பாஸ்டனூர் சுற்றிப் புராணம் – சில குறிப்புகள்
October 21, 2016
கடந்த பதினைந்து-இருபது ஆண்டுகளாக, இந்தக் ‘கடவுளின் சொந்த நாடு’ எழவுக்குச் செல்வதை தவிர்த்து வந்திருக்கிறேன் என்றாலும், இக்காலங்களில், என்னுடைய இந்த அடிப்படை உரிமையை நிலை நாட்ட முடியவில்லை. எடுத்துக்கொண்டிருக்கும் காரியம் அப்படி. காலத்தின் கந்தறகோளம்தான் இது, வேறென்ன சொல்ல…
ஆனால், ஒவ்வொரு முறை இந்த நாட்டுக்கு வேலைவெட்டியற்றுச் சென்றிருக்கும்போதும், அங்கு எந்த சந்துபொந்திற்குச் சென்றாலும் தப்பமுடியாத விஷயங்கள் எனச் சில இருக்கின்றன என்பதை கவனித்திருக்கிறேன். அவற்றில் சில:
- எந்த வீதியில் நடந்தாலும் – இந்த XXXXXXXLLLLLL சைஸ் கார்களின் டயர்கள் தார்ரோட்டில் தேயும் சப்தம். பெரிய சாலைகளில் என்றால் இந்தச் சப்தம் பன்மடங்காகி விடும். தலைவேதனை.
- பெருஞ்சாலைகளில் (இந்தப் பளப்பளா டவுன்டவுன் ‘down town’ ஜிகுஜிகாக்களில் அல்ல! பல்கலைக்கழக ஊர்களிலும் அல்ல!) நடக்கும் போது கண்ணுக்கெட்டிய தூரம் வரை வேறு பாதசாரிகளே இருக்கமாட்டார்கள். வழி கேட்பதற்கும் ஆட்களே இருக்கமாட்டார்கள். (ஆனால், இப்போது ‘ஓப்பன் ஸ்ட்ரீட் மேப்‘ வகையறாக்கள் இருக்கின்றன, சுபம்)
- ஊர்களுக்கு வெளிப்புறங்களில் இருக்கும் மலைத்தொடர்கள், மூடப்பட்ட பள்ளத்தாக்குகள் போன்ற மகாமகோ குப்பைக்கூடங்கள் – அதில் விசிறியடிக்கப்பட்டிருக்கும் உபயோகப் படுத்தக்கூடிய வஸ்துக்களைப் பார்த்தாலே கண்ணில் நீர்முட்டிக்கொண்டு வரும் தன்மை… குப்பைபற்றிய பிரக்ஞையற்ற வாழ்க்கை. (நீர் பற்றியும் அப்படியே!) நகர்ப்புறங்கள் ‘சுத்தமாக’ இருந்தால் போதும் எனும் மனப்பான்மை.
- சீன-ஜப்பான்-கொரிய சுற்றுலாப் பயணிகள் தொடர்பான ரோதனை (இவர்கள் பொதுவாக கண்ணால் எதையும் நேரடியாகப் பார்க்கமாட்டார்கள் – எல்லாம் அவர்களுடைய வீடியோ கேமராக்கள், கேமரா ஃபோன்கள் வழியாகத்தான்; எதையும் நேரடியாகக் கேட்கமாட்டார்கள் – எல்லாம் காதில் மாட்டிக்கொண்டலையும் செவிட்டு மெஷின்கள் மூலமாகத்தான்… + அவர்களுடைய உணர்ச்சிகரமான உச்சஸ்தாயி உச்சாடன உரையாடல்கள் இன்னபிற)
- எந்த ஒரு கடைக்குள்ளோ வீட்டினிலோ அலுவலகத்திலோ நுழைந்தாலும் உடனடியாகத் தாக்கும் நானாவிதமான வாசனைகள் – காஃபி, பொரித்தவை, வறுத்தவை, தெளித்துக்கொள்பவை, தேய்த்துக்கொள்பவை, அப்பிக்கொள்பவை என்பதையெல்லாம் கலந்துகட்டி மூச்சுமுட்ட வைக்கும் விஷயம்.
- எந்த எழவைச் செய்ய/வாங்க முயன்றாலும், எதற்கெடுத்தாலும் — அதற்கு ஓராயிரம் உபஎழவுகளும், அவற்றில் சிலவற்றின் தன்மையைக் கருத்தில் கொண்டு விஷயங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டிய துர்பாக்கியமான நிலைமை. அதாவது எந்த எழவிற்கும் ஓராயிரம் சாய்ஸ்! அதுவும் வினாடிக்கு வினாடி முடிவுகளை எடுத்துக்கொண்டேயிருக்கவேண்டும். ஒரு பற்பசை வாங்க ஓராயிரம் வகைகளில் ஒன்றைத் தெரிவு செய்யவேண்டும். ஒரே தலைசுற்றிப் புராணம்.
