அழகியசிங்கர்: சில குறிப்புகள்
April 6, 2016
அழகியசிங்கர் அவர்களை நெடு நாட்களாகவே, உண்மையைச் சொல்லப்போனால், நான் அரைநிஜார் போடாத காலத்திலிருந்தே அறிவேன். அவர் பழகுவதற்கு இதமானவர். எனக்கு மிகவும் அணுக்கமானவர். வாழ்க்கையின் உள்ளார்ந்த உடுக்கைகளின் ஊடுபாவுகளை, அவரைப் போல அணுகுபவர்களை நான் அதிகம் பார்த்ததில்லை.
என் நல்லூழ் காரணமாக மட்டுமே அவரை நன்றாகத் தெரிந்துகொள்ளும் பாக்கியம் எனக்கு லபித்திருக்கிறது என்பதை ஒப்புக்கொள்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை…
-0-0-0-0-0-0-
விருட்சத்திலிருந்து மிக நவீனமாகப் புடைத்தெழும் பழத்திலிருந்து கொட்டை நீக்கப்பட்டு புரட்சிப் பூபாளம் பாட வீரியத்துடன் வெளிப்படும் நவீனபருத்தியை – நூலாகவும், பின் துணியாகவும், பின் அதற்கு தகுந்த நிறமேற்றி, பின்னர் அதனை வெட்டியொட்டி மெருகேற்றி, இஸ்திரிபோட்டு, வாசகர்களுக்கான நேர்த்தியான ஆடையாகவும் மாற்றும் ரசவாதம், அழகியசிங்கருக்கே உண்டு. ஆகவே, அழகியசிங்கர் அவர்கள் பலப்பல நூற்களை வெளியிட்டுள்ளதில் எனக்கு ஆச்சரியமேயில்லை.
இப்போது ஒரு முக்கியமான விஷயம்: பலர் நினைத்துக்கொண்டிருப்பதைப் போல அழகியசிங்கர் ஜெர்மனியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவர் அல்லர். ஜெர்மனியின் மகாமகோ ப்ஃபாஃப் (=ஜியார்ஜ் மைக்கெல் ப்ஃபாஃப்) அவர்களைக் காப்பியடித்தவரும் அல்லர். மாறாக, இவருடைய ரிஷிமூலம் நதிமூலம் என்பது அமெரிக்காவில்தான் இருக்கிறது.
நான் முதன்முதலில் அழகியசிங்கர் அவர்களைப் பார்த்தது என்பது என் தந்தையாரின் ஆப்த நண்பரான (சென்னை நங்கநல்லூர் முதல் மெயின்ரோட்டில், இப்போதும் உயிருடன் இருக்கும்) சிவதாஸன் நாயர் அவர்களின் தையல்கடையில்தான். அப்போதெல்லாம், அழகியசிங்கர் அவர்கள் பதவிசாகக் கடையின் நட்ட நடுவில் கனகம்பீரமாக உட்கார்ந்துகொண்டு – சிலசமயம் அமைதியாகவும், பலசமயம் தர்மாவேசத்துடன் வெறிகொண்டு சுற்றிச் சுற்றி வந்தும் நடத்தும் உரையாடல்களை ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருப்பேன்.
இப்படியும் ஒருவர் ஆவேசமாகவும் அதேசமயம் கலை நுணுக்கத்துடனும் மாதக்கணக்கில் தொடர்ந்து நூற்பணி செய்யமுடியும் என்பதே எனக்கு அவரைப் பார்த்துத்தான் தெரியவந்தது.
பொதுவாக அழகியசிங்கர் போன்ற ஆளுமைகள், வாழ்க்கைப்போக்கின் இழைகளை அவதானிக்கும் ஈடுபாடுள்ளவர்கள் – உடலுடுப்பு சார்ந்த ஜோடனைகளை விரும்பமாட்டார்கள் என்பது என் அபிப்ராயம். அவர்கள் ஏனோதானோ என்றுதான் ஆடையணிகலன்களை அணுகுவார்கள் என்றும்தான்…
ஆனால், அழகியசிங்கர் அவர்கள், தன் உடலை, மனதைப் பளப்பளாவெனத் துடைத்துக்கொண்டு பளிச்சென்று இருப்பதற்கும் அப்பாற்பட்டு, தன் எண்ணங்களைத் நற்கத்தறிக்கோல் போலத் துல்லியமாகவும், தையலூசி போலக் கூர்மையுடனும் – மிகநேர்த்தியாகத் தைத்து, மானுடத்துக்கு அழகான உடையலங்காரங்களாக வழங்கும் திறனும் மிக்கவர்.
