வாடிக்கையாள வாலிப வயோதிக அன்பர்களுக்கு சில நற்செய்திகள்!
April 27, 2013
வேறு வழியில்லை, இவற்றைச் சொல்லியாக வேண்டும்:
“The time has come,” the Walrus said,
“To talk of many things:
Of shoes–and ships–and sealing-wax–
Of cabbages–and kings–
And why the sea is boiling hot–
And whether pigs have wings.”
— Lewis Carroll (from Through the Looking-Glass and What Alice Found There, 1872)
ஒத்திசைவைப் பொதுவாக அதிகம் பேர் படிப்பதில்லை – மின்னஞ்சல்களில் பதிவுகளைப் படிப்பவர்களைத் பெற்றுக்கொள்பவர்களைத் தவிர, தினம் சுமார் 500 பக்கப் பார்வைகள் (படிப்புக்கள் அல்ல) இதனைப் படித்தால் அது அதிகம். இதுதான், இந்த வெகு சாதாரணத் தளத்தின் பின்புலம்.
இருந்தாலும்… இந்தக் குறைந்த எண்ணிக்கை வாசகர்களிலும் கூட, பலர் இந்தப் பதிவுகளைப் படித்துக் கோபப்படுவதற்காகவே இங்கு வருகிறார்களோ என்பது என் தொடர்ந்த சந்தேகம்.
… எனக்கு வரும் ‘ஒன்ன ஒழிப்போண்டா’ வகையறா தட்டச்சு-வீர மின்னஞ்சல்கள் எனக்குப் பழக்கமே. என்னுடைய நகைச்சுவை உணர்ச்சியில்(/யிலும்) கர்வம் உடையவன் நான். முடிந்தால் அவற்றில் சிலவற்றைப் பார்த்துச் சிரித்து விட்டு அவற்றைச் செல்லமாக மண்டையில் தட்டி குப்பைத்தொட்டிக்கு அனுப்பி விடுவேன். பல மேற்படி மின்னஞ்சல்கள் பொதுவாக, நேரடியாகக் குறுக்கு வழியிலேயே குப்பைக்குப் போய்விடும். 2 வருடங்கள் முன் போல, தமிழக சட்டசபை தேர்தல் சமயம் நிறைய இம்மாதிரி வந்தன – ஒரளவு இவற்றை எதிர்பார்த்தேன் கூட – என்னுடைய கோபப் (polemic) பதிவுகளும் அவைகளை ஆகர்ஷித்திருக்க வேண்டும். எனது சக விசிலடிச்சான்குஞ்சப்ப வெறுப்பாளர்களுக்கும் வேறு வேலையேயில்லையா என்ன?
ஆனால் கடந்த 2 மாதங்களில் இவை பல மடங்காகி இருந்தன. காரணம் – இந்தத் தொழில்முறை களப்பிணியாளர்கள் பற்றி நான் கோபமாக எழுதப் போக – அதனை ஜெயமோகனும், பத்ரி சேஷாத்ரியும் (நல்ல எண்ணத்துடன் தான் என நினைக்கிறேன்! எனக்கு இவர்கள் மேல் பொதுவாகக் காதலெல்லாம் உண்டுதான்; அவர்களுக்கும் என்மேல் பெரிதாகப் பிணக்கு என்றில்லை என்றும் நினைக்கிறேன்தான்!) மேற்கோள் காட்ட – இது அதிகமாகி விட்டது. இதுவும் பெரிய பிரச்சினையல்ல. (இப்போது இம்மாதிரியானவை குறைந்திருக்கின்றன, வெளியில் சொல்லி விடாதீர்கள், வோக்கேவா?)