- நாலு இந்தியர்கள் ஒன்றுசேர்ந்தால் – அவர்கள் பேச்செல்லாம் நம்மூர் மகோன்னதங்களான குப்பைச் சினிமா பற்றியும், எப்படி இந்தியாவுக்கு ஒரு எதிர்காலமுமே இல்லை என்றுமே இருப்பது அல்லது, அதிக பட்சம் – சீப் விமான டிக்கெட் ‘டீல்’கள் பற்றி இருப்பது. வாந்தி.
-0-0-0-0-0-
- பெரும்பாலான அமெரிக்கர்களின் – எடுத்த காரியத்தை முடிக்கும் தன்மை.
- எங்கு பார்த்தாலும் தொப்பை சரிந்த நிறைமாதக் கர்ப்பிணிச் சோம்பேறி ஆண்கள் இருந்தாலும் (இந்த ஜோதியில் நம் இந்தியர்களில் பெரும்பாலோர் ஐக்கியம்) – மிகப் பலர், உடற்பயிற்சியிலும், தங்களுக்குப் பிடித்த விஷயங்களிலும் தொடர்ந்து ஈடுபடும் குணாதிசியம்.
- அமெரிக்க இளைஞர்களின் ஆரோக்கியமான ஈடுபாடுகள், முனைவுகள்.
- பிறத்தியார் பற்றிப் பொதுவாகவே கவலையேபடாத தன்மை.
- நன்கு வேரூன்றியிருக்கும் குடிமைப் பண்பு.
- கொஞ்சும் இயற்கைஅழகு, தொட்டுக்கொள்ள செயற்கை அழகுகளும்…
- மகாமகோ நூலகங்கள், புத்தகக் கடைகள்.
- நானாவிதமான விசேஷக் கடைகள் இருப்பது: மின்னியல் சாதனங்கள் முதல் தச்சுவேலை வரை, கட்டிட வேலையிலிருந்து சித்திரவேலை வரை என அனைத்து உபகரணங்கள் விஷயங்களையும் ‘தொட்டுப் பார்த்து’ வாங்கமுடிவது…
- சிலபல மகாமகோ கல்விசாலைகள், அவற்றின் மாணிக்கங்களான ஆசிரியர்கள்…
- அமெரிக்க ராணுவம், உலக அமைதியை நிலைநாட்டுதலில் அதன் பங்கு
- மகாமகோ பெரு நிறுவனங்கள்
- …
இவையெல்லாமும் மாறவில்லை. :-) அமெரிக்காவின் சுதந்திரதேவிக்கு நன்றி! :-))
இப்போதைக்கு இது போதும். மேற்கண்ட சாதகபாதகங்களில் ஒப்புக்கொள்ள வேண்டியவையும், மண்டையில் அடித்துச் சரி செய்யவேண்டுபவைகளும் இருக்கின்றன. இருந்தாலும் – நான் ‘பன்னாட்டு நிறுவனச் சதி,’ ‘அமெரிக்க ராணுவ ஆகாத்தியங்கள்,’ ‘அமெரிக்கா பேட்டை ரவுடி’ என்றெல்லாம் உளறிக்கொட்டமாட்டேன். மன்னிக்கவும்.
-0-0-0-0-0-0-
கடந்த சிலபல நாட்களாக மஸ்ஸாசூஸெட்ஸ் தொழில் நுட்பக் கழக வாத்திகள் சிலருடனும் (இவர்களில் பலர் நான் மிகமிகமிக மதிக்கும் 50 மனிதர்களில் இருக்கிறார்கள், மகாமகாமகோ ஏபெல்ஸன் போல, மிட்ச் ரெஸ்னிக் போல…), எஞ்ஜினியர்களுடனும் ஒரேயடியான அளவளாவல்கள். ஏகோபித்த கொஞ்சல்கள். சிலசமயம் காராசாரமான விவாதங்கள். காலைச் சிற்றுண்டியில் இருந்து ஆரம்பித்து இரவு உணவு வரை தொடரும் உரையாடல்கள். பரிசோதனைகள் (= Horse Inspections முழிபெயர்ப்பு ©எஸ்ரா) – எல்லாம் ‘கல்வி’ தொடர்பாகத்தான்.
எது எப்படியோ – சராசரித்தனமில்லாத, அதற்கு மாறாக, ஜொலிக்கும் ஆட்களுடன் வேலை செய்வதற்குக் கொடுத்து வைத்திருக்கவேண்டுமோ?
இன்னமும் நான்கைந்து நாட்கள் இது தொடர்கதையாகத் தொடரும் போலிருக்கிறது; இது எப்படி விரிகிறது எனப் பார்க்கவேண்டும். ஹ்ம்ம்… பார்க்கலாம்…
பாஸ்டனூர் பதிவுகள் மேலும் சில வரலாம். தொடரலாம். பாவம் நீங்கள். ;-)
October 21, 2016 at 05:33
October 21, 2016 at 09:55
யார் சார் நீங்க. உங்க போட்டோ ஒண்ணு போஸ்ட் பண்ணுங்க.
