட்டு, வகுப்பறைக்குச் சென்று விட்டார்.
ஒரு ஆர்பாட்ட அலட்டலும் இல்லை.
-0-0-0-0-0-0-
இந்த இளைஞருடன், ஒரு நண்பர் பரிந்துரைத்ததினால் நான் உரையாட வேண்டி வந்திருந்தது. நண்பர் சொல்லியிருந்தார் – இந்த இளைஞரோடு உரையாடுவது என் கண்களைத் திறக்கும், ஐயங்களைத் தீர்க்கும் என்று – அதாவது அந்த இளைஞருக்கு கல்வி பற்றிய திட்டவட்டமான எண்ணங்கள் இருக்கின்றன என்றும், அவற்றை வெள்ளோட்டம் பார்க்க/விட ஆசைப்படுகிறார் என்றும், எப்படி நான் ஒரு அவநம்பிக்கைவாதியாக இருக்கக் கூடாது என்றும்…. ஆக, ஏதோ ஒரு அலுப்பான, மனவலிமையற்ற கணத்தில் இதனை நான் ஒப்புக் கொண்டேன். (யோசித்துப் பார்த்தால், இந்த உரையாடலும் உபயோகமாகவே தான் இருந்தது – பல்வேறு தளங்களில் – பாருங்கள், இந்தப் பதிவுக்குக் கூட அது உபயோகமாகவே இருக்கிறது!)
எனக்கு புதிய ஆட்களைச் சந்திப்பதற்கு முன் அவர்களைப் பற்றிய பின்புலம் என்ன என்பதை அறிந்து கொள்வது முக்கியம் – எனக்கு யாராவது ஒருவரை பரிந்துரைத்தால், நான் அவரிடம், பரிந்துரைக்கப் படுபவர் பற்றிய மேலதிக விவரங்களைக் கேட்பேன்.
விட்டேற்றியாகக் கண்ட கழுதைகளை என் பக்கம் ‘தயவு செய்து உதவவும்’ என்று அனுப்பி, தங்கள் கையைக் கழுவிக் கொள்பவர்களை நான் ஊக்கப் படுத்த மாட்டேன். எனக்கு என் நேரத்தை முடிந்தவரை எனக்கு உபயோகமாகச் செலவழிப்பது முக்கியம்.
நிச்சயம் எனக்குத் தெரியும் – பெரும்பாலும், பெரும்பாலோர் உருவாக்கும் தங்களுடைய ஊடக பிம்பஙகளுக்கும் அல்லது சொந்த உப்புதல்களுக்கும், அவர்களுடைய நிழலான நிஜங்களுக்கும் உள்ள இடைவெளி என்பது மகாமகோ கோரமானது என்று.
இருந்தாலும் நான் இந்தக் குறைந்தபட்ச பின்புல அறிந்து கொள்ளலைச் செய்வேன். இது என்னுடைய குறைந்தபட்ச விவரம் சேகரித்தல் முயற்சி, எனக்கு திடுதிப் ஆச்சரியங்கள் பிடிக்காது அவ்வளவே. ஆக, அவர் இணையமெங்கும் விட்டுச் சென்றிருந்த விட்டேற்றியான பின்னூட்டங்களை, இந்த வகையறாக்களை கொஞ்சம் பார்த்தேன். சரி.
இவர் ஒரு சிறு மென்பொருள் நிறுவனத்தை தன் நண்பர்களுடன் நிறுவி (இவர் ஒரு மூலதனப் பங்குதாரர்) நடத்திக் கொண்டிருந்தார். மென்பொருள் வஸ்து என்றெல்லாம் இல்லை, அது ஒரு விசிலடிச்சான் மென்பொருள்சேவைக் கடைதான். ’
’நீங்க எது சொன்னாலும் எங்க விசிலடிச்சான்குஞ்சப்பப் பொறியாளர்களை வைத்துச் செய்து விடுவோம்’ என்கிற கந்தறகோளக் கணினிக் கடை தான்! ஒரே ‘Working for customer delight’ தான். தரமே தாரக மந்திரம் எனும் மூச்சுமுட்டும் Quality Assurance பஜனைதான்.