அண்மையில் தமிழ் ஈழத்துக்கான ஈழரில்லாத தமிழ் மாணவர் போராட்டம் – பற்றி நான் எழுதிய பதிவிற்குப் பின்னர் – தமிழகத்திலிருந்தோ, ஸ்ரீலங்காவிலிருந்தோ ஒரு புண்ணாக்கு மோசமான எதிர்மறைப் பின்னூட்டம் கூட வராமல் – அமெரிக்க பாஸ்டன் நகர்ப்புறத்திலிருந்து, கனடாவிலிருந்து, ஃப்ரான்ஸில் இரு இடங்கள், ஜெர்மனியில், ஹாலன்ட்-இல் இருந்து இரு இடங்களிலிருந்து சுமார் 460 பின்னூட்டங்கள் / மின்னஞ்சல்கள் வந்தன. அதாவது ஒரு சில ஸ்ரீலங்காவில் இல்லாத ஆட்கள், அதனுடன் ஒரு எழவு தொடர்புமில்லாத ஆட்கள், அதாவது ட்ரோல்கள் – இப்படித் தொடர்ந்து பல (ஏறக்குறைய ஒரே மாதிரி) மின்னஞ்சல்களை / பின்னூட்டங்களை அனுப்பி, மாணவர் போராட்டம் ஓங்குக என்கிற ரீதியில் நுரை கொப்பளித்துக் கொண்டிருந்தார்கள்.
நானும் அமிலத்தன்மையுடன் எழுதுகிறேன், சரி – இவர்களும் எழுதலாம் தான். ஆனால், புண்ணாக்குக் கூட ஒரு எதிர் வாதத்தை அவர்கள் எதிர்வினைகளில் நான் காணவில்லை.
இவர்களில் சிலர், கடந்த சில வாரங்களாக, எப்படித்தான் நான் பிறந்த ஜாதியைக் கண்டுபிடித்தார்களோ தெரியவில்லை – அவர்கள் கைவிரல்கள் வலிக்கும்வரை கீபோர்ட் தட்டித் திட்டித் தீர்த்திருக்கிறார்கள். மேலும் என் மூதாதையர்களைப் பற்றி நானோ (அல்லது அந்த மூதாதையர்களோ கூட!) அறியாத விஷயங்களை, அரிய தகவல்களை எனக்குத் தி(ர)ட்டிக் கொடுத்திருக்கிறார்கள். நான், பொதுவாக, வாழ்க என்று சிரித்துக்கொண்டே அவற்றை விட்டுவிட்டேன். (ஹ்ம்ம், ஆனால் இந்த வெட்டி-தட்டச்சு வீர கும்பலில், ஒரே ஒரு பரிசுத்த அரைகுறை அரைவேக்காட்டு ஆசாமி ஆள்-மாறாட்டம் எல்லாம் செய்ய முயன்று, தொடர்ந்து என்னை மிகவும் தொந்திரவு செய்ததால், சிறிது விசாரித்து பின்னர் நண்பர்களை விட்டு அந்த நபும்சக பெங்களூர் கீபோர்ட் போராளிக்கு ‘ஆவன’ செய்யச் சொன்னேன். விசாரித்ததும், எப்படிக் கண்டுபிடித்தார்கள் என்று இவர் திகைத்துப்போய், அழுதேவிட்டிருக்கிறார், பிள்ளைகுட்டிக்காரன் விட்டுடுங்க என்று கெஞ்சியிருக்கிறார் – பாவம் அந்த 38 வயது வீரருக்கு என்ன தொந்திரவு கொடுத்திருக்கிறேன் பாருங்கள். ஹ்ம்ம்… இந்த மாதிரித் தொழில் நுட்ப நிரக்ஷரகுக்ஷிகளெல்லாம் என்ன மசுத்துக்கு தொழில் நுட்ப (!) வேலைகளில் இருக்கிறார்கள் எனப் புரியவேயில்லை – ஆனால் மன்னிக்கவும், இவர் ஜாதி எனக்குத் தெரியாது)
ஹ்ம்ம்…. புல்லரிப்புதான், தண்டனை பெற்றார் இந்தக் கால்வேக்காட்டுத் துரோகியார் என – ஆனால் எனக்கு இதில் ஒரு சிறு பிரச்சினை..