October 21, 2016 at 10:00
சார் உங்க ஃபோட்டோ ஒண்ண போஸ்ட் பண்ணுங்க.
October 21, 2016 at 11:53
அய்யா ப்ரேம்குமார்,
முடியாது. உங்களுக்கு ஏனிந்த விபரீத ஆசை என்று புரியவில்லை!
தேவையேயில்லாமல் என் புகைப்படத்தைப் போட்டுக் கொள்வதில் எனக்கு உடன்பாடு இல்லை.
மேலும், என் மூஞ்சி ஒரு வெகு சாதாரண அதுவும் தாடிவுட்டுக்கொண்டிருக்கும் மூஞ்சியே. எருமைப்பட்டுக் கொள்ளத் தக்கது மட்டுமே! ஆகவேயும்.
__ரா.
October 21, 2016 at 19:49
Did you get a permission from ‘Boston Balaji’ ? he owns that town now.
October 21, 2016 at 20:33
Ayyo sir, I do not know who this gent is. So.
But, but… Oh NO! Have I offended him or what? ;-)
What is the the penalty?
October 22, 2016 at 00:06
பட்டுக்கோட்டை எவ்வளவுக்கு எவ்வளவு அழகிரிக்கு சொந்தமோ, அந்த மாதிரி பாஸ்டன் எனக்கும். வாரயிறுதியில் இங்குதான் இருப்பீர்கள் என்றால், உள்ளூர்வாசிகளை சந்திக்கும் எண்ணமும் இருந்தால் சவுண்ட் விடுங்க.
October 22, 2016 at 01:29
ஆ! அய்யோ! நீங்கள் தான் அந்தக் குறுநில மன்னரோ?
பாஸ்டனின் பாஸ்ஸோ? :-)
என்ஆர்ஐ-க்களைக் கிண்டல் செய்வதால், நைச்சியமாகக் கூப்பிட்டு உதைப்பதாகத் திட்டமோ? அல்லது திராவிடர்களைக் கரித்துக்கொட்டுவதால் திராவகம் வீச எண்ணமோ? பயம்ம்ம்மாக இருக்கிறதே!
சரி. இந்த வாரயிறுதியில் அமோகமாகத் தூங்குவதாகவும், சிலபல புத்தகங்களைப் படிப்பதாகவும் தான் திட்டம் + நாக்கு செத்துவிட்டதால், கொஞ்சம் சமைப்பதாகவும்…
உங்கள் மின்னஞ்சல் முகவரியைத் தரமுடியுமானால் – அல்லது என் மின்னஞ்சல் முகவரிக்கு (https://othisaivu.wordpress.com/page-1/) எழுதமுடியுமானால் (+முடிந்தால் உங்கள் தொல்லைபேசி எண்ணையும் கொடுத்தால்) நான் தொடர்புகொள்கிறேன்.
நன்றி.
October 22, 2016 at 10:08
If you two are connected, I demand commission now. 10 percent, 20 percent, put on Nambiyar’s accent for effect :(
October 22, 2016 at 14:50
Well, kinda. I am curious, if not anything else. Luckily, I am not a cat.
But no commission. You may be from Nachi of P’achi, but no Nambiyarism.
You two from the same area/school or what? Or fatal attraction to & via Tamil is the cause? :-)
October 21, 2016 at 20:10
கடவுளின் சொந்த நாடு என கேரளாவை எண்ணி இருந்தேன். படித்த பின் அமெரிக்க விஜயம் பற்றியது என தெரிந்தது. நியூஜெர்சி, நியூயார்க் ஆகிய இடங்கள் மட்டும் சென்றுள்ளேன். அங்கு இந்திய, இந்தியமெரிக்கர்கள் தொப்பை இல்லாது தான் பார்த்தேன். என்ன ஒன்று, அவர்களே பயண-இந்தியர்களை ஏளனமாக பார்ப்பது தான். ஒரு மாத்த்திற்கு பின், நானும் அரை டிராயர், செருப்பு, குளுகுளு கண்ணாடியுடன் வலம் வந்து ஏளன பார்வைகளை வென்றேன்…..பதிவை தொடருங்கள். விறு விறுப்பாய் உள்ளது.
October 22, 2016 at 14:55
ஆனால் அய்யா, நீங்கள் ஏன் மேலாடை டீஷர்ட் எதுவும் போட்டுக்கொள்ளவில்லை? குளிரவில்லையா??
விறுவிறுப்போ சுறுசுறுப்போ – என் தமிழ்ப் பயிற்சிக்கு இந்தப் பதிவுகள் உதவுகின்றன, அவ்வளவுதான். நீங்கள் கற்பனை செய்துகொள்வது, பாவம், உங்கள் சாய்ஸ்! :-)
October 21, 2016 at 20:20
அடடா அடடா .. நடத்துங்கள். எத்தனை நாள் தங்கல் ?
October 21, 2016 at 20:33
+6 :-)
October 23, 2016 at 07:47
damm,.guessed my age, No, we are not known to each other.
After my first visit I wanted to claim that title for myself, but learned that he beat me to it long back. :)