அந்த நிறுவனத்தின் இணையதளம் படு மோசமாக இருந்தது. அழகுணர்ச்சி இல்லை. ஒரே ஆரவாரம். நிறுவனத்தில் ஒரு வெள்ளைகார வேலையாளும் இல்லாத போது, பக்கத்துக்குப் பக்கம் ஒரே வெள்ளையர்கள். ஆங்கிலத் தவறுகள், QA பக்கங்களில்!
கொஞ்சம் அசுவாரசியமாக இருந்தது. இருந்தாலும் அப்படி என்னதான் கல்வி பற்றி இந்தப் பையன் எண்ணங்கள் கொண்டிருப்பான் என்கிற எண்ணமும் இருந்தது.
-0-0-0-0-0-0-
வெளியே வந்து கொண்டிருக்கும் போது, இளைஞர் சொன்னார் – அட, எனக்கு இந்த மாதிரியெல்லாம் அர்ப்பணிப்புடன் அரசு வாத்யார்களெல்லாம் வேலை செய்கிறார்கள் என்பது ஆச்சரியமாகவே இருக்கிறது. (”Surprising, I am quite astonished that the Government teachers work with such dedication”)
எனக்கு உடனே சுர்ரென்றூ ஏறியது.
ஏன் அப்படி நினைக்கிறீர்கள்?
அரசு ஆசிரியர்கள், பள்ளிகள் எல்லாம் உதவாக்கரைதான். அதுல இப்படி இருக்காங்களேன்னுதான்
அப்படியா
ஆமாம், ஆனா இவங்களுக்கும் எப்படி கணினி வெச்சு பாடம் சொல்லித்தர்றதுண்ற ஐடியாவே இல்ல! என்னத்த தான் பாடம்னு நடத்தறாங்களோ!
ம்ஹ்ம்ம்.
இல்லாட்டா, பள்ளிய அம்போன்னு விட்டுட்டு ரியல் எஸ்டேட் வேலைக்கு, ஸைட் பிஸினெஸ்னுட்டு போய்டுவாங்க. நாம வரப்போறோம்னுதான் இவங்க பள்ளிக்கு வந்திருக்காங்கன்னு நினைக்கிறேன்.
அப்படியா தம்பி நினைக்கறீங்க?
ஆமாம், இது தான் யதார்த்த உண்மை. அரசு வேலன்னா பஜன வேலதான்.
தம்பி – இன்னிக்கு ஒங்க நிறுவனம் வேலை செய்யுதா?
ஆமாம். ஏன் கேக்கறீங்க?
நீங்க ஒங்க ஆஃபீஸ் போகாம ஏன் என் கூட வந்திருக்கீங்க?
!!!
அப்போ நீங்க பஜன செய்யறீங்க இல்லியா?
ஸார், அது என்னோட பங்கும் இருக்கற நிறுவனம். நான் அதனோட முதலாளி.
இருக்கலாம், ஆனால் ஒங்களோட நிறுவன ஒப்பந்தத்தில என்ன போட்ருக்கீங்க?
அதில என்ன போட்ருக்கோம்னிட்டு ஒங்களுக்கு எப்படித் தெரியும்?
தம்பி, நான் நிறைய MoA, AoA எல்லாம் பாத்திருக்கேன். அதில போட்டுப்பாங்க, நீங்க என்ன பண்ணுவீங்க, ஒங்க கம்பெனில வேலை பண்ற நேரத்தில அப்டீன்னிட்டெல்லாம்.. அதில நிச்சயம் ஒரு கிராமப் பள்ளிக்கு வந்து உளறிக் கொட்டுகிறது, அதன் மூலம் கம்பெனிக்கு எப்படி மதிப்பைக் கூட்றது என்பது இருக்காது.
!!!
ஆனா சும்மா சொல்லக் கூடாது, நல்லாவே பஜன பண்றீங்க!