எப்படி என்றால் – பின்னூட்டங்களை மட்டுறுத்துவதற்கு, இன்னபிறவற்றிற்கு, என்னுடைய பழைய சிஷ்யகேடிகள் இருவரை – இதுவரை நம்பியிருந்தேன். நம் தமிழ் அறிவுஜீவியுலக மரபுப்படி இவர்கள் ஜாதியையும் யாராவது மண்வெட்டி தாசர்கள் கண்டுபிடிக்கும் முன்னர் நானே சொல்லிவிடுகிறேன் – ஒருவர் தலித் (ஒரு பார்ப்பனத்தியை மணந்து குழந்தை குட்டிகளுடன் சந்தோஷமாக அமெரிக்க ந்யூஜெர்ஸி பகுதியில் இருக்கிறார் – இவர்களுடையது ஜாதிமறுப்பு வீர எதிர்மறைத் தாலியறுப்புத் திருமணம் என்றெல்லாம் புல்லரிப்பு இல்லை; ஒருவரையொருவர் விரும்பி, குடும்ப சம்மதமும் பெற்றுதான் இந்த அராமதாச காரியம் செய்திருக்கின்றனர். என்ன துக்கிரித்தனம்) இன்னொருவர் சைவவேளாளர் (இவர் பெங்களூர்க்காரர், ஒரு சைவவேளாளச்சியை மணந்து, ஒரு குழந்தையுடன் சந்தோஷமாக இருக்கிறார் – இவர்களும் தன்ஜாதி / பிறஜாதி வெறியர்கள் இல்லை; மனம்விரும்பி ராமதாச மணம் புரிந்திருக்கின்றனர், அவ்வளவுதான். என்ன சனாதனவாதத் திமிர்!) – இருவருமே நிஜமான அக்மார்க் பொறியியலாளர்கள், வம்புதும்புகளுக்குப் போகாதவர்கள் – ஆனால், மிக வருந்தத்தக்க விதத்தில் அரசியல் என்றாலே வெறுப்பவர்கள், பெரிதாகத் தமிழ் இலக்கியத்தில் ஆர்வமும் இல்லாதவர்கள் (எவ்வளவோ திட்டிப் பார்த்து விட்டேன்). இவர்களை நான் நம்பியிருந்த காரணம்: சமீபகாலம் வரை எனக்குச் சரியான இணையத் தொடர்பு இல்லை – வாரத்துக்கு இருமுறை சுமார் ஒரிரு மணி இணையநேரமிருந்திருந்தால் அதிகம். இதனால் சில நடைமுறைப் பிரச்சினைகள் – அதில் ஒன்று – பின்னூட்டமிட்டவர்கள் அரை நாளுக்குள் அவர்கள் பின்னூட்டம் அப்டேட் ஆகவில்லையானால், திரும்பித்திரும்பி அதே பின்னூட்டத்தை மறுபதிவு செய்து கொண்டிருப்பார்கள் (இவர்களுக்கு வேறு வேலையே இல்லையா?). ஆக, இதற்கும், என்னுடைய பழைய கட்டுரைகளை மீள் பதிவு செய்வதற்கும், ஓரளவு ஒழுங்குபடுத்தி, என் பதிவுமாதிரிகளைப் பதிப்பிப்பதற்கும், என்னுடைய மின்னஞ்சல் பெட்டியின் குறைந்தபட்ச / அடிப்படை மேலாண்மைக்கும் இவர்களை உபயோகப்படுத்திக் கொண்டிருந்தேன்.