மேலும் நமக்கெல்லாம் தெரியும் – பொதுவாகவே, எழுத்தாளர்கள் என்றாலே பெரும்பாலும் சொட்டைத் தலையுடன், சொறியும் தாடியுடன், மலங்கமலங்க விழித்துக்கொண்டு அல்லது உத்தரத்தில் மையம்கொண்ட பார்வையுடன் இருப்பர், நவீன தொழில் நுட்பங்களுக்கும் அவர்களுக்கும் ரொம்பதூரம் என்பதெல்லாம்… இவையெல்லாம் இன்னொருவகை ஊடகபிம்பங்கள்.
ஆனால், அழகியசிங்கர் அவர்கள் தம் பெயரைப்போலவே மிக அழகானவர். பளபளக்கும் கறுமை நிறத்தைக் கொண்டவர். ஆஜானுபாகு. வெகுளி. பொய்யும் புனைசுருட்டும் இவருக்கு அறவே ஒத்துவரமாட்டா. பரபரவென வேலைசெய்யக்கூடியவர். காலில் நான்கு சக்கரங்களை மாட்டிக்கொண்டு வேலை செய்பவர். ஒருகாலத்தில் அவர், தம் கையையும் காலையும் மட்டுமே நம்பிப் பணிபுரிந்திருந்தாலும், இக்காலங்களில் அதி நவீனத்தொழில் நுட்பங்களை, நுணுக்கங்களை உபயோகிக்க அவர் தயங்குவதேயில்லை.
-0-0-0-0-0-
இப்போது அழகியசிங்கர் அவர்களுடைய அக்கால புகைப்படம் ஒன்றைத் தூசிதட்டி உங்களுக்கு அளிப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சியே.
அவருடைய இக்காலப் படம் ஒன்று இங்கே:
எப்படி ஜாம்ஜாம்மென்று இருக்கிறார் பாருங்கள்! என் கண்ணே பட்டுவிடும் போலிருக்கிறது. :-))
அழகியசிங்கர் பற்றிய மேலதிகமான விவரங்கள்:
- ஜியார்ஜ் மைக்கெல் ப்ஃபாஃப் – சில குறிப்புகள்
- அழகியசிங்கர் அவர்களின் ஆங்கிலம்சார் வலைத்தளம்
- அழகியசிங்கர் அவர்களின் தமிழ்த்தளம்
- என் ஆருயிர் நண்பர், எழுத்தாளப் பேராசான் எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய, அழகியசிங்கர் அவர்கள் குறித்த நெகிழ்வுகள்
-0-0-0-0-0-0-
அலக்கியம், காப்பிக்கடை, அரைகுறைத்தனம் – இன்னபிற இழவுகள்… (26/08/2015 வரை )
April 6, 2016 at 18:18
ராம், அழகியசிங்கர் ஒரு முக்கியமான ஆளுமை. எடாசிக்கும் ஒரு அளவு வேண்டும்.
April 6, 2016 at 19:40
நீங்கள் சொல்வது உண்மைதான். உண்மையிலேயே அவரை மிக நன்றாக அறிவேன்.
ஆனால் ‘எடாசி’ என்றால் என்னவென்று அடியேனுக்குப் புரியவில்லை. :-(
ஆனால் அய்யா, இதற்கெல்லாம் காரணம் உங்கள் #எஸ்ரா அவர்கள்தான். அவரிடம் போய் சண்டை போடவும். நன்றி.
April 6, 2016 at 18:19
I am at your feet…pinniTeenga !!!!!!
April 7, 2016 at 11:15
“தவளை” நடையில் :-)) எழுதிக்கொண்டு ‘எஸ்ரா’வை விடாமல் கலாய்ப்பதா? இது அழகிய சிங்கருக்கே அடுக்காது!
April 7, 2016 at 14:45
உங்கள் எஸ் ரா அதி நெகிழ்வு பகடிகளை நன்கு படித்த அனுபவம் இருந்தும் புகைப்படத்தை முதலில் பார்க்காததால் முழுதாக ஏமாந்துவிட்டேன். புகைப்படத்தைப் பார்த்தபின் வெடிச்சிரிப்பு.
கூடிய விரைவில் எஸ் ரா நிஜமாகவே தையல் இயந்திரம் பற்றி நெகிழ்ந்து (எத்தனை துணிகளைப் பார்த்திருக்கும்) அவரை நோக்கி அவரே மௌனமாக வெறித்துக்கொண்டு எழுதி உமது ஆணவத்தை அடக்குவாராக!
April 8, 2016 at 10:13
Hi……wen I saw the pic only ,I came to understand the truth……thriller effect…..haha….
April 9, 2016 at 15:55
padupaavigalhaa….kadaisila thaiyal machine aa?
April 9, 2016 at 22:32
ஐயா ராம்,
உங்கள் அட்டகாசத்திற்கு ஒரு அளவே இல்லையா?எனக்கு முதலில் இருந்தே சந்தேகம் இருந்தது. ஆனாலும்… அந்த சிங்கர் யாரென்று தெரிந்ததும் மறுபடியும் முதலிலிருந்தே படிக்க வேண்டியதாயிற்று. ஒரே டமாசா கீதுபா.