ஸார் நான் நீங்க ரொம்பப் பண்பானவருன்னு ஒங்க நண்பர் சொன்னாருன்னு வந்தேன். ஆனா…
வதந்திகளை நம்பலாமா?
!!!
தம்பி, உங்களோட முன்முடிவு – ஆசிரியர்கள் அயோக்கியர்கள் – அதற்கு மாறாக என்ன தெள்ளத் தெளிவான ருசு இருந்தாலும் நீங்க அத நம்பப் போவதில்லை. என் முன்முடிவு: இந்த அனுபவம் நம் இருவருக்கும் ஒத்து வரப் போவதில்லை. நாம் இருவரும் நம்மளவில், நம் முன்முடிவுகளில் சரியே! விட்டு விடுவோம்.
!!!
இன்னொன்று – உலகவங்கி இந்த மாதிரி பள்ளிகளுக்கு எல்லாம் தனித்தனியாகக் கடன் கொடுக்கும் என்றால், கொஞ்சம் நீங்கள் கையெழுத்து போட்டு வாங்கிக் கொடுத்து விடுங்கள். எப்படி இந்த கல்வி முறை ஒத்தே வராது என்றும் வண்டைவண்டையாக எழுதலாம். எப்படி என் மாதிரி ஆட்கள் தான் இளைஞர்களை வளரவிடாமல் தடுக்கிறார்கள் எனவும் கோபத்துடன் எழுதலாம்…
… … …
என்னைப் புண்படுத்திவிட்டீர்கள்
My pleasure!
என்னது?
என்னுடைய எவ்வளவு மணிநேரங்களை மோசமாகச் செலவு செய்யவைத்தீர்கள்? அதனால் தான்.
!!!
உங்கள் நண்பரிடம் சொல்லப் போகிறேன்.
My pleasure!
-0-0-0-0-0-0-
இந்த இளைஞருக்கு யாரோ கணினி (மட்டுமே!) தான் எதிர்காலம் என்றும், மேலும், கல்வித்துறைதான் எதிர்காலத்தில் கணினிகளையும், மென்பொருட்களையும் வாங்கும் திறன் படைத்த, வளர்ந்து கொண்டிருக்கும் சந்தை (’மார்க்கெட்’) என்றும் கிளப்பி விட்டிருக்கிறார்கள். இந்த இளைஞரும் ஒரு ‘டப்பா ஸேல்ஸ்மென்’ ஆக ஆசைப்பட்டு ஒரு சந்தை மதிப்பீடு (’மார்க்கெட் ஸ்டடி’) செய்ய வந்திருக்கிறார், அவ்வளவு தான். அதுவும் ஒரு எழவும் மதிப்பீடு செய்யத் தெரியவில்லை, ஒரு சுக்கு ஞானமும் இல்லை. ஒரே உளறல் தான்.
மேற்கண்ட அவருடைய குறிக்கோளை, பள்ளி செல்வதிற்கு முன் நான் கொஞ்சம் பேசியதில் அனுமானித்தது. (எவ்வளவு இம்மாதிரிக் கோமாளிகளை நான் பார்த்திருக்கிறேன்!)
ஆனால், இந்த இளைஞர் என் நண்பரிடம் சொன்னது என்னவோ, அவருக்கு கல்வி பற்றிய பல திட்டவட்டமான திட்டங்கள் இருப்பதாக.
பெங்களூர் சென்றதும் நண்பரைத் தொலைபேசியில் கூப்பிட்டு அர்ச்சனை செய்தேன்.
சுபம்.
-0-0-0-0-0-0-
‘… அல்லா டீச்சருங்ளயும் நிக்கவச்சி சுட்ணும் சார்!”
ஆமென்.