ஆனால் – இவர்களுக்கு, சமீப காலத்தில், மனிதர்களின் மீது நம்பிக்கையே போய்விட்டது – இந்த அரைகுறை வெறுப்புவாத பின்னூட்டக்காரர்களும், மின்னஞ்சல்காரர்களும் தான் இதற்குக் காரணம். இந்த வெட்டிவீர ஜந்துக்களின் வன்மம் இவர்களை ஒரு ஆட்டு ஆட்டியிருக்கிறது. கடந்த இரு மாதங்களில், இவர்கள் இந்த ட்ரோல்களின் தொல்லை தாங்காமல் ‘ஒத்திசைவு’ வலைப்பதிவுத் தளத்தை, ஒரு தனிப்பட்ட, ’ப்ரைவேட் ப்லாக்’ ஆகச் சிலமுறை ஆக்கி, முன் பதிவு செய்தவர்களை மட்டும் அனுமதித்து என்றெல்லாம், என்னென்னமோ முயற்சியெல்லாம் செய்தார்கள். உங்களில் சிலருக்கு இந்த ஊசலாடல்கள் தெரிந்திருக்கலாம்.
ஹ்ம்ம். ஆகையால், என் சிஷ்யகேடிகளுக்கு நான் இனிமேலும் அயர்ச்சியும், தமிழர்களின் மீதான அதிகப்படி அவநம்பிக்கையும் கொடுக்க நான் விரும்பவில்லை. அவர்களும் பிள்ளைக்குட்டிக்காரர்கள் தாம்.
ஆக, சில செய்திகள் / சந்தோஷங்கள்:
- மின்னஞ்சல்கள்: எனக்கு வாரம் ஒரு முறை தான் சாவகாசமாகப் படிப்பதற்கு முடியும். பெரும்பாலும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டுமேதான், நான் இவற்றுக்கு நேரம் ஒதுக்க முடியும். அதிலும் எல்லாவற்றுக்கும் பதில் போட, எனக்குத் திராணியில்லை. என் மின்னஞ்சல் பெட்டி, என் உபயோகத்துக்காகத்தான் – உங்கள் உபயோகத்துக்காக அல்ல. (ஆனால் எல்லா ஜாதியினருக்கும் இட ஒதுக்கீடு உண்டு; ஸர்வே ஜாதியோ, ஸுகீமெய்லோ பவந்து!)
- உங்கள் உளப் பிரச்சினை, நடுவயதுப் போராட்டங்கள், வாலிபவயோதிக அன்பர்களே ரீதியான மின்னஞ்சல்களை எனக்கு அனுப்பாதீர்கள். எனக்கு என்னுடைய சொந்தப் பிரச்சினைகளை (இவைகளும் – உளப் பிரச்சினை, நடுவயதுப் போராட்டங்கள், வாலிபவயோதிக அன்பர்களே போன்றவைதான்) தீர்க்கத் திட்டமிடுவதிலேயே – தீர்ப்பதற்காக அல்ல – நேரம் கழிந்து விடுகிறது. தங்கபஸ்பம், சிட்டுக்குருவி லேகியம் உதவலாமோ? அல்லது கவிராஜ் டாக்டர் சிவராஜ் அவர்களை, நின்னையே மன்மதனென்று சரணமெய்தினேன் என்று வேண்டிக்கொள்ள வேண்டுமோ என்ன எழவோ! (சிவராஜ் அவர்கள், என்ன ஜாதியென்று தெரியவில்லை – ஆண்சாதிக்கும் பொண்சாதிக்கும் இடையே, இடையின் கீழே உள்ள பிரச்சினைகளைத் தீர்க்கும் ஜாதியோ?)
- உங்களுடைய சொந்தப் பதிவுகள், நீங்கள் பார்த்து இறும்பூதடைந்த இணைய விஷயங்கள் இன்னபிற என்பதையெல்லாம் பற்றிய சுட்டிகளை எனக்கு அனுப்புவதைத் தவிர்க்கவும். அப்படியே அனுப்பினாலும் – ஏன் நான் அதைப் படிக்கவேண்டும் என்பதை சுருக்கமாக(!) விளக்கவும்(!!). அப்படியே விளக்கினாலும், வாரம் ஒருமுறை அலார்ம் வைத்துக் கொண்டு படித்தீர்களா, படித்தீர்களா என்று கேட்காதீர்கள். எனக்கு, என்னுடைய சொந்த மகாமகோ நீளநீளப் பதிவுகளைப்பலமுறை படித்து – என்ன எழவுதான் சொல்ல வருகிறேன் நான், என்பதைப் புரிந்து கொள்வதற்கே, நேரம் சனியன், போதவேமாட்டேன் என்கிறது. (முக்கியம்: உங்கள் மின்னஞ்சல்களின் பொருள் (subject) பகுதியில் உங்கள் ஜாதியைக் கண்டிப்பாகக் குறிப்பிட வேண்டும்; இல்லையேல் உங்களுடையது, மின்னஞ்சலைச் சொல்கிறேன், படிக்கப் படவே மாட்டாது.)
