சாம்பித் தாத்தாவும் ஸ்வாதிக் குட்டியும்
May 31, 2017
மூன்று வாரமாக, காலை 7.15 மணிமுதல், இரவு 9.00 மணி வரை ஒவ்வொரு நாளும் – ஏழாம், எட்டாம், ஒன்பதாம் வகுப்புக் குழந்தைகளுடன் காகிதம், கண்ணாடி, காற்று, மரம் என நான்கு விதமான கச்சாப் பொருட்களைக் கொண்டு விதம்விதமான விஷயங்களைச் செய்தோம். அவற்றின் பின்னுள்ள அறிவியலைக் கற்றுக் கொண்டோம். எஞ்சினீயரிங் என்றால் என்ன, எப்படிப் பொருட்களை வடிவமைப்பது என அது விரிந்தது – வருடத்துக்கு ஒருமுறையாவது நான் பங்கேற்கவேண்டிய அந்தப் ‘பொறியியலின் அடிப்படைகள்’ வகுப்பு. ஆனால் – அந்தக் கழுதையைப் பற்றி எழுதப் போவதில்லை இங்கு…
-0-0-0-0-0-0-
…கொஞ்சம் தளர்ந்து போய், ஞாயிற்றுக்கிழமை திரும்ப வீட்டுக்கு வந்து வெட்கங்கெட்டுப்போய் காலை 9மணியிலிருந்து 12வரை அடித்துப் போட்டதுபோல அப்படியொரு தூக்கம். எழுந்து கொஞ்சம் இணையத்தை மேய்ந்தால் நண்பர் அருண் நரசிம்மன் அவர்களின் அழகான கட்டுரை – அலன் ஹொவ்ஹெனஸ் பூபாள இசை. எனக்குப் பிடித்தமான இசைக்காரர்களில் இவரும் ஒருவர். அருண் அவர்கள் அனுபவித்து எழுதியிருக்கிறார் இதனை! ஆக, மதியம் நன்றாகவே ஆரம்பித்தது. உடனடியாகக் குதித்தெழும்பி அவருக்கு ஒரு நன்றி நவிலல் மின்னஞ்சல் ஒன்றை மகிழ்ச்சியோடு அனுப்பினேன்…
பின்னர், அவர் கொடுத்த உந்துதலால் மேலதிகமாக ஹொவ்ஹெனஸ் இசையைக் கேட்ட மணியம். மகாமகோ சுகம். மாலை நான்கு மணிக்கு கீழ்வீட்டு ஸ்வாதிக்குட்டி (செல்லமாக நான் கூப்பிடும் பெயர் குப்பண்ணா; அது என்னைக் குறிப்பிடும் பெயர் – சாம்பி) குதித்தோடிவந்து தாத்தா, வாக் என்றது… சரி குப்பண்ணா, தாராளமாகப் போகலாம் ஏரிக்கரைக்கு, என அதன் பெற்றோர்களிடம் சொல்லிவிட்டுக் கிளம்பினோம். அதற்கு இரண்டு போல வயதாகிறது, ஒர்ரேயடியாகப் பேச்சு. பிரவாஹம். கையையும் காலையும் ஆட்டிக்கொண்டு அப்படியொரு தொடர் பேச்சுக் கச்சேரி! (பாதி எனக்குப் புரியவேயில்லை!)
-0-0-0-0-0-
…வீட்டின் பின்னால் சுமார் 200 மீ தொலைவில் இருக்கும் ஒரு பெரிய ஏரிக்குச் சென்றோம். அண்மையில் பெய்த மழையில் அது கிட்டத்தட்ட நிரம்பி வழிந்துகொண்டிருந்தது. ஆஹா. அற்புதமான காட்சி. உடனடியாக என் மண்டையில் ‘மந்த்ர புஷ்பம்‘ (முக்கியமாக நீரை + காலம், தீ, காற்று, சூரியன், சந்திரன், மேகம், நட்சத்திரங்கள் எனப் புகழ் பாடும், உட்குவிந்து தேடும் அழகான எளிமையான நேரடித்தனத்துடன் அமைந்த கவிதை – யஜுர்வேதத்தின், தைத்ரீய ஆரண்யக வரிகள்!) பெருக்கு போல ஓட ஆரம்பித்தது. (சுமார் 10 வருடங்கள் முன் இதனை முறையாகவும் அழகாகவும் பாடக் கற்றுக்கொண்டேன் என நினைவு – எப்படி இது இவ்வளவு நாட்கள் நினைவில் இருக்கிறது என்றே தெரியவில்லை – அதே சமயம், பொறியியல் வகுப்பில் இருந்த 20 குழந்தைகள் பெயர்கள் அனைத்தும் மறந்தே விட்டன!)
இப்பூவலகில் அனைத்தும் இனியன. பாரதி. நன்றி அய்யா!
-0-0-0-0-0-0-0-
…எனக்கு, புகைப்படங்கள் எடுக்கும் வழக்கம் அவ்வளவு இல்லை; இருந்தாலும் கைவசம் எழவெடுத்த கூறுகெட்ட என்ஆர்ஐ நண்பன் ஒருவன் ஓசியில் கொடுத்த ஒரு (அவனைப் பொறுத்தவரை) பழைய கேமராஃபோன் இருந்ததால், அதன் பெற்றோர்களிடம் காட்டலாம் என, குப்பண்ணாவைப் படங்கள் எடுத்தேன். அவர்கள் அனுமதி பெற்று இப்போது அவற்றில் சிலவற்றைப் பிரசுரிக்கிறேன்.
மந்த்ர புஷ்பம் முடிந்தது, போகலாமா?