-0-0-0-0-0-0-0-
தொடர்புள்ள பதிவுகள்:
- மொதல்ல ஒங்க வகுப்பறைய பெருக்கிச் சுத்தம் பண்ணுங்கடா 06/04/2013
- மொதல்ல மாட ஓட்டக் கத்துக்குங்கடா, அப்றம் புத்தபிக்ஷுக்கள தெர்த்தலாம்… 03/04/2013
- மாணவர் போர் ஆட்டம் – பின்னூட்டம், விளக்கம்++ 30/03/2013
- போராட்டங்கள் – சில கேள்விகள், உரையாடல்கள் 29/03/2013
- coyote’s perspective 27/03/2013
- குழந்தைப் படுகொலைகள், எல்டிடிஇ பிரபாகரன், போராட்டங்கள்: சில சிந்தனைகள், குறிப்புகள் 25/03/2013
- மாணவர்கள் போராட்டம் அல்லது புண்ணாக்கு 19/03/2013
- இதுதாண்டா தமிழ் இளைஞன்!
- ஆர்ட்வீனொ, ரொபாடிக்ஸ், இளைஞர்கள்(ஐயோ!),
- இதுதாண்டா தொழில்முறை களப்பிணியாளன்!
- இதுதாண்டா போராளி!
April 21, 2013 at 18:23
Your articles are eye openers to me. I’ve started changing my stupid mindset that typecasts all school teachers.
April 22, 2013 at 10:34
என்னாடா நம்ம சாக்கடை ஆய்வாளர் same சைட் கோல் போடறாரே ன்னு படிச்சு பார்த்தா தான் தெரியுது , குடிகாரனை விட அதிகமா எல்லாரையும் வெளுத்து வாங்குறது
இப்ப வாத்தியார் என்பதால் பத்துல ஒருத்தன் ரொம்ப நல்லவன்
முன்னாள் பொறியாளர் என்பதால் நூத்தில் ஐந்து .ஹி ஹி
இந்த பாலியல் வன்முறை,கொலை,கொள்ளை,ஊழல் எல்லாம் செய்யாதவன் கூட இந்த மாதிரி நூத்துல ஐஞ்சு பேர் தான் தேறுவானா
அடுத்து மருத்துவர்கள் பத்தி சொன்னீங்க பாருங்க அங்க நிக்கறீங்க
நூத்துக்கு ஒருத்தன் தேறுவதே அதிகம்னு
நல்ல வேலை .இப்படி இவனுங்க இந்த அழகில இருக்கும் போதே விடுதலைக்கு பிறகு மக்கள் தொகை மூணு மடங்கு ஆயிடுச்சு,சராசரி ஆயுள் நூத்துக்கு தொண்ணூறு பேரு ரொம்ப நல்ல டாக்டரா இருந்த காலத்தில இருந்த அற்புதமான 28,29 ல இருந்து 68 ஆயிடுச்சி
வருஷக்கணக்கா ஒவ்வொரு வீட்டிலேயும் ரேணு,மூணு இழுத்துக்கினு இருக்கிற கேசு இருக்குது
பிரசவத்துல ,காலேராவுல.அம்மையில நூத்துகனக்குல தெனம் மக்கள் மேல போனது ரொம்ப குறைஞ்சிடுச்சு
இதுல இவனுங்க நூத்துக்கு அஞ்சு பேர் நல்லவன் ஆயிடாங்கன்னா நாடு தாங்காது
நீங்க டாக்டர் கிட்ட உங்க உடம்பை காட்ட பயப்படறத விட உங்களை பத்தி தெரிஞ்ச பிறகு உங்களை பார்த்தா காத தூரம் ஓடாத டாக்டர் ஆயிரத்துல ஒருத்தன் கூட தேற மாட்டான்.அவனும் ஓட முடியாத நிலமையால மாட்டிகிட்டவனா தான் இருப்பான்
April 22, 2013 at 13:51
அன்புள்ள பூவண்ணன்,
0. உங்கள் நகைச்சுவை உணர்ச்சி எனக்குப் பிடித்திருக்கிறது, நிச்சயமாக.