- நீங்கள் வக்கணையாக, தப்பும்தவறுமான ஆங்கிலத்தில் எனக்கு அறிவுரை சொல்லி – குறிப்பாக, நான் எப்படித் தமிழில் சரியாக எழுதவேண்டும் என்பதை உணர்த்துவது குறித்து, எனக்கு அளவிடா மகிழ்ச்சியே. ஆனால் ஆங்கிலத்தில் ஒற்றெழுத்து இல்லை என்பதைப் புரிந்து கொண்டு அடியேனைக்ஷ் க்ஷமிக்கவும். இன்னாஸ் ஸார்ந் நான்ஸ் ஸொல்றத்து? மிக்க நன்றி. (ஆங்கிலத்தில் எழுதுபவர்கள், தங்கள் ஜாதிச் சான்றிதழை ஒரு நோடரி பப்ளிக் மூலம் அத்தாட்சி பெற்று, பின்னர் அதனை ஸ்கேன் செய்து அனுப்ப வேண்டும்)
- எனது முகவரி, ஜாதகம் எல்லாம் – கேளுங்கள் கொடுக்கப்படும் என்றெல்லாம் – தர முடியாது. மு டி யா து. இது பயத்தினால் அல்ல. ஹ்ம்ம், மன்னிக்கவும், பயத்தினால் தான். உடனே ஆட்டோ அனுப்பினால் கூடப் பரவாயில்லை. அதற்குப் பதிலாக – மானாவாரியாக, சிறு பத்திரிக்கைகளையும், மதிப்புரைக்குப் புத்தகங்களையும் அனுப்பி விடுகிறார்கள். இதைத் தவிர ‘யேசு ரட்சிக்கிறார்’ வகை ’கிடியன்ஸ் அகிலம்’ பைபிள் வேறு! – இதை ஏற்கனவே ஒரு பிரதி அமெரிக்க மோட்டல் ஒன்றிலிருந்து – ஒரு பாப்டிஸ்ட் அம்மணி துளைத்தெடுத்ததினால் (பதிலுக்கு பத்து டாலர் ‘நன்கொடை’ கேட்டார், என்ன ஏத்தம்!) கொண்டு வந்திருக்கிறேன், நன்றி. புரிந்து கொள்ளுங்கள் – இக்காரணங்களால் நான் மகாமகோ கடும் பீதியில், மன உளைச்சலில் இருக்கிறேன். (சில மாதங்கள் முன்னர் நான் வீடு மாறியதற்குக் காரணம் இதுதானோ என எனக்குக் கடும் சந்தேகம்.)
- ஆக, புத்தக மதிப்புரை எல்லாம் என்னால் கொடுக்க முடியாது. மு டி ய வே மு டி யா து. எனக்குப் பிடித்த புத்தகங்களைப் படிக்கவே நேரமில்லை. நான் இலக்கியக்காரன் இல்லை. ஒரு இலக்கிய நுகர்வோன் தான். (ஆனால், தரவுகளே இல்லாமல், உங்கள் புத்தகத்தையும் படிக்காமல், கண்டமேனிக்கும் உங்களை, உங்கள் புத்தகத்தைத் திட்டி எழுதவேண்டுமென்றால், நீங்கள் என்ன ஜாதியாக இருந்தாலும், மிதிப்புரை எழுத நான் தயார்.)