ஏரியில் ஒப்போ (ஹிப்பொபொடாமஸ் – நீர்யானை(!)) இல்லை, நோ வே!
இந்த விரிசல்கள் எப்படி ஏற்படுகின்றன?
அது பாட்டுக்குப் போய்க்கொண்டிருக்கும் பூச்சியை விடாமல் பின் தொடர்ந்து கண்காணிப்பது + வாய் ஓயாமல் கேள்வி கேட்பது எப்படி? (>15 நிமிடங்கள்)
அந்தச் சின்ன விரிசலுக்குள் எப்படி அந்தப் பூச்சி போனது? அது வெளியில் வரும்வரை காத்திருக்கலாமா? (குப்பண்ணா! தாத்தாவுக்கு சாயங்காலம் ஏழு மணிக்கு ஒரு அலுவலகவேலை உரையாடல் இருக்குடா கண்ணா…)
இது பெருஸ்ஸு. உள்ள பாம்பு இருக்குமா?
மகாமகோ ‘சீமை’க்கருவேலம் (Prosopis juliflora). சின்னி செடி. அதோட அம்மா எங்கே?
தாத்தா, முள் ஏன் குத்துகிறது? (ஹ்ம்ம்… இந்த பாவப்பட்ட உயிரினத்தைப் பற்றி முட்டாக்கூவான்கள் செய்யும் அரைவேக்காட்டுப் பொய்ப் பரப்புரையை எதிர்கொள்ளவேண்டும்)
குப்பண்ணா, அது பார்த்தீனியம் (Parthenium hysterophorus) செடிடா… (இதனையும் முட்டாள்தனமாகக் கரித்துக் கொட்டுபவர்கள் இருக்கிறார்கள்! பாவம்இந்த ஜந்து!)
தக்கைப் பூண்டும் (Eichornia crassipes) நொடியில் மறைந்த சின்னி ஆமையும் (Melanochelys trijuga)
குப்ஸ், அது பருப்புக் கீரைச் செடி; மெதுவா எறங்கு, சரியா?
இந்த எறும்பு என்ன செய்துகொண்டிருக்கிறது?
அரைக்கிலோ கற்களை சட்டைப் பாக்கெட்டுக்குள் அமுக்கிக் கொள்வது எப்படி?
இப்போது ஒரு சோகம் (அல்லது மறுசுழற்சி); ஏரிக்கரையில் கூறுகெட்ட கூவான் எவனோ ஒரு பச்சைப்பாம்பைக் கல்லால் அடித்திருக்கிறான். அது இறந்துகொண்டிருந்தது. சரி, மேலே பறந்துகொண்டிருந்த பருந்துகளாவது அதைச் சாப்பிடட்டும் விட்டுவிடலாம் என்றால், குப்பண்ணா அதனைச் சுற்றிச் சுற்றி வந்து விதம்விதமாகக் கேள்வி கேட்ட மணியம்… பாம்பு தாச்சீதாச்சீ? இல்லை, அது தூங்கவில்லை. மெதுவாக நகர்கிறது பார்…
இல்ல, நோன்ன்னோ அது தாச்சிதாச்சி… குப்ஸ், அது இறந்துகொண்டிருக்கிறது, நாம் போகலாம். எல்லோரும் போய்ச்சேரத்தான் வேண்டும்…
உவ்வா… பாம்பு தாச்சி. ஆமாம் குப்பண்ணா, அதனை யாரோ அடித்திருக்கிறார்கள். பாவம் இல்லையா? சரி, குப்ஸ், இன்னொரு நாள் இதனைப் பற்றிப் பேசலாம்.
…மேலதிகமாகச் சுமார் பதினைந்து நிமிடங்கள் அது இறக்கும்வரை காத்திருந்து, அதனைத் தூக்கி ஓரமாகப் போடலாம் என்றால் குப்பண்ணா – என்னிடம் கொடு, அதனைப் பிடித்துக்கொள்வேன் என்றது. சரியென்று அதற்கு ஒரு குச்சியைக் கொடுத்து சடலத்தை அப்புறப்படுத்தினோம். மறுசுழற்சியெனும் மகாமகோ அழகு அதன் கடமையைச் செய்யும். சுபம்.
சரி. கதையும் முடிந்தது, கத்தரிக்காயும் காய்த்தது!
-0-0-0-0-0-0-
என் தொடரும் பேராசை, என் சுப்ரமண்ய பாரதி வரிகளில்…
“கிழவனுடைய அறிவு முதிர்ச்சியும், நடு வயதினனுக்குள்ள மனத் திடனும், இளைஞனுடைய உத்ஸாகமும், குழந்தையின் ஹ்ருதயமும், தேவர்களே, எனக்கு எப்போதும் நிலைத்திருக்கும்படி அருள் செய்க…”
-0-0-0-0-0-0-
June 1, 2017 at 08:37
குழந்தைகளுடன் உரையாடுவதும் அவர்கள் கண்ணோட்டம் கொண்டு பார்ப்பதும் அற்புதம். ஏனோ நாம் நம் உலகத்தை விட்டு வெளியே வர மறுக்கிறோம். மற்றவர் குழந்தைகளை விடுங்கள், தத்தம் குழந்தைகளையே நாம் முழுதாகப் புரிந்து கொள்வதில்லை.
June 7, 2017 at 08:39
‘குப்பண்ணா’ நடை பிரமாதம்
May 21, 2022 at 09:46
[…] படிக்கும் வகை) என்னுடைய செல்லமான ஸ்வாதிக்குட்டியின் பெற்றோருக்கு அளித்தேன். […]