1. நான் மிகச் சிறு வயதிலிருந்து ஒரு ொறியாளன், இப்பவும்தான்; சுமார் 17 வயதிலிருந்து வாத்தியார். நான் மிக ஆரோக்கியமானவன். ஆக, மருத்துவர்களிடம் பலப்பல வருடங்களுக்கு ஒரு முறை போனாலே அதிகம். நல்ல மருத்துவர்கள் பலரை அறிவேன். நீங்கள் எழுதுவதைப் படித்தால், நீங்களும் ஒரு மரியாதைக்குரிய மருத்துவராகவே இருக்கலாம் எனத் தோன்றுகிறது. அபய் பங் நினைவுக்கு வருகிறார் கூட.
2. ஆனால், நான் எழுதுவதெற்கெல்லாம் நீங்கள் எதிர்வினைப் பின்னூட்டம் அதுஇதுவென்று, சாரமே இல்லாமல் கண்டதையும் கற்பனை செய்து கடுப்பேற்றிக்கொண்டு கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை. பதிலாக நீங்கள் ஒரு கட்டுரைத்தளத்தை ஆரம்பித்து உங்கள் எண்ணங்களைப் பகிரலாமே?
3. உங்கள் சக்தியை, நீங்கள் என்னுடைய போராட்டம் பற்றிய கேள்விகளுக்குத் திண்மையாக, நேரடியாக பதிலளிப்பதில் செலவழித்தால், அது நம் அனைவருக்கும் நல்லது அல்லவா? அது மட்டுமேதான் உரையாடலை அடுத்த படிக்குக் கொண்டு சேர்க்கும் என நினைக்கிறேன். (பார்க்க https://othisaivu.wordpress.com/2013/03/29/post-186/)
4. நீங்கள் தொடர்ந்து உங்களுடைய வழக்கமான முறையில் பின்னூட்டமிடுவதற்கு முன், தயவு செய்து கீழுள்ள இரு சுட்டிகளைப் படித்து – நீங்கள் எங்கு சென்று கொண்டிருக்கிறீர்கள் என்பதை முதலில் புரிந்து கொள்வீர்களா?
Imps of the Internet
http://www.thehindu.com/features/magazine/imps-of-the-internet/article4605518.ece
The Trolls Among Us
http://www.nytimes.com/2008/08/03/magazine/03trolls-t.html?pagewanted=all&_r=0
நன்றி.
April 23, 2013 at 10:03
சார் நீங்கள் புரிந்து தான் கோவபடுகிறீர்களா
நீங்கள் செய்வது அப்பட்டமான அவதூறு.பத்தில் ஒன்று,நூற்றில் ஒன்று என்று பெரும்பான்மையானோரோய் அவலமாக என்னும் செயல்
ஆயிரத்தில் ஒரு காவல்துறை அதிகாரி,பத்தாயிரத்தில் ஒரு ராணுவ அதிகாரி என்று சேர்த்து எழுதி இருந்தால் ,ஓய்வு பெற்ற நான் தினமும் இரு மணி நேரம் துப்பறிந்து நாட்டை திருத்தி /குற்றங்களை குறைத்து விடுகிறேன் என்று சிலர் வருவார்கள்.
தன்னார்வ காவல்துறை,ராணுவ பணியாளர்கள் உருவாக முடியாது என்பதால் அவர்களை விட்டு விட்டீர்களா.பல ஆயிரம் ஆசிரியர்கள்,மருத்துவர்களை இழிவுபடுத்துவதால் என்ன பயன்.அதை பொதுவெளியில் போடும் போது எதிர்வினை செய்தால் ஏன் கோவம்.அறிவியல் கட்டுரையில் முப்பதிற்கு பதில் 28 என்று போட்டு விட்டால் பொங்கி எழுவது ட்ரோல் கிடையாது ,சமூக சேவை,ஆனால் ஒட்டுமொத்தமாக மருத்துவர்கள்,அரசு ஊழியர்களை உபயோகமற்றவர்கள் ,நாட்டை கெடுப்பவர்கள் என்று எழுதுவதற்கு ஆதாரம் என்ன என்றால் அது ட்ரோல் ஆகா பார்க்கபடுவது வருத்தம் அளிக்கிறது
April 22, 2013 at 17:17
உங்கள் கட்டுரையில் பெரும்பாலவற்றை வழி மொழிகிறேன்.