- எனது அலைபேசி எண்ணை, கேட்கிறவர்களுக்கெல்லாம் கொடுக்க முடியாது. த ர மு டி யா து. முடியவே மு டி யா து. என் ஸெல்ஃபோன் என் உபயோகத்துக்காகத்தான் என்பதில் திடமாக இருக்கிறேன். உங்கள் உபயோகத்துக்காக அல்ல என்பதில் இன்னமும் திடமாக இருக்கிறேன். ( நீங்கள் என்ன ஜாதியாக இருந்தாலும் சரியே, இதுதான் பதில்.)
- தற்போது, நான் சில பள்ளிகளில் வேலை(!) செய்யும் தன்னார்வக்கோளாறுக்காரன், அவ்வளவே. நான் ஒரு சொந்தப் பள்ளிகூட அதிபன் அல்ல. முக்கியமாக, கல்வி மாமா அல்ல. மேலும், என் குழந்தைகளைத் தேவையற்ற முறையில் / காரணத்தினால் முன்பின் அறிமுகமில்லாதவர்களுக்கு அறிமுகப்படுத்தவோ, அவர்களிடம் பேச விடவோ விருப்பமில்லை. என் பள்ளிக்குழந்தைகளை மிருகக்காட்சி சாலையில் பாவப்பட்ட ஜந்துக்கள் இருப்பது போல, நீங்கள் வந்து ஒரு நாள் சுற்றுலாப் பயணம் செய்ய, கன்னத்தைக் கிள்ளிப் பார்க்கவெல்லாம், என் பளபளக்கும் முன்வழுக்கையைப் பார்த்துத் தலைவாரிக்கொள்ளவெல்லாம் என்னால் அனுமதிக்க இயலாது, அப்படியே என் ஒப்புதல் இருந்தாலும், சக ஆசிரியர்களின், மேலாண்மைக் காரர்களின் அனுமதி வேண்டும். புரிந்து கொள்ளுங்கள். முன்னால் இரு முறை கல்வியில் ஆர்வம் என்று சொல்லி வந்தவர்கள் எனக்குக் கொடுத்த படிப்பினை இது – இந்தச் சுற்றுக்கல்வியுலாப் பயணிகளுக்கு சுளையாக தலா அரைநாள் ஒதுக்கியிருந்தேன் – என்னால் தற்போது இதெல்லாம் முடியாது, மன்னிக்கவும். உங்களுடைய வாரமுடிவுத் திட்டங்களுக்கு (’weekend getaways’) ஏதாவது சுவாரசியமான இடம் போய் அங்கு அறிவுரை சொல்லலாம், பராக்குப் பார்க்கலாம், படம் எடுக்கலாம், ஃபேஸ்புக்கில் எழுதலாம் எனத் தினவு எடுத்துக் கொண்டிருக்கிறது என்றால், 1) போயஸ் தோட்டம், 2) தைலாபுரம் தோட்டம், 3) கோபாலபுரம் கோட்டம் – இவற்றில் ஏதாவது ஒரு இடத்திற்குச் செல்லவும். ஹ்ம்ம்… இல்லை – நீங்கள் வந்தேயாகவேண்டும் எனப் பிரியப்பட்டால், அதற்கான காரணங்களைத் தெளிவாகத் தெரிவித்தால் நலம். நம் அனைவருக்குமே காலம் பொன்னானது தானே? (இதற்கு உங்கள் ஜாதிச் சான்றிதழோடு, உங்கள் இருபக்கப் பாட்டனார், பாட்டியார்களின் ஜாதிச் சான்றிதழ்களும் தேவை)
- அப்படியே வந்து பார்க்க முடிந்தாலும், 1) உங்களுடைய அறிவுரை சொல்லும் பாங்கை, பண்பை – சற்றுக்
குறைத்துக்குரைத்துக் கொள்ளவும். இது மிகக் கடினம் தான், ஒப்புக் கொள்கிறேன். 2) கண்டமேனிக்கும் (என்னை மாதிரி) நீங்கள் பார்க்காததையும் கேட்காததையும் எழுதும் மன எழுச்சியை, புகைப்படங்கள் எடுக்கும் தினவை – சிறிதாவது குறைத்துக் கொள்ளவும். (உங்கள் ஜாதிச் சான்றிதழ் (ஓரிஜினல்) முன்னதாக அனுப்பினால், செய்கூலியில்லாமல், சேதாரமில்லாமல் விழாக்காலத் தள்ளுமுள்ளுபடி உண்டு) - என்னைப் பார்க்கவேண்டும் என்றெல்லாம் வரவேண்டாம். என்னிடம் எந்த ஒரு கல்யாணகுணமும் இல்லை. என் முகத்தைப் பார்த்த பாவம் செய்தவர்களே, எனக்குத் தெரிந்த பழம் பெருச்சாளிகளே அய்யோ எலீ எலீ லாமா சபக்தானி என்று அலறியடித்துக் கொண்டு ஓடுகிறார்கள். தேவையே இல்லாமல் ஏன் நீங்கள் சிரமப் படவேண்டும், சொல்லுங்கள்? நான் ஒரு சாதாரணன் தான். (சாமானியன் என்று கருணாநிதி அவர்கள் போலச் சொல்லிக் கொள்ள கொஞ்சம் வெட்கமாக இருக்கிறது – இது என்ன மோசமான இரட்டை அர்த்த விவகாரம்! ஆனால் விரசத்துக்கும் என் வலைப்பூவில் இடஒதுக்கீடு கொடுக்கவேண்டுமல்லவா?)
- எனக்கு என்ன விஷயத்தைப் பற்றி என்ன எழுதவேண்டும் என்று தோன்றுகிறதோ அதைப் பற்றிய, என் அனுபவங்கள், படிப்பறிவு சார்ந்த எண்ணங்களைத்தான், நான், அதுவும் முடிந்தபோதுதான் எழுத முடியும், நீங்கள் என்ன எழுதவேண்டும் என நினைக்கிறீர்களோ அதைப் பற்றி நீங்களே எழுதிக் கொள்ள எனக்கு ஆட்சேபணையே இல்லை என்பதைத் தாழ்மையுடன் தெண்டனிட்டுத் தெரிவித்துக் கொள்ளக் கடமைப் பட்டிருக்கிறேன். (என்ன ஜாதிகளைப் பற்றி எழுதவேண்டும் என, நான் இடஒதுக்கீட்டைக் கடைபிடிக்க முயல்கிறேன்; என்னென்ன ஜாதியினர் எவ்வளவு எழுதினால் படிக்கலாம் எனவும் ஒரு இடஒதுக்கீட்டுப்படிப்பு ஜாபிதா தயார் படுத்திக் கொள்கிறேன்)
- பின்னூட்டங்கள்: இவை எதுவும் இனி மட்டுறுத்தலில்லாமல் பதிவாக மாட்டா. 3/4 நாட்களுக்கு ஒரு முறைதான் எனக்கு நேரமிருக்கும் போதுதான் இதுவும் நடக்கும். இப்படியும் எனக்கு சரிப்பட்டு வரவில்லையானால், பின்னூட்டங்களை அனுமதிக்க முடியாது போகலாம். ஆனால், தேவையிருந்தால் மின்னஞ்சல்கள் அனுப்பினால், வாரமொருமுறை அவை பார்க்கப் படலாம், பதிப்பிக்கப் படலாம். அவ்வளவுதான். (உங்களுக்கும் வேறு வேலைகள் இருக்கிறது என அவ்வப்போது நினைவு படுத்திக்கொண்டு – அவற்றிற்கும் உங்கள் வாழ்க்கையில் இட/ நேர ஒதுக்கீடு கொடுங்கள். என்னுடையது போன்ற தளங்களில், உங்களுக்குப் பிடிக்காததைப் படித்து நேரத்தை விரயம் செய்யாதீர்கள்.) இன்னொன்று: இந்தத் தளத்தில், மற்றவர்களுக்கு புரியவேகூடாது என்பதற்காக மட்டுமே, மூளைக் குடைச்சல் கொடுக்க, சுயதம்பட்டம் அடித்துக் கொல்வதற்கு மட்டுமே ++ என்ன எழவு சொல்லப்படுகிறது என்று புரியாமலெல்லாம் எழுதுவதற்கெல்லாம் எனக்கு மட்டும் தான் உரிமையிருக்கிறது. நீங்கள் பின்னூட்டம் இடும் சாக்கில் என்னைப் போல் எழுதவெல்லாம் முயற்சிக்க வேண்டாம். இந்த மூளைக் குடைச்சல் விஷயத்தில் என் ஜாதியைச் சார்ந்த எனக்கு மட்டுமே தான் இடஒதுக்கீடு. புரிந்துகொல்லுங்கள்.