சென்னையில் ஆசிரியர்கள் குறைவான எண்ணிக்கையில் இருந்து, சமூக ஆர்வலர்களை வகுப்பு எடுக்க அனுமதிப்பர் என்றால் வகுப்பு எடுக்கத் தயாராக இருக்கிறேன். நான் தமிழ் மீடியத்தில் தமிழ்நாட்டில் B Sc படித்தவன். பணியில் இருந்து ஒய்வு பெற்று பொழுதை நல்ல வழியில் செலவிட விரும்பும் சாமானியன். (2) மாலை நேரங்களில் இலவச பயிற்சி வகுப்புக்கள் எடுக்கவும் தயார். இந்த வலையின் வாசகர்கள் எழுதுக. இ-மெயில்: nerkuppai.thumbi@gmail.com
April 23, 2013 at 07:11
Dear Ramaswami i am curious to visit your school and talk to both the teachers and children there. please inform details about how to reach and the righT time to come. my email I’d : gnanisankaran@.gmail.com. Thank you . Gnani, writer and life skills trainer for young persons.
April 24, 2013 at 21:13
அன்புள்ள ஞாநி அவர்களுக்கு,
உங்கள் எண்ணத்துக்கு நன்றி.
பள்ளியில் ஒவ்வொரு முறையும் வெளியாட்களை வரவேற்று, அவர்கள் குறிக்கோள்கள் என்ன, பின்புலம் என்ன என்பவைகளைப் புரிந்துகொண்டு, நடப்பவைகளை விளக்குவதற்கெல்லாம் வெகு நேரம் செலவழிக்க வேண்டியிருக்கிறது. அதன் பிறகு அறிவுரை எல்லாம் கூடச் சிலசமயம் கேட்க வேண்டியிருக்கிறது. பெரும்பாலான அறிவுரைகளை எங்களால் (குறைந்த பட்சம், என்னால்) புரிந்து கொள்ளவும் முடிவதில்லை.
பலசமயம் இங்கு வருபவர்கள், என்னதான் இங்கு செய்கிறீர்கள் எனப் பார்க்கிறோம் என, ஃபேஸ்புக், ப்லாக் எழுத ஒரு சந்தர்ப்பமாகவே இதனைப் பார்க்கிறார்கள்.
நீங்கள் இதுவெல்லாம் செய்யத்தான் வருகிறீர்கள் எனச் சொல்ல வரவில்லை.
ஆனால், இப்பார்வையிடல்களினால், பள்ளிக்கு / அதன் குழந்தைகளுக்கு என்ன நேரடி/மறைமுக பயன் என யோசிக்க வேண்டியிருக்கிறது. இந்த நேரத்தை என் குழந்தைகளுடன் (சொந்த / மற்றைய) செலவழிப்பது இதைவிட சரியானதோ எனத் தோன்றுகிறது. (என்னுடைய முன்னனுபவம் இப்படிச் சொல்லவைக்கிறது.)
நாங்கள் அதி அற்புதமாக எதனையும் செய்யவில்லை. எங்களுடையது ஒரு சாதாரணப் பள்ளிதான். நானும் அதி அற்புதமாக எதனையும் செய்துவிடவில்லை. நானும் ஒரு சாதாரணன் தான்.
மறுபடியும் நன்றி.
__ரா.
September 29, 2014 at 05:39
எழுத்து இவ்வளவு இயல்பாய்,
அடர்த்தியாய்
வாவ்
ரொம்ப அருமையாக எழுதுகிறீர்கள் …
(நீங்கள் ஊர்அறிந்த பிரபல எழுத்தாளாராகக் கூட இருக்கலாம், மன்னிக்க இது எனது முதல் வருகை ஆசிரியர் குரல் மூலம்)
April 25, 2018 at 20:40
[…] தமிழில்: … அல்லா டீச்சருங்ளயும் நிக்கவச்சி சு… […]
June 11, 2020 at 19:25
[…] … அல்லா டீச்சருங்ளயும் நிக்கவச்சி சு… 20/04/2013 […]