- ஒன்றுமில்லை. வேண்டாம்! அய்யய்யோ!! (Triskaidekaphobia!)
என் கடன் பிணி செய்து கிடப்பதே.
ஆமென்.
April 27, 2013 at 09:38
——தொடர்ந்து என்னை மிகவும் தொந்திரவு செய்ததால், சிறிது விசாரித்து பின்னர் நண்பர்களை விட்டு அந்த நபும்சக பெங்களூர் கீபோர்ட் போராளிக்கு ‘ஆவன’ செய்யச் சொன்னேன். விசாரித்ததும், எப்படிக் கண்டுபிடித்தார்கள் என்று இவர் திகைத்துப்போய், அழுதேவிட்டிருக்கிறார், பிள்ளைகுட்டிக்காரன் விட்டுடுங்க என்று கெஞ்சியிருக்கிறார் – பாவம் அந்த 38 வயது வீரருக்கு என்ன தொந்திரவு கொடுத்திருக்கிறேன் பாருங்கள்——-
Hahahah..I laughed my heart out when I read this. Trollers deserve this. I would call them anonymous ass****.
April 27, 2013 at 10:20
சாதியை ஒழிப்போம் என்று [ பல பத்தாண்டுகளாக ஆட்சிப்பொறுப்பில் இருந்துகொண்டு ] முழக்கமிடும் திராவிடக்குஞ்சுகள் தான் எதற்கெடுத்தாலும் சாதியை இழுப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்…..அதிலும் குறிப்பாக பிராமணர்களை இழிவுபடுத்துவதென்றால் அல்வாதான்……
April 27, 2013 at 17:24
ஆற்றொழுக்கான நடை இருந்தும் முயன்று சுற்றி வளைத்து எழுதும் முயற்சி ஏன்?
பத்து வரிகளில் எழுத வேண்டிய விடயத்தை பத்து பாராவில் எழுதியிருக்கிறீர்கள்…
November 5, 2013 at 13:40
அன்பு ராமசாமி சார் வணக்கம். இந்த பதிவு முன்னரே வந்ததல்லவா? அல்லது நன் குளம்பிக்கொண்டிருக்கிறேனா? தமிழில் மொழிபெயர்ப்பது பற்றி என்னுடைய கருத்தையும் சமீபத்தில் மாத்திக்கொண்டுவிட்டேன். முடிந்தவரை தமிழ்படுத்தவேண்டியதுதான். முடியாவிட்டால் அல்லது ஒரு மாதிரியாக மொழிபெயர்ப்பு இருந்தால் அதை அப்படியே தமிழ்படுத்தி விடவேண்டியதுதான். தமிழ் கூடிய விரைவில் காணாமல் போன மொழியாக ஆக வேண்டாம் என்ற அக்கரை நமக்கு உண்மையாகவே இருந்தால் நாம் இதை அவசியம் செய்யவேண்டும்.
தங்களுடைய பணி சிறக்க என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
அர.வெங்கடாசலம்